Saturday, July 31, 2010

வீட்டுச் சாப்பாட்டின் அருமை

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.கோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.
மாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள்ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.


நாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்டுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.வடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் "நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிடிக்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ)அறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு போடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.சிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில் மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.சாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும் சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும் சமையற்காரனதும் சுத்தத்தை. கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.
பின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கிட்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.


சொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே "அவக்" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது. சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.சரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள் எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.அங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்?.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை....!!!...வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.

Saturday, July 24, 2010

ரமிலில் பேஷ்வோம்(தமிழில் பேசுவோம்)

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத்தமிழெங்கள் உயிரான உயிரிலும் மேல் என பல அடுக்கடுக்கான வசனங்களை அழகாக பலர் பேசித்திரிந்தாலும் அந்த அமுத மொழியை,அழகு தமிழை,சங்கத்தமிழை பேச இன்று பலர் பின்னடிக்கின்றார்கள்.தமிழைப் பேசுவதால் தமது தராதரம் ஏதோ தறிகெட்டுப் போவதாக தாமே தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டு மற்றவர்களையும் தப்பாக வழி நடாத்துகின்றார்கள்.
ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் தான் என்ன?ஆங்கிலத்தில் கதைப்பவர்கள் ஏதோ அதி மேதாவிகளாக சாதாரண மக்களால் தாம் நினைக்கப் படுவதாக தாமே நினைத்துக் கொள்வதுவும்,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் ஏதோ தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்கள் போல காட்டிக் கொள்ள வெளிக்கிடுவதுவும், சாதாரண மக்கள் இவர்களை ஏதோ முற்றும் அறிந்த முனிவர்கள் போல எண்ணுவதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.ஆங்கிலம் என்பது தமிழைப் போன்றதொரு சாதாரண மொழி அவ்வளவு தான்.அதைப் பார்த்து வாயைப் பிளக்க வேண்டிய தேவையில்லை.ஆனால் அது ஒரு இணைப்பு மொழியாக(Linking Language) இருக்கின்றபடியால் மற்றைய மொழிகளை விட சற்று பிரபலமாகியிருக்கின்றது.அவ்வளவு தான்.அதற்காக ஆங்கிலம் தெரிந்தவன் பெரிய கொம்பு என்று ஒன்றும் இல்லை.அதனால் நாம் ஆங்கிலம் பேசுபவர்களைப் பார்த்து மலைப்படையவோ அவர்களை எங்களை விட பெரியவர்களாகவோ உயர்த்தி பார்க்க தேவையில்லை.இதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அத்துடன் இன்றைய தமிழ் சினிமாக் கலைஞர்கள் அதிலும் மிக முக்கியமாக நடிகைகள் தமிங்கிலிஷ்(தமிழ் + ஆங்கிலம் கலந்த கலைவை)இல் கதைத்து தமிழைக் கொல்லுகிறார்கள்.வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள் தமிழின் மீதான தங்களது காதலால் என்று சொல்லிக் கொண்டு(உண்மை என்றே வைத்துக் கொள்வோம்) தமிழ் ரசிகர்களைக் கவர்தலாகிய இரண்டாவது மாங்காயை அடிக்க தமிழைப் பயன் படுத்துகிறார்கள்.


அது தப்பில்லை. வேற்று மொழியிலிருந்து தமிழ் கதைக்க வருபவர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அது தமிழ் மேலும் உலகெலாம் பரவ,தமிழ் இவ்வுலகில் நின்று நீடிக்க உதவும். அதே நேரம் தமிழை இலகுவில கற்று விட முடியாது.உச்சரிப்புக்கள், இலக்கணங்கள் என்று எங்கடையளே பிழை விடும் போது அந்நியர்களை பிழை என்று கூறுவதோ, அல்லது அவர்களை தமிழ் பேச அனுமதிக்காமையோ ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையாக அமையாது.அவர்களின் தவற்றை சுட்டிக்காட்டி தமிழை போதித்து நாமும் தமிழ் வளர்க்க வேண்டும்.அவர்க்ள் தான் பரவாயில்லை வேற்று மொழிக்காரர்கள்.தமிழ் நடிகைகளுக்கு, தமிழர்களுக்கு என்ன நடந்தது. இதை தான் "எல்லா மாடும் எதுக்கோ ஓடுதென்று சுப்பற்றை கேப்பை மாடும் கிளப்பி கொண்டு வெளிக்கிட்டுதாம்" எண்டு சொல்லுறது.(எதுக்கெண்டு வாய்க்கை வருது ...ஆனால் வேண்டாம்.விடுவம்)


இதன் போது தெனாலியில் கமல் பேசும் ஒரு காட்சி எனது ஞாபகத்துக்கு வருகின்றது.ஜெயராமை பேட்டி எடுக்க வந்த பேட்டி எடுக்கும் பெண்மணி கமல் இடம் பேட்டி எடுக்கும் போது அவர் "கொஞ்சம் பகிடியாக் கதைப்பம் என்ன " எண்டிட்டு இலங்கைத் தமிழில் கேட்பார்."ஏன் வரேக்கையெல்லாம் வடிவா வாங்கோ போங்கோ என்று தானே கதைச்சுக் கொண்டு வந்தனியள். மைக்கைப் பிடித்தவுடனே ஏன் ஒரு ஆங்கிலம் கலந்த "வான்கோ","போன்கோ","எப்டி","ஈ சய்" எண்டு தமிழைக் கொல்லுறியள்" என்று கேட்கும் போது அந்த பெண் பதில் சொல்லமுடியாமல் பல்லிளிக்க "பதில் சொல்ல ஏலாது என்ன ?தமிழை ஒரு "இதுவாத்" தான் பாவிக்கிறியள்" என்று சொல்லுவார்.அது முற்றிலும் உண்மை.தமிழை ஒரு "இதுவாத்" தான் எல்லாரும் பாவிக்கிறோம்.
அவர்கள் பேட்டிகளின் போது தமிங்லிஷ் இல் கதைப்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.சினிமா சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை செலுத்துவதால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ(தாங்கள் மேதாவிகள் இல்லை எனபதை தெரியாமலோ)இவர்கள் கதைக்கும் மொழி,பாணி,(Style),உச்சரிப்பு என்பன எமது சமூகத்தினுள்ளும் புகுந்து ஒரு பாரிய சமூக நோயாக உருவாகி வருவதை நாம் கண் கூடாகக் காண முடியும்.சமூகத்தின் ஓர் அங்கமாகிய நாம் சினிமாக் கலைஞர்களை எமது வழிகாட்டிகளாக(Role Model) எண்ணுவதை தவிர்ப்பதுவும் இந்த தமிழ்க் கொலைகளை ச்ற்று குறைக்க உதவும்.


அத்துடன் எனக்கு பாரதியின் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்பதை "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று உல்டா பண்ணி கூட்டங்களில் முழங்கி புது விளக்கம் கொடுப்பவர்களை கண்டாலும் கடுப்பு தான் வரும்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக மயமாக்கல் கொள்கையால் உலகம் ஓருலகக் கோட்பாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இதனால் ஆங்கிலம் தவிர்ந்த தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன.பாரதி இதை தீர்க்க தரிசனத்துடனோ இல்லை தீர்க்க தரிசனமில்லாமலோ இல்லை என்ன நோக்கத்திற்காக கூறினாரோ தெரியாது. ஆனால் இன்றைய தேதியில் "மெல்லத் தமிழினிச் சாகும் "என்பது சரியாக பொருந்தி வருகின்றது என்பதே எனது தாழ்மையான் கருத்து.


ஆகவே எங்கள் எல்லாரிடமும் உலகின் மூவாயிரம் ஆண்டுகளிற்கு மேற்பட்ட மிகவும் தொன்மையான்,இனிமையான பைந்தமிழைக் காப்பாற்றியாகவேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.எங்களது முன்னைய தலைமுறை எங்களிடம் தந்த அந்த கொஞ்சு தமிழை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.(ஏற்கனவே அரிய பல சொற்களை நாம் இழந்து வருகிறோம்)அப்படியான பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து நிற்கும் போது,அவனை அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க தூண்டும் வகையில் மேற்சொன்னவாறு அவர்களைஅந்த சிந்தனையிலிருந்து மாற்ற முயலும் கயவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது.


ஆங்கில மொழியில்(English Medium) கல்வி கற்பதற்கு இன்றைய பெற்றோர்கள் தூண்டுகிறார்கள்/உந்துகிறார்கள் அதிலுள்ள சாதக,பாதக தன்மைகளை அலசி இன்னொரு பதிவை நான் ஏற்கனவே இட்டுள்ளதால் அதை இங்கே சென்று படியுங்கள்.
இப்பெடியெல்லாம் நான் கூறுவதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் என்று யாரும் தப்பாக எடை போட வேண்டாம்.ஆங்கிலம் தேவையான் ஒன்று.


உலக மொழியான் ஆங்கிலத்தைக் கற்பதால் தமிழில் இல்லாத பல நூல்களைக் கற்க முடியும்.அத்துடன் பல நன்மைகள் உள்ளன.தமிழன் தனக்குள் கதைப்பதற்கு எதற்கு ஆங்கிலம்.தமிழைக் கதைக்கும் போது " ஐ மீன்"," யூ மீன்","ஐ ஸே",தமிங்லிஷ் எல்லாம் எதற்கு?.அத்துடன் மழலைகளின் முதல் மொழி "அம்மா","அப்பா".அதைக் கூடவா "Mummy,Daddy "என்று மாற்ற வேண்டும்.தமிழன் இல்லாத நாடு இல்லை என்று என்னதான் பீற்றினாலும் அங்கெல்லாம் தமிழ் என்ன பாடுபடுகிறதென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தமிழின் தாய்வீடான தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை சொல்லி மாளாது.தமிழை ஒரு பாடமாகக் கூடத் தயங்கும் மாணவர்கள்,(ஏனெனில் சமஷ்கிருதம் போன்ற பாடங்கள் எடுத்தால் இலகுவாக புள்ளிகள் பெறலாமாம்)நீதிமன்றம்,காவல்துறை,பாடசாலை என்று எதிலுமேயில்லாத தமிழ்,ஆனால் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி என்ற பெயரில் கோபாலபுரத்துக் கட்டிலில் மட்டும்.மேற்படி துறைகளில் தமிழைக் கொண்டுவர முடியாத,தமிழைக் காப்பதாகக் கூறிக் கொண்டு செய்தியாளர் மாநாடுகளில் கவிபடிப்பதுவும்,செம்மொழி மாநாடு நடத்துவதாகவும் கூறித் திரியும் ஒரு ஜென்மம் தமழரின் தலைவராக.தமிழ்த் தலைவரின் "பேரன்ஸ்" கோடிகளை உருட்டி விளையாடுவதோ "சண்", ரெட் ஜயன்ஸ் மூவிஸ்",நைற் கிளவுட்ஸ் என்று ஆங்கிலப் பெயர்களில்.தன் குடும்பத்தில் தமிழைக் காக்கத் தெரியாதவர் உலகத் தமிழைக் காக்கப் போகிறார்?இவ்வாறாக தமிழைப் பாடை கட்ட முயன்றாலும் ஏதோ இன்னும் தன்மானத் தமிழர்கள் அங்கும் இருப்பதால் தமிழ் அங்கே மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.ஈழத்தில் தமிழுக்கு அந்தளவுக்கு கவலைக்கிடம் இல்லாவிட்டாலும் "இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான புத்தம் புதிய திரைப்படங்களைப்" பார்க்கும் நாமும், ஈழத் தமிழ் வரலாற்றில் முதன் முறையாக, அந்தத் தொலைக் காட்சிகள் விடும் தமிழ்ப் பிழைகளை அல்லது திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்புக்களை அல்லது விளம்பரத்திற்காக தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை முன்னுக்கு கொண்டு வர முயலும் அவர்களின் முயற்சிகளை முறியடித்து, நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து தமிழைக் காப்போம்.

Friday, July 2, 2010

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் கனா கண்ட காலங்கள், முந்தியொருக்கால் உப்புடித் தான், சொல்ல மறந்த கதை, துள்ளித்திரிந்ததொரு காலம், ஞாபகம் வருதே

பறந்து திரிந்த பள்ளிப் பருவங்களில், பட்டாம் பூச்சியாய் மனம் பறந்துதிரிந்த "அந்த " இடத்தில்,பசுமையோடு பதிந்து போன பலவற்றுள் சிலவற்றை மீட்டுப் பார்க்கின்றேன்.இன்றும் அசைபோடுகின்ற போது,நகமும் சதையும் போல ஒட்டியிருந்த உறவுகள், தோளுக்குத் தோள் கொடுத்த நட்புக்கள், வசியம் செய்த கண்கள், எல்லாம் பசையாய் ஒட்டிக் கொள்கின்றன நெஞ்சதனை விட்டுப் போக மனமில்லாமல்.நாங்கள் ஒ எல்(O/L)வரை படிச்ச சயன்ஸ் சென்ரர்(Science Center) இலை ஒரு கிணறொன்று இருந்தது.நாங்கள் ரியூசனுக்குப் போய் பாடம் தொடங்க முதலும்,ஒரு பாடம் முடிஞ்சு அடுத்த பாடம் தொடங்க முதலும், எண்டு வகுப்பிலை இருக்கிற நேரத்தை விட மிச்ச நேரத்திலை எல்லாம் இருக்கிறது அந்தக் கிணத்துக் கட்டிலை தான். பின்னேரத்திலை 2, 3 மணி போலை மட்டும் இருக்கேக்கை பின்னுக்கு கொஞ்சம் சுடும். மற்றும் படி ஒரு சோலி சொரட்டும் செய்யாதது அந்தக் கிணறு.ஆனால் நாங்கள் அந்தக் கிணத்துக்குச் செய்த அநியாயங்கள் எக்கச்சக்கம்.துப்ப வேணும் எண்டொரு பீலிங்(Feeling) வந்தாலோ அல்லது ஒருத்தன் துப்ப நான் ஏன் சும்மா பாத்துக் கொண்டிருக்கோணும் எண்டு துப்பும் போதோ,அல்லது துப்பவேணும் எண்டு இல்லாட்டிலும் ஏன் துப்பினாலென்ன எண்டு நினைக்கும் போதெல்லாம் துப்பிறது அந்தக் கிணத்திலை தான்.
முடிஞ்சு போன பேனைகள், பேனை மூடிகள், பேனைக் குச்சுக்கள், பழைய கொம்பாஸ் பெட்டிகள் எல்லாத்தையும் தூக்கி அதுக்கை தான் எறியிறது.இல்லையெண்டால் சிலவேளை இந்தா பார் அந்த மீனுக்கு கல்லாலை எறியிறன் எண்டு சொல்லிக்கொண்டு, அம்பிடிற சின்னக் கல்லுகளாலை மீனுக்குப் படாது எண்டு தெரிஞ்சும் கிணத்துக்கை கல்லெறியோணும் எண்டதுக்காகவேண்டி அதுக்கை எறியிறது.இப்பிடி எங்கடை ரியூசன் நிர்வாகி(Director)அமாவாசையிலை(ஏன் அப்பிடி வந்ததெண்டு யோசிக்குக் கண்டு பிடியுங்கோ பாப்பம்) இருந்த கடுப்பெல்லாத்தையும் அவரிலை காட்டேலாது எண்ட படியால் அவற்றை ரியூசன் கிணத்திலை காட்டிறது தான் எங்கடை வேலை.அந்தக் கிணத்துக்குப் பக்கத்திலை பாத்றூம்(Bath room) மாதிரி ஒரு பக்கம் திறந்த ஒரு மறைப்புக் கட்டிடம்.அதுக்கை தான் ரியூசனுக்குப் படிப்பிக்க வாற சேர் மார் ஒண்டுக்குப் போறவை.(எல்லாரும் இல்லை)அப்பிடி ஒண்டுக்குப் போக வரேக்கை அந்தக் கிணத்தடி, அதுகளுக்குப் பக்கத்திலை அங்காலை இஞ்சாலை நாங்கள் நிண்டால் "டேய் எல்லாரும் சூரிய நம்ஸ்காரம் செய்" எண்டுவினம்.சூரிய நமஸ்காரம் எண்டால், அவையள் அந்த பாத்ரூமுக்குப் போற நேரம் நாங்கள் மற்றப் பக்கமாத் திரும்பி கிழக்கப் பக்கமா சூரியனைப் பாத்து நமஸ்காரம் செய்ய வெளிக்கிட்டிடுவம்.பின்னேரத்திலை கூட சூரியன் மேற்கை நிக்கையுக்கையும் நாங்கள் கிழக்கை பாத்துத் தான் சூரிய நமஸ்காரம் செய்வம் எண்டது வேறை கதை.
சிலவேளையிலை பக்தி முத்திப் போய் சில பேர் "அரோகரா .. " "அரோகரா.. " எல்லாம் சொல்லி கும்பிட வெளிக்கிட்டிடுவாங்கள்.உண்மையிலை அவை அப்பிடியெல்லாம் செய்யச் சொல்லிச் சொல்லுறதில்லை.அவையள் உள்ள போகேக்கை சில பேர் திரும்பிப் பாத்து உவை உதுக்கை என்ன செய்யினம் எண்டு ஆராய்ச்சியெல்லாம் பண்ண வெளிக்கிட்டிடுவம் எண்டு எங்கடை கற்பூர புத்தி பற்றி முதலே தெரிஞ்ச படியாலை தான் அப்பிடி எங்களை சூரியநமஸ்காரம் செய்யச் சொல்லுறவை.ஆனால் நாங்கள் "அரோகரா .. " எல்லாம் சொல்லி பூசையே நடத்திப் போடுவம்.கையெல்லாம் தலைக்கு மேலை தூக்கி, வெளியிலையிருந்து பாக்திறவன், பகதிப் பரவசமான, தங்கப் பழமான பெடியன் எண்டு நினைக்கிற மாதிரி நடிப்பு அதி அற்புதமாயிருக்கும்.சேர் மார் 'அலுவல்' முடிச்சு வந்து , "ஆ .. சரி சரி...சூரிய நம்ஸ்காரம் செய்தது காணும்.. உங்கடை வேலையப் பாருங்கோ ..." எண்டு சொல்லிற வரைக்கும் சூரிய நம்ஸ்காரம் நடந்து கொண்டேயிருக்கும். என்ன என்ரை பதிவைப் பாத்து நீங்களும் சூரிய நம்ஸ்காரம் செய்து போடாதையுங்கோ..
(இந்தப் பதிவு எங்கள் பிரதேசங்களில்,படிக்கும் மாணவர்களாயினும் சரி ஆசிரியர்களாயினும் சரி யாராகினும்,எவ்வளவு பௌதீக, நிதி மற்றும் இதர வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கற்று வரவேண்டியிருக்கின்றாது என்பதற்கு ஒரு சிறு ஆதாரமாகக் காட்டவேயன்றி,அந்த ஆசிரியர்களை கேலி படுத்தவோ, அல்லது வேறு எந்த தீய நோக்கங்களுக்காகவும் எழுதப் படவில்லை)

Thursday, July 1, 2010

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

ஈழத்த்மிழரின் வாழ்விய்லை சிறிதளவாவது தொட்டுச் சென்ற மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் வரிகளைத் தலைப்பாக்கி,தெனாலிபடத்தில் வந்த கமலின் கதையை கருவாக்கி,ஈழத்தமிழர் தம் வாழ்வை கதையாக்கி,அதை உருவேற்றி, பதிவாக்கி,வலையேற்றுகின்றேன், எங்களுக்கே உரமாகிய எம்மினத்தவர்க்காக."கண்டிக் கதிர்காம்க கந்தனே" எண்டு வேலை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு "எல்லாம் சிவமயமெண்டு சொல்லுவினம் ஆனால் எனக்கு எல்லாம் பய மயந்தான்.நிண்டால் பயம், இருந்தால் பயம்,நாடு பயம், காடு பயம்,காலா உனைக் காலால் உதைப்பனோவென்று பயமெனக்கு. ஓஒ.. பூரான் பயமெனக்கு,பூனை பயமெனக்கு,பூனை தின்கிற எலியும்,எலி தின்கிற பாம்பும் பயமெனக்கு.திறந்த கதவு பயமெனக்கு,பூட்டின கதவெண்டால் எங்கை திறபட மாட்டுதோ எண்டு மெத்தப் பயமெனக்கு.. உந்த இங்கிலிஸும் பயமெனக்கு. இப்பிடிப் பேசிக்கொண்டிருக்கேக்க்கை தொண்டைத்தண்ணி வத்தி செத்துப் போடுவனோ எண்டும் பயமெனக்கு" என்று கமல் பேசும் தொடர்ச்சியான பயவரிசையைத் தொடர்ந்து இதற்கென்ன காரணமென்னவென்று மனநல டாக்டரான ஜெயராம் கேட்ட போது அதுவரை தன் நடிப்பாலும், செய்கையாலும்,கதையாலும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்து விட்டு சராசரி ஈழத்தமிழன் போல் மாறி அவனுக்கேயுரிய அப்பாவித் தனத்துடன் கமல் பதில் சொல்லும் காட்சி கண்ணை கலங்கச் செய்யும்.
"நான் சின்னப் பொடியனா இருக்கேக்கை என்றை அப்பாவைச் சுட்டுப் போட்டு வடிவான என்றை அம்மாவின்ரை வடிவையும் கெடுத்துப் போட்டு அந்த ஆமிக்காரர் போட்டாங்கள்.அம்மா அப்பிடியே அழுது கொண்டே இருந்தா. அம்மாவின்ரை கண்களில் தாரை தாரையாகத் தண்ணீ.எனக்கும் சின்னப் பெடியன் எண்டதாலை ஒண்டும் செய்யேலாமல்ப் போட்டுது.நான் கல்லுகளைத் தூக்கி எறிஞ்சன்.என்னையும் பிடிச்சுத் தூக்க்கி எறிஞ்சு போட்டுப் போட்டாங்கள்." எண்டு கமல் சொன்ன அந்த வசனம் உண்மையிலேயே நடந்த ,நடந்திருக்கக்கூடிய சம்பவம்.அந்தக் கமலைப் போல் போரால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு,உறவுகளைத் தொலைத்து,உறுப்புக்களை இழந்து, விழுப்புண் அடைந்து எத்தனை சோகங்களுடனும், மனச் சுமைகளுடனும் "ஏதோ இருக்கிறம்" என்று வாழ்கின்ற,மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பற்றியதே இந்தப் பதிவு.போரினால் நேரடியாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், அங்கவீனங்கள்,இடப் பெயர்வுகள்,பட்டினிச் சாவுகள்,பொருளாதார, மருத்துவத் தடைகள் போன்ற அவலங்கள் காலப் போக்கில் மறக்கபடலாம்(மறக்கப் படும் என்பதல்ல எனது கருத்து,மறந்து போகப் படலாம்.அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலி.மறக்கப் படலாம் என்று நாம் வெறுமனே கூறிவிட முடியாது)ஆனால் இவற்றின் விளைவுகளால் ஏற்படுகின்ற மனத் தாங்கல்கள்,மன அழுத்தங்கள் ,வடுக்கள் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தே வரும்.அவர்களைச் சார்ந்த அடுத்த தலைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்தப் போரின் வடுக்களைச் சுமந்து கொண்டு,நடைப் பிணங்களாக,நாங்களும் ஏதோ பிறந்து விட்டோம் என்பதற்காகவும்,எஞ்சிய ஏனைய உறவுகளையும் தனியே விட்டு விட்டு சாகவும் முடியாது என்ற் என்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற் நிர்ப்பந்ததிற்காக வாழ்கின்ற,வெறும் உடம்புகள் மட்டுமே ஊர்வலம் போகின்றவர்களுக்க்காகவே இந்தப் பதிவு.
கடந்த மாதம் தனது கடைசி மகளுக்குப் பிறந்திருந்த பேரனைப் பார்த்துப்,ப்ராமரிப்பதற்காக, ஒரு சராசரி புலம்பெயர் உறவொன்றின், தாய்மார் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் பிள்ளைப்பேறுகளை அந்தந்த நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு வருகின்றார்களோ அதே போல என் பெரியம்மாவும் சுவிஸ் சென்று விட்டு திரும்பியிருந்தா.திரும்பி வரும் போது அக்காவின் மகன், அதாவது எனது மருமகனின் உடல் நிலை சரியில்லாததால் இலங்கை திரும்புவதில், சம்மதமில்லாமலே திரும்பியிருந்தார்.பெரியம்மா வந்ததும்,ஊரிலிருந்த வந்த இன்னுமொரு அக்கா, அத்தான், மற்றும் அக்காவின் இரு பிள்ளைகள், மற்றும் நானும் போய் வரவேற்றோம்.சுகமும் விசாரித்தோம்.கொழும்பிலிருந்து வீடு செல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனமும் வந்த பின்னர் விமானப் பயண அசதியால் தூங்கிக் கொண்டிருந்த பெரியம்மாவை எழுப்பினால் ஆள் அசைவில்லை.ஆனாலும் நாங்கள் ஆடிப் போகவில்லை.ஏதாவது மரணத்தைப் பார்த்தால், மரண வீட்டிற்குச் சென்றால், அல்லது கவலையில் யோசித்தால் உடம்பெல்லாம் விறைத்து,தொடர்ச்சியாக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பெரியம்மா மயக்கமாகவிருப்பா என்பது எங்களுக்குத் தெரியும்.இந்த மயக்கத்திற்கும் காரணம் அதுவென்பதும் அது எதனாலென்பதைக் கூறுவதுடன் பதிவிற்குள் நுழைகின்றேன்.எங்களை அம்மா, அப்பா தூக்கித்திரிந்த மிகச் சின்ன வயதுகளில்,தாடி வைத்து தொப்பி போட்ட இந்திய இராணுவம் எங்கள் வீதிகளில் நடமாடிச் சென்றதெல்லாம் என் மனதில் நிழலாடுகின்றது. அவர்கள் இங்கிருந்த காலங்களிலெல்லாம் செய்த கொடுமைகளைப் பட்டு அனுபவித்தவர்களில் மிச்ச மீதியாய்த் தப்பிப் போனவர்களில் மிச்சம் சொச்சம் பேர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன்
இந்திய இராணுவம் வருகின்றதென்றால் இளைஞர்கள்,யுவதிகள்,புதுமணத் தம்பதிகள் உட்பட எல்லாரும் உயிரைக் காப்பாற்ற பயிர் வைத்த தோட்டங்களுக்குள்ளும், பதுங்கி ஒதுங்க பங்கருக்குள்ளும்,கோவில்கள்,தேவாலயங்களிலும் தஞ்சம் தேடிக் கொள்ளுவார்கள்.பெரியம்மாவும் பெரியப்பாவும் மூன்று பிள்ளைகளையும் (அண்ணன், 2 அக்கா) அம்மம்மா, அம்மப்பாவின் பொறுப்பில் விட்டு விட்டு பக்கத்திலிருந்த கத்தரித் தோட்டத்துக்குள் பதுங்கிக் கொண்டனர்.அங்கே அவரின் கெட்ட காலம், எறும்பு கடிக்கிறதென்று சொறிந்து கொள்வதற்காக எழும்பிய அவருயிரை தறையின் மறுபக்கத்தில் கறுவிக் கொண்டிருந்த இந்திய இராணுவ வீரனொருவனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு வந்த ரவை பறித்துச் சென்றது.எந்தவொரு குழுவுடனுமோ சம்பந்தப் படாமல், எறும்புக் கடியை சொறிவதற்காக எழும்பிய பெரியப்பா,தன் கண் முன்னாலேயே தனது மிகச் சிறிய வயதிலேயே ,திருமணமான சிறு காலத்திலேயே,எந்தவொரு வரும்படியும் இல்லாத நிலையிலே மூன்று சின்னஞ் சிறு பிள்ளைகளையும் அதுவும் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளையும் தன் தலையிலே பொறுக்கவிட்டுச் சென்றதை ,அவர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை நேரில் கண்ட பெரியம்மாவுக்கு மரண வீடுகளைப் பார்க்கும் போதோ ஏதாவத் கவலை வரும் போதோ ஆழமாக யோசித்தாலோ மயக்கம் ஏற்பட்டு விடும்.இது அவவிற்கு ஏற்பட்ட பாதிப்பு
இதைப் போல் அண்மையில் நான் பத்திரிகையில் வாசித்துக் ஒரு செய்தி.17 வயதுச் சிறுவனொருவன் தனது இரு கைகளையும் செல் வீச்சினால் இழந்திருந்தான்.அதே செல் வீச்சில் இவனின் இரு தங்கைகளையும் இழந்தினால், அதைப் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தந்தைக்கும் பைத்தியம் பிடித்து விட்டது.எஞ்சியது இவனும் தாயும்.இவன் தனது அன்றாடம் ஒன்றுக்கு, இரண்டுக்குப் போவதற்குக் கூட இன்னொருவரின் துணையை நாட வேண்டிய மகா கொடுமை.வருமானமேயில்லாத இக் குடும்பத்தில் இருந்து கொண்டு தன்னால் போதியளவு பணம் திரட்ட முடியாதென்பதால் தனது ஒரு கையையாவது பொருத்த உதவுமாறு வினயமாக கேட்டிருந்தான்.எனது பெரிய்ம்மாவிற்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டும் சொல்வதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்தவில்லை.அவரைப் போல்,அல்லது அவரை விட இன்னும் இன்னும் எத்தனை பேர் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டார்கள்,காரணமின்றிக் கொலை செய்யப்பட்டார்கள்,வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கடித்துக் குதறப் பட்டார்கள், இன்னும் எத்தனை எத்தனை?எனக்கு தெரிந்தது ஆயிரத்தில் ஒன்று,தெரிந்ததில் நான் சொல்வது ஓராயிரத்தில் ஒன்று,வெளியே வராமல்,வர விடப் படாமல்,வரமுடியாமல் சுட்டு விழுத்தப் பட்ட சடலங்களோடு செத்துப் போன உண்மைகள் எத்தனை?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா?இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்?இந்த அப்பாவிகளுக்கு யார் நீதி வழங்குவார்கள்?உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,அதன் மிகப் பெரும் மக்கள் தலைவரான பிரதமரைப் படுகொலை செய்தது சரியா பிழையா என்று சிந்திக்க முடியாமல் சரியென்று சொல்ல முடியாவிட்டாலும் பிழையென்று மறுதலிக்க முடியாமல் இந்தியப் படைகள் ஆடிய கோரத் தாட்டவங்கள் குறுக்கே வந்து குழப்பி விடுகின்றன.பாரத தேசத்தின் பார்ப்பனியர்களின் பாராளும் பிரயாசைக்கு ஈழத் தமிழினத்தைப் பகடைக் காயாக்க முற்பட்டுப் படுதோல்வியடைந்ததால், படையெடுத்துப் பணிய வைக்க முயன்றனர் படைக்கஞ்சா ஈழத்தமிழனை.எதிர்த்தது பாரிய படையென்றும் பார்க்ககாது மோதித் தான் பார்த்த ஈழத் தமிழன் இழந்தது என்னவோ ஏராளம் தான். உயிரிழந்து,உறவிழந்து,உடுக்க உடையின்றி,படுக்கப் பாயின்றி,உலகின் மூலை முடுக்கு நாடுகளின் வாயில்கள் தட்டி தஞ்சம் கோரினார்கள்.பல நாடுகள் தஞ்சம் கொடுத்தாலும்,நீங்களேல்லாம் இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பியள் என்று வாசற் கதவை அடித்துச் சாத்திய நாடுகளும் இருக்கவே செய்கின்றன.பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியின் பணிப்பாளாரான ஜெகத் கஸ்பார் அடிகளாருக்கு ஈழத்து இள நங்கையொருத்தியின் கடிதம் அவர் கண்களைத் திறந்து,கசிந்துருக வைத்து, அவரின் ஈழத்தமிழர் மீதான் பார்வையையே புரட்டிப் போட்டது.பத்து வயதில் அந்தச் சிறுமியிருந்த போது வீட்டுக்கு வந்த இந்தியப் படைகள் தன் தந்தைக்கு முன்னால் தாயைத் துகிலுரிய முற்பட்டதையும்,துள்ளிய தந்தையைப் போட்டுத் தள்ளிவிட்டு தன் தாயைத் தனக்கு முன்னாலேயே ருசித்து விட்டுச், அவரின் அலுவலையும் முடித்து விட்டுச் சென்ற இந்தியப் படைகளின் ஈனச் செயல் பற்றிக் கூறியிருந்தாள்.அதை நேரில் பார்த்த அந்தச் சிறுமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.இப்போது நீங்கள் ஜெகத் கஸ்பார் தனது ஈழத் தமிழர் மீதான பார்வையை மாற்றியது சரியா பிழையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
(இதே மாதிரியான ஒரு கதை தான் கமலுக்கு தெனாலியில் வருகின்றது)இதை மாதிரி எத்தனை கதைகள்?அமைதிப் படை என்ற பெயரில் வந்து ஆடிய ஆட்டங்க்ள் எத்தனை?மூத்திரம் பெய்யச் சென்றவனையும், காலையில் பாண் வாங்க பேக்கரிக்குச் சென்றவனையும், கத்தரித் தோட்டத்துக்குள் ஒளிக்கச் சென்றவனையும் சுட்டுத் தள்ளிய கொடுமைகளை,கற்பளிப்புக் கொடுமைகளை அனுபவித்தவர்களது, கண்டவர்களாது மனநிலை எப்படியிருக்கும்1991 இல நடந்த துன்பிய சம்பவத்திற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையே பழிவாங்கிய இந்தியப் அரசு நடாத்திய /நடாத்துவித்த இறுதியுத்தததால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த ரெட்பார்ணா என்ற அமைப்பு கூறியுளது.அது மட்டுமல்லாது இந்தப் போரிலே குண்டடிபட்டு, விழுப்புண்ணடைந்து, தமது கருமங்களை ஆற்றவே மற்றவர்களைத் தங்கி நிற்கும் சகோதர சகோதரிகள் வீட்டு மூலைகளுக்குள்ளே ஒதுக்கப்பட்டு விட்டோம்,மற்றவர்களில் தங்கியிருக்கிறோம் என்று எவ்வளவு வேதனைப் படுவார்கள்.அது மட்டுமல்லாது எத்தனை கற்பழிப்புக்கள்,வன்புண்ர்ச்சிகள் எங்கள் சகோதரிகளுக்கு நடந்தேறியுள்ளன.எத்தனை எத்தனை உயிரிழப்புக்களை நேரிலே கண்ட சிறுவர்கள், சடலங்களைத் தாண்டி வந்த அவர்கள் கால்கள், குண்டுகளுக்கு, பயந்தோடிய அவர்களது மனநிலை எப்படியிருக்கும்.இரததமும், சதைப் பிண்டங்களும் சடலங்களும் அவர்கள் கண்ணை விட்டு என்றும் செல்ல மாட்டா. எதைப் பார்த்தாலும் ஒரு பயம்,ஒரு பதட்டம், நடுக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.சிலவேளைகளில் எதற்கும் இரங்காத கல் நெஞ்சு படைத்தவர்களாக அவர்கள் மனங்களை இந்தப் போர் மாற்றக்கூடும். அவர்கள் எல்லோருடைய கல்வி, குடும்ப வாழ்க்கை, தொழில் என்பன எவ்வாறு அமையப் போகின்றது.வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்.இந்தச் சிறுவர்கள்,இந்த மக்கள் வளார்ந்து வரும் போதுஅவர்கள் குடும்பத்தில்,சமூகத்தில், எவ்வளவு பிரச்சினைகளைப் எதிர் நோக்கப் போகின்றார்கள்?இவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளின் உடல் நலன்கள் என்றெல்லாம் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.ஆன போதும் அதனை எதிர் கொள்வதற்கு உளவளாத்துணைச்செயற்பாடுகளோ,சமுதாய மட்டத்திலவர்களை மீட்டெடுப்ப்பதற்காக மீட்பு நடவடிக்கைகளோ கல்விமான்களாலோ,அமைப்புக்களாலோ,அரசியல் கட்சிகளாலோ ஆரம்பிக்கப் படாதிருப்பது எமது சமுதாயத்தின் துரதிஸ்டமே.சுனாமி நேரத்தில் கூட எமது மக்களில் ஒரு பகுதியினர் உள்வளத்துணை ஆலோசனைகளிப் பெற்றிருந்தனர்.ஆனால் இப்போது இவ்வளவு இழப்புக்களுக்குப் பிறகும் எதுவுமில்லை.
தெனாலியில் வந்த தெனாலிராமனை விட முழு அளவிலும் பகுதி அளவிலும் அதிகளவில் மன நிலை பாதிக்கப் பட்டு இன்றும் எத்தனை பேர் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.(ஐ.நா செயலாளரோ அமெரிக்க ஜனாதிபதியோ கேட்டும் இலங்கை அரசாங்கம் எந்தவொரு யுத்தக் குற்றங்களையும் புரியவில்லையாம்.அதனால் எனக்கும் அதைப் பற்றி ஏதும் தெரியாது.