பயணங்கள்,சுற்றுலாக்கள்,உலாத்தல்கள் எப்போதும் மனதுக்கு சந்தோசத்தை வரவழைக்கக் கூடியவை.அதிலும் பிரிந்த உறவுகளைக் காணச் செல்வது என்பது இன்னும் ஒருபடி கூடுதல் சந்தோசத்தைத் தரக்கூடியவை தான்.எல்லாவற்றையும் விட போர்,தொழில்,படிப்பு எனப் பல காரணங்களினால் பிரிந்திருந்த/பிரித்துவைக்கப்பட்டிருந்த உறவுகளை,ஊர்ச்சொந்தங்களைக் காணச்செல்லும் போது மனதில் ஏற்படும் கிலேசம் அலாதியானது.அனுபவிக்க சுவையானது.ஆனால் அந்தப் பயணங்களே சோகமாய்முடிகின்ற சோகம் ஈழத்தில் மட்டுமே அரங்கேறமுடியும்.அப்படியானதொரு சோகமான/சுமையான அலைச்சல்ப் பயண அனுபவமொன்று தான் இந்தப்பதிவு.
கொழும்பிலிருந்து 2008/04/06 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பத்து மணி தொடரூந்தில்(ரயில்)பல்கலை நண்பர்கள் பத்துப் பேர் ஒரு படையாய் திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டோம்.மறுநாள் காலை ஏழுமணியளவில், எங்களை தலைநகர் நண்பர்களான சைந்தனும்,பிரதீசனும் வரவேற்றனர்.வந்ததில், பாதி சைந்தனின் வீட்டிலும் மீதி பிரதீசனின் வீட்டிலுமாக தஞ்சம் புகுந்தது.சைந்தன் வீட்டில் என்னுடன் பால்குடி,றமணன்,தனேசன் ஆகியோர் தங்கினர்.சயந்தனின் அம்மாவின் அன்பான உபசரிப்பும்,கனிவான பேச்சும்,சுவையான சாப்பாடும்,நோகடிக்காத நக்கல்களும் ,மற்றும் சைந்தனின் அப்பா,தம்பியின் உதவி,ஒத்தாசைகளும் நன்றாகவே அனைவரையும் கவர்ந்தது.
திங்கட்கிழமை மதியமளவில் யாழ் நோக்கிய கப்பல் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றே நாங்களனைவரும் கோணமலையில் கால்பதித்திருந்தோம்.ஆனால் எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் காங்கேசந்துறையிலுருந்து புறப்பட்ட கிறீன் ஓசன்(Green Ocean) கப்பல் கடற்காற்றுக் காரணமாக காங்கேசந்துறைக்கே திரும்பவும் அனுப்பப்பட்ட சேதி கேட்டுத் தவிடுபொடியானது.நாங்களும் கப்பல் வரும் வரும் என்று எதிர்பார்த்தே களைத்துவிட்டிருந்தோம்.
ஏழு தரம் கப்பல் பயணங்களுக்காக திருகோணமலை சென்றிருந்த போதும் அவ்வளவு பரிச்சயப்பட்டிராத திருகோணமலை நகர் வீதிகளில் நண்பர்களனைவரும் மிதிவண்டியிலும்(சைக்கிள்),ஈருருளியிலும்(மோட்டார்சைக்கிள்),நடையிலுமென நடையளந்தோம்.மாலைப் பொழுதை திருகோணமலைக் கடற்கரையில்(Beach)ஆனந்தமாய்க் கழித்தோம்.அன்றைய பொழுது பெரும்பாலும் பிரயோசனமற்றதாகவே கழிந்திருந்ததனாலும்,அடுத்தநாளும் கப்பல் வருவது உறுதியில்லை என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததனாலும்,அடுத்தநாள்ப் பொழுதை முற்கூடியே திட்டமிட்டிருந்தோம்.
முதல்நாள் போட்ட திட்டத்தின்படி செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு சிறிய ஹையேஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி,கன்னியா வெந்நீர் ஊற்றுக்குச் சென்றோம்.இலங்கைத் தமிழ் மன்னனான இராவணனால் அருகருகே அம்புகளால் துளைக்கப்பட்டு,ஆவி பறக்கும் சூட்டோடுடனொன்றும்,"ஆ.. குளிருது" எனக் கத்தச் சொல்லும் குளிரோடின்னுமொன்றுமென வெவ்வேறு வெப்பநிலைகளயுடைய நீரை அருகருகிலிருக்கும் ஏழு கிணறுகள் கக்குவகைக் கண்ணுற்று அதசயித்தோம்.
போகும் வழியெங்கும்,எம்மண் கபளீகரம் செய்யப்பட்டு,வரலாற்று சின்னங்கள், வரலாறுகள் சிதைக்கப்பட்டு,அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்ட,மாற்றப்பட்ட சோகங்களை,வலிகளை,வேதனைகளை,ரணங்களை,எமது இயலாமைகளையும் கூடவே நெஞ்சில் ஏற்றிக் கொண்டே சென்றிருந்தோம்.திருகோணமலை நெல்சன் திரையரங்கில் தனுசின் "யரடி நீ மோகினி" படத்தின் மதியக் காட்சியினைப் பார்த்தோம்.பின்னேரப் பொழுதுப் வழைமை போலவே பீச்(கடற்கரை),கொத்துரொட்டிக்கடை என கரைந்தது.
அடுத்த நாளும் என்ன செய்வதென்றே தெரியாத நிலை.ஆனாலும் அன்று கப்பல் வருவதற்கு அதிகளவு சாத்தியமுள்ளதாக கொஞ்சம் நம்பிக்கையான செய்தியொன்றினைக் கேள்வியுற்றோம்.ஆனாலும் உறுதி செய்யப் படாததால் அன்று புதன்கிழமை காலையிலே ஈழத்திலே பாடல்பாடப் பெற்ற தலங்களிலொன்றான திருக்கோணேஸ்வரத்துக்கு சென்றோம்.பாவிகளான எங்கள் இனம் வழிபடுவதலானோ என்னவோ கோணைநாதரும் பழைய டச்சுக் கோடை வாசலோடு வெளியே வரமுடியதவாறு அல்லது வெளியே வரவிருப்பமின்றி உள்ளேயே பூட்டப்பட்டுக் கிடந்தார்.எத்தனை தடைகள்,முள்ளுக் கம்பிகளின் உச்சப் பாதுகாப்போடு,உயர் பாதுகாப்பு வலயத்தில் அவர் அமைதியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
அமைதியான சூழலில்,அமைந்திருந்த ஆலயத்தையும்,கோணமலையிலிருந்து கொண்டு மூன்று பக்கம் தரையாலும்,ஒரு பக்கம் கடலாலும் சூழப்பட்டிருந்த திருகோணமலை நகரினதும்,சிறு குன்றுகளினதும் அழகையும்,போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்ப்ட்டு கடலில் மூழ்கினாலும் வெளித்தள்ளிக் கொண்டிருந்த புராதன ஆலயத்தின் சில பகுதிகளையும் கண்ணுற்றவாறே திரும்பிவந்து கொண்டிருந்தபோது, கப்பல் வந்த சந்தோசச் சேதி கேட்டு,திருகோணமலைக் கச்சேரிக்கு(அரசாங்க அதிபர் இல்லம்-இந்திய பாசையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)மூட்டை முடிச்சுகளுடன் ஓடினோம்.
தூக்குத் தராசில் நிறுத்து,எங்களது ஒவ்வொருவரது பொதிகளின் நிறையும் 30 கிலோவைத் தாண்டவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த "ஒன்றுக்கும் உதவாத" பஸ்களில் ஏறினோம்.துணையின்றி நடக்க முடியாத கிழவியென்றாலும் தன்னைவிடப் பெரிய மூட்டை முடிச்சுகளைக் காவிச்செல்லும் ஈழப்பரம்பரையில் வந்த நாங்கள் எல்லாரும் அந்த பஸ்களீன் அரைவாசிக்குமேல் நாங்கள் ஊருக்கு கொண்டு செல்லும் பெட்டி,படுக்கைகள்,தின்பண்டங்கள்,உடுதுணிகள்,ரயர்கள்,துணிகள்,சின்னப்பிள்ளைகளூக்கு விளைய்யாட்டுச் சாமான்கள் என அனைத்தாலும் நிரம்பியிருந்தோம்.
அனைவரும் ஏறியபிறகும் பட்டப்பகலில் நட்டநடு வெயிலில் வேர்க்க,விறுவிறுக்க,கால்கள் கடுகடுக்க பஸ்ஸினுள்ளே நின்றோம்.பின்னர் ஒருவாறாக 2 மணிக்கு புறப்பட்ட பஸ் படையணி சீனக்குடா துறைமுகவாசலை 30 நிமிடத்தில் அடைந்து,மீண்டும் அங்கு காத்திருக்கத் தொடங்கியது.ஒரு 10, கிலோமீற்றருக்கும் குறைவான அந்த பஸ்பயணத்துக்கு, ஆளுக்கு 100 ரூபாவும் ஒவ்வொரு பயணப்பொதிக்கும் மேலதிகமாக 100 ரூபா வீதமும் வாங்கிக் கொள்ளையடித்த உலகமகா கொள்ளைக்கூட்டம் சனத்திடம் காசைப் புடுங்கிச்சென்றது.தமிழில் தரச்சொல்லிக்கேட்டுத் தராவிட்டால்,சிங்களத்தில் மிரட்டுவதாய் இருந்தது அவர்களது உத்தி.
மீண்டும் சீனக்குடாவில் ஒன்று,ஒன்றரை மணிநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உள்ளனுமதிக்கப் பட்டோம்.எதற்கும் வரிசையில் நின்று பழகிய அல்லது வரிசையில் நின்றால் தான் உங்களுக்கு பிச்சையோ அல்லது ஏதுமோ தரமுடியும் என்று பழக்கப்பட்ட/அச்சுறுத்தப்பட்ட எமது சனம் பஸ் நிறுத்தப்பட்டதும் இறங்கி ஓடி வயதுவந்தவர்களையும் தள்ளிவிழுத்தி,பயணப்பொதிகளையும் ஏறி உழக்கிக்கொண்டு வரிசையிலே இடம்பிடிக்க செம்மறி ஆட்டுகூட்டம் போல ஓடியது.வரிசையிலே காய்ந்து கருவாடாகி பைகளையெல்லாம் எடுத்து எறிந்து,கொட்டிச்சிந்தி பயணப்பை சோதனை முடிய,உடற்சோதனை,அதுமுடிய கைத்தொலைபேசிகளைக் கையளிக்க அடுத்த வரிசை(கைத்தொலைபேசிப் பாவனையைக் கப்பலில் அனுமதித்தால் கப்பலின் நடமாட்டங்கள் தரவுகடத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாம் இது)என்று ஒரு பாடாகிப் போய்விட்டது.
தலையில் போட்ட தொப்பி தொடக்கம்,பேர்ஸுக்கையிருந்த நயினாதீவு நாகபூசணியம்மன் படம் வரைக்கும் ஒவ்வொன்றும் அக்குவேறு,ஆணிவேராகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொன்றுக்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கப்பட்டோம்.வீட்டுக்குக் கொண்டு செல்லவென வாங்கிவந்த ஷேவிங்க் ரேஸர்கள்,நெருப்பெட்டியள்,பிளேட்டுக்கள் என்று எங்கள் காசிலே வாங்கப்பட்ட பொருட்களெல்லாம் எல்லாம் எங்கள் கண்முன்னே எங்களைக் கேளாமலே தூக்கியெறியப்பட்டன(ராசாக்கள், ஏன் உங்களை கேக்கோணும்???).என்று இவ்வாறு முதற்கட்டச்சோதனை முடிந்தபின்னர் பஸ்களில் மீண்டும் ஏற்றப்பட்டு,துறைமுகத்தில் இறக்கப்பட்டு,மீண்டும் துறைமுகப் பாதுகாப்புப் படையினரால் அடுத்தகட்டச் சோதனை என்று,இதெல்லாம் முடிந்து கப்பலில் ஏற பின்னேரம் ஐந்தைத் தாண்டியிருந்தது.
அதற்குள்ளும் பஸ்களில் "உது நான் பிடிச்சு வைச்சிருந்த சீற்..நீ என்னெண்டு இருக்கலாம் எண்டு அதுக்குள்ளை குடும்பிபிடிச்சண்டை.எவ்வளவு தான் கஸ்ரம் வந்தாலும் எங்கடை சனம் திருந்த மாட்டுது எண்டது மட்டும் நிச்சயம்.கூடவே வந்திருந்த 400,500 சனமும் சோதனைகளை முடிச்சு கப்பல் வெளிக்கிடத்தொடங்க இரவு ஏழுமணியைத் தாண்டியிருந்தது.திருகோணமலைத் துறைமுகத்தின் இயற்கை அமைப்பையும்,அதன் வனப்பையும்,அதற்குள் அமைந்திருந்த,ஒளிந்திருந்த இயற்கையான பாதுகாப்பையும் பார்த்தபோது தான் ஏன் சர்வதேச,பிராந்திய வல்லூறுகள் அதையே வட்டமிடுகின்றன என்ற இரகசியத்தைப் பரகசியமாக்கியது.
கப்பல் துறைமுகத்தைவிட்டு மெதுவாக நகர்ந்து,பாதுகாப்புக் காரணங்களுக்காக கரையோரமாகச் செல்லாமல்,செங்குத்தாக நேரடியாக சர்வதேசக் கடலெல்லையினூடே பயணித்தது.நானும் அவ்வப்போது சென்ற இடங்களிலெல்லம் சாப்பிட்ட சாப்பாடுகள்,கப்பல் புறப்பட்டு,கப்பல் குலுக்கத் தொடங்கியதும் வயிற்றைக் குமட்டச்செய்தது.நானும் பேசாமல் சத்திக் குளிசைப்போட்டிட்டு சத்தம் போடாமல்ப் படுத்திட்டன்.கடற்காற்றினால் கப்பல் அலைகளால் தூக்கிவீசப்பட்டு,முன்னோக்கி குற்றிக்குற்றி எழும்பிப் போய்க்கொண்டிருந்தது.தண்ணி கப்பலின்றை மூன்றாம் தட்டுவரை எழும்பி அடித்தது.கப்பலில் சனமெல்லாம் மாறிமாறி கப்பலுக்குள்ளும்,வெளியிலும் சத்தியெடுத்துக்கொண்டிருந்தது.சத்தியெடுக்காவிட்டாலும் அந்தக் காட்சிகளைப்பார்த்தால் சத்தி தானாகவே வந்துவிடும்.சின்னப்பிள்ளைகளின்ரை ஓலம் காதைக்கிழித்தது.
கப்பல் அன்று பகல்முழுவதும் ஓடியது.உந்தா கரை தெரியுது.அந்தா கரை தெரியுது என்று யாரையாவது ஏமாற்றி எங்கடை இயலாமைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு பொழுதுபோக்கு எங்களுக்கு இருந்திருக்கவில்லை."கரை தட்டும்",தட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சனமெல்லாம் சோர்ந்தே போய்விட்டது.எங்கடை சனத்திடம் காசைத்த்ட்டிப் பறித்தசாதி,கப்பல் சிற்றுண்டிச்சாலையிலும் தேனீர்,சிற்றுண்டிகளை அகோரவிலைக்குவிற்று மீண்டும் காசை வாரிச்சுருட்டிக்கொண்டது.ஒரு தேத்தண்ணி(அது தேத்தண்ணியே இல்லை.கசாயமோ எந்தக் கண்றாவியோ தெரியாது)40 ரூபாக்கும்,ஒரு நூடில்ஸ் 80 ரூபாக்கும் விற்கப்பட்டது.சனத்துக்கும் இருந்த பசிக் கொடுமையிலை எதையாவது வாங்கிச் சாப்பிடவேண்டும் என்ற அங்கலாய்ப்பிலே அந்த ஒறுத்தவிலையிலும் வாங்கி தின்று குடித்தது.அது ஏற்கனவே வயிற்றுக்குள் இருந்த சாப்பாட்டையும் சத்தியாக கப்பலுக்குள்ளும் கடலுக்குள்ளும் எடுத்துத் தள்ளவைத்தது.
அதற்குள்ளும் அந்தச் சனங்கள்,கொழும்பிலையிருந்து வீட்டுக்குப் போகேக்கை நாலு அப்பிளாவது வாங்கிக் கொண்டு போகாட்டில் அதுகள் என்ன நினைக்குங்கள் என்று கப்பலில் இருந்த கன்ரீனில் அப்பிளின் விலையைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டது.வெளியில் 20 ரூபாவுக்கிருந்த அப்பிள் அங்கு 60 - 100 வரை விற்கப்பட்டது. இப்படி கஸ்ரங்கள் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டிருந்த சனத்துக்கு கப்பல்,காங்கேசந்துறைத் துறைமுகத்தை நெருங்கி நங்கூரம் போட்டதால் பெரிய சந்தோசம்.அங்கும் மேலும் அரைமணித்தியாலக் காத்திருப்பு.
எங்கட சனத்தை எவ்வளவு நேரமும் காத்திருக்கவைக்கலாம் தானே.ஏனென்றால் அதுகள் என்ன சொன்னாலும் செய்யிற செம்மறியள் தானே?,அதுகளுக்கு வேறைவேலைவெட்டி இல்லைத்தானே,அதுகளுக்கு நேரத்தின் அருமை தெரியாதுதானே.இந்தச்சனம் அடிமைகள் போல்,ஆட்காட்டி விரலின் அசைவுகளுக்கெல்லாம் ஒத்திசைந்து,மசிந்துகொடுக்க வேண்டும் என்பது அவர்களின் நினைப்பு.நாங்கள் என்ன செய்ய? அந்தக் காத்திருப்புக்குப்பினர், காங்கேசந்துறைமுகத்திலிருந்து வந்த கடற்படைச்சுழியோடிகள் கப்ப்லின்கீழ் சுழியோடிச்சென்று கப்பல்வரும் வழியில் எந்தவொரு வெடிபொருளும் இணைக்கப்படவில்லை என்று கப்பலையும்,சனத்தைக் கப்பலுக்கை வைத்தே மீண்டும் ஒரு சோதனை செய்தபின்னர்,கப்பலைத் துறைமுகத்தினுள் உள்நுழைய அனுமதித்தனர்.
ஆனால் எமது துரதிஸ்டம்,ஒரே ஒருகப்பல் மட்டுமே கரை நெருங்கக்கூடிய காங்கேசந்துறைமுகத்தில் ஒருகப்பல் ஏற்கனவே சாமான் இறக்கிகொண்டிருந்ததால் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டு,வேறு கொள்கலன்களினால் தரையிறக்கப்பட்டோம். யாழ்மண்ணிலே எமது கால்பட ஏறத்தாழ 24 மணித்தியாலங்களை அதாவது ஒருநாளை நாங்கள் கடலிலே,கப்பலிலே செலவழித்தபின்னர், அடுத்தநாள் வியாழன் மாலை ஏழுமணியளவில் கால் பதித்தோம்.ஏற்கனவே 24 மணித்தியாலத்துக்குமேல் சாப்பாடு தண்ணியில்லாமல்,சாப்பிட்டதையும் சத்தியெடுத்து மிகவும் சோர்ந்திருந்த நாங்களே(இளைஞர்கள்)கப்பலிலிருந்த சாமான்களையிறக்கப் பணிக்கப்பட்டோம்.
எதிர்த்தவர்கள் கை ஓங்கப்பட்டு,சீருடைகளால் மௌனிக்கப்பட்டு அடிமைகள் போல் நடத்தப்பட்டனர்.சனமெல்லாம் சீருடையினரால் ஓட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த இலங்கை.போக்குவரத்துக்.சபை பஸ்களிலும் அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகள்,மற்றும் குடாநாட்டுக்கு வந்திருந்த தபால்கள்,மற்றும் சில தனியார் வியாபாரிகளின் பொருட்களும் காங்கேசந்துறைமுகத்துக்கு மா ஏற்றிச் செல்லவந்திருந்த லொறிகளிலும் ஏற்றப்பட்டன.கப்பலில் வந்திருந்த ஸ்கூட்டி பெப்(Scooty Pep) மோட்டார்சைக்கிளை தரையில் நின்றிருந்த லொறிக்கு ஏற்றச்சொல்ல உத்தவிடும் அதிகாரத்தை எங்களிடம் இல்லாத "கருவி" ஒன்று அவனுக்குக் கொடுத்திருந்தது.
ஒருவாறாக எல்லாம் ஏற்றப்பட்டபின்னர்,பஸ்களில் சனம் போக,லொறிகளில் சாமான் பாக்குகள்(Bags) தெல்லிப்பளை வரை பின் தொடர்ந்தன.அங்கும் அடுத்த சோதனை,பதிவுகள்,பாஸ் நடைமுறை,படமெடுப்புக்கள் என எல்லாம் முடிய இரவு 8.30 ஐத் தாண்டியிருந்தது.பின்னர் எங்களின் பொதிகளை எடுக்க லொறிகளுக்குச் சென்றால் 10 கிலோமீற்றருக்குப் பொதிகொண்டு வந்த கூலியாக ஒவ்வொரு பொதிக்கும் 100 ரூபா கேட்டான்கள்."நாங்கள் தான் ஏலாமல் இருந்தாலும் தூக்கி ஏத்தினாங்கள்.பிறகேன் எங்களிட்டையே காசு கேட்கிறியள்?" என்று ஏற்கனவே அலுத்துப் போயிருந்த 3 நாள் திருகோணமலை வாழ்க்கை,ஒருநாள் கப்பல் பயணம்,இந்த அலுப்போடை சாமானைத் தூக்கி ஏத்தவைச்ச ஆத்திரம் எல்லாத்தையும் சேர்த்துக் கேட்டால் "அதைப்பற்றி எங்களட்டைக் கேளாதையுங்கோ.100 ரூபா வந்து லொறியின் கூலி.ஏற்றுகூலியில்லையென்றான்.இந்த வாய்கலப்புக்களின் சத்தம் கேட்டு இரண்டு சோடி சப்பாத்துக்கள் எங்களை நெருங்கிவருவது தெரிகிறது.இப்போது எங்களுக்கு 100 ரூபா பெரிதில்லை.உதுக்குப் போய்க்கதைப்பது புத்திசாலித்தனமில்லை என்பது புரிகிறது.நிசப்தமகியவாறே காசைத் தூக்கி கடுப்போடு தூக்கி எறிஞ்சுபோட்டு பைகளைதூக்கிகொண்டு நடக்கிறோம்.
சரி எவ்வளவு கஸ்ரங்கள்,வேதனைகள்,கட்டுப்பாடுகள்,இருத்தியெழுப்புக்கள் எங்கள் வீடுகளூக்குப்போவதற்கு மட்டும் என்று எங்களையே நொந்துகொண்டு,விரக்தியின் உச்சியில் இன்றைக்காவது எப்பிடியும் வீட்டை போய் சேருறது தான் எண்டு 9 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடத்தில் 9.05 அளவிலே தீர்மானித்து அங்கு எஞ்சிநின்ற அந்தக் "கடைசி" வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தினோம்.அங்கிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீக்கு அப்பால் இருக்கும் எங்கள் பிரதேசத்துக்கு செல்ல நான்,பால்குடி,கருணையூரான்,கௌரி அண்ணா,பிரதாப் அண்ணா,சுரேஸ்,இரண்டு பெண் நண்பிகள் என 15 பேர் என ஒரே ஒரு வயது வந்தவரைத்தவிர எல்லா இளந்தாரிகளும் புறப்பட்டோம்.
நான் தெல்லிப்பளைக்கு வந்து சேர்ந்தவுடனேயே வீட்டே தொலைபேசி நான் வந்திறங்கியதைச்சொல்லியிருந்தபோதும், இன்றே வீட்டே வருகிறேன் என்று சொன்னால் பேச்சு விழும் என்றபடியால் யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்கள் வீட்டிலே தங்கிவருவதாக்வே சொல்லியிருந்தேன்.உண்மையிலேயே யாழ்ப்பாண நகர நண்பர்களான கழுவாவும்(கஜானந்) தனேசனும் தங்கள் வீடுகளில் இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறே கேட்டிருந்தார்கள்.ஆனால் இன்றே எப்பிடியாவது வீட்டே போய்ச்சேர்வது என்று என்று எல்லாரும் முடிவெடுத்து ஒவ்வொரும் புறப்பட்டோம்.
ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் உயிரைக்கையிலே பிடித்துக்கொண்டு,சில இடங்களில் நட்ட நடுவீதியில் சாமான்களைக் கொட்டிக்காட்டி,சில இடங்களில் அடிவாங்கப்பாத்து,பல இடங்களில் "அவர்களிடம்" பேச்சு வாங்கி வீடு போனோம்.அதுவும் ஒரு இடத்தில் அவன் நிறுத்தச் சொல்லியும் இரவிலே சரியாக கவனிக்காததால் நிறுத்தாமல் சென்றதால் பின்னுக்கிருந்து அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியைத்தூக்கி லோட்(Load) பண்ணிக்கொண்டோடிவந்தான்.அப்போது பக்கத்திலிருந்த கருணையூரான் நகைச்சுவையாகவோ அல்லது சீரியசாகவோ சொன்ன "வெடி வைச்சானெண்டால் பின் சீற்றிலை இருக்கிற நானும் நீயும் தான் முதலிலை போவம்" எண்ட அந்த சீரியசான ஜோக்கை நான் செத்தாலும் மறக்கமாட்டன்.அந்த நேரத்தில் அப்படித் தான் நிலமையிருந்தது.
பட்டப் பகலிலேயே பலரும் பாத்திருக்கச் சுடப்பட்டாலே "இனந்தெரியாதவகளால்" விரும்பியோ, விரும்பாமலோ உரிமைகோரும்/உரிமைகோரவைக்கப்படும் மண்ணிலே,ஊரடங்குச் சட்ட நேரத்திலே அதுவும் நிறுத்தச் சொல்ல்வும் நிறுத்தாமல் சென்றால் அந்தச் சூட்டுக்கு காரணத்தைக் கண்டுபிடிப்பது என்பதுவோ அவர்களுக்கு கடினமாய் அமைந்து விடப்போவதில்லை.காரணமில்லாத "எல்லாவற்றுக்கும்" காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றபோது இது ஒன்றும் கடினமல்லவே. நாங்கள் சென்ற வழியிலே அந்தக் "கடைசி" வாகனம் மூன்று இடத்திலே நின்றது.
நட்டநடு நிசியினிலே,நாய்கள் குரைக்கையிலே,சுடுகாடு போல எங்கும் சனநடமாட்டமில்லாத, இருட்டுக்குள்ளை பாதையும் தெரியாமல் நாங்கள் அந்தரப்பட்டுப் போய்க்கொண்டிருந்தாலும், போற வழிகளில் எங்கன்றை வாகனம் நிக்கேக்கையெல்லாம் இறங்கித் தள்ளி ஸ்டாட்(Start) பண்ணிப் போகேக்கையெல்லாம் சத்தம் கேட்டு சனம் றோட்டு லைற்றைப் போடுதுகளேயொழிய ஒரு சனமும் ஆபத்துக்கு உதவுவதற்கு வர தயாரில்லை.அந்தளவுக்குப் பயப்படுத்தப்பட்டிருந்ததுகள்.என்ன செய்யிறது எண்டு எங்களது சனத்தின்ற நிலையை நினைச்சு நாங்களே தள்ளி ஸ்டாட் பண்ணிகொண்டு போய் வீடு சேர்ந்தோம்.
வீட்டை போய் இறங்க இரவு 12.30 ஆகியிருந்தது.வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டுப் பார்த்தேன்.எவரும் வரவில்லை.Bag ஐத் தூக்கி உள்ளேபோட்டுவிட்டு,மதிலாலை ஏறிக்குதிச்சு உள்ளே போய், உள்கதவு திறப்பு எங்கே வைப்பார்கள் என்பது என்க்கு ஏற்கனவே தெரியும் என்பதால் யன்னலைத் திறந்து, உள் கதவைதிறந்து கொண்டு உள்ளே போய் வீட்டுக்காரையெல்லாம் எழுப்பினேன்.ஒரு சாப்படும் வீட்டையிருக்கவில்லை.அகோரபசி வேறை.அதுக்குப் பிறகு தான் அம்மா புட்டு அவிச்சு தந்தாப்போலை அஞ்சாறு நாள்ச் சாப்பிடாததெல்லாத்தையும் ஒண்டாச் சேத்து ஒரு பிடிபிடிச்சிட்டுப் படுக்க 1.30 ஆகி விட்டிருந்தது.எனது வாழ்க்கையில்லே அந்தப்ப்யணத்தை செத்தாலும் மறக்கமாட்டன்.உதிலே இருக்கிற யாழ்ப்பாணத்துக்கு போக நாங்கள் கொஞ்ச நாள் பட்ட பாடு,படாதபாடு.உலகிலே வேறு எந்தவொரு இனமும் ஈழத்தமிழ்ச்சனம் மாதிரிக் ஒரு விசயத்துக்கும் கஸ்ரப்ப்ட்டிருக்கது.
Friday, March 18, 2011
Subscribe to:
Posts (Atom)