Friday, February 12, 2010

தலைநகரின் கண்டறியாத கலியாண வீடுகள்

காதலர் தின சிறப்புப் பதிவாக காதலுக்கு அடுத்த நிலையான திருமணம் அல்லது கலியாணம் என்பது, இன்றைய அவசரமான,காசு கொட்டிக்கிடக்கும் உலகில் எவ்வாறு செய்யப்படுகின்றது அல்லது அது செய்யப்படுவதன் உண்மையான நோக்கத்தை அடைகின்றதா என்பது பற்றி அலசுவதே இந்தப் பதிவு.

எமது கலாசாரத்துக்குள்ளாக அமையின் பொதுவாகவே வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் கிடைக்கப் போகும் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணங்களை,இன்றைய காலகட்டங்களில், தற்போதைய முறைகளில் செய்வதால்,திருமணச் சடங்குகளில் கிடைக்கவேண்டிய அந்த சின்னச்சின்ன சந்தோசங்கள் எங்களுக்குக் கிடக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பொதுவான கருத்து.ஊர்களில் சுற்றம்,முற்றம் மற்றும் ஊரவர் என எல்லா உறவுகளின் பங்குபற்றுதலுடன் குறைந்த செலவில் செய்யப்படும் திருமணங்களில் கிடைக்கும் சின்னசின்ன சந்தோசங்கள் தலைநகரில் காசைக் கொட்டிக் கொடுத்தும் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.ஊர்களிலெல்லாம் கலியாண வீடென்றால் பொன்னுருக்கலுக்கு(மணமகளின் தாலி செய்வதற்குரிய தங்கத்தை மணமகன் வீட்டில் உருக்கும் சம்பிரதாய சடங்கு)ஒன்று, இரண்டு நாட்களுக்கு முதல் தொடங்கி,கலியாணவீடு முடிந்து இரண்டு,மூன்று நாள் வரைக்கும் அந்த வீடும், ஊரும் திருவிழாக் கோலத்துடன் தான் காட்சியளிக்கும்.திருமணத்திற்கு இரண்டு,மூன்று வாரங்களுக்கு முதலேயே வீட்டை துப்பரவாக்கி,வர்ணம்(paint) தீட்டி மிகவும் அழகாக வைத்திருப்பார்கள்.


ஊர்ப் பெண்களெல்லாம் 2, 3 நாளுக்கு முதலிருந்தே பின்னேரப் பொழுதுகளில் அந்த திருமண வீடுகளுக்குச் சென்று தட்டை வடை, பயற்றம் பணியாரம், சீனி அரிதாரம், சிப்பி, சோகி, சில்லறைப் பலகாரம் உட்பட பலவேறு பலகாரங்களையும், இனிப்புக்கள், சிற்றுண்டிகளையும் செய்யத்தொடங்கிவிடுவார்கள்.பெடியளும் அப்பப்ப போய் உதவிகள் செய்தாலும் திருமணத்திற்கு முதல்நாள் செய்யும் சோடனை(டெcஒரடிஒன்) வேலைகளுக்குத் தான் பிரதானமாக செல்வாங்கள்.

ஊரில் உள்ள 30,40 பெடியளும் சிறுசிறு குழுவாகப் பிரிந்து ஒவ்வொரு சோடனை வேலைகளிலும் ஈடுபட்டுக் கொள்ளுவார்கள்.ஒரு படை மஞ்சள்,வெள்ளை நிறத் தாள்களை(டிச்சுஎ)எட்டாக,பதினாறாக மடித்து அதனை,நூலொன்றைப் பாவித்து வெட்டிக் கொண்டிருக்கும்.மறுபடையோ நூலொன்றினில் கோதுமை மாவினுள் நீரைவிட்டுக் காய்ச்சிய பசையொன்றினைப் பூசிக்கொண்டிருக்கும்.பிறிதொரு படை எட்டாக, பதினாறாக மடிக்கப்பட்டு, வெட்டப்பட்ட ரிஷுவை ஒவ்வொன்றாக கலைத்துக் கொடுத்துக் கொண்டிருக்க,இன்னும் சில அவற்றை பசை பூசப்பட்ட நூலினில் ஒட்டிக் கொண்டிருக்கும்.வேறு சிலர் வீட்டுக்குள் மணமக்களின் பெயர்களையும், நல்வரவு, திருமண வாழ்த்து, இரண்டு இணைக்கப்பட இதயங்களினைத் துளைத்துச் செல்லும் அம்பினை ஒத்த காதலின் சின்னத்தையும் ரெஜிபோமில் வேலைப்பாடுகளுடன் வெட்டி ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.மற்றும் சிலர் திருமண வீட்டு வாசலில் கட்டுவதற்கு, வீட்டுக்கு பின்னாலிருக்கும் வளவினில் வளர்ந்து நிற்கும் வாழைகளிரண்டை வெட்டிக் கொண்டுவந்து, வீட்டு வாசலிலுள்ள தூணோடு சேர்த்துக் கட்டிக்கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் குழை போட்டுப் பழுத்த வாழையையே கட்டினாலும் சிலவேளைகளில் அது கிடைக்காதவிடத்து சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த,நன்கு மஞ்சள் நிறத்தில் பழுத்த வாழைக்குலையைத் தூக்கி,கட்டப்பட்ட அந்த வாழைதான் இந்தக்குலையைப் போட்டது போல இருக்குமாறு மிகச்சாமர்த்தியமாகக் கட்டி வாழைக்குலையை வாழை தாங்குவதற்காக, வாழையில் ஒரு பூவரசங் கட்டையை இணக்கிச்(செய்து)சொருகி அதில் வாழைக்குலையைத் தாங்கவிடுவார்கள்.மேலும் அழகை மெருகூட்டுவதற்காக தாங்கள் இளநீரைக்குடித்த பின்னர் வெறும் இளநீர்க் கோம்பைகளை வாழைக்குலையின் அடியிலே சொருகி விடுவார்கள்.

ஒட்டப்பட்ட ரிஷு காய்ந்த பின்னர் அதை ஏதாவது மரங்கள்,மின்கம்பங்களிடையே கட்டப்பட்ட கயிற்றுக்குக் குறுக்காக இரண்டு கயிறுகளையும் இணைக்கும் விதமாக கட்டுவார்கள்.திருமணத்திற்கென்று செய்த பலகாரங்களும் தேத்தண்ணியும் வேலைநடந்து கொண்டிருக்கும்போது பெடியளுக்குப் படைக்கப்படும்.பெடியளெல்லாருக்கும் இரவுச் சாப்பாடும் அங்கே தான்.சிலர் அதிகாலையில் வந்து பெண்களுக்கு சமையலின் போது சோற்று அண்டா,கறிக் கடாரம் என்பவற்றை இறக்கி ஏற்றுவதற்கு உதவி செய்வார்கள்.மற்ற எல்லாப் பெடியளும் திருமணநேரத்திற்கு முன்னரே வேட்டி கட்டி,பவுடர் போட்டு,தலையை மேவி இழுத்து என்று அப்பிடி இப்பிடியாக ஒருமாதிரி வெளிக்கிட்ட்டுப் போய் உதவி ஒத்தாசையாக இருப்பாங்கள்.

எப்ப தாலியைக் கட்டுவாங்கள்,எப்ப தாங்கள் ஒரு வெட்டு வெட்டலாம்(சாப்பிடுதல்) என்று வாறதுகள் தாலியைக் கட்டியவுடனேயே பந்தியில் சென்று குந்தியவுடன் ஒருவன் வாழையிலை வைக்க, மற்றவன் சோற்றைப் போட, கொஞ்சப்பேர் ஒவ்வொரு கறியாக வைக்க, பிறிதொருவன் அப்பளம், மிளகாய் வைக்க மேலுமொருவன் வடை பரிமாற, இன்னுமொருவன் தண்ணீரை டம்ளரில்(தண்ணீர் குவளை)ஊற்ற என்று எவரதும் நேரடி வழிகாட்டுதலின்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை மிகச் சுறுசுறுப்பாகச் செய்வாங்கள்."ஆ.. இஞ்சை ஐயாவுக்கு சோறு முடிஞ்சுது.. சோத்தை வை.. சோறு வைச்சாக்களைப் பாத்து கறியளை வை.." என்று காலில் சக்கரம் பூட்டியது மாதிரி ஓடித் திரிவாங்கள்.இரண்டு, மூன்று முறை சோத்தை போட்டுக் குழைச்சடிச்சு, அதற்குப் பிறகு பாயசத்தையும் விட்டு வைக்காமல் அதையும் விட்டு வழிச்சுத்துடைச்சு விட்டுச் சென்றவர்களின் வாழையிலைகளையெல்லாம் அள்ளி பந்தி நடந்த மண்டபத்தைக் கூட்டுவதோடு ஆம்பிளைப் பந்தி(ஆண்களின் சாப்பாட்டு வரிசை) முடிய அடுத்ததாக பொம்பிளைப் பந்தி ஆரம்பமாகும்.

தங்களுக்கு வேண்டப்பட்ட பெண்தோழிகளுக்கும்,"இது தேவையோ?", "அது தேவையோ?" என்று வழிந்து,வழிந்து கேட்டு,அவர்கள் ஒன்றும் கேட்காத போதும் தாங்களே 2,3 வடைகளைத்தூக்கி வாழையிலையில் சத்தம்போடாமல் வைத்துவிட்டு,அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடுகிறார்களா அல்லது அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடாமல் வாழையிலையோடு கொண்டு போய் எறிகின்றார்களா என்று எறியும்வரை பார்த்துக் கொண்டிருக்கும் தாராள மனப்பாங்குள்ளவர்களும் இருப்பார்கள்.இதன் பின்னர் படமெடுப்புக்கள்,பின்னேர திருமணப்பதிவு(Registration) என மிகுதி நிகழ்ச்சிகளும் களை கட்டும்.


இவ்வாறெல்லாம் எத்தனை சின்னச் சின்ன சந்தோசங்கள் எத்தனை இலட்சத்தைக் கொழும்பிலே கொட்டி,ஹோலிலே கலியாணத்தை முடித்தாலும் துளி மருந்துக்கும் கிடப்பதில்லை.இரவிலே ஒரு மண்டபத்திலே திருமணம் நடைபெறும்.அவனவன் தாலிகட்டி முடிந்த பின்னர் சரியாக சாப்பாட்டுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முதல் காரிலோ ஏதாவது வாகனத்திலோ வருவான்.Busy(வேளைப் பளு)ஆன ஆள் மாதிரி ஒரு இடத்திலும் இருக்காமல் அங்கையும் இங்கையும் ஓடித்திரிந்து 2,3 பேருடன் கதைப்பான்.தானே போட்டுச்(self Service) சாப்பிடுவான்.தம்பதியினருக்கு பரிசுப்பொருள்(Gift) கொடுப்பான்.சேர்ந்து நின்று படம் எடுப்பான்.மாப்பிளையிடம் சொல்லுவான்,"மச்சான் அவசரமாக ஒரு வேலை இருக்கு..நான் வாறன்.." என்று சொல்லிவிட்டு ஒரு 30,40 நிமிடத்தில் பறந்துவிடுவான்.இத்தனைக்கும் ஒரு தலைக்கு சாப்பாடுக்கு,இத்தனை ஆயிரம் என்று சொல்லி ஒரு 400,500 பேருக்கு என்று காசைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.சாப்பாட்டுக்கு, மண்டபத்துக்கு, மணமகள்,மணமகன் அலங்காரம், மற்றும் இன்ன பிற செலவுகள் என்று காசை வாரிக் கொடுத்தும் அதற்குரிய பலாபலன் கிடைக்காமலையே திருமணங்கள் முடிவது உண்மையில் வேதனைக்குரியதே.

Thursday, February 4, 2010

மோதகமும் பல்லுக் கொழுக்கட்டையும்

(கலப்படமேயில்லாத கற்பனைக் கதையான இதிலே வரும் பெயர்களையோ, ஊர்களையோ அல்லது வேறு சம்பவங்களையோ உங்கள் மூளையை ஆட்டிக் கீட்டி,கசக்கிப் பிழிந்து யோசித்து, வேறு நபர்களுடனோ, இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ சம்பந்தப்படுத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல)


இலந்தையூர் என்ற பெயருக்கேற்றாற் போல அந்த ஊரிலே, கணிசமானவளவு இலந்தை மரங்கள் பூத்துக்குலுங்கி, காய்த்து, சிறுவர்களிடம் கல்லெறியும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.வானம்பார்த்த பூமியான அந்த ஊரிலே கோடைகாலத்து கொதிக்கும் வெயிலின்,தகிக்கும் தணலைத் தாங்கித், தண்மையைத் தம்மூர் மக்களுக்காக வழங்கும் தியாகச் செம்மல்களாக ஊரின் நடுவேயுள்ள ஆலமரமும் வேறு சில பெருமரங்களும்.ஊரை தொழில்ரீதியாக எடுத்துப்பார்த்தால் பெரும் போகம் ,சிறுபோகம் என இரு போகங்களிலும் நெல்பயிரிடும் பெரும்பான்மை விவசாயிகளும், வியாபாரம் செய்யும் சிலரும்,உத்தியோகம் பார்க்கும் மிகுதியினருமாக அடங்கி விடுவார்கள்.


இயற்கையாலும், அரசாங்கங்களாலும், அரச உயரதிகாரிகளாலும், நிறுவனங்களாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் அவ்வளவாகப் பூர்த்தி செய்யப்படாவிடாலும் அவர்கள் வாழ்க்கையும் ஏதோ ஓடுகிறது அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஓட்டத் தம்மைப் பழக்கிக் கொண்டுவிட்டார்கள்.


என்னதான் இல்லாத போதும் எமது சமுதாயத்தில் வேரோடிச், சமூகத்தை செல்லரித்துக் கொண்டிருக்கும் சாதிப் பிரச்சினை மட்டும் இங்கும் இருக்கின்றது. உடையார், படையார், சடையார் என்று மூன்று சாதியினர் ஊரில் உள்ளனர்.இதில் பெரும்பான்மையாக உடையார் ஊரின் சனத்தொகையின் 70 - 75 % ஆக உள்ளனர். மிகுதியினரை எடுத்தால் படையார் 15 - 20 % உம் சடையார் அண்ணளவாக 10% உம் உள்ளனர்.படையார் ஊரின் வடக்கு மற்றும் கிழக்கின் கணிசமான இடங்களிலும், இலந்தையூரின் மத்தி மற்றும் மேற்குப் பகுதிகளிலும் செறிந்து வாழ,சடையார் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.அந்தந்தப் பகுதிகளில் அவரவர் சாதிகளுக்குப் பிரத்தியேகமான சில தெய்வங்களின் கோவில்களும் உள்ளன. ஏனைய முழு இடங்களிலும் உடையார் தான் செறிந்து வாழ்(ஆள்)கின்றனர்.
யார் ஊருக்கு முதலில் வந்தது என்பதில் தொடங்கி பலவிடயங்களில் உடையாருக்கும் படையாருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வரும்.ஆனால் நல்ல வேளையாக இதுவரைக்கும் உயிரிழப்புக்கள் வரை சென்றதில்லை.உடையார் அடிப்பார்கள்.பதிலுக்கு படையாரும் திருப்பி அடிப்பார்கள்.அடிவாங்கிய உடையார் மீண்டும் வந்து அடிப்பார்கள்.இவ்வாறு இவை நீண்டு கொண்டே செல்லும்.இதனாலும் உழைப்பதற்காகவும் படையாரில் பலர் அயலூருக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றிருந்தனர்.


கடைசியாகவும் இதே போல் படையார் சாதிப் பெண்பிள்ளையொருத்தியுடன் உடையார் சாதிப் பெடியங்கள் சேட்டை விடப் போனபோது படையார் சாதிப் பெடியங்கள் அடித்துப் போட்டார்கள்.இதனால் இலந்தையூரின் அயலூர்க்காரர்களிடம் பொல்லுகள், கொட்டன்கள் போன்ற ஆயுதங்களையும் மற்றும் படையார் சாதிப் பெடியங்கள் எங்கேயெல்லாம் ஒளித்திருக்கிறார்கள் என்பது போன்ற புலனாய்வுத் தகவல்களையும் பெற்றுப், படையாருக்கு நல்ல சாத்துக் கொடுத்து விட்டார்கள் உடையார்கள்.படையாருக்கு எழும்பி நிற்கமுடியாத மரண அடிதான்.

*************************

உடையாரில் மயில்வாகனம் ராஜேந்திரன் அல்லது "ம.ராஜே"ந்திரன் அண்ணை, பொன்னையா சரத்குமார் அல்லது "பொன்.சரத்குமார்" அண்ணையும் "சுனில்" அண்ணை ஆகியோரும் படையாரில் "ஞானசம்பந்தமண்ணை", "கணேஷன்" அண்ணை,"தேவேந்திரன்" அண்ணை மற்றும் "பாலமுரளிதரன்" அண்ணையும்,சடையாரில் "ரவூ"சீலன் அண்ணையும் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் தான்.

***************************
கோயில்களில் விசேட பூசைகளின் போது அடியார்களுக்கு மோதகம்,பல்லுக் கொழுக்கட்டை என்பன வழங்கப்படுவதுண்டு.இந்த இரண்டு பிரசாதங்களையும் செய்வதில் உடையார் சாதியைச் சேர்ந்த ம.ராஜேந்திரன் அண்ணையும் பொன்.சரத்குமார் அண்ணையும் பெயர் போனவர்களாயினும் பல்லுக் கொழுக்கட்டை என்று வந்தால் ராஜேந்திரன் அண்ணையின் கைவரிசையும், மோதகம் என்று சொன்னால் சரத்குமாரின் மோதகத்தின் ருசியும் பேசப்படுபவை தான்.மோதகமும் கொழுக்கட்டையும் வெளித்தோற்றத்தில் வேறுபட்டிருந்தபோதும் அவற்றினுள்ளே உள்ள "உள்ளுடன்"(மோதகம்,கொழுக்கட்டையினுள்ளே வைக்கப்படும் இனிப்புக் கலைவை)ஒன்றே.பயற்றை, குண்டுகளாலழிந்த பூமியிலிருந்து வரும் கந்தகப் புகையைப் போன்ற சுடுநீராவியைச் செலுத்தி உயிருடன் கொன்று(அவித்து),தேங்காயை 48,72 பல்குழல்களால்(திருவலகை)தாக்கிக் கொன்று, அந்த சடலங்களையும்(தேங்காய்ப்பூ),அவர்களின் இரத்தத்தைப் பிழிந்து(தேங்காய்ப்பால்) அதனுடன் சீனியும் சேர்த்து, சிறிது துவைத்தெடுத்துத் தான் உள்ளுடன் தயாரிக்கப்படும்.பின்னர் அரிசிமாவை எடுத்து, சுடுநீர் விட்டுக் குழைத்து, அதனை வட்டமாகத் தட்டி, அதனுள் உள்ளுடனை வைத்து,சற்று நீட்டாகத் தட்டி,அவை சந்திக்கும் இடத்தில் பல்லுப் போல் கையால் செய்வதை பல்லுக் கொழுக்கட்டையென்றும்,உருண்டையாக செய்வதை மோதகம் என்றும் அழைப்பார்கள்.

*****************************

ஒருமுறை ராஜேந்திரன் அண்ணை செய்கிற பல்லுக்கொழுக்கட்டையோ அல்லது சரத்குமார் அண்ணை செய்கிற மோதகமோ நல்லது என்று ஒரு கௌரவப் பிரச்சினையொன்று வந்துவிட்டது.தேவேந்திரம் அண்ணைக்கும்,பாலமுரளிதரன் அண்ணைக்கும் ராஜேந்திரன் அண்ணையின் பல்லுக்கொழுக்கட்டை பிடித்துப் போவதற்கு விசேடமாக ஒரு காரணமும் இல்லாவிட்டாலும் அவரின் செல்வாக்குக் காரணமாக தமது இருப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்றும், அவர் வாங்கிக்கொடுக்கிற அரைப் போத்தல் கள்ளையும் பீடிக் கட்டையும் நன்றி உணர்வோடு நினைத்து, "ராசேந்திரம் அண்ணை உங்கடை பல்லுக் கொழுக்கட்டை தான் பெஸ்ட்" என்றனர்.சுனில் அண்ணையும் ரவூசீலன் அண்ணையும் சரத்குமார் அண்ணையின் மோதகத்துக்கு ருசி கூட என்றனர்.கணேஷன் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் மோதகமோ,பல்லுக்கொழுக்கட்டையோ நல்லது என்று முடிவெடுப்பதில் கொஞ்சம் சிக்கல்.இறுதியில் இவ்வளவு நாளும் பல்லுக்கொழுக்கட்டை சாப்பிட்டு அலுத்துவிட்டிருந்ததனாலும்,வெளியூரில் இருந்த படையார் சாதியினப் பெடியங்கள் இந்தமுறை மோதகத்தின்றை ருசியைப் பாருங்கோவன் என்று கடிதம் போட்டிருந்ததாலும் ஒரு "நம்பிக்கயான மாற்றமாக" மோதகம் நல்லது என்று சொல்லி சரத்குமாரண்ணையின் மோதகத்தை தூக்கிப் பிடிக்க ஆயத்தமாகினர்.

***************************

இப்பிடி ஆள் ஆளுக்கு கொஞ்சம் ஊரில் செல்வாக்கான தலைகளெல்லாம் அங்கும் இங்கும் பிரிந்து நின்றதால் ஊராருக்கு, மோதகமோ கொழுக்கட்டையோ நல்லது என்று தெரிவதில் குழப்பம்.இதனால் கட்டாக்காலி கால்நடைகள் வயலுக்குள் புகுந்து சேதாரம் விளைவித்த பிரச்சினை முதல் பக்கத்து வீட்டுக்காரனுடன் ஓடிய கந்தசாமி பெண்சாதியின் கேஸ் வரைக்கும் விசாரித்து தீர்ப்புச் சொல்லும் ஊரின் மணியகாரரான(பஞ்சாயத்து தலைவர் போன்ற ஒரு ஊர்த்த்லைவரின் பதவி) தயானந்தம் அண்ணை பஞ்சாயத்தைக் கூட்டினார்.
பஞ்சாயத்தும் கூடியாச்சுது.தயானந்தம் அண்ணை பட்டு வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,வெற்றிலை பாக்கை மென்றபின்னர், வெள்ளிச் செம்பிலிருந்த தண்ணியை கொஞ்சம் ஊற்றி வாயைக் கொப்பளித்துக் கொண்டே, தோளில் இருந்த சால்வையை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டு,"ஏனப்பா பதினெட்டுப்பட்டி சனமும் வந்தாச்சுதா? பிறகு ராமசாமி வரேல்லை.கந்த சாமி வரேல்லை என்று சொல்லக் கூடாது.ஒருவன் வந்தால் அப்பிடியே கப்புன்னு பிடிச்சுக்கணும்.தெரியுதா?" என்று வடிவேலு பாணியில் சொல்லிக் கொண்டே,பஞ்சாயத்தைத் தொடக்கி,பஞ்சாயத்திலே பிரச்சினையை விளக்கினார்.இப்போது உங்களுக்கு பல்லுக் கொழுக்கட்டை பிடித்திருந்தால் கொழுக்கட்டை என்ற போதும், மோதகம் பிடித்திருந்தால் மோதகம் எனும் போது கையை உயர்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.


படையார் சாதியும் சடையார் சாதியும் பல்லுகொழுக்கட்டை அலுத்திருந்த காரணத்தினால் மோதகத்திற்கு கையை உயர்த்தினர்.உடையார் சாதியில் பெரும்பாலானோர் சரத்குமார் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் இடையே, படையார்களின் பகுதியிலுள்ள அவர்களின் கோவில்களில் மோதகம் பிடிக்கும் வேலையை அவர்களிடமே விட்டுத்தந்து,அவர்களே தங்களை சுயநிர்ணயம் செய்து, சுயமாக மோதகம் பிடிக்க அனுமதித்தல் என்பது போன்றதொரு ஒரு ரகசிய உடன்பாடு உள்ளதாக தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு,கொழுக்கட்டைக்கு கை உயர்த்தினார்கள். தயானந்தம் அண்ணை கைகளை எண்ணி, 50 % மேற்பட்டோர் கொழுக்கட்டையே நல்லது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.சுனில் அண்ணை கொழுக்கட்டைக்கு ஆதரவான உடையாரில் சிலர் இரண்டு கையையும் உயர்த்தி வாக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினாலும் தயானந்தம் அண்ணைக்கோ,சனத்துக்கோ கொழுக்கட்டையின் ருசி பற்றியதான் மக்கள் தீர்ப்பில் அவ்வளவாக சந்தேகம் வரவில்லை.


கொழுக்கட்டை நல்லதென்றாலென்ன மோதகம் ருசியென்றாலென்ன எமக்குப் பிரச்சினையில்லை என்றிருந்த படையார் சாதியினர் தாம் ஆதரித்த மோதகம் நல்லதென்று தெரிவுசெய்யப்படவில்லையாயினும், தாங்கள் ஓரளவாவது ஒற்றுமையாக கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்று சொன்னதையும், என்ன தான் இருந்தாலும் மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றே எனத் தாம் பகுத்தறிந்து கொண்டதையுமிட்டு திருப்திப் பட்டுக் கொண்டே பஞ்சாயத்த்தை விட்டுச் சென்றனர்.