Sunday, March 21, 2010

சர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்

இன்றைய காலகட்டங்களில் சர்வதேச பாடசாலைகள்(International School)களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், அந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையும், அங்கு பிள்ளைகளைக் கற்கத்தூண்டும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை கண்கூடு.இந்தக் கல்வியை அவர்கள் நாடுவதன் காரணம் என்ன?அது சரியானவழிமுறைதானா?அதில் உள்ள சாதக, பாதக விடயங்களை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.உங்கள் விமர்சனங்களை, நிச்சயமாக நான் திறந்தமனதுடன் வரவேற்கின்றேன்.



ஒருநாட்டிலே வாழும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பாடத்திட்டங்களைப் போதிப்பதற்காக இந்த சர்வதேசப் பாடசாலைகள் ஜப்பான்,சுவிற்சலாந்து,துருக்கி போன்ற நாடுகளில் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோன்றின.இவ்வாறான பாடசாலைகளுக்கென்று பிரத்தியேகமான முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.இலங்கையில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்கள்,தூதரகங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கற்பதற்கென்று இலங்கையின் முதலாவது சர்வதேசப் பாடசாலை 1958 ம் ஆண்டு கொழும்பில் "ஓவெர்செஅ'ச் Cகில்ட்ரென் ஸ்சோல்" என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது.


ஆரம்பத்தில் ஓரளவிற்கே இருந்த இப்பாடசாலைகள் 1980 இன் பின்னர் வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கின.தனியார் பாடசாலைகளுக்கும் சர்வதேசப் பாடசாலைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனியார் பாடசாலைகள் அரசாங்கப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவரும் அதேவேளை சர்வதேசப் பாடசாலைகள் தத்தமது நாட்டுக்குரிய அல்லது பெரும்பாலும் அமெரிக்க, பிரித்தானியப் பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. ஆரம்ப காலங்களில் தலைநகரில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட சருவதேசப் பாடசாலைகள் இன்று மேல் மாகாணத்தில் 54 பாடசாலைகளாகவும்,மத்திய மாகாணத்தில் 16 ஆகவும்,வடமேல் மாகாணத்தில் 8 ஆகவும் காணப்படும் அதேவேளை வடக்கு,கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றாகவும் உள்ளது.




சர்வதேசப் பாடசாலைகள், 5 - 14 வயதுப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சின் அனுமதியின்றி அமைக்கமுடியாதென்ற இலங்கையில் உள்ள கல்விச் சட்டங்களை மீறியே 5- 14 மாணவர்களுக்காகவும் பாடசாலைகளை அமைத்துள்ளன.பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கில மொழியில் கற்பித்தாலும்,சில பாடசாலைகள் ரஷ்ய,பிரெஞ்சு மொழிகளிலும் கற்பிக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளின் நோக்கம் சிறந்த இல்ங்கைப் பிரசையையுருவாக்குதல் எனில்,பிரித்தானியப் பாடத்திட்டதுடன செயற்படும் சர்வதேசப் பாடசாலையாயின் சிறந்த பிரித்தனியப் பிரசையையுருவாக்குவதே அதனது நோக்கமாக இருக்கும்.அவ்வாறெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையொன்றினால் பிரித்தானிய கலாசாரங்களுடன் பிரித்தானியப் பிரசையாக உருவாக்கப்படும் ஒரு இலங்கை மாணவன் எவ்வாறு இலங்கை சமூகத்துடன் பொருதி வாழமுடியும் என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியாது.ஏனெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையில் கற்கும் எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை.இந்நிலையில் சர்வதேசப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.




சுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்விக்கொள்கை மத்திய,உயர் தரவர்க்கத்தினருக்கே கல்வி என்று இருந்த நிலையை மாற்றி,ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சிறந்த,உயர் கல்வியை கிராமப் புறங்களுக்கும் விரிவு படுத்தப் பயன்பட்டது.தாய்மொழிக் கல்வியினால் மாணவர்களின் ஆங்கில அறிவிலே பாதிப்பு ஏற்படுவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கல்வித்துறையிலே சமூகநீதியையும் நியாயத்தையும் ஏற்படுத்த அது உதவியது என்றால் அதில் தப்பேதுமில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆப்படிக்கும் வகையில் 1990 களில் ஏற்பட்ட பூகோளமயவாக்கம், இலங்கையில் அறிமுகப்படுத்தப் பட்ட தாராளமயமான பொருளாதாரக்கொள்கை, அதன் பயனாக எழுச்சியுற்ற தனியார் துறையின் அசுர வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஆங்கிலமொழிக்களிக்கப்பட்ட முக்கியத்துவம், முன்னணி அரசாங்கப் பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் எழுந்த சிக்கல்கள், அரசாங்கப் பாடசாலைகளில் ஏற்பட்ட கல்வி, நிர்வாக சீர்கேடுகளினால் ஏற்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் தராதர வீழ்ச்சி என்பன ஒருங்கு சேர்ந்து சர்வதேசப் பாடசாலைகளின் பால் மாணவர்களையும், பெற்றோர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.



சர்வதேசப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தாராளமயமாக்கல் கொள்கையால் நன்மையடைந்த புதிய செல்வந்தவகுப்பினர் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து,ஆங்கில கல்வியை நாடமுயன்றதும் அவர்களைப் பார்த்து சாதாரண மக்கள் வாயைப் பிளக்கத் தொடங்கியதுவும் காரணமாய் அமைந்தது.அதுமட்டுமலாது தாராளமயமாக்கலால் அதிகரித்த தனியார் மூலதனமும்,அந்நியச் செலாவாணிகளின் உள்வருகையும் வர்த்தகம்,கைத்தொழில்,சுகாதாரம் போன்ற துறைகளிலும் கால்பதித்திருந்த தனியாரை கல்வித்துறையிலும் முதலிடத் தூண்டியது.இதனாலும் சர்வதேசப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு தோன்றியது.




சர்வதேசப் பாடசாலைகளில் செல்வந்தவகுப்பினர் ஆங்கிலத்தில் கற்பதால் அவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புக்கள் அதிகளவில் கிடைக்க ஏதுவாயமைகின்றது.சர்வதேசப் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் உயர்ந்த கட்டணத்தையும் பெற்றோர் செலுத்தத் தயாராயிருப்பது அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அவாவோடு உள்ளனர் என்பதையும் இந்தப் பாடசாலைகளில் கற்பது கௌரவமானது என்ற அவர்களின் சிந்தனையோட்டத்தையும் காட்டிநிற்கின்றது.அத்தோடு பிரபல அரசாங்கப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முயன்று தோற்றுப் போன சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட மனத் தாக்கங்கள்,"கௌரவக் குறைச்சல்கள்" போன்றனவற்றோடு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இவை ஒர் ஆரம்பமாக இவை அமையும் என்ற கருத்தோட்டமும் அமைகின்றது.


தாய்மொழியில் கிடைக்காத அரிய நூல்கள், சஞ்சிகைகள், கற்றல் சாதனங்கள் ஆங்கிலமொழிக் கல்வியில் கிடைக்கின்றன என்ற அவர்களின் வாதமும் மறுதலிக்கப் படமுடியாத ஒன்று.35 சதவீதமான வேலைவாய்ப்புக்கள் ஆங்கில மொழியில் செயற்படும் தனியார்துறையாரிடம் உள்ளதால் ஆங்கில மொழிக்கல்வியில் இயல்பாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றமை தவிர்க்கமுடியாததாகிறது.அதற்காக இலங்கையில் உள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கும் ஆங்கிலமொழிக் கல்வியை வழங்கினால் அவர்கள் அனைவருக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பை வழங்குமா என்று குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்கப் படாது. பூகோளமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலமே விஞ்ஞான மொழி, இராஜதந்திரமொழி, வர்த்தக மொழி, சர்வதேசத் தொடர்பாடல் மொழி, அறிவு உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகின்றது.ஆக்வே எதிலும் தவிர்க்கமுடியாத ஆங்கிலத்தைக் கற்கவேண்டியதுவும் அதை பெறுவதற்கு சிறந்த வழியாக சர்வதேசப் பாடசாலைகளைக் கருதியதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.



அத்தோடு இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் காலம் தாழ்த்தியே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற்மை, பட்டம் பெறும் போது 25- 26 வயதைத் தொட்டுவிடுகின்றமை, கஸ்ரப்பட்டு அனுமதி பெற்றாலும் சிரேஷ்ட மாணவர்களின் "வதை" எனப் பல பிரச்சினைகள் உள்ளமையினால்,இவற்றைத் தவிர்ப்பதற்குமாய்ப் பலர் சர்வதேசப் படசாலைகளின் இலண்டன் க.பொ.த.(சா/த) மற்றும் (உ/த) போன்றவற்றைக் கற்கின்றனர். மேலே உள்ள பல காரணங்களுக்காக அவர்கள் சர்வதேசப் பாடசாலைகளைத் தெரிவு செய்தாலும் அதிலே உள்ள சமூக ரீதியான பாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓவர் சீரியஸ் பதிவாய்ப் போச்சுதோ எண்டு இப்பத் தான் யோசிக்கிறன்

8 comments:

  1. பல நல்ல சிந்தனைகளை எழுப்புகின்ற சிறப்பான பதிவு.

    ReplyDelete
  2. //எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை//

    சரியாகச் சொன்னீர்கள்! ஆனாலும் சமூகத்தில் மனிதராக - மரியாதையுடன் வாழமுடியும்.

    //இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது//

    இது எந்தளவுக்கு உண்மை: யாருடைய பிரசை அந்தஸ்து காணாமல் போனது? குழப்புகிறீர்.

    நானிருக்கும் சுவிசில் மாணவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களை 12 - 14 வயதிலேயே அவர்களுக்கு பிடித்த ஆர்வமுள்ள துறையில் பிரத்தியேக பயிற்சி கொடுக்கப்பட்டு 18, 19 வயதில் பகுதிநேரமாக அவர்கள் சம்பாதித்துக்கொண்டு தமது உயர் கல்வியை தொடர்கிறார்கள். தற்போது இங்குள்ள பலரின் பிள்ளைகள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள் - சிறுவர்களாக வந்தவர்கள் அனைவருமே நல்ல தொழிலில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

    எமது ஆசிய நாடுகளில் எப்போது சரியான முறையில் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு நீதி நியாயம் ஒழுங்குக்கு வருகிறதோ அன்றுதான் பாதகங்கள் நீங்கும்.சட்டங்கள் ஏற்படுத்தப்படுவது மனிதர்களுக்காகவே! மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சட்டங்கள் ஏற்க முடியாவிட்டால் அதை மாற்றியமைக்க துணிவு வரவேண்டும்.சட்டம் அப்படிச் சொல்கிறது என்று சொல்லிச் சொல்லியே நாம் வாழ்வை வீணடிப்பதுதான் எம்முடமுள்ள ஓரெயொரு கெட்ட பழக்கம். இது முற்றாக மாற்றியமைக்க நிபுணர்கள் தேவை! முன்வருவார்களா?

    ReplyDelete
  3. கலக்கிடிங்க வடலியூரான் ....பல உண்மைகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறியள் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மருத்துவர் முருகானந்தன் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்

    ReplyDelete
  5. தங்க முகுந்தன் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்.
    ////இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது//

    நண்பரே பிரசை அந்தஸ்து பறிக்கப்பட்டால் மட்டும் தான் அன்னியப்படுத்தப் படுவதாய் அர்த்தம் இல்லை.அந்நாட்டு பிரசைகளால் ஒதுக்கப்படுகின்ற, ஒஉர் மாதிரி பார்க்கப் படுகின்ற, அல்லது இவன் எம்மவன் இல்லை,வேறொருவன் என்று பார்க்கப் படுகின்ற தன்மை இருப்பதையே நான் கூற வந்தேன்.அதே சமயம் எங்கள் சமூகத்தில் கூட அவன் "இங்கிலிஸ் காறன்" அப்பிடி இப்பிடியென்ரு சொல்லப் பட்டு புறந்தள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளதை மறுப்பது சற்று கடினம் தான்.

    ReplyDelete
  6. நீங்கள் வாழும் சுவிஸ் நாட்டு அனுபவங்களையும் பகிர்ந்ததற்கு நன்றிகள்

    ReplyDelete
  7. கருணையூரான் உங்க்ள் வருகைக்கும் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றிகள்

    ReplyDelete
  8. நல்லதொரு ஆய்வு... மேலும் இப்படியான ஆய்வுகளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete