Saturday, July 24, 2010

ரமிலில் பேஷ்வோம்(தமிழில் பேசுவோம்)

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத்தமிழெங்கள் உயிரான உயிரிலும் மேல் என பல அடுக்கடுக்கான வசனங்களை அழகாக பலர் பேசித்திரிந்தாலும் அந்த அமுத மொழியை,அழகு தமிழை,சங்கத்தமிழை பேச இன்று பலர் பின்னடிக்கின்றார்கள்.தமிழைப் பேசுவதால் தமது தராதரம் ஏதோ தறிகெட்டுப் போவதாக தாமே தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டு மற்றவர்களையும் தப்பாக வழி நடாத்துகின்றார்கள்.
ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் தான் என்ன?



ஆங்கிலத்தில் கதைப்பவர்கள் ஏதோ அதி மேதாவிகளாக சாதாரண மக்களால் தாம் நினைக்கப் படுவதாக தாமே நினைத்துக் கொள்வதுவும்,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் ஏதோ தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்கள் போல காட்டிக் கொள்ள வெளிக்கிடுவதுவும், சாதாரண மக்கள் இவர்களை ஏதோ முற்றும் அறிந்த முனிவர்கள் போல எண்ணுவதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.ஆங்கிலம் என்பது தமிழைப் போன்றதொரு சாதாரண மொழி அவ்வளவு தான்.அதைப் பார்த்து வாயைப் பிளக்க வேண்டிய தேவையில்லை.



ஆனால் அது ஒரு இணைப்பு மொழியாக(Linking Language) இருக்கின்றபடியால் மற்றைய மொழிகளை விட சற்று பிரபலமாகியிருக்கின்றது.அவ்வளவு தான்.அதற்காக ஆங்கிலம் தெரிந்தவன் பெரிய கொம்பு என்று ஒன்றும் இல்லை.அதனால் நாம் ஆங்கிலம் பேசுபவர்களைப் பார்த்து மலைப்படையவோ அவர்களை எங்களை விட பெரியவர்களாகவோ உயர்த்தி பார்க்க தேவையில்லை.இதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.




அத்துடன் இன்றைய தமிழ் சினிமாக் கலைஞர்கள் அதிலும் மிக முக்கியமாக நடிகைகள் தமிங்கிலிஷ்(தமிழ் + ஆங்கிலம் கலந்த கலைவை)இல் கதைத்து தமிழைக் கொல்லுகிறார்கள்.வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள் தமிழின் மீதான தங்களது காதலால் என்று சொல்லிக் கொண்டு(உண்மை என்றே வைத்துக் கொள்வோம்) தமிழ் ரசிகர்களைக் கவர்தலாகிய இரண்டாவது மாங்காயை அடிக்க தமிழைப் பயன் படுத்துகிறார்கள்.


அது தப்பில்லை. வேற்று மொழியிலிருந்து தமிழ் கதைக்க வருபவர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அது தமிழ் மேலும் உலகெலாம் பரவ,தமிழ் இவ்வுலகில் நின்று நீடிக்க உதவும். அதே நேரம் தமிழை இலகுவில கற்று விட முடியாது.உச்சரிப்புக்கள், இலக்கணங்கள் என்று எங்கடையளே பிழை விடும் போது அந்நியர்களை பிழை என்று கூறுவதோ, அல்லது அவர்களை தமிழ் பேச அனுமதிக்காமையோ ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையாக அமையாது.அவர்களின் தவற்றை சுட்டிக்காட்டி தமிழை போதித்து நாமும் தமிழ் வளர்க்க வேண்டும்.



அவர்க்ள் தான் பரவாயில்லை வேற்று மொழிக்காரர்கள்.தமிழ் நடிகைகளுக்கு, தமிழர்களுக்கு என்ன நடந்தது. இதை தான் "எல்லா மாடும் எதுக்கோ ஓடுதென்று சுப்பற்றை கேப்பை மாடும் கிளப்பி கொண்டு வெளிக்கிட்டுதாம்" எண்டு சொல்லுறது.(எதுக்கெண்டு வாய்க்கை வருது ...ஆனால் வேண்டாம்.விடுவம்)


இதன் போது தெனாலியில் கமல் பேசும் ஒரு காட்சி எனது ஞாபகத்துக்கு வருகின்றது.ஜெயராமை பேட்டி எடுக்க வந்த பேட்டி எடுக்கும் பெண்மணி கமல் இடம் பேட்டி எடுக்கும் போது அவர் "கொஞ்சம் பகிடியாக் கதைப்பம் என்ன " எண்டிட்டு இலங்கைத் தமிழில் கேட்பார்."ஏன் வரேக்கையெல்லாம் வடிவா வாங்கோ போங்கோ என்று தானே கதைச்சுக் கொண்டு வந்தனியள். மைக்கைப் பிடித்தவுடனே ஏன் ஒரு ஆங்கிலம் கலந்த "வான்கோ","போன்கோ","எப்டி","ஈ சய்" எண்டு தமிழைக் கொல்லுறியள்" என்று கேட்கும் போது அந்த பெண் பதில் சொல்லமுடியாமல் பல்லிளிக்க "பதில் சொல்ல ஏலாது என்ன ?தமிழை ஒரு "இதுவாத்" தான் பாவிக்கிறியள்" என்று சொல்லுவார்.அது முற்றிலும் உண்மை.தமிழை ஒரு "இதுவாத்" தான் எல்லாரும் பாவிக்கிறோம்.




அவர்கள் பேட்டிகளின் போது தமிங்லிஷ் இல் கதைப்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.சினிமா சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை செலுத்துவதால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ(தாங்கள் மேதாவிகள் இல்லை எனபதை தெரியாமலோ)இவர்கள் கதைக்கும் மொழி,பாணி,(Style),உச்சரிப்பு என்பன எமது சமூகத்தினுள்ளும் புகுந்து ஒரு பாரிய சமூக நோயாக உருவாகி வருவதை நாம் கண் கூடாகக் காண முடியும்.சமூகத்தின் ஓர் அங்கமாகிய நாம் சினிமாக் கலைஞர்களை எமது வழிகாட்டிகளாக(Role Model) எண்ணுவதை தவிர்ப்பதுவும் இந்த தமிழ்க் கொலைகளை ச்ற்று குறைக்க உதவும்.


அத்துடன் எனக்கு பாரதியின் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்பதை "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று உல்டா பண்ணி கூட்டங்களில் முழங்கி புது விளக்கம் கொடுப்பவர்களை கண்டாலும் கடுப்பு தான் வரும்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக மயமாக்கல் கொள்கையால் உலகம் ஓருலகக் கோட்பாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இதனால் ஆங்கிலம் தவிர்ந்த தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன.பாரதி இதை தீர்க்க தரிசனத்துடனோ இல்லை தீர்க்க தரிசனமில்லாமலோ இல்லை என்ன நோக்கத்திற்காக கூறினாரோ தெரியாது. ஆனால் இன்றைய தேதியில் "மெல்லத் தமிழினிச் சாகும் "என்பது சரியாக பொருந்தி வருகின்றது என்பதே எனது தாழ்மையான் கருத்து.


ஆகவே எங்கள் எல்லாரிடமும் உலகின் மூவாயிரம் ஆண்டுகளிற்கு மேற்பட்ட மிகவும் தொன்மையான்,இனிமையான பைந்தமிழைக் காப்பாற்றியாகவேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.எங்களது முன்னைய தலைமுறை எங்களிடம் தந்த அந்த கொஞ்சு தமிழை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.(ஏற்கனவே அரிய பல சொற்களை நாம் இழந்து வருகிறோம்)அப்படியான பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து நிற்கும் போது,அவனை அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க தூண்டும் வகையில் மேற்சொன்னவாறு அவர்களைஅந்த சிந்தனையிலிருந்து மாற்ற முயலும் கயவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது.


ஆங்கில மொழியில்(English Medium) கல்வி கற்பதற்கு இன்றைய பெற்றோர்கள் தூண்டுகிறார்கள்/உந்துகிறார்கள் அதிலுள்ள சாதக,பாதக தன்மைகளை அலசி இன்னொரு பதிவை நான் ஏற்கனவே இட்டுள்ளதால் அதை இங்கே சென்று படியுங்கள்.
இப்பெடியெல்லாம் நான் கூறுவதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் என்று யாரும் தப்பாக எடை போட வேண்டாம்.ஆங்கிலம் தேவையான் ஒன்று.


உலக மொழியான் ஆங்கிலத்தைக் கற்பதால் தமிழில் இல்லாத பல நூல்களைக் கற்க முடியும்.அத்துடன் பல நன்மைகள் உள்ளன.தமிழன் தனக்குள் கதைப்பதற்கு எதற்கு ஆங்கிலம்.தமிழைக் கதைக்கும் போது " ஐ மீன்"," யூ மீன்","ஐ ஸே",தமிங்லிஷ் எல்லாம் எதற்கு?.அத்துடன் மழலைகளின் முதல் மொழி "அம்மா","அப்பா".அதைக் கூடவா "Mummy,Daddy "என்று மாற்ற வேண்டும்.



தமிழன் இல்லாத நாடு இல்லை என்று என்னதான் பீற்றினாலும் அங்கெல்லாம் தமிழ் என்ன பாடுபடுகிறதென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தமிழின் தாய்வீடான தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை சொல்லி மாளாது.தமிழை ஒரு பாடமாகக் கூடத் தயங்கும் மாணவர்கள்,(ஏனெனில் சமஷ்கிருதம் போன்ற பாடங்கள் எடுத்தால் இலகுவாக புள்ளிகள் பெறலாமாம்)நீதிமன்றம்,காவல்துறை,பாடசாலை என்று எதிலுமேயில்லாத தமிழ்,ஆனால் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி என்ற பெயரில் கோபாலபுரத்துக் கட்டிலில் மட்டும்.



மேற்படி துறைகளில் தமிழைக் கொண்டுவர முடியாத,தமிழைக் காப்பதாகக் கூறிக் கொண்டு செய்தியாளர் மாநாடுகளில் கவிபடிப்பதுவும்,செம்மொழி மாநாடு நடத்துவதாகவும் கூறித் திரியும் ஒரு ஜென்மம் தமழரின் தலைவராக.தமிழ்த் தலைவரின் "பேரன்ஸ்" கோடிகளை உருட்டி விளையாடுவதோ "சண்", ரெட் ஜயன்ஸ் மூவிஸ்",நைற் கிளவுட்ஸ் என்று ஆங்கிலப் பெயர்களில்.தன் குடும்பத்தில் தமிழைக் காக்கத் தெரியாதவர் உலகத் தமிழைக் காக்கப் போகிறார்?



இவ்வாறாக தமிழைப் பாடை கட்ட முயன்றாலும் ஏதோ இன்னும் தன்மானத் தமிழர்கள் அங்கும் இருப்பதால் தமிழ் அங்கே மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.ஈழத்தில் தமிழுக்கு அந்தளவுக்கு கவலைக்கிடம் இல்லாவிட்டாலும் "இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான புத்தம் புதிய திரைப்படங்களைப்" பார்க்கும் நாமும், ஈழத் தமிழ் வரலாற்றில் முதன் முறையாக, அந்தத் தொலைக் காட்சிகள் விடும் தமிழ்ப் பிழைகளை அல்லது திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்புக்களை அல்லது விளம்பரத்திற்காக தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை முன்னுக்கு கொண்டு வர முயலும் அவர்களின் முயற்சிகளை முறியடித்து, நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து தமிழைக் காப்போம்.

6 comments:

 1. அருமை, அருமை, உண்மையான உணர்வுள்ள ஒரு தமிழனின் கோவம், அவனின் எதிர்பார்ப்பு உங்கள் இந்த பதிவில் தெரிகின்றது.
  ஆங்கிலம் என்பது, ஒரு இணைப்பு மொழி, வர்த்தக மொழி என்பதுவும், அது ஒன்றும் ஆசீர்வதிக்கப்பட்டபாசையோ, தகுதிகளை கொண்டுவரும் பாசைகளோ அல்ல என்பதையும்
  பலர் புரிந்துகொண்டால் சரி.

  ReplyDelete
 2. கிட்டதட்ட இதே கருத்துடைய பதிவொன்றை நான் தயாரித்து கொண்டிருந்தேன், நீங்கள் எழுதி விட்டீர்கள். இனி வேண்டாம்.

  நல்ல பதிவு, புரிந்து கொண்டு நடப்பார்களானால் நன்று

  ReplyDelete
 3. நன்றி ஜனா உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும்.உங்களிக்கும் என்னுடைய அலைவரிசைலேயே இருக்கிறது.உண்மைதான் ஜனா

  ReplyDelete
 4. ஜோ வொய்ஸ் உங்களின் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றி.நீங்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தாலும் உங்களது பதிவையும் இடுங்கள்.நீசயம் அதிலே நான் விட்ட பல பகுதிகள் காணப்படலாம்.உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 5. தேவையான பதிவு. அனைவரும் உணர்ந்து திருந்தினாலொழிய மற்றும்படி தமிழ் மொழி வழக்கொழிந்து போவது உறுதியாகிறது. எங்களால் முடிந்தளவு நாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவோம்.

  ReplyDelete
 6. ம்ம் பால்குடி எங்களால் ஏலுமான இதையாவது செய்வோம்...

  ReplyDelete