Thursday, July 1, 2010

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

ஈழத்த்மிழரின் வாழ்விய்லை சிறிதளவாவது தொட்டுச் சென்ற மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் வரிகளைத் தலைப்பாக்கி,தெனாலிபடத்தில் வந்த கமலின் கதையை கருவாக்கி,ஈழத்தமிழர் தம் வாழ்வை கதையாக்கி,அதை உருவேற்றி, பதிவாக்கி,வலையேற்றுகின்றேன், எங்களுக்கே உரமாகிய எம்மினத்தவர்க்காக."கண்டிக் கதிர்காம்க கந்தனே" எண்டு வேலை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு "எல்லாம் சிவமயமெண்டு சொல்லுவினம் ஆனால் எனக்கு எல்லாம் பய மயந்தான்.நிண்டால் பயம், இருந்தால் பயம்,நாடு பயம், காடு பயம்,காலா உனைக் காலால் உதைப்பனோவென்று பயமெனக்கு. ஓஒ.. பூரான் பயமெனக்கு,பூனை பயமெனக்கு,பூனை தின்கிற எலியும்,எலி தின்கிற பாம்பும் பயமெனக்கு.திறந்த கதவு பயமெனக்கு,பூட்டின கதவெண்டால் எங்கை திறபட மாட்டுதோ எண்டு மெத்தப் பயமெனக்கு.. உந்த இங்கிலிஸும் பயமெனக்கு. இப்பிடிப் பேசிக்கொண்டிருக்கேக்க்கை தொண்டைத்தண்ணி வத்தி செத்துப் போடுவனோ எண்டும் பயமெனக்கு" என்று கமல் பேசும் தொடர்ச்சியான பயவரிசையைத் தொடர்ந்து இதற்கென்ன காரணமென்னவென்று மனநல டாக்டரான ஜெயராம் கேட்ட போது அதுவரை தன் நடிப்பாலும், செய்கையாலும்,கதையாலும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்து விட்டு சராசரி ஈழத்தமிழன் போல் மாறி அவனுக்கேயுரிய அப்பாவித் தனத்துடன் கமல் பதில் சொல்லும் காட்சி கண்ணை கலங்கச் செய்யும்.
"நான் சின்னப் பொடியனா இருக்கேக்கை என்றை அப்பாவைச் சுட்டுப் போட்டு வடிவான என்றை அம்மாவின்ரை வடிவையும் கெடுத்துப் போட்டு அந்த ஆமிக்காரர் போட்டாங்கள்.அம்மா அப்பிடியே அழுது கொண்டே இருந்தா. அம்மாவின்ரை கண்களில் தாரை தாரையாகத் தண்ணீ.எனக்கும் சின்னப் பெடியன் எண்டதாலை ஒண்டும் செய்யேலாமல்ப் போட்டுது.நான் கல்லுகளைத் தூக்கி எறிஞ்சன்.என்னையும் பிடிச்சுத் தூக்க்கி எறிஞ்சு போட்டுப் போட்டாங்கள்." எண்டு கமல் சொன்ன அந்த வசனம் உண்மையிலேயே நடந்த ,நடந்திருக்கக்கூடிய சம்பவம்.அந்தக் கமலைப் போல் போரால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு,உறவுகளைத் தொலைத்து,உறுப்புக்களை இழந்து, விழுப்புண் அடைந்து எத்தனை சோகங்களுடனும், மனச் சுமைகளுடனும் "ஏதோ இருக்கிறம்" என்று வாழ்கின்ற,மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பற்றியதே இந்தப் பதிவு.போரினால் நேரடியாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், அங்கவீனங்கள்,இடப் பெயர்வுகள்,பட்டினிச் சாவுகள்,பொருளாதார, மருத்துவத் தடைகள் போன்ற அவலங்கள் காலப் போக்கில் மறக்கபடலாம்(மறக்கப் படும் என்பதல்ல எனது கருத்து,மறந்து போகப் படலாம்.அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலி.மறக்கப் படலாம் என்று நாம் வெறுமனே கூறிவிட முடியாது)ஆனால் இவற்றின் விளைவுகளால் ஏற்படுகின்ற மனத் தாங்கல்கள்,மன அழுத்தங்கள் ,வடுக்கள் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தே வரும்.அவர்களைச் சார்ந்த அடுத்த தலைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்தப் போரின் வடுக்களைச் சுமந்து கொண்டு,நடைப் பிணங்களாக,நாங்களும் ஏதோ பிறந்து விட்டோம் என்பதற்காகவும்,எஞ்சிய ஏனைய உறவுகளையும் தனியே விட்டு விட்டு சாகவும் முடியாது என்ற் என்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற் நிர்ப்பந்ததிற்காக வாழ்கின்ற,வெறும் உடம்புகள் மட்டுமே ஊர்வலம் போகின்றவர்களுக்க்காகவே இந்தப் பதிவு.
கடந்த மாதம் தனது கடைசி மகளுக்குப் பிறந்திருந்த பேரனைப் பார்த்துப்,ப்ராமரிப்பதற்காக, ஒரு சராசரி புலம்பெயர் உறவொன்றின், தாய்மார் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் பிள்ளைப்பேறுகளை அந்தந்த நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு வருகின்றார்களோ அதே போல என் பெரியம்மாவும் சுவிஸ் சென்று விட்டு திரும்பியிருந்தா.திரும்பி வரும் போது அக்காவின் மகன், அதாவது எனது மருமகனின் உடல் நிலை சரியில்லாததால் இலங்கை திரும்புவதில், சம்மதமில்லாமலே திரும்பியிருந்தார்.பெரியம்மா வந்ததும்,ஊரிலிருந்த வந்த இன்னுமொரு அக்கா, அத்தான், மற்றும் அக்காவின் இரு பிள்ளைகள், மற்றும் நானும் போய் வரவேற்றோம்.சுகமும் விசாரித்தோம்.கொழும்பிலிருந்து வீடு செல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனமும் வந்த பின்னர் விமானப் பயண அசதியால் தூங்கிக் கொண்டிருந்த பெரியம்மாவை எழுப்பினால் ஆள் அசைவில்லை.ஆனாலும் நாங்கள் ஆடிப் போகவில்லை.ஏதாவது மரணத்தைப் பார்த்தால், மரண வீட்டிற்குச் சென்றால், அல்லது கவலையில் யோசித்தால் உடம்பெல்லாம் விறைத்து,தொடர்ச்சியாக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பெரியம்மா மயக்கமாகவிருப்பா என்பது எங்களுக்குத் தெரியும்.இந்த மயக்கத்திற்கும் காரணம் அதுவென்பதும் அது எதனாலென்பதைக் கூறுவதுடன் பதிவிற்குள் நுழைகின்றேன்.எங்களை அம்மா, அப்பா தூக்கித்திரிந்த மிகச் சின்ன வயதுகளில்,தாடி வைத்து தொப்பி போட்ட இந்திய இராணுவம் எங்கள் வீதிகளில் நடமாடிச் சென்றதெல்லாம் என் மனதில் நிழலாடுகின்றது. அவர்கள் இங்கிருந்த காலங்களிலெல்லாம் செய்த கொடுமைகளைப் பட்டு அனுபவித்தவர்களில் மிச்ச மீதியாய்த் தப்பிப் போனவர்களில் மிச்சம் சொச்சம் பேர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன்
இந்திய இராணுவம் வருகின்றதென்றால் இளைஞர்கள்,யுவதிகள்,புதுமணத் தம்பதிகள் உட்பட எல்லாரும் உயிரைக் காப்பாற்ற பயிர் வைத்த தோட்டங்களுக்குள்ளும், பதுங்கி ஒதுங்க பங்கருக்குள்ளும்,கோவில்கள்,தேவாலயங்களிலும் தஞ்சம் தேடிக் கொள்ளுவார்கள்.பெரியம்மாவும் பெரியப்பாவும் மூன்று பிள்ளைகளையும் (அண்ணன், 2 அக்கா) அம்மம்மா, அம்மப்பாவின் பொறுப்பில் விட்டு விட்டு பக்கத்திலிருந்த கத்தரித் தோட்டத்துக்குள் பதுங்கிக் கொண்டனர்.அங்கே அவரின் கெட்ட காலம், எறும்பு கடிக்கிறதென்று சொறிந்து கொள்வதற்காக எழும்பிய அவருயிரை தறையின் மறுபக்கத்தில் கறுவிக் கொண்டிருந்த இந்திய இராணுவ வீரனொருவனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு வந்த ரவை பறித்துச் சென்றது.எந்தவொரு குழுவுடனுமோ சம்பந்தப் படாமல், எறும்புக் கடியை சொறிவதற்காக எழும்பிய பெரியப்பா,தன் கண் முன்னாலேயே தனது மிகச் சிறிய வயதிலேயே ,திருமணமான சிறு காலத்திலேயே,எந்தவொரு வரும்படியும் இல்லாத நிலையிலே மூன்று சின்னஞ் சிறு பிள்ளைகளையும் அதுவும் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளையும் தன் தலையிலே பொறுக்கவிட்டுச் சென்றதை ,அவர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை நேரில் கண்ட பெரியம்மாவுக்கு மரண வீடுகளைப் பார்க்கும் போதோ ஏதாவத் கவலை வரும் போதோ ஆழமாக யோசித்தாலோ மயக்கம் ஏற்பட்டு விடும்.இது அவவிற்கு ஏற்பட்ட பாதிப்பு
இதைப் போல் அண்மையில் நான் பத்திரிகையில் வாசித்துக் ஒரு செய்தி.17 வயதுச் சிறுவனொருவன் தனது இரு கைகளையும் செல் வீச்சினால் இழந்திருந்தான்.அதே செல் வீச்சில் இவனின் இரு தங்கைகளையும் இழந்தினால், அதைப் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தந்தைக்கும் பைத்தியம் பிடித்து விட்டது.எஞ்சியது இவனும் தாயும்.இவன் தனது அன்றாடம் ஒன்றுக்கு, இரண்டுக்குப் போவதற்குக் கூட இன்னொருவரின் துணையை நாட வேண்டிய மகா கொடுமை.வருமானமேயில்லாத இக் குடும்பத்தில் இருந்து கொண்டு தன்னால் போதியளவு பணம் திரட்ட முடியாதென்பதால் தனது ஒரு கையையாவது பொருத்த உதவுமாறு வினயமாக கேட்டிருந்தான்.எனது பெரிய்ம்மாவிற்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டும் சொல்வதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்தவில்லை.அவரைப் போல்,அல்லது அவரை விட இன்னும் இன்னும் எத்தனை பேர் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டார்கள்,காரணமின்றிக் கொலை செய்யப்பட்டார்கள்,வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கடித்துக் குதறப் பட்டார்கள், இன்னும் எத்தனை எத்தனை?எனக்கு தெரிந்தது ஆயிரத்தில் ஒன்று,தெரிந்ததில் நான் சொல்வது ஓராயிரத்தில் ஒன்று,வெளியே வராமல்,வர விடப் படாமல்,வரமுடியாமல் சுட்டு விழுத்தப் பட்ட சடலங்களோடு செத்துப் போன உண்மைகள் எத்தனை?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா?இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்?இந்த அப்பாவிகளுக்கு யார் நீதி வழங்குவார்கள்?உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,அதன் மிகப் பெரும் மக்கள் தலைவரான பிரதமரைப் படுகொலை செய்தது சரியா பிழையா என்று சிந்திக்க முடியாமல் சரியென்று சொல்ல முடியாவிட்டாலும் பிழையென்று மறுதலிக்க முடியாமல் இந்தியப் படைகள் ஆடிய கோரத் தாட்டவங்கள் குறுக்கே வந்து குழப்பி விடுகின்றன.பாரத தேசத்தின் பார்ப்பனியர்களின் பாராளும் பிரயாசைக்கு ஈழத் தமிழினத்தைப் பகடைக் காயாக்க முற்பட்டுப் படுதோல்வியடைந்ததால், படையெடுத்துப் பணிய வைக்க முயன்றனர் படைக்கஞ்சா ஈழத்தமிழனை.எதிர்த்தது பாரிய படையென்றும் பார்க்ககாது மோதித் தான் பார்த்த ஈழத் தமிழன் இழந்தது என்னவோ ஏராளம் தான். உயிரிழந்து,உறவிழந்து,உடுக்க உடையின்றி,படுக்கப் பாயின்றி,உலகின் மூலை முடுக்கு நாடுகளின் வாயில்கள் தட்டி தஞ்சம் கோரினார்கள்.பல நாடுகள் தஞ்சம் கொடுத்தாலும்,நீங்களேல்லாம் இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பியள் என்று வாசற் கதவை அடித்துச் சாத்திய நாடுகளும் இருக்கவே செய்கின்றன.பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியின் பணிப்பாளாரான ஜெகத் கஸ்பார் அடிகளாருக்கு ஈழத்து இள நங்கையொருத்தியின் கடிதம் அவர் கண்களைத் திறந்து,கசிந்துருக வைத்து, அவரின் ஈழத்தமிழர் மீதான் பார்வையையே புரட்டிப் போட்டது.பத்து வயதில் அந்தச் சிறுமியிருந்த போது வீட்டுக்கு வந்த இந்தியப் படைகள் தன் தந்தைக்கு முன்னால் தாயைத் துகிலுரிய முற்பட்டதையும்,துள்ளிய தந்தையைப் போட்டுத் தள்ளிவிட்டு தன் தாயைத் தனக்கு முன்னாலேயே ருசித்து விட்டுச், அவரின் அலுவலையும் முடித்து விட்டுச் சென்ற இந்தியப் படைகளின் ஈனச் செயல் பற்றிக் கூறியிருந்தாள்.அதை நேரில் பார்த்த அந்தச் சிறுமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.இப்போது நீங்கள் ஜெகத் கஸ்பார் தனது ஈழத் தமிழர் மீதான பார்வையை மாற்றியது சரியா பிழையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
(இதே மாதிரியான ஒரு கதை தான் கமலுக்கு தெனாலியில் வருகின்றது)இதை மாதிரி எத்தனை கதைகள்?அமைதிப் படை என்ற பெயரில் வந்து ஆடிய ஆட்டங்க்ள் எத்தனை?மூத்திரம் பெய்யச் சென்றவனையும், காலையில் பாண் வாங்க பேக்கரிக்குச் சென்றவனையும், கத்தரித் தோட்டத்துக்குள் ஒளிக்கச் சென்றவனையும் சுட்டுத் தள்ளிய கொடுமைகளை,கற்பளிப்புக் கொடுமைகளை அனுபவித்தவர்களது, கண்டவர்களாது மனநிலை எப்படியிருக்கும்1991 இல நடந்த துன்பிய சம்பவத்திற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையே பழிவாங்கிய இந்தியப் அரசு நடாத்திய /நடாத்துவித்த இறுதியுத்தததால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த ரெட்பார்ணா என்ற அமைப்பு கூறியுளது.அது மட்டுமல்லாது இந்தப் போரிலே குண்டடிபட்டு, விழுப்புண்ணடைந்து, தமது கருமங்களை ஆற்றவே மற்றவர்களைத் தங்கி நிற்கும் சகோதர சகோதரிகள் வீட்டு மூலைகளுக்குள்ளே ஒதுக்கப்பட்டு விட்டோம்,மற்றவர்களில் தங்கியிருக்கிறோம் என்று எவ்வளவு வேதனைப் படுவார்கள்.அது மட்டுமல்லாது எத்தனை கற்பழிப்புக்கள்,வன்புண்ர்ச்சிகள் எங்கள் சகோதரிகளுக்கு நடந்தேறியுள்ளன.எத்தனை எத்தனை உயிரிழப்புக்களை நேரிலே கண்ட சிறுவர்கள், சடலங்களைத் தாண்டி வந்த அவர்கள் கால்கள், குண்டுகளுக்கு, பயந்தோடிய அவர்களது மனநிலை எப்படியிருக்கும்.இரததமும், சதைப் பிண்டங்களும் சடலங்களும் அவர்கள் கண்ணை விட்டு என்றும் செல்ல மாட்டா. எதைப் பார்த்தாலும் ஒரு பயம்,ஒரு பதட்டம், நடுக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.சிலவேளைகளில் எதற்கும் இரங்காத கல் நெஞ்சு படைத்தவர்களாக அவர்கள் மனங்களை இந்தப் போர் மாற்றக்கூடும். அவர்கள் எல்லோருடைய கல்வி, குடும்ப வாழ்க்கை, தொழில் என்பன எவ்வாறு அமையப் போகின்றது.வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்.இந்தச் சிறுவர்கள்,இந்த மக்கள் வளார்ந்து வரும் போதுஅவர்கள் குடும்பத்தில்,சமூகத்தில், எவ்வளவு பிரச்சினைகளைப் எதிர் நோக்கப் போகின்றார்கள்?இவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளின் உடல் நலன்கள் என்றெல்லாம் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.ஆன போதும் அதனை எதிர் கொள்வதற்கு உளவளாத்துணைச்செயற்பாடுகளோ,சமுதாய மட்டத்திலவர்களை மீட்டெடுப்ப்பதற்காக மீட்பு நடவடிக்கைகளோ கல்விமான்களாலோ,அமைப்புக்களாலோ,அரசியல் கட்சிகளாலோ ஆரம்பிக்கப் படாதிருப்பது எமது சமுதாயத்தின் துரதிஸ்டமே.சுனாமி நேரத்தில் கூட எமது மக்களில் ஒரு பகுதியினர் உள்வளத்துணை ஆலோசனைகளிப் பெற்றிருந்தனர்.ஆனால் இப்போது இவ்வளவு இழப்புக்களுக்குப் பிறகும் எதுவுமில்லை.
தெனாலியில் வந்த தெனாலிராமனை விட முழு அளவிலும் பகுதி அளவிலும் அதிகளவில் மன நிலை பாதிக்கப் பட்டு இன்றும் எத்தனை பேர் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.(ஐ.நா செயலாளரோ அமெரிக்க ஜனாதிபதியோ கேட்டும் இலங்கை அரசாங்கம் எந்தவொரு யுத்தக் குற்றங்களையும் புரியவில்லையாம்.அதனால் எனக்கும் அதைப் பற்றி ஏதும் தெரியாது.

4 comments:

  1. Salute!!!! சினிமா மேற்கோளில்லாமல் எழுதியிருந்தால் Royal Salute போட்டிருப்பேன்

    ReplyDelete
  2. காரணமின்றிச் சுட்டுத் தள்ளப்பட்ட எம் உறவுகளைப் பற்றிய கரிசனை பதிவில் தெரிகிறது. மன நல ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி எந்தவொரு அமைப்பும் உதவி செய்து அவர்களை நல்வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்வதாகத் தெரியவில்லை.

    ReplyDelete