Saturday, July 2, 2011

யாழ்ப்பாணத்தார்

தலைப்பைப் பார்ததவுடன், இதுவொரு பிரதேசவாதத்தைக் கிளறுகின்ற பதிவு போல தோற்றினாலும், நிச்சயமாக இந்தப் பதிவு அதற்கு எதிர்மாறான திசையிலேயே பயணிக்கப் போகின்றது.இது எங்களிடையே தெரிந்தோ,தெரியாமலோ ஊறிப் போன எங்கள் மன நிலையைப் பற்றிப் பேசப்போகின்ற பதிவு இது.சில வேளைகளில் எமது இந்த பழக்கவழக்கம் சிலவேளைகளில் மற்றவர்களை நோகடிக்கும் என்பது கூட எமக்குத் தெரிவதில்லை அல்லது அல்ல்து அதுபற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை.இன்னும் சொல்லப் போனால்
அந்தளவு ஆழமாக நாம் இதை ஒரு விட்யமாக நினைத்து சிந்திப்பதேயில்லை.இதைப் பற்றியெல்லாம் சொல்லப்போகும் நானும் ஒரு யாழ்ப்பாணத்தவன் தான்.ஏன் இந்தக் கடைசி வரியில் உள்ள 'யாழ்ப்பாணத்தவன்' என்று அழுத்திச் சொல்வது/சொல்லிக்காட்டுவது கூட
அந்த மனநோயின் அறிகுறிதான்.ஆனாலும் நான் அந்த வரியை நான்
எழுதுகின்றேன்.காரணம்,வெளியிலிருந்து ஒருவன் சொல்ல முயன்றால் அதற்கு பலவேறு காரணங்கள் இட்டுக் கட்டப்பட்டு அது வேறு திசைநோக்கித் திருப்பி விடப்படலாம்.ஆனால் இதுவும் அப்பிடித் திருப்பிவிடப்பட மாட்டாதென்றில்லை.ஆனாலும் எழுத வேணும் போல ஒரு நான்கைந்து மாத்ததுக்குப் பிறகு இன்று தான் தோன்றியது.என்னால் எழுதப்பட்ட பதிவுகளிலே மிகவிரைவாக எழுதபபட்டது இந்தப்பதிவு.அதனால் சில கருத்துப்பிழைகள் இருந்தால் அதுபற்றி பின்னர் விவாதிக்கலாம்.


இலங்கையிலே இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திலே உள்ள எட்டுத் தமிழ் மாவட்டங்களான அம்பாறை,கிளிநொச்சி,திருகோணமலை,மட்டக்களப்பு,மன்னார்,
முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,வவுனியா(தமிழ் அகர வரிசைப்படி) மற்றும் அதற்கு வெளியே மத்திய மலைநாடு மற்றும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயும் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றனர். மொழியால் அனைவரும் தமிழர்கள் என்றாலும்அவரவர் வாழும் சூழலுக்கேற்றாற் போல் அவரவர்
பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள்,கலாச்சார கட்டமைப்புக்களில் சிற் சில வேறுபாடுகள் உள்ளன என்பது மறு(றை)க்கப்ப்படமுடியாத உண்மை.அந்த வேறுபாடுகள், மதிக்கப்ப்ட்டு, மற்றவர்களால் மரியாதை கொடுக்கப்பட்டால் எங்கள் அனைவருக்குமிடையே இருக்கும்
பிணைப்பு மேலும் இறுக்கமாகும் என்பது நிதர்சனம்.ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் யாழ்ப்பாணத்தான் தான் எல்லாத்துக்கும் தலைப்பாகை கட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டு பிலால்பழச் சுளையை எடுக்கும் போது "கொளுக்" என்று துள்ளி விழுகின்ற பிலாக் கொட்டையள்" போல துள்ளிக் குதிக்கின்றோம். இது பற்றி என் மனக்கிடக்கைகளை ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள் என்றொரு பதிவில் அலசியுள்ளேன்.


நான் இங்கே கதைக்க விழைவது ஒவ்வொருவரும் அவரவர் மாவட்டங்களை விட்டு, தமிழர் என்ற பரந்த வகையிலே ஒன்று சேர்கின்ற அமைப்புக்களிலே நடக்கின்ற/
நடந்துகொண்டிருக்கின்ற செயல்களையும் பற்றித்தான். இதன் ஆழம் தமிழ்ச்சங்கங்கள், பல்கலை மாணவர் அமைப்புக்கள் தொடக்கம் தமிழ்மக்களின் தற்போதைய ஏகப்பிரதிநிதிகளாக இருந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரை அது நீளலாம்.இந்த சமூக அமைப்புக்களில் தலைமை மற்றும் உறுப்பினர் தெரிவுகளில் எப்போதும் யாழ்ப்பாணத்தவருக்கு, காத்திரமான இடம் இருக்கும்/இருந்து கொண்டிருக்கிறது.திறமை இருக்கலாம் அவர்களிடம் இல்லையென்று நான் சொல்லவில்லை.ஆனால் மற்றவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம் என்று அவர்களிடத்திலே ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது.அப்படி வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நாம் எம்மிலே வளர்த்துக்கொள்ள்ளவேண்டும்.என்றால் நாமும் ஒரு அபிவிருந்தியடைந்த சமூகக் கட்ட்மைப்பாக எம்மை மெருகேற்றிக்கொள்ளலாம்.


இந்தத் தலைப்பாகைக்கட்டுகையைப் பற்றிக் கதைப்பதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு விடயங்களை மட்டும் கதைத்து பதிவை நீட்டி முழக்காமல்
முடிப்பது தான் என் திண்ணம்.முதலாவது யாழ்பல்கலைக் கழகத்தின் பொறியியல்ப்பீடத்தின்
அமைவிடம் பற்றியது.மற்றையது வடமாகாணச் சபையின் அமைவிடம் பற்றியது.
இலங்கையிலே தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு பல்கலைக்கழக்த்திலும் பொறியியல் ப்பீடம் இல்லையென்ற குறையை போக்க மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம்
ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும்
கோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன்
அமைவிடம், கிளிநொச்சியிலா யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.


மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.


இதே போலதொரு இடத்தெரிவு தான், இணைந்த வடக்கு - கிழக்கு துண்டாக்கப்ப்ட்டு, வடமாகண சபை அலுவ்லகம் எங்கே அமைப்பது என்ற குழ்ப்பம் வந்தபோது அரசாங்கத்தினால்,வ்டமாகாணத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்கள்லிருந்தும் சமதூரத்திலிருக்கும் மாங்குளம் தெரிவு செய்யப்பட்டபோது, நிச்சய்மாக உள்ளூர சந்தோசப்பட்ட ஜீவன்களில் நானும் ஒருந்தனாயிருந்திருப்பேன். இதனால் அந்தப்பிரதேசம் சார்ந்து, பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள், பிரதேச அபிவிருத்தி எனப் பல
காரணங்கள் இருந்தன் அந்த சந்தோசத்தின் பின்னால். ஆனால் இப்போது அதே அரசாங்கமே, அதையும் யாழ்ப்பாணத்திலே நுழைக்க முண்டியடிப்பதன்மூலம் எம் பலவீனம் அறிந்து, எமக்கும் அவர்களுக்கும்(அவர்கள் என்று பிரித்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும்.வேறு தெரிவில்லாமல் அந்த சொல்லை பயன்படுத்த வேண்Dஇயிருக்கின்றது) இடையே ஒரு கோடு கீறுவதற்காய்த்தான் இந்த மாகாணசபை அமைவிடத்திப் பயன்படுத்துகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அரசதிணைக்களங்கள், ஆஸ்பத்திரி என்பன மற்றத் த்மிழ் மாவட்டங்களை விட அதிகமாய் இருக்கின்றன.எனவே இவற்றை நாம் அவர்களுக்கு விட்டுத்தருவதில் எந்தவொரு குடியும் முழுகிவிடப்போவதில்லை.எமக்கு சிங்களவர்களளவுக்கு வச்திகள்,வாய்ப்புக்கள் இல்லாத போதும், எம்மிலும் வலிதாய் உள்ள, எம் இரத்தங்களுக்குப் போவதை நாம் தட்டிப் பறிக்ககூடாது.மாறாக நாம் அதற்காய்ப் பாடுபடவேண்டும்.ஏன் நாம் விட்டுக் கொடுக்கவேண்டும்? எம்மில் திறமை இருக்கின்றது?நாம்
பெரும்பான்மையாக இருக்கின்றோம் என்று சிந்தித்தால், எமக்கும் எமக்கு சம உரிமை தரமறுக்கும் சிங்களவர்களிடம் என்ன தவறு அல்லது அவ்ர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? உலகெங்கும் ஏதாவது பெரும்பான்மை சிறுபான்மையை அடக்க
நினைத்ததால்/நினைத்துக்கொண்டிருப்பதால் தான் புரட்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.தொடரவும் போகின்றன.நாம் அதிலிருந்து விடுபட்டு வித்தியாச்மான திசையிலே பயணித்தால் எம்மினத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.இந்த மாகாண இலச்சினையில் உள்ளது போல எல்லோரும் சரிநிகை சமானமாக விட்டுக்கொடுத்து வாழ்தல் நலம் பயக்கும் எமக்கு.

(அபிவிருத்திக்கென வடமாகாணத்தில் ஒதுக்கப்பட்ட நிதிட்யில் பெருமளவு,யாழ்ப்பாண மாவட்டத்துக்கே போய்ச்சேர்ந்ததாக/சேர்க்கப்பட்டதாக அண்மையில் ஒரு பத்திரிகையில் வாசித்ததே என்னுள் அடங்கியிருந்த இந்த விடயத்தை எழுதத் தூண்டியது.மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னியுங்கள் நண்பர்களே.

Friday, April 8, 2011

காவடி

மூத்தவன் சுகமா முகாமிலையிருந்து வந்தால் முதலிப் பேத்தியம்மாளே அவனை உனக்கு காவடி எடுக்க வைக்கிறன், இடையிலை நிக்கிற இளையவன் ஒரு பிரச்சினையுமில்லாமல் இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்தால் இத்திமரத்தாளே எனரை இரண்டாவது பெட்டையினரை மூத்த பெடியன் காவடியெடுக்க, நான் பாற் செம்பு எடுப்பன்,எட்டிலை செவ்வாயிருக்கிற என்ரை கடைசிப் பெட்டைக்கு இந்தச் சம்பந்தமாவது முற்றாகி வந்தால் முள்ளு மிதி போட்டு நான் பாற்செம்பு எடுக்கிறன்,என்றை புருசன் ஆசுப்பத்திரியாலை சுகமா வந்து சேர்ந்தால் எனரை அம்மாளாச்சியே என்றை இரண்டாவது பெடியனை உனக்கு காவடியெடுக்க வைச்சு, அஞ்சு கொத்துப் பானையிலை பொங்கி,ஒரு பெரிய பிலாப்பழமும் வெட்டிப் படைக்கிறன் என்பது போன்ற நேர்த்திகள்( கடவுளை நோக்கி வைக்கப்படும் விண்ணப்பம்) சாதாரண, சராசரியான ஈழத்து தாய்மார்களினால் அவர்களின் இஸ்ட தெய்வங்களிடம் வைக்கப்படுவனவாகும்.நேர்த்தி வைக்கப்பட்ட கோவில்களுக்கு,நேர்த்தி செலுத்த வேண்டிய தினங்களில், காவடியிலோ,பாற்செம்பிலோ, கரகத்திலோ தங்களை வருத்திப் பாலை சுமந்து சென்று அந்தந்தக் கோவில்களின் சுவாமிகளுக்கு அபிசேகத்திற்கு கையளிப்பதால், த்மது பாவங்கள் களையப்பட்டு, நேர்த்திகள் நிறைவேறுகின்றன அல்லது நிறைவேற்றப் படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.பாற்காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி,துலாக் காவடி, செடில் காவடி, ஆனந்தக் காவடி, ஆட்டக் காவடி எனப் பல காவடிகள் உள்ளன.இதிலே ஆனந்தக் காவடி, பால் காவடி என்பன செடில் குத்த இயலாதவர்களாலும் பறவைக் காவடி,தூக்குக்காவடி போன்றவை கடும் நேர்த்திக் காரர்களாலும் எடுக்கப்படுபவையாகும்.செடில் காவடி தான் பெரும்பாலானவர்களால் எடுக்கப்படும், பம்பலான, பார்ப்பதற்கு ரசிக்கக்கூடிய, கண்டு களிக்கக்கூடியதாகவிருக்கும்.அவன் எடுக்கிறான், நான் எடுத்தாலென்ன என திடுதிப்பென ,திடீரென முடிவெடுத்து கோஸ்டியாகக் களமிறங்கக்கூடியதாக இருக்கும்.கடுமையான நேர்த்திகாரர், காவடி எடுக்கிற கோயிலை விளக்கு வைச்ச தினத்திலையிருந்து, மச்சம்,மாமிசம் சாப்பிடாமல் இருந்து, காவடியோ,பாற்செம்போ எடுக்கிற நாளிலை சாப்பிடாமல் விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டு போய், கோயிலை இறக்கினாப் போலை தான் சாப்பிடுவினம்.
காவடி எடுக்கிறதெண்டால் செடில் குத்தினாத்தான் மரியாதை."ஆ.. அவன் ஆயிரதெட்டுச் செடில் குத்தினானாம், கையிலை,நெஞ்சிலை எல்லாம் அலகு குத்தினானான்ம், இத்தினை செடிலை அறுத்தானாம் எண்டதிலை தான் அவன்ரை வீரம்??? தங்கியிருக்குது.செடில் எப்பவும் வந்து வைரவருக்கு முன்னலை வைச்சுத் தான் குத்தப்படும். பறை எல்லாம் சுத்தி நின்று அடித்துக் கொண்டிருக்க அந்த அடியிலேயும், கூடி நிக்கிற சனத்தின்ரை அரோகராக் கோசத்திலேயும் வலி பெரிசாகத் தெரியாது.வைரவருக்கு ஒரு தேங்காயை அடிக்கச்ச சொல்லிப்போட்டு, முதல் வாய்க்குத் தான் அலகு குத்தப்படும்.எண்டால்த்தான், முதுகிலை குத்தேக்கை வலிச்சாலும் ஆளாலை கத்தேலாமல்ப் போடும் கண்டியளோ.பிறகு செடில் எல்லாம் குத்தினாப் போலை அப்பிடியே காவடியைத் தோளிலை ஏத்தாமல் ஒருக்கால் கோவிலை சுத்திவந்திட்டு, பிறகு ஐயர் காவடியை,பாற்செம்பைத் தூக்கி ஏத்திவிட்டாப் பிறகு, அப்பிடியே ஆடிக் கொண்டு வெளிக்கிடவேண்டியத் தானே.ஒவ்வொரு சந்திகள், கோயில்கள் எல்லா இடமும் நிண்டு, ஆடி, கோயிலுக்குப் போய்ச்சேர எப்பிடியும், சாமம் ஆகிப் போடும்.சின்னனிலையெல்லாம் எப்பாடா கோவிலிலை "காவடி நாள்" வரும் எண்டு காத்துக் கிடக்கிறது. காவடி பார்க்கவென்ற பொதுவான காரணத்தை தாண்டி, இன்னுமொரு கொஞ்சம் ஸ்பெசலான காரணமும் உண்டு.ஆண்டு இரண்டு,மூன்று களில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் படிக்கிற புத்தகத்துக்கை வைக்கிறதுக்கு மயிலிறகுகளை இந்தக் காவடிகளிலை ஆட்டையைப் போடலாம் எண்டு தான் உந்தக் காத்திருப்பெல்லாம்.
புத்தகதுக்கை மயிலிறகை வைத்துப் பவுடர் போட்டால் அது குட்டி போடும் எண்டு முந்தி யாரோ இழக்கின கதைய நம்பி பவுடர் எல்லாம் போட்டிருந்திருக்கிறோம்.அதுமட்டுமில்லாமல் அந்த மயிலிறகு உள்ள புத்தகத்தை திறக்கும் போது வானத்தின் கண்ணில் அது பட்டுவிட்டால் குட்டி போடாது எண்டிறது அடுத்த புழுகு.ஆனால் அது குட்டியும் போடயில்லை ஒரு சுட்டியும் போட்வில்லை.

ஆனாலும் வானம் பாத்திடும் எண்டதுக்காகவேண்டி, பக்கத்திலை இருக்கிற நண்பனட்டை என்னட்டையும் மயிலிறகு இருக்குது எண்டதை காட்டாம்ல் இருக்க எப்பிடி முடியும்? மனம் விடாதே.அவனுக்குக் காட்டிறதுக்காக மேசைக்குக் கீழை போய் புத்தகத்தை மேல் பக்கமாய் படக்கென்று திறந்து,நண்பனுக்குக் காட்டி, வானத்துக்குக் காட்டாத கெட்டிக் காரர் நாங்கள் .
நண்பனுக்குத் தான் குடுக்க் மாட்ட்ம்.ஆனால் இந்த மயிலிறகை நண்பிகள் கேட்டால் மட்டும் பல்லையிளித்துக் கொண்டு எடுத்துக் கொடுத்து,செட்டையடித்து பேட்டுக் கோழியை கரக்ற் பண்ண வெளிக்கிடும் சேவலின் புத்தியும் எங்களுக்கு இருந்ததுவும் மயிலிறகின் மெல் ஈர்ப்பு வருவதற்கு அல்லது மயிலிறகை ஆட்டையைப் போட வேண்டியதொரு தேவையை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னுமொரு காரணம்.
ஆனால் மயிலையோ,மயிலிறகையோ காண ஏலாத எங்கள் ஊரில் மயிலிறகை எடுப்பதற்குரிய ஒரே வழி இந்தக் காவடிக்ளின் போது எடுப்பது தான்.ஆனால் காவ்டியில் உள்ள மயிலிறகு முறிந்து விழுந்து,முறிந்த இடத்தில் நான் நின்று, அந்த இடத்தில் என்னைப் போல மயிலிறகு பொறுக்குவதற்கு காத்துக் கொண்டு நிற்கும் என் சகபாடிகளோடு போட்டி போட்டு, அதுக்குள்ளாலையும் எனக்கு மயிலிறகு கிடைக்கிறது என்பது லேசுப் பட்ட காரியமில்லை.ஒரே வழி காவடியிலியிருந்து ஆட்டையைப் போடுறது தான்.அதற்கு பொருத்தமான நேரம், காவடிகள், ஆடுபவர்களின் தோளில் ஏற்றுவதற்கு முதல் ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது எடுப்பது தான்.ஆனாலும் அது ஒண்டும் இழுத்தெடுக்க வராது..வழி? பிளேட்டோடை களத்திலை இறங்கி, சத்தம் போடாமல் மண்டி,மண்டி காவடிக்குப் பக்கத்திலை போய் நிண்டு கொண்டு, அறுக்கிறது மாதிரி வேறை யாருக்கும் தெரியாமல் அறுத்தெடுத்துக் கொண்டு போறது தான் வழி.அப்பிடித் தான் ஒருக்கால் செய்ய வெளிக்கிட்டு, அந்தக் காவடிக்காரர் திரத்த வெளிக்கிட , குண்டியிலை குதிக்கால் அடிபட ஓடினதெல்லாம் பழங்கதை.

காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.


அது மட்டுமில்லாமல் முதுகிலே ஆழமாக குத்தப் படும் செடிலினால் ஏற்படும் வலியையும் கூட மறங்கடிக்கச் செய்யும்.செடில் அறுத்து, குருதி கொட்டினாலும் துடி துடித்துவிடாமல் தடுத்துவிடக் கூடியது. "டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு " என்று அடிக்கும் அடிக்கு ஆடுபவன், செடில் பிடிப்பவன், காவடிக்கு முன் பைலா ஆடுபவன்,காவடி பார்க்க வந்தவன் எனப் பலரையும் ஆட வைக்கும்.அந்தமாதிரியான ஒரு இசைக் கருவி.(உங்களுக்காக அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் என்னிடமிருந்த ஒரு காணொளி.)காவடி போற ரோட்டாலை சனம் வாளிகளிலை தண்ணியள்ளிவைச்சிருக்குங்கள்.அந்தத் தண்ணியை காவடி ஆடுறவனுக்கு ஊத்திறாங்களோ இல்லையோ செடில் பிடிக்கிறவனுக்கும், பைலா ஆடுறபவனுக்கும், சேட்டுக் கழட்டாமல் மாப்பிளை போல வந்து பெண்டுகளுக்கு நல்லபிள்ளை போல நடிக்கிறவனுங்களுக்கும் ஊத்துவாங்கள்.அவங்களைச் சீண்டுவதும் அவங்களுக்கு தண்ணியை ஊத்திப் போட்டு அதைப் பார்த்த சரக்குகள் ஏதாவது ரியாக்சன் குடுக்குதுகளோ எண்டும் ஒரு லுக் விடுவாங்கள்.
காவடியாடுறவங்கள் நேர்த்தி எண்டு சொல்லி எடுத்தாலும், ஆனால் மற்றப் பெடியளுக்கெல்லாம் அது பம்பலாய்ப் போடும்.சரக்குகள் பார்க்குது எண்டால் காவடி ஆடிறவங்கள் நல்லா உன்னி இழுத்து, செடில் அறுக்க வெளிக்கிடுவாங்கள்.சிலவேளையிலை தௌவல் ஒண்டு தான் காவடி எடுத்துது எண்டால், அது பெரிசா இழுத்து ஆட்டாது.ஆனால் செடில் பிடிக்கிறவன் விடமாட்டான்.தான் இழுத்து அறுத்துப்போடுவான்.


இண்டைக்கும் எங்களுக்கெல்லாம் ஏதாவது பாட்டியளுக்குப் போனாலும் அந்தக் காவடிக்கு ஆடிற மாதிரி ஆட்டம் ஒருக்காலெண்டாலும் ஆடாட்டில் ஏதோ பாட்டியிலை ஆடினமாதிரி ஒரு பீலிங் வராதாம் கண்டியளோ.

Monday, April 4, 2011

சைக்கிள்

கொழும்பு மாதிரி பெரிய நகரங்களிலெல்லாம் ஓரளவு வசதியான குடும்பமெண்டால் தேப்பனுக்கொரு கார்,தாய்க்கொண்டு, பெடியனுக்குமொண்டு, பெட்டைக்குமின்னுமொண்டெண்டு ஆளாளுக்கொரு காரை அல்லது சில வேளைகளில் ஒண்டுக்கு மேற்பட்ட கார்களையும் வைச்சிருப்பினம்.அதை மாதிரித்தான் எங்கன்ரை வீடுகளிலும் ஆளாலுக்கொரு வாகனம் வைச்சிருப்பம்.(நாங்களும் வசதியான ஆக்கள் தானே?)


எங்கன்ரை வாகனத்துக்கும் பென்ஸ் கார் மாதிரியெண்டிற அளவிலையில்லாட்டிலும் ஏதோ றோட்டாலை போறவாறாக்களுக்குக் கேக்கிற மாதிரியெண்டாலும் சத்தம் போடிற நல்ல ஹோர்ண்(Horn) இருக்குது, சிக்னல் இருக்குது, கூலிங் சிஸ்ரம் இருக்குது, அக்சிலேற்றர்(Accelator) இருக்குது.என்ன எங்கன்ரை வாகனம் ரீற்ரீற் எண்டதுக்குப் பதிலாக "ட்றீங் ட்றீங்" எண்டு ஹோர்ண் அடிக்கும்.எங்கன்றை வாகனங்களுக்கு ட்றைவர் கையாலேயே சிம்பிளாக சிக்னல் காட்டலாம்.
வருடிச் செல்லும் வசந்தக் காற்று கறண்ட் இல்லாமலே தலையைத் துவட்டிச் செல்லும்.அக்சிலறேசன்(Accelaration) பண்ணிறதெலாம் ட்றைவரின்ரை தனித் திறமையிலை தான் இருக்குது.என்ன நான் சொன்ன, சொல்ல வந்த வாகனமென்னெண்டு விளங்கியிருக்கும்.வேறையென்ன ஈழத்து சராசரி மக்களின் வாழ்வைத் தன் தோளில்(சீற்றில்) சுமந்து,குளிரிலும் பனியிலும் கிடந்து,கல்லுகள்,முள்ளுகளிடம் குத்து வாங்கி, குண்டடிப் பட்டு,ஓடாய்த் தேய்ந்து, உப்புக் கடலுக்குள்ளாலும், உழுத நிலத்துக்குள்ளாலும் மக்களோடு மக்களாக இடம் பெயார்ந்து, மக்களின் அத்தியாவசியப் பொருட்களடங்கிய ட்றங்குப் பெட்டிகளையும் உர பாக்குகளையும் சுமந்து மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குபற்றிய துவிச்சக்கரவண்டி/சைக்கிள் தான் அந்த வாகனம்.


இறக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆசைப்பட்டு ஏறிப் புட்டேன் ஐயோவோடை பைக்கில் என்று எங்கடை பைக்கில் ஏற அந்தக் காலத்திலை(மிகச் சின்ன வயசிலை) யாரும் தயாராக இல்லையென்றாலும் எங்களுக்கு 3ம், 4ம் ஆண்டு பள்ளிக்கூட காலங்களிலெல்லாம் சைக்கிளொண்டு வாங்கி,இறக்கை கட்டிப் பறக்கும் ஆசை மட்டும் மனசுக்குள்ளே பறந்து கொண்டேயிருக்கும்.


ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்.ஸ்கொலஸிப் பாஸ் பண்ணிறமோ இல்லையோ சைக்கிள் மட்டும் எப்பிடியாவது வாங்கித் தருவினம் அல்லது வாங்கித் தரத்தான் வேணும் எண்டது அங்கை எழுதப் படாத விதி.எண்டாலும் சைக்கிள் வாங்கித் தாறம் எண்டு சொன்னால் பெடியன் கொஞ்சம் ஊண்டிப் படிப்பானெண்டது அவையின்றை அங்கலாய்ப்புத் தான்.

ஸ்கொலஸிப்புக்கு படிக்கிறமோ இல்லையோ எப்பாடா ஸ்கொலஸிப் முடியும் எப்பாடா சைக்கிள்ளை இரண்டு கையையும் விட்டிட்டு மைனர் குஞ்சு மாதிரிப் பறக்கலாம் எண்டு கனவுகளுக்கும் நினைப்புகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.ஹெட் லைற்றை(Head Light) எந்த மாதிரியான் ஒரு ஒறேஞ் துணியாலை கட்ட வேணும், Bar க்கு எந்த மாதிரி குஞ்சங்கள் வைத்த சொவெர் போட வேணூம், பின்னுக்கு டைனமோவுக்கு கீழை எப்பிடி இரண்டு சிவத்த சிக்னல் லைற் போட வேணுமெந்த மாதிரியான லுமால கரியல் போட வேணும், எந்த மாதிரியான "ப" ஸ்டண்ட் போட வேணும்,மட்காட் கம்பியிலை எந்த மாதிரியான பந்துக் குஞ்சம் வைக்க வேணும், முன்னுக்கு சொக்கஞ்சோர் (Shock Absorber) எப்பிடி இருக்கோணும், ஹாண்டில் கவர்(Handle Cover) எப்பிடி இருக்கோணும் எண்டு ஒவ்வொரு பர்ட்ச் உம் எப்பிடி இருக்கவேணுமெண்டெல்லாம் றோட்டாலை போய் வாற ஓரளவு பெற்றர்(Better - பரவாயில்லாத) ஆன சைக்கிளையெல்லாம் பார்த்து,அதெல்லாத்தையும் சேர்த்து ஐந்தாம் ஆண்டிலேயே நான் கண்ட ஒரு பெஸ்ற்(Best) ஆன கற்பனைச் சைக்கிள் எனக்கு இன்றும் கண் முன்னே நிற்கின்றது.எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோர் கண்ட,காண்கின்ற கனவு இது.

ஸ்கொலஸிப்பும் பெரிசா இல்லாட்டிலும் ரியூசனுக்குப் போகாமலே ஏதோ மட்டு மட்டாக பாஸ் பண்ணிப் போட்டன்.என் கனவுச் சைக்கிளை வாங்குவதற்குப் பொருளாதார நிலை அந்த நேரம் வீட்டில் இல்லையென்பதே காரணமாகவிருந்தாலும்,"இப்ப நீ சின்னப் பொடியன் தானே ஏன் இப்ப அரைச் சைக்கிள் எடுத்துப் பிறகு முழுச் சைக்கிள் எடுப்பான்.ஒரேயடியாக நீ வளர்ந்தாப் போலை பெரிய சைக்கிளா எடுப்பம்,அதோடை நீ இன்னும் சைக்கிள் ஓடப் பழகயில்லை,பேந்து புதுச் சைக்கிள்ளை பழக வெளிக்கிட்டு போட்டுடைச்சுப் பழுதாக்கிப் போடுவாய்" எண்டும் காரணம் சொன்னாலும் எனக்கு அதில் பூரண உடன் பாடில்லாமல் இருந்தது.

ஒரு பொருளை தாறன் எண்டு சொல்லிப் போட்டு அதை தராமல் விடுகின்ற போது அல்லது அது கிடைக்காமல் விடுகின்ற போது ஏற்படுகின்ற ஏமாற்றம்,இயலாமை, உள்ளக் குமுறல் கொடுமையானது.எல்லாரும் ஏதேதோ விதங்களில் பல்வேறு ஏமாற்றங்களைக்கடந்து வந்திருப்போமாகையால் எனக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றத்தினை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.எனக்கும் அதுவும் அந்தச் சிறிய வயதில் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்றதொரு உணர்வு இருந்தாலும் கூட வீடே சொன்ன "வேறை ஒரு சைக்கிள்ளை ஓடப் பழகீற்றுப் புதுச் சைக்கிள் எடுப்பம் என்ற காரணம் சரியாகப் பட்டதால்" அவர்களுக்குக் கட்டுப் பட்டேன்.

எனது அப்பா வழியால் வந்த மச்சாளின் மச்சான் ஓடிய சைக்கிளொன்றே எனக்கு ஓடிப் பழகக் கிடைத்தது.அதிலை கிடந்த ஒரிஜினல் பெயின்ற்(Paint) எல்லாம் உரிந்து ஏதோ ஒரு சொல்ல முடியாத நிறத்தில் சைக்கிள் இருந்தது.நான் கற்பனை செய்த சைக்கிளுக்கு சரி தலைக்குத்தனமா நான் நினைத்திருந்த பாட்ஸ்(Parts) எல்லாத்தையும் நினைத்தாலும் பூட்டேலாதமாதிரி தலைகுத்துக் கரணமாக இருந்தது அந்த கால்ச் சைக்கிள்.என்ன இது பழகத்தானே ,பழகினாப் போலை கொஞ்ச நாள் செல்ல என்ரை கனவுச் சைக்கிளில் கலக்கலாம் தானேயென்றிட்டு பழகத் தொடங்கினேன்.

எங்கன்டை வீட்டு வளவுக்கை தென்னை,வாழைகளுக்குத் தண்ணீ மாறுறதுக்கெண்டு பெரிய உயரமான வாய்க்காலொண்டு போகுது.அதன் வரம்பு உச்சியிலே சைக்கிளை ஏத்திப் போட்டு,அப்பா இடப்பக்க ஹாண்டிலையும்(Handle) பின் கரியரையும் பிடிச்சுக் கொண்டு என்னை சீற்றீலை இருத்திப் போட்டு,என்னை உழக்கச் சொல்ல, மெல்ல மெல்ல ஆனால் முழு ரவுண்டும்(Round) செயினைச்(Chain) சுத்தாமல் டக்கு டக்கு எண்டு பெடலைத் தட்டிக் கொண்டே மெது மெதுவாக ஓடினேன்.
முதல் மூன்று தரமும் அப்பா கூடப் பிடித்துக் கொண்டு வந்த படியால் ஏதோ ஓடுவன் மாதிரித் தான் கிடந்துது.நாலாம் முறை ஓடத் தொடங்கி கொஞ்சத்தாலை அப்பா முன் ஹாண்டிலில் வைத்திருந்த கையை எடுத்துப் போட்டு கரியரை மட்டும் பிடித்துக் கொண்டு வந்தார்.கை நடுங்கி நடுங்கி ஹான்டில் அங்கேயும் இங்கேயும் ஆடினாலும் ஏதோ ஓடிக் கொண்டிருந்தன் நான்.அவர் பின் கையையும் எடுத்த கையோடை பதறியடித்துக் கொண்டு போய் அங்காலை நிண்ட வாழைக்குள்ளை சைக்கிளை விட்டன்.
இரண்டு வாழைகளுக்கிடையிலை முன் சில்லுப் போய்ச் செருகுப் பட்டதாலை சைக்கிள் அப்பிடியே நிண்டிட்டுது. நான் விழயில்லை.எண்டாலும் அப்பாட்டைச் சொன்னன் இனிக் கையை விடாதையுங்கோ எண்டு.அவரும் "இப்ப சும்மா விட்டுப் பாத்தன் இனி விடேல்லை " எண்டார்.அடுத்த முறையும் வரம்பில ஏறி அப்பா கரியரைப் பிடிக்க மெல்ல மெல்ல ஓடி,இந்த முறையும் சொல்லாமல் கொள்ளாமல் கையை எடுத்துப் போட்டார்.
நானும் வடிவாத் தான் ஓடிக் கொண்டிருந்தனான் போலை, எண்டாலும் பின்னுக்குத் திரும்பி இவர் பிடிக்கிறாரோ இல்லையோ எண்டு பாக்க வெளிக்கிட்டுப் பராதிப் பட்டுக் கொண்டு போய் முதல் முறை விழுந்தாச்சுது.நிலத்திலை கிடந்த சல்லிகள் உரஞ்சி முழங்காலால் இரத்தம் கசிந்தது.தண்ணியாலை கழுவிப் போட்டு அண்டையான் சைக்கிள் ஓட்டம் அதோடை விட்டாச்சுது.பிறகும் ஒவ்வொரு நாளும் அந்த வரம்பின் உச்சியில் ஏறி சறுக்கீஸ் மாதிரி அதாலை சறுக்கிக் கொண்டே விழுந்து எழும்பி அந்தக் கால்ச் சைக்கிளை ஓடப் பழகியாச்சுது.
பிறகேன் பேசுவான் கடைக்குப் போறதெண்டால்,பால் குடுக்க்ப போறதெண்டால்(மாட்டுப் பால்), வாசிக சாலைக்குப் போறதெண்டால் என்ரை குட்டிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு உழக்கித் தள்ளவேண்டியது தான்.
பிறகு அப்பாவின்ரை முழுச் சைக்கிளை எடுத்து அதைக் கெந்திக் கெந்தி, இடைக்குள்ளாலை காலை விடிட்டு, பிறகு பாருக்கு(Bar) மேலாலை காலைப் போட்டு, அதுக்குப் பிறகு சீற்றிலையிருந்து ஓடியெண்டு அதையும் ஓடப் பழகியாச்சுது.அதொண்டும் ஒருநாள் இரண்டு நாளிலை பழகினதில்லை.நாள்க் கணக்கில், மாசக் கணக்கில், எத்தனை விழுந்தெழும்பல்கள்,உரஞ்சல்களுக்குப் பிறகு நடந்தது.
பிறகு ஒரு கை விட்டிட்டு ஓடப் பழகி, இரண்டி கைவிட்டிட்டு, டபிள்,ட்றிபிள்ஸ்(Double,Triple) ஒரு சைக்கிளை ஓடிக்கொண்டு மற்றச் சைக்கிளை பரலலாக இழுத்துக் கொண்ட்டொறதெண்டு கன டெக்னிக்(Technique) எல்லாம் சைக்கிள் ஒடுறதில எக்ஸ்பேட்(Expert) ஆனாப் போல தானா வந்திடும்.பிறகு ஒரு மாதிரி 8ம் ஆண்டு படிக்கேக்கை எனக்கு முழுச் சைக்கிளொண்டு புதுசா எடுத்துத் தந்திச்சினம்.என்ரை கனவுச் சைக்கிள் மாதிரியே இருக்காட்டிலும் பெரும்பாலானவை இருந்தது,மீதியை நான் பொருத்திக் கொண்ட்டு என்கனவுச் சைக்கிளை மிதித்து ஊருக்குள்ளே கலர் காட்ட வெளிக்கிட்டேன்.
செருப்பெண்டால் Bata,Toothpaste என்றால் சிக்னல்,குளிசை என்றால் பனடோல் என்டு ஒவ்வொன்றுக்கும் Trade Mark உள்ளதைப் போல சைக்கிள் என்றால் லுமாலா என்பதும் ஈழவர் வாழ்வில் பிரிக்க முடியாதது.சும்மா சொல்லக் கூடாது வீட்டை இப்பவும் அம்மப்பாவின்ரை சைக்கிள்(பாவனைக் காலம் சரியாகத் தெரியாது 30 க்கு மேலை) அப்பாவின் சைக்கிள்(26 வருசம்) என்ரை சைக்கிள் 12 வருசம் எண்டு, இப்பவும் அந்தச் சைக்கிளெல்லாம் கிண்ணெண்டு கொண்டு தான் நிக்குது.
சைக்கிள் ஓடப் பழகிறதெண்டிறது சும்மா லேசுப் பட்ட காரியமில்லைப் பாருங்கோ.எல்லாராலேயும் பலன்ஸ்(Balance) பண்ணி ஓடேலும் எண்டில்லை.ஆனால் ஓடப் பழகினால் அது நல்லதொரு எக்சர்சைஸ்(Excercise).கீழ்க் கால்,தொடைகள் எல்லாம் இறுகி பார்க்க உடம்பு சும்மா முறிகித் தான் இருக்கும் கண்டியளோ.அது மட்டுமில்லை சைக்கிளிலை நண்பர்கள் 3,4 பேராய் பரலேலாக ஒராளின்டை ஹான்டிலை மற்றாள் பிடித்துக் கொண்டு ரோட்டு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பின்னுக்கு வாற வாகனக் காரன் என்னதான் ஊண்டி ஹோர்ண் அடித்தாலும் கேட்காத மாதிரி(உண்மையிலேயே கேட்கிறதில்லை தான்) போறதுவும்,ஊர்க்கதை உலகக்கதையெல்லாம் ரோட்டுகளிலேயே அளந்து கொண்டு போறதுவும்,பெட்டையளின்டை சைக்கிள் செற்றை முன்னுக்கு விட்டிட்டு அவகளுக்கு ஏதாவது சொட்டைக் கதை,சொறிக்கதை சொல்லிக்கொண்டோறதும் அல்லது பெட்டையள் செற் பின்னுக்கு வந்தால் சைற் குடுக்கிறமாதிரிக் குடுத்திட்டு அவகள் முந்த வெளிக்கிடேக்கை முந்தவிடாமல் இழுத்திழுத்து,வீடு மட்டும் கூட்டிக் கொண்டு போய் விடிறதும் ஒரு தனி சுகம் தான்.
இப்படிச் சென்ற என் நண்பர்கள் சிலர் பின்னால் ஹோர்ண் அடித்தது மாவட்ட நீதி பதி தான் என்பது கூடத் தெரியாமல் சென்றதால் ஒரு நாள் சிறை வாசமும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திய சோகமும் உண்டு. அது மட்டுமல்லாது நானும், எனது தனியார் கல்வி நிறுவன நண்பர்களும் இவ்வாறு பரலல்(Parallel) ஆக சென்று கொண்டிருந்த போதுபின்னால் வந்த நீதி மன்றப் பதிவாளர் ஒருவர் எங்களைத் தனித்தனியே போக அறிவுறுத்திச் சென்றது கண்டு பொங்கியெழுந்த நாங்கள் அவரைத் துரத்திச் சென்று,மறித்து "டேய் மாக்கண்டு நீ யாற்றா எங்களை விலத்திப் போ " எண்டு சொல்லுறதுக்கு எண்டு வீறாப்பாகக் கேட்ட அடுத்த நாள் அந்தாள் ரியூசன் நிர்வாக்கியிடம் எல்லாரையும் காட்டிக் கொடுக்க அனைவரும் பெற்றோருடன் சென்று அவரிடம் மன்னிப்புக் கோரியதுடன் வகுப்பில் அனுமதிக்கப் பட்டமை இன்னுமொரு வரலாறு.உப்புடி கன கதைகள் இருக்குது.என்ன உங்களுக்கும் உப்புடிக் கனவுகள், கற்பனைகள், காயங்கள்,கதைகள் எல்லாம் நடந்திருக்குமெண்டு நினைக்கிறன்.அதுகளையும் கொஞ்சம் சொல்லுங்கோவன்.கேப்பம்.

Friday, March 18, 2011

கப்பலேறிப்போனோம் கசங்கிப்போய் வந்தோம்

பயணங்கள்,சுற்றுலாக்கள்,உலாத்தல்கள் எப்போதும் மனதுக்கு சந்தோசத்தை வரவழைக்கக் கூடியவை.அதிலும் பிரிந்த உறவுகளைக் காணச் செல்வது என்பது இன்னும் ஒருபடி கூடுதல் சந்தோசத்தைத் தரக்கூடியவை தான்.எல்லாவற்றையும் விட போர்,தொழில்,படிப்பு எனப் பல காரணங்களினால் பிரிந்திருந்த/பிரித்துவைக்கப்பட்டிருந்த உறவுகளை,ஊர்ச்சொந்தங்களைக் காணச்செல்லும் போது மனதில் ஏற்படும் கிலேசம் அலாதியானது.அனுபவிக்க சுவையானது.ஆனால் அந்தப் பயணங்களே சோகமாய்முடிகின்ற சோகம் ஈழத்தில் மட்டுமே அரங்கேறமுடியும்.அப்படியானதொரு சோகமான/சுமையான அலைச்சல்ப் பயண அனுபவமொன்று தான் இந்தப்பதிவு.
கொழும்பிலிருந்து 2008/04/06 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பத்து மணி தொடரூந்தில்(ரயில்)பல்கலை நண்பர்கள் பத்துப் பேர் ஒரு படையாய் திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டோம்.மறுநாள் காலை ஏழுமணியளவில், எங்களை தலைநகர் நண்பர்களான சைந்தனும்,பிரதீசனும் வரவேற்றனர்.வந்ததில், பாதி சைந்தனின் வீட்டிலும் மீதி பிரதீசனின் வீட்டிலுமாக தஞ்சம் புகுந்தது.சைந்தன் வீட்டில் என்னுடன் பால்குடி,றமணன்,தனேசன் ஆகியோர் தங்கினர்.சயந்தனின் அம்மாவின் அன்பான உபசரிப்பும்,கனிவான பேச்சும்,சுவையான சாப்பாடும்,நோகடிக்காத நக்கல்களும் ,மற்றும் சைந்தனின் அப்பா,தம்பியின் உதவி,ஒத்தாசைகளும் நன்றாகவே அனைவரையும் கவர்ந்தது.

திங்கட்கிழமை மதியமளவில் யாழ் நோக்கிய கப்பல் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றே நாங்களனைவரும் கோணமலையில் கால்பதித்திருந்தோம்.ஆனால் எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் காங்கேசந்துறையிலுருந்து புறப்பட்ட கிறீன் ஓசன்(Green Ocean) கப்பல் கடற்காற்றுக் காரணமாக காங்கேசந்துறைக்கே திரும்பவும் அனுப்பப்பட்ட சேதி கேட்டுத் தவிடுபொடியானது.நாங்களும் கப்பல் வரும் வரும் என்று எதிர்பார்த்தே களைத்துவிட்டிருந்தோம்.
ஏழு தரம் கப்பல் பயணங்களுக்காக திருகோணமலை சென்றிருந்த போதும் அவ்வளவு பரிச்சயப்பட்டிராத திருகோணமலை நகர் வீதிகளில் நண்பர்களனைவரும் மிதிவண்டியிலும்(சைக்கிள்),ஈருருளியிலும்(மோட்டார்சைக்கிள்),நடையிலுமென நடையளந்தோம்.மாலைப் பொழுதை திருகோணமலைக் கடற்கரையில்(Beach)ஆனந்தமாய்க் கழித்தோம்.அன்றைய பொழுது பெரும்பாலும் பிரயோசனமற்றதாகவே கழிந்திருந்ததனாலும்,அடுத்தநாளும் கப்பல் வருவது உறுதியில்லை என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததனாலும்,அடுத்தநாள்ப் பொழுதை முற்கூடியே திட்டமிட்டிருந்தோம்.
முதல்நாள் போட்ட திட்டத்தின்படி செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு சிறிய ஹையேஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி,கன்னியா வெந்நீர் ஊற்றுக்குச் சென்றோம்.இலங்கைத் தமிழ் மன்னனான இராவணனால் அருகருகே அம்புகளால் துளைக்கப்பட்டு,ஆவி பறக்கும் சூட்டோடுடனொன்றும்,"ஆ.. குளிருது" எனக் கத்தச் சொல்லும் குளிரோடின்னுமொன்றுமென வெவ்வேறு வெப்பநிலைகளயுடைய நீரை அருகருகிலிருக்கும் ஏழு கிணறுகள் கக்குவகைக் கண்ணுற்று அதசயித்தோம்.

போகும் வழியெங்கும்,எம்மண் கபளீகரம் செய்யப்பட்டு,வரலாற்று சின்னங்கள், வரலாறுகள் சிதைக்கப்பட்டு,அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்ட,மாற்றப்பட்ட சோகங்களை,வலிகளை,வேதனைகளை,ரணங்களை,எமது இயலாமைகளையும் கூடவே நெஞ்சில் ஏற்றிக் கொண்டே சென்றிருந்தோம்.திருகோணமலை நெல்சன் திரையரங்கில் தனுசின் "யரடி நீ மோகினி" படத்தின் மதியக் காட்சியினைப் பார்த்தோம்.பின்னேரப் பொழுதுப் வழைமை போலவே பீச்(கடற்கரை),கொத்துரொட்டிக்கடை என கரைந்தது.
அடுத்த நாளும் என்ன செய்வதென்றே தெரியாத நிலை.ஆனாலும் அன்று கப்பல் வருவதற்கு அதிகளவு சாத்தியமுள்ளதாக கொஞ்சம் நம்பிக்கையான செய்தியொன்றினைக் கேள்வியுற்றோம்.ஆனாலும் உறுதி செய்யப் படாததால் அன்று புதன்கிழமை காலையிலே ஈழத்திலே பாடல்பாடப் பெற்ற தலங்களிலொன்றான திருக்கோணேஸ்வரத்துக்கு சென்றோம்.பாவிகளான எங்கள் இனம் வழிபடுவதலானோ என்னவோ கோணைநாதரும் பழைய டச்சுக் கோடை வாசலோடு வெளியே வரமுடியதவாறு அல்லது வெளியே வரவிருப்பமின்றி உள்ளேயே பூட்டப்பட்டுக் கிடந்தார்.எத்தனை தடைகள்,முள்ளுக் கம்பிகளின் உச்சப் பாதுகாப்போடு,உயர் பாதுகாப்பு வலயத்தில் அவர் அமைதியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
அமைதியான சூழலில்,அமைந்திருந்த ஆலயத்தையும்,கோணமலையிலிருந்து கொண்டு மூன்று பக்கம் தரையாலும்,ஒரு பக்கம் கடலாலும் சூழப்பட்டிருந்த திருகோணமலை நகரினதும்,சிறு குன்றுகளினதும் அழகையும்,போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்ப்ட்டு கடலில் மூழ்கினாலும் வெளித்தள்ளிக் கொண்டிருந்த புராதன ஆலயத்தின் சில பகுதிகளையும் கண்ணுற்றவாறே திரும்பிவந்து கொண்டிருந்தபோது, கப்பல் வந்த சந்தோசச் சேதி கேட்டு,திருகோணமலைக் கச்சேரிக்கு(அரசாங்க அதிபர் இல்லம்-இந்திய பாசையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)மூட்டை முடிச்சுகளுடன் ஓடினோம்.

தூக்குத் தராசில் நிறுத்து,எங்களது ஒவ்வொருவரது பொதிகளின் நிறையும் 30 கிலோவைத் தாண்டவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த "ஒன்றுக்கும் உதவாத" பஸ்களில் ஏறினோம்.துணையின்றி நடக்க முடியாத கிழவியென்றாலும் தன்னைவிடப் பெரிய மூட்டை முடிச்சுகளைக் காவிச்செல்லும் ஈழப்பரம்பரையில் வந்த நாங்கள் எல்லாரும் அந்த பஸ்களீன் அரைவாசிக்குமேல் நாங்கள் ஊருக்கு கொண்டு செல்லும் பெட்டி,படுக்கைகள்,தின்பண்டங்கள்,உடுதுணிகள்,ரயர்கள்,துணிகள்,சின்னப்பிள்ளைகளூக்கு விளைய்யாட்டுச் சாமான்கள் என அனைத்தாலும் நிரம்பியிருந்தோம்.

அனைவரும் ஏறியபிறகும் பட்டப்பகலில் நட்டநடு வெயிலில் வேர்க்க,விறுவிறுக்க,கால்கள் கடுகடுக்க பஸ்ஸினுள்ளே நின்றோம்.பின்னர் ஒருவாறாக 2 மணிக்கு புறப்பட்ட பஸ் படையணி சீனக்குடா துறைமுகவாசலை 30 நிமிடத்தில் அடைந்து,மீண்டும் அங்கு காத்திருக்கத் தொடங்கியது.ஒரு 10, கிலோமீற்றருக்கும் குறைவான அந்த பஸ்பயணத்துக்கு, ஆளுக்கு 100 ரூபாவும் ஒவ்வொரு பயணப்பொதிக்கும் மேலதிகமாக 100 ரூபா வீதமும் வாங்கிக் கொள்ளையடித்த உலகமகா கொள்ளைக்கூட்டம் சனத்திடம் காசைப் புடுங்கிச்சென்றது.தமிழில் தரச்சொல்லிக்கேட்டுத் தராவிட்டால்,சிங்களத்தில் மிரட்டுவதாய் இருந்தது அவர்களது உத்தி.

மீண்டும் சீனக்குடாவில் ஒன்று,ஒன்றரை மணிநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உள்ளனுமதிக்கப் பட்டோம்.எதற்கும் வரிசையில் நின்று பழகிய அல்லது வரிசையில் நின்றால் தான் உங்களுக்கு பிச்சையோ அல்லது ஏதுமோ தரமுடியும் என்று பழக்கப்பட்ட/அச்சுறுத்தப்பட்ட எமது சனம் பஸ் நிறுத்தப்பட்டதும் இறங்கி ஓடி வயதுவந்தவர்களையும் தள்ளிவிழுத்தி,பயணப்பொதிகளையும் ஏறி உழக்கிக்கொண்டு வரிசையிலே இடம்பிடிக்க செம்மறி ஆட்டுகூட்டம் போல ஓடியது.வரிசையிலே காய்ந்து கருவாடாகி பைகளையெல்லாம் எடுத்து எறிந்து,கொட்டிச்சிந்தி பயணப்பை சோதனை முடிய,உடற்சோதனை,அதுமுடிய கைத்தொலைபேசிகளைக் கையளிக்க அடுத்த வரிசை(கைத்தொலைபேசிப் பாவனையைக் கப்பலில் அனுமதித்தால் கப்பலின் நடமாட்டங்கள் தரவுகடத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாம் இது)என்று ஒரு பாடாகிப் போய்விட்டது.


தலையில் போட்ட தொப்பி தொடக்கம்,பேர்ஸுக்கையிருந்த நயினாதீவு நாகபூசணியம்மன் படம் வரைக்கும் ஒவ்வொன்றும் அக்குவேறு,ஆணிவேராகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொன்றுக்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கப்பட்டோம்.வீட்டுக்குக் கொண்டு செல்லவென வாங்கிவந்த ஷேவிங்க் ரேஸர்கள்,நெருப்பெட்டியள்,பிளேட்டுக்கள் என்று எங்கள் காசிலே வாங்கப்பட்ட பொருட்களெல்லாம் எல்லாம் எங்கள் கண்முன்னே எங்களைக் கேளாமலே தூக்கியெறியப்பட்டன(ராசாக்கள், ஏன் உங்களை கேக்கோணும்???).என்று இவ்வாறு முதற்கட்டச்சோதனை முடிந்தபின்னர் பஸ்களில் மீண்டும் ஏற்றப்பட்டு,துறைமுகத்தில் இறக்கப்பட்டு,மீண்டும் துறைமுகப் பாதுகாப்புப் படையினரால் அடுத்தகட்டச் சோதனை என்று,இதெல்லாம் முடிந்து கப்பலில் ஏற பின்னேரம் ஐந்தைத் தாண்டியிருந்தது.
அதற்குள்ளும் பஸ்களில் "உது நான் பிடிச்சு வைச்சிருந்த சீற்..நீ என்னெண்டு இருக்கலாம் எண்டு அதுக்குள்ளை குடும்பிபிடிச்சண்டை.எவ்வளவு தான் கஸ்ரம் வந்தாலும் எங்கடை சனம் திருந்த மாட்டுது எண்டது மட்டும் நிச்சயம்.கூடவே வந்திருந்த 400,500 சனமும் சோதனைகளை முடிச்சு கப்பல் வெளிக்கிடத்தொடங்க இரவு ஏழுமணியைத் தாண்டியிருந்தது.திருகோணமலைத் துறைமுகத்தின் இயற்கை அமைப்பையும்,அதன் வனப்பையும்,அதற்குள் அமைந்திருந்த,ஒளிந்திருந்த இயற்கையான பாதுகாப்பையும் பார்த்தபோது தான் ஏன் சர்வதேச,பிராந்திய வல்லூறுகள் அதையே வட்டமிடுகின்றன என்ற இரகசியத்தைப் பரகசியமாக்கியது.

கப்பல் துறைமுகத்தைவிட்டு மெதுவாக நகர்ந்து,பாதுகாப்புக் காரணங்களுக்காக கரையோரமாகச் செல்லாமல்,செங்குத்தாக நேரடியாக சர்வதேசக் கடலெல்லையினூடே பயணித்தது.நானும் அவ்வப்போது சென்ற இடங்களிலெல்லம் சாப்பிட்ட சாப்பாடுகள்,கப்பல் புறப்பட்டு,கப்பல் குலுக்கத் தொடங்கியதும் வயிற்றைக் குமட்டச்செய்தது.நானும் பேசாமல் சத்திக் குளிசைப்போட்டிட்டு சத்தம் போடாமல்ப் படுத்திட்டன்.கடற்காற்றினால் கப்பல் அலைகளால் தூக்கிவீசப்பட்டு,முன்னோக்கி குற்றிக்குற்றி எழும்பிப் போய்க்கொண்டிருந்தது.தண்ணி கப்பலின்றை மூன்றாம் தட்டுவரை எழும்பி அடித்தது.கப்பலில் சனமெல்லாம் மாறிமாறி கப்பலுக்குள்ளும்,வெளியிலும் சத்தியெடுத்துக்கொண்டிருந்தது.சத்தியெடுக்காவிட்டாலும் அந்தக் காட்சிகளைப்பார்த்தால் சத்தி தானாகவே வந்துவிடும்.சின்னப்பிள்ளைகளின்ரை ஓலம் காதைக்கிழித்தது.
கப்பல் அன்று பகல்முழுவதும் ஓடியது.உந்தா கரை தெரியுது.அந்தா கரை தெரியுது என்று யாரையாவது ஏமாற்றி எங்கடை இயலாமைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு பொழுதுபோக்கு எங்களுக்கு இருந்திருக்கவில்லை."கரை தட்டும்",தட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சனமெல்லாம் சோர்ந்தே போய்விட்டது.எங்கடை சனத்திடம் காசைத்த்ட்டிப் பறித்தசாதி,கப்பல் சிற்றுண்டிச்சாலையிலும் தேனீர்,சிற்றுண்டிகளை அகோரவிலைக்குவிற்று மீண்டும் காசை வாரிச்சுருட்டிக்கொண்டது.ஒரு தேத்தண்ணி(அது தேத்தண்ணியே இல்லை.கசாயமோ எந்தக் கண்றாவியோ தெரியாது)40 ரூபாக்கும்,ஒரு நூடில்ஸ் 80 ரூபாக்கும் விற்கப்பட்டது.சனத்துக்கும் இருந்த பசிக் கொடுமையிலை எதையாவது வாங்கிச் சாப்பிடவேண்டும் என்ற அங்கலாய்ப்பிலே அந்த ஒறுத்தவிலையிலும் வாங்கி தின்று குடித்தது.அது ஏற்கனவே வயிற்றுக்குள் இருந்த சாப்பாட்டையும் சத்தியாக கப்பலுக்குள்ளும் கடலுக்குள்ளும் எடுத்துத் தள்ளவைத்தது.
அதற்குள்ளும் அந்தச் சனங்கள்,கொழும்பிலையிருந்து வீட்டுக்குப் போகேக்கை நாலு அப்பிளாவது வாங்கிக் கொண்டு போகாட்டில் அதுகள் என்ன நினைக்குங்கள் என்று கப்பலில் இருந்த கன்ரீனில் அப்பிளின் விலையைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டது.வெளியில் 20 ரூபாவுக்கிருந்த அப்பிள் அங்கு 60 - 100 வரை விற்கப்பட்டது. இப்படி கஸ்ரங்கள் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டிருந்த சனத்துக்கு கப்பல்,காங்கேசந்துறைத் துறைமுகத்தை நெருங்கி நங்கூரம் போட்டதால் பெரிய சந்தோசம்.அங்கும் மேலும் அரைமணித்தியாலக் காத்திருப்பு.எங்கட சனத்தை எவ்வளவு நேரமும் காத்திருக்கவைக்கலாம் தானே.ஏனென்றால் அதுகள் என்ன சொன்னாலும் செய்யிற செம்மறியள் தானே?,அதுகளுக்கு வேறைவேலைவெட்டி இல்லைத்தானே,அதுகளுக்கு நேரத்தின் அருமை தெரியாதுதானே.இந்தச்சனம் அடிமைகள் போல்,ஆட்காட்டி விரலின் அசைவுகளுக்கெல்லாம் ஒத்திசைந்து,மசிந்துகொடுக்க வேண்டும் என்பது அவர்களின் நினைப்பு.நாங்கள் என்ன செய்ய? அந்தக் காத்திருப்புக்குப்பினர், காங்கேசந்துறைமுகத்திலிருந்து வந்த கடற்படைச்சுழியோடிகள் கப்ப்லின்கீழ் சுழியோடிச்சென்று கப்பல்வரும் வழியில் எந்தவொரு வெடிபொருளும் இணைக்கப்படவில்லை என்று கப்பலையும்,சனத்தைக் கப்பலுக்கை வைத்தே மீண்டும் ஒரு சோதனை செய்தபின்னர்,கப்பலைத் துறைமுகத்தினுள் உள்நுழைய அனுமதித்தனர்.
ஆனால் எமது துரதிஸ்டம்,ஒரே ஒருகப்பல் மட்டுமே கரை நெருங்கக்கூடிய காங்கேசந்துறைமுகத்தில் ஒருகப்பல் ஏற்கனவே சாமான் இறக்கிகொண்டிருந்ததால் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டு,வேறு கொள்கலன்களினால் தரையிறக்கப்பட்டோம். யாழ்மண்ணிலே எமது கால்பட ஏறத்தாழ 24 மணித்தியாலங்களை அதாவது ஒருநாளை நாங்கள் கடலிலே,கப்பலிலே செலவழித்தபின்னர், அடுத்தநாள் வியாழன் மாலை ஏழுமணியளவில் கால் பதித்தோம்.ஏற்கனவே 24 மணித்தியாலத்துக்குமேல் சாப்பாடு தண்ணியில்லாமல்,சாப்பிட்டதையும் சத்தியெடுத்து மிகவும் சோர்ந்திருந்த நாங்களே(இளைஞர்கள்)கப்பலிலிருந்த சாமான்களையிறக்கப் பணிக்கப்பட்டோம்.
எதிர்த்தவர்கள் கை ஓங்கப்பட்டு,சீருடைகளால் மௌனிக்கப்பட்டு அடிமைகள் போல் நடத்தப்பட்டனர்.சனமெல்லாம் சீருடையினரால் ஓட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த இலங்கை.போக்குவரத்துக்.சபை பஸ்களிலும் அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகள்,மற்றும் குடாநாட்டுக்கு வந்திருந்த தபால்கள்,மற்றும் சில தனியார் வியாபாரிகளின் பொருட்களும் காங்கேசந்துறைமுகத்துக்கு மா ஏற்றிச் செல்லவந்திருந்த லொறிகளிலும் ஏற்றப்பட்டன.கப்பலில் வந்திருந்த ஸ்கூட்டி பெப்(Scooty Pep) மோட்டார்சைக்கிளை தரையில் நின்றிருந்த லொறிக்கு ஏற்றச்சொல்ல உத்தவிடும் அதிகாரத்தை எங்களிடம் இல்லாத "கருவி" ஒன்று அவனுக்குக் கொடுத்திருந்தது.
ஒருவாறாக எல்லாம் ஏற்றப்பட்டபின்னர்,பஸ்களில் சனம் போக,லொறிகளில் சாமான் பாக்குகள்(Bags) தெல்லிப்பளை வரை பின் தொடர்ந்தன.அங்கும் அடுத்த சோதனை,பதிவுகள்,பாஸ் நடைமுறை,படமெடுப்புக்கள் என எல்லாம் முடிய இரவு 8.30 ஐத் தாண்டியிருந்தது.பின்னர் எங்களின் பொதிகளை எடுக்க லொறிகளுக்குச் சென்றால் 10 கிலோமீற்றருக்குப் பொதிகொண்டு வந்த கூலியாக ஒவ்வொரு பொதிக்கும் 100 ரூபா கேட்டான்கள்."நாங்கள் தான் ஏலாமல் இருந்தாலும் தூக்கி ஏத்தினாங்கள்.பிறகேன் எங்களிட்டையே காசு கேட்கிறியள்?" என்று ஏற்கனவே அலுத்துப் போயிருந்த 3 நாள் திருகோணமலை வாழ்க்கை,ஒருநாள் கப்பல் பயணம்,இந்த அலுப்போடை சாமானைத் தூக்கி ஏத்தவைச்ச ஆத்திரம் எல்லாத்தையும் சேர்த்துக் கேட்டால் "அதைப்பற்றி எங்களட்டைக் கேளாதையுங்கோ.100 ரூபா வந்து லொறியின் கூலி.ஏற்றுகூலியில்லையென்றான்.இந்த வாய்கலப்புக்களின் சத்தம் கேட்டு இரண்டு சோடி சப்பாத்துக்கள் எங்களை நெருங்கிவருவது தெரிகிறது.இப்போது எங்களுக்கு 100 ரூபா பெரிதில்லை.உதுக்குப் போய்க்கதைப்பது புத்திசாலித்தனமில்லை என்பது புரிகிறது.நிசப்தமகியவாறே காசைத் தூக்கி கடுப்போடு தூக்கி எறிஞ்சுபோட்டு பைகளைதூக்கிகொண்டு நடக்கிறோம்.

சரி எவ்வளவு கஸ்ரங்கள்,வேதனைகள்,கட்டுப்பாடுகள்,இருத்தியெழுப்புக்கள் எங்கள் வீடுகளூக்குப்போவதற்கு மட்டும் என்று எங்களையே நொந்துகொண்டு,விரக்தியின் உச்சியில் இன்றைக்காவது எப்பிடியும் வீட்டை போய் சேருறது தான் எண்டு 9 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடத்தில் 9.05 அளவிலே தீர்மானித்து அங்கு எஞ்சிநின்ற அந்தக் "கடைசி" வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தினோம்.அங்கிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீக்கு அப்பால் இருக்கும் எங்கள் பிரதேசத்துக்கு செல்ல நான்,பால்குடி,கருணையூரான்,கௌரி அண்ணா,பிரதாப் அண்ணா,சுரேஸ்,இரண்டு பெண் நண்பிகள் என 15 பேர் என ஒரே ஒரு வயது வந்தவரைத்தவிர எல்லா இளந்தாரிகளும் புறப்பட்டோம்.
நான் தெல்லிப்பளைக்கு வந்து சேர்ந்தவுடனேயே வீட்டே தொலைபேசி நான் வந்திறங்கியதைச்சொல்லியிருந்தபோதும், இன்றே வீட்டே வருகிறேன் என்று சொன்னால் பேச்சு விழும் என்றபடியால் யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்கள் வீட்டிலே தங்கிவருவதாக்வே சொல்லியிருந்தேன்.உண்மையிலேயே யாழ்ப்பாண நகர நண்பர்களான கழுவாவும்(கஜானந்) தனேசனும் தங்கள் வீடுகளில் இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறே கேட்டிருந்தார்கள்.ஆனால் இன்றே எப்பிடியாவது வீட்டே போய்ச்சேர்வது என்று என்று எல்லாரும் முடிவெடுத்து ஒவ்வொரும் புறப்பட்டோம்.
ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் உயிரைக்கையிலே பிடித்துக்கொண்டு,சில இடங்களில் நட்ட நடுவீதியில் சாமான்களைக் கொட்டிக்காட்டி,சில இடங்களில் அடிவாங்கப்பாத்து,பல இடங்களில் "அவர்களிடம்" பேச்சு வாங்கி வீடு போனோம்.அதுவும் ஒரு இடத்தில் அவன் நிறுத்தச் சொல்லியும் இரவிலே சரியாக கவனிக்காததால் நிறுத்தாமல் சென்றதால் பின்னுக்கிருந்து அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியைத்தூக்கி லோட்(Load) பண்ணிக்கொண்டோடிவந்தான்.அப்போது பக்கத்திலிருந்த கருணையூரான் நகைச்சுவையாகவோ அல்லது சீரியசாகவோ சொன்ன "வெடி வைச்சானெண்டால் பின் சீற்றிலை இருக்கிற நானும் நீயும் தான் முதலிலை போவம்" எண்ட அந்த சீரியசான ஜோக்கை நான் செத்தாலும் மறக்கமாட்டன்.அந்த நேரத்தில் அப்படித் தான் நிலமையிருந்தது.
பட்டப் பகலிலேயே பலரும் பாத்திருக்கச் சுடப்பட்டாலே "இனந்தெரியாதவகளால்" விரும்பியோ, விரும்பாமலோ உரிமைகோரும்/உரிமைகோரவைக்கப்படும் மண்ணிலே,ஊரடங்குச் சட்ட நேரத்திலே அதுவும் நிறுத்தச் சொல்ல்வும் நிறுத்தாமல் சென்றால் அந்தச் சூட்டுக்கு காரணத்தைக் கண்டுபிடிப்பது என்பதுவோ அவர்களுக்கு கடினமாய் அமைந்து விடப்போவதில்லை.காரணமில்லாத "எல்லாவற்றுக்கும்" காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றபோது இது ஒன்றும் கடினமல்லவே. நாங்கள் சென்ற வழியிலே அந்தக் "கடைசி" வாகனம் மூன்று இடத்திலே நின்றது.நட்டநடு நிசியினிலே,நாய்கள் குரைக்கையிலே,சுடுகாடு போல எங்கும் சனநடமாட்டமில்லாத, இருட்டுக்குள்ளை பாதையும் தெரியாமல் நாங்கள் அந்தரப்பட்டுப் போய்க்கொண்டிருந்தாலும், போற வழிகளில் எங்கன்றை வாகனம் நிக்கேக்கையெல்லாம் இறங்கித் தள்ளி ஸ்டாட்(Start) பண்ணிப் போகேக்கையெல்லாம் சத்தம் கேட்டு சனம் றோட்டு லைற்றைப் போடுதுகளேயொழிய ஒரு சனமும் ஆபத்துக்கு உதவுவதற்கு வர தயாரில்லை.அந்தளவுக்குப் பயப்படுத்தப்பட்டிருந்ததுகள்.என்ன செய்யிறது எண்டு எங்களது சனத்தின்ற நிலையை நினைச்சு நாங்களே தள்ளி ஸ்டாட் பண்ணிகொண்டு போய் வீடு சேர்ந்தோம்.வீட்டை போய் இறங்க இரவு 12.30 ஆகியிருந்தது.வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டுப் பார்த்தேன்.எவரும் வரவில்லை.Bag ஐத் தூக்கி உள்ளேபோட்டுவிட்டு,மதிலாலை ஏறிக்குதிச்சு உள்ளே போய், உள்கதவு திறப்பு எங்கே வைப்பார்கள் என்பது என்க்கு ஏற்கனவே தெரியும் என்பதால் யன்னலைத் திறந்து, உள் கதவைதிறந்து கொண்டு உள்ளே போய் வீட்டுக்காரையெல்லாம் எழுப்பினேன்.ஒரு சாப்படும் வீட்டையிருக்கவில்லை.அகோரபசி வேறை.அதுக்குப் பிறகு தான் அம்மா புட்டு அவிச்சு தந்தாப்போலை அஞ்சாறு நாள்ச் சாப்பிடாததெல்லாத்தையும் ஒண்டாச் சேத்து ஒரு பிடிபிடிச்சிட்டுப் படுக்க 1.30 ஆகி விட்டிருந்தது.எனது வாழ்க்கையில்லே அந்தப்ப்யணத்தை செத்தாலும் மறக்கமாட்டன்.உதிலே இருக்கிற யாழ்ப்பாணத்துக்கு போக நாங்கள் கொஞ்ச நாள் பட்ட பாடு,படாதபாடு.உலகிலே வேறு எந்தவொரு இனமும் ஈழத்தமிழ்ச்சனம் மாதிரிக் ஒரு விசயத்துக்கும் கஸ்ரப்ப்ட்டிருக்கது.

Friday, February 4, 2011

ஓடுங்கோடா செம்மரியளே...!!!

எஙகளுக்குப் புகழ்ச்சி பிடிக்காது எண்டாலும்,எங்கடை சேர்மார், டிரெகடர்மார்(Director) "செம்மரியளே","மாடுகளே","எருமையளே","நாயளே","பேயளே","பிசாசுகளே" எண்டு எங்களை விளித்துப் புகழாமல் இருக்கமாட்டினம்.மைகிறேசன் விசா(Migration Visa) எடுத்து நிரந்தரமாப் நாட்டை விட்டுப் போறதைப் போலவோ அல்லது ஸ்ருடென்ற்(Student), வேர்க்(Work) விசா எடுத்து ரெம்பரரியாப்(Temporary)போறதைப் போலவோ எங்களை டியூசனுகளாலை கூடுதலா டெம்பரரியாகவும் சிலவேளைகளில் பேர்மனன்ட் ஆகவும் திரத்துவினம்.
இவ்வாறான பல துரத்தப்பட்ட துன்பியல் சந்தர்ப்பங்கள் எங்கடை வாழ்க்கையிலை இருந்தாலும் சயன்ஸ் சென்டர்(Science Center) இல் ஓ/எல் (O/L) வரை படிக்கும் போது திரத்தப்பட்டதில் இரண்டு துரத்தல்கள்,மெகா துரத்தல்கள் தான்.அவற்றில் ஒன்றைத் தான் இன்று பதிவதாய் உத்தேசம்.இது நடந்தது நாங்கள் ஒ/ல் படிச்சுக்கொண்டிருக்கேக்கை.தமிழர் பிரதேசங்களில் ரியூசனுகள் எல்லாம் கூடுதலாக கொட்டிலுகளில் தான் நடாத்தப்படும்.கொட்டில் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்காக,கொட்டிலெனப்படுவது யாதெனில், தகரத்தாலோ,கிடுகாலோ வேயப்பட்ட கூடாரம் என்றாவது இப்போதைக்குப் புரிந்தால் சரி.எங்களது பிரதேசங்களின் போர்ச்சூழல்கள்,அதனால் வந்த பொருளாதார வரட்சி என்பன கொட்டிலுகளுக்குள் தான் எம் கல்வியை முடக்கிவிட்டிருந்தது.ஒரு ரியூசன் எண்டால் இஞ்சை கொழும்பிலை எப்பிடி ரொயிலற்(Toilet) வாசலிலை கிச்சன்(Kitchen) இருக்கிற கொடுமையெல்லாம் இருக்குதோ அதைபோல அங்கை ஒரு கொட்டிலுக்குப் பக்கத்திலை இன்னுமொரு கொட்டில் இருக்கும்.இரண்டு கொட்டிலுக்குமிடையிலை இடைவெளி இரண்டு அடிகூட வராது. ஒரு கொட்டிலிலை வாத்தியார் "இளையான் குடிமாறநாயனாரைப் பற்றி இலக்கியப் பாட்டுப் படிச்சு, பொருள் சொல்லிக் கொண்டிருக்க, இஞ்சாலை மற்றக் கொட்டிலுக்கை இன்னொரு வாத்தியார் மனித இனப் பெருக்கம் பற்றிப் படிச்சுக் கொண்டிருப்பார்.இரண்டு வாத்திமாரும் நல்லா போட்டிபோட்டுக் கொண்டு வாய் கிழியக் கத்திப் படிப்பிச்சுக் கொண்டிருப்பினம்.

கொட்டிலின்ரை கரையிலை இருக்கிற பெடியனுக்கு, ஒரு காதுக்கை இளையான்குடிமாற நாயனாரும் மற்றக் காதுக்குள்ளை இனப்பெருக்கமும் கேக்கும்.கொஞ்ச நேரத்தாலை அவனுக்கு எதைக் கேக்கிறது எண்டு தெரியாமல் இளையான் குடிமாற நாயனாரின்டை பாட்டைக் கேட்டு நான் என்ன பாட்டே எழுதப் போறன்.அதை விட இனப் பெருக்கத்தைக் கேட்டாலும் ஏதோ வாழ்க்கைக்கு கொஞ்சம் பிரியோசனமா இருக்கும் எண்டிட்டு அங்கால்ப் பக்கக் காதை வடிவாத் திறந்து, அங்காலை நடக்கிறதை வடிவா கேட்கத் தொடங்கிடுவான்.அதோடை அங்கால் வகுப்பு பெட்டையளை சைற் அடிச்சுக் கொண்டிருக்கலாம்.சின்னக் கல்லுகள் எடுத்து அவகளின்ரை காலுக்குக் கீழை எறிஞ்சு விளையாடிக் கொண்டிருக்கலாம்.சிலவேளைகளில் சிரிப்பாளுகள்.சிலவேளைகளில் முறைப்பாளுகள்.சிலவேளைகளிலே பேசாத பேச்செல்லாம் பேசுவாகள்.என்ன தான் இருந்தாலும் அந்தப் பேச்சு வாங்கிறதிலையும் ஒரு "இது" இருக்குத் தான்.கரையிலை இருக்கிற அவன் மட்டுமில்லை, வகுப்பிலை இருக்கிற எல்லாரும் உதை தான் செய்து கொண்டிருப்பாங்கள்.உதை மாதிரித் தான் ஏ.எல்(A/L) படிக்கேக்கையும் மற்ஸ்(Maths)காரருக்கு நல்லையா சேர் இஞ்சாலை படிப்பிச்சுக் கொண்டிருக்கேக்கை அங்காலை பக்கத்திலை பயோ(Bio)காறருக்கு தம்பர் சோலொஜி(Zoology) இல்லாட்டில் குணசீலன் பொட்னியோ(Botany) படிப்புச்சுக் கொண்டிருந்தால் மற்ஸ் வகுப்பு அந்த மாதிரித்தான் போகும்.தம்பரட்டை பெட்டையள் குட்டு வாங்கிறதையும்,தம்பர் பெட்டையளின்ரை கொப்பியைத் தூக்கியெறிஞ்சு "ஓடடி என்ரை முகத்திலை முழியாதையடி" எண்டு திரத்திறதையும்,குணசீலன் "நாயே,பேயே, என்னத்துக்கு இஞ்சை வாறனியள்.அம்மா அப்பவின்ரை காசையும் கரியாக்கி,அதுகளையும் பேக்காட்டி,உங்களையும் நீங்களே பேக்காட்டிக் கொண்டு, பேருக்கு பையோ படிக்க எண்டே வாறனியள்?" எண்டு இதை விட இன்னும் காரசாரமாவெல்லாம் பேச்சு விழும்.மற்ஸ் பெடியளுக்கு இஞ்சை நல்லையர் எழுதிற கணக்கு உள்ளை போகாது.(பின்ன என்னெண்டு போகும்).நல்லையா சேரும் பேசுவார்."டேய் உங்கை என்ன பராக்குப் பாக்குறியள்.உங்களையும் உப்பிடி விட்டால் தான் திருந்துவியள்.பேசாமல் கணக்கைச் செய்யுங்கோ பாப்பம்" எண்டு எங்கடை பராக்கை திருப்பிறதுக்காண்டி சிலவேளைகளிலை சில "உண்மைச் சம்பவங்களை" ச்சொல்ல வெளிக்கிடுவார்.ஆனால் பெடியள் கவனிக்கோணுமல்லோ!!!
இனிக் கொட்டிலுகளைப்பாத்தாலும் ஒரு 4,5 பேர் ஒன்றாக இருக்கக்கூடின மாதிரி நீட்டு வாங்கில்கள் மாதிரித்தான் மேசைகள் இருக்கும்.மேசையிலே இடமேதும் மிஞ்சாமல் மேசைமுழுவதும் பேனைகளால்,வட்டாரி,பிரிவாரி கூர்களினால் கிறுக்கப் பட்டிருக்கும்.பெடியள் எல்லாம் கணக்கைத் தான் படிச்சு மேசையிலை எழுதினவங்களாக்கும் எண்டு நினைச்சுப்போடாதையுங்கோ.ஒரு பெடியனையும் இன்னுமொரு பெட்டையையும் கூட்டித் தான் அதிலை எழுதியிருப்பாங்கள்.ஒரு நண்பனின் காதலை அவன் காதலிப்பவளிடம் அல்லது அவளின் தோழிகளுக்கு மறைமுகமாகத் தெரிவிப்பதற்கு அவனது நண்பர்களோ அல்லது சிலவேளைகளில் ஒருவனே தான் இன்னாரைத்தான் காதலிக்கிறேன் என்று தன் நண்பர்களுக்கும் தான் நேசிப்பவளுக்கும் தெரிவிப்பதற்கும் இது ஒரு ஊடகமாகப் பயன்படும்.
அந்தக்காலத்திலையே பேஸ்புக்கும் எஸ்.எம்.எஸ் ஐயும் கண்டுபிடிச்சிருந்தாங்கள் எண்டால் அந்த மேசையள் எல்லாம் உந்தக் குத்துக்கள்,கிறுக்கல்களையட்டையிருந்து தப்பியிருந்திருக்கும்.இணைந்த இதயங்களைத் துளைத்துச் செல்லும் அம்புகளும்,அந்த இதய்ங்களுக்குள் காதலர்களின் முதல் எழுத்துக்களும்,கண்களினூடு இரத்தம் சிந்துவதாக வரையப்பட்ட கிறுக்கல்கலும் கால்ம் கடந்தும் காதல் பேசிக் கொண்டிருக்கும்.காதலர்கள் பிரிந்திருந்தாலும் காலம் காலமாக காதல் செய்துகொண்டிருக்கும்.புதியதலைமுறைக் காதலர்களுக்கு,அந்தக் காதல்களின் ஆழத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும்.
கொட்டிலுக்குக் கீழை செம்மண் புழுதி போட்டு ந்நிரவப்பட்டிருக்கும்.யாராவது செருப்பைக் கழட்டிப் போட்டு, ஏ. கே(A.K)த தனமா(ஆர்வக் கோளாறைத் தான் ஏ. கே எண்டு ஸோட் அன்ட் ஸ்வீற்றாச் சொல்லுறது பாருங்கோ)வகுப்பைக் கவனிச்சுக் கொண்டிருந்தால் பின்னுக்கு இருக்கிறவங்கள் செருப்பை எடுத்து மண்ணுக்கை தாட்டுப் போடுவாங்கள்.வகுப்பு முடிஞ்ச பிறகு அவன் நிண்டு கண்ணிவெடி எடுக்கிற மாதிரித் தான் எல்லா இடமும் கிளறி எடுப்பான்ன். சிலவேளையிலை அதை பெட்டியளின்ரை வாங்கிலுக்குக் கீழையும் தட்டி விடுவாங்கள்.அவனும் பெட்டையள் போகும் மட்டும் பாத்துக் கொண்டிருந்து எடுத்துக் கொண்டு போறதைப் பாக்க பாவமாயும் இருக்கும் பம்பலுமாய் இருக்கும்.அதோடை மண்ணுக்கை இருந்து கால் எல்லாம் உழக்குப் பட்டு,ரியூசன் முடிஞ்சு வீட்டை போகேக்கை சீமெந்து குழைக்கிற வேலை செய்து போட்டுப்போற மாதிரித் தான் கால் எல்லாம் சிவப்படிச்சிருக்கும்.


இப்படியான ஒரு கொட்டிலுக்கை அண்டைக்கு நடக்கவேண்டிய எங்கடை பாடத்து சேர் வரேல்லை.வகுப்பிலை பாடம் நடக்காத சந்தர்ப்பங்களிலை பெடியள் எல்லாம் எழும்பி கொட்டிலுக்குப் பின்னாலை போய் நிண்டு கொண்டுதான் கதைச்சுக் கொண்டு நிப்பம்.பெட்டைய்ள் தங்கடை இடங்களிலை இருந்துகொண்டு தங்களுக்கை கதைச்சுக் கொண்டிருப்பாகள்.நாங்கள் பெடியள் ஒரு 50 - 60 பேர் எண்டபடியாலை ஒரு கொஞ்சம், கொஞ்சமாப் பிரிஞ்சு கூட்டம் கூட்டமா நிண்டு கொண்டு ஒவ்வொருத்தரும் கதைச்சுக் கொண்டு நிண்டனாங்கள்.இப்பிடி நிக்கேக்கை ஒருத்தன்,நிலத்திலையிருந்த மண்ணை கையிலை அள்ளி,கொட்டிலுக்குப் பின்பக்கம் கிடுகாலை கட்டியிருந்த மறைப்பை விலத்திப் போட்டு,பெட்டையளுக்கை எறிஞ்சு போட்டான்.உண்மையிலேயே தனியே ஆண்கள் பாடசாலைகளிலே படிச்சதாலோ என்னவோ தெரியாது, எங்களுக்கெல்லாம் அந்த வயதுகளில் எங்கள் மனங் கவர்ந்தவர்களைத் தவிர மற்றப் பெண்களெல்லாம் ஒரு விரோதிகள் போலவே தெரிந்தார்கள்.கத்திறது,கூவடிக்கிறது,பேசக்கூடாததெல்லாம் பேசிறது.பட்டம் பழிக்கிறது,இப்படி மண் எறியிறது,பேனையாலை எறியிறது,றொக்கற் அடிக்கிறது,பக்கத்திலை வட இந்துப் மகளிர் கல்லூரியிலை நெற்போல்(Net Ball) விளையாடிக்கொண்டு நிக்கிற பெட்டையளுக்கு சின்னக் கல்லுகளாலை எறியிறது எண்டு எங்கள் வக்கிரங்கள் வன்முறைகளாக வெளிவந்து கொண்டிருந்தது.(இப்பவெல்லாம் அப்பிடியில்லை.நல்ல பெடியள் தான். அட நம்புங்கோப்பா...!!!)அவன் எறிஞ்சவுடன்,அவகளுக்கும் எங்களை மாதிரி பெடியங்களைக் கண்டால் பேயைக் காணிறது மாதிரிக் கிடக்குறதாக்கும், போய் எங்கடை டிரக்டர் அமாவாசையட்டைச் சொல்லிப்போட்டாகள்.சிங்கம் சத்தம் போடாமல் வந்திருக்குது.இந்த விசயம் ஒண்டும் தெரியாமல்,நாங்கள் கொஞ்சப்பேர் செற்றாகிக் கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்.அதுவும் அந்த எறி விழுந்த இடத்துக்குப் பக்கத்திலை அப்பிடியொரு எறியே விழுந்ததே தெரியாமல்.அமாவாசை வந்தவுடனை ,எறிஞ்சவங்கள் உட்பட, அமாவாசையைக் கண்ட பெடியள் எல்லாம் ஓடித் தப்பீற்றாங்கள்.நாங்கள் தான் அம்பிட்டம்.அமாவாசை பேச்செண்டால் பேச்சு.சொல்லி வேலை இல்லை.ஓடுங்கோ செம்மரியளே இலை தொடங்கிப் பேச்செண்டால் அப்பா.தாங்கேலாது.ஆனால் அதிலை ஒரு துளியும் தூசணம் இல்லை.சத்திய்மாய் சொல்லுறன் மருந்துக்கும் இல்லை.ஆனால் தூசணத்தை விட கர்ண கொடூரமான வார்த்தைகள்.அதைக் கேட்டு அதன் அர்த்தம் புரிகின்ற போதுதான் இந்தத் தூசணத்தைப்பேசிறதை விட இது எவ்வளவு பெபோமன்ஸ்(Performance),பவர்(Power) கூடினது எண்டது தெரியவரும்.எல்லாரையும் கொட்டிலாலை திரத்திக் கொண்டு போய் ரோட்டிலை விட்டாச்சுது.எறிஞ்சது ஆரெண்டு சொல்லுங்கோ.இல்லாட்டில் எல்லாரும் ஒத்தபடி போய் கொம்மா கொப்பாவோடை வாங்கோ.இல்லையெண்டால் வரவேண்டாம் எண்டாச்சுது.எங்கடை பெடியளட்டை அண்டைக்கும்,இண்டைக்கும்,எண்டைக்கும் இருக்கிற ஒரு நல்ல விசயம் என்னெண்டால் என்னதான் குறளி வேலை பாத்தாலும்,அதைச் செய்ஞ்ச குறளி யார் எண்டு தெரிஞ்சாலும் ஒருத்தரையும் எவர் வந்து கேட்டாலும் காட்டிக் குடுக்கமாட்டம்.அப்பிடியான எங்களட்டை அமாவாசை கேட்டால் மட்டும் சொல்லி போடுவமே. என்ன? அமாவாசை உறுக்கிப் பாத்தார்.ஒருத்தனும் மருந்துக்கும் வாய் திறக்கேல்லை. ஒருத்தனும் மசியிறான் இல்லையெண்டவுடனை ஓடுங்கோடா செம்மரியளே எண்டார்..


எங்களுக்கென்ன நாங்கள் பாட்ச்(Batch) முழுவதும் ஒன்றாய், ஒற்றுமையாய் ரோட்டிலை சந்தோசமா நிண்டம்.அடுத்தடுத்த நாளும் வீட்டையிருந்து ரியூசனுக்கு போற மாதிரி வெளிக்கிட்டுப் போய் ரோட் டியூட்டி(Road Duty) பாத்திட்டுப் போறது.அந்தப் பாதையாலை போய் வாற யாராவது பெடியளின்டை தாய் தேப்பன்,இன சனம்,ஆரும் தெரிஞ்சாக்கள் கண்டால், அவனுக்கு வீட்டை தோலுரிப்ப்த் தான்.இல்லையெண்டால் ஒரு பிரச்சினையுமில்லை.


ரோட்டிலையும் எவ்வள்வு நேரம் தான் சும்மா நிக்கிறது.அதுவும்
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியது. கவரேஜ் கூடின இடமது.எங்களை விட 2 வயசு கூடின அக்கா அவா.அவவுக்குப் பட்டம் "சிங்குச்சா".அப்பிடிக் கூப்பிட்டால் அவவுக்குப் பிடிக்காது எண்டு எங்களுக்குத் தெரியும்.உப்பிடியெண்டு விசயம் தெரிஞ்சால் கட்டாயம் அப்பிடித் தானே கூப்பிடவேணும்.அது தானே முறை,நாங்கள் தான் இப்பிடிக் கோணங்கித் தனமான பழ்க்கவழக்கங்களைப் பழகி வைச்சிருக்கிறம் அல்லோ?கத்தினம்,போனவள் திரும்பி வந்தாள்.தொடங்கினாள்.பிளடி பூல்(Bloody fool),இடியட்(Idiot),நொன் சென்ஸ் (Non Sense)எண்டு,இண்டைக்கு கொழும்பிலை நாங்கள் இன்று கேட்கிற பேச்செல்லாத்தையும் நாங்கள் அண்டைகே வாங்கிப்போட்டம்.


அதெல்லாம் முடிய எங்கடை பாட்சி(Batch) இல் தங்கச்சி மாரை வைச்சிருந்த,ஒரு சில அக்காமரும்(எப்பிடியோ அது அவையின்ரை கடமை தானே அது) எங்கள் மேல ந்ல்லபிப்பிராயம் வைத்திருந்த ஒரு சில நண்பிகளும் அமாவாசைக்கு ஐஸ் வைச்சு எங்களை உள்ளுக்கு எடுத்திச்சினம்.ஒரு 4,5 நாள் ரோட்டு வாசத்தை விட ரியூசன் வாசத்துக்கு உட்புகுந்தோம்.அப்பிடியே எங்கள் கலைக்கப்பட்ட படலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நேரம் வந்தால் கலைக்கப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பற்றிப் பதிவிடுகின்றேன்


அம்பிட்டம் - அகப்பட்டோம்
குறளி - நசுக்கிடாமல்/சத்தம் போடாமல் படு பொல்லாத ஆப்படிக்கிற வேலைகளைப் பார்க்கிற ஆக்களைச் சொல்லுறது. இது போன்றவற்றைத் தான் இந்தியாவில் மொள்ளமாரி,முடிச்சவுக்கி என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தவும்

அண்டைக்கு - அன்று

மசியிறது - மசிந்து கொடுக்கவில்லை என்றால் அவர்களின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கவில்லை என்று பொருள்படும்

பராக்கு - தன்னையே மறந்து வாய் பார்த்துக்கொண்டு நிற்றல்
தோலுரிப்பு - தோலுரிப்பு என்றால் ஊருக்கு நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய முகத்திரையக் கிழித்தல் என்று சொல்லலாம்.ஆனால் இங்கு சொல்லவந்த அர்த்தம் அதுவல்ல.இன்று உனக்கு வீட்டே தோலுரிப்பு என்றால்,இன்று உனக்கு வீட்டை நல்ல அடி/சாத்து விழப் போகுது என்று அர்த்தம்.

Saturday, January 8, 2011

23ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டமும் குமிழ்த் தலைமைகளும்

(கற்பனைக்காகவே எழுதப்பட்ட இந்தக்கதையிலே வரும் பெயர்களையோ, இடங்களையோ,சம்பவங்களையோ வேறுயாருடனுமோ அல்லது இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ பொருத்தி நீங்களே செய்தி கொள்ளும் சுய கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல.இந்தக் கதையை கதையாகவே எடுத்துக் கொள்ள்வீர்கள் என்று பதிவரால் திடமாக நம்பப்படுகிறது)


வில்லங்கை என்ற பெயருடன் விசாலமான அந்த நகரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அமைந்திருக்கின்றது இந்தக் கதையில் வருகின்ற கம்பனியும்.இதற்கருகில் விந்தியா,போக்கிஸ்தான்,வீனா,பஸ்யா,சுமெரிக்கா என மல்ற்றிநாஸனல் கம்பனிகளும்(Multi National - பல்தேசியக் கம்பனிகள்) உள்ளன.ஓரளவு சிறிய இந்தக் கம்பனியில்(மற்றக் கம்பனிகளுடன் ஒப்பிடும் போது) அண்ணளவாக 10,000 பேர் வரை வேலை செய்கின்றார்கள். அந்த நிறுவனம் திமிங்கிலம்,குமிழ்,வசலீன்,முறங்கி என நான்கு திணைக்களங்களாக(Departments) பிரிக்கப்பட்டுள்ளது.திமிங்கிலத் திணைக்களத்தில் ஒரு அண்ணளவாக 7000 பேரும்,ஏனைய திணைக்களங்களில் சராசரியாக ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர்.
கம்பனிக்காணியின் வடக்கு,கிழக்கு பகுதியில் குமிழ்,வசலீன் திணைக்களங்களும் மிகுதியில் பெரும்பாலான இடங்களில் தனித் திமிங்கிலத் திணைக்களப் பகுதியும் திமிங்கிலத்தோடு சேர்ந்ததாகவே முறங்கித் திணைக்களத்தின் அலுவலக சொத்துக்களும் காணப்படுகின்றன.அந்தந்த திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் நிறுத்துவதற்காக அந்தந்தத் திணைக்களங்களுக்கு அருகிலேயே அவரவர் திணைக்களங்களுக்குப் பிரத்தியேகமாக வாகனத் தரிப்பிடங்களும் அதற்கு மேலதிகமாக எரிபொருள் நிரப்புநிலையங்களும் காணப்படுகின்றன.சில வீடுகளுக்கு "கோகுலம்","தாருஸ்லாம்,"தாஜ்மகால் என்று பெயர் இருப்பது போல,இந்த வாகனத் தரிப்பிடங்களுக்கும்,"கிரிகோணமலை", "குழம்பு","சுலுவில்" என்று பெயர் கூட இட்டிருந்தார்கள்.கிரிகோணமலை வாகனத் தரிப்பிடம்/எரிபொருள் நிரப்புநிலையம், குமிழ் திணைக்களத்திற்கருகிலும்,"சுலுவில்",வசலீன் திணைக்களத்திற்கருகிலும்,"குழம்பு" திமிங்கிலத் திணைக்களத்திற்கருகிலும் முறையே அமைந்திருந்தன.இதிலே கிரிகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையம் சுற்றியும் மேலேயும் மூடப்பட்டு ஒரே ஒரு வாசலைக் கொண்டு இயற்கையாகவே ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.அதனுள்ளேயிருந்து கொண்டு யார் யார் எங்கெங்கு வருகிறார்கள் போகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாமலே கண்காணித்துக் கொண்டிருக்கமுடியும்.இயற்கையாகவே அமைந்த வாகனத் தரிப்பிடமாக்கப்பட்ட குகை அது.அதற்குள்ளே இருந்து மறைந்திருந்து கொண்டு யார் யார் துறை சார் ஆலோசகர்கள்(Consultants),வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்(Clients)சக போட்டிக் கம்பனிகளுக்கு வந்து போகிறார்கள் என்பதையும் அந்தக் கம்பனிகளுக்கும் அந்த ஆலோசகர்கள்,வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலே நோட்டம் விடக்கூடிய இடம் என்பதால் தான் விந்தியா,வீனா,சுமேரிக்கா,பசியா போன்ற பல்தேசியக் கம்பனிகளும் தங்கள் வாகனங்களையும் கிரிகோணமலையில் தரிக்க அனுமதிக்குமாறோ அல்லது எரிபொருள் நிரப்புகிற சாக்கிலாவது சிறு சிறு நோட்டங்களைவிடலாம் என்ற அங்கலாய்ப்பிலே எரிபொருள் நிரப்பவாவது அனுமதிக்குமாறு வில்லங்கைக் கம்பனியை வற்புறுத்துவதுண்டு அல்லது கெஞ்சுவதுண்டு.
வில்லங்கையின் மிகப்பெரியதும்,வசதிகள் மிக்கதும், திமிங்கிலத் திணைக்களத்தில் பணிபுரிவோர் வாகனங்களை நிறுத்தப் பயன்படுவதுமான "குழம்பு" வாகனத் தரிப்பிடம், செயற்கையாக அமைக்கப்பட்டதாலும், யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக ஏனைய பல்தேசியக்கம்ப்னைகளுக்குத் தெரியவந்துவிடும் என்பதனாலும் தான் அதன் முக்கியத்துவம் குறைவு.ஒரு படத்தில் வடிவேலு," யூ புறம் இந்தியா,இந்தியன்(You from India,Indian),"யூ புறம் டமில்நாடு,டமிலன்" (You from Tamil Nadu, Tamilan)," ஐ புறம் இங்க்லான்ட், இங்க்லிஸ்மான்(I from England,Englishman )என்று சொல்லியது போல இந்தக் கம்பனியிலும் திமிங்கிலத் திணைக்களத்தில் பணி புரிபவர்களை திமிங்கிலவர் என்றும் மற்றையவர்களையும் முறையே குமிழர்,வசலீனர்,முறங்கியர் என்றும் இந்தப் புள்ளியிலிருந்து மேற் கொண்டு செல்லும் போது அழைக்கலாம்.இது ஒரு பொதுக் கம்பனி.தனிப்பட்ட ஒருவருக்கும் உரித்துடையாகமல்,இங்கே வேலை செய்யும் அனைவருக்கும் சம உரிமை உடையது இந்தக் கம்பனி.ஆனால் இங்கு தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள்,தொழிலாளர் நல அமைப்புக்கள்,கம்பனி ரீதியிலும்,திணைக்கள ரீதியிலும் தலைவர்கள் பலர் தாராளமாக உள்ளார்கள்.மொத்த ஊழியகளின் 50 % இற்கும் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்றவர் கம்பனியின் செயற்பாட்டுத் தொழிற்சங்கத் தலைவராகலாம்.அவருக்கு தொழிலாளர்களின் இடமாற்றத்தை தான் விரும்பியபடி வழங்க,திணைக்களத் தலைவரால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்தாக்க என்று பல அதிகாரங்களோடு,கம்பனியை வெளியில் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்பும் உண்டு.அத்துடன் கம்பனியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை என்ற தொழிலாளர் நல சபைக்கும் கம்பனி முழுவதும் இருந்து,ஊழியகளிடையே கூடுதல் விருப்பைப் பெற்ற 225 பேர் தெரிவு செய்யப் படுவார்கள். பழமைமிக்க இந்தக்கம்பனியின் தொழிற்சங்கத் தலைவார்களாக முன்னைய காலங்களில் வெள்ளைக்காரத் துரைமார்களும்,பிரபுக்களும் இருந்துள்ளார்களாம்.பின்னர் தொழிற்சங்கத் தலைமை கம்பனிக்குள்ளே பணிபுரியும் சுதேசிகளுக்குள்ளேயிருந்தே தெரிவு செய்யப் படவேண்டும் என்ற தொழிலாளார்களின் ஒன்றிணைந்த,தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் வெள்ளைக் காரத் துரைமார் தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பை இந்த நாட்டைச் சேர்ந்த துரைமார்களுக்கே 1948 ம் ஆண்டளவில் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
சேனனாயகம் என்பவர் தான் முதலாவது சுதேசியத் தொழிற்சங்கத் தலைவாரானார்.பின்னர் சிறிதுசிறிதாக திமிங்கிலவர்களுக்கும்,குமிழர்களுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் வரத் தொடங்கின.துரைமாரின் காலத்தில் விந்தியக் கம்பனியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த ஊழியர்களை தங்கள் கம்பனி ஊழியர்களாக ஏற்கமுடியாதென்றும்,அவர்கள் தொழிற்சங்கத் தலைவரையோ,நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையைத் தெரிவு செய்யும் தேர்தல்களிலோ வாக்களிக்கமுடியாதென்றும்,அவர்களுக்கு கம்பனியின் அடையாள அட்டையை வழங்கமுடியாதென்றும்,அவர்கள் இந்தக் கம்பனியைச் சாராதவர்கள் அதாவத "கம்பனியற்றவர்கள்" என்றும் அவர்கள் தங்கள் முந்தைய விந்தியாக் கம்பனிக்கே செல்லவேண்டும் சேனானாயகம் சொன்னபோது தான் முதலாவது முறுகல் வந்தது.

தங்கள் திணைக்கள இலச்சினையைத் தான் நீங்களும் பாவிக்கவேண்டும் என்று குமிழரை வற்புறுத்தியதால் 1956 இலும் தொடர்ந்து 1958,1978,1981,1983 இல் திமிங்கிலத்தவர்களது ஒற்றை றூட்டான,குறுகிய நோக்கான சிந்தனைகளால் சிறு சிறு சலசல்ப்புக்கள் இரு திணிக்களத்தாரிடையேயும் ஏற்பட்டு,இரு சாராருக்கும் சிறு சிறு காயங்கள்,சேதாரங்களுடன் முடிந்தன. கம்பனியிலே திறமையாகப் பணிபுரியும் ஊழியர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களை பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அதிகளவு குமிழர் திறமையடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதை அப்போதிருந்த தொழிற்சங்கத் தலைமை அறிந்து திறமையடிப்படையிலிருந்த முறையை வஞ்சனையோடு கோட்டாவுக்கு 1972 ம் ஆண்டு மாற்றியதால் குமிழர் சீறி எழுந்தனர்.
இந்தப் பாகுபாடுகள்,புறக்கணிப்புக்கள்,பக்கச்சார்புகளெல்லாத்துக்கும் எதிராக குமிழர்களின் தொழிற்சங்கத்தலைவராக இருந்த எஸ்.ஜே.வீ. நல்லநாயகம், கம்பனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்களைத் திரட்டிப் போராடினாலும் ஓரவஞ்சனைகள் தொடரத்தான் செய்தது.புறக்கணிப்பின் வலியுணர்ந்த குமிழர் தங்களது திணைக்களத்தை தனியான கம்பனியாக உருவகித்து,அதை உருவாக்க திடசங்கற்பம் பூண்டனர்.கறுவியவர்கள் முறுகவும் தயங்கவில்லை.83 ம் ஆண்டு வீதியால் சென்று கொண்டிருந்த 13 திமிங்கிலவர்களை முகமூடி அணிந்து மறித்த குமிழர் அணி புளியங் கம்பு,பூவரசங்க் கம்பு,துவரங்க் கம்பால் சரமாரியாக போட்டுத் தாக்கிவிட்டது.
அடி வாங்கிய அவர்களும் இது போன்றதொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவர்கள் போல,சொல்லி வைத்தாற் போல,வழியில் கண்ட குமிழர்களையெல்லாம் வாட்டியெடுத்தார்கள்.சில கார்களின் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டன.அதன் பின் திணைக்கள ரீதியிலான திமிங்கில - குமிழ் பாகுபாடு மேலும் உக்கிரமானது.திமிங்கிலத் திணைக்களத்திலே பணிபுரிந்த குமிழ் தொழிற்சங்கவாதிகளுக்கு நெருக்கமானவர்கள் குமிழ்த் திணைக்களத்துக்கு இடமாற்றித் தூக்கி எறியப்பட்டனர்.இடைவெளிகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே போயின.அதற்கேற்றவாறு சந்தர்ப்பங்களும் வாய்த்தன.குமிழர்களும் தங்களது திணைக்களம் தனிக் கம்பனியாவதே இதற்கு ஒரே தீர்வாகும் என மேலும் உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டனர்.
இந்த நேரத்தில் அண்மையிலிருந்த விந்தியாக் கம்பனி,குமிழ்த் திணைக்களத்திற்கு பக்கபலமாக நிற்பது போல் அவர்களுக்குக் காட்டி கொண்டு,வில்லங்கையில் தனது பிடியை இறுக்கி தனது ஆளுகைக்குள் வில்லங்கையைக் கொண்டு வர முயன்றது.அதனால் திமிங்கிலவருடனும்,குமிழருடனும் பேசி 23 ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த வில்லங்கையை நிர்ப்பந்தித்தது.தாங்கள் எதிர்பார்த்தது தமக்கு கிடைக்கவில்லையே என்று குமிழர்கள் வெதும்ப,எங்கள் கம்பனியின் இந்த வசதிகளையெல்லாம் இவர்கள் அனுபவிப்பதுவோ என்று திமிங்கிலவர் புழுங்க,விந்தியாவோ வேறு கம்பனிகள், வில்லங்கையில் தங்கள் கையை இறுக்கமுதல் தான் முந்தவேண்டும் என்றெண்னி,கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை தன் கைகைளில் விழுத்த காய்களை நகர்த்தியது.
திணைக்களங்கள் தங்கள் வேலைகளுக்கு தாங்களே ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை(மனிதவள முகாமையாளார் பதவி - Human Resource Manager),தங்கள் திணைக்களம் அமைந்துள்ள காணியின் பராமரிப்புரிமையைக்(அதுதான் அந்தத் திணைக்களத்தின் பகுதிகளை கூட்டி,துப்பரவாக்கும் பணிகளை மேற்கொள்ளுவதோடு திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் முழு ஆளுகையைக் கொண்டிருந்தல்) மற்றும் பொலிஸ் அதிகாரம்(அது தாங்க பாது காப்பு உத்தியோகத்தர்களை நியமித்தல்,கையாளல்),தங்கள் ஊழியர்களுக்கு எந்தவகைப் பயிற்சியை(கல்வி அதிகாரம்)வழங்குவது,நிதி முகாமைத்துவத்தில்சில உரிமைகள் என மிகச் சில ஏற்பாடுகளை செய்து 23 வது கம்பனித் திருத்தச் சட்டமாக அறிமுகப்படுத்தியது.
ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திணைக்களங்கள்,கம்பனிக்கு எதிராக(இறைமை..?) செயற்படுவதாக கம்பனி உணருமாக இருந்தால் கம்பனியின் தொழிற்சங்கத்தலைவரின் உத்தரவுக்கமைய அவரால் நியமிக்கப்பட்ட அவரின் கைப்பொம்மையான திணைக்களத்தலைவர்(Department Head) திணைக்களத்தை அதன் தன்னிச்சையான செயற்பாடுகளிலிலிருந்து நிறுத்தி கம்பனியின் நேரடிக்கண்பாணிப்பில் கொண்டுவர முடியும் என்ற ஏற்பாட்டை விந்திய சொருகியது.குமிழ்த்திணைக்களம் தனிக்கம்பனியானால்,தன்னிடம் இருக்கும் 28 திணைக்களங்களுக்கும் தனித்தனி கம்ப்னியாகப் பிரிந்து செல்லத் துணிச்சலை அது ஏற்படுத்திவிடும் என்று பயந்து குமிழரின் கோரிக்கையைக் குப்பையில் போட்டது விந்தியா.இது ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்குவது போலாகும் என குமிழ்த் தொழிற்சங்கத் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள்.
எல்லாருடைய நோக்கமும் ஒன்றாக இருந்த போதும் ஆளுக்கொரு திசையில் யார் தலைமைவகிப்பது என்று தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு திமிங்கிலத் திணைக்களத்தவர்க்களை சரமாரியாக எதிர்க்கத் தொடங்கினார்கள்.இப்படித் குமிழ்த்தொழிற்சங்கவாதிகளை ஒன்றாக சேரவிடாமல் பிரித்தாளுவது கூட விந்தியாவின் நிர்வாகமேயென சாதாரண குமிழ்த்தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.இதனால் திமிங்கில,குமிழர் தரப்புக்களிடையே கைகலப்புக்கள்,கார் உடைப்புக்கள்,சாதரண அலுவலக நேரங்களிலையே நடைபெறத் தொடங்கின.அதிலும் வேலுத்தம்பி என்ற குமிழ்த் தொழிற்சங்கத் தலைவ மீதுதான் கொஞ்சம் பயம் .தான் நினைத்ததை,எடுத்த காரியத்தைக்,எவருக்கும் விலை போகாமல் வீரியமாகவே செய்து கொண்டிருந்தார் அவர்.அவருக்கும் ஒரளவு குமிழர்கள் ஆதரவளித்ததனால் குமிழர்களின் தொழிற்சங்கத் தலைவராகி,தன் செயற்பாடுகளை மேலும் மெருகூட்டி தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.இதைப் பார்த்த விந்தியா அவர்கள் தனிக்கம்பனியானால் தனது 28 திணைக்களங்களும் தனித்தனியாகுவதை அது தூண்டுமெனபதாலும் கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை சுமேரிக்கா சுவீகரித்துக் கொள்ளலாமென்பதாலும் வேலுத் தம்பியையும் அவரது கைகலப்புக்களையும் முடிவுக்குக் கொண்டு வர,வில்லங்கை கம்பனிக்கு, அவர் மீது பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரையும் அவருடன் தீவிரமாகச் செயற்பட்ட பலரையும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க ஆலோசனை வழங்கியது.அவரது பணிநீக்கலுடன் அவர்களது தனிக் கம்பனிக்கான போராட்டமும் பெரும்பாலும் நீர்த்துப் போய்விடுமென இரு கம்பனிகளும் மிகவும் நம்பின.இவையெல்லாம் அந்தக் கம்பனி கடந்து வந்த பாதை.அதன் வரலாறு நெடுகலும் சண்டைகள்,சச்சரவுகள்,பலவற்றை கடந்து வந்ததாலும்,அவற்றை கடந்தாலும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முருங்கை மரமேறியதாலும் அதைப் போல சிறியதாகவிருந்த ஏனைய கம்பனிகள் எங்கேயோ செல்ல இந்தக் கம்பனியோ இன்னும் கீழேயே சென்றது.வேலுத் தம்பியின் வெளியேற்றத்தின் பின் குமிழர்களின் தொழிற்சங்கங்களை சிரா.சம்பந்தன், நெக்லஸ் பவானந்தா,நித்யானந்த சங்கரி, மந்திரகாந்தன், பித்தார்த்தன்,ஸ்னோ கணேசன்,பஜந்திரகுமார்,லாவோஜி லிங்கம், சோறுமுகம் கண்டமான்,சந்தனதேவீ,பீதாம்பரம்,கு.ரங்கா எனப் பலர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இருந்தபோதும் அவர்களுக்கிடையே எந்த அளவிலே தமது திணைக்களத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலே கொள்கைரீதியில் குழப்பங்களும்,உடன்பாடின்மையும் காணப்படுகின்றது. பட்டுவேட்டித் தலைமைகள் பலவிருந்தும் பாடாய் தங்கள் பிரச்சினைகளை ஒன்றாக ஒற்றுமையாக, எடுத்துச் சொல்லமுடியவில்லையே என்பதே அனேகமான குமிழ் ஊழியர்களின் ஏக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.இணைந்திருந்து இயலுமானவரை நடைமுறைச்சாத்தியாமனவற்றைப் பெறுவோமென ஒருவரும், இல்லையில்லை இந்தளவும் எங்களுக்கு வேண்டுமென இன்னுமொருவரும்,ஒரு ஆரம்பபபுள்ளியாக 23 ம் திருத்தச் சட்டத்திலிருந்து தொடங்கி தொடர்ந்து செல்வொமென மற்றொருவரும்,அப்பிடித் தொடங்கினால் உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது போல ஆகிவிடுமென இன்னுமொருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றனர்.இவர்கள் எல்லாரும் தங்களின் தலைவர்கள் என்றால் ,தங்களுக்காக,தங்களை பிரதிநிதித்துவப் படுத்துவர்களாக இருந்தால்,ஏன் எங்களுக்காக ஒன்றாக,ஒற்றுமையாக, பேசி இது தான் எங்களுக்கு வேண்டும் என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என எடுத்துக் கூறி இழுபட்டுப் போய்கொண்டிருக்கின்ற எங்கள் பிரச்சினைகளுக்குப் தீர்வைப் பெற்றுத்தரமுடியாது என்பதே குமிழகளின் கேள்வியாகும்.எங்களது பிரச்சினைகள் தீர்ந்து போனால் உங்கள் காலத்தை,தலைமைப் பதவியை, கொண்டுநடத்தமுடியாது என்பதாலோ பிரச்சினைகளை நீட்டுகிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.திமிங்கிலவருடன் சமாதானமாகப் போகமுதல் இவர்களுக்குள்ளே ஒற்றுமை அவசியம் என்பது அங்குள்ள குமிழ் ஊழியர்களின் ஒருமித்த கருத்தாகும்

Wednesday, January 5, 2011

அது ஒரு அழகிய மழைக்காலம்

மழை எல்லாருக்கும் பிடிக்கும்.மழையில் நனைய மனம் துடிக்கும்.ஆனால் சளி வந்திடும் எண்டு மூளை அலாம்(Alarm) அடிச்சுப் போடும்.பிறகென்னன்டு நனையிறது...?ஆனால் தமிழ்ப் படங்களிலை மட்டும் ஹீரோவும் ஹீரோயினும் தடிமனெல்லாம் வராமல் எப்படித் தான் மழையிலை நனைஞ்சு லவுசு பண்ணினமோ எண்டு தெரியேல்லை.அதிருக்க,இண்டைக்கு உங்களையும் சேத்து ஒருக்கால் நனைய வைப்பம் எண்டு சின்ன ஒரு பிளான்.பாப்பம்.


வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை,தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை எண்டு இரண்டு காலப்ப்பகுதிகள் தான் இலங்கைக்கு மழையை வழங்குகின்ற காலப்பகுதிகள் எண்டு சின்னனிலை உந்த சமூகக்கல்வியும் வரலாறும் எண்ட புத்தகத்திலை படிச்சதா சின்னதொரு ஞாபகம்.அதிலையும் வடகீழ்ப்ப்பருவக்காற்று மட்டும் தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு மழை வழங்குகின்ற காலம்.பொதுவாக ஐப்பசி தொடக்கம் மார்கழி வரை தான் இந்தக்க்காலம்.இயற்கை கூட எங்களை புறக்கணிக்கிறதா..?நாடெங்கும் வருடமெல்லாம் மழை கொட்ட எங்களுக்கு மட்டும் இரண்டு மாத மழை. மழையில்லை,மலையில்லை,நதியுமில்லாமல் நாதிய்ற்ற சனமான ஈழத்துத் தமிழ்ச்சனம்.ம்ம்ம்ம்.
பொதுவாக கும்பத்துக்கை(நவராத்திரி) மழை தொடங்கி, கந்தசசட்டி, பெருங்கதை, திருவெம்பா போன்ற விரதங்களுக்கெல்லாம் கொட்டி,தைப்பொங்கலோடை வெளிச்சிடும் எண்டு பெரியாக்கள் சொல்லுவினம்.அவர்களது அனுபவக் கணிப்பு பெரும்பாலும் பொய்க்காது.சிலவேளைகளிலை முந்திப்பிந்தி, காலந்தப்பிப் பெய்யும். மழை வருமட்டும் எல்லாரும் எப்பாடா மழை வரும் எண்டு பாத்துக்கொண்டிருப்பினம்.என்னடா இன்னும் மழையைக் காணேல்லை,இந்தமுறை வராதோ எண்டு எல்லாரும் மழைக்குத் தவங் கிடப்பினம்.ஐப்பசி மழை வந்தால் தானே வெங்காய நடுகையோ,நெல் விதைப்பையோ தொடங்கலாம்.ஆனால் வந்த பிறகெண்டால் அது வாங்கிற பேச்சு உலகத்திலை ஒருத்தரும் வாங்கியிராத பேச்சாயிருக்கும்."இழவு விழுந்த மழை","அரியண்ட மழை",பெய்ஞ்சால் பெய்ஞ்சு போட்டுப் போகோணும்.இது ஒரு வேலையுஞ் செய்ய ஒரு வழியில்லை.அடுப்பெரிக்க விறகுமில்லை.தெருவாலை போக வழியில்லை,உடுப்புத் தோய்ச்சுக் காயப்போட வழியில்லை,மாடுகளை மேய்ச்சலுக்கு அவிட்டு விடேலாதாம்,கூலி வேலையுமில்லை, அடியோ பிடியோ எண்டு,அது தாராளமாகத் திட்டுவாங்கும்.அந்த மழை பற்றிய பதிவொன்று தான் இது."என்ன நேற்றுப் பெய்ஞ்சது காணாதெண்டு இண்டைக்கும் வரப்போகுது போல கிடக்குது.இப்பவே கோலங் கட்டுது.நேற்றையான் மாரி(மாதிரி) பராதியிலை விறகுகளை எடுத்துவைக்க அயத்துப் போகாமல் இப்பவே அதிலை கிடக்கிற கொக்காரையள், மட்டையள், பழம் மூரியள்,பன்னாடையள் கொஞ்சத்தைக் கொண்டு போய் அடுப்பு மாடத்திலை காயப் போடு,அடுப்பு வெக்கைக்கு நேற்றையான் ஈரமெல்லாம் காய்ஞ்சு போடும்.மிச்சத்தைக் கொண்டு போய் குசினிக்குப் புறத்தாலை இருக்கிற பட்டடையிலை அடுக்கி வை.பேந்து நாளைக்கு,நாளையிண்டைக்கு தேவைப்படும் " எண்டு அம்மாவுக்கு, அம்மம்மா ஓடர் போடுறா."இஞ்சை முத்தத்திலை காயவைச்ச கொட்டை எடுத்த புளியையும் பினாட்டையும் எடுத்து சைற் அறைக்கை வைச்சுப் போட்டு பினாட்டுப் பாயைச் சுத்திக் கொண்டு போய் சின்னறைக்கை வை பாப்பம்" எண்டு மழை வரவை எதிர் பார்த்து, தம்பி தங்கச்சியோடை பழங்கொப்பியொற்றையிலை கடதாசிக் கப்பல் கட்டும் பணியில் கரிசினையோடை ஈடுபட்டுக் கொண்டிருந்த என்னை அம்மா குழப்பிறா.. நான் ஆஆய்ய்ய்ய்.. எண்டு இழுக்க......., இப்ப உதிலை கிடக்கிற ஈக்குப்பிடியாலை வாங்கப் போறாய்..சொன்னதைச் செய்து பழகு பாப்பம்.. ... பழகிறியள் பழக்கம் இப்பவே......எண்டு அம்மம்மா என்னை உறுக்குறா...நானும் வாய்க்குள்ளை வந்த எதையோ சொல்லிக் கொண்டு சொன்ன வேலையைச் செய்யிறன்...வானம் இப்ப இன்னும் கொஞ்சம் இருட்டத் தொடங்கீற்றுது.அப்பர் மாலந்தெணித் தோட்டதுக்கை கட்டியிருந்த மாட்டை அவிட்டுக்கொண்டு வாறதுக்கு ஓடிறார்.இப்படி எல்லாரும் ஆளாலுக்கொரு திசையிலை ஓடி ஒவ்வொரு வேலையாப் பாத்துமுடிக்கவும் மழை வரவும் சரியாக்கிடக்குது.மழை கொஞ்சம் கொஞ்சமாத் துமிக்கத் தொடங்கி,கொஞ்ச நேரத்திலை கொட்டத் தொடங்குது.நாங்கள் மூண்டு பேரும் ஆ.. அய்ய்ய்ய் மழை... எண்டு துள்ளிக் குதிக்கிறம்.என்ரை ஒராம் ஆண்டு கொப்பியெல்லாம் கப்பலாக உருமாறி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டா போய்க் கொண்டிருக்குது.எங்கட்டை வீட்டிலை இரண்டு முகடுகள் செங்குத்தாச் சந்திக்குது.அதிலை ஒரு பீலி ஒண்டும் இருந்தது.அந்தப் பீலியாலை மழைத் தண்ணி பயங்கர force ஆ வந்து விழும்.அந்தப் பீலித் தண்ணி வந்து விழுகிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளித் தான் எங்கடை கப்பலுகள் தங்கன்ரை கன்னி அணி வகுப்பைத் தொடங்கி அணி வகுத்துச் செல்லும்.பீலித் தண்ணி விழுகிறதாலை ஏற்படுகின்ற அலைகளாலை எங்கடை கப்பலுகள் ஓரளவு கொஞ்சத் துர்ரத்துக்குப் போகும்.சிலதுகள் உந்தக் குப்பையள் ஏதாவது தடக்கி கொஞ்சத் தூரத்திலேயே நிண்டிடும்.சிலது பிரண்டு,கவிண்டு,தாண்டு போகும்.இதையெல்லாம் தாண்டி ஆற்றை கப்பல் கனதூரம் போகுதெண்டு எங்கள் மூண்டு பேருக்கும் போட்டியாய் இருக்கும்.கொஞ்சம் கடும் மழையெண்டால் ஓட்டுகுள்ளாலையும் அங்கை இஞ்சையெண்டு வீட்டுக்குள்ளையும் ஒழுகத்தொடங்கிவிடும்.பிறகு அந்த ஒழுக்குகளுக்கும் ஒவ்வொரு யத்துகளைக் கொண்டு போய் வைக்கிறதே பெரும் வேலையாப்போடும் எங்களுக்கு.
மழையோ கொட்டோ கொட்டெண்டு கொட்டிக் கொண்டிருக்கும்.எல்லாரும் ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் போட்டுக் கொண்டு கை,காலை குறட்டி வைச்சுக்கொண்டு,மழை எப்பாடா வெளிக்கும் எண்டு வெளிவிறாந்தை தாவாரத்துகு கீழை தூத்துவானம் அடிக்க அடிக்க,அதை ரசிச்சு,அந்த தூவானத்தை அனுபவிச்சுக் கொண்டிருப்பம்.ஆனால் அது விடுமே?அது மின்னல் வெட்டி,முழங்கி,கொட்டோ கொட்டெண்டு கொட்டிக்கொண்டிருக்கும்.மின்னல் வெளிச்சம் தெரியுதெண்டால் எல்லாரும் இரண்டு காதுக்குளையும் விரலை ஓட்டி இடியை எதிர்கொள்ள றெடியாகிடுவம்.இடி எங்கடை வீட்டுக்கு மேலை விழுந்திடக்கூடாது எண்டதோடை,அது இரதை வாழை மரத்திலை விழுந்தால் அதிலியிருந்து தங்கக்கட்டி கிடைக்குமாம எண்டு அந்தக் காலத்திலை ஆரோ அவிட்டுவிட்ட ரீலை நம்பி, எங்கடை இரதை வாழையிலை இடி விழுந்தால் நல்லாயிருக்கும் எண்டு சின்னப் பிரார்த்தனையும் உள்ளுக்குள்ளாலை நடந்து கொண்டிருக்கும்.இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மழை பெய்யிறது கொஞ்சம் நிண்டிட்டுது.எண்டாலும் கொஞ்சம் கொஞ்சமாத் துமிச்சுக் கொண்டிருக்கும்.எங்கனரை வீடுக்குப் பின்னலை இருக்கிற புளியங்காணி வேலிக்குள்ளாலை ஊரில் வெள்ளம் எல்லாம் எங்கடை வீட்டை ஊடறுத்த்தான் ரோட்டைப் போய்ச்சேரும்.இப்ப முழங்காலுக்கு மேலை வெள்ளம் முத்தத்தாலை ஓடிக்கொண்டிருக்கும்.
மழை விட்டவுடனை அந்த வெள்ளத்துக்கை தெம்பல் அடிச்சு, அந்தத் தெம்பல்த் தண்ணியிலை மற்றாக்களை நனைப்பிக்கிறது தான் எங்கடை அடுத்த விளையாட்டாயிருக்கும். "இஞ்சை மாட்டடி கிடக்கிற கிடையைப் பாருங்கோ.அதுகளும் மழைக்காக்கும் குளம் குளமா மூத்திரம் பெய்ஞ்சு தள்ளியிருகுதுகள்.மாட்டடியெல்லாம் சேறாக்கி வைச்சிருக்குதுகள்.உதிலை கேற்று வாசல்லை உந்த புளியங்காணிக்கிள்ளலை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டுவந்த, வெள்ள மண் கொஞ்சத்தை அள்ளிக் கொண்டு வந்து போடுங்கோ பாப்பம்.பாவம் கண்டுத் தாச்சி மாடு பேந்தும் இரவு உந்தச் சக்கலுக்கை தான் படுக்கப் போகுது" எண்டு அப்பாவுக்கு அடுத்த கொமாண்ட் அம்மம்மா போடுறா. (இதெல்லாம் ஒராம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு கால ஞாபகங்கள்..இனி தமிழ்ப் படங்களிலை வாறமாதிரி வேணுமெண்டால் ஒரு " 7, 8 ஆண்டுகளுகுப் பிறகு" எண்டு வசனத்தைப் போட்டிட்டு வாசியுங்கோவன்) .ஆம்பிளையள் எல்லாம் சைக்கிளை எடுத்துக் கொண்டோ,குடையைப் பிடிச்சுக் கொண்டோ மழைப் புதினங்களைக் கதைகிறதுக்காகவேண்டி வாசியாலையிலையோ அல்லது அரசடிச் சந்தியிலையோ கூடுவினம்.கூடி நிண்டு, "மட்டக் களப்பிலை இடுப்பளவுக்கு வெள்ளமாம்..","மலையிலை(திரிகோணமலையை மலை என்றும் அழைப்பார்கள்)காத்துக்கு வீட்டுச் சீற்றெல்லத்தையும் கழட்டிக் கொண்டு போட்டுதாம்","புத்தூர்ச் சந்தியில நிண்ட ஆலமரம் பாறி விழுந்திட்டுதாம்.","இரணைமடுக்குளம் நிரம்பீற்றுதாம்","ஓடக்கரைக்கை சைக்கிளை மேவி வெள்ளம் ஓடுதாம்" எண்டு அடியா பிடியா எண்டு நியூசுகளை அள்ளி விடுவினம்.


CNN, BBC க்காரரெல்லாம் நாங்கள் பேசாமல் தம்பசிட்டியிலையை ஒரு றிப்போட்டரை வசிச்சிருந்திருந்தால் எங்கடை சோலி,ஈசியா முடிஞ்சு போயிருக்கும் எண்டு நினைக்கிற அளவுக்கு கதை களை கட்டும்.ஆனால் அரைவாசிக்கு மேலை அப்பிடி இப்பிடி வாற கதை தானேயெண்டு எங்களுக்கு நாங்களும் அதிலை நிண்டு கதைக்கிற அளவுக்கு வயசுக்கு வந்தாப் போலை தான் விளங்கிச்சுது. சிலவேளைகளிலை எங்கடை வெங்காயப் பயிர்ச்செய்கை தொடங்கினாப்போலை வந்து எங்கடை வாழ்வை நாசமறுத்தும் இருக்குது இந்த மழை.. விடாமல் நாட்கணக்கில் கொட்டித் தீர்த்து வெங்காயம் எல்லாம் வெள்ளத்திலை மூழ்கினாப்போல அந்த வெள்ளத்தை மிசின்(வோட்டர் பம்) வைச்சு இறைச்சு விடவேண்டிய துன்பிய்ல அனுபவமெல்லாம் எங்களுக்கெல்லாம் வந்திருக்குது.வெள்ளத்துக்கு வெங்காயமெல்லாம் அழுக, போட்ட முதலெல்லாம் தோட்டத்துக்கையே தாண்டுபோன சோகங்களும் எங்கள் வாழ்வில் உண்டு.விடாது கொட்டி,எங்கள் வெங்காயங்களை அழுகவைத்து,எங்கள் வெங்காயங்களின் நாற்றம் தாங்காமல் நாங்களே மூக்கைப் பொத்திக்கொண்டோடவேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கெல்லாம் ஆளாக்கியிருக்கிறது இந்த மழை.ஏன் இந்தமுறையும் கோடைக்காய் செய்யிற நேரம் கொட்டுகொட்டெண்டு கொட்டி,பயிரெல்லாத்தையும் அழிச்சுப் போட்டுது.இப்பவென்னடாவெண்டு பாத்தால் வழமையா வைகாசிப் பறுவத்துக்கே ஒரு அந்தர் ஐயாயிரத்தைத் தாண்டாத வெங்காயம்,இந்தமுறை மாரிக்காய் நடுகைக்கே எண்ணாயிரம்,ஒம்பதாயிரம் விக்குதெண்டால் பின்னைப் பாருங்கோவன்.

என்ன இருந்தாலும் ஊரிலை மழையெண்டால் அந்த மாதிரித் தான் இருக்கும்.அது ஒரு அழகிய மழைக்காலம் தான்.

முத்தம் - இந்த முத்தம் காதலர்கள் பரிமாறிக்கொள்வதல்ல.முற்றத்தின் ஈழத்துப் பேச்சு வழக்கு

பாறி - வேரோடு சாய்ந்து அல்லது வேர் அழுகி, இத்துப் போய் பெரு மரங்கள் விழுவதைக் குறிக்கப் பயன்படும்

பீலி - இரண்டு கூரைகள் சந்திக்கும் போது ஏற்படுத்தும் நீரோட்டத்தை ஏந்துவதற்குப் பயன் படுத்தப் படுகின்ற அமைப்பு. அத்தோடு பனக் கிழங்கின் தண்டும் பீலியென்றே அழைக்கப் படுவதுண்டு.

தாவாரம் - வீட்டு,கொட்டில் நிலத்துக்கும், கூரைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி என்றும் சொல்லலாம்.

தூத்துவானம்/தூவானம் - மழைத்துளிகள் காற்றுக்கு சிறிதாக பறந்து வருதல்

அயத்துப் போதல் - மறந்து போதல்
யத்து - பாத்திரம்
பட்டடை - விறகுகள், பாத்திரங்கள்,வைக்கோல் போன்றவற்றை பக்குவமாக அடுக்கி வைக்கப் பயன்படும் அமைப்பு

மாடம் - இடம் என்றும் சொல்லலாம்.அடுப்புக்கு பின் பக்கம் உள்ள பகுதி தான் அடுப்பு மாடம் எனப்படும்.இதே போல் படமாடம் என்ற சொல்லும் உண்டு

வெக்கை - வெப்பம்
சக்கல் - சகதி
கிடை - நிலை என்றும் சொல்லலாம்.என்ன கிடை இது?அலங்கோலமாகக் கிடக்கும் போதுதான் இது பெரும்பாலும் பாவிக்கப்படும்

மழைக்காக்கும் - மழை என்ற படியால் தான் போலிருக்குது என்று விரித்து விளங்கிக்கொள்ளலாம்

தெம்பல் - வெள்ளத்தினுள் துள்ளிக் குத்த்து விளையாடுதல்
பராதி - வேலைப் பளுவில் கவனிக்காமல் விட்டு விடுதல் கொக்காரை,மூரி,மட்டை,பன்னாடை - பனையிலிருந்து கிடைக்கப்பெறும் விறகுப் பொருட்கள்

பிறத்தாலை - பிறகாலே/பின்னாலே
பேந்து - பிறகு
குறட்டி - உள்ளுக்குள் இழுத்து கை கால்களை மடித்து குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல்

நாளையிண்டை -நாளை மறுநாள்
கண்டுத்தாச்சி - கர்ப்பந்தரித்த மாடு
ஆற்றை - யாருடைய
ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் - வழமையாகப் போடுகின்ற ஒரு சுவேற்றருக்குப் பதிலாக இரண்டு,மூன்று சுவேற்றைகளைப் போடுதல் என்று விரித்து விளங்கிக் கொள்ளப்படலாம்

அவிட்டுவிட்ட ரீலை - புழுகு
பறுவம் - பூரணைதினம்
மேவி - மேலால் என்று தான் இங்கே பொருள் படும்.இன்னொரு பொருள் அவன் மேவி இழுத்திருக்கிறான் என்று அவனது தலை சீவப்பட்டிருக்கும் முறையையும் குறித்துநிற்கவும் பயன்படும்