Saturday, June 19, 2010

விடுகதையாய் இந்த வாழ்க்கை...? விடை தருவார் யாரோ...?

விடுகதைக்கான விடைகள் போல விசித்திரமான, பல வினோதமான விடைகளாலும், விடையே தெரியாத பல கேள்விகளாலும், விடை தெரிந்திருந்தும் விளம்பிட முடியாத வினாக்களாலும் நிரம்பிய, சாதாரண, சராசரியான ஈழத்தமிழர் வாழ்க்கைகளின் எனதும் ஒன்று.ஊரிழந்து, உறவிழந்து, சொத்திழந்து, சுகமிழந்து, வாழ்க்கையின் வேரையையே அடியோடு இழந்து காசைத் தேடிப் பேயாய் அலைந்து கொழும்பிலும் கரையொதுங்கிய பலருள் நானும் ஒருவன்.


கொழும்பிலே ஒரு கம்பனியிலே ஓரளவு கொஞ்சம் பெரிய பதவியிலே வேலை செய்து கொண்டிருக்கிறேன்.இலங்கையின் தலைநகரிலே, தமிழர்களின் தலைநகரமான வெள்ளவத்தையிலே என மனைவிக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட தொடரமாடிக் குடிமனை(Fலட்ச்) ஒன்றிலே நானும் எனது சிறிய குடும்பமும் வசித்து வருகின்றோம்.ஒரே ஒரு மகன்.(அதுக்கு மேலை ஏலாது எண்டு நினையாதையுங்கோ,ஒண்டே காணும், கூடப் பெத்தால் தன்ரை வடிவு கெட்டுப் போடிடும் எண்டு மனுசி தான் நிப்பாட்டிப் போட்டாள்)



பெடியன் இந்த முறை ஸ்கொலசிப்(Scholarship - தரம் ஐந்து ஆண்டு மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வைக்கப் படும் ஒரு போட்டிப் பரீட்சை) எடுக்கப் போறான்.கொழும்பிலே உள்ள ஒரு பிரபலமான சகோதர மொழிப் பாடசாலையிலே சகோதர மொழிமூலத்திலே கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றான்.என்ன செய்வது, அன்று தொடக்கம் இன்று வரை மலையகப் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலத்திலே திறமையான, தகுதியான தமிழ் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை இருந்தது, இருக்கின்றது போல கொழும்பிலே தற்போதைய தமிழ்ப் பாடசாலைகளின் நிலை இப்படியாக இருக்கின்றது.



தமிழ் பாடசாலைகளில் கல்வியின் தரம் தறி கெட்டு நிற்கும் போது என் போன்ற வாயைப் பிளந்து கொண்டே திரியும் பெற்றோர்களின் பார்வை சகோதரப் பாடசாலைகளின் பக்கம் தாவுவதை தடுக்க முடியாது தானே.இதெல்லாம் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரிய, பௌதீக வளங்களை வழங்காமல், தமிழ் மாணவர்களை தம் பக்கம் இழுத்து,மறைமுகமாக அவர்கள் மொழியை, கலாசாரத்தை அவர்களிடமிருந்து பிரித்து, அவர்களின் மொழியைப் பிறள்வுறச் செய்து, அவர்களை முதலில் மொழி அடையாளங்களற்றவர்களாக மாற்றிப் ,பின் தம் மொழி அடையாளஸ்தர்களாக மாற்ற முயலும் 23 ம் புலிகேசிகளுக்கு அவர்கள் கழிவறையில், "கழித்துக் கொண்டிருக்கும் போது" கச்சிதமாக் அவர்கள் மூளையில் உதித்த, உதிக்கின்ற ஐடியாக்களின் செயல் வடிவம் தான்.


எனக்கு அவ்வளவாக, அவ்வளவென்ன முழுமையாக விருப்பம் இல்லாத போதும் மனுசியின் நச்சரிப்புத் தாங்காமல் ஏதோ என்ரை பெடியனுக்குத் தமிழ் தெரியாட்டிலும் பரவாயில்லை, தமிழ் தெரிஞ்சும் என்னத்தைக் கிழிக்கப் போறான்?, நாளைக்கு ஏதோ நல்ல இடத்துக்கு வந்திட்டால் அது எனக்குக் காணும் என்ற என்ரை மனுசியின்ரை சுயநலப் போக்கால் சேர்த்திருந்தேன்.என்ரை மனுசியைப் பற்றியும் சொல்லவேணும்.வேலை ஒண்டுக்கும் அவள் போறதில்லை. அந்தளவுக்கு அவள் படிச்சிருக்கவும் இல்லை.என்றாலும் இங்கிலீசிலை கொஞ்சம் பொலிஸ்ட்டாக்(Polished) கதைக்கத் தெரியும்.


என்டாலும் நான் வேலைக்குப் போறது மாதிரி டெயிலி(Daily) பியூட்டி பார்லர்களுக்குப்(Beauty Barler) போய் காசைக் கரியாக்கிறது தான் வேலை.உதில ஐஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லையெண்டது எனக்கு மட்டுமில்லை அவளுக்கும் தெரியும் தான்.நானும் கொஞ்சம் சொல்லிப் பார்க்கிறது தான். எண்டாலும் நான் சீதனம் கொஞ்சம் கூட வாங்கி கட்டினதாலை "ஏன் உது என்றை காசு தானே ... நீ வாயைப் பொத்து.." எண்டு சத்தம் போட வெளிக்கிட்டிடுவள் எண்ட பயத்திலை நானும் ஒரு லிமிற்றுக்குப்(Limit) பிறகு ஒண்டும் பேசுறது, பறையிறது இல்லை.என்னைப் பற்றியும், அதை விட என்ரை பெடியனைப் படிப்புப் பற்றியும் வீட்டுக்கு வாற தன்ரை சினேகிதிமாருக்கு இங்கிலீசிலை விளாசிக் கொண்டிருப்பாள்.அதிலை அப்பிடியொரு ஆனந்தம் அவளுக்கு.


நானும் ஊருக்குப் போய் ஒரு ஐஞ்சாறு(ஐந்து,ஆறு) வரியமாப்(வருடமாக) போட்டுது.அது தான் இந்தமுறை(அது தான் இந்த 2015 ம் ஆண்டிலை)எங்கடை ஊரிலை கோயில் காவடிக்காக போன கிழமை தான் போட்டு வந்தனான்.போகேக்கை பெடியனையும் கூட்டிக் கொண்டு தான் போயிருந்தனான்.என்னதான் அவனுக்கு கொம்பியூட்டை கேமும்(Computer Game)சற்றும்(Chat) அது இதெண்டு ஒரு உயிரே இல்லாத கொம்பியூட்டரோடை வாழ்க்கை போனாலும், அவனுக்கு நாங்களெல்லாம் எப்பிடி வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சு,கூடிக் கூத்தடிச்சு,திண்டு, குடிச்சு, ரசிச்சு, ருசிச்சு வாழ்ந்தனாங்கள் எண்டு காட்டவேண்டியது எங்கள் ஒவ்வொருவரோடையும் கட்டாயக் கடமையும் பொறுப்புமாகும்.



அவர்களுக்கு இதெல்லாம் ஈடு பாட்டை ஏற்படுத்துதோ இல்லையோ அல்லது இடைஞ்சலாக அல்லது பிற்போக்குத் தனமாக அல்லது நேரத்தை விரயம் செய்வதாய் அல்லது அபிவிருத்தியடையாத் ஒரு காட்டுக் கூட்டத்தின் மடை வேலையாய் தெரியுதோ இல்லையோ அது வேறு விடயம்.நாமும் எமது முன்னோர்களும் எப்படியெல்லாம் உண்டு,களித்து,தின்று,திளைத்து வாழ்ந்தார்கள் என்று ஆகக்குறைந்தது காட்டமுயல்வதாவது எங்கள் கடமையாகும்.வங்கக் கடலில் கப்பலில் சென்ற கடாரம் என்ற சோழனாகட்டும்,கலிங்க மாகனை இங்கிருந்து துரத்திய ராஜராஜ சோழனாகட்டும் பக்கத்து வீட்டுக் காரரையெல்லாம் தூக்கி கக்கத்திலே சுருட்டி வைத்த கரிகாலனாகட்டும்.யார் இவர்கள்?இவர்களின் வீர தீரங்கள்,விண்ணையும் தாண்டும் அவர்களின் திறமைகள் என்ன என்று எம் பிள்ளைகளுக்கு ஒப்புவிப்பதாவது எமது கடமையாகும்.அத்தோடு எங்கள் இனசனங்கள், உறவுகள்,ஊர் மரபுகளை எங்கள் இரத்தங்களுக்கு ஊட்டுவது எங்கள் பொறுப்பாகும்.




என்னுடன் சிங்கள் நண்பர்கள் பணிபுரிகின்ற போதும்,நான் சிங்களம் கதைக்க வெளிக்கிட்டால், அதன் விசித்திரத்தைக் கண்டு, அவர்கள் ஆங்கிலத்திலேயே பேச வெளிக்கிட்டிடுவார்கள்.அதனால் எனக்கு மம(நான்),ஒயா(நீ),கரனவா(செய்கின்றேன்),யனவா(போகின்றேன்),கோமத(எப்படி),எக்காய்(ஒன்று) தெக்காய்(இரண்டு) என இலக்கங்கள் அதிலும் Hட்டாய்க்கும், Hத்தாய்க்கும் இடையிலே குழப்பம் எண்டு மிகச் சிறிதளவே சிங்களம் தெரியும்.ஆனால் என் மகனோ சிங்களத்திலேயே படிப்பதால் இந்த வயதிலேயே சிங்களத்தில் புலி.அவனையும் கூட்டிக் கொண்டு விடிய கொழும்பிலையிருந்து வெளிக்கிட்டு மத்தியானம் அளவிலை வவுனியா தாண்டி பஸ்ஸிலை போய்க் கொண்டிருந்தம்.அவன் ஒவ்வொரு இடமும் கடந்து செல்ல்லும் போது சகோதர மொழியிலே மட்டும் எழுதப் பட்டுக்கிடந்த பெயர்களை எனக்கு வாசித்துக் காட்டிக் கொண்டே வந்தான்.



எனக்கு இடங்கள் முன்னர் சென்று பரிச்சயமாகவிருந்தபோதும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் பாதையூடு பயணிப்பதாலும்,இந்தக் கால இடைவெளியில் அவற்றின் தோற்றங்களில் ஏற்பட்ட மாற்றங்களும்,சிதைக்கப்பட்ட சுவடுகள், திரிக்கப்பட்ட வரலாறுகள்,அழிக்கப்பட்டிருந்த அடையாளங்களும் அதன் மேல் எழுப்பப்பட்ட கட்டிடங்களும்,இடங்களை என்னை இலகுவில் அடையாளம் காண்பதில் தடங்கலை ஏற்படுத்தித் தான் இருந்தன.பன்றிக்கெய்தகுளம,மாங்குளம, கனகராயன்குளம,குஞ்சுக் குளம,விளாத்திக் குளம,விளக்கு வைத்தகுளம என்று "ம்" கள் எல்லாம் "ம" க்களுடன் தொக்கி நின்றதை என்னால் உண்ர்ந்து கொள்ள முடிந்ததது.





இதைப் போல் சில அழகிய தமிழ்ப் பெயர்களும் அடியோடு மாற்றப் பட்டிருந்ததையும் என்னால் கேட்கக் கூடியதாகவிருந்தது.திருமுறிகண்டி,முரிநுவரவாகவும் வேறு சில பெயர்கள் வேறு பல விதமாகவும் திரிக்கப் பட்டிருந்தையும் என்னால் என் மகன் வாசித்த்க் காட்டிக் கொண்டிருந்ததிலிருந்து புரிந்து கொள்ளமுடிந்தது.அப்போது வெசாக்(புத்தர் பிறந்து,இறந்து,ஞானம் பெற்ற நாள்) அண்மித்துக் கொண்டிருந்ததால்,வழி நெடுகலும் இருந்த விகாரைகளிலும் வீதிகளின் குறுக்கேயும் ஐந்து வண்ணங்களாலான பௌத்த கொடிகளும் வெளிச்சக் கூடுகளும் பறந்துகொண்டிருந்தன.மாங்குளத்துக்கு கிட்ட போய்க் கொண்டிருந்த போது தன் கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்த அவனின் பள்ளி நண்பியொருத்திக்கு "தங் மம மாங்குளமே யனவா(நான் இப்போது மாங்குளதாலே போய்க் கொண்டிருக்கின்றேன்)" என்று பயணத்தை அவளுக்கு நேரடி விமர்சனம் செய்யத் தொடங்கி விட்டான் என மகன்.



இடையில் பல ஆவனகலாக்கள்(அது தான் சிற்றுண்டிச் சாலை) இருந்த போதும் இவற்றையெல்லாம் கடந்து திருமுறிகண்டியில் இறங்கினோம்.நாங்கள் முன்பு கண்டதைப் போலவே அதே கொட்டிலுக்குள் எழுந்தருளியிருந்தார் பிள்ளையார்.அவ்வளவாக சனத்தையும் கோவிலடியில் காணமுடிந்திருக்கவில்லை.இந்தப் பிள்ளையாரைத் தாண்டிப் போகும் எல்லா வாகனங்களும் நின்று,இறங்கித் தேங்காய் உடைத்துவிட்டுத் தான் செல்லும் என்று இந்தப் பிள்ளையாரின் பெருமையை என் மகனுக்குக் கூறியவாறே நானும் ஒரு தேங்காயை வாங்கி உடைத்தேன்.மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.அங்காலே கிளிநொச்சிப் புத்தர் கியூவிலே(ஃஉஎஉஎ) நிற்கும் தன் பக்தர்களுக்க் அருளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்.அதயெல்லாம் பார்த்துக் கொண்டே(வேறு என்னத்தை செய்ய ஏலும்) கிளிநொச்சி நகரத்தை அடைந்தபோது போர் வீரர்களுக்கான நினைவுத் தூபி ஒன்று எழுப்பப் பட்டிருந்தது.





அதைக் காட்டி என் மகன்,தன் மக்க்ளையே கேடயங்களாக்கி,துன்பங்கள் பலபுரிந்து கொண்டிருந்தவரிடமிருந்து,மக்களை மீட்பதற்காக மனிதாபிமானப் போர் புரிவதற்காக முப்படைகளையும் திரட்டிக் கொண்டுவந்தவர் செய்த வெற்றிப் போரிலே மாண்டுபோன வீரகளுக்காக கட்டப் பட்டது தானே இது என்றான்.அப்படியாக்கப் பட்டுவிட்டதோ வரலாறென்றெண்ணிக் கொண்டே நான் தலையை இடமும் வலமும் ஆட்ட வெளிக்கிடவே என் மகன் மேலும் தொடர்ந்தான்.எங்களது வரலாற்றுப் புத்தகத்திலே நான் படித்திருக்கிறேன்.அதிலை இந்தமுறை கொஞ்சம் கேள்விகளும் ஸ்கொலசிப்புக்கு வரும் எண்டு ரீச்சர் சொன்னவா என்று நீட்டி முடித்தான் என் பொடியன்.



எந்த வரலாற்றை சரியென்று என் மகனுக்கு நான் சொல்லுவது?திரிக்கப்பட்டுத், திணிக்கப்பட்டதை திராணியில்லாமல்,சரியென்று சொல்லி வரலாற்றுப் புத்தகத்தின் வழி வந்ததை வழி மொழிந்து என் மகனை ஸ்கொலசிப் பாஸ் பண்ண வைப்பதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாமல் இருப்பதா இல்லை வழித்து துடைத்து மாற்றப்பட்டு, வந்தேறுகுடிகளாக்கப்பட்டதிலிருந்து வரலாற்றைச் சொல்லி என் கண்ணின் கண்ணைத் திறக்கட்டுமா? நான் யோசிக்கின்றேன்.அது சரியா?இது தவறா?சரியான குழப்பம்.முடிவெடுக்க முடியாதநிலை.நான் மேலும் கீழும் இடமும் வலமும் என நாலா பக்கமும் தலையாட்டி திரித்த வரலாற்றை ஆமோதிக்கின்றேனா இல்லை மறுதலிக்கின்றேனா என்று தெரியாமல் என் மகனை மேலும் குழப்பி விடுகின்றேன்.




அவன் இந்தக் குழப்பத்துக்குரிய தீர்வை தொடர்ந்தும் என்னிடமே எதிர்பார்த்து நிற்கின்றான்.இறுதியில் என் தலை மேலும் கீழும் அசைகின்றது.ஆம் திரிக்கப்பட்டதை சரியென்று சொல்லத் தலைப்படுகின்றேன்.ஏனென்றால் என் மகன் ஸ்கொலசிப் பாஸ் பண்ண வேண்டும் எனற சுயநலம் பிடித்த தமிழன் நான்.என் மகனை தமிழில்,தமிழைப் படிப்பிக்காமல், தமிழுக்கு குரல் கொடுப்பதாய் நடித்துக் கொண்டிருக்கும் பகட்டுத் தமிழன் நான்.தமிழ் கதைக்கவே வெட்கப்படும்,தமிழ் கதைப்பவனையே ஏளனமாகப் பார்க்கும்,எள்ளி நகையாடும் மனைவியை சீதனம் வாங்குவதற்காகக் கட்டி,அவள் சீற பெட்டிப் பாம்பாகப் படுத்துவிட்டு,வெளியே கூட்டங்களிலே பொன்னாடைகளுக்காகவும்,கைதட்டுதல்களுக்காகவும் ஏங்கி எதேதோ பொய் பேசுகின்ற பொய்த் தமிழன் நான்.




என்னைப் போன்றே பலரும் இங்கே நடித்துக் கொண்டிருக்கின்றோம்.உண்மை தெரிந்திருந்தும்,எங்கள் வீறாப்புகளுக்காக, சுயநலங்களுக்காக, துரோகங்களை,துணை போதல்களைத் தவறென்று தெரிந்த பின்பும் தொடர்ந்தும் செய்துவருகின்றோம். என் மகன் என்னைக் கேட்ட கேள்வியைப் போல விடை தெரியாத,விடை தெரிந்தும் விளம்பிடமுடியாத,விதைக்கப் பட்ட,விடுக்கப்பட்ட வினாககள் ஆயிரக்கணக்கில் விரந்து கிடக்கின்றன எங்கள் விடுகதையான வாழ்க்கையில்.இதற்கெல்லாம் விடை தருவார் யாரோ? (என்ன கதை உண்மையெண்டு நம்பி வாசிச்சுக்கொண்டிருக்கிறியளோ?அடி சக்கை.அம்மன் கோயில்ப் புக்கை.நான் ஸ்கொலசிப் எடுத்தே இப்ப ஒரு 10, 12 வருசம் வந்திச்சுதோ தெரியேல்லை.அதுக்குள்ளை நான் கலியாங்க்கட்டி,எனக்குப் பிள்ளை பிறந்து,அவன் இந்த முறை ஸ்கொலசிப் எடுக்கப் போறானாம்.உதெல்லாம் ஒரு கதையெண்டு வாயைப் பிளந்து கொண்டு இருந்துகொண்டு வாசிச்சுக் கொண்டிருக்கியளே?எழும்புங்கோ.போய்ப் பாக்கிற வேலையைப் பாருங்கோ.போங்கோ எல்லாம் கடைஞ்செடுத்த கற்பனைக் கதை தான்.அது தானே எங்களுக்கு அந்தமாதிரி வரும்.அது தான் திரும்பவும் சின்னதொரு Dரை(ட்ர்ய்)

Sunday, May 9, 2010

சங்கேத பாசை - தொழில்நுட்பம் 1

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சில பதிவுகளை தொழில்நுட்பம் என்ற பகுதியூடாக உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன்.ஆனாலும் இது எந்தளவுக்கு சாத்தியப் பாடானதாக இருக்குமென்று நானறியேன்.ஆனாலும் ஒரு நப்பாசை போனால் போகுது எதற்கும் எழுதிப்பார் என்கிறது உள்மனது.சரி பண்ணித்தான் பார்ப்போமே என்று எழுத விழைகின்றேன் குற்றங்கள்,குறைகளை சுட்டிக்காட்ட கணனி வல்லுனர்கள் பலர் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில்.


அண்மையில் வந்து சக்கை போடு போட்ட உலகநாயகன்,பத்மசிறி,காதல் இளவரசன், கலைஞானி கமலஹாசனின்(நான் அடிப்படையில் ஒரு அதிதீவிர கமல் ரசிகன்.அது தான் உந்தளவு மிகப்படுத்தல்(Build Up)நேரம் கிடைத்தால் கமல் பற்றி விரிவாக ஒரு பதிவிடுகிறேன்.அதிலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றிக் கூறுகிறேன் இப்போது விட்டு விடுகிறேன்.சரியா?)உன்னைப் போலொருவன் படத்தில் காவல்துறை அதிகாரி E.G.றக்னயன் மாரார் அல்லது ஈ.G.ற்.Maaraar இடம்(மோகன்லாலின் வேடம்)சக காவல்துறை உதவி அதிகாரி ஒருவர் தம்மிடமுள்ள அப்துல்லா(Abdullah),அகமதுல்லா(Ahemadullah),இனையதுல்லா(Inaiyadullah),சரண்சங் லால் ஆகிய நான்கு தீவிரவாதிகளைப் பற்றி விளக்கும் போது இனயதுல்லவைப் பற்றி பின்வருமாறு கூறினார். இனையதுல்லா - Area Deputy commander of Jamaathudeva.லஷ்கர்-இ-தொய்பாவோடை பொலிடிகல் Wing, இந்தியாவோட No 2 rank,Software Engineer, Stegnography Expert .படத்துக்குள்ளேயே தகவலை digitate செய்து ஒளித்து வைக்கிற technology.பல terrorist organization website களுக்கு இவன் தான் designer.(ஆங்கிலம் கலந்தமைக்கு வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.படத்தில் அந்த அதிகாரி பேசியதை அப்பிடியே தமிழில் ஒப்புவிக்க விளைந்ததால் நேர்ந்த விளைவு அது)


அப்போது தான் ஸ்ரெக்னோகிறபி(stegnography) பற்றி ஒரு பதிவிடலாம் என்று எண்ணினேன்.முதலில் இந்த ஸ்ரெக்னோகிறபி(stegnography) க்கு சரியான தமிழ்ப் பததை என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்காகவும் அந்த ஆங்கிலப் பதத்தையே தொடர்ந்து பதிவில் பாவிக்க இருப்பதனாலும் வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.


ஒரு தரவானது(data)அனுப்புவருக்கும்(sender) பெறுனருக்கும்(receiver) இடையில் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் அனுப்புனரால் பெறுனருக்கு அனுப்பப்படும்.இடையில் உள்ளவர்களுக்கு தரவு அனுப்பப்படுகிறது என்றோ அல்லது அனுப்பபடுவது தெரிந்தாலும் என்ன செய்தி அனுப்பப்படுகின்றது என்றோ கண்டு பிடிப்பது கடினமாகும்.இவற்றுள் தேவையான தகவலை மறைத்து அனுப்புதல்(Hideen Writing) தான் ஸ்டெக்னொக்ரபி எனப்படும்.


இதைப்போல் இன்னொரு தொழில்நுட்பமும் உள்ளது.ஒருவர் ஏதோ ஒரு தகவலை இன்னொருவருக்கு அனுப்புகிறார் என்று விளங்கும்.ஆனால் அதை விளங்குவதோ,அதிலிருந்து உண்மையான் தகவலை கண்டறிவதோ கடினமாக இருக்கும்.அது தான் கிறிப்டோகிறபி(cryptography).சங்கேத மொழி என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோமல்லவா அதுதான் இது.ஸ்ரெக்னோகிறபிக்கும் கிறிப்டோகிறபிக்குமிடையே மிகச் சிறிய ஒரு வித்தியாசம் தான்.


முதலாவதில் படம்(Image) போன்ற ஏதாவதொன்றில் தகவல் ஒளிக்கப்பட்டிருக்கும். ஆனால் பார்ப்பவர்களுக்கு அது ஒரு சாதாரண ஒரு படம் போலத் தான் தோற்றும்.ஆனால் இரண்டாவதில் தரவானது மற்றவர்களால் விளங்கப்பட முடியாத ஒரு தகவலாக மாற்றப்பட்டு அனுப்பப்படும்.இடையில் உள்ளவர்களுக்கு அதை விளங்குவதோ அல்லது அதை வைத்துக்கொண்டு உண்மையான(Original) தகவலை கண்டு பிடிப்பதோ சிரமமாக இருக்கும்.ஸ்டெக்னோக்றபியில் தகவல் மறைத்து அனுப்பப் படுகின்றது என்பதே தெரியாத்.ஆனால் கிறிப்டொகிறபியில் ஏதோ தகவல் ஒன்று அனுப்பப் படுகின்றது எனபது விளங்கும்.ஆனால் அதிலிருந்து உண்மையான த்கவலைக் கண்டறியமுடியாது.


நான் ஏலவே சொன்னது போல அதை பெறுபவர் உடன்படிக்கையின்படி அவரால் அதைப் பிரித்து அதிலிருந்து உண்மையான தகவலைப் பெற்றுக் கொள்ளமுடியும்.இதிலே எங்களுக்கு பரிச்சயமுள்ள கிறிப்டோகிறபி ஐப்(சங்கேத பாஷை) பற்றியும் ச்டெக்னொக்ரப்க்ய் பற்றியும் அனைவருக்கும் விளங்கக் கூடியதான சின்ன உதாரணங்களைப் பார்ப்பதுடன் இந்தப் பதிவை நிறுத்துவதாகவும் அடுத்தபகுதியில் சங்கேதபகுதியின் மிகுதியையும் அதற்கடுத்த பதிவில் ச்டெக்னொக்ரப்க்ய் பற்றியும் பதிவதாய் உத்தேசம். முதலில் ச்டெக்னொக்ரப்க்ய்க்குரிய அந்த உதாரணத்தைப் பார்ப்போம்.





இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் மறைத்து அனுப்பபடும் தரவு ஆகும்



அண்மையில் எனக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திண்டுக்கல் ஐ .லியோனியின் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சியின் காணொளி(Video)ஒன்றைக் காணக்கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் லியோனி சொல்வார் ஒரு கணவன் மனைவியிடையே சண்டை வந்து மனைவி கோபித்துக் கொண்டே வெளியே சென்று,சிறிது நேரத்தின் பின் மீண்டும் வந்து வீட்டு வாசலில் நிற்பாள்.தாயைக் கண்ட தனயன் தந்தையிடம் தகவலை தெரிவிப்பான்.தந்தையும் உள்ளே வருமாறு கூறும்படி மகனிடம் சொல்லிவிடுவார்.அவனும் சென்று தாயிடம் சொல்ல அவளோ தாய்க்குலத்திற்கேயுரிய பிடிவாததுடனும், வரட்டுக் கௌரவத்துடனும் அடம்பிடித்து நிற்பாள்.அப்போது தந்தை மகனிடம் ."அப்பா சாப்பிட வேணுமாம்.கெதியாக வரச்சொல்லு.வராவிட்டால் அப்பா பக்கத்து வீட்டை சாப்பிட போய் விடுவாராம் எண்டு கொம்மாட்டை போய்ச் சொல்லிவிடு கொம்மாக்கு விளங்கும்" என்று சொல்லிவிடுவார்.உடனே தாய் பதறியடித்துக் கொண்டு உள்ளே வந்தாளாம்.
இங்கே "சாப்பிடுதல்" என்பது கணவனுக்கும்(அனுப்புனர்) மனைவிக்கும்(பெறுனர்)மட்டுமே விளங்குகின்ற மகனுக்கு(இடையிலுள்ளவர்களுக்கு) விளங்காத் ஒரு குறியீட்டு மொழியாகும்.சாப்பாடு என்றால் என்னவென்று எனக்கும் தெரியாது.உங்களுக்கும் தெரியுதோ தெரியாது.ஆனால் அது அவர்களுக்கே தெரிந்த ரகசியம்.

அடுத்ததாக கிறிப்டோகிறபிக்கு உரிய உதாரணமாக் நான் அனுபவப்பட்டதை இங்கே கொண்டுவந்து பொருத்தலாம் என்று எண்ணுகின்றேன்.ஒரளவு சிறு வயதில் ஒரு முறை வல்லிபுரக் கோவில் சமூத்திர தீர்த்தத்துக்கு ஓடையிலிருந்து வருகிற எனது பள்ளி நண்பனுடன் போயிருந்தேன்.அவனுடன் அவனது விளையாட்டுக்கழக், ஊர் நண்பர்கள் நால்வர். சரி கடலுக்கு நடக்கத் தொடங்கியாச்சுது.நடக்கிறது தெரியாமல் இருக்க எல்லாரும் ஒன்றில் தங்களது கூட்டணியினரோடு கதைத்துக் கொண்டு வருவார்கள் அல்லது அங்காலே போகும் பெண்கள் கூட்டணியோட கதைக்க முயற்சிப்பர்கள்.இவர்கள் தங்களுக்கேயே கதைத்துக் கொண்டார்கள். ஆனால் எனக்கு ஒன்றும் விளங்கவிலை. "ப்கடலுக்கு கபோ டகூ ரம்நே டக்கணும்ந ", "வளைஅ ர்பா, நல்ல டிவாத்தான்வ ள்இருக்கிறா".


இப்பிடி முழுக்கதையும் நடக்கத் தொடங்கினதிலையிருந்து போய்க் கொண்டிருந்தது .என்னாலை தாங்கேலாமல் போட்டுது.நான் இவனை பண்ணின ஆக்கினையில ஒருமாதிரி தாங்கள் ஒவ்வொரு சொல்லினதும் முதல் எழுத்தை கடைசியில் போட்டு உச்சரிப்பதால் மற்றவர்களுக்கு விளங்காமல் கதைப்பதாகக் கூறினான்.இப்போது மேலே சொன்ன இரு வச்னங்களையும் "கடலுக்குப் போக கூட நேரம் நடக்கணும் " என்றும் "அவளை பார், வடிவாத்தான் இருக்கிறாள்" என்றும் வாசிக்கலாம் என்று உங்களுக்கு விளங்கும்.பிறகு தான் எனக்கு எல்லாம் விளங்கிச்சுது.பிறகென்ன மற்றவர்களெல்லாம் கேட்கக்கூடாத வார்த்தைக்ளெல்லாம் கேட்கப்படாத வடிவத்தில் கேட்டுக் கொண்டார்கள். அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவோம்.




இரண்டு உதாரணங்களின் மூலமும் ஸ்ரெக்னோகிறபிக்கும் கிறிப்டோகிறபிக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்குவோம்.முதலாவதிலும் இரண்டாவதிலும் ஒரு செய்தி அனுப்புவரிடமிருந்து பெறுனருக்கு ஊடுகடத்தப் படுகிறது.அனுப்புவருக்கும் பெறுனருக்கும் மட்டுமே அதன் அர்த்தம் தெரிந்திருக்கிறது.முதலாவதில் இடையில் உள்ள சிறுவனுக்கு "சாப்பிடுதல்" என்பதன் அர்த்தம் புரியவில்லை என்று சொல்வதை விட அவன் "சாப்பிடுதல்" என்பதன் மூலம் ஒரு செய்தி கடத்தப் படுகின்றது என்று கூட அறியவில்லை அல்லது அறிய முயலவில்லை.ஆனால் இரண்டாவதாக உள்ள கிறிப்டோகிறபி இல் எனக்கு ஒரு செய்தி அவர்களுக்கிடையே கடத்தப் படுகின்றது என்பது விளங்குகிறது. ஆனால் அது என்னவென்று அறியமுடியாமல் இருக்கிறது.அங்கு தான் இரண்டும் வேறு பட்டு நிற்கின்றன.இந்த நுணுக்கமான் வித்தியாசத்தை உங்களால் விளங்கிக் கொண்டிருக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இப்பதிவை நிறுத்தி அடுத்த பதிவில் சந்திக்கலாம் என்று நினக்கின்றேன்.என்ன உதாரணம் விளங்கிச்சுதோ?இனி அடுத்த பதிவிலை மிச்சத்தைப் பார்ப்பம் என்ன?

Sunday, May 2, 2010

பண்பலையூர் படும்பாடு

(உலகம் 21ம் நூற்றாண்டிலே உருண்டுகொண்டிருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வந்த 13 ம் நூற்றாண்டுச் சோழர்களின் தொடர்ச்சியான பரமபரையைப் போல வெளித்தொடர்பற்று இருக்கின்றது, இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கற்பனைக் கதையிலே வரும் ஊரும். இதிலே வரும் எந்தவொரு பெயரையோ அல்லது வேறு சம்பவங்களையோ வேறு எவரது பெயருடனோ அல்லது சம்பவங்களுடனோ ஒப்பிட்டு நீங்களே செய்துகொள்ளும் சுய கற்பனைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல)


காற்றிலே கலந்து கணீரென்று வரும் மாயக்கைப் பிள்ளையாரின் மணியோசையும், கோணாந்தீவு மரியன்னை தேவாலயத்தின் மிருதுவான இறைகீதமும் பச்சைப் பசேலெனப் பரந்து விரிந்த வயல்களின் கண்ணுள்ள நெல்மணிகள் காற்றிலே சரசரக்கும் ஓசையுடனும் கடற்கரையிலே கரைவலை இழுக்கும் மீனவர்களின் "ஏலேலோ ஐலசா.."கோரசுடனும்(சேர்ந்து படித்தல்)இணைந்து அந்தவூரின் பெயர் பண்பலையூர் தான் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.


தொலைபேசிகளோ, தொலைக்காட்சிகளோ, வானொலிகளோ இவ்வூருக்குள் பாவனைக்கு வர வெட்கித்து ஓடினாலும், விக்கித்துப் போகாமல்,பிறர் சொக்கித்துப் போகும்படி இன்புற்றே வாழ்கின்றனர் இவ்வூர் மக்கள்.எப்போதாவது யாராவது ஒருவர் வீட்டில் தொலைக்காட்சி வாடகைக்குப் பிடித்துப் படம் போட்டாலொழிய அவர்களின் பொழுது போவதெல்லாம் ஊரிலே பிரசங்கங்கள்(சமய சொற்பொழிவு போன்றது) செய்யும் பேச்சாளர்களை நம்பித் தான்.





ஊர்ச்சனத்தின் பொழுதைப் போக்காட்டுவதற்கென்றே(போக்குவதற்கு) அவ்வூரிலே "பக்தி","நெற்றி", "ஊரியன்" என்று பிரசங்கத்துறையிலே பழம் தின்று கொட்டை போட்டவர்களுடன் "கசந்தம்" என்ற ஒரு புதுப் பிரசங்கியாரும் ஊரில் உள்ளனர். நால்வரும் தம் குரல்களை ஆண்குரல்,பெண்குரல் களில் மாற்றிக் கதைப்பதிலும் ஒருவரே ஒரேநேரத்தில் 2,3 குரல்களில் மாற்றி மாற்றி கதைத்து மிமிக்ரி செய்வதிலும் கெட்டிக்காரர்கள். ஊரின் நான்கு மூலைகளிலும் நால்வரும் தமக்கென்று மேடைகளைத் தனித்தனியே போட்டு நிகழ்ச்சிகளை வழங்கிவருவார்கள்.சில நிகழ்ச்சிகளுக்கு கச்சான் விற்க வந்த கச்சான்காரியே கல்குலேற்றரில்(கணிப்பான்)கணக்குப் பார்க்குமளவுக்கு கூட்டம் களைகட்டினாலும்,பல நிகழ்ச்சிகளில் பார்வையாளரேயற்றுப் பேச்சாளர் தனக்குத்தானே கைதட்டும் பரிதாபமும் அரங்கேறும்.


ஒவ்வொரு பேச்சாளர்களும் வெவ்வேறு நிகழ்ச்சிகளை வழங்கித், தாங்களே வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பாத்திரங்களாக தங்களை உருவகித்து,அதற்குத்தக்கவாறு குரல்களை மாற்றி,தங்கள் காந்தக் குரலாலும்,வசீகரமான நிகழ்ச்சி செய்யும் பாணியினாலும்(Style) ஊர் மக்களைக் கவர முயலுவார்கள்.அதற்காக அவ்ர்களே பல உத்திகளையும் கையாளுவார்கள். நகர்ப் புறங்களிள், ஐந்து ரூபா SMS (குறுந்தகவல்)களை அதிகளவுக்கு நேயர்களை அனுப்பத்தூண்டி, அதன்மூலம் அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு கிடைக்கும் இலாபத்தில் தாமும் ஒரு பங்கு போடத் துடிக்கும் வானொலிகளைப் போல் செய்ய வசதிவாய்ப்புக்களோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத அந்த ஊரில் பேச்சாளர்களே பார்வையாளரிடம் கேள்விகளைக் கேட்பார்கள்.





அனைவருக்கும் விடைதெரிந்திருக்ககூடியதான "ஆனைக்குட்டி ஐயருக்கு எத்தனை கால்?","நடிகர் ரஜனிகாந் இன் பெயர் பின்வருவனவற்றுள் எது? முதலாம் விடை விஜயகாந், இரண்டாம் விடை ரஜனிகாந், மூன்றாம் விடை லக்ஷ்மிகாந் ,நான்காம் விடை சிறிகாந் என்பது போன்ற கேள்விகளைத் தெரிந்தெடுத்துக் கேட்பார்கள். விடை தெரிந்தவர்கள் ஒரு துண்டிலே எழுதிப் பேச்சாளரிடம் கையளிக்க வேண்டு.சனமும் விழுந்தடித்துக் கொண்டு ஒரு கடதாசித் துண்டிலே அத்ற்குரிய விடையை எழுதிப் பேச்சளரிடம் கையளிக்கும்.அவரும் எல்லாத் துண்டுகளையும் எண்ணிவிட்டு,"ஆம்,எங்களுக்கு 89 துண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அனுப்பிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்." என்று வந்த மொத்தச் சனமே 39 தான் என்பதை மறந்து உளறித்தள்ளி விடுவார். சரியான விடை எழுதிய ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு அயலூருக்கு வண்டிலில் இலவசமாக சென்று வருவதற்கான அனுமதியை, ஏதோ இந்தியா போவதற்கு விமானப் பயணச்சீட்டுக் கொடுப்பது போல ஒரு கர்வத்தோடு அறிவிப்பார்.


மேலும் பக்தி, தாங்கள் அடிக்கடி தான் தான் "தமிழ் மொழியின் பக்தி" என்றும்,"LMVR இன் தரப்படுத்தலில் தான் தான் முதலில் இருப்பதாகவும்" பீற்றிக்கொள்ள, ஊரியனோ,தான் கருத்துக்கணிப்பில் தெரிவு செய்யப்படமாட்டேன் என்பகை முதலே தெரிந்து கொண்டோ என்னவோ "கருத்துக் கணிப்பெல்லாம் வெறும் குருட்டுக் கணிப்பு.உங்கள் கணிப்புத் தான் குன்(Gun) கணிப்பு" என்று சனத்தைப் பார்த்து வடிவேலு பாணியில் கூறுவார்.அத்துடன் நிகழ்ச்சிகளின் இடையிடையே இந்த, இந்தப் பொருட்களை வாங்க நாடவேண்டிய ஒரே இடம் என ஊரிலுள்ள "மின்னிக் கண்ணன் கடை", "விக்கிப்பாப்பா கடை", "ஜம்பண்ணா கடை" போன்றவற்றின் விளம்பரங்களையும் அந்தந்தப் பேச்சாளர்கள் விளம்பரப் படுத்துவார்கள்.


அதிகாலை வேளைகளில் கூடுதலாக எல்லாப் பேச்சாளர்களது நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் களைகட்டியிருக்கும்.வேலைக்குச் செல்ல ஆயத்தமாகும் ஆடவர்,பெண்டிருடன்,பள்ளி செல்லத் துள்ளி நிற்கும் சிறுவர்களுமென அனைவரும் காலைச் சாப்பாட்டுக்களுடன் வந்து மேடை முன்னமர்ந்து நிகழ்சிகளைப் பார்த்து அதிலே லயித்தவாறே சாப்பிடுக் கொண்டிருப்பர்.பேச்சாளர் "நெற்றி" காலையில் "ஒடியல்" என்ற நிகழ்ச்சியை "டோஷன்" என்ற புனை பெயரில் வழங்குவார்.அவரின் பேச்சும்,அதிலுள்ள கம்பீரமும்,அச்சரம் பிசகாத உச்சரிப்பும்,ஆங்கிலம் கலக்காத தமிழும் ஒரு "அட" போட வைக்கும்.ஆனால் அவர் தான் ஜோக் சொல்கிறேன் என்று சொல்லி, ஒரு சப்பையான,சொதப்பல் ஜோக் ஒன்றைச் சொல்லி,அதற்குத்தானே சிரிப்பது போல் மிமிக்ரியும் செய்ய சனமெல்லாம் தம் தலையை மோதிக்கொள்ள ஒரு சுவரைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும்.ஆனாலும் மற்றைய பேச்சாளார்களைப் போல், புதிய,குத்துப் பாடல்களை மட்டும் பாடினால் தான் சனம் நிகழ்ச்சியைப் பார்க்க வரும் என்ற குறுகிய நோக்கத்தை விடுத்து, பல அரிய ,இளைய சந்ததி கேட்கத்தவறிய, கேட்கவேண்டிய அரிய பாடல்களைத் தேடித் தேர்ந்தெடுத்துத் தருவதில் நெற்றிக்கு நிகர் நெற்றி தான்.அதிலும், டோஸன் தன் ஒடியல் நிகழ்ச்சியில் துணிந்து செய்யும் அந்த முயற்சியைச் சனமும் பாராட்டத் தவறுவதில்லை.


பக்தி,விடியற்காலையில் "ஊசியா" என்ற பெயரில் பெண்குரலிலும், "சனா" என்ற பெயரில் ஆண்குரலிலும் கதைக்கின்ற "சுணக்கம் தாயகம்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.பக்தியின் இருவேறுபட்ட பாத்திரக் குரல்களிலும் வந்து விழும் வார்த்தைகள் கணீரென்று காதை வந்தடையும்.கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.உலக நடப்புக்களை, சனா என்ற ஆண்குரலின் மூலம் பக்தி கூறுவார்.பின்னர் அதே பக்தியே ஊசியா சனா பெயரில் சனாவின் பேச்சின் இடையிடையே,"ஆ.. சனா..O.K,..ரிக்க்ட்..m.. Yes.."ஆங்கிலமும் கலந்து கதைப்பார்.


மற்ற மேடையிலே ஊரியன், ஊரியராகங்கள் என்ற நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருப்பார்.ஒருவரை எழுப்பி, "நான் 50000 இற்கும் குறைவான ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன்.நீங்கள் அந்த இலக்கத்தை விட சிறிய ஒரு எண்வரை சொல்லலாம்.நீங்கள் சொல்லுமளவு தொகை உங்களுக்குப் பரிசாக வழங்கப்படும்.அதை தாண்டினால் உங்களுக்கு பரிசு இல்லை" என்று நிகழ்ச்சிய வழங்கிக் கொண்டிருப்பார்.சனமும் ஆர்வதுடன் பங்குபற்றிக் கொண்டிருக்கும்.


அதன்பின் நெற்றியார்,10 மணிமுதல் ஒருமணி வரை,"பினோத பியூகம்" என்ற நிகழ்ச்சியை,"பிமல்" என்ற ஆண்குரலிலும்,"மைதேகி" என்ற பெண்குரலிலுமாய் மாறிமாறி வழங்குவார்.மாட்டுச் சாணம்,ஆட்டுப் புழுக்கை,யானை இலத்தி என்பது போல ஏதாவது 5 குப்பைகளைத் தெரிந்தெடுத்து,அதிலே எது நல்லது என்று கேட்டு சனத்தை அறுப்பார்.பக்தியாரோ,"பக்தி எக்ஸ்பிரஸ்" என்ற நிகழ்ச்சியை,"நயானா" என்ற புனை பெயரில் ஒரு பெண்குரலில் வந்து,"கீ..க்கீ ,கீ.." என்று கத்திக் கத்தியே சனத்தின் காதெல்லாம் இரத்தம் வராதகுறையாக செய்துவிடுவார்.ஆனால் ஊரியனின் "விசைச் சமர்" நிகழ்ச்சி ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும்.ஆனால் "பிக்னேஸ்" என்ற பெயரில் அவர் படுத்தும் அட்டகாசம் சனத்தைப் போதும்போதும் என்றாக்கிவிடும்.


மதியச் சாப்பாட்டின் பின்னர் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மீண்டும், ஒரளவு சனம் களைகட்டும்.ஊரியன்,"சும்மாளம்" என்றும், நெற்றி, "பெற்றது பையளவு" என்றவாறும், பக்தி, "தலை பாயுதே" என்ற பெயரிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்கள்.உலக நடப்புக்களை கொஞ்சமாவது அறிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் அந்த நேர நிகழ்ச்சிகளுக்கு சனம் கூடுதலாக கூடும்.ஆனால் அவர்களோ அத்திபூத்தாற் போல் ஒரிரு விடயங்களைக் கூறிவிட்டு,சிம்புவுடன் நயனதாரா படுத்தார்,பிரபுதேவாவுடன் எழும்பினார் என்று ஐந்து சததிற்கும் பிரயோசனமில்லாத கதைகளைக் கதைத்து, சனத்தின் எதிர்பார்ப்பையும்,பொன்னான நேரத்தையும் மண்ணாக்கிவிடுவார்கள்.





நயந்தாரா யாருடனும் படுத்தாலென்ன,விட்டாலென்ன நீங்கள் பிரயோசனமான தகவல்களைத் தரலாம் தானேயென்று சனம் ஆதங்கப் பட்டுக் கொள்ளும்.தொடர்ந்து சினிமா புராணம் படிக்காமல் வேணுமென்றால் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக இடையிடையே ஒன்றிரண்டை இணைத்துக் கொள்ளலாம் தானே என்று சனம் அறிவுரை கூறினாலும் அதைக் காதில் போடுவதாய் இவர்கள் இல்லை.தங்களுக்கு உலகநடப்புத் தெரியதென்றோ அல்லது இவர்கள் தங்களுக்கு உலக நடப்புத் தெரியாததாலோ அவ்ற்றை நிகழ்ச்சியில் இணைப்பதில்லை என்ற சனத்தின் கேள்வியும் யோசிக்கவைக்கத்தான் செய்கிறது.


மாலையில் வேலை சென்றவர்கள் வீடு மீண்டு,தேநீர் அருந்தியவாறே,இளைப்பாறிக் கொண்டே பேச்சாளர்களின் மாலைநேர நிகழ்ச்சிகளை ரசிக்கத் தொடங்குவார்கள்.பக்தி,"ஹலோ பக்தி" என்ற பெயரில் "விராஜ்" மற்றும் "பவிதா" என்ற ஆண் பெண் குரல்க்ளிலும், ஊரியன்,"என்றென்றும் பன்னகை" என்ற நிகழ்ச்சியை "தவா" மற்றும் "" என்ற ஆண் பெண் குரலிலும் மாறி மாறிச் செய்து கொண்டிருக்க நெற்றி, "பந்துரு" என்ற ஆண்குரலில் தனித்தவில் வாசித்துக் கொண்டிருப்பார்.


மற்றப் பக்கம் கசந்தம், கசந்தம் குட்டி என்ற பெயரில் இந்த மூன்று பேரையும் வைச்சு அறு அறு என்று அறுத்தெடுத்துக் கொண்டிருப்பார்.சில சனம், "கேட்க நல்லாத்தான் இருக்குது உங்கட பகிடிகளூம், உந்த வானொலிகளூக்கை நடக்கிற கூத்துகளூம்.ஆனால் நீங்களும் முந்தி அதுகளூக்குள்ளதானே இருந்தையள் " எண்டு இடக்கு முடக்கா கேள்வி கேட்கையுக்கை மட்டும் அவற்றை முஞ்சை ஏதோ ஒரு படத்திலை செந்திலைப் பாத்து , கவுண்ட மணி, "அடேய் கோமுட்டித் தலையா இது தாண்டா மான்றில்(mantle) இதிலையிருந்து தான் பளீச்செண்டு வெளிச்சம் வருது.... ,இதுக்குத் தான் ஒரு ஆல் இன் ஆல் அழகு ரஜா தேவை எண்டு சொல்லுறது" எண்டெலாம் லெக்சர் அடிச்சுக் கொண்டிருக்க, "இதிலேருந்து எப்பிடின்னே வெளிச்சம் வரும் எண்டு .." மான்றிலைப் புடுங்கி கொண்டு செந்தில் கேட்கேக்கை கவுண்டற்றை முகம் மாறுமே அப்பிடி மாறிப் போகும் கசந்தம் குட்டியின்றை மூஞ்சை. எண்டாலும் "அக்கக்காய் அக்..ஆ" எண்டு சிரிச்சு ஒரு மாதிரி சிரிச்சு மழுப்பிப் போடுவார்.


பக்தி ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கும் "அன்னையர்க்காக..","மண்ணின் மைந்தர்கள்",”பக்தி சூப்பர் ஸ்டார்” போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் தரமானதும்,அவசியமானதும் என்பது சனத்தின் கருத்து.ஆனால் ஞாயிறு பகலில்,"சொங்கி டைம்" என்ற சொங்கி நிகழ்ச்சியை,சொங்கிப் பெயரொன்றில்,நிகழ்த்துவார்.குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டவில்லை என்பது போலதான்,பெரிய Style(பாணி) ஆகத் தொடங்குறன் என்று தொடங்கி பிசுபிசுத்துப் போன பிறகும் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் என்று சனம் கைதட்டிச் சிரிக்கும்.


அத்தோடு வார நாட்களில்,"பிலாச் சோறு" என்ற நல்லதொரு நிகழ்ச்சியினிடையே "பாயா" என்ற பெயரில் வழங்கும் பக்தி, தான் ஏதோ மெத்த படித்த மேதாவி என்று நினைத்துக் கொண்டு, தான் சொல்வதெல்லாத்தையும் சனம் கேட்கும் என்றதொரு நினைப்பிலே அலட்டலோடை அவிக்க வெளிக்கிட்டால் சனமெல்லாம் விட்டுவிட்டுப் போய் வீடுகளுக்கை படுக்க வெளிக்கிடும்.


என்னதான் ஒரு சில குறைகள் இருந்தாலும் அந்தப் பேச்சளர்களின் திறமைகளையும், அவர்களின் பேச்சாற்றல்களையும் சனம் ரசிக்கின்றது,அதிலே லயித்து சிரிக்கின்றது,பொழுதை போக்காட்டுகின்றது.அந்தவகையில் அவர்களின் பணி போற்றுதற்குரியதென்பதே சனதின் கருத்து.

Sunday, April 18, 2010

புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள்

ஈழத்தின் இனப் பிரச்சினை முற்றி, முறுகி, பொங்கி எழுந்து, பெரும் போராட்டமாகி, உச்சத்தைத் தொட்ட பின்னர் அடக்கப் பட்டிருந்தாலும் அதற்கான அடிப்படைக் காரணம், மொழி ரீதியான, இன ரீதியான புறக்கணிப்புத் தான் என்பதை எவரும் மறுதலித்து விட முடியாது.அறுபது ஆண்டுகளாய் ஆழமாக்ப் புரையோடிப் போன பிரச்சினையின் ஆணிவேர் எதுவென்று அறுதியிட்டுத் தெரிந்திருந்தும் அதற்கான தீர்வை முன்வைத்து, அம்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, ஆற்றாமைகளை,ஆதங்கங்களைக் களைவதை விட்டுவிட்டு இப்போதும் இசைந்து கொடுக்காமல் இடாம்பிகமாகப் பேசிக் கொண்டிருந்தால் இன்னுமொரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கி நாடு செல்வதைத் தடுக்கமுடியாது என்றெல்லாம் ஐ.நா செயலாளரென்ன ஆண்டவனே வந்து சொன்னாலும் ஒரு பிரயோசனுமுமில்லை என்பது ஓராம் ஆண்டு படிக்கும் பிள்ளைக்கே தெரிந்த உண்மையெனப்தால் நாம் அதை விட்டு விட்டு சொல்ல வந்த விடயத்திற்குச் செல்வோம்.



எந்தவொரு பெரும்பான்மையினமும் ஒரு சிறுபான்மையினத்தின் உணர்வுகளை மதிக்காமல்,அவர்களை அடக்கி, ஆள நினைக்கும் போது ஏற்படுகின்ற அந்த வலி,வேதனை,,குமுறலை வார்த்தையில் வடிக்க முடியாது.அதன் போது ஏற்படுகின்ற கோபம் கொடூர்மானது.கொன்று உயிரைத் தின்றிடவும் தயங்காது.உலகில் ஏற்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலானாவை புரட்சிகளாகட்டும், முதலாளி, தொழிலாளி பிரச்சினையாகட்டும் ஆளும் வர்க்கம் -மக்கள் புரட்சியாகட்டும் சுதந்திரப் போராட்டங்களாகட்டும் எதோவொரு வகையில் பெரும்பான்மை, சிறுபான்மை சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன.



அதனை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம்.எங்கள் மொழி, எங்கள் கலாசாரம் மதிக்கப் படாத போது,எம்மவனுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படாத போது, எம் நிலங்கள் பறிக்கப் பட்ட போது, எம் கலாசராம் இரவோடு இரவாக வழித்துத் துடைக்கப் பட்டு அழிக்கப் பட்ட போது, வரலாறு மாற்றி எழுதப்பட்ட போது எம் நெஞ்சில் ஏற்பட்ட வலியை, வேதனையை அனுபவித்து உணர்ந்திருக்கின்றோம். ஆக பெரும்பான்மையினமும் சிறுபான்மையினமும் ஒன்றாக ஒரு சமுதாயத்தில் உள்ள போது சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடுய வலிகள் மற்றைய எல்லாரையும் விட எங்களுக்கு அதிகமாக தெரியும்.தெரிந்திருக்க வேண்டும்.



இங்கே பெரும் பான்மையினம், சிறுபான்மையினம் என்பது இரு இனங்களாகத் தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.ஒரு வளர்ச்சியடைந்த பிரதேசமும் வளர்ச்சி குன்றிய பிரதேசமுமாகவும்,பிரபல நகரப் பாடசாலையாகவும், பின்தங்கிய கிராமப் பாடசாலையாகவும், வசதியான ஒரு ஊரும் வறுமை மிகுந்த இன்னுமொரு ஊராகவும், உயர்ந்த சாதியாகவும் தாழ்ந்த சாதியாகவும்,ஆண் சமுதாயமாகவும் பெண் சமுதாயமுமாகவும் ஏன் படித்த ஒருவனாகவும் படிக்காத இன்னுமொருவனாகவும் அல்லது வேலை செய்யும் ஒருவனாகவும் வேலையற்று இருக்கும் இன்னொருவனாகவும் இருக்கலாம். மேற்சொன்ன சோடிகளில் ஒன்றிலிருந்து மற்றையது ஆளுமையிலோ, அதிகாரத்திலோ,கல்வியிலோ,வசதியிலோ,பிரபலத்திலோ ஒன்று உயர்ந்து,பெரும்பான்மையாகி,அது சொல்வதை மற்றையது கேட்கும் படியாய்,அல்லது கேட்க வைக்கச் செய்கிறது.மற்றையதுஅடங்கிப், பதுங்க வேண்டியதால்,நெஞ்சு பொருமி,உள்ளுக்குள் விம்மி,அழுகின்றது.



எனக்கு விளங்காத ஒன்று இது தான்.இவ்வளவு பட்டும் எங்களுக்கு ஏன் இன்னும் புத்தி வரவில்லை என்பதே? மிகச் சிறிய இனமான ஈழத் தமிழினம் மிகப் பெரிய இழப்பினை சந்தித்துள்ளது அதன் போராட்டத்திலே.ஆனாலும் அதெல்லாம் மறந்து,இங்கு பிறந்தவர்கள் தான் எல்லாவற்றுக்கும் தலைப்பாகை கட்ட வேண்டும்,இவர்கள் தான் கலாசாரத்தின், தமிழின் காவலர்கள்.இந்த இடத்தில் பிறந்தவர்களுக்கு என்னடா தமிழ்ப் பற்று போன்ற கதைகள் மற்றவர்களுடைய மனங்களில் ஏற்படுத்தப் போகும் வலியை நாம் அறிய மாட்டோமா?அல்லது உணர மறுக்கின்றோமா? அல்லது உணார்ந்தும் ஊமைகள் போல் இருக்கின்றோமா?



ஒரு பிரபலமான பாடசாலையிலிருந்து வந்தவர்கள்,சிறு பாடசாலையிலிருந்து வந்தவர்களை நக்கலடிப்பது,அவர்களை வம்புக்கு அழைப்பது,ஏதோ தாங்கள் மட்டும் தான் கொம்புகள் போல் கதைப்பது அவர்களை தனித்தனியே ,தம்முள் சிறு சிறு குழுவாகச் சேர்ந்தியங்கவே தூண்டும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம். நாங்கள் பாடசாலைகளில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் எம் பாடசாலை ஆசிரியர்கள், எம் மண்ணில் பெரும் பான்மை இந்துக்களிடையெ சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களைப் பார்த்து "சோத்துக் கிறீஸ்தவம்" என்று கூறி எள்ளி நகையாடியிருக்கின்றோம்.ஆசிரியர்கள் போனால் பிறகு கூட நாங்கள் அவர்களை அவ்வாறு பரிகாசித்து வம்புக்கிழுத்திருக்கின்றோம்.அவர்கள் சோத்துக்கும் மதம் மாறினாலென்ன மாறாவிட்டால் தானென்னெ ? என்று எம் பாட்டிலிருந்திராமல் அவர்களின் மத ரீதியான உணர்வுகளைத் தீண்டிப் பார்த்திருக்கிறோமே என்பது இப்போது தான் உறைக்கிறது.




ஒரு தாழ்ந்த சாதிப் பையனை,அவனின் சாதியின் பெயரால் கோவில்களிலும் பொது வைபவங்களிலும் தள்ளி வைக்கும் போது அவனுக்கு ஏற்படும் மன நிலையை எம்மால் உணரமுடியாதுள்ளது என்றால் அதை நம்புவது சற்றுக் கடினமாகவுள்ளது.ஒரு படிக்காதவனைப் பார்த்து அவன் படிப்பப் பற்றி எள்ளி நகையாடும் போதோ அல்லது வேலை எடுக்காதவனின் இயலாமையப் பரிகாசிக்கும் போதோ அல்லது ஒரு வானொலி, வானொலி உலா நிகழ்ச்சிகள் நடாத்தச் செல்லும் போது ஒரு பிரதேசம் புறக்கணிக்கப் படுகின்ற போதோ ஏற்படுகின்ற வலி எங்களுக்கு நாங்கள் புறக்கணிக்கப் பட்ட போது, படுகின்ற போது ஏற்படாததா?



ஏன் பெண்கள் அது செய்யக் கூடாது,இப்படித்தான் இருக்க வேண்டும், அப்பிடித் தான் உடுத்த வேண்டும் என ஆணாதிக்கம் ஆணையிடும் போது,பெண்மையானவள் தான் தனது தேவைகளை சுயநிர்ணயம் செய்ய முடியாமையை உணர்வதை எங்களால் உணரமுடியதுள்ளது என்று கூறீனால் அது வேடிக்கை தானன்றி வேறொன்றுமில்லை.உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்காத நாம் அவள் வெளியக சுயநிர்ணய உரிமைக்காய் விவாகரத்து கோரினால் மறுப்பது எதனால்?



அது மட்டுமல்லாது இன்று பல்கலைக் கழகங்களில் சென்ற மாணவர்களிடையேயும் பிரதேச வாதம்,பாடசாலைப் பாகுபாடு என்பன தாராளமாகவே உள்ளது.புதிதாக வரும் கனிஸ்ட மாணவர்களை ராகிங் செய்யும் போது, மாணவத் தலைவர் தெரிவின் போது பக்கச் சார்பான ,பல சில்லறை அரசியல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.சில பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்றாக, ஒற்றுமையாகத் திரிந்தால் வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது.அவர்கள் எவ்வாறு இருந்தாலென்ன, நாம் வந்த வேலையைப் பார்ப்போம் என்றில்லை.இருக்கிற மிச்ச சொச்சமும் ஒற்றுமையில்லாமல் குழிபறிப்புக்களும்,முதுகில் குத்தல்களும் தொடரவேசெய்கின்றன.படிக்க வந்த நோக்கம் மறந்து,கல்வியின் குறிக்கோள் துறந்து,நெறி பிறழ்ந்து,வஞ்சனைத் திட்டங்கள் தீட்டவே வகுப்பறைகள் பயன்படுகின்றன.வருடங்களூம் அதிலேயே உருள்கின்றன.பாஸ் அவுட் பண்ணினவர்களுடன் கூடக் கொன்சல்ற் பண்ணி பக்காப் பிளான்கள் படைக்கப் படுகின்றன.



சில பிரதேசத்து மாணவர்களது சில திறமைகள்,சில பண்புகள்,சில பெரும்பான்மையான இயலவாளிகளினால் பரிகாசிக்கப் பட்டு,மழுங்கடிக்கப்படுகின்றன.ஓரங்கட்டப் படுகின்றன.ஒளித்து மறைக்கப் படுகின்றன. இப்படிச் சின்ன சின்ன விடயங்களில் கூட இவ்வளவு பட்டும் நாம் திருந்தாமலிருக்கிறோம் என்பதாலோ எங்களுக்கு இன்னமும் விடுதலை கிடக்கவில்லை என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.



ஈழத்துக் காந்தியான தந்தை செல்வநாயகத்திடம் ஒரு முறை ஒரு செய்தியாளர் "இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்குக் கிழக்குக்கு தீர்வு கிடைத்தால் நீங்கள் சார்ந்த கிறீஸ்தவர்கள் அதிலே சமமாக மதிக்கப் படுவார்களா ?" என்று கேட்ட கேள்விக்கு "சுதந்திரம் கிடைக்கட்டும் பார்ப்போம்" என்றொரு மழுப்பல் பதிலைக் கூறித் தப்பி விட்டார் தந்தை.உண்மையில் சுதந்திரம் கிடைத்திருந்தால் கூட நாங்களே "நான் பெரியவன் ..நீ சின்னவன்" என்று கூறி ஆள் ஆளுக்குப் இப்போது தமிழ்க்கட்சிகள் பிரிந்து நிற்தைப் போல பிரிந்து நின்று கொண்டு தீவுக் கூட்டங்களாய் தனித்தனியாய் பிரிந்து நின்றிருப்போமோ என்று கூட எண்ணத் தலைப் படுகின்றது.



வடக்கு- கிழக்கு தனித்தனி மாகாணாமாகி ,மாவட்டமாகி, பிரதேசமாகி, ஊராகி, ஊரில் உள்ள றோட்டாகி றோட்டுக்கொரு தலைவர்மார் உருவாகியிருப்பார்கள்.இன்றைய சினிமாவில் ரௌடிகள் இடங்களைப் பிரித்துக் கொண்டு இது எங்க ஏரியா உள்ள வராதே"" என்று கூறுவது போல் கூறிக் கொண்டிருந்திருப்போம்.சிலவேளைகளில் அதற்குள்ளும் எட்டப்பர்கள் புகுந்தால் றோட்டும் உடைந்து வீட்டோடு வந்து நிற்கும். எவ்வளவு பட்டாலும் நாங்கள் திருந்த மாட்டோம்.வரலாற முழுக்க எட்டப்பர்களையும் சகுனிகளையும் நிறையவே கண்ட இனம் எங்கள் இனம்.ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்தது என்று கூறப்படும் எம்மினம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,அடிமைகள் போல் கொடுமைப் படுத்தப் படுவதற்கு நாங்களூம் ஒரு காரணம்.நாங்களூம் எங்கள் இனமும்.நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது.உண்மையில் எனது தலைப்பை புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் பு---மக்கள் என்று மாற்றியிருந்தால் சரியாக இருக்குமோ என்று கூட நான் என்ணுகின்றேன்

Sunday, March 28, 2010

மாஸ்ரற்றை பிரம்பு

துள்ளித் திரிந்த பள்ளிப்பருவங்களில் நாம் செய்த கள்ளத்தனங்கள், மொள்ளமாரித்தனங்களுக்கெல்லாம் பள்ளி ஆசான்கள் நம்மையெல்லாம் நுள்ளி எடுத்திருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.அனைவரும் அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தான்.அந்த வயதில் எல்லோரும் குழப்படி செய்திருப்போம்.ஆசிரியர்களுக்குப் பயம் என்றாலும் ஆசிரியர்கள் அடிப்பார்க்ள் என்பதற்காக குழப்படி செய்யாமல் மாணவர்கள் விட்டதாகவும் இல்லை.ஆசிரியர்களும் தங்கள் பாட்டில் ஏதேதோ கத்தினாலும் அவர்கள் செல்லவிட்டு அவர்கள் சொன்னதற்கு எதிர்மாறாக கூத்துக்களெல்லாம் அரங்கேறியிருக்கும்.


தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த குழப்படிகளை இப்போது நினைத்தால் சிலவேளைகளில் சிரிப்புத்தான் வரும்.அதே நேரம் வாங்கிய அடிகளும் ஞாபகம் வரும்.க.பொ.த.(சா/த) இற்கு முன்னர் நானும் பல பேரிடம் சரமாரியாக வாங்கிக் கட்டியிருந்தாலும் ஒரு சில அடிகள் செத்தாலும் மறக்காது.இப்போதும் அந்த அடிகள் வலிக்கும்.தற்போதும் அந்த அடிகள் 'பின்னுக்கு' புளிக்கும்.காலுக்கு கீழ் தழும்பு தெரிவது போல் இருக்கும்.அப்படியாக நான் வாங்கிய என் நெஞ்சம் மறக்காத அந்த அடிகளை மீட்டு உங்களுடன் பகிர்வதோடு உங்களையும் அந்த 'வசந்த காலங்களை' மீட்டிப் பார்க்கச் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.




நாங்கள் ஒன்பதாம் ஆண்டளவில் கற்றுக் கொண்டிருந்த போது,எங்கள் உப அதிபராகக் கடமையாற்றியவரின் பட்டப்பெயர் புலிக்குட்டி.ஏன் அவர் அவ்வாறாக வழங்கப்படுகிறார் என்பதற்கு, நண்பர் கிருத்திகன் தனதொரு பதிவில் விரிவாக விளக்கம் கொடுத்திருந்தாலும் அதை வாசிக்காதவர்களுக்காக அந்த காரணத்தை இரத்தினச்சுருக்கமாகச் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.புலிக்கு உள்ளங்கால் கூடக் கறுப்புத் தானாம்.அந்த நிறமுடைய இவரின் தந்தையின் குட்டியாகிய இவரை புலிக்குட்டி என்றே பன்னெடுங்காலமாகப் பலரும் வழங்கி வந்தனர்.


நாங்கள் தரம் 9 இல் கற்றுக்கொண்டிருந்த போது பாடசாலைகளுக்கிடையான வன்பந்துப் போட்டி நடைபெறுவது வழக்கம்.15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையிலான ஆட்டம் ஒன்று எமது பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.எதிரணிப் பாடசாலையை எனக்கு ஞாபகம் இல்லை.எமது வகுப்பு நண்பனும்,தற்போது மருத்துவபீடத்தில் கற்றுக் கொண்டிருப்பவனுமாகிய கலைமாறனும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அணியில் விளையாடுகின்றான்.(நண்பன் பால்குடியும் விளையாடியிருப்பார் என்று நினைக்கின்றேன்)எமது நண்பனின் துடுப்பாட்டத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுதி, எம்மில் கிளர்ந்தது.

எமது கல்லூரி மைதானம்,பாடசாலையிலுருந்து 70 - 80 m தூரத்தில் எமது சகோதர(ரி)ப் பாடசாலையை அண்மித்திருந்தது.ஆட்டத்தைக் காணச் செல்வதென்றால் பாட ஆசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்லவேண்டும் என்பது பாடசாலை விதிமுறை.ஆனால் அன்று எங்கள் 8ம் பாட ஆசிரியர் பாடசாலைக்கு சமுகம் தந்திருக்கவில்லை.அதனால் நாங்கள் அனைவரும் தன்னிச்சையாக,ஒற்றுமையாக முடிவெடுத்து மைதானத்துக்கு சென்றோம்.(எங்கள் வகுப்பு ஒற்றுமையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.என்னதான் எங்களுக்குள் அடிபட்டாலும்,வெளியே ஒரு அதிபரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது மாணவத் தலைவரினிடமோ எவனும் ஒருவனை ஒருவன் மாட்டி விட மாட்டான்.செம fit.அன்று பழகிய அந்த ஒற்றுமையினால் தான் நாம் இன்றும் நல்ல நண்பர்களாய் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்)


கடைசிப் பாடமென்ற படியால் பஸ்களில் பயணிக்கும் நெல்லியடி, கரவெட்டி, கரணவாய், உடுப்பிட்டி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, துன்னாலை நண்பர்கள் புத்தகப் பைகளுடனேயே மைதானத்துக்குள் வந்திருந்தனர்.நாங்கள் எமது துவிச்சக்கரவண்டிகள் உள்ளே நின்ற காரணத்தினால் வெறுங்கையுடனையே சென்றிருந்தோம்.சென்று கலைமாறனின் ஆட்டத்தையும் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்.



இந்த நேரம் பார்த்து எங்கடை புலிக்குட்டி வன்னிப் பக்கம் போயிருக்குது(எங்களது கட்டடத் தொகுதியின் செல்லப்பெயர்- பெயரிலிருந்து அதிலுள்ளவர்கள் செய்யும் குழப்படிகளை சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது தானே?)வகுப்பில் ஒருவரும் இல்லை.பக்கத்து வகுப்பிடம் விசாரித்திருக்கிறார்.திரும்பி அலுவலக்த்துக்கு வந்து, ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம்பொன்றையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார்.மைதானத்தின் பின்புறவாசலில் நின்று கொண்டு(அந்தப் பாதையால் தான் சகோதர(ரி)ப் பாடசாலையின் சகோதரிகள் பாடசாலை சென்றுவருவார்கள்)பிரம்பைக் காட்டியவாறே ஒன்றன்பின் ஒருவராக வரும்படி கர்ச்சித்தார்.


புலிக்குட்டியை சும்மா கண்டாலே பயம்.இதில தடியை வேறை ஆட்டி ஆட்டி கொண்டு வெருட்டுது.ஒருத்தனும் முன்னுக்குப் போகமாட்டேன்கிறான்.ஒருத்தனுக்குப் பின் ஒருத்தன் ஒளித்து வரிசையின் பின்பக்கம் செல்வதற்கே எல்லாரும் முண்டியடித்துக் கொண்டிருந்தாங்கள்.குட்டிக்கு இன்னும் கோபம் ஏறிட்டுது.வந்து ஒருத்தனை ஏதேச்சையாகப் பிடித்து ரோட்டிலை வைத்து ஒரு மூன்று,நாலு அடி விழுந்திருக்கும்.இப்பிடியே ஒவ்வொருத்தருக்கும் பரவலாக மூன்று, நாலு என்று விழுந்து கொண்டே வந்துது.


எனது முறையும் வந்தது.மூன்றே மூன்று அடி.சரிசமனான விசைப்பருமன்.சரியாக ஒரே இடத்தில் சரியான நேர இடைவெளியில் அவரது பிரம்பு எளிமை இசைஇயக்கம் ஆடிச் சென்றது.ஆனால் எனக்கோ சீவன் போய்வந்தது.(ஆள் தூயகணிதம், பிரயோககணிதம், பௌதீகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் என்று க.பொ.த.(உ.த)விஞ்ஞானத்திலில் எல்லாப் பரப்பையும் கரைத்துக் குடித்த மனிசன் என்றபடியால் எதைப் பாவித்து உந்த எளிமையிசை இயக்கத்தை நிகழ்த்தினாரோ என்று எனக்கு தெரியாது)அப்போது நேரம் 1.45 ஐ த் தாண்டியிருந்தபடியால் சகோதரப் பாடசாலையின் சகோதரிகள்,நண்பிகள்,எங்கள் கனவுக் கன்னிகள் எல்லாரும் எங்களைப் பார்த்து கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு சென்றார்கள்.


என்ன செய்வது வாங்கின அடிகளின் வலிகளை விடவா அந்த கொடுப்புச்சிரிப்புக்கள் வலிதானவை என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டோம்.இன்றைக்கும் அந்த அடிகள் எங்களை பின்னுக்குத் தடவிப் பார்க்கச் சொல்கிறது."அ..ஆ..அ ம்..ம்..மா "என்று கண்களைச் செருமிக் கொண்டே நுனிக்காலில் எழும்பி "அ..அ..ஆ.. ஐயோ சேர்.. இனி ..இப்பிடிச் செய்யமாட்டேன் " எனச் சொல்ல வைக்கிறது.இன்றல்ல கடைசிவரைக்கும் மறக்க முடியாதவை அந்த அடிகள்.தங்கள் அடி மூலம் எங்களைப் பண்படுத்திய அந்த ஆசிரியர்கள் இன்றும் எம்முன்னே வந்து போகிறார்கள்.அது தான் அந்த அடியின் வலிமை.பெருமை.திறமை.நன்றிகள் கோடி அந்த அடிகளுக்கும் அடித்துத் திருத்திய ஆசிரியர்களுக்கும்.

Sunday, March 21, 2010

சர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்

இன்றைய காலகட்டங்களில் சர்வதேச பாடசாலைகள்(International School)களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், அந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையும், அங்கு பிள்ளைகளைக் கற்கத்தூண்டும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை கண்கூடு.இந்தக் கல்வியை அவர்கள் நாடுவதன் காரணம் என்ன?அது சரியானவழிமுறைதானா?அதில் உள்ள சாதக, பாதக விடயங்களை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.உங்கள் விமர்சனங்களை, நிச்சயமாக நான் திறந்தமனதுடன் வரவேற்கின்றேன்.



ஒருநாட்டிலே வாழும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பாடத்திட்டங்களைப் போதிப்பதற்காக இந்த சர்வதேசப் பாடசாலைகள் ஜப்பான்,சுவிற்சலாந்து,துருக்கி போன்ற நாடுகளில் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோன்றின.இவ்வாறான பாடசாலைகளுக்கென்று பிரத்தியேகமான முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.இலங்கையில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்கள்,தூதரகங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கற்பதற்கென்று இலங்கையின் முதலாவது சர்வதேசப் பாடசாலை 1958 ம் ஆண்டு கொழும்பில் "ஓவெர்செஅ'ச் Cகில்ட்ரென் ஸ்சோல்" என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது.


ஆரம்பத்தில் ஓரளவிற்கே இருந்த இப்பாடசாலைகள் 1980 இன் பின்னர் வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கின.தனியார் பாடசாலைகளுக்கும் சர்வதேசப் பாடசாலைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனியார் பாடசாலைகள் அரசாங்கப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவரும் அதேவேளை சர்வதேசப் பாடசாலைகள் தத்தமது நாட்டுக்குரிய அல்லது பெரும்பாலும் அமெரிக்க, பிரித்தானியப் பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. ஆரம்ப காலங்களில் தலைநகரில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட சருவதேசப் பாடசாலைகள் இன்று மேல் மாகாணத்தில் 54 பாடசாலைகளாகவும்,மத்திய மாகாணத்தில் 16 ஆகவும்,வடமேல் மாகாணத்தில் 8 ஆகவும் காணப்படும் அதேவேளை வடக்கு,கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றாகவும் உள்ளது.




சர்வதேசப் பாடசாலைகள், 5 - 14 வயதுப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சின் அனுமதியின்றி அமைக்கமுடியாதென்ற இலங்கையில் உள்ள கல்விச் சட்டங்களை மீறியே 5- 14 மாணவர்களுக்காகவும் பாடசாலைகளை அமைத்துள்ளன.பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கில மொழியில் கற்பித்தாலும்,சில பாடசாலைகள் ரஷ்ய,பிரெஞ்சு மொழிகளிலும் கற்பிக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளின் நோக்கம் சிறந்த இல்ங்கைப் பிரசையையுருவாக்குதல் எனில்,பிரித்தானியப் பாடத்திட்டதுடன செயற்படும் சர்வதேசப் பாடசாலையாயின் சிறந்த பிரித்தனியப் பிரசையையுருவாக்குவதே அதனது நோக்கமாக இருக்கும்.அவ்வாறெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையொன்றினால் பிரித்தானிய கலாசாரங்களுடன் பிரித்தானியப் பிரசையாக உருவாக்கப்படும் ஒரு இலங்கை மாணவன் எவ்வாறு இலங்கை சமூகத்துடன் பொருதி வாழமுடியும் என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியாது.ஏனெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையில் கற்கும் எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை.இந்நிலையில் சர்வதேசப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.




சுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்விக்கொள்கை மத்திய,உயர் தரவர்க்கத்தினருக்கே கல்வி என்று இருந்த நிலையை மாற்றி,ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சிறந்த,உயர் கல்வியை கிராமப் புறங்களுக்கும் விரிவு படுத்தப் பயன்பட்டது.தாய்மொழிக் கல்வியினால் மாணவர்களின் ஆங்கில அறிவிலே பாதிப்பு ஏற்படுவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கல்வித்துறையிலே சமூகநீதியையும் நியாயத்தையும் ஏற்படுத்த அது உதவியது என்றால் அதில் தப்பேதுமில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆப்படிக்கும் வகையில் 1990 களில் ஏற்பட்ட பூகோளமயவாக்கம், இலங்கையில் அறிமுகப்படுத்தப் பட்ட தாராளமயமான பொருளாதாரக்கொள்கை, அதன் பயனாக எழுச்சியுற்ற தனியார் துறையின் அசுர வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஆங்கிலமொழிக்களிக்கப்பட்ட முக்கியத்துவம், முன்னணி அரசாங்கப் பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் எழுந்த சிக்கல்கள், அரசாங்கப் பாடசாலைகளில் ஏற்பட்ட கல்வி, நிர்வாக சீர்கேடுகளினால் ஏற்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் தராதர வீழ்ச்சி என்பன ஒருங்கு சேர்ந்து சர்வதேசப் பாடசாலைகளின் பால் மாணவர்களையும், பெற்றோர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.



சர்வதேசப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தாராளமயமாக்கல் கொள்கையால் நன்மையடைந்த புதிய செல்வந்தவகுப்பினர் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து,ஆங்கில கல்வியை நாடமுயன்றதும் அவர்களைப் பார்த்து சாதாரண மக்கள் வாயைப் பிளக்கத் தொடங்கியதுவும் காரணமாய் அமைந்தது.அதுமட்டுமலாது தாராளமயமாக்கலால் அதிகரித்த தனியார் மூலதனமும்,அந்நியச் செலாவாணிகளின் உள்வருகையும் வர்த்தகம்,கைத்தொழில்,சுகாதாரம் போன்ற துறைகளிலும் கால்பதித்திருந்த தனியாரை கல்வித்துறையிலும் முதலிடத் தூண்டியது.இதனாலும் சர்வதேசப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு தோன்றியது.




சர்வதேசப் பாடசாலைகளில் செல்வந்தவகுப்பினர் ஆங்கிலத்தில் கற்பதால் அவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புக்கள் அதிகளவில் கிடைக்க ஏதுவாயமைகின்றது.சர்வதேசப் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் உயர்ந்த கட்டணத்தையும் பெற்றோர் செலுத்தத் தயாராயிருப்பது அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அவாவோடு உள்ளனர் என்பதையும் இந்தப் பாடசாலைகளில் கற்பது கௌரவமானது என்ற அவர்களின் சிந்தனையோட்டத்தையும் காட்டிநிற்கின்றது.அத்தோடு பிரபல அரசாங்கப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முயன்று தோற்றுப் போன சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட மனத் தாக்கங்கள்,"கௌரவக் குறைச்சல்கள்" போன்றனவற்றோடு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இவை ஒர் ஆரம்பமாக இவை அமையும் என்ற கருத்தோட்டமும் அமைகின்றது.


தாய்மொழியில் கிடைக்காத அரிய நூல்கள், சஞ்சிகைகள், கற்றல் சாதனங்கள் ஆங்கிலமொழிக் கல்வியில் கிடைக்கின்றன என்ற அவர்களின் வாதமும் மறுதலிக்கப் படமுடியாத ஒன்று.35 சதவீதமான வேலைவாய்ப்புக்கள் ஆங்கில மொழியில் செயற்படும் தனியார்துறையாரிடம் உள்ளதால் ஆங்கில மொழிக்கல்வியில் இயல்பாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றமை தவிர்க்கமுடியாததாகிறது.அதற்காக இலங்கையில் உள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கும் ஆங்கிலமொழிக் கல்வியை வழங்கினால் அவர்கள் அனைவருக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பை வழங்குமா என்று குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்கப் படாது. பூகோளமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலமே விஞ்ஞான மொழி, இராஜதந்திரமொழி, வர்த்தக மொழி, சர்வதேசத் தொடர்பாடல் மொழி, அறிவு உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகின்றது.ஆக்வே எதிலும் தவிர்க்கமுடியாத ஆங்கிலத்தைக் கற்கவேண்டியதுவும் அதை பெறுவதற்கு சிறந்த வழியாக சர்வதேசப் பாடசாலைகளைக் கருதியதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.



அத்தோடு இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் காலம் தாழ்த்தியே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற்மை, பட்டம் பெறும் போது 25- 26 வயதைத் தொட்டுவிடுகின்றமை, கஸ்ரப்பட்டு அனுமதி பெற்றாலும் சிரேஷ்ட மாணவர்களின் "வதை" எனப் பல பிரச்சினைகள் உள்ளமையினால்,இவற்றைத் தவிர்ப்பதற்குமாய்ப் பலர் சர்வதேசப் படசாலைகளின் இலண்டன் க.பொ.த.(சா/த) மற்றும் (உ/த) போன்றவற்றைக் கற்கின்றனர். மேலே உள்ள பல காரணங்களுக்காக அவர்கள் சர்வதேசப் பாடசாலைகளைத் தெரிவு செய்தாலும் அதிலே உள்ள சமூக ரீதியான பாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓவர் சீரியஸ் பதிவாய்ப் போச்சுதோ எண்டு இப்பத் தான் யோசிக்கிறன்

Sunday, March 7, 2010

எங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை

இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது