Saturday, July 31, 2010

வீட்டுச் சாப்பாட்டின் அருமை

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.கோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.
மாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள்ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.


நாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்டுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.வடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் "நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிடிக்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ)அறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு போடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.சிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில் மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.சாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும் சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும் சமையற்காரனதும் சுத்தத்தை. கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.
பின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கிட்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.


சொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே "அவக்" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது. சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.சரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள் எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.அங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்?.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை....!!!...வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.

10 comments:

 1. அருமையான தமிழ்...
  எனக்கு இந்தத் தமிழ் மீது அப்படியொரு காதல், எனக்கு உந்தத் தமிழ் எழுத வராது.

  அனைவரும் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி அருமையான பதிவு.

  // இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்? //

  உண்மை.
  சாப்பாட்டுக்கடைக்கு நடந்து போய் வாங்கிற அளவுக்கு அங்க ஒண்டும் இல்ல எண்ட யோசினையிலயே சாப்பிடாம விடுறது நிறையப் பேர்.


  // வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை //

  ம்... :(

  ReplyDelete
 2. வீட்டு சாப்பாட்டின் அருமை எனக்கும் தெரியும்

  ReplyDelete
 3. அடடா...எல்லோருடைய அனுபவங்களும் ஒன்றாகத்தான் உள்ளது. எனக்கும் என் பல்கலைக்கழக கால நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன.

  ReplyDelete
 4. நல்லாத்தான் எழுதியிருக்கிறாய்.... அறையில ஒண்டா இருந்த நாட்களையும் காலமைச் சாப்பாட்டை வாங்கப் போறதையும் ஞாபகப் படுத்தினாய். காலமச் சாப்பாடு சாப்பிடாத கன நாள் மத்தியானச் சாப்பாடு இடியப்பம் அல்லது தோசை எண்டதையும் ஞாபகப் படுத்திறன்.

  ReplyDelete
 5. என்ன கங்கோன் இப்பிட் நக்கல் அடிக்கிறியள்.ஏன் உந்த தமிழிலை ஏதேனும் பிழையே.நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும்.ஆனால் உங்களைப் பார்த்தால் சாப்பிடாமல் விடிறா மாதிரி தெரியேல்லையே?

  ReplyDelete
 6. ஜோ வாய்ஸ் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்

  ReplyDelete
 7. ஜனா உங்களுக்க்கும் இதே அனுபவம் தான் என்றுள்ளீர்கள்.நன்றிகள் வருகைக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும்

  ReplyDelete
 8. ம்ம் பால்குடி அறையிலை அந்தக் கால நினைவுகளை மறக்கேலாது தானே.நீ அதோடை மத்தியானம் இடியப்பம் தோசை சாப்பிடிறதையும் சேத்து ஞாபகப் படுத்திப் போட்டய்.நன்றி.

  ReplyDelete
 9. எங்கட எல்லாற்ற கதையும் ஒண்டு தான் போல..

  ReplyDelete
 10. ஓம் சின்மஜன்,எல்லாற்றை கதையும் ஒண்டு தான் போல கிடக்குது...!!!

  ReplyDelete