Sunday, January 24, 2010

நான் கண்ட சுனாமி பகுதி 2

கடந்த பதிவிலே நான் சனத்துக்குள்ளாலே கஸ்ரப்பட்டு கடலுக்கண்மையிலிருந்த எமது தோட்டத்தை அடைந்ததாகக் கூறி அதிலே விட்டுச் சென்றிருந்தேன்.வாசிக்காதவர்கள்
http://vadaliyooraan.blogspot.com/2010/01/blog-post_23.htmlஐ சொடுக்கிப் பாருங்கள்.இன்று அதிலிருந்து தொடர்ந்து செல்கின்றேன்.

போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது. நான் கடவுளிடம் வேண்டியபடியே கிணத்துக்கை எதுவும் இருக்கவில்லை.எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.கொஞ்ச நேரம் கிணத்துக் கட்டிலை இருந்து யோசிச்சுப் போட்டு,சரி மற்ற தோட்டங்களுக்குப் போய்ப் பார்ப்பம் எண்டு சைக்கிளையும் எடுத்து உழக்கிக் கொண்டு போய் வல்லூட்டி, ஆவலம்பிட்டி, பருத்தியோலைப்(முதலிரண்டும் தோட்டங்களினதும் கடைசி காணியினதும் பெயர்)பக்கமாப் போனேன்.எங்கும் இல்லை.



ஐந்தும் கெட்டு,அறிவும் கெட்டது போல சைக்கிள் போன பாட்டிலை உழக்கிக் கொண்டு வந்து வீட்டை வந்தால் வீட்டை மூண்டும் நிக்குதுகள்.குப்பை கூழங்களை,வள்ளங்களை அள்ளியவாறு பனையளவு எழும்பி வந்த அலை பார்த்தவுடனேயே பெட்டியள்,மம்பெட்டியளைப் போட்டிட்டு இவையள் மூன்று பேர் உட்பட தோட்டத்துக்கை நின்ற எல்லாச்சனமுமே ஒடி தப்பிவந்திட்டுதுகள்.கடலிலிருந்து ஒன்று,ஒன்றரை மீற்றர் உயரமான கடற்கரை வீதியும் முருகைக் கற்களுமே மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது பெரியளவு இழப்புகளிலிருந்து எம்மயலூரைக் காப்பாற்றியிருந்தது.


ஒரு சில உயிரிழப்புக்களும் கரையிலிருந்த வள்ளங்களின் அழிவு,வீடுகள், சொத்துக்களின் சேதம், தோட்டங்களினுள் உப்புநீர் புகுந்து பயிரிடமுடியாமல் போனமை என்று மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இழப்புக்கள் ஏற்பட்டன.ஆனால் எம்மயலூர் மக்கள் வாழ்வில் என்றும் எதிர்பார்க்காதவாறு திடீரென்று கடல் ஊரினுள் வந்த பயத்தாலும்,தமது வீடுகள் சிதைந்து சின்னாபின்னமாகியிருந்ததாலும் எம்மூர்ப் பாடசாலைகளிலும் தஞ்சம் கோரியிருந்தனர்.அவர்களைப் பராமரிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மவர் தோள்களில் விழுந்திருந்தது.



நொடிப் பொழுதில் அனைவரும் படையணிகளாகப் பிரிந்தனர்.களத்தில் குதித்தனர்.ஒரு படைய்ணி கடற்கரைக்கு செல்லும் வீதியை மறித்து,"புதினம்" பார்க்கப் போகிறோம் என்று சொல்லிக் களவிலீடுபட முனைந்த கும்பல்களைத் தடுத்தது.மற்றைய படை ஊரவர்களிடம் காசு சேர்த்து,அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் புறப்பட்டது.பெண்கள் படையணியோ சமைக்க,அதற்கு உதவி ஒத்தாசையாக இன்னொரு படையணி களத்தில் குதித்தது.இன்னும் ஒன்று சம்பவ இடத்தில் மீட்புப் பணியிலும் மற்றுமொன்று பாடசாலைக்குச் சென்று அவர்களின் உடனடித் தேவைகளைப் பார்த்துக் கொண்டது.அரச, அரச சார்பற்ற உதவிகள் கிடைத்த மூன்றாம் நாள்வரை முழுக்க முழுக்க எம்மூரவர்களாலேயே அவர்கள் பராமரிக்கப் பட்டிருந்தன்ர்.



எது எப்பிடியோ இந்த உலகம் முழுக்க அழியாத வடுக்களை ஏற்படுத்திய சுனாமி என் வாழ்விலும் மறக்க முடியாத் அனுபவத்தைப் பதித்துச் சென்றிருந்தது.எம்மக்களைப் பெரும் அழிவின்றுங் காத்த முருகைக் கற்கள் அந்தச் சுனாமியின் பின்னரும் இன்றுவரை சிதைவடைந்தாவாறே, அதைத் திருத்தி மீண்டும் ஒரு அணையாகப் போடப் படாமல் கவனிபாரற்றுக் காணப் படுகின்றன.இன்னுமொரு சுனாமிவருமாக இருந்தால் நேரே அது உள்ளே புகுந்துவிடக் கூடிய நிலையில் தான் அந்த முருகைக்கற்கள் ஆங்காங்கே சிதறுண்டு, கடற்கரையில் கால் நனைக்க வருபவர்களையும் குத்திக் கொண்டு கிடக்கின்றன.இலங்கையிலும் அதன் கோர தாண்டவத்திற்குப் பலியான எம் உறவுகளை நினைவு கூர்வதோடு,அந்த அனர்த்தத்தில் உறவுகளைத் தொலைத்து, சொத்துக்களை இழந்து, இன்றும் கொட்டில்களிலும், கூடாரங்களிலும் எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் சீவிக்கும் உறவுகளுக்குமாகப் பிரார்த்திப்பதோடு கடல் தாயிடம்,"நீ மீண்டுமொரு முறை உள்ளே வருவதாகவிருந்தால் ஒன்றில் எம் எல்லோரையும் அள்ளிச் செல் அல்லது சுனாமி வந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் பூரண நிவாரணங்களோ, வீடுகளோ, வசதிகளோ,முருகைக் கல்லணைகளோ கட்டித்தரப்படாத பாவிகளான எம்மிடம் வராதே " என்று விண்ணப்பித்து முடிக்கின்றேன்.

Saturday, January 23, 2010

நான் கண்ட சுனாமி

சுமாத்திராத் தீவுகளில் கருக்கொண்ட சுனாமி சத்தம் சந்தடியின்றி வந்து, எம் கரையை முட்டி மோதி,பொங்கி எழுந்து,சுற்றிச் சுழன்றடித்து ஆயிரமாயிரம் உறவுகளையும், கோடானுகோடி சொத்துக்களையும் சின்னாபின்னமாக்கி ஆண்டுகள் ஐந்து கரைந்தோடிவிட்டன. சிரித்து மகிழ்ந்து,சிறு கதை பேசி,மலை போல் தடைகள் வரினும் மசிந்துவிடோமெனும் வைராக்கியத்துடன் தாமுண்டு,தம்பாடுண்டு என திளைத்திருந்த தம் பிள்ளைகளை கடலன்னை அள்ளி ஆண்டுகள் ஐந்து உருண்டோடிவிட்டது.


தன் குழந்தைக்கு சோறூட்டிகொண்டிருந்த தாய்க்கும்,உண்ட சேய்க்கும் வாய்க்கரிசி போட்ட கடலன்னை, கணவன், மனைவி, குழந்தை குட்டி சுற்றம் முற்றம் என குடும்பங் குடும்பமாக எல்லாரையும் ஒரு சில நொடிகளில் ஒரே குழியில் படுத்தியது. எனக்கும் இந்த சுனாமியால் நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒரு அனுபவம் உள்ளது.அதனை உங்களுடன் பகிர்வதற்கே இந்த பதிவு.ஒரு மாதத்திற்கு முன்னரே சுனாமி வந்த 26 ம் திகதியன்று போட்டிருந்திருக்க வேண்டியதொரு பதிவு.ஆனால் முடியவில்லை.அதனால் இப்போது தான் பதிவிடுகின்றேன்.அதுவும் நீண்டு விட்ட படியால் அதை இரண்டாய் உடைத்துத் தருவதாய் உத்தேசம்,சிரமம் பாராது வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்



எங்களுக்கெல்லாம் சோறு போடுகின்ற லக்ஷ்மிகள்,நாங்கள் அள்ளுகின்ற அட்சயபாத்திரங்களான எமது தோட்டங்கள் தான் எங்களது ஊரின் வடக்குப் பக்க எல்லை.பரந்து விரிந்து பச்சைப் பசேலென நீண்டு கிடக்கும் எம் அன்னபூரணிகளைத் தாண்டி ஒரு கரையோரக் கிராமம்.கடாரம் என்ற சோழனவன் கப்பலில் சென்ற இந்துமகா சமுத்திரம் அந்தக் கிராமத்தை முத்தமிட்டுச் செல்லும்.எங்கள் அயல்கிராமமான அவர்களுடன் எங்களுக்கு அன்னியோன்னியமான உறவே எப்போதும் இருந்து வந்தது.


எங்கன்ரை ஊர் பெண்டுகள் மீன் வாங்க கடற்கரைக்கு போனால்,தாங்கள் வியாபாரிகளுக்கு மீனை வித்துக் கொண்டு நிண்டாலும் இவையளைக் கண்டவுடனை "இஞ்சை வாங்கோ பறுவதமக்கா ஏன் அங்கேயே நிக்கிறியள்.இதைக் கொண்டு போய் கொஞ்சம் வடிவாப் பெடியளுக்கு காய்ச்சிக் குடுங்கோவன்.பாவம் வளர்ற பெடியள்.சும்மா வெள்ளிக் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் பாத்து பூசனிக்காயையும்,கத்தரிக் காயையும் காய்ச்சிக் குடுத்துக் கொண்டிருக்காமல்." எண்டு சொல்லி கொஞ்சம் உண்டன அள்ளிக் குடுப்பினம்.


இவையளும் பிறகு தங்கடை வெங்காயங்க்ள் கிண்டிக் கொண்டு வரேக்கை 4,5 ,பிடி வெங்காயத்தையும் பூசனிக்காயள்,கத்தரிக்காயளையும் கொண்டு போய்க் குடுத்து "எணேய் சின்னவன் பெஞ்சாதி சும்மா நெடுக உந்த மீனுகளைத் திண்டால் இப்ப உந்தக் கண்டறியாத வருத்தங்களெல்லாம் வருகுதாமல்லே.உந்த மீனுகளைத் நெடுகத் தின்னிறதை விட்டிட்டு கொஞ்சம் மரக்க்றியளையும் தின்னுங்கோவனடியப்பா." எண்டு சொல்லிக் கொண்டு போய்க் குடுப்பினம்.அதோடை எங்கடையாக்களின் மாட்டுப் பாலை பெருமளவு இறக்குமதி செய்து எங்கடையாக்களுக்கு கொஞ்சம் "பொக்கற் மணியைத்"தாறதும் அவையள் தான்.இப்பிடியாகத் தான் ஒட்டியுறவாடி இருந்தன ஊர்களிரண்டும்.


அப்போது எனது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்து பல்கலைக் கழகம் கிடைத்திருந்த படியால் எனது விடியற்காலை நித்திரைகளை நான் எதுவித நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் கொண்டுவந்து இடையிலை குழப்பாமல் 7.30, 8.00 எல்லாம் தாண்டி நீட்டிக் கொண்டிருந்த காலமது.ஒருமாதிரி எழும்பி பல்லை விளக்கிக் கொண்டு நிற்க,"அம்மம்மா ஏற்கனவே ஐயந்தெணிக்கு(எமது தோட்டங்களில் ஒன்றின் பெயர்) போட்டா.நானும் அப்பாவும் இப்ப போறம்.புட்டு அவிச்சு வைச்சுக் கிடக்குது.கறியும் கிடக்குது.போட்டுச் சாப்பிடு நாங்கள் போறம்" எண்டு அம்மா சொல்லிப் போட்டு அப்பாவோடை தோட்டத்துக்குப் போட்டா.தம்பி,தங்கச்சியும் எங்கேயோ ரியூசனக்கு எண்டு நினைக்கிறன்.நான் பல்லை விளக்கிப் போட்டு,அப்ப சன் ரீவியில போய்க் கொண்டிருக்கிற வெண்ணிற ஆடை மூர்த்தியின் "மீண்டும் மீண்டும் சிரிப்பு" நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஒரு 9.20 தாண்டியிருக்கு.கடலிலை ஏதோ சத்தம் கேட்டுது.நான் அது வழமையா நேவியின்றை டோறாக்கள் கரைக்கு கிட்ட ரோந்து வரேக்கை அலை கூட அடிக்கிறதாலை கேட்கிற சத்தம் தான் எண்டு நினைச்சுப் போட்டு என்ரை பாட்டில புட்டையும் சாப்பிட்டுக் கொண்டு,ரீவியையும் பார்த்துக் கொண்டிருந்தன்.ஒரு 5,10 நிமிஷம் போயிருக்கும்."என்ரை ஐயோ.... அம்மா..." எண்டு கத்திக் கொண்டு எங்கடை ஊரின்ரை மெயின் றோட்டாலை சனம் கத்திக் கொண்டோடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டிச்சுது.கோப்பையை அதிலை வைச்சுப் போட்டு ஓடி வந்து கேற்றடியிலை நிண்டு பார்த்தன்.சனம், "கடல் ஊருக்கை வந்திட்டுது" எண்டு சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடப் பக்கம் ஓடிக் கொண்டிருந்துதுகள்.


கொஞ்ச நேரம் அதில நிண்டு பார்த்துக் கொண்டு நிக்கேக்கை தான் அம்மா, அப்பா, அம்மம்மா மூண்டு பேரும் தோட்டத்துக்கை எண்டது ஞாபகம் வந்தது.தோட்டம் கடலிலையிருந்து ஒரு 75 m இல்லை எண்ட படியாலை பயம் என்னைத் தொற்றிக்கொண்டது.டக்கென்று சேட்டொன்றைக் கொளுவிக் கொண்டு சைக்கிளையுமெடுத்துக் கொண்டு வீச்சா உழக்கிக் கொண்டு வெளிக்கிட்டன். கடற்கரையிலையிருந்து வாற றோட்டாலை நியாயமான சனம் வந்து கொண்டிருந்துதுகள்.நான் சனம் வந்து கொண்டிருந்ததுக்கு எதிர்த் திசையில கடற்கரையை நோக்கியதான றோட்டலை போறதுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தன்.



சனமெல்லாம் அழுது குழறிக் கொண்டு "பனையளவுக்கு கடல் எழும்பி வந்து எல்லாத்தையும் கொண்டு போட்டுது" எண்டு சொல்லிப் புலம்பிப் புலம்பி வந்து கொண்டிருந்துதுகள். ஒரு 45, 50 வயசு அம்மா மேலே ஒரு துணியுமில்லாமல் ஓடி வந்து கொண்டிருந்தா.(சுனாமி கன பேரது துணிகளைக் களைந்து சென்றதை நான் பின்னர் பத்திரிகைகளில் படித்திருந்தேன்)சனம் என்னை உள்ளே போக விடாமல் தடுத்தது."தம்பி.. ராசா.. உள்ளை போகாதையணை" எண்டு சொல்லிக் கெஞ்சி மறித்தனர்.ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.நான் அச் சனத்துக்குள்ளாலை வளைச்சுக் கிளைச்சு,வெட்டியாடி ஒரு மாதிரித் தோட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தன். போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது.நானும் போய் எட்டிப் பார்த்தேன்... பதிவின் நீட்சி கருதி இத்தோடு இந்தப் பகுதியை நிறுத்தி தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அடுத்த் பதிவிலே பதிவிடுகின்றேன்.நன்றி.

Wednesday, January 13, 2010

ஆலங்காய்ப் புட்டும் அகலத் திறந்த வீதிகளும்

என்னடா இது மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறது மாதிரி ஆலங்காய்ப் புட்டைக் கொண்டு வந்து பாதையோடை முடியுறான் எண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு விளங்குது.இரண்டுக்கும் மொட்டந்த்லை,முழங்கால்ப் பொருத்தம் தான்.ஆனால் என்ன ஒரு றைமிங்காய் இருக்கெட்டுமெண்டு தான் வைச்சுக்கிடக்குது.ஏன் அதைப் பற்றி அலட்டிக் கொண்டு நிக்கிறியள்.அது கிடக்கட்டும்.அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவம்.



புதுவருச லீவுக்கு ஒரு மாதிரி வீட்டை போய் வந்தாச்சுது.இந்தமுறை லீவில் என்ரை ஸ்பெசலென்னண்டால் ஆலங்காய்ப் புட்டுத்தான்.கனகாலஞ் சாப்பிட்டு,வெளிக்கிட முந்தி யாரோ ஒருத்தன் ஞாபகப் படுத்திப் போட்டான்,பேந்தென்ன போன கையோடை "நாண்டு கொண்டு" நிண்டு சாப்பிட்டாச்சுது.சமாதான காலத்தில பாதை திறந்ததிலிருந்து, பல்வேறு காலகட்டங்களில பஸ்ஸால,கப்பலால,பிளேனால, பிறகும் பஸ்ஸால,ஹயசால எண்டு பலவேறு காலகட்டங்களில்,பலவேறு கஷ்ரங்களைப் பட்டு யாழ்ப்பாணம் போய் வந்த ஆக்களில் நானும் ஒருவன்.என்னத்தை தான் மலையிலை ஏறி,அந்தர் அடிச்சுக்,கடலிலை குதிச்சுக்,கப்பலிலையுங் கவிட்டுத் தான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருந்தாலும் ஊருக்குப் போப் போறம் எண்ட உடனை எங்களுக்கெல்லாம் உது பின்னங் காற்சட்டையிலை பட்ட புழுதி மாதிரிக் கண்டியளோ.சும்மா தட்டிப் போட்டுப் போய்க் கொண்டேயிருப்பமில்ல. அப்பிடித்தான் இந்தமுறையும் ஒரு மாதிரிப் போய் வந்தாச்சுது.



சற்குணமண்ணையின்றை ஹையசில தான் நான் கருணையூரானோடை போயிருந்தன்.வெள்ளவத்தையில உள்ள றோட்டுக்களும் தெரியாது,எக்காய் தெக்காயை விட்டால் சிங்களமும் தெரியாது.ஆனால் ஓட்டத்துக்கு வந்த சற்குணமண்ணை ஒரு துணிஞ்ச கட்டை தான்.இடையில லைற் போட இல்லையெண்டு ஏதோ சொல்லி ஆளின்ரை லைசென்சையும் பறிச்சுப் போட்டாங்கள்.ஒரு மாதிரி ஆளும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்த்துப் போட்டார். வவுனியாவைத் தாண்டி போற வழியில எங்களுக்காக சிலுவை சுமந்தவர்களின் சிலுவைப் பயணங்கள் தொடர்கின்றதைப் பார்க்கேக்கை எங்களுக்காக இவ்வளவு கஷ்ரப்பட்ட அந்த சனத்துக்கு கொழும்பிலையிருந்து கொண்டு சும்மா கூடிக் கூடி பெரிய ’பற்றாளர்கள்’ போல் கதைப்பதை விட்டி ஏதாவது செய்திருக்கிறோமா எண்டொரு கேள்வி உள்ளுக்கை ஒரு குற்ற உணர்ச்சியோடை குத்திச்சுது.U.N இன் நீலநிறக் கூடாரத்துக்குள்ளான அவர்களின் அவலம் இன்ன்மும் நீள்கிறது.

ஏ9 றோட்டின் இரண்டு பக்கமும் அவர்களால் தங்களுக்கு அன்றாடம் கஞ்சி வார்க்கும் என்றும்,மற்றவர்களிடம் பிச்சையெடுப்பதிலும் பார்க்க சுயமாக உழைத்து வயிற்றைக் கழுவுவம் என்ற நம்பிக்கையிலும் சண்லைற் சவுக்காரம்,சேர்ப் எக்சல்(Surf Excel)பக்கற்,கூல் இல்லாத சோடா, பல்லி முட்டாஷ் என்று கொஞ்ச சாமான்களை வைச்சு அமைக்க்ப்பட்ட சின்னஞ் சிறு கொட்டில்களில் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கும் அந்த சிலுவையாண்டவர்களின் நிலையை நேரில் பார்த்தால்த் தான் விளங்கும்,அந்த கொடுமையை.ஆனால் சூப்பர் மார்க்கற்றில் சாமான் வாங்கி ,கூல் சோடா குடிச்சு,ஹையசில போற எங்களுக்கு அதிலையெல்லாம் நிண்டு சாமான் வாங்கினால் ஒரு முழம் குறைஞ்சிடுவம் என்று ஒரு கவலை பாருங்கோ. என்ன தான் இருந்தாலும் அண்ணை சத்தியமா உந்த முறிகண்டியில போய் பல்லை விளக்காட்டாலும் பரவாயில்லை,ஒருக்கா வாயைக் கொப்பளிச்சுப்போட்டு சாப்பிடுற அந்த முறிகண்டி ரோல்ஸ் மாதிரி ரோல்ஸ் நான் வேறை ஒரு இடமும் சாப்பிட்டதில்லை.அதே மாதிரித்தான் எத்தினையை இழந்தாலும்,இண்டைக்கும் அந்த வன்னி மக்கள் இழக்காத அந்த வெள்ளை உள்ளத்தையும்,வெள்ளந்தித்தனத்தையும் வேறையொரு இடத்திலையும் காணயேலாது பாருங்கோ.இண்டைக்கும் அதால போகேக்கை முந்தியெல்லாம் த.போ.க. பஸ்களில் முறிகண்டியில ஏறி கச்சான் விக்கிற அந்த பல்லு கொஞ்சம் காவியடித்த ஒரு சின்ன அண்ணை உடப்ட கனபேர் எம் கண்முன்னே இருந்து போகமறுக்கிறார்கள்.



வசந்தம் வீசிக் கொண்டிருக்கும் மண்ணின்,வரவிருக்கும் தலை நகரத்தில்,ஒண்டுக்குப் போவதற்கு 'ஒபென்' இலை போகவேண்டிய நிலைமை கண்டியளோ.(பொம்பிளையள் பாடு என்னெண்டு வடிவா தெரியாது)15,20 பஸ்சில போன சனம் ஒன்றாக இறங்(க்)கியதால் வந்த வினை தான் உது.வெட்ட வெளியில போறது ஒண்டும் பெரிய விசயமில்லை.அங்கனைக்கை வந்து நிண்டு கொண்டு அங்கால தள்ளிப் போ இஞ்சால தள்ளிப் போ எண்டு நாய் கலைக்கிறது மாதிரி கலைச்சால்?சனம் என்ன,மனிசரோ இல்லாட்டில் நாயள்,பேயளோ? அது சரி எங்கடை சனம் இல்லையெண்டால் தலைக்குமேலையும் பெய்ஞ்சு போட்டும் போகும்.அதுக்காக வேண்டி இப்பிடிக் கலைச்சால்?முறிகண்டிப் பிள்ளையாரோடை போட்டிக்கு Business ஐத் தொடங்கிப் போட்டு உழைப்பை மட்டும் பார்த்தால்க் காணுமே.கொஞ்சம் இதுகளையும் கவனிக்கத் தானே வேணும்?இதுகளோட வழிநெடுக கண்ட கனமான காட்சிகளடோயே வீடு போய்ச்சேர வேண்டிப் போச்சுது. அங்கை கொஞ்சம் பரவாயில்லாமல் தான் போச்சுது.


எங்கட வாழ்க்கையில எங்களுக்கெல்லாம் வெடிவால் முளைச்சு நாங்களெல்லாம் கூவ வெளிக்கிட்ட, என்ர வாழ்வில் 'வசந்தம்' வீசின காலத்து ரியூசன் நட்புக்கள் இருவர் வெளியிலிருந்து வந்ததாலும் ஒன்றாக கசூரினாவுக்கு ட்ரிப் அடிச்சது,எங்கன்ரை Team பெடியளெல்லாம் கனகாலத்துக்குப் பிறகு ஒன்றாகக் கிரிக்கட் விளையாடினது,ஒன்றும் பேசாமல் பறையாமல் மாமா ஜேர்மனியிலையிருந்து வீட்டு வாசலை வந்து நிண்டது,நாங்களெல்லாம் சின்னனா இருக்கேக்க உந்த புக்கை,மோதகத்துக்கு கூடுதலா அடிபடுற திருவெம்பாவைக் கடைசிநாளான் திருவாதிரையன்று ஊரில நின்றது,என்னோட ஓராமாண்டிலையிருந்து ஒண்டாப் படிச்சு இப்ப யாழ்ப்பாணக் கம்பசில படிக்கிற நண்பியொருத்தியைச் சந்திச்சது,எங்கட தோட்டங்களை வெங்காயம் பயிரிட்டாப்போல 3,4 வருசத்துக்குப் பிறகு பார்த்தது,பனங்கிழங்கு கிண்டிச் சாப்பிட்டது,பனம் பூரான் தோண்டிச் சாப்பிட்டது,எங்களுக்காக சிலுவைசுமக்கச் சென்று ஊர் மீண்டிருந்த எம் ஊர் உறவுகளைச் சந்திச்சது,அவர்க்ளை மட்டுமில்லாமல் தம் மேட்டுக்குடித்தனத்தைக் கைவிட்டு இம்முறையும் எம்மூரவர்களால் உள் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு உறவுகளையும் சந்திச்சது, பட்ட சீசனென்டதாலை ஏத்தின பட்டங்கள்,படலங்களை "ஆ"வெண்டு பார்த்தது, இந்தமுறையும் ஜூனியர் பெட்டையளைச் சந்திக்கிற சந்தர்ப்பங் கிடைச்சது,எங்கடை கம்பசின்ரையும்,ஊரின்றையும் சிங்கத்தோடை ஒண்டா ஊரில 4 வருசத்துக்குப் பிறகு நிண்டது,புது வருசம் பிறக்கேக்கை வீட்டை நிண்டது,எங்களுக்கு போக அனுமதி மறுக்கப்பட்ட வீதிகள் கொஞ்சம் திறக்கப் பட்டது என்று கன விசயங்கள் இருந்தால காலில சக்கரம் கட்டிக் கொண்டுதிரிந்த மாதிரியாப் போச்சுது இந்த மூன்று நாலு நாளும்.


நாங்கள் எங்கடை சின்ன வயசுகளில் ஒடித்திருந்திருக்க வேண்டிய,எங்கடை பத்து வயசுகளுக்கு முந்தி மூடப்பட்ட பல வீதிகள் பதினாலு,பதினைஞ்சு வருசங்களுக்குப் பிறகு திறக்கப் பட்டிருக்குது.கடற்கரை வீதி,கல்லூரி வீதி,அம்மன் கோவில் வீதி,பிரதேச பிரிகேடியர் தங்கியிருந்த வீதி என்று கொஞ்சம் வீதிகள் திறக்கப்பட்டிருந்தது,இன்னும் மிச்சம் கிடக்குது. ஆனால் தாங்கள் பிறந்து, வளர்ந்து,படுத்து எழும்பிய பரம்பரை பரம்பரையாக ஆண்ட நிலங்களிலிருந்து எத்தனை உறவுகள் கூண்டோடு கலைக்கப் பட்டிருக்கிறார்கள்.அவ்ர்களின் நிலைமையையெல்லாம் இவர்கள் எப்பததான் நினைச்சு,எப்பத் தான் அதுகளெல்லாம் சொந்த வீட் போய் கூழோ கஞ்சியோ காய்ச்சிக் குடிக்கிறது எண்டு தெரியேல்லை.

'அன்னத்துக்கு' வீட்டைக் குடுக்கப் போறம் எண்டு அறிவிப்பு வந்த கையோடை ஏ9 ஐ 24 மணித்தியாலமும் திறக்கிறம் எண்டு அறிவிப்பு வருகுது.ஆனால் மாறி நாங்கள் வீட்டிலை 'வெத்திலையை' வளர்க்கிறம் எண்டு சொல்லியிருந்தால் உதுகும் வந்திருக்காது.என்னத்தை தான் செய்தாலும் செய்யாட்டாலும் பாதை திறப்புக்களோ,சண்டை இல்லாதபடியால சமாதானமாத்தான் சனம் இருக்குதுகள் எண்ட சுயகற்பிதங்களோ ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஒரு போதும் உருவாக்கப் போவதில்லை என்ற எனக்குத் தெரிந்த,ஆனால் தெரியாத இந்தத்தலைப்புக்கு சம்பந்தமில்லாத அரசியலை தொடாமல் இத்தோடு முடிக்கின்றேன்.
நண்பர்களே நான் ஒரு நிலைக்கு(stable) வந்த பின் தொடர்ந்து,சீராக அரசியல், அனுபவம், நகைச்சுவை,விளையாட்டு,சமூகம் என கலந்து ஒரு பஞ்சாமிர்தமாகக் கொடுப்பேன் என்று நம்பி,அதுவரை சற்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

Friday, December 25, 2009

புலம்பெயர் தமிழர் ஒரு சிலரின் புலுடாக்கள்

சங்கம் வளர்த்த தங்கத் தமிழரின் கலாச்சாரத்துக்கு பங்கம் வந்துவிட்டதோ என்று நெஞ்சம் பதைக்கின்றனர் பந்தத்துடன் புலம்பெயர் தமிழர்.அவர்களுக்கு மட்டுமல்ல இங்கேயுமுள்ள பெரும்பாலானவர்களின் அக்கறையுள்ள கவலை தான் அது.கலாசாரத்தை,கற்பை காலங்காலமாக கட்டிக்காத்த தமிழினம் இன்று கற்பில் கறையிருந்தாலும் கண்டு கொள்ளத்தேவையில்லையென்று சொல்லுமளவுக்கு கலாச்சாரத்தில் "முன்னேற்றம்" கண்டுவிட்டது.


பெடியளெல்லாம் தண்ணியடிக்கிறாங்கள்,பெட்டையளெல்லாம் கிளப்பிகொன்டு திரியுறாளுகள் என்றெல்லாம் அங்கலாய்க்கின்றனர்.உண்மை தான் இல்லையென்று சொல்லமுடியாது.ஆனால் சிறிது காலத்திற்கு(5,10 வருடங்களில்) முதலெல்லாம் இங்கெல்லாம் எதுவுமே நடைபெறாதது போலவும் இப்போது தான் அவையெல்லாம் இங்கே முளைத்தது போலவும் கதைப்பது பொறுப்பற்ற, அல்லது சிறிது காலத்திற்கு முன்னர் நடந்தவற்றை அறியாத சிறுபிள்ளைத்தனமான அல்லது அறிந்தும் அறியாதது போல நடிக்கின்ற நல்ல பிள்ளைத்தனமான செயலாகும்.

அப்போதும் நடைபெற்றது.இப்போதும் நடைபெறுகிறது. எண்ணிக்கையடிப்படையில் அப்போது நடைபெற்றவற்றை ஒப்பிட்டால் இப்போது அதிகம் என்று சொல்வதை விட அப்போது நடைபெற்றவற்றை விட இப்போது நடைபெறுபவற்றில் அனேகமானவை வெளியே வருகின்றன என்றும் அப்போது கலாசாரப் பிறழ்வுகளில் ஈடுபட்டவர்களின் வயதுகளுடன் இப்போது ஈடுபடுபவர்களின் வயதை ஒப்பிட்டால் மிகக் குறைவு என்றும் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.இதன்போது என் நண்பனொருவன் சொன்னதையும் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும் என்று கருதுகின்றேன்.ஒழித்து செய்தால் கலாச்சாரம்,வெளியே தெரிந்தால் சீரழிவு என்பது போல் கதைக்கக்கூடாது.இரண்டும் கலாச்சாரச் சீரழிவே.



புலம்பெயர்ந்து,உறவுகளைத்தொலைத்து,குளிரிலும் பனியிலும் துவண்டெழும்பி, தனது சமூகத்திற்காக ஓடாய்த்தேய்ந்து உழைத்து அனுப்பும் போது அந்த சமூகம் சார்ந்த சில விரும்பத்தகாத செய்திகள் சில வரும்போது,கோபம் கொப்பளிக்கத்தான் செய்யும்.அடிமனது கறுவத்தான் செய்யும்.நான் இல்லையென்று சொல்லவில்லை.அந்த கோபத்தில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.உங்களுடைய உழைப்பு வீணடிக்கப்படும் போது அதிலுள்ள வேதனையை,அதனால் வருகின்ற வெறியை என்னால் உணர முடிகிறது.இங்கு நான் எல்லா புலம்பெயர் சகோதரர்களையும் சுட்டிக்காட்டவில்லை. அண்மையில்,மிக அண்மையில் சென்ற சிலரைப்பற்றி, மிகச்சிலரைப் பற்றித்தான் எனது பதிவு அமையவிருக்க்கின்றது.எனக்கு மட்டுமல்லாமல் என் போன்ற சக இளைஞர்களின் உள்ளத்து உணர்வை,அடிமனதில் உள்ளதை என் பதிவினூடு பதிவேற்றலாம் என்பது எனது சிறிய அவா.


"இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறம் இஞ்சை இருக்கு மட்டும் என்னத்தைப் புடுங்கினவங்கள்? அங்கை போனவுடன் எங்கேயிருந்து உந்தப் "பற்றெல்லாம்" வந்தது?தாங்கள் இஞ்சை இல்லாததால ஏதோ ஒரு முழம் குறைஞ்சு போட்டது போலயல்லோ கதைக்கிறாங்கள்." இவையெல்லாம் இங்குள்ளவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது அடிக்கடி தங்களுக்குள் கதைத்துக் கொள்பவைதான்.ஏன் அவர்கள் இப்படிக் கதைக்க வேண்டியேற்படுகிறது?அதற்கு காரணம் யார்?அல்லது அவர்கள் தான் அறியாமையில் கதைக்கின்றார்களா?


நான் ஏலவே சொன்னது போல உங்களை,உங்களது உழைப்பை,உங்களது 'பங்களிப்பை' நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் இங்கிருந்த போதெல்லாம் கலாசாரச் சீரழிவைக் க்ண்டு கொதித்தெழுந்தவர்கள் போல கதைப்பது(உண்மையிலேயே கொதித்தவர்கள் மன்னிக்கவும்)கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் மற்றவர்களுக்கு தெரியாதென்பது போலாகும்.


நீங்கள் இங்கிருந்த போதும் கலாசாரம் "கொடிகட்டிப்" பறந்திருக்கலாம்.உங்களுக்கு உங்கள் சமூகப் பற்றால் உள்ளுக்குள்ளே மட்டுமே நீங்கள் கறுவிக் கொண்டிருந்திருக்கலாம். உங்கள் கறுவலை காரியத்தில் காட்டிட காலம் கை கொடுக்காமல் இருந்திருக்கலாம். உங்களை எவ்வாறு சூழ்நிலை அன்று தடுத்ததோ அதே சூழ்நிலை தான் இப்போது இங்குள்ளவர்களையும் கட்டிப்போட்டிருக்கின்றது என்பதை ஏனோ வசதியாக உணரமறுக்கின்றீர்கள்.

இங்குள்ளவர்கள் கலாசாரம் அவர்கள் கண்முன்னே அழிந்து போவதை கண்டு களிப்பதாக அல்லது கண்டும் காணாதது போல பொறுப்பற்றுத் திரிவதாக தவறான கற்பிதம் கொள்ளவேண்டாம்.எங்களுக்கும் உங்களை போல உணர்வுகள் உண்டு, பொறுப்புக்கள், 'பற்றுதல்' எல்லாம் உண்டு.ஆனால் எந்த சூழ்நிலை இவற்றினின்றும் உங்களை தடுத்ததோ அதே நிலை தான் இன்று இங்குள்ளவர்களுக்கும்.அது அவர்கள் தப்பல்ல.


அதே நேரம் கலாசாரம்,கலாசாரம் என்று இங்குள்ளவற்றை மட்டுமே தூக்கிப்பிடிம்போது உங்குள்ளவற்றை ஏன் வசதியாக மறந்து விடுகின்றீர்கள்.உங்கு ஒன்றுகூடல்களிலும்,வைபவங்களிலும் அடிக்கும் கும்மாளங்களில் மட்டும் என்ன கலாசாரம் காக்கப்படுகின்றதா?அங்கு கெட்டுச் சீரழியும் ஒரு சகோதரனோ,சகோதரியோ எங்களைச் சார்ந்தவனே.எமது சமூகத்தினனே.இவ்வாறு கூறி நான் இங்கே நடக்கும் கலாசாரச் சீரழிவை மறைமுகமாக ஆதரிப்பதாக தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம்.


அங்கே அடிக்கப்படும் கொட்டத்தால் வெள்ளைக்காரனின் கலாசாரம் சீரழிக்கப்படவில்லை.இங்கோ,உங்கோ,எங்கோ கலாசாரச் சீர்கேடுகள் அரங்கேறினாலும் சீரழியப் போவது எங்கள் கலாச்சாரமே.ஆனால் அக் கலாசாரத்தை காப்பது யார் என்பது தான் பிரச்சினை.கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு இப்போது 'பாதுகாவலர்கள்' இல்லவிட்டாலும் ஒவ்வொருவரும் தம் பொறுப்புணர்ந்து செயற்பட்டால் தான் கலாசாரத்தைக் காக்கமுடியும்.தனி மனித சுதந்திரம் பற்றியெல்லாம் அதிகம் பேசப்படும் இன்றைய காலங்களில் நீ இவ்வாறு தான் இருக்க வேண்டும்,இன்ன உடை தான் உடுத்த வேண்டும் என்றெல்லாம் கூறமுடியாது.

தனிமனிதர்களின் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற நண்பர்கள், சமூகம், சினிமா,தொலைக்காட்சி,ஒன்றுகூடல்கள்,பொது வைபவங்கள் என்பன அவர்களில் கலாசாரம் சம்பந்தமான எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தவதைத் தவிர்க்கவேண்டும்.அத்துடன் நாம் எல்லாரும் பொறுப்புணர்ந்து எம்மை,எமது குடும்பத்தை,நண்பர் வட்டத்தை, கிராமத்தை, பிரதேசத்தை,சமூகத்தை கலாசாரப் பிறழ்விலீடுபடுவதைத் தவிர்த்து,அவர்களின் எண்ணங்கள், பாதையை மாற்றி,அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்கின்ற தப்புக்கள் எவ்வாறு சமுகத்தைப் பாதிக்கின்றன என்பதை உணர்த்த வேண்டும்,இது தனியே நீங்களோ,நாங்களோ செய்யக்கூடியதொன்றல்ல. ஒவ்வொருவர் மீதும் விரலைச்சுட்டிக் காட்டி அவரவர் பொறுப்புக்களைத் தட்டிக் கழியாமல் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.என்ன சொல்லுறியள்?.(புலம் பெயர் நண்பர்களே சிலரால்,மிகச்சிலரால் சில இடங்களில் சற்று காரமாக நீங்கள் தாக்கப்பட்டிருந்தால் மன்னியுங்கள்.மீண்டும் சந்திப்போம்)

Friday, December 11, 2009

பட்டம்

சின்னஞ் சிறு வயதுகளில் எதுவித பொறுப்புக்களோ யோசனைகளோ இன்றி எங்கள் ஊரின் றோடுகளிலும் ஒழுங்கைகளிலும் சந்துகள் பொந்துகளுக்குள்ளாலும் ஏன் வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலும் ஓடித்திரிந்ததும் அப்போது பண்ணிய சிறு ரகளைகள், சேஷ்டைகள்,குறும்புகள் அடிபாடுகள், ஊரிலே இருந்த பெரிய பெடியளிடம், சனத்திடம் வாங்கிய அடிகள், பேச்சுக்கள் என்பன மறக்கப்பட முடியாதவை.இவற்றை மீட்டிப்பார்ப்பதற்கே பிரத்தியேகமாக இந்தப் பகுதி.


இது வந்து பல்கலைக்கழகங்களிலோ அல்லது வேறு உயர் கல்வி நிறுவனங்களிலோ படித்து(சில வேலைகளில் படிக்காமலும் டாக்டர் பட்டமெல்லாம் வாங்குகிறார்கள்) வாங்கும் பட்டத்தைப் பற்றிய கட்டுரை அல்ல.எங்கள மாதிரி பெடியள் எல்லாம் சின்னனா இருக்கும் போது ஏற்றுகிற பட்டம்.தற்போது பட்ட காலம்(season) எங்களது பிரதேசங்களிலெல்லாம் தொடங்கி விட்டது. அதைப் பற்றி எழுத வெளிக்கிட்ட போது எனக்கு எனது பல ஞாபகங்கள் அலையோடின. அவற்றிலே சிலவற்றை தெரிந்தெடுத்து சுருக்கித் தரலாமென்று நினைதேன்.ஆனால் பலவற்றை விடமுடியவில்லை.வாசகர்களே என்னால் இதற்கு மேல் சுருக்க முடியாம்ல் போய் விட்டது.அதனால் அப்பிடியே தருகிறேன் நீண்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.


முந்தியெல்லாம் ஐப்பசி தாண்டினால் எல்லா வீடுகளிலும் பெற்றோருக்கும் சின்னப் பெடியளுக்கும் அடிபாடு தான். பட்டம் வாங்கித்தா, நூல் வாங்கித்தா என்று பெடியளின் ஆக்கினையும் நாளைக்கு வாங்கித்தாறன் நாளையிண்டைக்கு வாங்கித்தாறன் என்று பெற்றோரின் சமாளிப்பும் எல்லா வீடுகளிலும் அரங்கேறும்.அந்த காலப்பகுதியில்(season இல்)எங்களது கொப்பிகளைப் பின் பக்கம் திரும்பி பார்த்தால் ஒரு படலத்தை கீறி,அதற்கு விசை பூட்டி,வால் கட்டி,பிடித்த வடிவத்தில்(design இல்)கலர் அடித்து,பட்டத்திற்கு நூலைக் கட்டி அந்த நூலை கொண்டு வந்து ஒரு மரத்தில் கட்டியிருப்பதாக எல்லாம் படங்கள் கீறப்பட்டிருக்கும். பாடசாலை செல்லும் போதும்,பாடசாலையிலும்,பாடசாலை விட்டு வரும் போதும் அவன் அவ்வளவு பெரிய பட்டம் ஏற்றினான்,இவன் இவ்வளவு ஏற்றினான் என்று மூச்சு,பேச்செல்லாம் பட்டம் பற்றியதாகவே இருக்கும்.அந்தளவு பைத்தியமாகவே அலைவோம்.



எமது இடங்களில் படலம், வாலாக்கொடி,வட்டாக்கொடி,கொக்கு, இரண்டு தலைக் கொக்கு, பிலாந்து(பருந்து),இரண்டு தலைப் பிலாந்து,நாலு தலைப் பிலாந்து, பாம்புப்பட்டம், சீனத்தான்,வீட்டுப்பட்டம் என்று பல பட்டங்கள் ஏற்றப்பட்டாலும் படலம், வாலாக்கொடி,வட்டாக்கொடி,கொக்கு என்பவை தான் முக்கியமானவை.சிலர் பட்டங்களை கடையில் வாங்கி ஏற்றுவார்கள்,பலர் மூங்கிலை எடுத்து மெலிதாக சீவி தாங்களே கட்டி ஒட்டுவார்கள். ஒட்டும் போதும் பல வடிவமான ஒட்டுக்கள் இருக்கின்றன.படலத்துக்கு ஒட்டும் போது வெள்ளை நிற தாள்(Tissue) ஐ ஒட்டி அதன் மேல் டைமன் ஒட்டு,சூரியன் ஒட்டு, கண் ஒட்டு என்று பல வடிவங்களில்(Design) அல்லது தனியே மாட்டுத்தாளில் ஒட்டுவார்கள்.வட்டாக் கொடிக்கு சிலந்தி ஒட்டு என்றொரு ஒட்டு உண்டு.


பட்டம் ஒட்டிய பின் அது கூவிக் கொண்டு நிற்க வேண்டுமென்றால் அதற்கு விசை கட்ட வேண்டும்.விசை கட்டுவதற்கு மூங்கிலைப் பயன் படுத்த முடியாது.ஏனெனில் அதன் பாரம் குறைவு.பட்டத்துக்குரிய தலைப்பாரத்திற்கு காணாது.அது மட்டுமல்லாமல் அது கூடுதலாக வளைந்தால் முறிந்து விடும். சிலர் காசுக்கு தேக்கம் விசை வாங்குவார்கள்.பலர் எந்தெந்த வீட்டு வேலிகளை கமுகஞ் சிலாகையால் கட்டியிருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு திருவெம்பாவைக் காலங்களில் அதிகாலை திருவெம்பாவை படிக்கச்செல்லும் போது(சங்கூதிப் பண்டாரம்)அறுத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.அதை நூலிலே கட்டி நுணுக்கமாக சமச்சீர் எல்லாம் பார்த்து விசை தயாரிப்பார்கள்.அதன் பின் அது அதிர்வதற்கு றிபன்(ribbon) நாரை கடையில் வாங்கி பூட்டலாம்.அதை விட பெரிய பொதிகளை பொதி செய்ய பயன் படும் பாசல் நாரை வாட்டி அதற்கேற்றாற் போல் இரண்டு கூவக்கட்டைகளை முள் முருக்கஞ் செத்தலில் பூட்டிச் செய்கிற விசை கமறுகிற சத்தம் இருக்குதே.குவாய்ங்..குவாய்ங்.. என்று சும்மா சொல்லி வேலை இல்லை.



முச்சை கட்டும் போது நூல் முச்சை ,வால் முச்சை என்பன் சமச்சீராக் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப்பக்கம் ஆய்ச்சுக் கொண்டு போய் விடும்.மேல் முச்சையுடன் நடு முச்சையை இழக்கிக் கட்டினால் பட்டம் அம்மிக் கொண்டு நிற்கும்.ஓரளவாவது குறுக்கிக் கட்டினால் தான் நல்ல இழுவை நிற்கும்.நூலிலும் தையல் நூல்,ஈர்க்குப் புரி,நாலு புரி,எட்டுப் புரி,பதினாறு புரி,தங்கூசி,மாலை நூல் என்று பல வகை நூல்கள் ஒவ்வொரு பட்டத்தின் அளவிற்கேற்ப பயன்படும்.சின்னப் பட்டத்திற்கு பெரிய நூலைக் கட்டினால் நூலின் பாரம் காரணமாக பட்டம் வண்டி வைத்துக் கொண்டு நிற்கும்.


என் நண்பர்கள், அண்ணர்கள் தங்களது இடுப்பளவு,நெஞ்சளவு,ஆளளவு படலம் எல்லாம் கட்டி ஏற்றுவார்கள்.சில வேளைகளில் அவற்றை, அவற்றின் இழுவையைப் பார்த்தெல்லாம் பொறாமைப் பட்டிருக்கின்றேன்.(நான் ஏத்திறதெல்லாம் சின்னனில வாலாக் கொடியும் கொஞ்சம் வளர்ந்தாப் போல ஒன்று அல்லது ஒன்றரை முழ படலம் தான்.அதுவும் நானே கட்டி ஏத்திறது,பாரத்திலே அரக்கிக் கொண்டே வரும்,ஒரு நாளும் எழும்பாது ம்.....)அப்போதெல்லாம் சிறிசுகளெல்லாம் ”மரியாதையா இழுவை பார்க்க தா.இல்லா விட்டால் நீ பட்டத்தின் நூலைக் கட்டிப் போனாப் போல சுண்ணாம்பைக் கொண்டு வந்து பூசி விடுவன்” என்று வெருட்டுவதும் கூட நடக்கும்.//(சுண்ணம்பு பூசினால் நூல் அறுபடுமோ இல்லையோ என்று எனக்கு இது வரை தெரியாது)



பட்டம் ஏற்றுதலைப் பற்றிச் சொல்லும் போது செந்திலிக்கம் என்ற ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.ஒரு பட்டத்தை முதலில் ஏற்றிய பின் அதன் நூலில் காப்பொன்றைக் கட்டி அந்தக்காப்புக்கு அண்மையாக மற்றப் பட்டத்தை(பொதுவாக கொக்கு)தூங்கவிட்டவாறு இரண்டையும் இழக்கும் போது மேல் காற்றுப்பிடிக்க மற்றையதும் ஏறத் தொடங்கும். எனது அயல் ஊர்களில் பட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து கடைசியாக பெரிய ஒரு அப்பத்தட்டியிலே மின் விளக்குகளையும் கொளுவி இராக்கொடி விடுவார்கள்.இரவிலே பார்க்கும் போது அழகாக இருக்கும். அத்துடன் பட்டப் போட்டிகள் எல்லாம் நடக்கும்.பட்டப் போட்டியிலே 4 தலைக் கொக்கு, 8 தலைக் கொக்கு(ஒரு முறை பிள்ளையார் பட்டம் ஒன்றும் போட்டிக்கு வந்ததை கேள்வியுற்றதாக சின்ன ஒரு ஞாபகம்) என்று வித விதமான் பட்டங்கள் எல்லாம் போட்டியிடும். இப்படியெல்லாம் இரண்டு மாத்திற்கு மேல் பொழுது கழியும்.ஆனால் தைப்பொஙகலிற்கு முதல் நாள் வரை அடிக்கும் காற்று வருடா வருடம் தைப்பொங்கலன்று மட்டும் ஏமாற்றியே வருகிறது. பட்டம் ஏற்றுதலில்,கட்டுதலில் என்று இன்னும் பல நுட்பங்கள்,வித்தைகள் உள்ளன.ஆனால் பதிவின் நீட்சி கருதி தவிர்த்துக் கொள்கிறேன்.


இக் கட்டுரையிலே நான் பாவித்த சில சொற்கள் உங்களது ஊர்களில் வேறு பெயர் கொண்டு அழைக்கப் படலாம்.அதனால் அச்சொற்களுக்குரிய அர்த்தங்களை கீழே தருகிறேன். பிலாந்து- பருந்துப் பட்டம்
design -வடிவங்கள்
விசை -விண்
பிசுங்கான் -உடைந்த கண்ணடித்துண்டு
வாட்டுதல்-பாசல் நாரை குதிக் காலில் வைத்து பிசுங்கானால் நீவி எடுத்தல்.
கூவக்கட்டை-விண்ணின் இரு பட்டமும் நாரை இழுத்துப் பூட்டுவதற்கு பயன் படும் முருக்கஞ் செத்தலாலான தக்கை
இழுவை-பட்டத்தின் இழுவை விசை
முச்சை-நூலை பட்டத்தில் கட்ட பயன் படுவது
அப்பத்தட்டி - பெரிய பட்டம்

Saturday, December 5, 2009

பால முரளி

என்னுடன் பழகியவர்களில் தற்போது என்னோடு இல்லாதவர்களில் ஒரு சிலரது பிரிவு என்னைப் பாதித்திருக்கின்றது. என் மனதைக் கசக்கிப் பிழிந்த அந்த பிரிவுகளை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, அந்த சந்தர்ப்பத்துக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருந்தேன். அதனை வலைப் பதிவினூடே உங்களுடன் பகிர்வதன் மூலம் அந்த சுமைகளை சற்றே இறக்கி வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். என் நம்பிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்பி இந்த பதிவை அவர்களுக்கு சம்ர்ப்பணம் ஆக்குகின்றேன்.

பால முரளி
எமது வகுப்பில் எம்முடன் ஒன்றாக படித்த பாலமுரளி மூன்று நாள் காய்ச்சலில் எம்மை எல்லாம் விட்டு செல்வான் என்று நாம் கனவிலும் எதிபார்த்திருக்கவில்லை.ஆனாலும் அந்த சோகம் எம்மை தொட்டது நாம் க.பொ.த(உ/த)மூன்றாம் தவணையில் கற்றுக் கொண்டிருக்கும் போது தான்.அச் செய்தியைக் கேட்டதும் என்னால் எப்போதுமே சிரித்துக் கொண்டேயிருக்கும் பாலமுரளியின் அந்த வஞ்சனையில்லாத முகம் தான் வந்து போனது.என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.என்னால் மட்டுமல்ல ஒரு நண்பர்களாலும் இன்றுவரை அவனது சிரித்த முகத்தை தவிர்த்து எதனையும் கற்பனை செய்து பார்க்க முடியாது.

அவனைப் பற்றி சொல்வதென்றால் ஆகலும் கறுப்பு என்று சொல்ல முடியா விட்டாலும் கறுப்பு தான் அவனது நிறம்.தலை மயிர் கொஞ்சம் குத்து மயிர் மாதிரி ஆனாலும் அவன் அதை கையாலேயே சரி செய்து அமர்த்தி படுக்க வைத்திருப்பான்.மெலிதான உடல்.அவன் சிரிக்கும் போது ஆழமாகப் பார்த்தால் அவன் அப்பாவித்தனம் முகத்தில் தெரியும்.மேலோட்டமாகப் பார்த்தால் மேல்வரிசையில் உள்ள முன் பல் உடைந்துள்ளது தெரியும்.ஒருவருடனும் சோலிக்கு போறதிலை.எல்லாத்துக்கும் ஒரு சிரிப்பு தான் பதில்.
அவன் எங்களது "C" வகுப்புக்கு எப்போது வந்தான் என்று சரியாகத் தெரியாது.
(எட்டாம் ஆண்டளவில் என்று தான் நினைக்கின்றேன்."A" வகுப்பில் இருந்த அவன் இடையில் கிறிஷ்தவத்துக்கு மாறியதால் கிறிஷ்தவர்கள் எல்லாரும் "C" வகுப்பில் கல்வி கற்கும் எமது கல்லூரி வழ்ககம் காரணமாக அவன் எம்முடன் வந்து சேர்ந்தான்.)எம்முடன் சாதாரண தரம் வரை ஒன்றாக படித்தவன்,உயர்தரத்திலே நாம் கணிதத் துறையை தேர்ந்தெடுக்க அவன் வர்த்த்கத் துறையைத் தேர்ந்தெடுத்தான்.
அவனில் வறுமை தெரியும்.வாழ்க்கையில் சோகம் இழையோடும். காரணம் அவனது குடும்ப வறுமை தான்.தகப்பன் இல்லை.காலமானாரோ இல்லை இவர்களுடன் தொடர்பு இல்லையோ தெரியாது.ஒரு அக்கா அப்போது எமது சகோதரப் பாடசாலையில் உயர் தரம் கற்றுக் கொண்டிருந்தா.நாங்கள் எல்லாம் சில வேளைகளில் ஒன்றாகச் சேர்ந்து முடிவு எடுப்போம் நாளைக்கு ஒருத்தரும் பள்ளிக்கூடம் வரக்கூடாதென்றால் ஒருத்தரும் போகமாட்டோம் அவனைத் தவிர .அவனுக்கு நாங்கள் விதி விலக்கு அளித்திருக்கிறோம்.அவன் சுகவீனமென்றால் கூட பாடசாலை வராமல் விட்டதில்லை காரணம் அவன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சித்தியடைத்தற்காக அவனுக்கு கிடைக்கும் புலமைப் பரிசில் பணம் தான்.அவனது குடும்ப வருமானம் தாய் அயல் வீடுகளுக்கு சென்று அரிசி இடித்துக் கொடுப்பதனால் கிடைக்கும் வருமானமும் அவனது புலமைப் பரிசிலும் தான்(கல்லூரியும் சிறிதளவு உதவியது) என்றால் நம்ப முடிகிறதா?ஆனால் அது தான் உண்மை.

பாடசாலை இடைவேளைகளிலும் இவன் பொதுவாக எதுவும் சாப்பிடுவதில்லை. பார்த்தால் பாவமாகத் தான் இருக்கும்.ஆனாலும் இவனைப் பார்த்து பரிதாபப் படுவதை தவிர என்னாலும் அந்தக் காலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது.என்ன தான் வறுமை வாட்டிய போதும் படிப்பில் இவன் புலியாகவே இருந்தான். பால்குடி, செந்தில், அமல்ராஜ், கமல், அச்சுதன்,கலைமாறன் என்று பெரிய ஒரு பட்டாளமே இருந்த வகுப்பில் இவனும் அவர்க்ளுடன் இணையாக நின்றான்.க.பொ.த(சா/த) இல் 5A,3B,2C எடுத்து வர்த்தகத் துறையை உயர்தரத்தில் தேர்ந்தெடுத்திருந்தான்.கல்லூரி மாணவர்த் தலைவராகக் கூட கடமையாற்றியிருந்தான்.உயர்தரத்தில் இவன் தோற்றியிருந்த இரண்டு தவணைகளிலும் இரண்டாம் பிள்ளையாக வருபவனுடன் மிக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் இவன் தான் முன்ணணியில் திகழ்ந்தான்.அதுவும் இரண்டாம் தவணை மூன்று பாடங்களுக்குமான கூட்டுத்தொகை 270 ஐத் தாண்டியிருந்தது.தனது குடும்ப கஷ்டத்தை உணர்ந்து மிகவும் பொறுப்பாகப் படித்து நிச்ச்யமாக முகாமைத்துவ பீடத்திற்கு நுழைந்திருக்க கூடியவனை காய்ச்சல் வடிவில் வந்து காலம் துரத்தியது.காய்ச்சல் வந்ததும் இவனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லாமல் தங்கள் கடவுளிற்கு முன்னால் வைத்து பிரார்த்தித்திருக்கிறார்கள் அந்த மதத்தின் மதத் தலைவர்கள்(அந்த மதத்தின் பெயரை எழுத என் பேனா துடிக்கின்றது. ஆனால் அது ஒரு N.R.C க்குள்(ரோமன் கத்தோலிக்கம் அல்லாத எல்லாம் இதனுள் அடங்கும்) ஒரு மதம் தான் என்பதோடு பெயரைச் சொல்லாமல் விடுமாறு மனது தடுக்கின்றது.) பிரார்த்தித்திருக்கிறார்கள். கடைசியில் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தான் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.ஆனால் அப்போது நிலைமை எல்லை மீறி விட்டிருந்தது.அவனைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு முகாமையாளனை தங்களை வருங் காலத்தில் தாங்குவான் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த அவனது ஏழ்மையான குடும்பமும், கல்லூரியும் தமிழ் சமூகமும் இழந்தது. என்னால் அவனது இறுதிக் கிரியைகளில் கூட பங்கு பற்றமுடியாமல் போயிருந்ததது. மன்னித்து விடடா நண்பா பாலமுரளி. என்னால் ஏதோ முடிந்தது இப்போதும் உன்னை அடிக்கடி நினைத்துக் கொள்ள முடிகின்றது. வேறென்ன நான் செய்ய?

Thursday, November 26, 2009

ஏன் இந்த விபரீத முடிவு?

இன்று பல பேர் தங்களுக்கென்று பிரத்தியேக வலைப்பதிவுகளை வைத்துள்ளார்கள். சில பேர் தங்களது சொந்தப் பெயரிலும் பல பேர் புனை பெயரிலும் பல பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு பதிவர் சக பதிவரின் பதிவை வாசித்து ஆரோக்கியமான விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் இடுவதன் மூலம் தங்களுக்குள் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.எமது முந்தைய தலைமுறை இலக்கிய வட்டம் என்ற பெயரில் பிரதேசத்திலுள்ள இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் இலக்கியத்தால் ஒன்றிணைந்திருந்ததைப் போல இப்போது இன்றைய தலைமுறை இணையத்தில் கடல் கடந்தும் நல்லதொரு ஆரோக்கியமான பதிவர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.அதற்குள் நாமும் ஐக்கியமாகித்தான் பார்ப்போமே என்பதுவும், என் மனதில் உள்ள சில கருத்துக்களை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்றொரு நப்பாசையும் தான் என்னை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியது.
அத்துடன் என்னை இந்த முடிவை எடுக்கத் தூண்டியவர்களியும் நான் குறிப்பிட்டேயாக வேண்டும். நான் வாடகைக்கு குடியிருக்கும் அறையில் இணைய இணைப்பு இல்லாததால் இணையத்தை பாவிப்பதற்காக நான் எனது கனிஷ்ட மாணவனும் எனது முன்னை நாள் அறை நண்பனுமாகிய(room mate) நந்த ரூபனின் அறைக்கு சென்று தான் இணையத்தை பாவிப்பதுண்டு.(அட என்ர seniority ஐ ப் பாவித்து தான்).அவர்கள் லோஷன் அண்ணாவின் வலைப் பதிவை தவறாமல் வாசிப்பதுண்டு. அதனால் நானும் சிலவேளைகளில் அவரது வலைப்பக்கம் திறக்கப் பட்டிருந்தால் சிறிது மேய்வதுண்டு.அண்ணன் ஆதிரை இப்போதெல்லாம் வலையில் அவ்வளவாக பொங்கா விட்டாலும் அவரது உணர்ச்சிமயமான, அனுபவித்து எழுதும் பதிவுகளை நான் வாசிக்க தவறுவதில்லை.மற்றையது எனது பள்ளி நண்பன் கிருத்திகனின் பதிவு.அப்போதும் சரி இப்போதும் சரி தனக்குப் பட்டதை அடித்து இடித்து கூறுவதில் இவனுக்கு நிகர் இவனே.அவனது பல பதிவுகள் பல எனது பள்ளிக்கால ஞாபகங்களை மீள நினைவில்(rewind பண்ண) கொண்டு வர உதவியது.அவனது தமிழ், ஆங்கில புலமை, தான் நினைப்பதை அட்சரம் பிசகாமல் எமக்குள் பாய்ச்ச உதவுகிறது. அடுத்தது நண்பன் பால்குடி என்னுடன் தரம் 6 இலிருந்து பல்கலைக்கழகம் வரை ஒன்றாக படித்தவனும் என்னுடன் பல்கலையில் நான்கு வருடம் அறையை பகிர்ந்தவனுமாவான்.அவனது பதிவில் தென்பட்ட ஊர்ப்பற்று என்னை ப்திவுலகம் நோக்கி இழுத்து வந்தது.எனது பள்ளி, தனியார் கல்வி நிலைய நண்பர்களான் பனையூரான், மருதமூரானின் பதிவுகளும் என்னைக்கொள்ளை கொள்பவை தான்.அது மட்டுமல்லாமல் உளறும் அண்ணன் வந்தியத்தேவன், வானம் பாடும் அண்ணன் கரவைக்குரல், ஏதோ சொல்லத்தான் நினைக்கும் தம்பி சஞ்சீவன் மற்றும் பல்கலை நட்புக்களான் நிமல், சுபானுவின் பதிவுகளையும் நான் மேய்வதுண்டு.

அது சரி இது என்ன வடலியூரான் வித்தியாசமாக இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். நான் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,யாழ்ப்பாணத்தின் குறியீடு பனை.அதே பனையை எனது கல்லூரித்தாயும் தனது இலச்சினையில் சுமக்கின்றாள்.அதனால் பனை சார்ந்து ஒரு பெயரை சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் பனையை பெயராக சூட்டுமளவுக்கு நான் பதிவுலகில் பெரியவனல்லன்.புதியவன்.சிறியவன்.ஆகவே பனையின் விடலையான் வடலியைத் தேர்ந்தெடுத்து வடலியூரானாக என்னை வரித்துக் கொண்டேன்.
தற்போது என் முன்னால் பெரிய ஒரு சவால் ஒன்று உள்ளது. இந்த பதிவுலகத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரு வடலி தான்.ஏற்கனவே சக பதிவர்கள் பலர் பனையாகி நுங்கு எல்லாம் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.(சிலர் கள்ளும் தான்).அவர்களோடு நின்று தாக்குப் பிடிப்பேனா தெரியாது.மேற்சொன்ன சவாலை கடப்பேனா இல்லை கவிழ்ந்து கிடப்பேனா என்று தெரியாது.எதுக்கும் ஒரு சின்ன try குடுத்துப் பார்ப்பம் என்ன?என்ன சொல்லுறியள்?