Tuesday, June 29, 2010

இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்

என்னத்தைத் தான் இண்டைக்கு தியேட்டரிலை பெஸ்ற் ஷோ(First Show), நெற்றிலே(இன்டெர்னெட்) பாட்டு, படம், ட்ரெயிலர் பார்க்க முடியுமெண்டாலும் அண்டைக்கு(95 களுக்கு முதல்)ஒரு வசதிகளுமில்லாமல் இருக்கேக்கை பார்த்த படங்கள் மாதிரியோ, அல்லது அதிலிருந்த சந்தோசம் மாதிரியோ வராது கண்டியளோ.அது தான் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.ஊரிலை ஒரு கலியாண வீடு,சாமத்திய வீடு முடிஞ்சால் ஊர் முழுக்க அந்தக் கலியாண வீடோ,சாமத்திய வீடோ நடந்த வீட்டுக்காரரிட்டை, "என்ன கொப்பி வந்திட்டுதோ? எப்ப வரும்? வந்தா எங்களுக்குஞ் சொல்லுங்கோ" எண்டு நச்சரிச்சு நச்சரிச்சே தொலைச்சுப் போடுங்கள்.அதுகளும் படத்துக்கு சொல்லாட்டிலும் ஏதாவது குறைவருமோ எண்டிட்டு ஊர் முழுக்க காட்(Card) குடுக்காத குறையாப் படத்துக்குச் சொல்லுவினம்.

இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும் 5,6 மணிக்கே கோதம்ப மாப் புட்டை(கோதுமை மா) அவிச்சது பாதி,அவிக்காதது மீதியெண்டு அவிச்சுக் கொட்டிப் போட்டு பெண்டுகளும் அவையளோடை பிள்ளையளும் எல்லாரும் நடையைக் கட்டிப்போடுவினம்.ஆம்பிளையளும் அவையளுக்குப் பிறகாலை ஒரு பெட் ஷீற்றை(Bed Sheet)மடிச்சு கமக்கட்டுக்கை வைச்சுக் கொண்டு படையெடுப்பினம்.பேந்தேன் பேசுவான்,படம் போடுற வீடு கலியாண வீடு மாதிரித் தான் மாறிப் போடும்.


சரியெண்டு படம் பார்க்கப் போனால் அண்டைக்கு திருவிழாத் தான். அப்பவெல்லாம் "எஞ்சின்" இலையிருந்து தான் "கறண்ட்" வரும்.எஞ்சினெண்டால் நீங்கள் இப்ப பார்க்கிற ஜப்பானிலையிருந்து வாற "ஜெனறேற்றர்" எண்டெல்லாம் நினைக்காதையுங்கோ."வோட்டர்ப் பம்பையும்" மோட்டரையும் வைச்சு எங்கன்றை ஆக்கள் கண்டு பிடிச்சது.(கஷ்ரங்கள் எங்களைச் சூழ்ந்த போது தான் எங்கன்ரையாக்கள் எத்தினையைக் கண்டு பிடிச்சாங்கள்.வால் கட்டையில அடிக்கிற வெடியிலையிருந்து வானத்திலை பறக்கிற பிளேன் வரைக்கும்)வோட்டர்ப் பம்மின்றை புட்வால்வ் (நீரை கீழிருந்து எடுத்து மேலே தள்ளும் பின்பக்கத்திலுள்ள குழாய்)கலட்டிப் போட்டு அதையும் மோட்டரையும் பலகையிலை வைச்சுத் தறைஞ்சு தான் "மேட் இன் -- "ஜெனரேற்றைச் செய்ஞ்சிருப்பாங்கள் எங்கடையாக்கள்.முதல்லை வோட்டர்ப் பம்மின்றை காபரேற்றருக்கை கொஞ்சம்,கொஞ்சமாப் ரின்னரைப் பனுக்கி பனுக்கி அதை ஸ்டார்ட்(ஸ்டர்ட்)பண்ண வைக்கிறதுக்குள்ளை அதை இழுத்து இழுத்து இழுக்க்கிறவனுக்கு மூச்சுப் போடும்.அது ஸ்டார்ட் எடுத்தாப் போலை கொஞ்ச நேரம் சோக்கிலை(சொcக்) ஓடி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் அந்த Bar(பட்டி)ஐ மோட்டரிலை கொழுவுவாங்கள்.கேட்டால் இல்லையெண்டால் இஞ்சினுக்கு லோட்(லொஅட்) கூடி இஞ்சின் ஸ்டார்ட் எடுக்க மாட்டாதாம் எண்டு விளக்கம் வேறை குடுப்பாங்கள்.சரியெண்டு ஒருமாதிரி இஞ்சின் ஸ்டார்ட் பண்ணினாப் பிறகு T.V யிலை படம் வாறது தான் பெரிய கதை.

எங்கன்ரை ஊரிலை செல்லக்கண்டண்ணை தான் ரீ.வி, டெக் வைச்சு வாடகைக்கு விடுறவர்.ஆள் ரீ.வி, டெக்கை ஓட்டத்துக்கு கொண்டு வந்தால் எங்களை மாதிரி சின்னப் பெடியளையெல்லாம் தொட விட மாட்டார்.நாலைஞ்சு வருசமாக அதைத் தங்கக்கட்டி மாதிரித் தான் வைச்சுப் பாவிச்சுக் கொண்டு வந்தார்.ரீ.வி டெக் வந்த அந்த பெட்டியைத் திறந்து, றெஜிபோமைக் கலட்டி,பொலித்தீன் பாக்குக்குள்ளாலை(Bஅக்)அதை எடுத்து ஒரு ரீப்பொயிலை டெக்கையும் ஒரு மேசையிலை ரீ.வி யையும் வைச்சு அதுக்கு மேலை ஒரு ஒறேஞ் கலரிலை நல்ல ஒரு துணியையும் விரிக்கிறதுக்கிடையிலை "அரக்கடா..இதைக் கவனமாப் பிடி..,ஆ.ஆ ....மெள்ள .. ஆ மெள்ள ஆ.. பாத்து..." எண்டு இஞ்சத்தை எப்.எம் ரேடியோக் காரர் கணக்கா செய்யிறது கால்வாசி,சொல்லுறது முக்கால் வாசி எண்டது கணக்கா மனிசன் ஒரு ரணகளப் படுத்திப் போடும்.ஆனாலும் அந்தக் நாங்கள் காலத்திலை ஆளைப் பார்த்து வாயைப் பிளந்து தான் இருக்கிறம்.செல்லக்கண்டண்ணையின்டை 21 இஞ்சி சொனி(Sony) ரீ.வியின் வலப் பக்க மேல் மூலையில 8 பட்டன் மாதிரி இருக்குது.அதுக்குக் கீழே ஒரு சின்னப் பெட்டிமாதிரி இருக்குது.அதுக்குள்ளை கொஞ்சக் கட்டைகள் கிடக்குது.

ஆள் வந்து, முதலாவது பட்டினை அமத்திப் போட்டு,அதுக்குக் கீழையிருக்கிற சின்னப் பெட்டியின்றை சின்னக் கதவை திறந்து,அதுக்குள்ளை இருக்கிற கட்டையளை ஒவ்வொன்றாச் சுத்தத் தொடங்குவார்.பிறகு கொஞ்சத்தாலை அடுத்த பட்ட்ன் எண்டு ஒரு மாதிரிச் சுத்திக் கொண்டு போகேக்கை திடீரெண்டு கறுப்பும்வெள்ளையும் புள்ளிகள் வந்திடும்.உடனை நாங்களெல்லாம் "ஆ.. படம் வரப் போகுது ..ஐ.." எண்டு ஒரே "கெக்கக்கை பிக்கை" எண்டு கைதட்டிக் கூ அடிச்சுச் சிரிப்பம்.திடீரெண்டு அதுவும் போடும்."பங்கை பார் நீங்கள் கத்தினபடியால தான் ரீவி பிழைப் பட்டுப் போச்சுது.சத்தம் போடாமல் இருங்கோ பார்ப்பம்" எண்டு யாராவது பெரிசுகள் பின்னுக்கு இருந்துகொண்டு அதட்டுங்கள். நாங்களும் அதுகளை எதோ உண்மையெண்டு நம்பி "கப் சிப்" எண்டு சைலென்றாயிடுவம்.செல்லக்கண்டண்ணைக்கும் கோபம் வந்திடும்.செல்லக்கண்டண்ணையும் கோபத்தோடை ரீவிக்கு ரெஸ்ராலை குத்தி குத்தி,முறுக்க,திடீரெண்டு பாத்தால் எல்லாம் கறுப்பாக் கிடக்கும்.நடுவிலை மட்டும் மேலையிருந்து கீழை இரண்டு வெள்ளைக் கோடு மாதிரிப் போகும்.பேந்தென்ன எங்களுக்குத் துள்ளிக்குதிப்புத் தான்.அதுகும் கொஞ்சத்தாலை போடும்."உங்களுக்கு அப்பவும் படிச்சுப் படிச்சுச் சொன்னான்...பாத்தியளே இப்பவும் போட்டுது.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு அதட்டல் பிறகும் வரும்.செல்லக்கண்டண்ணையும் முறுக்கிக் கொண்டே போகும்.திடீரெண்டு பாத்தால் வானவில் மாதிரி கலர் கலரா கோடுகள் மேலையிருந் கீழை வாறமாதிரி இருக்கும்.அப்ப இனிப் படந்தொடங்கப் போகுது எண்டு நாங்கள் எங்கடை எக்ஸ்பீரியன்சிலை சொல்லிப் போடுவம்.நாங்கள் சொன்ன மாதிரித் தான் திடீரெண்டு பாத்தால் மாப்பிளைக்கு அறுகம்புல்லு வைக்கிற சீன் போய்க் கொண்டிருக்கும்.எல்லாரும் உடனை முதல்லையிருந்து விடுங்கோவன் எண்டு செல்லக்கண்டண்ணையைக் கெஞ்ச "ஏன் இதிலையிருந்து பாருங்கோவன்" எண்டு செல்லக்கண்டண்ணையும் பெண்டுகளுக்குப் பஸ் அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொண்டு ரிவைண்ட்(ரெநின்ட்) பண்ண,ஆக்களெல்லாம் படத்திலை பின்னுக்கு ஓடிப் போய்க் கொண்டிருப்பினம். பேந்தென்ன நாங்கள் எங்கடை "கெக்கக்கை பிக்கையைத்"7 தொடங்கிடுவம்.


உந்தத் திருவிழாவுகள் எல்லாம் முடிஞ்சு ஒரு மாதிரி நிறைகுட செற்றோடை இருக்கிற ஒரு பெரிய கப்பல் வாழைப் பழச் சீப்புக்குப் பக்கத்திலை குத்துவிளக்கைப் பாக்காமல் வீடியோவைப் பாத்துக் கொண்டு குத்துவிளக்குக் கொளுத்திற மாப்பிளையின்டை தாய் தேப்பனோடை படம் தொடங்கும்.பின்னாலை பcக்க்ரொஉன்ட் இலை "பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதைத் தொடங்கிவிடு.." எண்டு பாட்டும் பரலலா(பரல்லெல்) போய்க்கொண்டிருக்கும்.

பிறகு மாப்பிளைக்கு அறுகம் பால் வைக்கிறது,அவர் குளிக்கிறது,அவர் வெளிக்கிட்டாப் போலை,பொம்பிளை வெளிக்கிட்டாப்போலை,மணவறை, பந்தி,கால் மாறிப் போறது,ரெஜிஸ்ரேசன் எண்டு ஒவ்வொரு லொக்கேசனுகள், அதுக்கு டெக்கரேசனுகள்,மேக்கப்புகள் எண்டு எல்லாம் மாறும்,பின்னாலை போற பாட்டுகளும்,"மாசி மாசந் தான் கெட்டி மேளதாளந்தான் ..","செம்மீனே செம்மீனே .ஒங்கிட்டை சொன்னேனே..","ஆடியில சேதி சொல்லி ஆவணில சேதிவச்ச மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு தான்..","ராசி தான் கை ராசி தான்...ஒம் மொகமே ராசி தான்..","ஆனந்தம் ஆனந்தம் பாடும்.." எண்டு மாறிக் கொண்டே போகும்.பொம்பிளை தோழியோடை மணவறைக்கு வரேக்கை, "மணமகளே மணமகளே வா .. உன் வலது காலை எடுத்து வைத்து வா " எண்டோ " வாராயோ தோழி.. வாராயோ.. மணப் பந்தல் காண வாறாயோ" எண்டு ள்.ற்.ஈஸ்வரி பாடின பாட்டையோ போட மறக்க மாட்டங்கள்.தாலி கட்டுக்கள்,சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு மாப்பிளை, பொம்பிளையள் கலியாண உடுப்பு மாத்தின பிறகு வாற சீனுகளுக்கு ஏன் " சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னைக் கடிக்குது அடிக்கடி ராத்திரி துடிக்குது .." எண்டு போடுறவங்கள் எண்டு 2,3 வருசம் கழிஞ்சாப் போலை தானே எங்களெக்கெல்லாம் விளங்கிச்சுது.அதை எல்லாம் இதிலை எழுதேலாது தானே.எண்டபடியால் அதை விடுவம்.எல்லாரும் கலியாணவீட்டுப் படத்திலை தாங்கள் எப்ப வருவம் எண்டு வாயைப் பிளந்து பாத்துக் கொண்டிருப்பினம்.வந்தால் காணும் பேந்தேன் பேசுவான் "பங்கை பாரன் நான் நிக்கிறன்.." எண்டு சங்கக் கடையிலை மா வாங்கிறதுக்கு நிக்கிற கியூவிலை(Queue)ஏதோ முதல் இடம் பிடிச்சது கணக்கா துள்ளிக் குதிப்பினம்.படம் பாக்கப் போனால் அண்டைக்கு விசுக்கோத்துக்கள், வடையள், வாழைப்பழங்கள், தேத்தண்ணி எண்டு வயித்துப் பாட்டுக்கும் நல்ல கவனிப்பாத் தான் இருக்கும்.பேந்தென்ன கையை வைச்சால் அம்பிடிற எல்லாத்தையும் அள்ளி ஒரு முழக்கு ஒண்டு முழக்கித் தள்ளவேண்டியதுதானே.


ஒரு மாதிரி கலியாணவீட்டுப் படம் முடிஞ்சால் அடுத்த சோ(Show) தொடங்கும்.வசந்த மாளிகை, கௌரவம், பூவேலி, மின்சாரம் அது சம்சாரம், ஓர் ஊரில ஒரு ராஜகுமாரி,முந்தானை முடிச்சு, பாட்ஷா, அண்ணாமலை,காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், அவள் வருவாளா,ஆசை,மேட்டுக்குடி,சூரிய வம்சம், புன்னகை மன்னன், மூன்றாம் பிறை,பதினாறு வயதினிலே,சலங்கை ஒலி,தர்மா,உளவுத்துறை எண்டு இடையில ஒரு காலகட்டத்திலை வந்த படங்கள் எல்லாம் எங்கடை ஊரிலை சக்கை ஓட்டம் ஒடித் தள்ளிச்சுது.எனக்குத் தெரிஞ்சு நான் வசந்தமாளிகை படத்தை மட்டும் அஞ்சு தரம் பாத்தனான் எண்டால் பின்னைப் பாருங்கோவன்.கலியாண வீட்டுக் கொப்பிக்குப் பிறகு2,3 சினிமாப் படங்களும் போட்டு முடிக்க விடிஞ்சு போகும்.விடிய எங்களை மாதிரி கொஞ்சம் ரீவிக்கு முன்னாலையே அனாதைப் பிணங்களை மாதிரிப் படுத்துக் கிடக்குங்கள்.இப்பிடியெல்லாம் கஸ்ரப்பட்டுப் படம் பாத்ததெல்லாம் அந்தக் காலம்.ஆனால் இண்டைக்கு எங்கடை ஊரிலை கூடுதலாக எல்லா வீடுகளிலும் பெரிய 21 இஞ்சி fலற் ஸ்க்றீன்(fலட் ச்cரேன்)ரீவீயள் கிடக்குது.டெக்குகள்,சிடிக்கள்(CD),டிவிடி பிளேயருகள்(DVD),படக் கொப்பிகள் எல்லாம் இருக்குது.ஆனால் பாக்கிறதுக்கு ஆக்களும் இல்லை.இருக்கிற ஆக்களுக்கு நேரமும் இல்லை.அவர்களுக்கும் பாக்கிற மனநிலையும் இல்லை.அங்கையொண்டு இஞ்சையொண்டு எண்டு எங்கன்ரை இனம் எல்லா இடமும் சிதறி, சந்தோசத்தைத் தொலைச்சுக் கிடக்குது.என்ன தான் கஸ்ரப்பட்டாலும் அந்தக் கால வாழ்க்கையே எவ்வளவோ பரவாயில்லை எண்டதோடை நிம்மதியானதும் சந்தோசமானதும் எண்டு என்ரை மனஞ் சொல்லுது.நீங்கள் என்ன சொல்லுறியள்.


கொப்பி - காணொளி பிரதி - வீடியோ

பேந்தேன் பேசுவான் - பிறகேன் பேசுவான்

தறஞ்சு -அறைதல்

ரின்னர் - பெற்றோல் போன்ற எரி பற்றுக் கூடிய எரிபொருள்

அரக்கடா - விலத்து

மெள்ள - மெல்ல

இஞ்சத்தை - இந்த தேசத்தின்

பங்கை பார் -அங்கை பார்

கப் சிப் அமைதியாயிருத்தல்

கால் மாறிப் போதல் - மாப்பிளை வீட்டுக்கு பொம்பிளை செல்லல்

சங்கக் கடை - நிவாரணம் குடுக்கப்படும் கடை(றடிஒன் ஷொப்)

12 comments:

 1. அருமை! அருமை! உம்மட யாழ்ப்பாணக் கதைக்கு!

  ReplyDelete
 2. கலக்கலாக இருக்கின்றது. இதனை நீங்கள் ஏன் ஈழத்துமுற்றத்திலும் எழுதக்கூடாது.

  ReplyDelete
 3. சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னைக் கடிக்குது அடிக்கடி ராத்திரி துடிக்குது .." எண்டு போடுறவங்கள் எண்டு 2,3 வருசம் கழிஞ்சாப் போலை தானே எங்களெக்கெல்லாம் விளங்கிச்சுது.அதை எல்லாம் இதிலை எழுதேலாது தானே.எண்டபடியால் அதை விடுவம்.//


  ஊர்க் கதையை ஊர் வசனத்திலையே சொல்லியிருக்கிறியள். முந்தி ஒரு காலத்திலை இரண்டு சினிமாப் படம் போட்டால் ஒரு அண்ணையாக்கடை படமும் போட வேண்டும் என்று இருந்திச்சு. நாங்களெல்லாம் அப்ப சின்னப் பொடியள். அடிபாட்டுப் படம் என்றால் சொல்லவே வேணும்? அதெல்லாம் ஒரு காலம் நண்பா.. வாழ்த்துக்கள்.

  ஈழத்து முற்றத்திலை இணைந்து இப்படியான பதிவுகளைத் தந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 4. என்ன பொறுத்தவரை. உலக்த்திலை பிறந்தவன் இப்படியன அனுபவத்தை பெறட்டில். பிறந்தேன்ன செத்தென்ன

  ReplyDelete
 5. சுவையான இனிய நினைவுகள். நான் கலியாண வீட்டுப் படங்களோட பெரும்பாலும் படுத்துடுவன்.
  அப்பிடியான சந்தோசங்கள் இப்பத்தய பொடியளுக்கு கிடைக்கிறேல்ல. இப்ப எல்லா வசதியும் கிடக்குது. சந்தோசம் தான் இல்லை...

  ReplyDelete
 6. நன்றிகள் தங்க முகுந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 7. வந்தியத் தேவன் அண்ணா உங்கள் கருதிடுகைக்கும் வருகைக்கும் நன்றி.உங்கள் ஈழத்தும் உற்றத்துக்கான அழைப்புக்கு நன்றி.எப்படி என் பதிவை அங்கே இடுவது என்று கூறவும்

  ReplyDelete
 8. தமிழ் மதுரம் நன்றி, உங்கள் வருகை, கருதிடுகை, அனுபவப் பதிவுகளுக்கு.உங்கள் ஈழத்து முற்றத்துக்கான அழைப்பை நான் மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன்

  ReplyDelete
 9. //என்ன பொறுத்தவரை. உலக்த்திலை பிறந்தவன் இப்படியன அனுபவத்தை பெறட்டில். பிறந்தேன்ன செத்தென்ன

  நன்றி Ramanc கருத்துக்கும் வருகைக்கும்

  ReplyDelete
 10. ம்ம்ம் மெத்தச் சரி.. பால்குடி...

  ReplyDelete
 11. super,,,,,,,,,,thnxxxx for uuuu to remember golden memories

  ReplyDelete
 12. நன்றி பெயரிலி உங்கள் வருகைக்கு

  ReplyDelete