Wednesday, January 5, 2011

அது ஒரு அழகிய மழைக்காலம்

மழை எல்லாருக்கும் பிடிக்கும்.மழையில் நனைய மனம் துடிக்கும்.ஆனால் சளி வந்திடும் எண்டு மூளை அலாம்(Alarm) அடிச்சுப் போடும்.பிறகென்னன்டு நனையிறது...?ஆனால் தமிழ்ப் படங்களிலை மட்டும் ஹீரோவும் ஹீரோயினும் தடிமனெல்லாம் வராமல் எப்படித் தான் மழையிலை நனைஞ்சு லவுசு பண்ணினமோ எண்டு தெரியேல்லை.அதிருக்க,இண்டைக்கு உங்களையும் சேத்து ஒருக்கால் நனைய வைப்பம் எண்டு சின்ன ஒரு பிளான்.பாப்பம்.


வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை,தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை எண்டு இரண்டு காலப்ப்பகுதிகள் தான் இலங்கைக்கு மழையை வழங்குகின்ற காலப்பகுதிகள் எண்டு சின்னனிலை உந்த சமூகக்கல்வியும் வரலாறும் எண்ட புத்தகத்திலை படிச்சதா சின்னதொரு ஞாபகம்.அதிலையும் வடகீழ்ப்ப்பருவக்காற்று மட்டும் தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு மழை வழங்குகின்ற காலம்.பொதுவாக ஐப்பசி தொடக்கம் மார்கழி வரை தான் இந்தக்க்காலம்.இயற்கை கூட எங்களை புறக்கணிக்கிறதா..?நாடெங்கும் வருடமெல்லாம் மழை கொட்ட எங்களுக்கு மட்டும் இரண்டு மாத மழை. மழையில்லை,மலையில்லை,நதியுமில்லாமல் நாதிய்ற்ற சனமான ஈழத்துத் தமிழ்ச்சனம்.ம்ம்ம்ம்.
பொதுவாக கும்பத்துக்கை(நவராத்திரி) மழை தொடங்கி, கந்தசசட்டி, பெருங்கதை, திருவெம்பா போன்ற விரதங்களுக்கெல்லாம் கொட்டி,தைப்பொங்கலோடை வெளிச்சிடும் எண்டு பெரியாக்கள் சொல்லுவினம்.அவர்களது அனுபவக் கணிப்பு பெரும்பாலும் பொய்க்காது.சிலவேளைகளிலை முந்திப்பிந்தி, காலந்தப்பிப் பெய்யும். மழை வருமட்டும் எல்லாரும் எப்பாடா மழை வரும் எண்டு பாத்துக்கொண்டிருப்பினம்.என்னடா இன்னும் மழையைக் காணேல்லை,இந்தமுறை வராதோ எண்டு எல்லாரும் மழைக்குத் தவங் கிடப்பினம்.ஐப்பசி மழை வந்தால் தானே வெங்காய நடுகையோ,நெல் விதைப்பையோ தொடங்கலாம்.ஆனால் வந்த பிறகெண்டால் அது வாங்கிற பேச்சு உலகத்திலை ஒருத்தரும் வாங்கியிராத பேச்சாயிருக்கும்."இழவு விழுந்த மழை","அரியண்ட மழை",பெய்ஞ்சால் பெய்ஞ்சு போட்டுப் போகோணும்.இது ஒரு வேலையுஞ் செய்ய ஒரு வழியில்லை.அடுப்பெரிக்க விறகுமில்லை.தெருவாலை போக வழியில்லை,உடுப்புத் தோய்ச்சுக் காயப்போட வழியில்லை,மாடுகளை மேய்ச்சலுக்கு அவிட்டு விடேலாதாம்,கூலி வேலையுமில்லை, அடியோ பிடியோ எண்டு,அது தாராளமாகத் திட்டுவாங்கும்.அந்த மழை பற்றிய பதிவொன்று தான் இது."என்ன நேற்றுப் பெய்ஞ்சது காணாதெண்டு இண்டைக்கும் வரப்போகுது போல கிடக்குது.இப்பவே கோலங் கட்டுது.நேற்றையான் மாரி(மாதிரி) பராதியிலை விறகுகளை எடுத்துவைக்க அயத்துப் போகாமல் இப்பவே அதிலை கிடக்கிற கொக்காரையள், மட்டையள், பழம் மூரியள்,பன்னாடையள் கொஞ்சத்தைக் கொண்டு போய் அடுப்பு மாடத்திலை காயப் போடு,அடுப்பு வெக்கைக்கு நேற்றையான் ஈரமெல்லாம் காய்ஞ்சு போடும்.மிச்சத்தைக் கொண்டு போய் குசினிக்குப் புறத்தாலை இருக்கிற பட்டடையிலை அடுக்கி வை.பேந்து நாளைக்கு,நாளையிண்டைக்கு தேவைப்படும் " எண்டு அம்மாவுக்கு, அம்மம்மா ஓடர் போடுறா."இஞ்சை முத்தத்திலை காயவைச்ச கொட்டை எடுத்த புளியையும் பினாட்டையும் எடுத்து சைற் அறைக்கை வைச்சுப் போட்டு பினாட்டுப் பாயைச் சுத்திக் கொண்டு போய் சின்னறைக்கை வை பாப்பம்" எண்டு மழை வரவை எதிர் பார்த்து, தம்பி தங்கச்சியோடை பழங்கொப்பியொற்றையிலை கடதாசிக் கப்பல் கட்டும் பணியில் கரிசினையோடை ஈடுபட்டுக் கொண்டிருந்த என்னை அம்மா குழப்பிறா.. நான் ஆஆய்ய்ய்ய்.. எண்டு இழுக்க......., இப்ப உதிலை கிடக்கிற ஈக்குப்பிடியாலை வாங்கப் போறாய்..சொன்னதைச் செய்து பழகு பாப்பம்.. ... பழகிறியள் பழக்கம் இப்பவே......எண்டு அம்மம்மா என்னை உறுக்குறா...நானும் வாய்க்குள்ளை வந்த எதையோ சொல்லிக் கொண்டு சொன்ன வேலையைச் செய்யிறன்...வானம் இப்ப இன்னும் கொஞ்சம் இருட்டத் தொடங்கீற்றுது.அப்பர் மாலந்தெணித் தோட்டதுக்கை கட்டியிருந்த மாட்டை அவிட்டுக்கொண்டு வாறதுக்கு ஓடிறார்.இப்படி எல்லாரும் ஆளாலுக்கொரு திசையிலை ஓடி ஒவ்வொரு வேலையாப் பாத்துமுடிக்கவும் மழை வரவும் சரியாக்கிடக்குது.மழை கொஞ்சம் கொஞ்சமாத் துமிக்கத் தொடங்கி,கொஞ்ச நேரத்திலை கொட்டத் தொடங்குது.நாங்கள் மூண்டு பேரும் ஆ.. அய்ய்ய்ய் மழை... எண்டு துள்ளிக் குதிக்கிறம்.என்ரை ஒராம் ஆண்டு கொப்பியெல்லாம் கப்பலாக உருமாறி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டா போய்க் கொண்டிருக்குது.எங்கட்டை வீட்டிலை இரண்டு முகடுகள் செங்குத்தாச் சந்திக்குது.அதிலை ஒரு பீலி ஒண்டும் இருந்தது.அந்தப் பீலியாலை மழைத் தண்ணி பயங்கர force ஆ வந்து விழும்.அந்தப் பீலித் தண்ணி வந்து விழுகிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளித் தான் எங்கடை கப்பலுகள் தங்கன்ரை கன்னி அணி வகுப்பைத் தொடங்கி அணி வகுத்துச் செல்லும்.பீலித் தண்ணி விழுகிறதாலை ஏற்படுகின்ற அலைகளாலை எங்கடை கப்பலுகள் ஓரளவு கொஞ்சத் துர்ரத்துக்குப் போகும்.சிலதுகள் உந்தக் குப்பையள் ஏதாவது தடக்கி கொஞ்சத் தூரத்திலேயே நிண்டிடும்.சிலது பிரண்டு,கவிண்டு,தாண்டு போகும்.இதையெல்லாம் தாண்டி ஆற்றை கப்பல் கனதூரம் போகுதெண்டு எங்கள் மூண்டு பேருக்கும் போட்டியாய் இருக்கும்.கொஞ்சம் கடும் மழையெண்டால் ஓட்டுகுள்ளாலையும் அங்கை இஞ்சையெண்டு வீட்டுக்குள்ளையும் ஒழுகத்தொடங்கிவிடும்.பிறகு அந்த ஒழுக்குகளுக்கும் ஒவ்வொரு யத்துகளைக் கொண்டு போய் வைக்கிறதே பெரும் வேலையாப்போடும் எங்களுக்கு.
மழையோ கொட்டோ கொட்டெண்டு கொட்டிக் கொண்டிருக்கும்.எல்லாரும் ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் போட்டுக் கொண்டு கை,காலை குறட்டி வைச்சுக்கொண்டு,மழை எப்பாடா வெளிக்கும் எண்டு வெளிவிறாந்தை தாவாரத்துகு கீழை தூத்துவானம் அடிக்க அடிக்க,அதை ரசிச்சு,அந்த தூவானத்தை அனுபவிச்சுக் கொண்டிருப்பம்.ஆனால் அது விடுமே?அது மின்னல் வெட்டி,முழங்கி,கொட்டோ கொட்டெண்டு கொட்டிக்கொண்டிருக்கும்.மின்னல் வெளிச்சம் தெரியுதெண்டால் எல்லாரும் இரண்டு காதுக்குளையும் விரலை ஓட்டி இடியை எதிர்கொள்ள றெடியாகிடுவம்.இடி எங்கடை வீட்டுக்கு மேலை விழுந்திடக்கூடாது எண்டதோடை,அது இரதை வாழை மரத்திலை விழுந்தால் அதிலியிருந்து தங்கக்கட்டி கிடைக்குமாம எண்டு அந்தக் காலத்திலை ஆரோ அவிட்டுவிட்ட ரீலை நம்பி, எங்கடை இரதை வாழையிலை இடி விழுந்தால் நல்லாயிருக்கும் எண்டு சின்னப் பிரார்த்தனையும் உள்ளுக்குள்ளாலை நடந்து கொண்டிருக்கும்.இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மழை பெய்யிறது கொஞ்சம் நிண்டிட்டுது.எண்டாலும் கொஞ்சம் கொஞ்சமாத் துமிச்சுக் கொண்டிருக்கும்.எங்கனரை வீடுக்குப் பின்னலை இருக்கிற புளியங்காணி வேலிக்குள்ளாலை ஊரில் வெள்ளம் எல்லாம் எங்கடை வீட்டை ஊடறுத்த்தான் ரோட்டைப் போய்ச்சேரும்.இப்ப முழங்காலுக்கு மேலை வெள்ளம் முத்தத்தாலை ஓடிக்கொண்டிருக்கும்.
மழை விட்டவுடனை அந்த வெள்ளத்துக்கை தெம்பல் அடிச்சு, அந்தத் தெம்பல்த் தண்ணியிலை மற்றாக்களை நனைப்பிக்கிறது தான் எங்கடை அடுத்த விளையாட்டாயிருக்கும். "இஞ்சை மாட்டடி கிடக்கிற கிடையைப் பாருங்கோ.அதுகளும் மழைக்காக்கும் குளம் குளமா மூத்திரம் பெய்ஞ்சு தள்ளியிருகுதுகள்.மாட்டடியெல்லாம் சேறாக்கி வைச்சிருக்குதுகள்.உதிலை கேற்று வாசல்லை உந்த புளியங்காணிக்கிள்ளலை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டுவந்த, வெள்ள மண் கொஞ்சத்தை அள்ளிக் கொண்டு வந்து போடுங்கோ பாப்பம்.பாவம் கண்டுத் தாச்சி மாடு பேந்தும் இரவு உந்தச் சக்கலுக்கை தான் படுக்கப் போகுது" எண்டு அப்பாவுக்கு அடுத்த கொமாண்ட் அம்மம்மா போடுறா. (இதெல்லாம் ஒராம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு கால ஞாபகங்கள்..இனி தமிழ்ப் படங்களிலை வாறமாதிரி வேணுமெண்டால் ஒரு " 7, 8 ஆண்டுகளுகுப் பிறகு" எண்டு வசனத்தைப் போட்டிட்டு வாசியுங்கோவன்) .ஆம்பிளையள் எல்லாம் சைக்கிளை எடுத்துக் கொண்டோ,குடையைப் பிடிச்சுக் கொண்டோ மழைப் புதினங்களைக் கதைகிறதுக்காகவேண்டி வாசியாலையிலையோ அல்லது அரசடிச் சந்தியிலையோ கூடுவினம்.கூடி நிண்டு, "மட்டக் களப்பிலை இடுப்பளவுக்கு வெள்ளமாம்..","மலையிலை(திரிகோணமலையை மலை என்றும் அழைப்பார்கள்)காத்துக்கு வீட்டுச் சீற்றெல்லத்தையும் கழட்டிக் கொண்டு போட்டுதாம்","புத்தூர்ச் சந்தியில நிண்ட ஆலமரம் பாறி விழுந்திட்டுதாம்.","இரணைமடுக்குளம் நிரம்பீற்றுதாம்","ஓடக்கரைக்கை சைக்கிளை மேவி வெள்ளம் ஓடுதாம்" எண்டு அடியா பிடியா எண்டு நியூசுகளை அள்ளி விடுவினம்.


CNN, BBC க்காரரெல்லாம் நாங்கள் பேசாமல் தம்பசிட்டியிலையை ஒரு றிப்போட்டரை வசிச்சிருந்திருந்தால் எங்கடை சோலி,ஈசியா முடிஞ்சு போயிருக்கும் எண்டு நினைக்கிற அளவுக்கு கதை களை கட்டும்.ஆனால் அரைவாசிக்கு மேலை அப்பிடி இப்பிடி வாற கதை தானேயெண்டு எங்களுக்கு நாங்களும் அதிலை நிண்டு கதைக்கிற அளவுக்கு வயசுக்கு வந்தாப் போலை தான் விளங்கிச்சுது. சிலவேளைகளிலை எங்கடை வெங்காயப் பயிர்ச்செய்கை தொடங்கினாப்போலை வந்து எங்கடை வாழ்வை நாசமறுத்தும் இருக்குது இந்த மழை.. விடாமல் நாட்கணக்கில் கொட்டித் தீர்த்து வெங்காயம் எல்லாம் வெள்ளத்திலை மூழ்கினாப்போல அந்த வெள்ளத்தை மிசின்(வோட்டர் பம்) வைச்சு இறைச்சு விடவேண்டிய துன்பிய்ல அனுபவமெல்லாம் எங்களுக்கெல்லாம் வந்திருக்குது.வெள்ளத்துக்கு வெங்காயமெல்லாம் அழுக, போட்ட முதலெல்லாம் தோட்டத்துக்கையே தாண்டுபோன சோகங்களும் எங்கள் வாழ்வில் உண்டு.விடாது கொட்டி,எங்கள் வெங்காயங்களை அழுகவைத்து,எங்கள் வெங்காயங்களின் நாற்றம் தாங்காமல் நாங்களே மூக்கைப் பொத்திக்கொண்டோடவேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கெல்லாம் ஆளாக்கியிருக்கிறது இந்த மழை.ஏன் இந்தமுறையும் கோடைக்காய் செய்யிற நேரம் கொட்டுகொட்டெண்டு கொட்டி,பயிரெல்லாத்தையும் அழிச்சுப் போட்டுது.இப்பவென்னடாவெண்டு பாத்தால் வழமையா வைகாசிப் பறுவத்துக்கே ஒரு அந்தர் ஐயாயிரத்தைத் தாண்டாத வெங்காயம்,இந்தமுறை மாரிக்காய் நடுகைக்கே எண்ணாயிரம்,ஒம்பதாயிரம் விக்குதெண்டால் பின்னைப் பாருங்கோவன்.

என்ன இருந்தாலும் ஊரிலை மழையெண்டால் அந்த மாதிரித் தான் இருக்கும்.அது ஒரு அழகிய மழைக்காலம் தான்.

முத்தம் - இந்த முத்தம் காதலர்கள் பரிமாறிக்கொள்வதல்ல.முற்றத்தின் ஈழத்துப் பேச்சு வழக்கு

பாறி - வேரோடு சாய்ந்து அல்லது வேர் அழுகி, இத்துப் போய் பெரு மரங்கள் விழுவதைக் குறிக்கப் பயன்படும்

பீலி - இரண்டு கூரைகள் சந்திக்கும் போது ஏற்படுத்தும் நீரோட்டத்தை ஏந்துவதற்குப் பயன் படுத்தப் படுகின்ற அமைப்பு. அத்தோடு பனக் கிழங்கின் தண்டும் பீலியென்றே அழைக்கப் படுவதுண்டு.

தாவாரம் - வீட்டு,கொட்டில் நிலத்துக்கும், கூரைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி என்றும் சொல்லலாம்.

தூத்துவானம்/தூவானம் - மழைத்துளிகள் காற்றுக்கு சிறிதாக பறந்து வருதல்

அயத்துப் போதல் - மறந்து போதல்
யத்து - பாத்திரம்
பட்டடை - விறகுகள், பாத்திரங்கள்,வைக்கோல் போன்றவற்றை பக்குவமாக அடுக்கி வைக்கப் பயன்படும் அமைப்பு

மாடம் - இடம் என்றும் சொல்லலாம்.அடுப்புக்கு பின் பக்கம் உள்ள பகுதி தான் அடுப்பு மாடம் எனப்படும்.இதே போல் படமாடம் என்ற சொல்லும் உண்டு

வெக்கை - வெப்பம்
சக்கல் - சகதி
கிடை - நிலை என்றும் சொல்லலாம்.என்ன கிடை இது?அலங்கோலமாகக் கிடக்கும் போதுதான் இது பெரும்பாலும் பாவிக்கப்படும்

மழைக்காக்கும் - மழை என்ற படியால் தான் போலிருக்குது என்று விரித்து விளங்கிக்கொள்ளலாம்

தெம்பல் - வெள்ளத்தினுள் துள்ளிக் குத்த்து விளையாடுதல்
பராதி - வேலைப் பளுவில் கவனிக்காமல் விட்டு விடுதல் கொக்காரை,மூரி,மட்டை,பன்னாடை - பனையிலிருந்து கிடைக்கப்பெறும் விறகுப் பொருட்கள்

பிறத்தாலை - பிறகாலே/பின்னாலே
பேந்து - பிறகு
குறட்டி - உள்ளுக்குள் இழுத்து கை கால்களை மடித்து குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல்

நாளையிண்டை -நாளை மறுநாள்
கண்டுத்தாச்சி - கர்ப்பந்தரித்த மாடு
ஆற்றை - யாருடைய
ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் - வழமையாகப் போடுகின்ற ஒரு சுவேற்றருக்குப் பதிலாக இரண்டு,மூன்று சுவேற்றைகளைப் போடுதல் என்று விரித்து விளங்கிக் கொள்ளப்படலாம்

அவிட்டுவிட்ட ரீலை - புழுகு
பறுவம் - பூரணைதினம்
மேவி - மேலால் என்று தான் இங்கே பொருள் படும்.இன்னொரு பொருள் அவன் மேவி இழுத்திருக்கிறான் என்று அவனது தலை சீவப்பட்டிருக்கும் முறையையும் குறித்துநிற்கவும் பயன்படும்

4 comments:

 1. அருமை..அருமை...அனுபவித்து எழுதியுள்ளீர்கள்..நன்றி.

  ReplyDelete
 2. Super Super, appadiye palaya gnapahangal varuthu.

  ReplyDelete
 3. நன்றி ஜனா அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும்

  ReplyDelete
 4. நன்றி சஞ்சயன் உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும்

  ReplyDelete