Saturday, June 26, 2010

வெளி நாட்டுக் காசு

நான் கடந்து வந்த பாதையில் சில விடயங்களைக் காணும் போது எனக்கு அவை தப்பாகத் தென்பட்டிருந்த போதும் நான் அந்தத் தப்பைத் தட்டிக் கேட்டதிலை.கேட்க முயன்றதுமில்லை.ஆனால் அவை என்மனதை உறுத்தியிருக்கின்றன.எனது அடிமனதில் பதிந்திருந்த அவற்றுள் ஒரு சில விடயங்களை உங்களுடன் பகிர்வதன் மூலம், உங்களுக்கும் அது தப்பாகத் தெரிந்து, நீங்களும் என்னைப் போல ஒரு ஊமையாய் இல்லாமல் ஒரு சமூக அநீதியக் கண்டு கொதிப்பவராக இருந்தால் அந்த விடயங்கள் திருத்தப்படலாம் என்ற நம்பிக்கையிலும்,அல்லது எனது பார்வையில் தவறாகப் பட்ட அது உங்களுக்கு சரியாகப் பட்டிருந்தால் எனது அந்த தப்பைத் திருத்திக் கொள்வதற்குரிய ஒரு சந்தர்ப்பமாகவே நான் இந்த என் சமூகம் சார்ந்த பதிவுகளைக் கருதி, என் மனதில் கனன்று கொண்டிருக்கும்,அந்த மூளாத் தீயை உங்களுக்கும் பற்ற வைக்கின்றேன்.




பல லட்சக் கணக்கான எம்மவர்கள் நாட்டின் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில்,குறிப்பாக மேற்கு ஐரோப்பா,வட அமெரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களில் முதற் தலைமுறையினர் இனக்க்கலவரத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டும்,அதனால் ஏற்பட்ட அச்சமான சூழ்நிலையாலும் குடிபெயர்ந்தனர்.அவர்கள் ஒருவாறாக மேற்படி நாடுகளில் தஞ்சம் பெற்று,தமது கால்களில் நின்ற பிறகு,தனது அண்ணன், தம்பி, மச்சான், நண்பன், நண்பனின் நண்பன், ஊரவன் அதோடு திருமணம் முடித்து மனைவிமார் என்று ஒரு தொகையினரைத் தத்தம் நாடுகளுக்குள் இழுத்துக் கொண்டனர்.அதற்கடுத்த தலைமுறையிலும் அநேகர் கல்வி, தொழில் போன்ற காரணங்களால் குடி பெயர்ந்தனர்.



அங்கு சென்ற அனைவரும்,இங்குள்ளவர்கள் நினைப்பது போல், பஞ்சு மெத்தையில் படுத்து உருண்டு கொண்டு, பணத்தை மரத்தில் புடுங்கி அனுப்புவதில்லை.குளிரிலும், பனியிலும், இரவிலும், பகலிலும், நேரத்துக்கும் உண்டு,குடிக்காமல் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடித்தான் உழைக்கிறார்கள்.(நான் எல்லாரையும் சொல்லவிலை.ஆனால் பொதுவான நிலை இது தான்)பலர் தமது, கல்வியை, காதலை, அன்பு மனைவி, பிள்ளைகளை, வாழ்வின் சந்தோசத்தைத் தொலைத்து, தமது குடும்பம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள சாப்பாட்டுக் கடைகளில்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில்,சூப்பர் மாக்கற்றுகளில் என்று பல வேலைத் தளங்களில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கின்றனர்.





அவர்கள் எனது கல்வி குழம்பியது போல் எனது தம்பியின் கல்வியும் குழம்பக்கூடாது,என்னை விட அவன் ஒரு பெரிய நிலைக்கு வர வேண்டும்,எனது அம்மா,அப்பாவை நான் நல்ல நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும்,எனது தங்கயை நன்றாகப் படிப்பிக்க வேண்டும்,அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்,என் காதலியை எப்போது கரம் பிடிப்பது, எப்போது என் மனைவி பிள்ளைகளைக் காண்பது என்று எத்தனை எத்தனை ஆயிரம் கனவுகளைப் புதைத்து,அதை மனதினுள் புகுத்தி,கண்ணை நெருப்பாக்கி,காயத்தை(உடம்பு) காரியத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்தக் கனவுகளோடு அவர்கள் உழைத்து அனுப்பும் அந்தக் காசு அவர்களின் நோக்கத்தை நிறைவு செய்கின்றதா? அவர்களின் கண்ணீருக்கு, வியர்வைக்கு, உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கிறதா என்றால் பொதுவாகக் கிடைப்பதில்லை என்பதே எனது கணிப்பு.அவர்களது காசு கரியாக்கப்பட்டு,அதன் பெறுமதி குறைத்து மதிப்பிடப்பட்டுத், தூக்கித், தூக்கி வீசப்படுகிறது.



கொழும்பில் குடியிருக்கும் சாதாரண எம்மவர்களால் தனியே தம் சொந்த உழைப்பை நம்பி சீவிப்பது எவ்வளவு கடினமானது என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆனால் நாங்கள் இங்கே அவர்கள் அனுப்பும் காசை அள்ளி வீசுகின்றோம்.மற்றயவர்களால் எங்களுக்காக கஸ்டப்பட்டு அனுப்புகின்றது என்று எந்தவித உணர்வோ,வெட்கமோ இல்லாமல் காசுத் திமிரில் காசை வாரியிறைக்கின்றோம்.உதாரணத்திற்கு ஒரு சின்ன உதாரணம்.ஊர்களில் மாடுகள் சப்பித் துப்புகிற,ஒரு பெறுமதியுமற்ற,பனம்பழங்களின் விலையோ வெள்ளவதையில் நூற்றியைம்பது வரை.கொழும்பின் ஏனைய இடங்களில் 30 ரூபாவுக்கு ஒரு தேங்காய் விற்றால் அதுவே வெள்ளவதையைக் கண்டதும் தன் பெறுமதியை 35.40 வரை அதிகரித்துக் கொண்டு விடும்.இவை மட்டுமல்ல ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்படத்தக்க அளவு விலை அதிகரிப்புக்கள்.அது தேங்காய்,மரக்கறி,சாப்பாடு,உடுப்பிலிருந்து, அடுக்குமாடித் தொடர் வரை எல்லாவற்றிலும் வெள்ளவத்தையில் ஒரு முழம் கூடத் தான்.



இது ஏன்?நாங்கள் கொடுப்பதால் தான் அவர்கள் விற்கிறார்கள்.நாங்கள் கொடுத்த இடத்தால் தான் அவர்கள் மடம் கட்டுகிறார்கள்.அன்று நாங்கள் கொடுத்துக் காட்டியதால் தான் இன்று அவர்கள் கூறும் விலைக்கே நாங்கள் வாங்கவேண்டியிருக்கிறது.அதேநேரம் எங்களைப் போல வெளிநாட்டு வசதியிலில்லாதவனும் இதே வெள்ளவதையில் தான் சீவிக்க வேண்டியிருக்கிறது.அவனது சீவியம் எப்படி கடினமாக இருக்கப் போகிறது என்று நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா?லிற்றில் ஏசியா,ஜெயச்சந்திரன்ஸ்,நோ லிமிற் என எங்கும் உடுப்பு எடுக்க சென்றாலும் நாங்கள் அடித்த விலைக்கே உடுப்பைத் தூக்கிக் கொண்டு வருகிறோம்.விலைகளை வேறு இடங்களுடன் ஒப்பிட்டு அந்த விலை ஏற்புடையது தானா என்று பார்க்கக் கூட எங்க்ளுக்கு நேரமில்லை.அதே தரமுடைய பொருளை புறக்கோட்டை பிரதான வீதியில் சென்று வாங்கினால் கழிவு விலை அடிப்படையில் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யமுடியும் என்று எமக்குத் தோன்றுவதில்லை அல்லது புற்க்கோட்டையில் பொருள் வாங்கினால் எமது கௌரவத்திற்குப் பங்கமேனும் வந்துவிடுமோ என்ற கவலை.



பொருளுக்குரிய பெறுமதியைக் கொடுப்பதைத் தவறென்று கூறமுடியாது.நாம் பொருள் வாங்கும் கடைக்காரனுக்கும் குழந்தை குட்டி என்று இருக்கும்,அவனும் தனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்.அவனும் பாவம் தான்.இல்லையென்று கூறவில்லை.ஏன் அந்த விலை அதிகரிப்பு,அந்த விலை அதிகரிப்பு வரக் காரணம் என்ன?நாங்கள் கொடுத்துக் காட்டியதால் வந்த விளைவு தானது.விற்பவர்களை நாங்கள் பிழை சொல்ல முடியாது.எவனுக்கும் இருந்த இடத்தில் ஒருத்தன் இந்தா பிடி என்று காசை நீடும் போது அதை வாங்கி வைப்பதில் ஒரு கஸ்ரமோ,உறுத்தலோ இருக்கப் போவதில்லை.பனம் பழம் வெள்ளவத்தையில் இல்லை.அது எங்கிருந்தோ வர வேண்டும்.சரி அதற்கான செலவுகளைக் கணித்தால் கூட நூற்றியைம்பது என்பது ஒரு நியாயமான விலையாகத் தோன்றவில்லை.அதே போல தான் ஏனைய பொருட்களுக்கு ஏனிந்த தேவையில்லாத் விலையதிகரிப்பு? வெள்ளவத்தைக்கு அருகிலிருக்கும் தெகிவளையிலோ, பம்பலப்பிட்டியிலோ அதே பொருள் மலிவாக விற்கும் போது வெள்ளவத்தையில் மட்டும் அந்த "உசத்திக்குக்" காரணம் தான் என்ன?(ஆனால் இன்று தெகிவளைக்கும், பம்பலப்பிட்டிக்கும் அதிகளவில் எம்மவர்கள் வரத் தொடங்கியதுள்ளதால் அங்கும் இந்த நிலைமை தொடங்கிவிட்டது வேறு கதை)



இதே ஊதாரித்தனங்கள் ஊர்களில் இல்லை என்று கூறமுடியாது.அங்கும் இதே நிலைமை தான்.சில வேளைகளில் அந்த புலம் பெயர் உறவு தனது தாய்,தந்தையரை அவசர நிலைமகளில் வைத்திய நிலையங்களிற்கு அழைத்துச் செல்லவோ அல்லது தனது அண்ணனோ, தம்பியோ,மச்சானோ ஒடுவதற்காக ஒரு ஈருருளியை(மோட்டார் சைக்க்கிள்) ஐ வாங்கிகொடுத்திருக்கக்கூடும்.இல்லையென்று கூற முடியாது.இன்றைய காலங்களில் அத்தியாவசியமான ஒன்று.ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம்? பக்கத்திலே உள்ள கடைக்குப் போகவும், மாடு பிடிக்க காணிக்குச் செல்லவும், தோட்டத்துக்குச் செல்லவும் மோட்டர் சைக்கிளைப் பாவிக்கின்றோம்(ஊரிலை பெட்டையளுக்கு "சண்" காட்டுறது என்றொரு நன்மையைத் தவிர இங்கெல்லாம் மோட்டர் சைக்கிளில் செல்வதால் பிரயோசனம் இல்லை)


உங்களது உறவு எமக்காக தனது சுய முயற்சியால் உழைது அனுப்பும் காசை எந்த வழியிலும் செலவழிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.அந்த உறவும் தன்னை போல தன் உறவுகளும் இங்கே கஸ்ரப்படக்கூடாது என்று நினைக்கலாம்.கௌவரமாக, நாலு பேர் சொல்லும்படி வாழவேண்டும் என்று விரும்பலாம்.நான் மறுக்கவில்லை.அந்த அவா,ஆசை,ஏக்கம்,எண்ணம் நியாயமானதே.உண்மையானதே.கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பாளி ஒவ்வொருவனிடமும் அந்த வெறி இரத்ததில் கலந்திருக்கும் ஒன்றே.நான் இல்லையென்று வாதிடவில்லை.




ஆனால் அதற்காக அவ்ர்கள் வியர்வை சிந்தி,பனியிலும் குளிரிலும் நடு நடுங்கி உழைத்த காசை ஊதாரித்தனமாக ஊதிதள்ளாது இருப்போம்.தேவைக்கு செலவு செய்வோம்.அந்த உழைப்புக்கு மதிப்புக் கொடுப்போம்.சிந்தப்பட்ட வியர்வைக்கு, இரத்ததிற்குரிய பெறுமதியைக் கொடுப்போம்.அந்தக் காசை,நாங்கள் எங்களால் சுயமாக உழைத்த காசு என்று எண்ணி,எமது சொந்தக் காசை எவ்வாறு செலவழிப்போமா அவ்வாறு செலவழிப்போம்.சந்தோசமாக நாமும் எம் உறவுகளும் வாழ்வோம்.(நான் சொல்லவந்ததை எவரும் ஐஞ்சு சதம்,பத்து சதம் பார்த்து காசையே செலவழிக்காமல்,செத்தாலும் கொண்டு போகமுடியாத காசைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கச் சொல்வதாக எவரும் தப்பபிப்பிராயம் கொண்டால் அத்ற்கு நான் பொறுப்பாளியல்ல.பணத்தின் பெறுமதி உணர்ந்து,தேவையற்ற செலவுகளைக் குறைத்து, உங்கள் மனம் போல் செலவழித்து சந்தோசமாக வாழுங்கள்)

4 comments:

  1. எனது மனத்தை உறுத்திக் கொண்டிருந்த பல விடயங்களை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. எம்மவர்களின் யதார்த்த நிலையினை நன்றாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். யாழ் தேவியில் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் தோழா. தொடர்ந்தும் நிறைய விடயங்களை எழுதுங்கோ.

    ReplyDelete
  3. நன்றி டாக்டர் உங்களின் வருகைக்கும் கருதிடுகைக்கும்.உங்களைப் போன்றவர்களின் கருத்து எம்மை மேலும் செதுக்கும்

    ReplyDelete
  4. நன்றி தமிழ் மதுரம் வருகைக்கு நன்றி.அத்துடன் வாழ்த்துக்கும் நன்றிகள்

    ReplyDelete