ஈழத்தின் இனப் பிரச்சினை முற்றி, முறுகி, பொங்கி எழுந்து, பெரும் போராட்டமாகி, உச்சத்தைத் தொட்ட பின்னர் அடக்கப் பட்டிருந்தாலும் அதற்கான அடிப்படைக் காரணம், மொழி ரீதியான, இன ரீதியான புறக்கணிப்புத் தான் என்பதை எவரும் மறுதலித்து விட முடியாது.அறுபது ஆண்டுகளாய் ஆழமாக்ப் புரையோடிப் போன பிரச்சினையின் ஆணிவேர் எதுவென்று அறுதியிட்டுத் தெரிந்திருந்தும் அதற்கான தீர்வை முன்வைத்து, அம்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, ஆற்றாமைகளை,ஆதங்கங்களைக் களைவதை விட்டுவிட்டு இப்போதும் இசைந்து கொடுக்காமல் இடாம்பிகமாகப் பேசிக் கொண்டிருந்தால் இன்னுமொரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கி நாடு செல்வதைத் தடுக்கமுடியாது என்றெல்லாம் ஐ.நா செயலாளரென்ன ஆண்டவனே வந்து சொன்னாலும் ஒரு பிரயோசனுமுமில்லை என்பது ஓராம் ஆண்டு படிக்கும் பிள்ளைக்கே தெரிந்த உண்மையெனப்தால் நாம் அதை விட்டு விட்டு சொல்ல வந்த விடயத்திற்குச் செல்வோம்.
எந்தவொரு பெரும்பான்மையினமும் ஒரு சிறுபான்மையினத்தின் உணர்வுகளை மதிக்காமல்,அவர்களை அடக்கி, ஆள நினைக்கும் போது ஏற்படுகின்ற அந்த வலி,வேதனை,,குமுறலை வார்த்தையில் வடிக்க முடியாது.அதன் போது ஏற்படுகின்ற கோபம் கொடூர்மானது.கொன்று உயிரைத் தின்றிடவும் தயங்காது.உலகில் ஏற்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலானாவை புரட்சிகளாகட்டும், முதலாளி, தொழிலாளி பிரச்சினையாகட்டும் ஆளும் வர்க்கம் -மக்கள் புரட்சியாகட்டும் சுதந்திரப் போராட்டங்களாகட்டும் எதோவொரு வகையில் பெரும்பான்மை, சிறுபான்மை சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன.
அதனை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம்.எங்கள் மொழி, எங்கள் கலாசாரம் மதிக்கப் படாத போது,எம்மவனுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படாத போது, எம் நிலங்கள் பறிக்கப் பட்ட போது, எம் கலாசராம் இரவோடு இரவாக வழித்துத் துடைக்கப் பட்டு அழிக்கப் பட்ட போது, வரலாறு மாற்றி எழுதப்பட்ட போது எம் நெஞ்சில் ஏற்பட்ட வலியை, வேதனையை அனுபவித்து உணர்ந்திருக்கின்றோம். ஆக பெரும்பான்மையினமும் சிறுபான்மையினமும் ஒன்றாக ஒரு சமுதாயத்தில் உள்ள போது சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடுய வலிகள் மற்றைய எல்லாரையும் விட எங்களுக்கு அதிகமாக தெரியும்.தெரிந்திருக்க வேண்டும்.
இங்கே பெரும் பான்மையினம், சிறுபான்மையினம் என்பது இரு இனங்களாகத் தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.ஒரு வளர்ச்சியடைந்த பிரதேசமும் வளர்ச்சி குன்றிய பிரதேசமுமாகவும்,பிரபல நகரப் பாடசாலையாகவும், பின்தங்கிய கிராமப் பாடசாலையாகவும், வசதியான ஒரு ஊரும் வறுமை மிகுந்த இன்னுமொரு ஊராகவும், உயர்ந்த சாதியாகவும் தாழ்ந்த சாதியாகவும்,ஆண் சமுதாயமாகவும் பெண் சமுதாயமுமாகவும் ஏன் படித்த ஒருவனாகவும் படிக்காத இன்னுமொருவனாகவும் அல்லது வேலை செய்யும் ஒருவனாகவும் வேலையற்று இருக்கும் இன்னொருவனாகவும் இருக்கலாம். மேற்சொன்ன சோடிகளில் ஒன்றிலிருந்து மற்றையது ஆளுமையிலோ, அதிகாரத்திலோ,கல்வியிலோ,வசதியிலோ,பிரபலத்திலோ ஒன்று உயர்ந்து,பெரும்பான்மையாகி,அது சொல்வதை மற்றையது கேட்கும் படியாய்,அல்லது கேட்க வைக்கச் செய்கிறது.மற்றையதுஅடங்கிப், பதுங்க வேண்டியதால்,நெஞ்சு பொருமி,உள்ளுக்குள் விம்மி,அழுகின்றது.
எனக்கு விளங்காத ஒன்று இது தான்.இவ்வளவு பட்டும் எங்களுக்கு ஏன் இன்னும் புத்தி வரவில்லை என்பதே? மிகச் சிறிய இனமான ஈழத் தமிழினம் மிகப் பெரிய இழப்பினை சந்தித்துள்ளது அதன் போராட்டத்திலே.ஆனாலும் அதெல்லாம் மறந்து,இங்கு பிறந்தவர்கள் தான் எல்லாவற்றுக்கும் தலைப்பாகை கட்ட வேண்டும்,இவர்கள் தான் கலாசாரத்தின், தமிழின் காவலர்கள்.இந்த இடத்தில் பிறந்தவர்களுக்கு என்னடா தமிழ்ப் பற்று போன்ற கதைகள் மற்றவர்களுடைய மனங்களில் ஏற்படுத்தப் போகும் வலியை நாம் அறிய மாட்டோமா?அல்லது உணர மறுக்கின்றோமா? அல்லது உணார்ந்தும் ஊமைகள் போல் இருக்கின்றோமா?
ஒரு பிரபலமான பாடசாலையிலிருந்து வந்தவர்கள்,சிறு பாடசாலையிலிருந்து வந்தவர்களை நக்கலடிப்பது,அவர்களை வம்புக்கு அழைப்பது,ஏதோ தாங்கள் மட்டும் தான் கொம்புகள் போல் கதைப்பது அவர்களை தனித்தனியே ,தம்முள் சிறு சிறு குழுவாகச் சேர்ந்தியங்கவே தூண்டும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம். நாங்கள் பாடசாலைகளில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் எம் பாடசாலை ஆசிரியர்கள், எம் மண்ணில் பெரும் பான்மை இந்துக்களிடையெ சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களைப் பார்த்து "சோத்துக் கிறீஸ்தவம்" என்று கூறி எள்ளி நகையாடியிருக்கின்றோம்.ஆசிரியர்கள் போனால் பிறகு கூட நாங்கள் அவர்களை அவ்வாறு பரிகாசித்து வம்புக்கிழுத்திருக்கின்றோம்.அவர்கள் சோத்துக்கும் மதம் மாறினாலென்ன மாறாவிட்டால் தானென்னெ ? என்று எம் பாட்டிலிருந்திராமல் அவர்களின் மத ரீதியான உணர்வுகளைத் தீண்டிப் பார்த்திருக்கிறோமே என்பது இப்போது தான் உறைக்கிறது.
ஒரு தாழ்ந்த சாதிப் பையனை,அவனின் சாதியின் பெயரால் கோவில்களிலும் பொது வைபவங்களிலும் தள்ளி வைக்கும் போது அவனுக்கு ஏற்படும் மன நிலையை எம்மால் உணரமுடியாதுள்ளது என்றால் அதை நம்புவது சற்றுக் கடினமாகவுள்ளது.ஒரு படிக்காதவனைப் பார்த்து அவன் படிப்பப் பற்றி எள்ளி நகையாடும் போதோ அல்லது வேலை எடுக்காதவனின் இயலாமையப் பரிகாசிக்கும் போதோ அல்லது ஒரு வானொலி, வானொலி உலா நிகழ்ச்சிகள் நடாத்தச் செல்லும் போது ஒரு பிரதேசம் புறக்கணிக்கப் படுகின்ற போதோ ஏற்படுகின்ற வலி எங்களுக்கு நாங்கள் புறக்கணிக்கப் பட்ட போது, படுகின்ற போது ஏற்படாததா?
ஏன் பெண்கள் அது செய்யக் கூடாது,இப்படித்தான் இருக்க வேண்டும், அப்பிடித் தான் உடுத்த வேண்டும் என ஆணாதிக்கம் ஆணையிடும் போது,பெண்மையானவள் தான் தனது தேவைகளை சுயநிர்ணயம் செய்ய முடியாமையை உணர்வதை எங்களால் உணரமுடியதுள்ளது என்று கூறீனால் அது வேடிக்கை தானன்றி வேறொன்றுமில்லை.உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்காத நாம் அவள் வெளியக சுயநிர்ணய உரிமைக்காய் விவாகரத்து கோரினால் மறுப்பது எதனால்?
அது மட்டுமல்லாது இன்று பல்கலைக் கழகங்களில் சென்ற மாணவர்களிடையேயும் பிரதேச வாதம்,பாடசாலைப் பாகுபாடு என்பன தாராளமாகவே உள்ளது.புதிதாக வரும் கனிஸ்ட மாணவர்களை ராகிங் செய்யும் போது, மாணவத் தலைவர் தெரிவின் போது பக்கச் சார்பான ,பல சில்லறை அரசியல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.சில பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்றாக, ஒற்றுமையாகத் திரிந்தால் வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது.அவர்கள் எவ்வாறு இருந்தாலென்ன, நாம் வந்த வேலையைப் பார்ப்போம் என்றில்லை.இருக்கிற மிச்ச சொச்சமும் ஒற்றுமையில்லாமல் குழிபறிப்புக்களும்,முதுகில் குத்தல்களும் தொடரவேசெய்கின்றன.படிக்க வந்த நோக்கம் மறந்து,கல்வியின் குறிக்கோள் துறந்து,நெறி பிறழ்ந்து,வஞ்சனைத் திட்டங்கள் தீட்டவே வகுப்பறைகள் பயன்படுகின்றன.வருடங்களூம் அதிலேயே உருள்கின்றன.பாஸ் அவுட் பண்ணினவர்களுடன் கூடக் கொன்சல்ற் பண்ணி பக்காப் பிளான்கள் படைக்கப் படுகின்றன.
சில பிரதேசத்து மாணவர்களது சில திறமைகள்,சில பண்புகள்,சில பெரும்பான்மையான இயலவாளிகளினால் பரிகாசிக்கப் பட்டு,மழுங்கடிக்கப்படுகின்றன.ஓரங்கட்டப் படுகின்றன.ஒளித்து மறைக்கப் படுகின்றன. இப்படிச் சின்ன சின்ன விடயங்களில் கூட இவ்வளவு பட்டும் நாம் திருந்தாமலிருக்கிறோம் என்பதாலோ எங்களுக்கு இன்னமும் விடுதலை கிடக்கவில்லை என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
ஈழத்துக் காந்தியான தந்தை செல்வநாயகத்திடம் ஒரு முறை ஒரு செய்தியாளர் "இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்குக் கிழக்குக்கு தீர்வு கிடைத்தால் நீங்கள் சார்ந்த கிறீஸ்தவர்கள் அதிலே சமமாக மதிக்கப் படுவார்களா ?" என்று கேட்ட கேள்விக்கு "சுதந்திரம் கிடைக்கட்டும் பார்ப்போம்" என்றொரு மழுப்பல் பதிலைக் கூறித் தப்பி விட்டார் தந்தை.உண்மையில் சுதந்திரம் கிடைத்திருந்தால் கூட நாங்களே "நான் பெரியவன் ..நீ சின்னவன்" என்று கூறி ஆள் ஆளுக்குப் இப்போது தமிழ்க்கட்சிகள் பிரிந்து நிற்தைப் போல பிரிந்து நின்று கொண்டு தீவுக் கூட்டங்களாய் தனித்தனியாய் பிரிந்து நின்றிருப்போமோ என்று கூட எண்ணத் தலைப் படுகின்றது.
வடக்கு- கிழக்கு தனித்தனி மாகாணாமாகி ,மாவட்டமாகி, பிரதேசமாகி, ஊராகி, ஊரில் உள்ள றோட்டாகி றோட்டுக்கொரு தலைவர்மார் உருவாகியிருப்பார்கள்.இன்றைய சினிமாவில் ரௌடிகள் இடங்களைப் பிரித்துக் கொண்டு இது எங்க ஏரியா உள்ள வராதே"" என்று கூறுவது போல் கூறிக் கொண்டிருந்திருப்போம்.சிலவேளைகளில் அதற்குள்ளும் எட்டப்பர்கள் புகுந்தால் றோட்டும் உடைந்து வீட்டோடு வந்து நிற்கும். எவ்வளவு பட்டாலும் நாங்கள் திருந்த மாட்டோம்.வரலாற முழுக்க எட்டப்பர்களையும் சகுனிகளையும் நிறையவே கண்ட இனம் எங்கள் இனம்.ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்தது என்று கூறப்படும் எம்மினம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,அடிமைகள் போல் கொடுமைப் படுத்தப் படுவதற்கு நாங்களூம் ஒரு காரணம்.நாங்களூம் எங்கள் இனமும்.நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது.உண்மையில் எனது தலைப்பை புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் பு---மக்கள் என்று மாற்றியிருந்தால் சரியாக இருக்குமோ என்று கூட நான் என்ணுகின்றேன்
Sunday, April 18, 2010
புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள்
Labels:
ஈழம்,
என் சமூகமே... ஏன்?,
என் மன வானில்,
கனலும்நெஞ்சு,
மூளாத் தீ
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.ஏன் உங்கள் எழுத்தில் இவ்வளவு கோபம் கொப்பளிக்கிறது.நீங்கள் சொன்ன பல்கலைக்கழக விடயம் புதிதாகாவே எனக்குப் படுகிறது.மீண்டும் வாழ்த்துக்கள்,தொடர்ந்தும் சமூக ரீதியான பதிவுகளை எழுதுங்கள்
ReplyDeleteஅனாமி உங்கள் வருகைக்கு நன்றி.ஆனாலும் பெயரைப் போட்டு பின்னூட்டமிட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.அடுத்தமுறை பெயரைப் போட்டுபின்னூட்டமிடுங்கள். எனக்கு பெரிதாக ஒரு கோபமும் இல்லை.ஆனல் சில நடைமுறை விடயங்களை,பிரச்சனைகளை எழுத்கின்றேன்.அதற்காக என்னை சமூகம் சார்ந்தபதிவுகளை மட்டுமே இடுபவனாக அடியாளப் படுத்திவிடவேண்டாம்
ReplyDeleteகச்சிதமான கருத்துக்களை காத்திரமாக கக்கி இருக்கிறிங்க வடலியூரான்....வாழ்த்துக்கள் ...ஒவ்வொருவரும் உணர்ந்து தன்னை திருத்தினால் உலகம் தானே திருந்தும்
ReplyDeleteநண்பர் கருணையூரானே வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்
ReplyDeleteவருத்தப் பட வேண்டிய விடயம் என்னவெனில் படித்த சமூகமான பல்கலைக் கழக மாணவர்கள் பிரதேச வாதத்தை வளர்க்கும் பசளைகளாய் இருப்பது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையேயுள்ள மிகப் பெரிய குறைபாடு பிரதேசவாதம்.
ReplyDeleteபனையூரான் வருகைக்கு நன்றி.ஆமாம் பனையூரான் அது எமது சமூகத்தின் சாபக்கேடாயாகும்
ReplyDeleteமிக ஆழமான கருத்துக்கள் வடலியூரான்.
ReplyDeleteநாம் ஒருத்தரும் இதனைச் சிந்த்தித்துப் பார்ப்பதில்லை. நான் தான் எல்லாரையும் விடப் பெரியவன் என்று எண்ணும் எண்ணம் தான் மற்றவனை அடக்கி வைக்கத் தூண்டுகிறது. அதுவே மற்றவர்களை எள்ளி நகையாடவும் தூண்டுகிறது. நிச்சயமாக இப்படியான மனப்பாங்கு எம் எல்லோரிடமிருந்தும் கழையப்பட வேண்டியதே...