Wednesday, June 30, 2010

மாயி அண்ணை வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச் சாமி வந்திருக்காக..

அடியாத மாடு படியாது எண்டும், மறதிக்கு மருந்து மாஸ்ரரை பிரம்பெண்டும் சொல்லிச் சொல்லி எங்கடை சேர் மார்,ரீச்சர் மார்,வீட்டுக் காரர் பெடியளுக்கு அடியாத அடியில்லை.எண்டாலும் ஏதோ அடிச்சுப் படிப்பிச்சபடியாலை இண்டைக்கு ஏதோ நல்லாய் இருக்கிறம்.அந்த வகையிலை அவையளுக்கு நன்றியையும் சொல்லிக் கொள்ளுறாதோடை விசயத்துக்கு வருவம்.


நாங்களும் கனவிதமான அடியளை கனவிதமான வாத்திமாரட்டை விதம் வித்மா வாங்கிக் கட்டியிருக்கிறம்.ஞானேந்திரம் சேர் எண்டால் 6 ம் ஆண்டு, 7 ம் ஆண்டு படிக்கிற பெடியளை காற்சட்டைக்குப் பின்பக்கத்தாலை கொளுவி எயாரிலை தூக்கி வைச்சிருப்பார்.பெடியன் பதகளிச்சுத் துடிக்கிற துடிப்பிலேயே அடுத்தமுறை குழப்படி செய்யமாட்டான்.தவராஜா சேர் மாதிரி கன்னத்து மயிரை மேலே பிடிச்சு இழுத்தால் அதின்ரை வலி தெரிஞ்சவன் அடுத்தமுறை நல்ல பொடியனா இருப்பான்.கனத்தை வடிவா,இதம் பதமா செற் பண்ணிக் கொண்டு, எதிர்பாக்காத நேரத்தில கன்னத்திலை சடார் எண்டு போடிற சிவகுமார் சேரின்டை அடி பழ்கினவன் அப்பிடியொரு பிழையை வாழ்க்கையிலை விடமாட்டான்.இல்லையெண்டால் தவனேசன் சேரட்டை பின்னுக்குப் புளிக்கப் புளிக்க வாங்கினவன் அப்பிடியொரு அடியை இனி வாங்கோணும் எண்டு நினைக்கவே மாட்டான்.இல்லையெண்டால் மரியதாஸ் சேரட்டை உடம்பிலை எங்கை அடிவிழுது எண்டு தெரியாமலே எல்லா இடமும் அடி வாங்கினவனெண்டால் அடுத்த தரம் கணக்கு ஒழுங்காச் செய்து கொண்டுவருவான்.




இப்பிடி கனவிதமான அடியள் சின்னனிலை இருக்கேக்கை பள்ளிக்கூடத்திலை,ரியூசனிலை எல்லாரும் வாங்கிறது தான்.பிறகு கொஞ்சம் வளந்தாப் போலையும் திருந்தாட்டில் என்ன செய்யிறது..?மாடுகள் மாதிரி வளந்ததுகளுக்கு அடிச்சால் அவையளுக்குத் தான் கை நோகும்.ரியூசனுகளாலை திரத்தி விடுறது தான் ஒரே வழி.றோட்டிலை நிண்டு நாலு பேரட்டை திட்டு வாங்கியாவது புத்தி வரட்டும் எண்டு.(இருந்தால் தானே வாறதுக்கு எண்டு தானே கேட்கிறியள்.சரி எங்களுக்கு இல்லையெண்டே வையுங்கோவன்)



இது நாங்கள் ஏ. எல் (A/L) படிச்சுக் கொண்டிருக்கேக்கை நடந்த சம்பவம் ஒண்டு.பள்ளிக்கூடம் 2, 2.30 க்கு முடிஞ்சாப்போலை, வீட்டை வந்து மேலைக் கழுவிப் போட்டு அவுக் அவுகெண்டு சாப்பிட்டு ஒரு 4, 5 கட்டைக்கு அங்காலை இருக்கிற ரியூசனுக்கு சைக்கிளை உழக்கித் தள்ளவேண்டியது தான்.எங்களுக்கெல்லாம் படிப்பெண்றது வீட்டை கூப்பிட்டு பேர்சனல் கிளாஸ்(Personal Class) போட்டுப் படிப்பிக்கிற நிலையிலை வீட்டின்ரை பொருளாதாரம் இருக்கவில்லை.பள்ளிக்கூடம், ஒரு ரியூசன்,சிலவேளைகளில் ஒன்றிரண்டு குறூப் கிளஸ்(Group Class) அவ்வளவு தான்.


காசின்ரை அருமை கொஞ்சம் தெரிஞ்ச ப்டியாலை கொஞ்சம் ஒழுங்காத் தான் ரியூசனுகளுக்குப் போறது.அண்டைக்கும் போய் வகுப்பிலை குந்தியாச்சுது. 3.30 க்கு நல்லையா சேரின்ரை Pure Maths.அண்டைக்கு ஆள் வரயில்லை.எங்கடை கொட்டிலுக்குப் பக்கத்திலை எங்கடை பயோ(பிஒ) காரருக்கு தம்பர் Zoology(விலங்கியல்) எடுத்துக் கொண்டிருந்தார்.இஞ்சாலை நாங்கள் கதை தான்.பகிடிகள், பம்பலுகளிலை நேரம் போகுது.அடிக்கிற பம்பலுகளுக்கு சிரிப்பு வராட்டிலும், பக்கத்து கொட்டிலுக்கை பயோ(Bio) பெட்டையள், பொடியளுக்குத் தம்பர் குட்டிறதும், பெட்டியளின்டை கொப்பியளைத் தூக்கி எறிஞ்சு "ஓடடி நாயே.." எண்டு திரத்திறதைப் பாக்கேக்கை சிரிப்பு வராட்டிலும் உள்ளுக்கை ஏதோ குட்டிச் சந்தோசமாயிருக்கும்.உண்மையிலை இந்த, இப்படியான, வக்கிர, வன்முறை ஆசைகளுக்கு நாங்க்கள் கடந்து வந்த போர்ச்சூழலும் காராணமாகுமோவேனவும் சிந்திதிருக்கிறான்.அது தலைப்புக்கு சம்பந்தமில்லாததாலை இப்ப அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவம்.


நாங்கள் இடைக்கிடை பம்பலுகளுக்கு அது சிரிப்பு வராட்டிலும் ஒருக்கால், கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிறது.ஏனெண்டால் சேவலின்டை சத்ததைக் கேட்கிற பேட்டுக்கோழி என்ன றியாக்சன் குடுக்குது எண்டு ஒரு லுக் ஒண்டு அடிக்கிறாதுக்காண்டி.இதைக் கேட்டிட்டு தியாகேசண்ணை(எங்கடை ரியூசன் டிரக்ரர்) வந்து "அங்காலை வகுப்பு நடக்குதல்லோ.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு உறுக்கி விட்டுப் போவார்.பெடியளும் அவர் வரேக்கை மட்டும் கோழிக் கள்ளன் மாதிரி மண்டிக் கொண்டிருந்திட்டு ஆள் போன கையோடை சமாவைத் தொடங்கிடுவாங்கள்.எண்டாலும் ஒரே மாதிரி ஒராள் பம்பலடிக்க மற்றாக்கள் பாத்துச் சிரிச்சுக் கொண்டிருக்கிறது அலுப்படிக்க வெளிக்கிடுது.


கொஞ்சம் வித்தியாசமாச் செய்வம் எண்டிட்டு கிறியேற்றிவிடியைப்(Creativity) பாவிச்சு வகுப்புக்கு வரேக்கை கலட்டிக் கொண்டு வந்த கஜன்ரை சைக்கிளின்ரை பெல்(Bell) மூடியிலை ஒண்டைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு,அதிலை பேனையாலை தட்டி "டிங்.. டிங் " எண்டு மணியடிச்சுக்கொண்டு, "பராக்குப்" பாட தொடங்கினாங்கள்.வாசு, சுபறாஜ்,இரண்டு பேரும் எழும்பி நிண்டு மணியை அடிச்சுப் போட்டு, "இத்தால் சகலரும் அறியத்தருவது... கிருத்திகன் வந்திருக்காக.. நீல கலர் ரீ சேட் போட்டிருக்காக, கறுத்தக் கலர் ஜீன்ஸ் போட்டிருக்காக , பிறவுண் கலர் .. போட்டிருக்காக.. அவர் மூண்டாம் வாங்கில்லை இஞ்சையிருந்து 2 வதா இருக்கிறவவை லுக்கு விடுறாக, அவ இந்தக் கலர் அது போட்டுக் கொண்டந்திருக்காகாக .. அப்படி எண்டு மாயி படத்தில இழுத்த மாதிரி ஒவ்வொண்டுக்கும் ஒரு " Ha.. " போட்டு எல்லாரையும் பற்றி இழுத்துக் கொண்டு கொண்டிருந்தாங்கள்.



முதல்லை கொஞ்சம் நோமலாத் தொடங்கின பராக்கு வாசுவினரையும் சுபர்ரஜ்ஜின்ரையும் திறமையாலை அதோடை கமலை மாதிரி மூத்த குடிமக்களின்ரை Quide ஓடை வகுப்பிலையிருந்த முழுப் பெட்டியள், பெடியள் எல்லாரும் கவனிக்கிற மாதிரி பிக்கப் ஆகத் தொடங்கிற்றுது.விசிலடிப்புக்கள், கூவடிப்புக்கள்,கைதட்டல்கள், மேசை தட்டல்கள் எல்லாம் பலமாக் கிடைச்சுது.தியாகேசண்ணையும் 2 ,3 முறை வந்து பேசிப் போட்டுப் போட்டார்.ஆனாலும் இவங்கள் விட்ட பாடில்லை.பெடியள் குடுத்த உற்சாகம்.உசுப்புக்கு மேலாலை பெடியளே சொன்னங்கள்.. "நீ நடத்து மச்சான்..அந்தாள் கிடந்துது.." பிறகும் பராக்குத் தொடங்கிச்சுது.


"டிங்.. டிங்.. இந்தால் சகலருக்கும் அறியத் தருவது.. இன்னார் வந்திருக்காக.. இன்னது செய்யிறாக.. " தியாகேசண்ணை இந்தமுறை ஒருத்தரும் எதிர் பாக்காதமாதிரி திடீரெண்டு ஒரு தரையிறக்கத் தாக்குதலை பயோ கொட்டில் பக்கத்தாலை வந்து, எங்கடை கொட்டிலின்ரை முன் பக்கமா வந்து ஊடறுத்துத் தாக்கிக் கொண்டு வந்தார்.சிங்கம் சீறிக் கொண்டு தான் வந்தது. வகுப்பு கப் சிப்பானது." யார்றா அந்தப் பராக்குப் பாடினவன்.. செம்மரியளே படிக்க வாறனியளோ.. இல்லாட்டில் வேறை என்னத்துக்கும் வாறனியளோ.. எண்டு அறம் புறமாப் பேசிக் கொண்டு "எங்கையடா அந்த பெல்? எண்டு முன் 3 வாங்கிலிலை இருந்த பெடியளை எழுப்பி பெட்டியளுக்கு முன்னாலை, சேட்டுப் பொக்கற், ஜீன்ஸ் பொக்கற் எல்லாம் தடவி ஆமிக்காரன் செக் பண்ணிறாமதிரி செக் பண்ணினார்.எல்லாற்றை பொக்கற்றைத் தட்டியும் பெல்ல் கிடக்கையில்லை.பெல்லை கொட்டிலுக்கை கீழை கிடந்த மண்ணுக்கை தாட்டுப் போட்டாங்கள் பொடியள்.



தியாகேசண்ணைக்கு இவ்வளவு பெடியளுக்கு முன்னாலை அதுவும் அங்காலை குமர்ப் பெட்டையளுக்கு முன்னாலை தன்ரை மிசன் பெயிலியர்(Mission Failure) ஆனவுடன் ஆளுக்கு சும்மா கோபம் சுர்ரெண்டு ஏறிச்சுது."ஓடுங்கோடா பு.. மக்களே..உங்களுக்க் படிப்பும் வேண்டாம் ஒரு மசிரும் வேண்டாம்...உங்களுக்குக் கடுப்பெண்டால் வேறை யாரையும் பாருங்கோ.இஞ்சை வந்து தேயாதையுங்கோ..எண்டு சொல்லி கொப்பி எல்லாத்தையும் தூக்கி கையிலை குடுத்து மூண்டு வாங்கில் காரரையும் துரத்தியாச்சுது.இப்ப எங்களைப் பாத்து பயோ பெட்டையள் கொடுப்புக்குள்ளை சிரிச்சாகள்.



எங்களுக்கென்ன பின்னங்காற்சட்டையில கிடந்த மண்ணை வடிவாத் தட்டிப் போட்டு சைக்கிளையெடுத்துக் கொண்டு வெளிக்கிட்டம் தியாகேசண்ணை நாளைக்கு வகுப்புக்குளை விடுவார் தானே எண்ட நம்பிக்கையிலை.ஆனால் 2 ,3 நாளாகியும் எங்களை உள்ள விடுறமாதிரி காணேல்லை.பிறகு பால்குடி மாதிரி கொஞ்ச நல்ல பொடியள் போய் நல்லையா சேரோடை கதைச்சாங்கள்.ஆள் கூப்பிட்டார் எங்களையும் தியாகேசண்ணையையும்."ஏன் நீங்கள் கூ காட்டின்னீங்கள்..?உந்தக் குரங்குச் சேட்டையள் இனி விடப் படாது சரிதானே." அது எங்களுக்கு.பிறகு தியாகேசண்ணையைக் கூப்பிட்டு "அடேய் தியாகேஸ், அவங்களை நான் பொறுப்பெடுக்கிறன்.. அவங்கள் இனி குழப்படி செய்ய மாட்டாங்கள்.. ஆ சரியே.. பொடியளெண்டால் அப்பிடித் தான் நாலு பகிடி, முசுப்பாத்தி விடத் தான் செய்வாங்கள்..நீயும் அதுக்குப் போய் அவங்களோடை ஏறுப் பட்டுக் கொண்டு.. ஆ சரி இனி அவங்கள் அப்பிடிச் செய்ய மாட்டாங்கள்.. நான் குரன்டே. " அவ்வளவு தான் தியாகேஸண்ணை மூச்சுப் பேச்சில்லை.அது தான் நல்லையா சேரின்டை பவர்.பிறாகென்ன வகுப்பிலை போக் குந்தினது தான். எண்டாலும் திருந்தின பாடில்லை.மீண்டும் அடுத்த் கலைப்பு .. அது யாரால்.. எப்பிடி.. ஏன்?

Tuesday, June 29, 2010

இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்

என்னத்தைத் தான் இண்டைக்கு தியேட்டரிலை பெஸ்ற் ஷோ(First Show), நெற்றிலே(இன்டெர்னெட்) பாட்டு, படம், ட்ரெயிலர் பார்க்க முடியுமெண்டாலும் அண்டைக்கு(95 களுக்கு முதல்)ஒரு வசதிகளுமில்லாமல் இருக்கேக்கை பார்த்த படங்கள் மாதிரியோ, அல்லது அதிலிருந்த சந்தோசம் மாதிரியோ வராது கண்டியளோ.அது தான் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.



ஊரிலை ஒரு கலியாண வீடு,சாமத்திய வீடு முடிஞ்சால் ஊர் முழுக்க அந்தக் கலியாண வீடோ,சாமத்திய வீடோ நடந்த வீட்டுக்காரரிட்டை, "என்ன கொப்பி வந்திட்டுதோ? எப்ப வரும்? வந்தா எங்களுக்குஞ் சொல்லுங்கோ" எண்டு நச்சரிச்சு நச்சரிச்சே தொலைச்சுப் போடுங்கள்.அதுகளும் படத்துக்கு சொல்லாட்டிலும் ஏதாவது குறைவருமோ எண்டிட்டு ஊர் முழுக்க காட்(Card) குடுக்காத குறையாப் படத்துக்குச் சொல்லுவினம்.





இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும் 5,6 மணிக்கே கோதம்ப மாப் புட்டை(கோதுமை மா) அவிச்சது பாதி,அவிக்காதது மீதியெண்டு அவிச்சுக் கொட்டிப் போட்டு பெண்டுகளும் அவையளோடை பிள்ளையளும் எல்லாரும் நடையைக் கட்டிப்போடுவினம்.ஆம்பிளையளும் அவையளுக்குப் பிறகாலை ஒரு பெட் ஷீற்றை(Bed Sheet)மடிச்சு கமக்கட்டுக்கை வைச்சுக் கொண்டு படையெடுப்பினம்.பேந்தேன் பேசுவான்,படம் போடுற வீடு கலியாண வீடு மாதிரித் தான் மாறிப் போடும்.


சரியெண்டு படம் பார்க்கப் போனால் அண்டைக்கு திருவிழாத் தான். அப்பவெல்லாம் "எஞ்சின்" இலையிருந்து தான் "கறண்ட்" வரும்.எஞ்சினெண்டால் நீங்கள் இப்ப பார்க்கிற ஜப்பானிலையிருந்து வாற "ஜெனறேற்றர்" எண்டெல்லாம் நினைக்காதையுங்கோ."வோட்டர்ப் பம்பையும்" மோட்டரையும் வைச்சு எங்கன்றை ஆக்கள் கண்டு பிடிச்சது.(கஷ்ரங்கள் எங்களைச் சூழ்ந்த போது தான் எங்கன்ரையாக்கள் எத்தினையைக் கண்டு பிடிச்சாங்கள்.வால் கட்டையில அடிக்கிற வெடியிலையிருந்து வானத்திலை பறக்கிற பிளேன் வரைக்கும்)



வோட்டர்ப் பம்மின்றை புட்வால்வ் (நீரை கீழிருந்து எடுத்து மேலே தள்ளும் பின்பக்கத்திலுள்ள குழாய்)கலட்டிப் போட்டு அதையும் மோட்டரையும் பலகையிலை வைச்சுத் தறைஞ்சு தான் "மேட் இன் -- "ஜெனரேற்றைச் செய்ஞ்சிருப்பாங்கள் எங்கடையாக்கள்.முதல்லை வோட்டர்ப் பம்மின்றை காபரேற்றருக்கை கொஞ்சம்,கொஞ்சமாப் ரின்னரைப் பனுக்கி பனுக்கி அதை ஸ்டார்ட்(ஸ்டர்ட்)பண்ண வைக்கிறதுக்குள்ளை அதை இழுத்து இழுத்து இழுக்க்கிறவனுக்கு மூச்சுப் போடும்.அது ஸ்டார்ட் எடுத்தாப் போலை கொஞ்ச நேரம் சோக்கிலை(சொcக்) ஓடி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் அந்த Bar(பட்டி)ஐ மோட்டரிலை கொழுவுவாங்கள்.கேட்டால் இல்லையெண்டால் இஞ்சினுக்கு லோட்(லொஅட்) கூடி இஞ்சின் ஸ்டார்ட் எடுக்க மாட்டாதாம் எண்டு விளக்கம் வேறை குடுப்பாங்கள்.சரியெண்டு ஒருமாதிரி இஞ்சின் ஸ்டார்ட் பண்ணினாப் பிறகு T.V யிலை படம் வாறது தான் பெரிய கதை.





எங்கன்ரை ஊரிலை செல்லக்கண்டண்ணை தான் ரீ.வி, டெக் வைச்சு வாடகைக்கு விடுறவர்.ஆள் ரீ.வி, டெக்கை ஓட்டத்துக்கு கொண்டு வந்தால் எங்களை மாதிரி சின்னப் பெடியளையெல்லாம் தொட விட மாட்டார்.நாலைஞ்சு வருசமாக அதைத் தங்கக்கட்டி மாதிரித் தான் வைச்சுப் பாவிச்சுக் கொண்டு வந்தார்.ரீ.வி டெக் வந்த அந்த பெட்டியைத் திறந்து, றெஜிபோமைக் கலட்டி,பொலித்தீன் பாக்குக்குள்ளாலை(Bஅக்)அதை எடுத்து ஒரு ரீப்பொயிலை டெக்கையும் ஒரு மேசையிலை ரீ.வி யையும் வைச்சு அதுக்கு மேலை ஒரு ஒறேஞ் கலரிலை நல்ல ஒரு துணியையும் விரிக்கிறதுக்கிடையிலை "அரக்கடா..இதைக் கவனமாப் பிடி..,ஆ.ஆ ....மெள்ள .. ஆ மெள்ள ஆ.. பாத்து..." எண்டு இஞ்சத்தை எப்.எம் ரேடியோக் காரர் கணக்கா செய்யிறது கால்வாசி,சொல்லுறது முக்கால் வாசி எண்டது கணக்கா மனிசன் ஒரு ரணகளப் படுத்திப் போடும்.ஆனாலும் அந்தக் நாங்கள் காலத்திலை ஆளைப் பார்த்து வாயைப் பிளந்து தான் இருக்கிறம்.



செல்லக்கண்டண்ணையின்டை 21 இஞ்சி சொனி(Sony) ரீ.வியின் வலப் பக்க மேல் மூலையில 8 பட்டன் மாதிரி இருக்குது.அதுக்குக் கீழே ஒரு சின்னப் பெட்டிமாதிரி இருக்குது.அதுக்குள்ளை கொஞ்சக் கட்டைகள் கிடக்குது.

ஆள் வந்து, முதலாவது பட்டினை அமத்திப் போட்டு,அதுக்குக் கீழையிருக்கிற சின்னப் பெட்டியின்றை சின்னக் கதவை திறந்து,அதுக்குள்ளை இருக்கிற கட்டையளை ஒவ்வொன்றாச் சுத்தத் தொடங்குவார்.பிறகு கொஞ்சத்தாலை அடுத்த பட்ட்ன் எண்டு ஒரு மாதிரிச் சுத்திக் கொண்டு போகேக்கை திடீரெண்டு கறுப்பும்வெள்ளையும் புள்ளிகள் வந்திடும்.உடனை நாங்களெல்லாம் "ஆ.. படம் வரப் போகுது ..ஐ.." எண்டு ஒரே "கெக்கக்கை பிக்கை" எண்டு கைதட்டிக் கூ அடிச்சுச் சிரிப்பம்.திடீரெண்டு அதுவும் போடும்."பங்கை பார் நீங்கள் கத்தினபடியால தான் ரீவி பிழைப் பட்டுப் போச்சுது.சத்தம் போடாமல் இருங்கோ பார்ப்பம்" எண்டு யாராவது பெரிசுகள் பின்னுக்கு இருந்துகொண்டு அதட்டுங்கள். நாங்களும் அதுகளை எதோ உண்மையெண்டு நம்பி "கப் சிப்" எண்டு சைலென்றாயிடுவம்.செல்லக்கண்டண்ணைக்கும் கோபம் வந்திடும்.



செல்லக்கண்டண்ணையும் கோபத்தோடை ரீவிக்கு ரெஸ்ராலை குத்தி குத்தி,முறுக்க,திடீரெண்டு பாத்தால் எல்லாம் கறுப்பாக் கிடக்கும்.நடுவிலை மட்டும் மேலையிருந்து கீழை இரண்டு வெள்ளைக் கோடு மாதிரிப் போகும்.பேந்தென்ன எங்களுக்குத் துள்ளிக்குதிப்புத் தான்.அதுகும் கொஞ்சத்தாலை போடும்."உங்களுக்கு அப்பவும் படிச்சுப் படிச்சுச் சொன்னான்...பாத்தியளே இப்பவும் போட்டுது.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு அதட்டல் பிறகும் வரும்.செல்லக்கண்டண்ணையும் முறுக்கிக் கொண்டே போகும்.திடீரெண்டு பாத்தால் வானவில் மாதிரி கலர் கலரா கோடுகள் மேலையிருந் கீழை வாறமாதிரி இருக்கும்.அப்ப இனிப் படந்தொடங்கப் போகுது எண்டு நாங்கள் எங்கடை எக்ஸ்பீரியன்சிலை சொல்லிப் போடுவம்.



நாங்கள் சொன்ன மாதிரித் தான் திடீரெண்டு பாத்தால் மாப்பிளைக்கு அறுகம்புல்லு வைக்கிற சீன் போய்க் கொண்டிருக்கும்.எல்லாரும் உடனை முதல்லையிருந்து விடுங்கோவன் எண்டு செல்லக்கண்டண்ணையைக் கெஞ்ச "ஏன் இதிலையிருந்து பாருங்கோவன்" எண்டு செல்லக்கண்டண்ணையும் பெண்டுகளுக்குப் பஸ் அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொண்டு ரிவைண்ட்(ரெநின்ட்) பண்ண,ஆக்களெல்லாம் படத்திலை பின்னுக்கு ஓடிப் போய்க் கொண்டிருப்பினம். பேந்தென்ன நாங்கள் எங்கடை "கெக்கக்கை பிக்கையைத்"7 தொடங்கிடுவம்.






உந்தத் திருவிழாவுகள் எல்லாம் முடிஞ்சு ஒரு மாதிரி நிறைகுட செற்றோடை இருக்கிற ஒரு பெரிய கப்பல் வாழைப் பழச் சீப்புக்குப் பக்கத்திலை குத்துவிளக்கைப் பாக்காமல் வீடியோவைப் பாத்துக் கொண்டு குத்துவிளக்குக் கொளுத்திற மாப்பிளையின்டை தாய் தேப்பனோடை படம் தொடங்கும்.பின்னாலை பcக்க்ரொஉன்ட் இலை "பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதைத் தொடங்கிவிடு.." எண்டு பாட்டும் பரலலா(பரல்லெல்) போய்க்கொண்டிருக்கும்.

பிறகு மாப்பிளைக்கு அறுகம் பால் வைக்கிறது,அவர் குளிக்கிறது,அவர் வெளிக்கிட்டாப் போலை,பொம்பிளை வெளிக்கிட்டாப்போலை,மணவறை, பந்தி,கால் மாறிப் போறது,ரெஜிஸ்ரேசன் எண்டு ஒவ்வொரு லொக்கேசனுகள், அதுக்கு டெக்கரேசனுகள்,மேக்கப்புகள் எண்டு எல்லாம் மாறும்,பின்னாலை போற பாட்டுகளும்,"மாசி மாசந் தான் கெட்டி மேளதாளந்தான் ..","செம்மீனே செம்மீனே .ஒங்கிட்டை சொன்னேனே..","ஆடியில சேதி சொல்லி ஆவணில சேதிவச்ச மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு தான்..","ராசி தான் கை ராசி தான்...ஒம் மொகமே ராசி தான்..","ஆனந்தம் ஆனந்தம் பாடும்.." எண்டு மாறிக் கொண்டே போகும்.பொம்பிளை தோழியோடை மணவறைக்கு வரேக்கை, "மணமகளே மணமகளே வா .. உன் வலது காலை எடுத்து வைத்து வா " எண்டோ " வாராயோ தோழி.. வாராயோ.. மணப் பந்தல் காண வாறாயோ" எண்டு ள்.ற்.ஈஸ்வரி பாடின பாட்டையோ போட மறக்க மாட்டங்கள்.



தாலி கட்டுக்கள்,சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு மாப்பிளை, பொம்பிளையள் கலியாண உடுப்பு மாத்தின பிறகு வாற சீனுகளுக்கு ஏன் " சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னைக் கடிக்குது அடிக்கடி ராத்திரி துடிக்குது .." எண்டு போடுறவங்கள் எண்டு 2,3 வருசம் கழிஞ்சாப் போலை தானே எங்களெக்கெல்லாம் விளங்கிச்சுது.அதை எல்லாம் இதிலை எழுதேலாது தானே.எண்டபடியால் அதை விடுவம்.



எல்லாரும் கலியாணவீட்டுப் படத்திலை தாங்கள் எப்ப வருவம் எண்டு வாயைப் பிளந்து பாத்துக் கொண்டிருப்பினம்.வந்தால் காணும் பேந்தேன் பேசுவான் "பங்கை பாரன் நான் நிக்கிறன்.." எண்டு சங்கக் கடையிலை மா வாங்கிறதுக்கு நிக்கிற கியூவிலை(Queue)ஏதோ முதல் இடம் பிடிச்சது கணக்கா துள்ளிக் குதிப்பினம்.



படம் பாக்கப் போனால் அண்டைக்கு விசுக்கோத்துக்கள், வடையள், வாழைப்பழங்கள், தேத்தண்ணி எண்டு வயித்துப் பாட்டுக்கும் நல்ல கவனிப்பாத் தான் இருக்கும்.பேந்தென்ன கையை வைச்சால் அம்பிடிற எல்லாத்தையும் அள்ளி ஒரு முழக்கு ஒண்டு முழக்கித் தள்ளவேண்டியதுதானே.


ஒரு மாதிரி கலியாணவீட்டுப் படம் முடிஞ்சால் அடுத்த சோ(Show) தொடங்கும்.வசந்த மாளிகை, கௌரவம், பூவேலி, மின்சாரம் அது சம்சாரம், ஓர் ஊரில ஒரு ராஜகுமாரி,முந்தானை முடிச்சு, பாட்ஷா, அண்ணாமலை,காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், அவள் வருவாளா,ஆசை,மேட்டுக்குடி,சூரிய வம்சம், புன்னகை மன்னன், மூன்றாம் பிறை,பதினாறு வயதினிலே,சலங்கை ஒலி,தர்மா,உளவுத்துறை எண்டு இடையில ஒரு காலகட்டத்திலை வந்த படங்கள் எல்லாம் எங்கடை ஊரிலை சக்கை ஓட்டம் ஒடித் தள்ளிச்சுது.எனக்குத் தெரிஞ்சு நான் வசந்தமாளிகை படத்தை மட்டும் அஞ்சு தரம் பாத்தனான் எண்டால் பின்னைப் பாருங்கோவன்.கலியாண வீட்டுக் கொப்பிக்குப் பிறகு2,3 சினிமாப் படங்களும் போட்டு முடிக்க விடிஞ்சு போகும்.விடிய எங்களை மாதிரி கொஞ்சம் ரீவிக்கு முன்னாலையே அனாதைப் பிணங்களை மாதிரிப் படுத்துக் கிடக்குங்கள்.



இப்பிடியெல்லாம் கஸ்ரப்பட்டுப் படம் பாத்ததெல்லாம் அந்தக் காலம்.ஆனால் இண்டைக்கு எங்கடை ஊரிலை கூடுதலாக எல்லா வீடுகளிலும் பெரிய 21 இஞ்சி fலற் ஸ்க்றீன்(fலட் ச்cரேன்)ரீவீயள் கிடக்குது.டெக்குகள்,சிடிக்கள்(CD),டிவிடி பிளேயருகள்(DVD),படக் கொப்பிகள் எல்லாம் இருக்குது.ஆனால் பாக்கிறதுக்கு ஆக்களும் இல்லை.இருக்கிற ஆக்களுக்கு நேரமும் இல்லை.அவர்களுக்கும் பாக்கிற மனநிலையும் இல்லை.அங்கையொண்டு இஞ்சையொண்டு எண்டு எங்கன்ரை இனம் எல்லா இடமும் சிதறி, சந்தோசத்தைத் தொலைச்சுக் கிடக்குது.என்ன தான் கஸ்ரப்பட்டாலும் அந்தக் கால வாழ்க்கையே எவ்வளவோ பரவாயில்லை எண்டதோடை நிம்மதியானதும் சந்தோசமானதும் எண்டு என்ரை மனஞ் சொல்லுது.நீங்கள் என்ன சொல்லுறியள்.


கொப்பி - காணொளி பிரதி - வீடியோ

பேந்தேன் பேசுவான் - பிறகேன் பேசுவான்

தறஞ்சு -அறைதல்

ரின்னர் - பெற்றோல் போன்ற எரி பற்றுக் கூடிய எரிபொருள்

அரக்கடா - விலத்து

மெள்ள - மெல்ல

இஞ்சத்தை - இந்த தேசத்தின்

பங்கை பார் -அங்கை பார்

கப் சிப் அமைதியாயிருத்தல்

கால் மாறிப் போதல் - மாப்பிளை வீட்டுக்கு பொம்பிளை செல்லல்

சங்கக் கடை - நிவாரணம் குடுக்கப்படும் கடை(றடிஒன் ஷொப்)

Monday, June 28, 2010

நானும் ஒரு யாழ்தேவி நட்சத்திரம்...?

யாழ்தேவி நட்சத்திரப் பதிவராக தெரிவுசெய்யப் பட்டுள்ளதாக இரண்டுநாட்களுக்கு முன்னர் எனக்கு அனுப்பப் பட்டிருந்த மின்னஞ்சலை இன்று திங்கட்கிழமை காலை அலுவலகத்துக்குச் சென்று திறந்து பார்த்தபோது என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. காரணம், என் பதிவுகள், என்னை நட்சத்திரமாக்குமளவுக்கு தகுதியானவை, தராதரமானவ, தராசிலே வைத்து நிறுக்கக் கூடியளவுக்கு நிறையுடையவையென்று நானே இன்னும் நினைத்ததில்லை.அதனால் எதிர்பாராமல் கிடைத்த அந்த அங்கீகாரத்தால்,கௌரவிப்பால் இரட்டிப்பு சந்தோசம்.நன்றிகள் கோடி யாழ்தேவிக்கு.



நான் பதிவுலகிற்கு மிக அண்மையில், ஆறேழு மாத காலத்திற்கு முன்னர் தான் அறிமுகமானவன்.அதுவரை அண்ணன் ஆதிரை, நண்பர் கிருத்திகனின் மெய் சொல்லப் போகின்றேன், லோசன் அண்ணாவின் லோஸனின் களம், வந்தியண்ணாவின் என் உளறல்கள்,நண்பன் பால்குடியின் தாய்மடி,வானம் பாடும் அண்ணனின் கரவைக்குரல், கானாப் பிரபாவின் மடத்து வாசல் பிள்ளையாரடி, சுவிசில் இருந்து எழுதும் சயந்தன் அண்ணாவின் சாரல்,பனையூரான், மருதமூரானின் பதிவுகள் போன்றவற்றை அவ்வப்போது மேய்வதுண்டு.ஏன் நாம் பதிவு எழுதினாலென்ன என்று என்னையும் எண்ண வைத்து, இன்று உங்களையும் இம்சைப்பட வைத்த பிதாமகர்கள் இவர்கள் தான்.




நானும் பதிவு எழுதினாலென்ன என்று பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதையும் தாண்டி, நடைமுறை வாழ்க்கையில், தேவையில்லாமல் வாயைதிறக்காத ரகத்தைச் சேர்ந்த நான், என் சமூகத்தில் புரையோடிப் போன ஒரு சில கொள்கைகள், தப்பபிப்பிராயங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி என் சமூகமே ஏன்...?, கனலும் நெஞ்சு, மூளாத் தீ, என் மன வானில் போன்ற வகைப் படுத்தல்களினூடு பதிவுகள் மூலமாக வாய் திறக்க முயல்வதுண்டு.


அத்தோடு எங்கள் இனம் பட்ட அவலங்கள், கண்ட அனுபவங்கள், கஸ்ரங்கள் ,கொடுமைகள், கொடூரங்களில் நானும் பட்ட மிக மிகச் சிலவற்றை மீட்டி, அனுபவங்களாகவும், கற்பனைக் கதைகளாகவும் பதிவதுமுண்டு.அது மட்டுமில்லாமல் சிலவேளைகளில் தொழில்நுட்பப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் இதுவரை விளையாட்டுப் பக்கமோ, சினிமாப் பக்கமோ தொட்டுப் பார்த்தது கூட இல்லை.விரைவில் அங்கும் செல்ல வேண்டும்.மேலும் என் பதிவை மெருகூட்டவேண்டும்.மனதிலே வரித்த கருதை எழுத்திலே சொருக வேண்டும் என்ற எனது திட்டங்கள் எல்லாவற்றுக்கும் அத்திவாரமிட்டு என்னை நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவிக்கு நன்றியைக் கூறிக் கொள்வதோடு,எனது பதிவையும் வாசித்தருளும் வாசக்ப் பெருமக்களுக்கும் நன்றியைக் கூறி,எதிர்காலத்தில் மென் மேலும் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாய் எழுதுவேன் என்று உறுதி கூறிக்கொள்கின்றேன்.

Saturday, June 26, 2010

வெளி நாட்டுக் காசு

நான் கடந்து வந்த பாதையில் சில விடயங்களைக் காணும் போது எனக்கு அவை தப்பாகத் தென்பட்டிருந்த போதும் நான் அந்தத் தப்பைத் தட்டிக் கேட்டதிலை.கேட்க முயன்றதுமில்லை.ஆனால் அவை என்மனதை உறுத்தியிருக்கின்றன.எனது அடிமனதில் பதிந்திருந்த அவற்றுள் ஒரு சில விடயங்களை உங்களுடன் பகிர்வதன் மூலம், உங்களுக்கும் அது தப்பாகத் தெரிந்து, நீங்களும் என்னைப் போல ஒரு ஊமையாய் இல்லாமல் ஒரு சமூக அநீதியக் கண்டு கொதிப்பவராக இருந்தால் அந்த விடயங்கள் திருத்தப்படலாம் என்ற நம்பிக்கையிலும்,அல்லது எனது பார்வையில் தவறாகப் பட்ட அது உங்களுக்கு சரியாகப் பட்டிருந்தால் எனது அந்த தப்பைத் திருத்திக் கொள்வதற்குரிய ஒரு சந்தர்ப்பமாகவே நான் இந்த என் சமூகம் சார்ந்த பதிவுகளைக் கருதி, என் மனதில் கனன்று கொண்டிருக்கும்,அந்த மூளாத் தீயை உங்களுக்கும் பற்ற வைக்கின்றேன்.




பல லட்சக் கணக்கான எம்மவர்கள் நாட்டின் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில்,குறிப்பாக மேற்கு ஐரோப்பா,வட அமெரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களில் முதற் தலைமுறையினர் இனக்க்கலவரத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டும்,அதனால் ஏற்பட்ட அச்சமான சூழ்நிலையாலும் குடிபெயர்ந்தனர்.அவர்கள் ஒருவாறாக மேற்படி நாடுகளில் தஞ்சம் பெற்று,தமது கால்களில் நின்ற பிறகு,தனது அண்ணன், தம்பி, மச்சான், நண்பன், நண்பனின் நண்பன், ஊரவன் அதோடு திருமணம் முடித்து மனைவிமார் என்று ஒரு தொகையினரைத் தத்தம் நாடுகளுக்குள் இழுத்துக் கொண்டனர்.அதற்கடுத்த தலைமுறையிலும் அநேகர் கல்வி, தொழில் போன்ற காரணங்களால் குடி பெயர்ந்தனர்.



அங்கு சென்ற அனைவரும்,இங்குள்ளவர்கள் நினைப்பது போல், பஞ்சு மெத்தையில் படுத்து உருண்டு கொண்டு, பணத்தை மரத்தில் புடுங்கி அனுப்புவதில்லை.குளிரிலும், பனியிலும், இரவிலும், பகலிலும், நேரத்துக்கும் உண்டு,குடிக்காமல் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடித்தான் உழைக்கிறார்கள்.(நான் எல்லாரையும் சொல்லவிலை.ஆனால் பொதுவான நிலை இது தான்)பலர் தமது, கல்வியை, காதலை, அன்பு மனைவி, பிள்ளைகளை, வாழ்வின் சந்தோசத்தைத் தொலைத்து, தமது குடும்பம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள சாப்பாட்டுக் கடைகளில்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில்,சூப்பர் மாக்கற்றுகளில் என்று பல வேலைத் தளங்களில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கின்றனர்.





அவர்கள் எனது கல்வி குழம்பியது போல் எனது தம்பியின் கல்வியும் குழம்பக்கூடாது,என்னை விட அவன் ஒரு பெரிய நிலைக்கு வர வேண்டும்,எனது அம்மா,அப்பாவை நான் நல்ல நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும்,எனது தங்கயை நன்றாகப் படிப்பிக்க வேண்டும்,அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்,என் காதலியை எப்போது கரம் பிடிப்பது, எப்போது என் மனைவி பிள்ளைகளைக் காண்பது என்று எத்தனை எத்தனை ஆயிரம் கனவுகளைப் புதைத்து,அதை மனதினுள் புகுத்தி,கண்ணை நெருப்பாக்கி,காயத்தை(உடம்பு) காரியத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்தக் கனவுகளோடு அவர்கள் உழைத்து அனுப்பும் அந்தக் காசு அவர்களின் நோக்கத்தை நிறைவு செய்கின்றதா? அவர்களின் கண்ணீருக்கு, வியர்வைக்கு, உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கிறதா என்றால் பொதுவாகக் கிடைப்பதில்லை என்பதே எனது கணிப்பு.அவர்களது காசு கரியாக்கப்பட்டு,அதன் பெறுமதி குறைத்து மதிப்பிடப்பட்டுத், தூக்கித், தூக்கி வீசப்படுகிறது.



கொழும்பில் குடியிருக்கும் சாதாரண எம்மவர்களால் தனியே தம் சொந்த உழைப்பை நம்பி சீவிப்பது எவ்வளவு கடினமானது என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆனால் நாங்கள் இங்கே அவர்கள் அனுப்பும் காசை அள்ளி வீசுகின்றோம்.மற்றயவர்களால் எங்களுக்காக கஸ்டப்பட்டு அனுப்புகின்றது என்று எந்தவித உணர்வோ,வெட்கமோ இல்லாமல் காசுத் திமிரில் காசை வாரியிறைக்கின்றோம்.உதாரணத்திற்கு ஒரு சின்ன உதாரணம்.ஊர்களில் மாடுகள் சப்பித் துப்புகிற,ஒரு பெறுமதியுமற்ற,பனம்பழங்களின் விலையோ வெள்ளவதையில் நூற்றியைம்பது வரை.கொழும்பின் ஏனைய இடங்களில் 30 ரூபாவுக்கு ஒரு தேங்காய் விற்றால் அதுவே வெள்ளவதையைக் கண்டதும் தன் பெறுமதியை 35.40 வரை அதிகரித்துக் கொண்டு விடும்.இவை மட்டுமல்ல ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்படத்தக்க அளவு விலை அதிகரிப்புக்கள்.அது தேங்காய்,மரக்கறி,சாப்பாடு,உடுப்பிலிருந்து, அடுக்குமாடித் தொடர் வரை எல்லாவற்றிலும் வெள்ளவத்தையில் ஒரு முழம் கூடத் தான்.



இது ஏன்?நாங்கள் கொடுப்பதால் தான் அவர்கள் விற்கிறார்கள்.நாங்கள் கொடுத்த இடத்தால் தான் அவர்கள் மடம் கட்டுகிறார்கள்.அன்று நாங்கள் கொடுத்துக் காட்டியதால் தான் இன்று அவர்கள் கூறும் விலைக்கே நாங்கள் வாங்கவேண்டியிருக்கிறது.அதேநேரம் எங்களைப் போல வெளிநாட்டு வசதியிலில்லாதவனும் இதே வெள்ளவதையில் தான் சீவிக்க வேண்டியிருக்கிறது.அவனது சீவியம் எப்படி கடினமாக இருக்கப் போகிறது என்று நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா?லிற்றில் ஏசியா,ஜெயச்சந்திரன்ஸ்,நோ லிமிற் என எங்கும் உடுப்பு எடுக்க சென்றாலும் நாங்கள் அடித்த விலைக்கே உடுப்பைத் தூக்கிக் கொண்டு வருகிறோம்.விலைகளை வேறு இடங்களுடன் ஒப்பிட்டு அந்த விலை ஏற்புடையது தானா என்று பார்க்கக் கூட எங்க்ளுக்கு நேரமில்லை.அதே தரமுடைய பொருளை புறக்கோட்டை பிரதான வீதியில் சென்று வாங்கினால் கழிவு விலை அடிப்படையில் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யமுடியும் என்று எமக்குத் தோன்றுவதில்லை அல்லது புற்க்கோட்டையில் பொருள் வாங்கினால் எமது கௌரவத்திற்குப் பங்கமேனும் வந்துவிடுமோ என்ற கவலை.



பொருளுக்குரிய பெறுமதியைக் கொடுப்பதைத் தவறென்று கூறமுடியாது.நாம் பொருள் வாங்கும் கடைக்காரனுக்கும் குழந்தை குட்டி என்று இருக்கும்,அவனும் தனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்.அவனும் பாவம் தான்.இல்லையென்று கூறவில்லை.ஏன் அந்த விலை அதிகரிப்பு,அந்த விலை அதிகரிப்பு வரக் காரணம் என்ன?நாங்கள் கொடுத்துக் காட்டியதால் வந்த விளைவு தானது.விற்பவர்களை நாங்கள் பிழை சொல்ல முடியாது.எவனுக்கும் இருந்த இடத்தில் ஒருத்தன் இந்தா பிடி என்று காசை நீடும் போது அதை வாங்கி வைப்பதில் ஒரு கஸ்ரமோ,உறுத்தலோ இருக்கப் போவதில்லை.பனம் பழம் வெள்ளவத்தையில் இல்லை.அது எங்கிருந்தோ வர வேண்டும்.சரி அதற்கான செலவுகளைக் கணித்தால் கூட நூற்றியைம்பது என்பது ஒரு நியாயமான விலையாகத் தோன்றவில்லை.அதே போல தான் ஏனைய பொருட்களுக்கு ஏனிந்த தேவையில்லாத் விலையதிகரிப்பு? வெள்ளவத்தைக்கு அருகிலிருக்கும் தெகிவளையிலோ, பம்பலப்பிட்டியிலோ அதே பொருள் மலிவாக விற்கும் போது வெள்ளவத்தையில் மட்டும் அந்த "உசத்திக்குக்" காரணம் தான் என்ன?(ஆனால் இன்று தெகிவளைக்கும், பம்பலப்பிட்டிக்கும் அதிகளவில் எம்மவர்கள் வரத் தொடங்கியதுள்ளதால் அங்கும் இந்த நிலைமை தொடங்கிவிட்டது வேறு கதை)



இதே ஊதாரித்தனங்கள் ஊர்களில் இல்லை என்று கூறமுடியாது.அங்கும் இதே நிலைமை தான்.சில வேளைகளில் அந்த புலம் பெயர் உறவு தனது தாய்,தந்தையரை அவசர நிலைமகளில் வைத்திய நிலையங்களிற்கு அழைத்துச் செல்லவோ அல்லது தனது அண்ணனோ, தம்பியோ,மச்சானோ ஒடுவதற்காக ஒரு ஈருருளியை(மோட்டார் சைக்க்கிள்) ஐ வாங்கிகொடுத்திருக்கக்கூடும்.இல்லையென்று கூற முடியாது.இன்றைய காலங்களில் அத்தியாவசியமான ஒன்று.ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம்? பக்கத்திலே உள்ள கடைக்குப் போகவும், மாடு பிடிக்க காணிக்குச் செல்லவும், தோட்டத்துக்குச் செல்லவும் மோட்டர் சைக்கிளைப் பாவிக்கின்றோம்(ஊரிலை பெட்டையளுக்கு "சண்" காட்டுறது என்றொரு நன்மையைத் தவிர இங்கெல்லாம் மோட்டர் சைக்கிளில் செல்வதால் பிரயோசனம் இல்லை)


உங்களது உறவு எமக்காக தனது சுய முயற்சியால் உழைது அனுப்பும் காசை எந்த வழியிலும் செலவழிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.அந்த உறவும் தன்னை போல தன் உறவுகளும் இங்கே கஸ்ரப்படக்கூடாது என்று நினைக்கலாம்.கௌவரமாக, நாலு பேர் சொல்லும்படி வாழவேண்டும் என்று விரும்பலாம்.நான் மறுக்கவில்லை.அந்த அவா,ஆசை,ஏக்கம்,எண்ணம் நியாயமானதே.உண்மையானதே.கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பாளி ஒவ்வொருவனிடமும் அந்த வெறி இரத்ததில் கலந்திருக்கும் ஒன்றே.நான் இல்லையென்று வாதிடவில்லை.




ஆனால் அதற்காக அவ்ர்கள் வியர்வை சிந்தி,பனியிலும் குளிரிலும் நடு நடுங்கி உழைத்த காசை ஊதாரித்தனமாக ஊதிதள்ளாது இருப்போம்.தேவைக்கு செலவு செய்வோம்.அந்த உழைப்புக்கு மதிப்புக் கொடுப்போம்.சிந்தப்பட்ட வியர்வைக்கு, இரத்ததிற்குரிய பெறுமதியைக் கொடுப்போம்.அந்தக் காசை,நாங்கள் எங்களால் சுயமாக உழைத்த காசு என்று எண்ணி,எமது சொந்தக் காசை எவ்வாறு செலவழிப்போமா அவ்வாறு செலவழிப்போம்.சந்தோசமாக நாமும் எம் உறவுகளும் வாழ்வோம்.(நான் சொல்லவந்ததை எவரும் ஐஞ்சு சதம்,பத்து சதம் பார்த்து காசையே செலவழிக்காமல்,செத்தாலும் கொண்டு போகமுடியாத காசைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கச் சொல்வதாக எவரும் தப்பபிப்பிராயம் கொண்டால் அத்ற்கு நான் பொறுப்பாளியல்ல.பணத்தின் பெறுமதி உணர்ந்து,தேவையற்ற செலவுகளைக் குறைத்து, உங்கள் மனம் போல் செலவழித்து சந்தோசமாக வாழுங்கள்)

Saturday, June 19, 2010

விடுகதையாய் இந்த வாழ்க்கை...? விடை தருவார் யாரோ...?

விடுகதைக்கான விடைகள் போல விசித்திரமான, பல வினோதமான விடைகளாலும், விடையே தெரியாத பல கேள்விகளாலும், விடை தெரிந்திருந்தும் விளம்பிட முடியாத வினாக்களாலும் நிரம்பிய, சாதாரண, சராசரியான ஈழத்தமிழர் வாழ்க்கைகளின் எனதும் ஒன்று.ஊரிழந்து, உறவிழந்து, சொத்திழந்து, சுகமிழந்து, வாழ்க்கையின் வேரையையே அடியோடு இழந்து காசைத் தேடிப் பேயாய் அலைந்து கொழும்பிலும் கரையொதுங்கிய பலருள் நானும் ஒருவன்.


கொழும்பிலே ஒரு கம்பனியிலே ஓரளவு கொஞ்சம் பெரிய பதவியிலே வேலை செய்து கொண்டிருக்கிறேன்.இலங்கையின் தலைநகரிலே, தமிழர்களின் தலைநகரமான வெள்ளவத்தையிலே என மனைவிக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட தொடரமாடிக் குடிமனை(Fலட்ச்) ஒன்றிலே நானும் எனது சிறிய குடும்பமும் வசித்து வருகின்றோம்.ஒரே ஒரு மகன்.(அதுக்கு மேலை ஏலாது எண்டு நினையாதையுங்கோ,ஒண்டே காணும், கூடப் பெத்தால் தன்ரை வடிவு கெட்டுப் போடிடும் எண்டு மனுசி தான் நிப்பாட்டிப் போட்டாள்)



பெடியன் இந்த முறை ஸ்கொலசிப்(Scholarship - தரம் ஐந்து ஆண்டு மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வைக்கப் படும் ஒரு போட்டிப் பரீட்சை) எடுக்கப் போறான்.கொழும்பிலே உள்ள ஒரு பிரபலமான சகோதர மொழிப் பாடசாலையிலே சகோதர மொழிமூலத்திலே கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றான்.என்ன செய்வது, அன்று தொடக்கம் இன்று வரை மலையகப் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலத்திலே திறமையான, தகுதியான தமிழ் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை இருந்தது, இருக்கின்றது போல கொழும்பிலே தற்போதைய தமிழ்ப் பாடசாலைகளின் நிலை இப்படியாக இருக்கின்றது.



தமிழ் பாடசாலைகளில் கல்வியின் தரம் தறி கெட்டு நிற்கும் போது என் போன்ற வாயைப் பிளந்து கொண்டே திரியும் பெற்றோர்களின் பார்வை சகோதரப் பாடசாலைகளின் பக்கம் தாவுவதை தடுக்க முடியாது தானே.இதெல்லாம் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரிய, பௌதீக வளங்களை வழங்காமல், தமிழ் மாணவர்களை தம் பக்கம் இழுத்து,மறைமுகமாக அவர்கள் மொழியை, கலாசாரத்தை அவர்களிடமிருந்து பிரித்து, அவர்களின் மொழியைப் பிறள்வுறச் செய்து, அவர்களை முதலில் மொழி அடையாளங்களற்றவர்களாக மாற்றிப் ,பின் தம் மொழி அடையாளஸ்தர்களாக மாற்ற முயலும் 23 ம் புலிகேசிகளுக்கு அவர்கள் கழிவறையில், "கழித்துக் கொண்டிருக்கும் போது" கச்சிதமாக் அவர்கள் மூளையில் உதித்த, உதிக்கின்ற ஐடியாக்களின் செயல் வடிவம் தான்.


எனக்கு அவ்வளவாக, அவ்வளவென்ன முழுமையாக விருப்பம் இல்லாத போதும் மனுசியின் நச்சரிப்புத் தாங்காமல் ஏதோ என்ரை பெடியனுக்குத் தமிழ் தெரியாட்டிலும் பரவாயில்லை, தமிழ் தெரிஞ்சும் என்னத்தைக் கிழிக்கப் போறான்?, நாளைக்கு ஏதோ நல்ல இடத்துக்கு வந்திட்டால் அது எனக்குக் காணும் என்ற என்ரை மனுசியின்ரை சுயநலப் போக்கால் சேர்த்திருந்தேன்.என்ரை மனுசியைப் பற்றியும் சொல்லவேணும்.வேலை ஒண்டுக்கும் அவள் போறதில்லை. அந்தளவுக்கு அவள் படிச்சிருக்கவும் இல்லை.என்றாலும் இங்கிலீசிலை கொஞ்சம் பொலிஸ்ட்டாக்(Polished) கதைக்கத் தெரியும்.


என்டாலும் நான் வேலைக்குப் போறது மாதிரி டெயிலி(Daily) பியூட்டி பார்லர்களுக்குப்(Beauty Barler) போய் காசைக் கரியாக்கிறது தான் வேலை.உதில ஐஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லையெண்டது எனக்கு மட்டுமில்லை அவளுக்கும் தெரியும் தான்.நானும் கொஞ்சம் சொல்லிப் பார்க்கிறது தான். எண்டாலும் நான் சீதனம் கொஞ்சம் கூட வாங்கி கட்டினதாலை "ஏன் உது என்றை காசு தானே ... நீ வாயைப் பொத்து.." எண்டு சத்தம் போட வெளிக்கிட்டிடுவள் எண்ட பயத்திலை நானும் ஒரு லிமிற்றுக்குப்(Limit) பிறகு ஒண்டும் பேசுறது, பறையிறது இல்லை.என்னைப் பற்றியும், அதை விட என்ரை பெடியனைப் படிப்புப் பற்றியும் வீட்டுக்கு வாற தன்ரை சினேகிதிமாருக்கு இங்கிலீசிலை விளாசிக் கொண்டிருப்பாள்.அதிலை அப்பிடியொரு ஆனந்தம் அவளுக்கு.


நானும் ஊருக்குப் போய் ஒரு ஐஞ்சாறு(ஐந்து,ஆறு) வரியமாப்(வருடமாக) போட்டுது.அது தான் இந்தமுறை(அது தான் இந்த 2015 ம் ஆண்டிலை)எங்கடை ஊரிலை கோயில் காவடிக்காக போன கிழமை தான் போட்டு வந்தனான்.போகேக்கை பெடியனையும் கூட்டிக் கொண்டு தான் போயிருந்தனான்.என்னதான் அவனுக்கு கொம்பியூட்டை கேமும்(Computer Game)சற்றும்(Chat) அது இதெண்டு ஒரு உயிரே இல்லாத கொம்பியூட்டரோடை வாழ்க்கை போனாலும், அவனுக்கு நாங்களெல்லாம் எப்பிடி வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சு,கூடிக் கூத்தடிச்சு,திண்டு, குடிச்சு, ரசிச்சு, ருசிச்சு வாழ்ந்தனாங்கள் எண்டு காட்டவேண்டியது எங்கள் ஒவ்வொருவரோடையும் கட்டாயக் கடமையும் பொறுப்புமாகும்.



அவர்களுக்கு இதெல்லாம் ஈடு பாட்டை ஏற்படுத்துதோ இல்லையோ அல்லது இடைஞ்சலாக அல்லது பிற்போக்குத் தனமாக அல்லது நேரத்தை விரயம் செய்வதாய் அல்லது அபிவிருத்தியடையாத் ஒரு காட்டுக் கூட்டத்தின் மடை வேலையாய் தெரியுதோ இல்லையோ அது வேறு விடயம்.நாமும் எமது முன்னோர்களும் எப்படியெல்லாம் உண்டு,களித்து,தின்று,திளைத்து வாழ்ந்தார்கள் என்று ஆகக்குறைந்தது காட்டமுயல்வதாவது எங்கள் கடமையாகும்.வங்கக் கடலில் கப்பலில் சென்ற கடாரம் என்ற சோழனாகட்டும்,கலிங்க மாகனை இங்கிருந்து துரத்திய ராஜராஜ சோழனாகட்டும் பக்கத்து வீட்டுக் காரரையெல்லாம் தூக்கி கக்கத்திலே சுருட்டி வைத்த கரிகாலனாகட்டும்.யார் இவர்கள்?இவர்களின் வீர தீரங்கள்,விண்ணையும் தாண்டும் அவர்களின் திறமைகள் என்ன என்று எம் பிள்ளைகளுக்கு ஒப்புவிப்பதாவது எமது கடமையாகும்.அத்தோடு எங்கள் இனசனங்கள், உறவுகள்,ஊர் மரபுகளை எங்கள் இரத்தங்களுக்கு ஊட்டுவது எங்கள் பொறுப்பாகும்.




என்னுடன் சிங்கள் நண்பர்கள் பணிபுரிகின்ற போதும்,நான் சிங்களம் கதைக்க வெளிக்கிட்டால், அதன் விசித்திரத்தைக் கண்டு, அவர்கள் ஆங்கிலத்திலேயே பேச வெளிக்கிட்டிடுவார்கள்.அதனால் எனக்கு மம(நான்),ஒயா(நீ),கரனவா(செய்கின்றேன்),யனவா(போகின்றேன்),கோமத(எப்படி),எக்காய்(ஒன்று) தெக்காய்(இரண்டு) என இலக்கங்கள் அதிலும் Hட்டாய்க்கும், Hத்தாய்க்கும் இடையிலே குழப்பம் எண்டு மிகச் சிறிதளவே சிங்களம் தெரியும்.ஆனால் என் மகனோ சிங்களத்திலேயே படிப்பதால் இந்த வயதிலேயே சிங்களத்தில் புலி.அவனையும் கூட்டிக் கொண்டு விடிய கொழும்பிலையிருந்து வெளிக்கிட்டு மத்தியானம் அளவிலை வவுனியா தாண்டி பஸ்ஸிலை போய்க் கொண்டிருந்தம்.அவன் ஒவ்வொரு இடமும் கடந்து செல்ல்லும் போது சகோதர மொழியிலே மட்டும் எழுதப் பட்டுக்கிடந்த பெயர்களை எனக்கு வாசித்துக் காட்டிக் கொண்டே வந்தான்.



எனக்கு இடங்கள் முன்னர் சென்று பரிச்சயமாகவிருந்தபோதும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் பாதையூடு பயணிப்பதாலும்,இந்தக் கால இடைவெளியில் அவற்றின் தோற்றங்களில் ஏற்பட்ட மாற்றங்களும்,சிதைக்கப்பட்ட சுவடுகள், திரிக்கப்பட்ட வரலாறுகள்,அழிக்கப்பட்டிருந்த அடையாளங்களும் அதன் மேல் எழுப்பப்பட்ட கட்டிடங்களும்,இடங்களை என்னை இலகுவில் அடையாளம் காண்பதில் தடங்கலை ஏற்படுத்தித் தான் இருந்தன.பன்றிக்கெய்தகுளம,மாங்குளம, கனகராயன்குளம,குஞ்சுக் குளம,விளாத்திக் குளம,விளக்கு வைத்தகுளம என்று "ம்" கள் எல்லாம் "ம" க்களுடன் தொக்கி நின்றதை என்னால் உண்ர்ந்து கொள்ள முடிந்ததது.





இதைப் போல் சில அழகிய தமிழ்ப் பெயர்களும் அடியோடு மாற்றப் பட்டிருந்ததையும் என்னால் கேட்கக் கூடியதாகவிருந்தது.திருமுறிகண்டி,முரிநுவரவாகவும் வேறு சில பெயர்கள் வேறு பல விதமாகவும் திரிக்கப் பட்டிருந்தையும் என்னால் என் மகன் வாசித்த்க் காட்டிக் கொண்டிருந்ததிலிருந்து புரிந்து கொள்ளமுடிந்தது.அப்போது வெசாக்(புத்தர் பிறந்து,இறந்து,ஞானம் பெற்ற நாள்) அண்மித்துக் கொண்டிருந்ததால்,வழி நெடுகலும் இருந்த விகாரைகளிலும் வீதிகளின் குறுக்கேயும் ஐந்து வண்ணங்களாலான பௌத்த கொடிகளும் வெளிச்சக் கூடுகளும் பறந்துகொண்டிருந்தன.மாங்குளத்துக்கு கிட்ட போய்க் கொண்டிருந்த போது தன் கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்த அவனின் பள்ளி நண்பியொருத்திக்கு "தங் மம மாங்குளமே யனவா(நான் இப்போது மாங்குளதாலே போய்க் கொண்டிருக்கின்றேன்)" என்று பயணத்தை அவளுக்கு நேரடி விமர்சனம் செய்யத் தொடங்கி விட்டான் என மகன்.



இடையில் பல ஆவனகலாக்கள்(அது தான் சிற்றுண்டிச் சாலை) இருந்த போதும் இவற்றையெல்லாம் கடந்து திருமுறிகண்டியில் இறங்கினோம்.நாங்கள் முன்பு கண்டதைப் போலவே அதே கொட்டிலுக்குள் எழுந்தருளியிருந்தார் பிள்ளையார்.அவ்வளவாக சனத்தையும் கோவிலடியில் காணமுடிந்திருக்கவில்லை.இந்தப் பிள்ளையாரைத் தாண்டிப் போகும் எல்லா வாகனங்களும் நின்று,இறங்கித் தேங்காய் உடைத்துவிட்டுத் தான் செல்லும் என்று இந்தப் பிள்ளையாரின் பெருமையை என் மகனுக்குக் கூறியவாறே நானும் ஒரு தேங்காயை வாங்கி உடைத்தேன்.மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.அங்காலே கிளிநொச்சிப் புத்தர் கியூவிலே(ஃஉஎஉஎ) நிற்கும் தன் பக்தர்களுக்க் அருளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்.அதயெல்லாம் பார்த்துக் கொண்டே(வேறு என்னத்தை செய்ய ஏலும்) கிளிநொச்சி நகரத்தை அடைந்தபோது போர் வீரர்களுக்கான நினைவுத் தூபி ஒன்று எழுப்பப் பட்டிருந்தது.





அதைக் காட்டி என் மகன்,தன் மக்க்ளையே கேடயங்களாக்கி,துன்பங்கள் பலபுரிந்து கொண்டிருந்தவரிடமிருந்து,மக்களை மீட்பதற்காக மனிதாபிமானப் போர் புரிவதற்காக முப்படைகளையும் திரட்டிக் கொண்டுவந்தவர் செய்த வெற்றிப் போரிலே மாண்டுபோன வீரகளுக்காக கட்டப் பட்டது தானே இது என்றான்.அப்படியாக்கப் பட்டுவிட்டதோ வரலாறென்றெண்ணிக் கொண்டே நான் தலையை இடமும் வலமும் ஆட்ட வெளிக்கிடவே என் மகன் மேலும் தொடர்ந்தான்.எங்களது வரலாற்றுப் புத்தகத்திலே நான் படித்திருக்கிறேன்.அதிலை இந்தமுறை கொஞ்சம் கேள்விகளும் ஸ்கொலசிப்புக்கு வரும் எண்டு ரீச்சர் சொன்னவா என்று நீட்டி முடித்தான் என் பொடியன்.



எந்த வரலாற்றை சரியென்று என் மகனுக்கு நான் சொல்லுவது?திரிக்கப்பட்டுத், திணிக்கப்பட்டதை திராணியில்லாமல்,சரியென்று சொல்லி வரலாற்றுப் புத்தகத்தின் வழி வந்ததை வழி மொழிந்து என் மகனை ஸ்கொலசிப் பாஸ் பண்ண வைப்பதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாமல் இருப்பதா இல்லை வழித்து துடைத்து மாற்றப்பட்டு, வந்தேறுகுடிகளாக்கப்பட்டதிலிருந்து வரலாற்றைச் சொல்லி என் கண்ணின் கண்ணைத் திறக்கட்டுமா? நான் யோசிக்கின்றேன்.அது சரியா?இது தவறா?சரியான குழப்பம்.முடிவெடுக்க முடியாதநிலை.நான் மேலும் கீழும் இடமும் வலமும் என நாலா பக்கமும் தலையாட்டி திரித்த வரலாற்றை ஆமோதிக்கின்றேனா இல்லை மறுதலிக்கின்றேனா என்று தெரியாமல் என் மகனை மேலும் குழப்பி விடுகின்றேன்.




அவன் இந்தக் குழப்பத்துக்குரிய தீர்வை தொடர்ந்தும் என்னிடமே எதிர்பார்த்து நிற்கின்றான்.இறுதியில் என் தலை மேலும் கீழும் அசைகின்றது.ஆம் திரிக்கப்பட்டதை சரியென்று சொல்லத் தலைப்படுகின்றேன்.ஏனென்றால் என் மகன் ஸ்கொலசிப் பாஸ் பண்ண வேண்டும் எனற சுயநலம் பிடித்த தமிழன் நான்.என் மகனை தமிழில்,தமிழைப் படிப்பிக்காமல், தமிழுக்கு குரல் கொடுப்பதாய் நடித்துக் கொண்டிருக்கும் பகட்டுத் தமிழன் நான்.தமிழ் கதைக்கவே வெட்கப்படும்,தமிழ் கதைப்பவனையே ஏளனமாகப் பார்க்கும்,எள்ளி நகையாடும் மனைவியை சீதனம் வாங்குவதற்காகக் கட்டி,அவள் சீற பெட்டிப் பாம்பாகப் படுத்துவிட்டு,வெளியே கூட்டங்களிலே பொன்னாடைகளுக்காகவும்,கைதட்டுதல்களுக்காகவும் ஏங்கி எதேதோ பொய் பேசுகின்ற பொய்த் தமிழன் நான்.




என்னைப் போன்றே பலரும் இங்கே நடித்துக் கொண்டிருக்கின்றோம்.உண்மை தெரிந்திருந்தும்,எங்கள் வீறாப்புகளுக்காக, சுயநலங்களுக்காக, துரோகங்களை,துணை போதல்களைத் தவறென்று தெரிந்த பின்பும் தொடர்ந்தும் செய்துவருகின்றோம். என் மகன் என்னைக் கேட்ட கேள்வியைப் போல விடை தெரியாத,விடை தெரிந்தும் விளம்பிடமுடியாத,விதைக்கப் பட்ட,விடுக்கப்பட்ட வினாககள் ஆயிரக்கணக்கில் விரந்து கிடக்கின்றன எங்கள் விடுகதையான வாழ்க்கையில்.இதற்கெல்லாம் விடை தருவார் யாரோ? (என்ன கதை உண்மையெண்டு நம்பி வாசிச்சுக்கொண்டிருக்கிறியளோ?அடி சக்கை.அம்மன் கோயில்ப் புக்கை.நான் ஸ்கொலசிப் எடுத்தே இப்ப ஒரு 10, 12 வருசம் வந்திச்சுதோ தெரியேல்லை.அதுக்குள்ளை நான் கலியாங்க்கட்டி,எனக்குப் பிள்ளை பிறந்து,அவன் இந்த முறை ஸ்கொலசிப் எடுக்கப் போறானாம்.உதெல்லாம் ஒரு கதையெண்டு வாயைப் பிளந்து கொண்டு இருந்துகொண்டு வாசிச்சுக் கொண்டிருக்கியளே?எழும்புங்கோ.போய்ப் பாக்கிற வேலையைப் பாருங்கோ.போங்கோ எல்லாம் கடைஞ்செடுத்த கற்பனைக் கதை தான்.அது தானே எங்களுக்கு அந்தமாதிரி வரும்.அது தான் திரும்பவும் சின்னதொரு Dரை(ட்ர்ய்)