Showing posts with label மூளாத் தீ. Show all posts
Showing posts with label மூளாத் தீ. Show all posts

Saturday, July 2, 2011

யாழ்ப்பாணத்தார்

தலைப்பைப் பார்ததவுடன், இதுவொரு பிரதேசவாதத்தைக் கிளறுகின்ற பதிவு போல தோற்றினாலும், நிச்சயமாக இந்தப் பதிவு அதற்கு எதிர்மாறான திசையிலேயே பயணிக்கப் போகின்றது.இது எங்களிடையே தெரிந்தோ,தெரியாமலோ ஊறிப் போன எங்கள் மன நிலையைப் பற்றிப் பேசப்போகின்ற பதிவு இது.சில வேளைகளில் எமது இந்த பழக்கவழக்கம் சிலவேளைகளில் மற்றவர்களை நோகடிக்கும் என்பது கூட எமக்குத் தெரிவதில்லை அல்லது அல்ல்து அதுபற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை.இன்னும் சொல்லப் போனால்
அந்தளவு ஆழமாக நாம் இதை ஒரு விட்யமாக நினைத்து சிந்திப்பதேயில்லை.இதைப் பற்றியெல்லாம் சொல்லப்போகும் நானும் ஒரு யாழ்ப்பாணத்தவன் தான்.ஏன் இந்தக் கடைசி வரியில் உள்ள 'யாழ்ப்பாணத்தவன்' என்று அழுத்திச் சொல்வது/சொல்லிக்காட்டுவது கூட
அந்த மனநோயின் அறிகுறிதான்.ஆனாலும் நான் அந்த வரியை நான்
எழுதுகின்றேன்.காரணம்,வெளியிலிருந்து ஒருவன் சொல்ல முயன்றால் அதற்கு பலவேறு காரணங்கள் இட்டுக் கட்டப்பட்டு அது வேறு திசைநோக்கித் திருப்பி விடப்படலாம்.ஆனால் இதுவும் அப்பிடித் திருப்பிவிடப்பட மாட்டாதென்றில்லை.ஆனாலும் எழுத வேணும் போல ஒரு நான்கைந்து மாத்ததுக்குப் பிறகு இன்று தான் தோன்றியது.என்னால் எழுதப்பட்ட பதிவுகளிலே மிகவிரைவாக எழுதபபட்டது இந்தப்பதிவு.அதனால் சில கருத்துப்பிழைகள் இருந்தால் அதுபற்றி பின்னர் விவாதிக்கலாம்.


இலங்கையிலே இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திலே உள்ள எட்டுத் தமிழ் மாவட்டங்களான அம்பாறை,கிளிநொச்சி,திருகோணமலை,மட்டக்களப்பு,மன்னார்,
முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,வவுனியா(தமிழ் அகர வரிசைப்படி) மற்றும் அதற்கு வெளியே மத்திய மலைநாடு மற்றும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயும் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றனர். மொழியால் அனைவரும் தமிழர்கள் என்றாலும்அவரவர் வாழும் சூழலுக்கேற்றாற் போல் அவரவர்
பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள்,கலாச்சார கட்டமைப்புக்களில் சிற் சில வேறுபாடுகள் உள்ளன என்பது மறு(றை)க்கப்ப்படமுடியாத உண்மை.அந்த வேறுபாடுகள், மதிக்கப்ப்ட்டு, மற்றவர்களால் மரியாதை கொடுக்கப்பட்டால் எங்கள் அனைவருக்குமிடையே இருக்கும்
பிணைப்பு மேலும் இறுக்கமாகும் என்பது நிதர்சனம்.ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் யாழ்ப்பாணத்தான் தான் எல்லாத்துக்கும் தலைப்பாகை கட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டு பிலால்பழச் சுளையை எடுக்கும் போது "கொளுக்" என்று துள்ளி விழுகின்ற பிலாக் கொட்டையள்" போல துள்ளிக் குதிக்கின்றோம். இது பற்றி என் மனக்கிடக்கைகளை ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள் என்றொரு பதிவில் அலசியுள்ளேன்.


நான் இங்கே கதைக்க விழைவது ஒவ்வொருவரும் அவரவர் மாவட்டங்களை விட்டு, தமிழர் என்ற பரந்த வகையிலே ஒன்று சேர்கின்ற அமைப்புக்களிலே நடக்கின்ற/
நடந்துகொண்டிருக்கின்ற செயல்களையும் பற்றித்தான். இதன் ஆழம் தமிழ்ச்சங்கங்கள், பல்கலை மாணவர் அமைப்புக்கள் தொடக்கம் தமிழ்மக்களின் தற்போதைய ஏகப்பிரதிநிதிகளாக இருந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரை அது நீளலாம்.இந்த சமூக அமைப்புக்களில் தலைமை மற்றும் உறுப்பினர் தெரிவுகளில் எப்போதும் யாழ்ப்பாணத்தவருக்கு, காத்திரமான இடம் இருக்கும்/இருந்து கொண்டிருக்கிறது.திறமை இருக்கலாம் அவர்களிடம் இல்லையென்று நான் சொல்லவில்லை.ஆனால் மற்றவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம் என்று அவர்களிடத்திலே ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது.அப்படி வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நாம் எம்மிலே வளர்த்துக்கொள்ள்ளவேண்டும்.என்றால் நாமும் ஒரு அபிவிருந்தியடைந்த சமூகக் கட்ட்மைப்பாக எம்மை மெருகேற்றிக்கொள்ளலாம்.


இந்தத் தலைப்பாகைக்கட்டுகையைப் பற்றிக் கதைப்பதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு விடயங்களை மட்டும் கதைத்து பதிவை நீட்டி முழக்காமல்
முடிப்பது தான் என் திண்ணம்.முதலாவது யாழ்பல்கலைக் கழகத்தின் பொறியியல்ப்பீடத்தின்
அமைவிடம் பற்றியது.மற்றையது வடமாகாணச் சபையின் அமைவிடம் பற்றியது.
இலங்கையிலே தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு பல்கலைக்கழக்த்திலும் பொறியியல் ப்பீடம் இல்லையென்ற குறையை போக்க மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம்
ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும்
கோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன்
அமைவிடம், கிளிநொச்சியிலா யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.


மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.


இதே போலதொரு இடத்தெரிவு தான், இணைந்த வடக்கு - கிழக்கு துண்டாக்கப்ப்ட்டு, வடமாகண சபை அலுவ்லகம் எங்கே அமைப்பது என்ற குழ்ப்பம் வந்தபோது அரசாங்கத்தினால்,வ்டமாகாணத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்கள்லிருந்தும் சமதூரத்திலிருக்கும் மாங்குளம் தெரிவு செய்யப்பட்டபோது, நிச்சய்மாக உள்ளூர சந்தோசப்பட்ட ஜீவன்களில் நானும் ஒருந்தனாயிருந்திருப்பேன். இதனால் அந்தப்பிரதேசம் சார்ந்து, பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள், பிரதேச அபிவிருத்தி எனப் பல
காரணங்கள் இருந்தன் அந்த சந்தோசத்தின் பின்னால். ஆனால் இப்போது அதே அரசாங்கமே, அதையும் யாழ்ப்பாணத்திலே நுழைக்க முண்டியடிப்பதன்மூலம் எம் பலவீனம் அறிந்து, எமக்கும் அவர்களுக்கும்(அவர்கள் என்று பிரித்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும்.வேறு தெரிவில்லாமல் அந்த சொல்லை பயன்படுத்த வேண்Dஇயிருக்கின்றது) இடையே ஒரு கோடு கீறுவதற்காய்த்தான் இந்த மாகாணசபை அமைவிடத்திப் பயன்படுத்துகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அரசதிணைக்களங்கள், ஆஸ்பத்திரி என்பன மற்றத் த்மிழ் மாவட்டங்களை விட அதிகமாய் இருக்கின்றன.எனவே இவற்றை நாம் அவர்களுக்கு விட்டுத்தருவதில் எந்தவொரு குடியும் முழுகிவிடப்போவதில்லை.எமக்கு சிங்களவர்களளவுக்கு வச்திகள்,வாய்ப்புக்கள் இல்லாத போதும், எம்மிலும் வலிதாய் உள்ள, எம் இரத்தங்களுக்குப் போவதை நாம் தட்டிப் பறிக்ககூடாது.மாறாக நாம் அதற்காய்ப் பாடுபடவேண்டும்.



ஏன் நாம் விட்டுக் கொடுக்கவேண்டும்? எம்மில் திறமை இருக்கின்றது?நாம்
பெரும்பான்மையாக இருக்கின்றோம் என்று சிந்தித்தால், எமக்கும் எமக்கு சம உரிமை தரமறுக்கும் சிங்களவர்களிடம் என்ன தவறு அல்லது அவ்ர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? உலகெங்கும் ஏதாவது பெரும்பான்மை சிறுபான்மையை அடக்க
நினைத்ததால்/நினைத்துக்கொண்டிருப்பதால் தான் புரட்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.தொடரவும் போகின்றன.நாம் அதிலிருந்து விடுபட்டு வித்தியாச்மான திசையிலே பயணித்தால் எம்மினத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.இந்த மாகாண இலச்சினையில் உள்ளது போல எல்லோரும் சரிநிகை சமானமாக விட்டுக்கொடுத்து வாழ்தல் நலம் பயக்கும் எமக்கு.





(அபிவிருத்திக்கென வடமாகாணத்தில் ஒதுக்கப்பட்ட நிதிட்யில் பெருமளவு,யாழ்ப்பாண மாவட்டத்துக்கே போய்ச்சேர்ந்ததாக/சேர்க்கப்பட்டதாக அண்மையில் ஒரு பத்திரிகையில் வாசித்ததே என்னுள் அடங்கியிருந்த இந்த விடயத்தை எழுதத் தூண்டியது.மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னியுங்கள் நண்பர்களே.

Saturday, August 7, 2010

மோட்டுச் சிங்களவன் - 25 வது பதிவு

எமது சமூகத்தில் பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.அவ்வாறு புரையோடிப் போயிருக்கின்ற பழக்கவழக்கங்களில் சிலவற்றை , ஏன் நாம் பின்பற்ற வேண்டும்? என்ன நோக்கத்திற்காக பின்பற்ற வேண்டும்?அதில் ஏதாவது தவறுகள் உள்ளதா?அல்லது காலத்திற்கேற்றாற் போல அதில் நாம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமா?இவ்வாறெல்லாம் நாம் ஆராய வேண்டுமா? அல்லது ஆராய்ந்தும் அதே பழக்கவழக்கத்தையே கண்மூடித்தனமாக செய்துகொண்டேயிருக்கின்றோமா?அல்லது ஒருவன் அப்பிடி யோசித்தால் கூட அவனை அப்பிடி யோசிக்க விட்டிருக்கிறோமா?ஏன் யோசிக்க விட மறுக்கிறோம்?ஏன் கண்ணாடிக்கூண்டுக்குள்ளேயே தொடர்ந்தும் இருந்தும் யோசித்துக் கொண்டிருக்காமல்,வெளியே வந்து யோசித்தால் என்ன? என்பது போன்ற ஒரு சில கேள்விகளை நாங்கள் எப்போதாவது எம்மை நோக்கி கேட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடையாகும்.அப் பழக்கவழக்கங்களில் சிலவற்றில் எனக்கு தவறாக பட்டவற்றை,உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.


அது சிலரது பார்வைகளில் சரியாக இருக்கலாம்.இது தனியே எனது பார்வை மட்டுமே.சமூகத்தை நோக்கி விரலை நீட்டுவதற்கு நான் யோக்கிதையானவனா, அந்த யோக்கிதை எனக்கு இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.சரி எனக்கு அந்த யோக்கிதை இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஆனால் நானும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தவன்.சரியோ தவறோ நானும் அதற்கு பொறுப்பாளி அல்லது நானும் அதற்கு உடந்தையாக இருந்திருப்பேன் அல்லது நானே அந்த தவற்றை செய்திருக்கலாம்.ஆகவே நான் சார்ந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற ஒரு சின்ன உரிமையிலேயே நான் எனது சமுகத்தின் மீதான எனது விமர்சனங்களை முன்வைக்கின்றேன்.இதற்கு எதிர் விமர்சனங்கள் இருப்பின் நான் அவற்றை திறந்த மனதோடு தாராளமாக வரவேற்கிறேன்.



தலைப்பை பார்த்தவுடன் என்னை ஒரு துணிந்த கட்டை என்றெல்லாம் தப்பாக எண்ணவேண்டாம். நானும் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி ஒப்பிக்காத,ஒப்பிக்கத் தெரியாத,ஒப்பிக்க முடியாத ஒரு சாதாரண,சராசரியான எழுததாளன் அல்லது பதிவர் தான்.ஆனால் எனக்கு உதை விட்டால் வேறு ஒரு பொருத்தமான தலைப்பு கிடைக்கவில்லை.அதனால் மேற்சொன்னவாறே தலைப்பிட்டுள்ளேன். மேற்படி சொல்லை நான் எனது ஊர்களிலும்,பிரதேசங்களிலும் பல பேர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்."அவங்கள் உப்பிடித்தான் பின்னே ஏன் மோட்டுச்சிங்களவர் எண்டு சொல்லுறது" எண்டு எல்லாம் கதைக்கக் கண்டிருக்கிறேன்.நீங்களும் உதைப்போல் கேள்விப் பட்டிருப்பிர்கள் அல்லது கண்டிருப்பீர்கள் அல்லது நீங்களே பேசியும் இருப்பீர்கள்.அதை விடுவோம்.அதற்கும் த்லைப்புக்கும் பெரிதாக ஒரு சம்பந்தமும் இல்லை.அவர்கள் மோடர்களாய் இருந்தார்களோ,இருக்கிறார்களோ அல்லது இருப்பார்களோ என்பதை ஆராய்வது எனது கட்டுரையின் நோக்கம் அல்ல.அவர்கள் எப்பிடியும் இருந்துவிட்டிட்டு போகட்டும்.பிரச்சினையில்லை. நாங்கள் அவர்களை மோடர்கள் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது பற்றி அலசுவதே எனது நோக்கம்.



இவ்வாறு கூறிக்கூறியே அவர்களை குறைத்து மதிப்பிட்டதும்(Under Estimation) எம்மை நாமே இறுமார்ந்து கூட்டி மதிப்பிட்டதுமே(Over Estimation) இன்று எமது சமூகம் நடுத் தெருவில் நிற்பதற்குரிய காரணங்களில் ஒன்று என்பது எனது கணிப்பு.அந்தக்காலத்திலிருந்தே(50,60 களில் இருந்து)இதைச் சொல்லிக் கொண்டு நாங்கள் இன்றும் அங்கேயே நிற்கிறோம் அல்லது அதை விடவும் கீழே போய் விட்டோம்.இன்று அவர்கள் எங்கேயோ சென்று விட்டார்கள். கல்வியில், தொழில்நுட்பத்தில்,கலாசாரத்தில்,சமூக அபிவிருத்தியில், பொருளாதாரத்தில்,சமூக அந்தஸ்த்தில்,வாழ்க்கைத் தரத்தில் எல்லாவற்றிலும் அவர்கள் எங்கேயோ சென்று விட்டர்கள்.



நான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவன் என்ற வகையில் கூறுகிறேன். இந்தத் துறையில் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள விகிதாசாரமானது அவர்களது சனத்தொகைக்கும் எங்களது சனத்தொகைக்கும் உள்ள விகிதாசாரத்திலும் மிக அதிகமானது.தொழில்நுட்பம் மட்டமல்ல இன்னும் எல்லா துறைகளிலும் நாம் இன்னும் அதிகமாகவே அவர்களை விடப் பின் தங்கியிருக்கிறோம்.கல்வியில்(அன்று கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை எதிர்த்துப் போரிட்ட எமது சமூகம் இன்று அந்தப் புண்ணியத்தாலே தான் கொஞ்சம் எம் சமூக மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பிக் கொண்டிருக்கிறது),விளையாட்டில்,பொருளாதாரத்தில்(வெளிநாட்டு வருமானம் இல்லாத நிலையில் எம்மவர்களின் நிலையைப் பார்த்தால் விளங்கும் வண்டவாளம்),சமூக அபிவிருத்தியில்(ஒரு ஆணும் பெண்ணும் கதைத்தால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கீத் முந்தியொரு பதிவிலே சொன்னது போல புணர்ந்து கொண்டிருக்கின்ற நாயைக் கல்லால் எறிந்து துரத்துவதைப் போல "கூ..." அடித்து குழப்புவது தான்),சினிமா பொழுது போக்குகளில்(தமிழக சினிமாவைத் தவிர்த்து ஈழத்து சினிமாவை கற்பனை பண்ணிப் பாருங்கள்),சமூக அந்தஸ்த்தில்(எங்களில் படித்தவனெல்லாம் படித்தவன் மாதிரியா நடந்து கொள்கின்றான்? படித்தவனெல்லாம் அபிவிருத்தியடையாதவன் மாதிரி நடந்து கொள்ளும் போது சமூகம் எப்படி அபிவிருத்தியடையும்?),வாழ்க்கைத் தரத்தில்(எங்களட்டை காசு எவ்வளவு தான் இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் தரம் இப்போதும் ஆதிகாலத்திலேயே இருக்கின்றது)என பல துறைகளிலும் நாம் பின் தங்கியிருக்கிறோம்.நாங்கள் 50,60 களில் சொன்னதையே இப்போதும் சொல்லிச் சொல்லி இன்னமும் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் அவர்கள் எட்டிப் பிடிக்கமுடியாத அளவு தூரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்(இந்த எட்டி பிடிக்கமுடியாதவளவு தூரத்தை அடைவதற்காக ஏற்படுத்தப் பட்ட நாடகம் தான் இந்த பிரச்சினையெல்லாம்)



ஆகவே இந்த சிந்தனையை நாம் மாற்ற வேண்டும்.அவர்கள் மோடர்களாக இருந்தாலென்ன, இல்லாவிட்டால் தானென்ன. நாங்கள் எங்களைப் பார்ப்போம்.அவர்கள் எப்பிடியிருந்தாலும் பரவாயில்லை.நாங்கள் எங்களை உயர்த்தியும் அவர்களை தாழ்த்தியும் மதிப்பிடும் போது இலக்கு நோக்கியதான் எமது உத்வேகம் குறையும்.நாம் இதை மாற்றி எங்களை தாழ்த்தியும் அவர்களை உயர்த்தியும் மதிப்பிடும் போது இருவருக்குமிடையேயான திறனடிப்படையிலான வித்தியாசம்(Skill Gap) அதிகரிக்கும்.அது எங்களுக்கு இலக்கு மீதான மலைப்பை தரும்.நாங்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டுமென்று புலப்படும்.அது எங்களை கடின உழைப்பை செய்ய தூண்டும்.அது எங்களுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தும்.அதனால் நாங்கள் இலக்கை நோக்கி வீறு நடை போட முடியும்.



இதே சிந்தனை எமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.எமது போட்டியாளரை(அவரைப் பார்த்து பொறாமைப்படத் தேவையில்லை) நாம் உயர்த்தி மதிப்பிட்டும் எம்மை தாழ்த்தியும் மதிப்பிட்டால் எமது உத்வேகம் அதிகரிக்கும்.நாம் கடும் முயற்சி செய்வோம்.உழைப்பின் ஈற்றில் நாம் வெல்ல முடியும். ஆகவே மேற்படி எமது மனோபாவத்தை சற்றே மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.என்ன சொல்லுறியள்.



(என்னடா இது நாங்களெல்லாம் 50,100,200 எண்டு செஞ்சரி, டபிள் செஞ்சரியெல்லாம் அடிச்சுக் கொண்டு போகேக்கை,இவனொருத்தன் 25 வது பதிவை முக்கி,முக்கி எழுதிப்போட்டு, ஏதோ பெரிசாக் கிழிச்ச மாதிரிக் கதைக்கிறான் எண்டு நினைக்கதையுங்கோ.உண்மையாகவே நானொண்டையும் கிழிக்கயில்லைத்தான்.எண்டாலும் ஏதோ சும்மா எழுதுவம் எண்டு தொடங்கி இண்டைக்கு இருபதைஞ்சு பதிவு வரை எழுதி முடிச்சதே பெருங்காரியம் தான்.நீங்களெல்லாம் ஒரு மாதத்திற்குள்ளேயே மிகச் சுலபமாக கடந்துவந்திருக்கும் இந்த இலக்கை அடைய எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வரைக்கும் தேவைப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த இருபத்தைந்து பதிவுகளுக்கிடையில் யாழ்தேவி என்னை நட்சத்திரமாக்கியமையும்,ஈழத்து முற்றம் என்னை அவர்களது பதிவுக்கு பதிவெழுதிப் பங்களிக்குமாறும் என்னை அழைத்தமையும் எனது பெரிய சாதனைகளாக கருதுவேன்.இது வரைக்கும் என்ரை அலுப்புகளையும் தாங்கிகொண்ட நட்புக்களுக்கு பெரிசா ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்ளுறதோடை தொடர்ந்தும் அலுப்பைத் தாங்கிறதுக்காக இப்பவே பிறக்ரீசுகளைத்(ப்ரcடிcச்) தொடங்குங்கோ.பிறகு ஜெயசூரியா,கங்குலி போறதும் வாறதுமா வாறமாதிரி என்றை பதிவைப் பாத்து 'டக்' அவுட்டாகிப் போயிடக் கூடாது கண்டியளோ.அது தான் முன்னெச்சரிக்கையாச் சொல்லி வைச்சனான்.

Saturday, July 24, 2010

ரமிலில் பேஷ்வோம்(தமிழில் பேசுவோம்)

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத்தமிழெங்கள் உயிரான உயிரிலும் மேல் என பல அடுக்கடுக்கான வசனங்களை அழகாக பலர் பேசித்திரிந்தாலும் அந்த அமுத மொழியை,அழகு தமிழை,சங்கத்தமிழை பேச இன்று பலர் பின்னடிக்கின்றார்கள்.தமிழைப் பேசுவதால் தமது தராதரம் ஏதோ தறிகெட்டுப் போவதாக தாமே தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டு மற்றவர்களையும் தப்பாக வழி நடாத்துகின்றார்கள்.
ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் தான் என்ன?



ஆங்கிலத்தில் கதைப்பவர்கள் ஏதோ அதி மேதாவிகளாக சாதாரண மக்களால் தாம் நினைக்கப் படுவதாக தாமே நினைத்துக் கொள்வதுவும்,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் ஏதோ தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்கள் போல காட்டிக் கொள்ள வெளிக்கிடுவதுவும், சாதாரண மக்கள் இவர்களை ஏதோ முற்றும் அறிந்த முனிவர்கள் போல எண்ணுவதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.ஆங்கிலம் என்பது தமிழைப் போன்றதொரு சாதாரண மொழி அவ்வளவு தான்.அதைப் பார்த்து வாயைப் பிளக்க வேண்டிய தேவையில்லை.



ஆனால் அது ஒரு இணைப்பு மொழியாக(Linking Language) இருக்கின்றபடியால் மற்றைய மொழிகளை விட சற்று பிரபலமாகியிருக்கின்றது.அவ்வளவு தான்.அதற்காக ஆங்கிலம் தெரிந்தவன் பெரிய கொம்பு என்று ஒன்றும் இல்லை.அதனால் நாம் ஆங்கிலம் பேசுபவர்களைப் பார்த்து மலைப்படையவோ அவர்களை எங்களை விட பெரியவர்களாகவோ உயர்த்தி பார்க்க தேவையில்லை.இதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.




அத்துடன் இன்றைய தமிழ் சினிமாக் கலைஞர்கள் அதிலும் மிக முக்கியமாக நடிகைகள் தமிங்கிலிஷ்(தமிழ் + ஆங்கிலம் கலந்த கலைவை)இல் கதைத்து தமிழைக் கொல்லுகிறார்கள்.வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள் தமிழின் மீதான தங்களது காதலால் என்று சொல்லிக் கொண்டு(உண்மை என்றே வைத்துக் கொள்வோம்) தமிழ் ரசிகர்களைக் கவர்தலாகிய இரண்டாவது மாங்காயை அடிக்க தமிழைப் பயன் படுத்துகிறார்கள்.


அது தப்பில்லை. வேற்று மொழியிலிருந்து தமிழ் கதைக்க வருபவர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அது தமிழ் மேலும் உலகெலாம் பரவ,தமிழ் இவ்வுலகில் நின்று நீடிக்க உதவும். அதே நேரம் தமிழை இலகுவில கற்று விட முடியாது.உச்சரிப்புக்கள், இலக்கணங்கள் என்று எங்கடையளே பிழை விடும் போது அந்நியர்களை பிழை என்று கூறுவதோ, அல்லது அவர்களை தமிழ் பேச அனுமதிக்காமையோ ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையாக அமையாது.அவர்களின் தவற்றை சுட்டிக்காட்டி தமிழை போதித்து நாமும் தமிழ் வளர்க்க வேண்டும்.



அவர்க்ள் தான் பரவாயில்லை வேற்று மொழிக்காரர்கள்.தமிழ் நடிகைகளுக்கு, தமிழர்களுக்கு என்ன நடந்தது. இதை தான் "எல்லா மாடும் எதுக்கோ ஓடுதென்று சுப்பற்றை கேப்பை மாடும் கிளப்பி கொண்டு வெளிக்கிட்டுதாம்" எண்டு சொல்லுறது.(எதுக்கெண்டு வாய்க்கை வருது ...ஆனால் வேண்டாம்.விடுவம்)


இதன் போது தெனாலியில் கமல் பேசும் ஒரு காட்சி எனது ஞாபகத்துக்கு வருகின்றது.ஜெயராமை பேட்டி எடுக்க வந்த பேட்டி எடுக்கும் பெண்மணி கமல் இடம் பேட்டி எடுக்கும் போது அவர் "கொஞ்சம் பகிடியாக் கதைப்பம் என்ன " எண்டிட்டு இலங்கைத் தமிழில் கேட்பார்."ஏன் வரேக்கையெல்லாம் வடிவா வாங்கோ போங்கோ என்று தானே கதைச்சுக் கொண்டு வந்தனியள். மைக்கைப் பிடித்தவுடனே ஏன் ஒரு ஆங்கிலம் கலந்த "வான்கோ","போன்கோ","எப்டி","ஈ சய்" எண்டு தமிழைக் கொல்லுறியள்" என்று கேட்கும் போது அந்த பெண் பதில் சொல்லமுடியாமல் பல்லிளிக்க "பதில் சொல்ல ஏலாது என்ன ?தமிழை ஒரு "இதுவாத்" தான் பாவிக்கிறியள்" என்று சொல்லுவார்.அது முற்றிலும் உண்மை.தமிழை ஒரு "இதுவாத்" தான் எல்லாரும் பாவிக்கிறோம்.




அவர்கள் பேட்டிகளின் போது தமிங்லிஷ் இல் கதைப்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.சினிமா சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை செலுத்துவதால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ(தாங்கள் மேதாவிகள் இல்லை எனபதை தெரியாமலோ)இவர்கள் கதைக்கும் மொழி,பாணி,(Style),உச்சரிப்பு என்பன எமது சமூகத்தினுள்ளும் புகுந்து ஒரு பாரிய சமூக நோயாக உருவாகி வருவதை நாம் கண் கூடாகக் காண முடியும்.சமூகத்தின் ஓர் அங்கமாகிய நாம் சினிமாக் கலைஞர்களை எமது வழிகாட்டிகளாக(Role Model) எண்ணுவதை தவிர்ப்பதுவும் இந்த தமிழ்க் கொலைகளை ச்ற்று குறைக்க உதவும்.


அத்துடன் எனக்கு பாரதியின் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்பதை "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று உல்டா பண்ணி கூட்டங்களில் முழங்கி புது விளக்கம் கொடுப்பவர்களை கண்டாலும் கடுப்பு தான் வரும்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக மயமாக்கல் கொள்கையால் உலகம் ஓருலகக் கோட்பாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இதனால் ஆங்கிலம் தவிர்ந்த தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன.பாரதி இதை தீர்க்க தரிசனத்துடனோ இல்லை தீர்க்க தரிசனமில்லாமலோ இல்லை என்ன நோக்கத்திற்காக கூறினாரோ தெரியாது. ஆனால் இன்றைய தேதியில் "மெல்லத் தமிழினிச் சாகும் "என்பது சரியாக பொருந்தி வருகின்றது என்பதே எனது தாழ்மையான் கருத்து.


ஆகவே எங்கள் எல்லாரிடமும் உலகின் மூவாயிரம் ஆண்டுகளிற்கு மேற்பட்ட மிகவும் தொன்மையான்,இனிமையான பைந்தமிழைக் காப்பாற்றியாகவேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.எங்களது முன்னைய தலைமுறை எங்களிடம் தந்த அந்த கொஞ்சு தமிழை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.(ஏற்கனவே அரிய பல சொற்களை நாம் இழந்து வருகிறோம்)அப்படியான பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து நிற்கும் போது,அவனை அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க தூண்டும் வகையில் மேற்சொன்னவாறு அவர்களைஅந்த சிந்தனையிலிருந்து மாற்ற முயலும் கயவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது.


ஆங்கில மொழியில்(English Medium) கல்வி கற்பதற்கு இன்றைய பெற்றோர்கள் தூண்டுகிறார்கள்/உந்துகிறார்கள் அதிலுள்ள சாதக,பாதக தன்மைகளை அலசி இன்னொரு பதிவை நான் ஏற்கனவே இட்டுள்ளதால் அதை இங்கே சென்று படியுங்கள்.
இப்பெடியெல்லாம் நான் கூறுவதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் என்று யாரும் தப்பாக எடை போட வேண்டாம்.ஆங்கிலம் தேவையான் ஒன்று.


உலக மொழியான் ஆங்கிலத்தைக் கற்பதால் தமிழில் இல்லாத பல நூல்களைக் கற்க முடியும்.அத்துடன் பல நன்மைகள் உள்ளன.தமிழன் தனக்குள் கதைப்பதற்கு எதற்கு ஆங்கிலம்.தமிழைக் கதைக்கும் போது " ஐ மீன்"," யூ மீன்","ஐ ஸே",தமிங்லிஷ் எல்லாம் எதற்கு?.அத்துடன் மழலைகளின் முதல் மொழி "அம்மா","அப்பா".அதைக் கூடவா "Mummy,Daddy "என்று மாற்ற வேண்டும்.



தமிழன் இல்லாத நாடு இல்லை என்று என்னதான் பீற்றினாலும் அங்கெல்லாம் தமிழ் என்ன பாடுபடுகிறதென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தமிழின் தாய்வீடான தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை சொல்லி மாளாது.தமிழை ஒரு பாடமாகக் கூடத் தயங்கும் மாணவர்கள்,(ஏனெனில் சமஷ்கிருதம் போன்ற பாடங்கள் எடுத்தால் இலகுவாக புள்ளிகள் பெறலாமாம்)நீதிமன்றம்,காவல்துறை,பாடசாலை என்று எதிலுமேயில்லாத தமிழ்,ஆனால் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி என்ற பெயரில் கோபாலபுரத்துக் கட்டிலில் மட்டும்.



மேற்படி துறைகளில் தமிழைக் கொண்டுவர முடியாத,தமிழைக் காப்பதாகக் கூறிக் கொண்டு செய்தியாளர் மாநாடுகளில் கவிபடிப்பதுவும்,செம்மொழி மாநாடு நடத்துவதாகவும் கூறித் திரியும் ஒரு ஜென்மம் தமழரின் தலைவராக.தமிழ்த் தலைவரின் "பேரன்ஸ்" கோடிகளை உருட்டி விளையாடுவதோ "சண்", ரெட் ஜயன்ஸ் மூவிஸ்",நைற் கிளவுட்ஸ் என்று ஆங்கிலப் பெயர்களில்.தன் குடும்பத்தில் தமிழைக் காக்கத் தெரியாதவர் உலகத் தமிழைக் காக்கப் போகிறார்?



இவ்வாறாக தமிழைப் பாடை கட்ட முயன்றாலும் ஏதோ இன்னும் தன்மானத் தமிழர்கள் அங்கும் இருப்பதால் தமிழ் அங்கே மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.ஈழத்தில் தமிழுக்கு அந்தளவுக்கு கவலைக்கிடம் இல்லாவிட்டாலும் "இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான புத்தம் புதிய திரைப்படங்களைப்" பார்க்கும் நாமும், ஈழத் தமிழ் வரலாற்றில் முதன் முறையாக, அந்தத் தொலைக் காட்சிகள் விடும் தமிழ்ப் பிழைகளை அல்லது திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்புக்களை அல்லது விளம்பரத்திற்காக தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை முன்னுக்கு கொண்டு வர முயலும் அவர்களின் முயற்சிகளை முறியடித்து, நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து தமிழைக் காப்போம்.

Thursday, July 1, 2010

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

ஈழத்த்மிழரின் வாழ்விய்லை சிறிதளவாவது தொட்டுச் சென்ற மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் வரிகளைத் தலைப்பாக்கி,தெனாலிபடத்தில் வந்த கமலின் கதையை கருவாக்கி,ஈழத்தமிழர் தம் வாழ்வை கதையாக்கி,அதை உருவேற்றி, பதிவாக்கி,வலையேற்றுகின்றேன், எங்களுக்கே உரமாகிய எம்மினத்தவர்க்காக.



"கண்டிக் கதிர்காம்க கந்தனே" எண்டு வேலை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு "எல்லாம் சிவமயமெண்டு சொல்லுவினம் ஆனால் எனக்கு எல்லாம் பய மயந்தான்.நிண்டால் பயம், இருந்தால் பயம்,நாடு பயம், காடு பயம்,காலா உனைக் காலால் உதைப்பனோவென்று பயமெனக்கு. ஓஒ.. பூரான் பயமெனக்கு,பூனை பயமெனக்கு,பூனை தின்கிற எலியும்,எலி தின்கிற பாம்பும் பயமெனக்கு.திறந்த கதவு பயமெனக்கு,பூட்டின கதவெண்டால் எங்கை திறபட மாட்டுதோ எண்டு மெத்தப் பயமெனக்கு.. உந்த இங்கிலிஸும் பயமெனக்கு. இப்பிடிப் பேசிக்கொண்டிருக்கேக்க்கை தொண்டைத்தண்ணி வத்தி செத்துப் போடுவனோ எண்டும் பயமெனக்கு" என்று கமல் பேசும் தொடர்ச்சியான பயவரிசையைத் தொடர்ந்து இதற்கென்ன காரணமென்னவென்று மனநல டாக்டரான ஜெயராம் கேட்ட போது அதுவரை தன் நடிப்பாலும், செய்கையாலும்,கதையாலும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்து விட்டு சராசரி ஈழத்தமிழன் போல் மாறி அவனுக்கேயுரிய அப்பாவித் தனத்துடன் கமல் பதில் சொல்லும் காட்சி கண்ணை கலங்கச் செய்யும்.




"நான் சின்னப் பொடியனா இருக்கேக்கை என்றை அப்பாவைச் சுட்டுப் போட்டு வடிவான என்றை அம்மாவின்ரை வடிவையும் கெடுத்துப் போட்டு அந்த ஆமிக்காரர் போட்டாங்கள்.அம்மா அப்பிடியே அழுது கொண்டே இருந்தா. அம்மாவின்ரை கண்களில் தாரை தாரையாகத் தண்ணீ.எனக்கும் சின்னப் பெடியன் எண்டதாலை ஒண்டும் செய்யேலாமல்ப் போட்டுது.நான் கல்லுகளைத் தூக்கி எறிஞ்சன்.என்னையும் பிடிச்சுத் தூக்க்கி எறிஞ்சு போட்டுப் போட்டாங்கள்." எண்டு கமல் சொன்ன அந்த வசனம் உண்மையிலேயே நடந்த ,நடந்திருக்கக்கூடிய சம்பவம்.



அந்தக் கமலைப் போல் போரால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு,உறவுகளைத் தொலைத்து,உறுப்புக்களை இழந்து, விழுப்புண் அடைந்து எத்தனை சோகங்களுடனும், மனச் சுமைகளுடனும் "ஏதோ இருக்கிறம்" என்று வாழ்கின்ற,மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பற்றியதே இந்தப் பதிவு.போரினால் நேரடியாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், அங்கவீனங்கள்,இடப் பெயர்வுகள்,பட்டினிச் சாவுகள்,பொருளாதார, மருத்துவத் தடைகள் போன்ற அவலங்கள் காலப் போக்கில் மறக்கபடலாம்(மறக்கப் படும் என்பதல்ல எனது கருத்து,மறந்து போகப் படலாம்.அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலி.மறக்கப் படலாம் என்று நாம் வெறுமனே கூறிவிட முடியாது)ஆனால் இவற்றின் விளைவுகளால் ஏற்படுகின்ற மனத் தாங்கல்கள்,மன அழுத்தங்கள் ,வடுக்கள் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தே வரும்.அவர்களைச் சார்ந்த அடுத்த தலைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்தப் போரின் வடுக்களைச் சுமந்து கொண்டு,நடைப் பிணங்களாக,நாங்களும் ஏதோ பிறந்து விட்டோம் என்பதற்காகவும்,எஞ்சிய ஏனைய உறவுகளையும் தனியே விட்டு விட்டு சாகவும் முடியாது என்ற் என்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற் நிர்ப்பந்ததிற்காக வாழ்கின்ற,வெறும் உடம்புகள் மட்டுமே ஊர்வலம் போகின்றவர்களுக்க்காகவே இந்தப் பதிவு.




கடந்த மாதம் தனது கடைசி மகளுக்குப் பிறந்திருந்த பேரனைப் பார்த்துப்,ப்ராமரிப்பதற்காக, ஒரு சராசரி புலம்பெயர் உறவொன்றின், தாய்மார் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் பிள்ளைப்பேறுகளை அந்தந்த நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு வருகின்றார்களோ அதே போல என் பெரியம்மாவும் சுவிஸ் சென்று விட்டு திரும்பியிருந்தா.திரும்பி வரும் போது அக்காவின் மகன், அதாவது எனது மருமகனின் உடல் நிலை சரியில்லாததால் இலங்கை திரும்புவதில், சம்மதமில்லாமலே திரும்பியிருந்தார்.பெரியம்மா வந்ததும்,ஊரிலிருந்த வந்த இன்னுமொரு அக்கா, அத்தான், மற்றும் அக்காவின் இரு பிள்ளைகள், மற்றும் நானும் போய் வரவேற்றோம்.சுகமும் விசாரித்தோம்.கொழும்பிலிருந்து வீடு செல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனமும் வந்த பின்னர் விமானப் பயண அசதியால் தூங்கிக் கொண்டிருந்த பெரியம்மாவை எழுப்பினால் ஆள் அசைவில்லை.ஆனாலும் நாங்கள் ஆடிப் போகவில்லை.



ஏதாவது மரணத்தைப் பார்த்தால், மரண வீட்டிற்குச் சென்றால், அல்லது கவலையில் யோசித்தால் உடம்பெல்லாம் விறைத்து,தொடர்ச்சியாக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பெரியம்மா மயக்கமாகவிருப்பா என்பது எங்களுக்குத் தெரியும்.இந்த மயக்கத்திற்கும் காரணம் அதுவென்பதும் அது எதனாலென்பதைக் கூறுவதுடன் பதிவிற்குள் நுழைகின்றேன்.



எங்களை அம்மா, அப்பா தூக்கித்திரிந்த மிகச் சின்ன வயதுகளில்,தாடி வைத்து தொப்பி போட்ட இந்திய இராணுவம் எங்கள் வீதிகளில் நடமாடிச் சென்றதெல்லாம் என் மனதில் நிழலாடுகின்றது. அவர்கள் இங்கிருந்த காலங்களிலெல்லாம் செய்த கொடுமைகளைப் பட்டு அனுபவித்தவர்களில் மிச்ச மீதியாய்த் தப்பிப் போனவர்களில் மிச்சம் சொச்சம் பேர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன்




இந்திய இராணுவம் வருகின்றதென்றால் இளைஞர்கள்,யுவதிகள்,புதுமணத் தம்பதிகள் உட்பட எல்லாரும் உயிரைக் காப்பாற்ற பயிர் வைத்த தோட்டங்களுக்குள்ளும், பதுங்கி ஒதுங்க பங்கருக்குள்ளும்,கோவில்கள்,தேவாலயங்களிலும் தஞ்சம் தேடிக் கொள்ளுவார்கள்.பெரியம்மாவும் பெரியப்பாவும் மூன்று பிள்ளைகளையும் (அண்ணன், 2 அக்கா) அம்மம்மா, அம்மப்பாவின் பொறுப்பில் விட்டு விட்டு பக்கத்திலிருந்த கத்தரித் தோட்டத்துக்குள் பதுங்கிக் கொண்டனர்.அங்கே அவரின் கெட்ட காலம், எறும்பு கடிக்கிறதென்று சொறிந்து கொள்வதற்காக எழும்பிய அவருயிரை தறையின் மறுபக்கத்தில் கறுவிக் கொண்டிருந்த இந்திய இராணுவ வீரனொருவனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு வந்த ரவை பறித்துச் சென்றது.



எந்தவொரு குழுவுடனுமோ சம்பந்தப் படாமல், எறும்புக் கடியை சொறிவதற்காக எழும்பிய பெரியப்பா,தன் கண் முன்னாலேயே தனது மிகச் சிறிய வயதிலேயே ,திருமணமான சிறு காலத்திலேயே,எந்தவொரு வரும்படியும் இல்லாத நிலையிலே மூன்று சின்னஞ் சிறு பிள்ளைகளையும் அதுவும் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளையும் தன் தலையிலே பொறுக்கவிட்டுச் சென்றதை ,அவர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை நேரில் கண்ட பெரியம்மாவுக்கு மரண வீடுகளைப் பார்க்கும் போதோ ஏதாவத் கவலை வரும் போதோ ஆழமாக யோசித்தாலோ மயக்கம் ஏற்பட்டு விடும்.இது அவவிற்கு ஏற்பட்ட பாதிப்பு




இதைப் போல் அண்மையில் நான் பத்திரிகையில் வாசித்துக் ஒரு செய்தி.17 வயதுச் சிறுவனொருவன் தனது இரு கைகளையும் செல் வீச்சினால் இழந்திருந்தான்.அதே செல் வீச்சில் இவனின் இரு தங்கைகளையும் இழந்தினால், அதைப் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தந்தைக்கும் பைத்தியம் பிடித்து விட்டது.எஞ்சியது இவனும் தாயும்.இவன் தனது அன்றாடம் ஒன்றுக்கு, இரண்டுக்குப் போவதற்குக் கூட இன்னொருவரின் துணையை நாட வேண்டிய மகா கொடுமை.வருமானமேயில்லாத இக் குடும்பத்தில் இருந்து கொண்டு தன்னால் போதியளவு பணம் திரட்ட முடியாதென்பதால் தனது ஒரு கையையாவது பொருத்த உதவுமாறு வினயமாக கேட்டிருந்தான்.



எனது பெரிய்ம்மாவிற்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டும் சொல்வதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்தவில்லை.அவரைப் போல்,அல்லது அவரை விட இன்னும் இன்னும் எத்தனை பேர் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டார்கள்,காரணமின்றிக் கொலை செய்யப்பட்டார்கள்,வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கடித்துக் குதறப் பட்டார்கள், இன்னும் எத்தனை எத்தனை?எனக்கு தெரிந்தது ஆயிரத்தில் ஒன்று,தெரிந்ததில் நான் சொல்வது ஓராயிரத்தில் ஒன்று,வெளியே வராமல்,வர விடப் படாமல்,வரமுடியாமல் சுட்டு விழுத்தப் பட்ட சடலங்களோடு செத்துப் போன உண்மைகள் எத்தனை?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா?இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்?இந்த அப்பாவிகளுக்கு யார் நீதி வழங்குவார்கள்?



உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,அதன் மிகப் பெரும் மக்கள் தலைவரான பிரதமரைப் படுகொலை செய்தது சரியா பிழையா என்று சிந்திக்க முடியாமல் சரியென்று சொல்ல முடியாவிட்டாலும் பிழையென்று மறுதலிக்க முடியாமல் இந்தியப் படைகள் ஆடிய கோரத் தாட்டவங்கள் குறுக்கே வந்து குழப்பி விடுகின்றன.பாரத தேசத்தின் பார்ப்பனியர்களின் பாராளும் பிரயாசைக்கு ஈழத் தமிழினத்தைப் பகடைக் காயாக்க முற்பட்டுப் படுதோல்வியடைந்ததால், படையெடுத்துப் பணிய வைக்க முயன்றனர் படைக்கஞ்சா ஈழத்தமிழனை.



எதிர்த்தது பாரிய படையென்றும் பார்க்ககாது மோதித் தான் பார்த்த ஈழத் தமிழன் இழந்தது என்னவோ ஏராளம் தான். உயிரிழந்து,உறவிழந்து,உடுக்க உடையின்றி,படுக்கப் பாயின்றி,உலகின் மூலை முடுக்கு நாடுகளின் வாயில்கள் தட்டி தஞ்சம் கோரினார்கள்.பல நாடுகள் தஞ்சம் கொடுத்தாலும்,நீங்களேல்லாம் இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பியள் என்று வாசற் கதவை அடித்துச் சாத்திய நாடுகளும் இருக்கவே செய்கின்றன.



பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியின் பணிப்பாளாரான ஜெகத் கஸ்பார் அடிகளாருக்கு ஈழத்து இள நங்கையொருத்தியின் கடிதம் அவர் கண்களைத் திறந்து,கசிந்துருக வைத்து, அவரின் ஈழத்தமிழர் மீதான் பார்வையையே புரட்டிப் போட்டது.பத்து வயதில் அந்தச் சிறுமியிருந்த போது வீட்டுக்கு வந்த இந்தியப் படைகள் தன் தந்தைக்கு முன்னால் தாயைத் துகிலுரிய முற்பட்டதையும்,துள்ளிய தந்தையைப் போட்டுத் தள்ளிவிட்டு தன் தாயைத் தனக்கு முன்னாலேயே ருசித்து விட்டுச், அவரின் அலுவலையும் முடித்து விட்டுச் சென்ற இந்தியப் படைகளின் ஈனச் செயல் பற்றிக் கூறியிருந்தாள்.அதை நேரில் பார்த்த அந்தச் சிறுமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.இப்போது நீங்கள் ஜெகத் கஸ்பார் தனது ஈழத் தமிழர் மீதான பார்வையை மாற்றியது சரியா பிழையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
(இதே மாதிரியான ஒரு கதை தான் கமலுக்கு தெனாலியில் வருகின்றது)



இதை மாதிரி எத்தனை கதைகள்?அமைதிப் படை என்ற பெயரில் வந்து ஆடிய ஆட்டங்க்ள் எத்தனை?மூத்திரம் பெய்யச் சென்றவனையும், காலையில் பாண் வாங்க பேக்கரிக்குச் சென்றவனையும், கத்தரித் தோட்டத்துக்குள் ஒளிக்கச் சென்றவனையும் சுட்டுத் தள்ளிய கொடுமைகளை,கற்பளிப்புக் கொடுமைகளை அனுபவித்தவர்களது, கண்டவர்களாது மனநிலை எப்படியிருக்கும்1991 இல நடந்த துன்பிய சம்பவத்திற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையே பழிவாங்கிய இந்தியப் அரசு நடாத்திய /நடாத்துவித்த இறுதியுத்தததால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த ரெட்பார்ணா என்ற அமைப்பு கூறியுளது.அது மட்டுமல்லாது இந்தப் போரிலே குண்டடிபட்டு, விழுப்புண்ணடைந்து, தமது கருமங்களை ஆற்றவே மற்றவர்களைத் தங்கி நிற்கும் சகோதர சகோதரிகள் வீட்டு மூலைகளுக்குள்ளே ஒதுக்கப்பட்டு விட்டோம்,மற்றவர்களில் தங்கியிருக்கிறோம் என்று எவ்வளவு வேதனைப் படுவார்கள்.அது மட்டுமல்லாது எத்தனை கற்பழிப்புக்கள்,வன்புண்ர்ச்சிகள் எங்கள் சகோதரிகளுக்கு நடந்தேறியுள்ளன.



எத்தனை எத்தனை உயிரிழப்புக்களை நேரிலே கண்ட சிறுவர்கள், சடலங்களைத் தாண்டி வந்த அவர்கள் கால்கள், குண்டுகளுக்கு, பயந்தோடிய அவர்களது மனநிலை எப்படியிருக்கும்.இரததமும், சதைப் பிண்டங்களும் சடலங்களும் அவர்கள் கண்ணை விட்டு என்றும் செல்ல மாட்டா. எதைப் பார்த்தாலும் ஒரு பயம்,ஒரு பதட்டம், நடுக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.சிலவேளைகளில் எதற்கும் இரங்காத கல் நெஞ்சு படைத்தவர்களாக அவர்கள் மனங்களை இந்தப் போர் மாற்றக்கூடும். அவர்கள் எல்லோருடைய கல்வி, குடும்ப வாழ்க்கை, தொழில் என்பன எவ்வாறு அமையப் போகின்றது.வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்.



இந்தச் சிறுவர்கள்,இந்த மக்கள் வளார்ந்து வரும் போதுஅவர்கள் குடும்பத்தில்,சமூகத்தில், எவ்வளவு பிரச்சினைகளைப் எதிர் நோக்கப் போகின்றார்கள்?இவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளின் உடல் நலன்கள் என்றெல்லாம் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.ஆன போதும் அதனை எதிர் கொள்வதற்கு உளவளாத்துணைச்செயற்பாடுகளோ,சமுதாய மட்டத்திலவர்களை மீட்டெடுப்ப்பதற்காக மீட்பு நடவடிக்கைகளோ கல்விமான்களாலோ,அமைப்புக்களாலோ,அரசியல் கட்சிகளாலோ ஆரம்பிக்கப் படாதிருப்பது எமது சமுதாயத்தின் துரதிஸ்டமே.சுனாமி நேரத்தில் கூட எமது மக்களில் ஒரு பகுதியினர் உள்வளத்துணை ஆலோசனைகளிப் பெற்றிருந்தனர்.ஆனால் இப்போது இவ்வளவு இழப்புக்களுக்குப் பிறகும் எதுவுமில்லை.




தெனாலியில் வந்த தெனாலிராமனை விட முழு அளவிலும் பகுதி அளவிலும் அதிகளவில் மன நிலை பாதிக்கப் பட்டு இன்றும் எத்தனை பேர் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.(ஐ.நா செயலாளரோ அமெரிக்க ஜனாதிபதியோ கேட்டும் இலங்கை அரசாங்கம் எந்தவொரு யுத்தக் குற்றங்களையும் புரியவில்லையாம்.அதனால் எனக்கும் அதைப் பற்றி ஏதும் தெரியாது.

Saturday, June 26, 2010

வெளி நாட்டுக் காசு

நான் கடந்து வந்த பாதையில் சில விடயங்களைக் காணும் போது எனக்கு அவை தப்பாகத் தென்பட்டிருந்த போதும் நான் அந்தத் தப்பைத் தட்டிக் கேட்டதிலை.கேட்க முயன்றதுமில்லை.ஆனால் அவை என்மனதை உறுத்தியிருக்கின்றன.எனது அடிமனதில் பதிந்திருந்த அவற்றுள் ஒரு சில விடயங்களை உங்களுடன் பகிர்வதன் மூலம், உங்களுக்கும் அது தப்பாகத் தெரிந்து, நீங்களும் என்னைப் போல ஒரு ஊமையாய் இல்லாமல் ஒரு சமூக அநீதியக் கண்டு கொதிப்பவராக இருந்தால் அந்த விடயங்கள் திருத்தப்படலாம் என்ற நம்பிக்கையிலும்,அல்லது எனது பார்வையில் தவறாகப் பட்ட அது உங்களுக்கு சரியாகப் பட்டிருந்தால் எனது அந்த தப்பைத் திருத்திக் கொள்வதற்குரிய ஒரு சந்தர்ப்பமாகவே நான் இந்த என் சமூகம் சார்ந்த பதிவுகளைக் கருதி, என் மனதில் கனன்று கொண்டிருக்கும்,அந்த மூளாத் தீயை உங்களுக்கும் பற்ற வைக்கின்றேன்.




பல லட்சக் கணக்கான எம்மவர்கள் நாட்டின் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில்,குறிப்பாக மேற்கு ஐரோப்பா,வட அமெரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களில் முதற் தலைமுறையினர் இனக்க்கலவரத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டும்,அதனால் ஏற்பட்ட அச்சமான சூழ்நிலையாலும் குடிபெயர்ந்தனர்.அவர்கள் ஒருவாறாக மேற்படி நாடுகளில் தஞ்சம் பெற்று,தமது கால்களில் நின்ற பிறகு,தனது அண்ணன், தம்பி, மச்சான், நண்பன், நண்பனின் நண்பன், ஊரவன் அதோடு திருமணம் முடித்து மனைவிமார் என்று ஒரு தொகையினரைத் தத்தம் நாடுகளுக்குள் இழுத்துக் கொண்டனர்.அதற்கடுத்த தலைமுறையிலும் அநேகர் கல்வி, தொழில் போன்ற காரணங்களால் குடி பெயர்ந்தனர்.



அங்கு சென்ற அனைவரும்,இங்குள்ளவர்கள் நினைப்பது போல், பஞ்சு மெத்தையில் படுத்து உருண்டு கொண்டு, பணத்தை மரத்தில் புடுங்கி அனுப்புவதில்லை.குளிரிலும், பனியிலும், இரவிலும், பகலிலும், நேரத்துக்கும் உண்டு,குடிக்காமல் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடித்தான் உழைக்கிறார்கள்.(நான் எல்லாரையும் சொல்லவிலை.ஆனால் பொதுவான நிலை இது தான்)பலர் தமது, கல்வியை, காதலை, அன்பு மனைவி, பிள்ளைகளை, வாழ்வின் சந்தோசத்தைத் தொலைத்து, தமது குடும்பம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள சாப்பாட்டுக் கடைகளில்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில்,சூப்பர் மாக்கற்றுகளில் என்று பல வேலைத் தளங்களில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கின்றனர்.





அவர்கள் எனது கல்வி குழம்பியது போல் எனது தம்பியின் கல்வியும் குழம்பக்கூடாது,என்னை விட அவன் ஒரு பெரிய நிலைக்கு வர வேண்டும்,எனது அம்மா,அப்பாவை நான் நல்ல நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும்,எனது தங்கயை நன்றாகப் படிப்பிக்க வேண்டும்,அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்,என் காதலியை எப்போது கரம் பிடிப்பது, எப்போது என் மனைவி பிள்ளைகளைக் காண்பது என்று எத்தனை எத்தனை ஆயிரம் கனவுகளைப் புதைத்து,அதை மனதினுள் புகுத்தி,கண்ணை நெருப்பாக்கி,காயத்தை(உடம்பு) காரியத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்தக் கனவுகளோடு அவர்கள் உழைத்து அனுப்பும் அந்தக் காசு அவர்களின் நோக்கத்தை நிறைவு செய்கின்றதா? அவர்களின் கண்ணீருக்கு, வியர்வைக்கு, உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கிறதா என்றால் பொதுவாகக் கிடைப்பதில்லை என்பதே எனது கணிப்பு.அவர்களது காசு கரியாக்கப்பட்டு,அதன் பெறுமதி குறைத்து மதிப்பிடப்பட்டுத், தூக்கித், தூக்கி வீசப்படுகிறது.



கொழும்பில் குடியிருக்கும் சாதாரண எம்மவர்களால் தனியே தம் சொந்த உழைப்பை நம்பி சீவிப்பது எவ்வளவு கடினமானது என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆனால் நாங்கள் இங்கே அவர்கள் அனுப்பும் காசை அள்ளி வீசுகின்றோம்.மற்றயவர்களால் எங்களுக்காக கஸ்டப்பட்டு அனுப்புகின்றது என்று எந்தவித உணர்வோ,வெட்கமோ இல்லாமல் காசுத் திமிரில் காசை வாரியிறைக்கின்றோம்.உதாரணத்திற்கு ஒரு சின்ன உதாரணம்.ஊர்களில் மாடுகள் சப்பித் துப்புகிற,ஒரு பெறுமதியுமற்ற,பனம்பழங்களின் விலையோ வெள்ளவதையில் நூற்றியைம்பது வரை.கொழும்பின் ஏனைய இடங்களில் 30 ரூபாவுக்கு ஒரு தேங்காய் விற்றால் அதுவே வெள்ளவதையைக் கண்டதும் தன் பெறுமதியை 35.40 வரை அதிகரித்துக் கொண்டு விடும்.இவை மட்டுமல்ல ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்படத்தக்க அளவு விலை அதிகரிப்புக்கள்.அது தேங்காய்,மரக்கறி,சாப்பாடு,உடுப்பிலிருந்து, அடுக்குமாடித் தொடர் வரை எல்லாவற்றிலும் வெள்ளவத்தையில் ஒரு முழம் கூடத் தான்.



இது ஏன்?நாங்கள் கொடுப்பதால் தான் அவர்கள் விற்கிறார்கள்.நாங்கள் கொடுத்த இடத்தால் தான் அவர்கள் மடம் கட்டுகிறார்கள்.அன்று நாங்கள் கொடுத்துக் காட்டியதால் தான் இன்று அவர்கள் கூறும் விலைக்கே நாங்கள் வாங்கவேண்டியிருக்கிறது.அதேநேரம் எங்களைப் போல வெளிநாட்டு வசதியிலில்லாதவனும் இதே வெள்ளவதையில் தான் சீவிக்க வேண்டியிருக்கிறது.அவனது சீவியம் எப்படி கடினமாக இருக்கப் போகிறது என்று நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா?லிற்றில் ஏசியா,ஜெயச்சந்திரன்ஸ்,நோ லிமிற் என எங்கும் உடுப்பு எடுக்க சென்றாலும் நாங்கள் அடித்த விலைக்கே உடுப்பைத் தூக்கிக் கொண்டு வருகிறோம்.விலைகளை வேறு இடங்களுடன் ஒப்பிட்டு அந்த விலை ஏற்புடையது தானா என்று பார்க்கக் கூட எங்க்ளுக்கு நேரமில்லை.அதே தரமுடைய பொருளை புறக்கோட்டை பிரதான வீதியில் சென்று வாங்கினால் கழிவு விலை அடிப்படையில் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யமுடியும் என்று எமக்குத் தோன்றுவதில்லை அல்லது புற்க்கோட்டையில் பொருள் வாங்கினால் எமது கௌரவத்திற்குப் பங்கமேனும் வந்துவிடுமோ என்ற கவலை.



பொருளுக்குரிய பெறுமதியைக் கொடுப்பதைத் தவறென்று கூறமுடியாது.நாம் பொருள் வாங்கும் கடைக்காரனுக்கும் குழந்தை குட்டி என்று இருக்கும்,அவனும் தனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்.அவனும் பாவம் தான்.இல்லையென்று கூறவில்லை.ஏன் அந்த விலை அதிகரிப்பு,அந்த விலை அதிகரிப்பு வரக் காரணம் என்ன?நாங்கள் கொடுத்துக் காட்டியதால் வந்த விளைவு தானது.விற்பவர்களை நாங்கள் பிழை சொல்ல முடியாது.எவனுக்கும் இருந்த இடத்தில் ஒருத்தன் இந்தா பிடி என்று காசை நீடும் போது அதை வாங்கி வைப்பதில் ஒரு கஸ்ரமோ,உறுத்தலோ இருக்கப் போவதில்லை.பனம் பழம் வெள்ளவத்தையில் இல்லை.அது எங்கிருந்தோ வர வேண்டும்.சரி அதற்கான செலவுகளைக் கணித்தால் கூட நூற்றியைம்பது என்பது ஒரு நியாயமான விலையாகத் தோன்றவில்லை.அதே போல தான் ஏனைய பொருட்களுக்கு ஏனிந்த தேவையில்லாத் விலையதிகரிப்பு? வெள்ளவத்தைக்கு அருகிலிருக்கும் தெகிவளையிலோ, பம்பலப்பிட்டியிலோ அதே பொருள் மலிவாக விற்கும் போது வெள்ளவத்தையில் மட்டும் அந்த "உசத்திக்குக்" காரணம் தான் என்ன?(ஆனால் இன்று தெகிவளைக்கும், பம்பலப்பிட்டிக்கும் அதிகளவில் எம்மவர்கள் வரத் தொடங்கியதுள்ளதால் அங்கும் இந்த நிலைமை தொடங்கிவிட்டது வேறு கதை)



இதே ஊதாரித்தனங்கள் ஊர்களில் இல்லை என்று கூறமுடியாது.அங்கும் இதே நிலைமை தான்.சில வேளைகளில் அந்த புலம் பெயர் உறவு தனது தாய்,தந்தையரை அவசர நிலைமகளில் வைத்திய நிலையங்களிற்கு அழைத்துச் செல்லவோ அல்லது தனது அண்ணனோ, தம்பியோ,மச்சானோ ஒடுவதற்காக ஒரு ஈருருளியை(மோட்டார் சைக்க்கிள்) ஐ வாங்கிகொடுத்திருக்கக்கூடும்.இல்லையென்று கூற முடியாது.இன்றைய காலங்களில் அத்தியாவசியமான ஒன்று.ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம்? பக்கத்திலே உள்ள கடைக்குப் போகவும், மாடு பிடிக்க காணிக்குச் செல்லவும், தோட்டத்துக்குச் செல்லவும் மோட்டர் சைக்கிளைப் பாவிக்கின்றோம்(ஊரிலை பெட்டையளுக்கு "சண்" காட்டுறது என்றொரு நன்மையைத் தவிர இங்கெல்லாம் மோட்டர் சைக்கிளில் செல்வதால் பிரயோசனம் இல்லை)


உங்களது உறவு எமக்காக தனது சுய முயற்சியால் உழைது அனுப்பும் காசை எந்த வழியிலும் செலவழிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.அந்த உறவும் தன்னை போல தன் உறவுகளும் இங்கே கஸ்ரப்படக்கூடாது என்று நினைக்கலாம்.கௌவரமாக, நாலு பேர் சொல்லும்படி வாழவேண்டும் என்று விரும்பலாம்.நான் மறுக்கவில்லை.அந்த அவா,ஆசை,ஏக்கம்,எண்ணம் நியாயமானதே.உண்மையானதே.கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பாளி ஒவ்வொருவனிடமும் அந்த வெறி இரத்ததில் கலந்திருக்கும் ஒன்றே.நான் இல்லையென்று வாதிடவில்லை.




ஆனால் அதற்காக அவ்ர்கள் வியர்வை சிந்தி,பனியிலும் குளிரிலும் நடு நடுங்கி உழைத்த காசை ஊதாரித்தனமாக ஊதிதள்ளாது இருப்போம்.தேவைக்கு செலவு செய்வோம்.அந்த உழைப்புக்கு மதிப்புக் கொடுப்போம்.சிந்தப்பட்ட வியர்வைக்கு, இரத்ததிற்குரிய பெறுமதியைக் கொடுப்போம்.அந்தக் காசை,நாங்கள் எங்களால் சுயமாக உழைத்த காசு என்று எண்ணி,எமது சொந்தக் காசை எவ்வாறு செலவழிப்போமா அவ்வாறு செலவழிப்போம்.சந்தோசமாக நாமும் எம் உறவுகளும் வாழ்வோம்.(நான் சொல்லவந்ததை எவரும் ஐஞ்சு சதம்,பத்து சதம் பார்த்து காசையே செலவழிக்காமல்,செத்தாலும் கொண்டு போகமுடியாத காசைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கச் சொல்வதாக எவரும் தப்பபிப்பிராயம் கொண்டால் அத்ற்கு நான் பொறுப்பாளியல்ல.பணத்தின் பெறுமதி உணர்ந்து,தேவையற்ற செலவுகளைக் குறைத்து, உங்கள் மனம் போல் செலவழித்து சந்தோசமாக வாழுங்கள்)

Sunday, April 18, 2010

புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள்

ஈழத்தின் இனப் பிரச்சினை முற்றி, முறுகி, பொங்கி எழுந்து, பெரும் போராட்டமாகி, உச்சத்தைத் தொட்ட பின்னர் அடக்கப் பட்டிருந்தாலும் அதற்கான அடிப்படைக் காரணம், மொழி ரீதியான, இன ரீதியான புறக்கணிப்புத் தான் என்பதை எவரும் மறுதலித்து விட முடியாது.அறுபது ஆண்டுகளாய் ஆழமாக்ப் புரையோடிப் போன பிரச்சினையின் ஆணிவேர் எதுவென்று அறுதியிட்டுத் தெரிந்திருந்தும் அதற்கான தீர்வை முன்வைத்து, அம்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, ஆற்றாமைகளை,ஆதங்கங்களைக் களைவதை விட்டுவிட்டு இப்போதும் இசைந்து கொடுக்காமல் இடாம்பிகமாகப் பேசிக் கொண்டிருந்தால் இன்னுமொரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கி நாடு செல்வதைத் தடுக்கமுடியாது என்றெல்லாம் ஐ.நா செயலாளரென்ன ஆண்டவனே வந்து சொன்னாலும் ஒரு பிரயோசனுமுமில்லை என்பது ஓராம் ஆண்டு படிக்கும் பிள்ளைக்கே தெரிந்த உண்மையெனப்தால் நாம் அதை விட்டு விட்டு சொல்ல வந்த விடயத்திற்குச் செல்வோம்.



எந்தவொரு பெரும்பான்மையினமும் ஒரு சிறுபான்மையினத்தின் உணர்வுகளை மதிக்காமல்,அவர்களை அடக்கி, ஆள நினைக்கும் போது ஏற்படுகின்ற அந்த வலி,வேதனை,,குமுறலை வார்த்தையில் வடிக்க முடியாது.அதன் போது ஏற்படுகின்ற கோபம் கொடூர்மானது.கொன்று உயிரைத் தின்றிடவும் தயங்காது.உலகில் ஏற்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலானாவை புரட்சிகளாகட்டும், முதலாளி, தொழிலாளி பிரச்சினையாகட்டும் ஆளும் வர்க்கம் -மக்கள் புரட்சியாகட்டும் சுதந்திரப் போராட்டங்களாகட்டும் எதோவொரு வகையில் பெரும்பான்மை, சிறுபான்மை சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன.



அதனை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம்.எங்கள் மொழி, எங்கள் கலாசாரம் மதிக்கப் படாத போது,எம்மவனுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படாத போது, எம் நிலங்கள் பறிக்கப் பட்ட போது, எம் கலாசராம் இரவோடு இரவாக வழித்துத் துடைக்கப் பட்டு அழிக்கப் பட்ட போது, வரலாறு மாற்றி எழுதப்பட்ட போது எம் நெஞ்சில் ஏற்பட்ட வலியை, வேதனையை அனுபவித்து உணர்ந்திருக்கின்றோம். ஆக பெரும்பான்மையினமும் சிறுபான்மையினமும் ஒன்றாக ஒரு சமுதாயத்தில் உள்ள போது சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடுய வலிகள் மற்றைய எல்லாரையும் விட எங்களுக்கு அதிகமாக தெரியும்.தெரிந்திருக்க வேண்டும்.



இங்கே பெரும் பான்மையினம், சிறுபான்மையினம் என்பது இரு இனங்களாகத் தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.ஒரு வளர்ச்சியடைந்த பிரதேசமும் வளர்ச்சி குன்றிய பிரதேசமுமாகவும்,பிரபல நகரப் பாடசாலையாகவும், பின்தங்கிய கிராமப் பாடசாலையாகவும், வசதியான ஒரு ஊரும் வறுமை மிகுந்த இன்னுமொரு ஊராகவும், உயர்ந்த சாதியாகவும் தாழ்ந்த சாதியாகவும்,ஆண் சமுதாயமாகவும் பெண் சமுதாயமுமாகவும் ஏன் படித்த ஒருவனாகவும் படிக்காத இன்னுமொருவனாகவும் அல்லது வேலை செய்யும் ஒருவனாகவும் வேலையற்று இருக்கும் இன்னொருவனாகவும் இருக்கலாம். மேற்சொன்ன சோடிகளில் ஒன்றிலிருந்து மற்றையது ஆளுமையிலோ, அதிகாரத்திலோ,கல்வியிலோ,வசதியிலோ,பிரபலத்திலோ ஒன்று உயர்ந்து,பெரும்பான்மையாகி,அது சொல்வதை மற்றையது கேட்கும் படியாய்,அல்லது கேட்க வைக்கச் செய்கிறது.மற்றையதுஅடங்கிப், பதுங்க வேண்டியதால்,நெஞ்சு பொருமி,உள்ளுக்குள் விம்மி,அழுகின்றது.



எனக்கு விளங்காத ஒன்று இது தான்.இவ்வளவு பட்டும் எங்களுக்கு ஏன் இன்னும் புத்தி வரவில்லை என்பதே? மிகச் சிறிய இனமான ஈழத் தமிழினம் மிகப் பெரிய இழப்பினை சந்தித்துள்ளது அதன் போராட்டத்திலே.ஆனாலும் அதெல்லாம் மறந்து,இங்கு பிறந்தவர்கள் தான் எல்லாவற்றுக்கும் தலைப்பாகை கட்ட வேண்டும்,இவர்கள் தான் கலாசாரத்தின், தமிழின் காவலர்கள்.இந்த இடத்தில் பிறந்தவர்களுக்கு என்னடா தமிழ்ப் பற்று போன்ற கதைகள் மற்றவர்களுடைய மனங்களில் ஏற்படுத்தப் போகும் வலியை நாம் அறிய மாட்டோமா?அல்லது உணர மறுக்கின்றோமா? அல்லது உணார்ந்தும் ஊமைகள் போல் இருக்கின்றோமா?



ஒரு பிரபலமான பாடசாலையிலிருந்து வந்தவர்கள்,சிறு பாடசாலையிலிருந்து வந்தவர்களை நக்கலடிப்பது,அவர்களை வம்புக்கு அழைப்பது,ஏதோ தாங்கள் மட்டும் தான் கொம்புகள் போல் கதைப்பது அவர்களை தனித்தனியே ,தம்முள் சிறு சிறு குழுவாகச் சேர்ந்தியங்கவே தூண்டும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம். நாங்கள் பாடசாலைகளில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் எம் பாடசாலை ஆசிரியர்கள், எம் மண்ணில் பெரும் பான்மை இந்துக்களிடையெ சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களைப் பார்த்து "சோத்துக் கிறீஸ்தவம்" என்று கூறி எள்ளி நகையாடியிருக்கின்றோம்.ஆசிரியர்கள் போனால் பிறகு கூட நாங்கள் அவர்களை அவ்வாறு பரிகாசித்து வம்புக்கிழுத்திருக்கின்றோம்.அவர்கள் சோத்துக்கும் மதம் மாறினாலென்ன மாறாவிட்டால் தானென்னெ ? என்று எம் பாட்டிலிருந்திராமல் அவர்களின் மத ரீதியான உணர்வுகளைத் தீண்டிப் பார்த்திருக்கிறோமே என்பது இப்போது தான் உறைக்கிறது.




ஒரு தாழ்ந்த சாதிப் பையனை,அவனின் சாதியின் பெயரால் கோவில்களிலும் பொது வைபவங்களிலும் தள்ளி வைக்கும் போது அவனுக்கு ஏற்படும் மன நிலையை எம்மால் உணரமுடியாதுள்ளது என்றால் அதை நம்புவது சற்றுக் கடினமாகவுள்ளது.ஒரு படிக்காதவனைப் பார்த்து அவன் படிப்பப் பற்றி எள்ளி நகையாடும் போதோ அல்லது வேலை எடுக்காதவனின் இயலாமையப் பரிகாசிக்கும் போதோ அல்லது ஒரு வானொலி, வானொலி உலா நிகழ்ச்சிகள் நடாத்தச் செல்லும் போது ஒரு பிரதேசம் புறக்கணிக்கப் படுகின்ற போதோ ஏற்படுகின்ற வலி எங்களுக்கு நாங்கள் புறக்கணிக்கப் பட்ட போது, படுகின்ற போது ஏற்படாததா?



ஏன் பெண்கள் அது செய்யக் கூடாது,இப்படித்தான் இருக்க வேண்டும், அப்பிடித் தான் உடுத்த வேண்டும் என ஆணாதிக்கம் ஆணையிடும் போது,பெண்மையானவள் தான் தனது தேவைகளை சுயநிர்ணயம் செய்ய முடியாமையை உணர்வதை எங்களால் உணரமுடியதுள்ளது என்று கூறீனால் அது வேடிக்கை தானன்றி வேறொன்றுமில்லை.உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்காத நாம் அவள் வெளியக சுயநிர்ணய உரிமைக்காய் விவாகரத்து கோரினால் மறுப்பது எதனால்?



அது மட்டுமல்லாது இன்று பல்கலைக் கழகங்களில் சென்ற மாணவர்களிடையேயும் பிரதேச வாதம்,பாடசாலைப் பாகுபாடு என்பன தாராளமாகவே உள்ளது.புதிதாக வரும் கனிஸ்ட மாணவர்களை ராகிங் செய்யும் போது, மாணவத் தலைவர் தெரிவின் போது பக்கச் சார்பான ,பல சில்லறை அரசியல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.சில பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்றாக, ஒற்றுமையாகத் திரிந்தால் வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது.அவர்கள் எவ்வாறு இருந்தாலென்ன, நாம் வந்த வேலையைப் பார்ப்போம் என்றில்லை.இருக்கிற மிச்ச சொச்சமும் ஒற்றுமையில்லாமல் குழிபறிப்புக்களும்,முதுகில் குத்தல்களும் தொடரவேசெய்கின்றன.படிக்க வந்த நோக்கம் மறந்து,கல்வியின் குறிக்கோள் துறந்து,நெறி பிறழ்ந்து,வஞ்சனைத் திட்டங்கள் தீட்டவே வகுப்பறைகள் பயன்படுகின்றன.வருடங்களூம் அதிலேயே உருள்கின்றன.பாஸ் அவுட் பண்ணினவர்களுடன் கூடக் கொன்சல்ற் பண்ணி பக்காப் பிளான்கள் படைக்கப் படுகின்றன.



சில பிரதேசத்து மாணவர்களது சில திறமைகள்,சில பண்புகள்,சில பெரும்பான்மையான இயலவாளிகளினால் பரிகாசிக்கப் பட்டு,மழுங்கடிக்கப்படுகின்றன.ஓரங்கட்டப் படுகின்றன.ஒளித்து மறைக்கப் படுகின்றன. இப்படிச் சின்ன சின்ன விடயங்களில் கூட இவ்வளவு பட்டும் நாம் திருந்தாமலிருக்கிறோம் என்பதாலோ எங்களுக்கு இன்னமும் விடுதலை கிடக்கவில்லை என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.



ஈழத்துக் காந்தியான தந்தை செல்வநாயகத்திடம் ஒரு முறை ஒரு செய்தியாளர் "இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்குக் கிழக்குக்கு தீர்வு கிடைத்தால் நீங்கள் சார்ந்த கிறீஸ்தவர்கள் அதிலே சமமாக மதிக்கப் படுவார்களா ?" என்று கேட்ட கேள்விக்கு "சுதந்திரம் கிடைக்கட்டும் பார்ப்போம்" என்றொரு மழுப்பல் பதிலைக் கூறித் தப்பி விட்டார் தந்தை.உண்மையில் சுதந்திரம் கிடைத்திருந்தால் கூட நாங்களே "நான் பெரியவன் ..நீ சின்னவன்" என்று கூறி ஆள் ஆளுக்குப் இப்போது தமிழ்க்கட்சிகள் பிரிந்து நிற்தைப் போல பிரிந்து நின்று கொண்டு தீவுக் கூட்டங்களாய் தனித்தனியாய் பிரிந்து நின்றிருப்போமோ என்று கூட எண்ணத் தலைப் படுகின்றது.



வடக்கு- கிழக்கு தனித்தனி மாகாணாமாகி ,மாவட்டமாகி, பிரதேசமாகி, ஊராகி, ஊரில் உள்ள றோட்டாகி றோட்டுக்கொரு தலைவர்மார் உருவாகியிருப்பார்கள்.இன்றைய சினிமாவில் ரௌடிகள் இடங்களைப் பிரித்துக் கொண்டு இது எங்க ஏரியா உள்ள வராதே"" என்று கூறுவது போல் கூறிக் கொண்டிருந்திருப்போம்.சிலவேளைகளில் அதற்குள்ளும் எட்டப்பர்கள் புகுந்தால் றோட்டும் உடைந்து வீட்டோடு வந்து நிற்கும். எவ்வளவு பட்டாலும் நாங்கள் திருந்த மாட்டோம்.வரலாற முழுக்க எட்டப்பர்களையும் சகுனிகளையும் நிறையவே கண்ட இனம் எங்கள் இனம்.ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்தது என்று கூறப்படும் எம்மினம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,அடிமைகள் போல் கொடுமைப் படுத்தப் படுவதற்கு நாங்களூம் ஒரு காரணம்.நாங்களூம் எங்கள் இனமும்.நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது.உண்மையில் எனது தலைப்பை புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் பு---மக்கள் என்று மாற்றியிருந்தால் சரியாக இருக்குமோ என்று கூட நான் என்ணுகின்றேன்

Friday, December 25, 2009

புலம்பெயர் தமிழர் ஒரு சிலரின் புலுடாக்கள்

சங்கம் வளர்த்த தங்கத் தமிழரின் கலாச்சாரத்துக்கு பங்கம் வந்துவிட்டதோ என்று நெஞ்சம் பதைக்கின்றனர் பந்தத்துடன் புலம்பெயர் தமிழர்.அவர்களுக்கு மட்டுமல்ல இங்கேயுமுள்ள பெரும்பாலானவர்களின் அக்கறையுள்ள கவலை தான் அது.கலாசாரத்தை,கற்பை காலங்காலமாக கட்டிக்காத்த தமிழினம் இன்று கற்பில் கறையிருந்தாலும் கண்டு கொள்ளத்தேவையில்லையென்று சொல்லுமளவுக்கு கலாச்சாரத்தில் "முன்னேற்றம்" கண்டுவிட்டது.


பெடியளெல்லாம் தண்ணியடிக்கிறாங்கள்,பெட்டையளெல்லாம் கிளப்பிகொன்டு திரியுறாளுகள் என்றெல்லாம் அங்கலாய்க்கின்றனர்.உண்மை தான் இல்லையென்று சொல்லமுடியாது.ஆனால் சிறிது காலத்திற்கு(5,10 வருடங்களில்) முதலெல்லாம் இங்கெல்லாம் எதுவுமே நடைபெறாதது போலவும் இப்போது தான் அவையெல்லாம் இங்கே முளைத்தது போலவும் கதைப்பது பொறுப்பற்ற, அல்லது சிறிது காலத்திற்கு முன்னர் நடந்தவற்றை அறியாத சிறுபிள்ளைத்தனமான அல்லது அறிந்தும் அறியாதது போல நடிக்கின்ற நல்ல பிள்ளைத்தனமான செயலாகும்.

அப்போதும் நடைபெற்றது.இப்போதும் நடைபெறுகிறது. எண்ணிக்கையடிப்படையில் அப்போது நடைபெற்றவற்றை ஒப்பிட்டால் இப்போது அதிகம் என்று சொல்வதை விட அப்போது நடைபெற்றவற்றை விட இப்போது நடைபெறுபவற்றில் அனேகமானவை வெளியே வருகின்றன என்றும் அப்போது கலாசாரப் பிறழ்வுகளில் ஈடுபட்டவர்களின் வயதுகளுடன் இப்போது ஈடுபடுபவர்களின் வயதை ஒப்பிட்டால் மிகக் குறைவு என்றும் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.இதன்போது என் நண்பனொருவன் சொன்னதையும் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும் என்று கருதுகின்றேன்.ஒழித்து செய்தால் கலாச்சாரம்,வெளியே தெரிந்தால் சீரழிவு என்பது போல் கதைக்கக்கூடாது.இரண்டும் கலாச்சாரச் சீரழிவே.



புலம்பெயர்ந்து,உறவுகளைத்தொலைத்து,குளிரிலும் பனியிலும் துவண்டெழும்பி, தனது சமூகத்திற்காக ஓடாய்த்தேய்ந்து உழைத்து அனுப்பும் போது அந்த சமூகம் சார்ந்த சில விரும்பத்தகாத செய்திகள் சில வரும்போது,கோபம் கொப்பளிக்கத்தான் செய்யும்.அடிமனது கறுவத்தான் செய்யும்.நான் இல்லையென்று சொல்லவில்லை.அந்த கோபத்தில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.உங்களுடைய உழைப்பு வீணடிக்கப்படும் போது அதிலுள்ள வேதனையை,அதனால் வருகின்ற வெறியை என்னால் உணர முடிகிறது.இங்கு நான் எல்லா புலம்பெயர் சகோதரர்களையும் சுட்டிக்காட்டவில்லை. அண்மையில்,மிக அண்மையில் சென்ற சிலரைப்பற்றி, மிகச்சிலரைப் பற்றித்தான் எனது பதிவு அமையவிருக்க்கின்றது.எனக்கு மட்டுமல்லாமல் என் போன்ற சக இளைஞர்களின் உள்ளத்து உணர்வை,அடிமனதில் உள்ளதை என் பதிவினூடு பதிவேற்றலாம் என்பது எனது சிறிய அவா.


"இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறம் இஞ்சை இருக்கு மட்டும் என்னத்தைப் புடுங்கினவங்கள்? அங்கை போனவுடன் எங்கேயிருந்து உந்தப் "பற்றெல்லாம்" வந்தது?தாங்கள் இஞ்சை இல்லாததால ஏதோ ஒரு முழம் குறைஞ்சு போட்டது போலயல்லோ கதைக்கிறாங்கள்." இவையெல்லாம் இங்குள்ளவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது அடிக்கடி தங்களுக்குள் கதைத்துக் கொள்பவைதான்.ஏன் அவர்கள் இப்படிக் கதைக்க வேண்டியேற்படுகிறது?அதற்கு காரணம் யார்?அல்லது அவர்கள் தான் அறியாமையில் கதைக்கின்றார்களா?


நான் ஏலவே சொன்னது போல உங்களை,உங்களது உழைப்பை,உங்களது 'பங்களிப்பை' நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் இங்கிருந்த போதெல்லாம் கலாசாரச் சீரழிவைக் க்ண்டு கொதித்தெழுந்தவர்கள் போல கதைப்பது(உண்மையிலேயே கொதித்தவர்கள் மன்னிக்கவும்)கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் மற்றவர்களுக்கு தெரியாதென்பது போலாகும்.


நீங்கள் இங்கிருந்த போதும் கலாசாரம் "கொடிகட்டிப்" பறந்திருக்கலாம்.உங்களுக்கு உங்கள் சமூகப் பற்றால் உள்ளுக்குள்ளே மட்டுமே நீங்கள் கறுவிக் கொண்டிருந்திருக்கலாம். உங்கள் கறுவலை காரியத்தில் காட்டிட காலம் கை கொடுக்காமல் இருந்திருக்கலாம். உங்களை எவ்வாறு சூழ்நிலை அன்று தடுத்ததோ அதே சூழ்நிலை தான் இப்போது இங்குள்ளவர்களையும் கட்டிப்போட்டிருக்கின்றது என்பதை ஏனோ வசதியாக உணரமறுக்கின்றீர்கள்.

இங்குள்ளவர்கள் கலாசாரம் அவர்கள் கண்முன்னே அழிந்து போவதை கண்டு களிப்பதாக அல்லது கண்டும் காணாதது போல பொறுப்பற்றுத் திரிவதாக தவறான கற்பிதம் கொள்ளவேண்டாம்.எங்களுக்கும் உங்களை போல உணர்வுகள் உண்டு, பொறுப்புக்கள், 'பற்றுதல்' எல்லாம் உண்டு.ஆனால் எந்த சூழ்நிலை இவற்றினின்றும் உங்களை தடுத்ததோ அதே நிலை தான் இன்று இங்குள்ளவர்களுக்கும்.அது அவர்கள் தப்பல்ல.


அதே நேரம் கலாசாரம்,கலாசாரம் என்று இங்குள்ளவற்றை மட்டுமே தூக்கிப்பிடிம்போது உங்குள்ளவற்றை ஏன் வசதியாக மறந்து விடுகின்றீர்கள்.உங்கு ஒன்றுகூடல்களிலும்,வைபவங்களிலும் அடிக்கும் கும்மாளங்களில் மட்டும் என்ன கலாசாரம் காக்கப்படுகின்றதா?அங்கு கெட்டுச் சீரழியும் ஒரு சகோதரனோ,சகோதரியோ எங்களைச் சார்ந்தவனே.எமது சமூகத்தினனே.இவ்வாறு கூறி நான் இங்கே நடக்கும் கலாசாரச் சீரழிவை மறைமுகமாக ஆதரிப்பதாக தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம்.


அங்கே அடிக்கப்படும் கொட்டத்தால் வெள்ளைக்காரனின் கலாசாரம் சீரழிக்கப்படவில்லை.இங்கோ,உங்கோ,எங்கோ கலாசாரச் சீர்கேடுகள் அரங்கேறினாலும் சீரழியப் போவது எங்கள் கலாச்சாரமே.ஆனால் அக் கலாசாரத்தை காப்பது யார் என்பது தான் பிரச்சினை.கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு இப்போது 'பாதுகாவலர்கள்' இல்லவிட்டாலும் ஒவ்வொருவரும் தம் பொறுப்புணர்ந்து செயற்பட்டால் தான் கலாசாரத்தைக் காக்கமுடியும்.தனி மனித சுதந்திரம் பற்றியெல்லாம் அதிகம் பேசப்படும் இன்றைய காலங்களில் நீ இவ்வாறு தான் இருக்க வேண்டும்,இன்ன உடை தான் உடுத்த வேண்டும் என்றெல்லாம் கூறமுடியாது.

தனிமனிதர்களின் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற நண்பர்கள், சமூகம், சினிமா,தொலைக்காட்சி,ஒன்றுகூடல்கள்,பொது வைபவங்கள் என்பன அவர்களில் கலாசாரம் சம்பந்தமான எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தவதைத் தவிர்க்கவேண்டும்.அத்துடன் நாம் எல்லாரும் பொறுப்புணர்ந்து எம்மை,எமது குடும்பத்தை,நண்பர் வட்டத்தை, கிராமத்தை, பிரதேசத்தை,சமூகத்தை கலாசாரப் பிறழ்விலீடுபடுவதைத் தவிர்த்து,அவர்களின் எண்ணங்கள், பாதையை மாற்றி,அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்கின்ற தப்புக்கள் எவ்வாறு சமுகத்தைப் பாதிக்கின்றன என்பதை உணர்த்த வேண்டும்,இது தனியே நீங்களோ,நாங்களோ செய்யக்கூடியதொன்றல்ல. ஒவ்வொருவர் மீதும் விரலைச்சுட்டிக் காட்டி அவரவர் பொறுப்புக்களைத் தட்டிக் கழியாமல் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.என்ன சொல்லுறியள்?.(புலம் பெயர் நண்பர்களே சிலரால்,மிகச்சிலரால் சில இடங்களில் சற்று காரமாக நீங்கள் தாக்கப்பட்டிருந்தால் மன்னியுங்கள்.மீண்டும் சந்திப்போம்)