Saturday, June 19, 2010

விடுகதையாய் இந்த வாழ்க்கை...? விடை தருவார் யாரோ...?

விடுகதைக்கான விடைகள் போல விசித்திரமான, பல வினோதமான விடைகளாலும், விடையே தெரியாத பல கேள்விகளாலும், விடை தெரிந்திருந்தும் விளம்பிட முடியாத வினாக்களாலும் நிரம்பிய, சாதாரண, சராசரியான ஈழத்தமிழர் வாழ்க்கைகளின் எனதும் ஒன்று.ஊரிழந்து, உறவிழந்து, சொத்திழந்து, சுகமிழந்து, வாழ்க்கையின் வேரையையே அடியோடு இழந்து காசைத் தேடிப் பேயாய் அலைந்து கொழும்பிலும் கரையொதுங்கிய பலருள் நானும் ஒருவன்.


கொழும்பிலே ஒரு கம்பனியிலே ஓரளவு கொஞ்சம் பெரிய பதவியிலே வேலை செய்து கொண்டிருக்கிறேன்.இலங்கையின் தலைநகரிலே, தமிழர்களின் தலைநகரமான வெள்ளவத்தையிலே என மனைவிக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட தொடரமாடிக் குடிமனை(Fலட்ச்) ஒன்றிலே நானும் எனது சிறிய குடும்பமும் வசித்து வருகின்றோம்.ஒரே ஒரு மகன்.(அதுக்கு மேலை ஏலாது எண்டு நினையாதையுங்கோ,ஒண்டே காணும், கூடப் பெத்தால் தன்ரை வடிவு கெட்டுப் போடிடும் எண்டு மனுசி தான் நிப்பாட்டிப் போட்டாள்)



பெடியன் இந்த முறை ஸ்கொலசிப்(Scholarship - தரம் ஐந்து ஆண்டு மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வைக்கப் படும் ஒரு போட்டிப் பரீட்சை) எடுக்கப் போறான்.கொழும்பிலே உள்ள ஒரு பிரபலமான சகோதர மொழிப் பாடசாலையிலே சகோதர மொழிமூலத்திலே கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றான்.என்ன செய்வது, அன்று தொடக்கம் இன்று வரை மலையகப் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலத்திலே திறமையான, தகுதியான தமிழ் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை இருந்தது, இருக்கின்றது போல கொழும்பிலே தற்போதைய தமிழ்ப் பாடசாலைகளின் நிலை இப்படியாக இருக்கின்றது.



தமிழ் பாடசாலைகளில் கல்வியின் தரம் தறி கெட்டு நிற்கும் போது என் போன்ற வாயைப் பிளந்து கொண்டே திரியும் பெற்றோர்களின் பார்வை சகோதரப் பாடசாலைகளின் பக்கம் தாவுவதை தடுக்க முடியாது தானே.இதெல்லாம் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரிய, பௌதீக வளங்களை வழங்காமல், தமிழ் மாணவர்களை தம் பக்கம் இழுத்து,மறைமுகமாக அவர்கள் மொழியை, கலாசாரத்தை அவர்களிடமிருந்து பிரித்து, அவர்களின் மொழியைப் பிறள்வுறச் செய்து, அவர்களை முதலில் மொழி அடையாளங்களற்றவர்களாக மாற்றிப் ,பின் தம் மொழி அடையாளஸ்தர்களாக மாற்ற முயலும் 23 ம் புலிகேசிகளுக்கு அவர்கள் கழிவறையில், "கழித்துக் கொண்டிருக்கும் போது" கச்சிதமாக் அவர்கள் மூளையில் உதித்த, உதிக்கின்ற ஐடியாக்களின் செயல் வடிவம் தான்.


எனக்கு அவ்வளவாக, அவ்வளவென்ன முழுமையாக விருப்பம் இல்லாத போதும் மனுசியின் நச்சரிப்புத் தாங்காமல் ஏதோ என்ரை பெடியனுக்குத் தமிழ் தெரியாட்டிலும் பரவாயில்லை, தமிழ் தெரிஞ்சும் என்னத்தைக் கிழிக்கப் போறான்?, நாளைக்கு ஏதோ நல்ல இடத்துக்கு வந்திட்டால் அது எனக்குக் காணும் என்ற என்ரை மனுசியின்ரை சுயநலப் போக்கால் சேர்த்திருந்தேன்.என்ரை மனுசியைப் பற்றியும் சொல்லவேணும்.வேலை ஒண்டுக்கும் அவள் போறதில்லை. அந்தளவுக்கு அவள் படிச்சிருக்கவும் இல்லை.என்றாலும் இங்கிலீசிலை கொஞ்சம் பொலிஸ்ட்டாக்(Polished) கதைக்கத் தெரியும்.


என்டாலும் நான் வேலைக்குப் போறது மாதிரி டெயிலி(Daily) பியூட்டி பார்லர்களுக்குப்(Beauty Barler) போய் காசைக் கரியாக்கிறது தான் வேலை.உதில ஐஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லையெண்டது எனக்கு மட்டுமில்லை அவளுக்கும் தெரியும் தான்.நானும் கொஞ்சம் சொல்லிப் பார்க்கிறது தான். எண்டாலும் நான் சீதனம் கொஞ்சம் கூட வாங்கி கட்டினதாலை "ஏன் உது என்றை காசு தானே ... நீ வாயைப் பொத்து.." எண்டு சத்தம் போட வெளிக்கிட்டிடுவள் எண்ட பயத்திலை நானும் ஒரு லிமிற்றுக்குப்(Limit) பிறகு ஒண்டும் பேசுறது, பறையிறது இல்லை.என்னைப் பற்றியும், அதை விட என்ரை பெடியனைப் படிப்புப் பற்றியும் வீட்டுக்கு வாற தன்ரை சினேகிதிமாருக்கு இங்கிலீசிலை விளாசிக் கொண்டிருப்பாள்.அதிலை அப்பிடியொரு ஆனந்தம் அவளுக்கு.


நானும் ஊருக்குப் போய் ஒரு ஐஞ்சாறு(ஐந்து,ஆறு) வரியமாப்(வருடமாக) போட்டுது.அது தான் இந்தமுறை(அது தான் இந்த 2015 ம் ஆண்டிலை)எங்கடை ஊரிலை கோயில் காவடிக்காக போன கிழமை தான் போட்டு வந்தனான்.போகேக்கை பெடியனையும் கூட்டிக் கொண்டு தான் போயிருந்தனான்.என்னதான் அவனுக்கு கொம்பியூட்டை கேமும்(Computer Game)சற்றும்(Chat) அது இதெண்டு ஒரு உயிரே இல்லாத கொம்பியூட்டரோடை வாழ்க்கை போனாலும், அவனுக்கு நாங்களெல்லாம் எப்பிடி வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சு,கூடிக் கூத்தடிச்சு,திண்டு, குடிச்சு, ரசிச்சு, ருசிச்சு வாழ்ந்தனாங்கள் எண்டு காட்டவேண்டியது எங்கள் ஒவ்வொருவரோடையும் கட்டாயக் கடமையும் பொறுப்புமாகும்.



அவர்களுக்கு இதெல்லாம் ஈடு பாட்டை ஏற்படுத்துதோ இல்லையோ அல்லது இடைஞ்சலாக அல்லது பிற்போக்குத் தனமாக அல்லது நேரத்தை விரயம் செய்வதாய் அல்லது அபிவிருத்தியடையாத் ஒரு காட்டுக் கூட்டத்தின் மடை வேலையாய் தெரியுதோ இல்லையோ அது வேறு விடயம்.நாமும் எமது முன்னோர்களும் எப்படியெல்லாம் உண்டு,களித்து,தின்று,திளைத்து வாழ்ந்தார்கள் என்று ஆகக்குறைந்தது காட்டமுயல்வதாவது எங்கள் கடமையாகும்.வங்கக் கடலில் கப்பலில் சென்ற கடாரம் என்ற சோழனாகட்டும்,கலிங்க மாகனை இங்கிருந்து துரத்திய ராஜராஜ சோழனாகட்டும் பக்கத்து வீட்டுக் காரரையெல்லாம் தூக்கி கக்கத்திலே சுருட்டி வைத்த கரிகாலனாகட்டும்.யார் இவர்கள்?இவர்களின் வீர தீரங்கள்,விண்ணையும் தாண்டும் அவர்களின் திறமைகள் என்ன என்று எம் பிள்ளைகளுக்கு ஒப்புவிப்பதாவது எமது கடமையாகும்.அத்தோடு எங்கள் இனசனங்கள், உறவுகள்,ஊர் மரபுகளை எங்கள் இரத்தங்களுக்கு ஊட்டுவது எங்கள் பொறுப்பாகும்.




என்னுடன் சிங்கள் நண்பர்கள் பணிபுரிகின்ற போதும்,நான் சிங்களம் கதைக்க வெளிக்கிட்டால், அதன் விசித்திரத்தைக் கண்டு, அவர்கள் ஆங்கிலத்திலேயே பேச வெளிக்கிட்டிடுவார்கள்.அதனால் எனக்கு மம(நான்),ஒயா(நீ),கரனவா(செய்கின்றேன்),யனவா(போகின்றேன்),கோமத(எப்படி),எக்காய்(ஒன்று) தெக்காய்(இரண்டு) என இலக்கங்கள் அதிலும் Hட்டாய்க்கும், Hத்தாய்க்கும் இடையிலே குழப்பம் எண்டு மிகச் சிறிதளவே சிங்களம் தெரியும்.ஆனால் என் மகனோ சிங்களத்திலேயே படிப்பதால் இந்த வயதிலேயே சிங்களத்தில் புலி.அவனையும் கூட்டிக் கொண்டு விடிய கொழும்பிலையிருந்து வெளிக்கிட்டு மத்தியானம் அளவிலை வவுனியா தாண்டி பஸ்ஸிலை போய்க் கொண்டிருந்தம்.அவன் ஒவ்வொரு இடமும் கடந்து செல்ல்லும் போது சகோதர மொழியிலே மட்டும் எழுதப் பட்டுக்கிடந்த பெயர்களை எனக்கு வாசித்துக் காட்டிக் கொண்டே வந்தான்.



எனக்கு இடங்கள் முன்னர் சென்று பரிச்சயமாகவிருந்தபோதும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் பாதையூடு பயணிப்பதாலும்,இந்தக் கால இடைவெளியில் அவற்றின் தோற்றங்களில் ஏற்பட்ட மாற்றங்களும்,சிதைக்கப்பட்ட சுவடுகள், திரிக்கப்பட்ட வரலாறுகள்,அழிக்கப்பட்டிருந்த அடையாளங்களும் அதன் மேல் எழுப்பப்பட்ட கட்டிடங்களும்,இடங்களை என்னை இலகுவில் அடையாளம் காண்பதில் தடங்கலை ஏற்படுத்தித் தான் இருந்தன.பன்றிக்கெய்தகுளம,மாங்குளம, கனகராயன்குளம,குஞ்சுக் குளம,விளாத்திக் குளம,விளக்கு வைத்தகுளம என்று "ம்" கள் எல்லாம் "ம" க்களுடன் தொக்கி நின்றதை என்னால் உண்ர்ந்து கொள்ள முடிந்ததது.





இதைப் போல் சில அழகிய தமிழ்ப் பெயர்களும் அடியோடு மாற்றப் பட்டிருந்ததையும் என்னால் கேட்கக் கூடியதாகவிருந்தது.திருமுறிகண்டி,முரிநுவரவாகவும் வேறு சில பெயர்கள் வேறு பல விதமாகவும் திரிக்கப் பட்டிருந்தையும் என்னால் என் மகன் வாசித்த்க் காட்டிக் கொண்டிருந்ததிலிருந்து புரிந்து கொள்ளமுடிந்தது.அப்போது வெசாக்(புத்தர் பிறந்து,இறந்து,ஞானம் பெற்ற நாள்) அண்மித்துக் கொண்டிருந்ததால்,வழி நெடுகலும் இருந்த விகாரைகளிலும் வீதிகளின் குறுக்கேயும் ஐந்து வண்ணங்களாலான பௌத்த கொடிகளும் வெளிச்சக் கூடுகளும் பறந்துகொண்டிருந்தன.மாங்குளத்துக்கு கிட்ட போய்க் கொண்டிருந்த போது தன் கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்த அவனின் பள்ளி நண்பியொருத்திக்கு "தங் மம மாங்குளமே யனவா(நான் இப்போது மாங்குளதாலே போய்க் கொண்டிருக்கின்றேன்)" என்று பயணத்தை அவளுக்கு நேரடி விமர்சனம் செய்யத் தொடங்கி விட்டான் என மகன்.



இடையில் பல ஆவனகலாக்கள்(அது தான் சிற்றுண்டிச் சாலை) இருந்த போதும் இவற்றையெல்லாம் கடந்து திருமுறிகண்டியில் இறங்கினோம்.நாங்கள் முன்பு கண்டதைப் போலவே அதே கொட்டிலுக்குள் எழுந்தருளியிருந்தார் பிள்ளையார்.அவ்வளவாக சனத்தையும் கோவிலடியில் காணமுடிந்திருக்கவில்லை.இந்தப் பிள்ளையாரைத் தாண்டிப் போகும் எல்லா வாகனங்களும் நின்று,இறங்கித் தேங்காய் உடைத்துவிட்டுத் தான் செல்லும் என்று இந்தப் பிள்ளையாரின் பெருமையை என் மகனுக்குக் கூறியவாறே நானும் ஒரு தேங்காயை வாங்கி உடைத்தேன்.மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.அங்காலே கிளிநொச்சிப் புத்தர் கியூவிலே(ஃஉஎஉஎ) நிற்கும் தன் பக்தர்களுக்க் அருளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்.அதயெல்லாம் பார்த்துக் கொண்டே(வேறு என்னத்தை செய்ய ஏலும்) கிளிநொச்சி நகரத்தை அடைந்தபோது போர் வீரர்களுக்கான நினைவுத் தூபி ஒன்று எழுப்பப் பட்டிருந்தது.





அதைக் காட்டி என் மகன்,தன் மக்க்ளையே கேடயங்களாக்கி,துன்பங்கள் பலபுரிந்து கொண்டிருந்தவரிடமிருந்து,மக்களை மீட்பதற்காக மனிதாபிமானப் போர் புரிவதற்காக முப்படைகளையும் திரட்டிக் கொண்டுவந்தவர் செய்த வெற்றிப் போரிலே மாண்டுபோன வீரகளுக்காக கட்டப் பட்டது தானே இது என்றான்.அப்படியாக்கப் பட்டுவிட்டதோ வரலாறென்றெண்ணிக் கொண்டே நான் தலையை இடமும் வலமும் ஆட்ட வெளிக்கிடவே என் மகன் மேலும் தொடர்ந்தான்.எங்களது வரலாற்றுப் புத்தகத்திலே நான் படித்திருக்கிறேன்.அதிலை இந்தமுறை கொஞ்சம் கேள்விகளும் ஸ்கொலசிப்புக்கு வரும் எண்டு ரீச்சர் சொன்னவா என்று நீட்டி முடித்தான் என் பொடியன்.



எந்த வரலாற்றை சரியென்று என் மகனுக்கு நான் சொல்லுவது?திரிக்கப்பட்டுத், திணிக்கப்பட்டதை திராணியில்லாமல்,சரியென்று சொல்லி வரலாற்றுப் புத்தகத்தின் வழி வந்ததை வழி மொழிந்து என் மகனை ஸ்கொலசிப் பாஸ் பண்ண வைப்பதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாமல் இருப்பதா இல்லை வழித்து துடைத்து மாற்றப்பட்டு, வந்தேறுகுடிகளாக்கப்பட்டதிலிருந்து வரலாற்றைச் சொல்லி என் கண்ணின் கண்ணைத் திறக்கட்டுமா? நான் யோசிக்கின்றேன்.அது சரியா?இது தவறா?சரியான குழப்பம்.முடிவெடுக்க முடியாதநிலை.நான் மேலும் கீழும் இடமும் வலமும் என நாலா பக்கமும் தலையாட்டி திரித்த வரலாற்றை ஆமோதிக்கின்றேனா இல்லை மறுதலிக்கின்றேனா என்று தெரியாமல் என் மகனை மேலும் குழப்பி விடுகின்றேன்.




அவன் இந்தக் குழப்பத்துக்குரிய தீர்வை தொடர்ந்தும் என்னிடமே எதிர்பார்த்து நிற்கின்றான்.இறுதியில் என் தலை மேலும் கீழும் அசைகின்றது.ஆம் திரிக்கப்பட்டதை சரியென்று சொல்லத் தலைப்படுகின்றேன்.ஏனென்றால் என் மகன் ஸ்கொலசிப் பாஸ் பண்ண வேண்டும் எனற சுயநலம் பிடித்த தமிழன் நான்.என் மகனை தமிழில்,தமிழைப் படிப்பிக்காமல், தமிழுக்கு குரல் கொடுப்பதாய் நடித்துக் கொண்டிருக்கும் பகட்டுத் தமிழன் நான்.தமிழ் கதைக்கவே வெட்கப்படும்,தமிழ் கதைப்பவனையே ஏளனமாகப் பார்க்கும்,எள்ளி நகையாடும் மனைவியை சீதனம் வாங்குவதற்காகக் கட்டி,அவள் சீற பெட்டிப் பாம்பாகப் படுத்துவிட்டு,வெளியே கூட்டங்களிலே பொன்னாடைகளுக்காகவும்,கைதட்டுதல்களுக்காகவும் ஏங்கி எதேதோ பொய் பேசுகின்ற பொய்த் தமிழன் நான்.




என்னைப் போன்றே பலரும் இங்கே நடித்துக் கொண்டிருக்கின்றோம்.உண்மை தெரிந்திருந்தும்,எங்கள் வீறாப்புகளுக்காக, சுயநலங்களுக்காக, துரோகங்களை,துணை போதல்களைத் தவறென்று தெரிந்த பின்பும் தொடர்ந்தும் செய்துவருகின்றோம். என் மகன் என்னைக் கேட்ட கேள்வியைப் போல விடை தெரியாத,விடை தெரிந்தும் விளம்பிடமுடியாத,விதைக்கப் பட்ட,விடுக்கப்பட்ட வினாககள் ஆயிரக்கணக்கில் விரந்து கிடக்கின்றன எங்கள் விடுகதையான வாழ்க்கையில்.இதற்கெல்லாம் விடை தருவார் யாரோ? (என்ன கதை உண்மையெண்டு நம்பி வாசிச்சுக்கொண்டிருக்கிறியளோ?அடி சக்கை.அம்மன் கோயில்ப் புக்கை.நான் ஸ்கொலசிப் எடுத்தே இப்ப ஒரு 10, 12 வருசம் வந்திச்சுதோ தெரியேல்லை.அதுக்குள்ளை நான் கலியாங்க்கட்டி,எனக்குப் பிள்ளை பிறந்து,அவன் இந்த முறை ஸ்கொலசிப் எடுக்கப் போறானாம்.உதெல்லாம் ஒரு கதையெண்டு வாயைப் பிளந்து கொண்டு இருந்துகொண்டு வாசிச்சுக் கொண்டிருக்கியளே?எழும்புங்கோ.போய்ப் பாக்கிற வேலையைப் பாருங்கோ.போங்கோ எல்லாம் கடைஞ்செடுத்த கற்பனைக் கதை தான்.அது தானே எங்களுக்கு அந்தமாதிரி வரும்.அது தான் திரும்பவும் சின்னதொரு Dரை(ட்ர்ய்)

4 comments:

  1. நன்றி பெயரிலி உங்கள் வருகக்கும் பின்னிடுகக்கும்

    ReplyDelete
  2. உண்மையான புனைவு கட்டுரை. அருமை ,.. தொடர்ந்து உங்களின் எழுத்தை வாசிக்க காத்திருக்கிறேன்; எழுதுங்கள்

    ReplyDelete
  3. உங்களின் அலைபேசி எண்ணை முடிந்தால் தெரிவிக்கவும் .உங்களுடன் உரையாட விரும்புகிறேன் .

    ReplyDelete