துள்ளித் திரிந்த பள்ளிப்பருவங்களில் நாம் செய்த கள்ளத்தனங்கள், மொள்ளமாரித்தனங்களுக்கெல்லாம் பள்ளி ஆசான்கள் நம்மையெல்லாம் நுள்ளி எடுத்திருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.அனைவரும் அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தான்.அந்த வயதில் எல்லோரும் குழப்படி செய்திருப்போம்.ஆசிரியர்களுக்குப் பயம் என்றாலும் ஆசிரியர்கள் அடிப்பார்க்ள் என்பதற்காக குழப்படி செய்யாமல் மாணவர்கள் விட்டதாகவும் இல்லை.ஆசிரியர்களும் தங்கள் பாட்டில் ஏதேதோ கத்தினாலும் அவர்கள் செல்லவிட்டு அவர்கள் சொன்னதற்கு எதிர்மாறாக கூத்துக்களெல்லாம் அரங்கேறியிருக்கும்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த குழப்படிகளை இப்போது நினைத்தால் சிலவேளைகளில் சிரிப்புத்தான் வரும்.அதே நேரம் வாங்கிய அடிகளும் ஞாபகம் வரும்.க.பொ.த.(சா/த) இற்கு முன்னர் நானும் பல பேரிடம் சரமாரியாக வாங்கிக் கட்டியிருந்தாலும் ஒரு சில அடிகள் செத்தாலும் மறக்காது.இப்போதும் அந்த அடிகள் வலிக்கும்.தற்போதும் அந்த அடிகள் 'பின்னுக்கு' புளிக்கும்.காலுக்கு கீழ் தழும்பு தெரிவது போல் இருக்கும்.அப்படியாக நான் வாங்கிய என் நெஞ்சம் மறக்காத அந்த அடிகளை மீட்டு உங்களுடன் பகிர்வதோடு உங்களையும் அந்த 'வசந்த காலங்களை' மீட்டிப் பார்க்கச் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.
நாங்கள் ஒன்பதாம் ஆண்டளவில் கற்றுக் கொண்டிருந்த போது,எங்கள் உப அதிபராகக் கடமையாற்றியவரின் பட்டப்பெயர் புலிக்குட்டி.ஏன் அவர் அவ்வாறாக வழங்கப்படுகிறார் என்பதற்கு, நண்பர் கிருத்திகன் தனதொரு பதிவில் விரிவாக விளக்கம் கொடுத்திருந்தாலும் அதை வாசிக்காதவர்களுக்காக அந்த காரணத்தை இரத்தினச்சுருக்கமாகச் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.புலிக்கு உள்ளங்கால் கூடக் கறுப்புத் தானாம்.அந்த நிறமுடைய இவரின் தந்தையின் குட்டியாகிய இவரை புலிக்குட்டி என்றே பன்னெடுங்காலமாகப் பலரும் வழங்கி வந்தனர்.
நாங்கள் தரம் 9 இல் கற்றுக்கொண்டிருந்த போது பாடசாலைகளுக்கிடையான வன்பந்துப் போட்டி நடைபெறுவது வழக்கம்.15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையிலான ஆட்டம் ஒன்று எமது பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.எதிரணிப் பாடசாலையை எனக்கு ஞாபகம் இல்லை.எமது வகுப்பு நண்பனும்,தற்போது மருத்துவபீடத்தில் கற்றுக் கொண்டிருப்பவனுமாகிய கலைமாறனும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அணியில் விளையாடுகின்றான்.(நண்பன் பால்குடியும் விளையாடியிருப்பார் என்று நினைக்கின்றேன்)எமது நண்பனின் துடுப்பாட்டத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுதி, எம்மில் கிளர்ந்தது.
எமது கல்லூரி மைதானம்,பாடசாலையிலுருந்து 70 - 80 m தூரத்தில் எமது சகோதர(ரி)ப் பாடசாலையை அண்மித்திருந்தது.ஆட்டத்தைக் காணச் செல்வதென்றால் பாட ஆசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்லவேண்டும் என்பது பாடசாலை விதிமுறை.ஆனால் அன்று எங்கள் 8ம் பாட ஆசிரியர் பாடசாலைக்கு சமுகம் தந்திருக்கவில்லை.அதனால் நாங்கள் அனைவரும் தன்னிச்சையாக,ஒற்றுமையாக முடிவெடுத்து மைதானத்துக்கு சென்றோம்.(எங்கள் வகுப்பு ஒற்றுமையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.என்னதான் எங்களுக்குள் அடிபட்டாலும்,வெளியே ஒரு அதிபரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது மாணவத் தலைவரினிடமோ எவனும் ஒருவனை ஒருவன் மாட்டி விட மாட்டான்.செம fit.அன்று பழகிய அந்த ஒற்றுமையினால் தான் நாம் இன்றும் நல்ல நண்பர்களாய் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்)
கடைசிப் பாடமென்ற படியால் பஸ்களில் பயணிக்கும் நெல்லியடி, கரவெட்டி, கரணவாய், உடுப்பிட்டி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, துன்னாலை நண்பர்கள் புத்தகப் பைகளுடனேயே மைதானத்துக்குள் வந்திருந்தனர்.நாங்கள் எமது துவிச்சக்கரவண்டிகள் உள்ளே நின்ற காரணத்தினால் வெறுங்கையுடனையே சென்றிருந்தோம்.சென்று கலைமாறனின் ஆட்டத்தையும் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்.
இந்த நேரம் பார்த்து எங்கடை புலிக்குட்டி வன்னிப் பக்கம் போயிருக்குது(எங்களது கட்டடத் தொகுதியின் செல்லப்பெயர்- பெயரிலிருந்து அதிலுள்ளவர்கள் செய்யும் குழப்படிகளை சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது தானே?)வகுப்பில் ஒருவரும் இல்லை.பக்கத்து வகுப்பிடம் விசாரித்திருக்கிறார்.திரும்பி அலுவலக்த்துக்கு வந்து, ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம்பொன்றையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார்.மைதானத்தின் பின்புறவாசலில் நின்று கொண்டு(அந்தப் பாதையால் தான் சகோதர(ரி)ப் பாடசாலையின் சகோதரிகள் பாடசாலை சென்றுவருவார்கள்)பிரம்பைக் காட்டியவாறே ஒன்றன்பின் ஒருவராக வரும்படி கர்ச்சித்தார்.
புலிக்குட்டியை சும்மா கண்டாலே பயம்.இதில தடியை வேறை ஆட்டி ஆட்டி கொண்டு வெருட்டுது.ஒருத்தனும் முன்னுக்குப் போகமாட்டேன்கிறான்.ஒருத்தனுக்குப் பின் ஒருத்தன் ஒளித்து வரிசையின் பின்பக்கம் செல்வதற்கே எல்லாரும் முண்டியடித்துக் கொண்டிருந்தாங்கள்.குட்டிக்கு இன்னும் கோபம் ஏறிட்டுது.வந்து ஒருத்தனை ஏதேச்சையாகப் பிடித்து ரோட்டிலை வைத்து ஒரு மூன்று,நாலு அடி விழுந்திருக்கும்.இப்பிடியே ஒவ்வொருத்தருக்கும் பரவலாக மூன்று, நாலு என்று விழுந்து கொண்டே வந்துது.
எனது முறையும் வந்தது.மூன்றே மூன்று அடி.சரிசமனான விசைப்பருமன்.சரியாக ஒரே இடத்தில் சரியான நேர இடைவெளியில் அவரது பிரம்பு எளிமை இசைஇயக்கம் ஆடிச் சென்றது.ஆனால் எனக்கோ சீவன் போய்வந்தது.(ஆள் தூயகணிதம், பிரயோககணிதம், பௌதீகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் என்று க.பொ.த.(உ.த)விஞ்ஞானத்திலில் எல்லாப் பரப்பையும் கரைத்துக் குடித்த மனிசன் என்றபடியால் எதைப் பாவித்து உந்த எளிமையிசை இயக்கத்தை நிகழ்த்தினாரோ என்று எனக்கு தெரியாது)அப்போது நேரம் 1.45 ஐ த் தாண்டியிருந்தபடியால் சகோதரப் பாடசாலையின் சகோதரிகள்,நண்பிகள்,எங்கள் கனவுக் கன்னிகள் எல்லாரும் எங்களைப் பார்த்து கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு சென்றார்கள்.
என்ன செய்வது வாங்கின அடிகளின் வலிகளை விடவா அந்த கொடுப்புச்சிரிப்புக்கள் வலிதானவை என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டோம்.இன்றைக்கும் அந்த அடிகள் எங்களை பின்னுக்குத் தடவிப் பார்க்கச் சொல்கிறது."அ..ஆ..அ ம்..ம்..மா "என்று கண்களைச் செருமிக் கொண்டே நுனிக்காலில் எழும்பி "அ..அ..ஆ.. ஐயோ சேர்.. இனி ..இப்பிடிச் செய்யமாட்டேன் " எனச் சொல்ல வைக்கிறது.இன்றல்ல கடைசிவரைக்கும் மறக்க முடியாதவை அந்த அடிகள்.தங்கள் அடி மூலம் எங்களைப் பண்படுத்திய அந்த ஆசிரியர்கள் இன்றும் எம்முன்னே வந்து போகிறார்கள்.அது தான் அந்த அடியின் வலிமை.பெருமை.திறமை.நன்றிகள் கோடி அந்த அடிகளுக்கும் அடித்துத் திருத்திய ஆசிரியர்களுக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆனாலும் புலிக்குட்டியின் குட்டிக்கு அடித்துத் திருத்தும் உரிமை இல்லவே இல்லை என்பது என் கருத்து.
ReplyDelete///ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம்பொன்றையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார்///தடியை தானே சொல்லுறியள்
ReplyDelete///தங்கள் அடி மூலம் எங்களைப் பண்படுத்திய அந்த ஆசிரியர்கள் இன்றும் எம்முன்னே வந்து போகிறார்கள்.அது தான் அந்த அடியின் வலிமை.பெருமை.திறமை.நன்றிகள் கோடி அந்த அடிகளுக்கும் அடித்துத் திருத்திய ஆசிரியர்களுக்கும்.///
எவ்வளவு ஒரு அருமையான வடலியூரானை உருக்கிய பெருமை ஆசிரியர்களையே சாரும்
வேறு பல நினைவுகளை அறிய காத்திருக்கின்றோம்
இப்பிடி எத்தினை குழப்படிகள்? எத்தினை அடிகள் வாங்கியிருப்போம்? நினைத்துப் பார்க்க இப்போது இனிமையாகவும் சிலவேளைகளில் ஏன் அப்பிடி நட்ந்து கொண்டோம் என்று தெரியாமலும் இருக்கும்.
ReplyDeleteகிருத்திகன் வருகைக்கு நன்றிகள்..நீங்கள் ஏன் அப்பிடி சொல்ல வருகின்றீர்கள் என்று புரிகிறது நண்பரே.
ReplyDeleteகருணையூரான் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.
ReplyDelete//தடியை தானே சொல்லுறியள்
தடியைத் தான் நான் சொன்னனான் நீங்கள் என்னத்தை நினச்சனின்ங்கள்
குணசீலன் sir பற்றி ஹார்ட்லி இன் மைந்தர்கள் அனுபவம் நன்று.. ..
ReplyDelete