Monday, April 4, 2011

சைக்கிள்

கொழும்பு மாதிரி பெரிய நகரங்களிலெல்லாம் ஓரளவு வசதியான குடும்பமெண்டால் தேப்பனுக்கொரு கார்,தாய்க்கொண்டு, பெடியனுக்குமொண்டு, பெட்டைக்குமின்னுமொண்டெண்டு ஆளாளுக்கொரு காரை அல்லது சில வேளைகளில் ஒண்டுக்கு மேற்பட்ட கார்களையும் வைச்சிருப்பினம்.அதை மாதிரித்தான் எங்கன்ரை வீடுகளிலும் ஆளாலுக்கொரு வாகனம் வைச்சிருப்பம்.(நாங்களும் வசதியான ஆக்கள் தானே?)


எங்கன்ரை வாகனத்துக்கும் பென்ஸ் கார் மாதிரியெண்டிற அளவிலையில்லாட்டிலும் ஏதோ றோட்டாலை போறவாறாக்களுக்குக் கேக்கிற மாதிரியெண்டாலும் சத்தம் போடிற நல்ல ஹோர்ண்(Horn) இருக்குது, சிக்னல் இருக்குது, கூலிங் சிஸ்ரம் இருக்குது, அக்சிலேற்றர்(Accelator) இருக்குது.என்ன எங்கன்ரை வாகனம் ரீற்ரீற் எண்டதுக்குப் பதிலாக "ட்றீங் ட்றீங்" எண்டு ஹோர்ண் அடிக்கும்.எங்கன்றை வாகனங்களுக்கு ட்றைவர் கையாலேயே சிம்பிளாக சிக்னல் காட்டலாம்.
வருடிச் செல்லும் வசந்தக் காற்று கறண்ட் இல்லாமலே தலையைத் துவட்டிச் செல்லும்.அக்சிலறேசன்(Accelaration) பண்ணிறதெலாம் ட்றைவரின்ரை தனித் திறமையிலை தான் இருக்குது.என்ன நான் சொன்ன, சொல்ல வந்த வாகனமென்னெண்டு விளங்கியிருக்கும்.வேறையென்ன ஈழத்து சராசரி மக்களின் வாழ்வைத் தன் தோளில்(சீற்றில்) சுமந்து,குளிரிலும் பனியிலும் கிடந்து,கல்லுகள்,முள்ளுகளிடம் குத்து வாங்கி, குண்டடிப் பட்டு,ஓடாய்த் தேய்ந்து, உப்புக் கடலுக்குள்ளாலும், உழுத நிலத்துக்குள்ளாலும் மக்களோடு மக்களாக இடம் பெயார்ந்து, மக்களின் அத்தியாவசியப் பொருட்களடங்கிய ட்றங்குப் பெட்டிகளையும் உர பாக்குகளையும் சுமந்து மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குபற்றிய துவிச்சக்கரவண்டி/சைக்கிள் தான் அந்த வாகனம்.


இறக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆசைப்பட்டு ஏறிப் புட்டேன் ஐயோவோடை பைக்கில் என்று எங்கடை பைக்கில் ஏற அந்தக் காலத்திலை(மிகச் சின்ன வயசிலை) யாரும் தயாராக இல்லையென்றாலும் எங்களுக்கு 3ம், 4ம் ஆண்டு பள்ளிக்கூட காலங்களிலெல்லாம் சைக்கிளொண்டு வாங்கி,இறக்கை கட்டிப் பறக்கும் ஆசை மட்டும் மனசுக்குள்ளே பறந்து கொண்டேயிருக்கும்.


ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்.ஸ்கொலஸிப் பாஸ் பண்ணிறமோ இல்லையோ சைக்கிள் மட்டும் எப்பிடியாவது வாங்கித் தருவினம் அல்லது வாங்கித் தரத்தான் வேணும் எண்டது அங்கை எழுதப் படாத விதி.எண்டாலும் சைக்கிள் வாங்கித் தாறம் எண்டு சொன்னால் பெடியன் கொஞ்சம் ஊண்டிப் படிப்பானெண்டது அவையின்றை அங்கலாய்ப்புத் தான்.

ஸ்கொலஸிப்புக்கு படிக்கிறமோ இல்லையோ எப்பாடா ஸ்கொலஸிப் முடியும் எப்பாடா சைக்கிள்ளை இரண்டு கையையும் விட்டிட்டு மைனர் குஞ்சு மாதிரிப் பறக்கலாம் எண்டு கனவுகளுக்கும் நினைப்புகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.ஹெட் லைற்றை(Head Light) எந்த மாதிரியான் ஒரு ஒறேஞ் துணியாலை கட்ட வேணும், Bar க்கு எந்த மாதிரி குஞ்சங்கள் வைத்த சொவெர் போட வேணூம், பின்னுக்கு டைனமோவுக்கு கீழை எப்பிடி இரண்டு சிவத்த சிக்னல் லைற் போட வேணுமெந்த மாதிரியான லுமால கரியல் போட வேணும், எந்த மாதிரியான "ப" ஸ்டண்ட் போட வேணும்,மட்காட் கம்பியிலை எந்த மாதிரியான பந்துக் குஞ்சம் வைக்க வேணும், முன்னுக்கு சொக்கஞ்சோர் (Shock Absorber) எப்பிடி இருக்கோணும், ஹாண்டில் கவர்(Handle Cover) எப்பிடி இருக்கோணும் எண்டு ஒவ்வொரு பர்ட்ச் உம் எப்பிடி இருக்கவேணுமெண்டெல்லாம் றோட்டாலை போய் வாற ஓரளவு பெற்றர்(Better - பரவாயில்லாத) ஆன சைக்கிளையெல்லாம் பார்த்து,அதெல்லாத்தையும் சேர்த்து ஐந்தாம் ஆண்டிலேயே நான் கண்ட ஒரு பெஸ்ற்(Best) ஆன கற்பனைச் சைக்கிள் எனக்கு இன்றும் கண் முன்னே நிற்கின்றது.எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோர் கண்ட,காண்கின்ற கனவு இது.

ஸ்கொலஸிப்பும் பெரிசா இல்லாட்டிலும் ரியூசனுக்குப் போகாமலே ஏதோ மட்டு மட்டாக பாஸ் பண்ணிப் போட்டன்.என் கனவுச் சைக்கிளை வாங்குவதற்குப் பொருளாதார நிலை அந்த நேரம் வீட்டில் இல்லையென்பதே காரணமாகவிருந்தாலும்,"இப்ப நீ சின்னப் பொடியன் தானே ஏன் இப்ப அரைச் சைக்கிள் எடுத்துப் பிறகு முழுச் சைக்கிள் எடுப்பான்.ஒரேயடியாக நீ வளர்ந்தாப் போலை பெரிய சைக்கிளா எடுப்பம்,அதோடை நீ இன்னும் சைக்கிள் ஓடப் பழகயில்லை,பேந்து புதுச் சைக்கிள்ளை பழக வெளிக்கிட்டு போட்டுடைச்சுப் பழுதாக்கிப் போடுவாய்" எண்டும் காரணம் சொன்னாலும் எனக்கு அதில் பூரண உடன் பாடில்லாமல் இருந்தது.

ஒரு பொருளை தாறன் எண்டு சொல்லிப் போட்டு அதை தராமல் விடுகின்ற போது அல்லது அது கிடைக்காமல் விடுகின்ற போது ஏற்படுகின்ற ஏமாற்றம்,இயலாமை, உள்ளக் குமுறல் கொடுமையானது.எல்லாரும் ஏதேதோ விதங்களில் பல்வேறு ஏமாற்றங்களைக்கடந்து வந்திருப்போமாகையால் எனக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றத்தினை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.எனக்கும் அதுவும் அந்தச் சிறிய வயதில் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்றதொரு உணர்வு இருந்தாலும் கூட வீடே சொன்ன "வேறை ஒரு சைக்கிள்ளை ஓடப் பழகீற்றுப் புதுச் சைக்கிள் எடுப்பம் என்ற காரணம் சரியாகப் பட்டதால்" அவர்களுக்குக் கட்டுப் பட்டேன்.

எனது அப்பா வழியால் வந்த மச்சாளின் மச்சான் ஓடிய சைக்கிளொன்றே எனக்கு ஓடிப் பழகக் கிடைத்தது.அதிலை கிடந்த ஒரிஜினல் பெயின்ற்(Paint) எல்லாம் உரிந்து ஏதோ ஒரு சொல்ல முடியாத நிறத்தில் சைக்கிள் இருந்தது.நான் கற்பனை செய்த சைக்கிளுக்கு சரி தலைக்குத்தனமா நான் நினைத்திருந்த பாட்ஸ்(Parts) எல்லாத்தையும் நினைத்தாலும் பூட்டேலாதமாதிரி தலைகுத்துக் கரணமாக இருந்தது அந்த கால்ச் சைக்கிள்.என்ன இது பழகத்தானே ,பழகினாப் போலை கொஞ்ச நாள் செல்ல என்ரை கனவுச் சைக்கிளில் கலக்கலாம் தானேயென்றிட்டு பழகத் தொடங்கினேன்.

எங்கன்டை வீட்டு வளவுக்கை தென்னை,வாழைகளுக்குத் தண்ணீ மாறுறதுக்கெண்டு பெரிய உயரமான வாய்க்காலொண்டு போகுது.அதன் வரம்பு உச்சியிலே சைக்கிளை ஏத்திப் போட்டு,அப்பா இடப்பக்க ஹாண்டிலையும்(Handle) பின் கரியரையும் பிடிச்சுக் கொண்டு என்னை சீற்றீலை இருத்திப் போட்டு,என்னை உழக்கச் சொல்ல, மெல்ல மெல்ல ஆனால் முழு ரவுண்டும்(Round) செயினைச்(Chain) சுத்தாமல் டக்கு டக்கு எண்டு பெடலைத் தட்டிக் கொண்டே மெது மெதுவாக ஓடினேன்.
முதல் மூன்று தரமும் அப்பா கூடப் பிடித்துக் கொண்டு வந்த படியால் ஏதோ ஓடுவன் மாதிரித் தான் கிடந்துது.நாலாம் முறை ஓடத் தொடங்கி கொஞ்சத்தாலை அப்பா முன் ஹாண்டிலில் வைத்திருந்த கையை எடுத்துப் போட்டு கரியரை மட்டும் பிடித்துக் கொண்டு வந்தார்.கை நடுங்கி நடுங்கி ஹான்டில் அங்கேயும் இங்கேயும் ஆடினாலும் ஏதோ ஓடிக் கொண்டிருந்தன் நான்.அவர் பின் கையையும் எடுத்த கையோடை பதறியடித்துக் கொண்டு போய் அங்காலை நிண்ட வாழைக்குள்ளை சைக்கிளை விட்டன்.
இரண்டு வாழைகளுக்கிடையிலை முன் சில்லுப் போய்ச் செருகுப் பட்டதாலை சைக்கிள் அப்பிடியே நிண்டிட்டுது. நான் விழயில்லை.எண்டாலும் அப்பாட்டைச் சொன்னன் இனிக் கையை விடாதையுங்கோ எண்டு.அவரும் "இப்ப சும்மா விட்டுப் பாத்தன் இனி விடேல்லை " எண்டார்.அடுத்த முறையும் வரம்பில ஏறி அப்பா கரியரைப் பிடிக்க மெல்ல மெல்ல ஓடி,இந்த முறையும் சொல்லாமல் கொள்ளாமல் கையை எடுத்துப் போட்டார்.
நானும் வடிவாத் தான் ஓடிக் கொண்டிருந்தனான் போலை, எண்டாலும் பின்னுக்குத் திரும்பி இவர் பிடிக்கிறாரோ இல்லையோ எண்டு பாக்க வெளிக்கிட்டுப் பராதிப் பட்டுக் கொண்டு போய் முதல் முறை விழுந்தாச்சுது.நிலத்திலை கிடந்த சல்லிகள் உரஞ்சி முழங்காலால் இரத்தம் கசிந்தது.தண்ணியாலை கழுவிப் போட்டு அண்டையான் சைக்கிள் ஓட்டம் அதோடை விட்டாச்சுது.பிறகும் ஒவ்வொரு நாளும் அந்த வரம்பின் உச்சியில் ஏறி சறுக்கீஸ் மாதிரி அதாலை சறுக்கிக் கொண்டே விழுந்து எழும்பி அந்தக் கால்ச் சைக்கிளை ஓடப் பழகியாச்சுது.
பிறகேன் பேசுவான் கடைக்குப் போறதெண்டால்,பால் குடுக்க்ப போறதெண்டால்(மாட்டுப் பால்), வாசிக சாலைக்குப் போறதெண்டால் என்ரை குட்டிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு உழக்கித் தள்ளவேண்டியது தான்.
பிறகு அப்பாவின்ரை முழுச் சைக்கிளை எடுத்து அதைக் கெந்திக் கெந்தி, இடைக்குள்ளாலை காலை விடிட்டு, பிறகு பாருக்கு(Bar) மேலாலை காலைப் போட்டு, அதுக்குப் பிறகு சீற்றிலையிருந்து ஓடியெண்டு அதையும் ஓடப் பழகியாச்சுது.அதொண்டும் ஒருநாள் இரண்டு நாளிலை பழகினதில்லை.நாள்க் கணக்கில், மாசக் கணக்கில், எத்தனை விழுந்தெழும்பல்கள்,உரஞ்சல்களுக்குப் பிறகு நடந்தது.
பிறகு ஒரு கை விட்டிட்டு ஓடப் பழகி, இரண்டி கைவிட்டிட்டு, டபிள்,ட்றிபிள்ஸ்(Double,Triple) ஒரு சைக்கிளை ஓடிக்கொண்டு மற்றச் சைக்கிளை பரலலாக இழுத்துக் கொண்ட்டொறதெண்டு கன டெக்னிக்(Technique) எல்லாம் சைக்கிள் ஒடுறதில எக்ஸ்பேட்(Expert) ஆனாப் போல தானா வந்திடும்.பிறகு ஒரு மாதிரி 8ம் ஆண்டு படிக்கேக்கை எனக்கு முழுச் சைக்கிளொண்டு புதுசா எடுத்துத் தந்திச்சினம்.என்ரை கனவுச் சைக்கிள் மாதிரியே இருக்காட்டிலும் பெரும்பாலானவை இருந்தது,மீதியை நான் பொருத்திக் கொண்ட்டு என்கனவுச் சைக்கிளை மிதித்து ஊருக்குள்ளே கலர் காட்ட வெளிக்கிட்டேன்.
செருப்பெண்டால் Bata,Toothpaste என்றால் சிக்னல்,குளிசை என்றால் பனடோல் என்டு ஒவ்வொன்றுக்கும் Trade Mark உள்ளதைப் போல சைக்கிள் என்றால் லுமாலா என்பதும் ஈழவர் வாழ்வில் பிரிக்க முடியாதது.சும்மா சொல்லக் கூடாது வீட்டை இப்பவும் அம்மப்பாவின்ரை சைக்கிள்(பாவனைக் காலம் சரியாகத் தெரியாது 30 க்கு மேலை) அப்பாவின் சைக்கிள்(26 வருசம்) என்ரை சைக்கிள் 12 வருசம் எண்டு, இப்பவும் அந்தச் சைக்கிளெல்லாம் கிண்ணெண்டு கொண்டு தான் நிக்குது.
சைக்கிள் ஓடப் பழகிறதெண்டிறது சும்மா லேசுப் பட்ட காரியமில்லைப் பாருங்கோ.எல்லாராலேயும் பலன்ஸ்(Balance) பண்ணி ஓடேலும் எண்டில்லை.ஆனால் ஓடப் பழகினால் அது நல்லதொரு எக்சர்சைஸ்(Excercise).கீழ்க் கால்,தொடைகள் எல்லாம் இறுகி பார்க்க உடம்பு சும்மா முறிகித் தான் இருக்கும் கண்டியளோ.அது மட்டுமில்லை சைக்கிளிலை நண்பர்கள் 3,4 பேராய் பரலேலாக ஒராளின்டை ஹான்டிலை மற்றாள் பிடித்துக் கொண்டு ரோட்டு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பின்னுக்கு வாற வாகனக் காரன் என்னதான் ஊண்டி ஹோர்ண் அடித்தாலும் கேட்காத மாதிரி(உண்மையிலேயே கேட்கிறதில்லை தான்) போறதுவும்,ஊர்க்கதை உலகக்கதையெல்லாம் ரோட்டுகளிலேயே அளந்து கொண்டு போறதுவும்,பெட்டையளின்டை சைக்கிள் செற்றை முன்னுக்கு விட்டிட்டு அவகளுக்கு ஏதாவது சொட்டைக் கதை,சொறிக்கதை சொல்லிக்கொண்டோறதும் அல்லது பெட்டையள் செற் பின்னுக்கு வந்தால் சைற் குடுக்கிறமாதிரிக் குடுத்திட்டு அவகள் முந்த வெளிக்கிடேக்கை முந்தவிடாமல் இழுத்திழுத்து,வீடு மட்டும் கூட்டிக் கொண்டு போய் விடிறதும் ஒரு தனி சுகம் தான்.
இப்படிச் சென்ற என் நண்பர்கள் சிலர் பின்னால் ஹோர்ண் அடித்தது மாவட்ட நீதி பதி தான் என்பது கூடத் தெரியாமல் சென்றதால் ஒரு நாள் சிறை வாசமும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திய சோகமும் உண்டு. அது மட்டுமல்லாது நானும், எனது தனியார் கல்வி நிறுவன நண்பர்களும் இவ்வாறு பரலல்(Parallel) ஆக சென்று கொண்டிருந்த போதுபின்னால் வந்த நீதி மன்றப் பதிவாளர் ஒருவர் எங்களைத் தனித்தனியே போக அறிவுறுத்திச் சென்றது கண்டு பொங்கியெழுந்த நாங்கள் அவரைத் துரத்திச் சென்று,மறித்து "டேய் மாக்கண்டு நீ யாற்றா எங்களை விலத்திப் போ " எண்டு சொல்லுறதுக்கு எண்டு வீறாப்பாகக் கேட்ட அடுத்த நாள் அந்தாள் ரியூசன் நிர்வாக்கியிடம் எல்லாரையும் காட்டிக் கொடுக்க அனைவரும் பெற்றோருடன் சென்று அவரிடம் மன்னிப்புக் கோரியதுடன் வகுப்பில் அனுமதிக்கப் பட்டமை இன்னுமொரு வரலாறு.உப்புடி கன கதைகள் இருக்குது.என்ன உங்களுக்கும் உப்புடிக் கனவுகள், கற்பனைகள், காயங்கள்,கதைகள் எல்லாம் நடந்திருக்குமெண்டு நினைக்கிறன்.அதுகளையும் கொஞ்சம் சொல்லுங்கோவன்.கேப்பம்.

8 comments:

 1. ////ஐந்தாம் ஆண்டிலேயே நான் கண்ட ஒரு பெஸ்ற்(Best) ஆன கற்பனைச் சைக்கிள் எனக்கு இன்றும் கண் முன்னே நிற்கின்றது.எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோர் கண்ட,காண்கின்ற கனவு இது////

  பழைய நினைவுகளை கிளரி விட்டீர்கள் நன்பா.... அருமையான பதிவு... ரொம்ப ரசித்து படித்தேன். நான் மலை நாட்டில் வாழ்ந்தவன். அங்கு மலைகளில் மேடு, பள்ளம், ஊசி வளைவுகளில் சைக்கிள் ஓட்டும் அனுபவமே தனி......
  உண்மையாகவே, ஒரு சிறந்த பதிவு நன்பா.....

  ReplyDelete
 2. nalla katpanai.
  http://kaatruveli-ithazh.blogspot.com/

  ReplyDelete
 3. மொஹமட் உங்களீன் வருகைக்கும்.கருத்திடுகைக்கும் நன்றி. உங்களது கிளரப்பட்ட நினைவுகளையும் நீங்களும் பகிரலாமே நண்பா

  ReplyDelete
 4. முல்லை அமுதன் வருகைக்கும் கருத்திடுகைகும் நன்றி.ஆனால் இது கற்பனை அல்ல ...நான் கடந்து வந்த நிஜப் பாதை

  ReplyDelete
 5. எம்மவர் வாழ்வில் மறைக்கமுடியாத ஓர் அங்கம் இந்த சயிக்கிள்! சைக்கிள் ஓடி பழகி எங்கள் சைக்கிளில ஸ்கூலுக்கு கோன சந்தோசம் இருக்கே அதுக்கு எந்த ஒன்றும் இணையாகது! அழகிய அனுபவங்களை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்!

  ReplyDelete
 6. நன்றி கார்த்தி,வருகைக்கும் கருத்திடுகைக்கும். ம் எல்லொருக்கும் மனதில் மற்க்காத நினைவுகளைத் தருவது அந்தச் சைக்கிள் தான்

  ReplyDelete
 7. //ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்.// ஆமாம் எனக்கும் ஐந்தாம் ஆண்டுதான் ஸ்கொலசிப் சித்தியடைந்ததுக்கு அப்பப்பா வாங்கி தந்தார். இன்றே ஒரு பதிவு போட வேணும் போல இருக்கு.

  ReplyDelete
 8. "ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்."
  எனக்கும் ஸ்கொலர்ஷிப் பாஸ் பண்ணியதற்கு சைக்கிள் கிடைத்தது....
  ஞாபகங்களை மீட்டியமைக்கு நன்றி.

  மிகவும் காலம் தாழ்த்தி படித்திருப்பினும் எனது கருத்தையும் பதிவு செய்கின்றேன்..

  ReplyDelete