என்னுடன் பழகியவர்களில் தற்போது என்னோடு இல்லாதவர்களில் ஒரு சிலரது பிரிவு என்னைப் பாதித்திருக்கின்றது. என் மனதைக் கசக்கிப் பிழிந்த அந்த பிரிவுகளை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, அந்த சந்தர்ப்பத்துக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருந்தேன். அதனை வலைப் பதிவினூடே உங்களுடன் பகிர்வதன் மூலம் அந்த சுமைகளை சற்றே இறக்கி வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். என் நம்பிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்பி இந்த பதிவை அவர்களுக்கு சம்ர்ப்பணம் ஆக்குகின்றேன்.
பால முரளி
எமது வகுப்பில் எம்முடன் ஒன்றாக படித்த பாலமுரளி மூன்று நாள் காய்ச்சலில் எம்மை எல்லாம் விட்டு செல்வான் என்று நாம் கனவிலும் எதிபார்த்திருக்கவில்லை.ஆனாலும் அந்த சோகம் எம்மை தொட்டது நாம் க.பொ.த(உ/த)மூன்றாம் தவணையில் கற்றுக் கொண்டிருக்கும் போது தான்.அச் செய்தியைக் கேட்டதும் என்னால் எப்போதுமே சிரித்துக் கொண்டேயிருக்கும் பாலமுரளியின் அந்த வஞ்சனையில்லாத முகம் தான் வந்து போனது.என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.என்னால் மட்டுமல்ல ஒரு நண்பர்களாலும் இன்றுவரை அவனது சிரித்த முகத்தை தவிர்த்து எதனையும் கற்பனை செய்து பார்க்க முடியாது.
அவனைப் பற்றி சொல்வதென்றால் ஆகலும் கறுப்பு என்று சொல்ல முடியா விட்டாலும் கறுப்பு தான் அவனது நிறம்.தலை மயிர் கொஞ்சம் குத்து மயிர் மாதிரி ஆனாலும் அவன் அதை கையாலேயே சரி செய்து அமர்த்தி படுக்க வைத்திருப்பான்.மெலிதான உடல்.அவன் சிரிக்கும் போது ஆழமாகப் பார்த்தால் அவன் அப்பாவித்தனம் முகத்தில் தெரியும்.மேலோட்டமாகப் பார்த்தால் மேல்வரிசையில் உள்ள முன் பல் உடைந்துள்ளது தெரியும்.ஒருவருடனும் சோலிக்கு போறதிலை.எல்லாத்துக்கும் ஒரு சிரிப்பு தான் பதில்.
அவன் எங்களது "C" வகுப்புக்கு எப்போது வந்தான் என்று சரியாகத் தெரியாது.
(எட்டாம் ஆண்டளவில் என்று தான் நினைக்கின்றேன்."A" வகுப்பில் இருந்த அவன் இடையில் கிறிஷ்தவத்துக்கு மாறியதால் கிறிஷ்தவர்கள் எல்லாரும் "C" வகுப்பில் கல்வி கற்கும் எமது கல்லூரி வழ்ககம் காரணமாக அவன் எம்முடன் வந்து சேர்ந்தான்.)எம்முடன் சாதாரண தரம் வரை ஒன்றாக படித்தவன்,உயர்தரத்திலே நாம் கணிதத் துறையை தேர்ந்தெடுக்க அவன் வர்த்த்கத் துறையைத் தேர்ந்தெடுத்தான்.
அவனில் வறுமை தெரியும்.வாழ்க்கையில் சோகம் இழையோடும். காரணம் அவனது குடும்ப வறுமை தான்.தகப்பன் இல்லை.காலமானாரோ இல்லை இவர்களுடன் தொடர்பு இல்லையோ தெரியாது.ஒரு அக்கா அப்போது எமது சகோதரப் பாடசாலையில் உயர் தரம் கற்றுக் கொண்டிருந்தா.நாங்கள் எல்லாம் சில வேளைகளில் ஒன்றாகச் சேர்ந்து முடிவு எடுப்போம் நாளைக்கு ஒருத்தரும் பள்ளிக்கூடம் வரக்கூடாதென்றால் ஒருத்தரும் போகமாட்டோம் அவனைத் தவிர .அவனுக்கு நாங்கள் விதி விலக்கு அளித்திருக்கிறோம்.அவன் சுகவீனமென்றால் கூட பாடசாலை வராமல் விட்டதில்லை காரணம் அவன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சித்தியடைத்தற்காக அவனுக்கு கிடைக்கும் புலமைப் பரிசில் பணம் தான்.அவனது குடும்ப வருமானம் தாய் அயல் வீடுகளுக்கு சென்று அரிசி இடித்துக் கொடுப்பதனால் கிடைக்கும் வருமானமும் அவனது புலமைப் பரிசிலும் தான்(கல்லூரியும் சிறிதளவு உதவியது) என்றால் நம்ப முடிகிறதா?ஆனால் அது தான் உண்மை.
பாடசாலை இடைவேளைகளிலும் இவன் பொதுவாக எதுவும் சாப்பிடுவதில்லை. பார்த்தால் பாவமாகத் தான் இருக்கும்.ஆனாலும் இவனைப் பார்த்து பரிதாபப் படுவதை தவிர என்னாலும் அந்தக் காலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது.என்ன தான் வறுமை வாட்டிய போதும் படிப்பில் இவன் புலியாகவே இருந்தான். பால்குடி, செந்தில், அமல்ராஜ், கமல், அச்சுதன்,கலைமாறன் என்று பெரிய ஒரு பட்டாளமே இருந்த வகுப்பில் இவனும் அவர்க்ளுடன் இணையாக நின்றான்.க.பொ.த(சா/த) இல் 5A,3B,2C எடுத்து வர்த்தகத் துறையை உயர்தரத்தில் தேர்ந்தெடுத்திருந்தான்.கல்லூரி மாணவர்த் தலைவராகக் கூட கடமையாற்றியிருந்தான்.உயர்தரத்தில் இவன் தோற்றியிருந்த இரண்டு தவணைகளிலும் இரண்டாம் பிள்ளையாக வருபவனுடன் மிக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் இவன் தான் முன்ணணியில் திகழ்ந்தான்.அதுவும் இரண்டாம் தவணை மூன்று பாடங்களுக்குமான கூட்டுத்தொகை 270 ஐத் தாண்டியிருந்தது.தனது குடும்ப கஷ்டத்தை உணர்ந்து மிகவும் பொறுப்பாகப் படித்து நிச்ச்யமாக முகாமைத்துவ பீடத்திற்கு நுழைந்திருக்க கூடியவனை காய்ச்சல் வடிவில் வந்து காலம் துரத்தியது.காய்ச்சல் வந்ததும் இவனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லாமல் தங்கள் கடவுளிற்கு முன்னால் வைத்து பிரார்த்தித்திருக்கிறார்கள் அந்த மதத்தின் மதத் தலைவர்கள்(அந்த மதத்தின் பெயரை எழுத என் பேனா துடிக்கின்றது. ஆனால் அது ஒரு N.R.C க்குள்(ரோமன் கத்தோலிக்கம் அல்லாத எல்லாம் இதனுள் அடங்கும்) ஒரு மதம் தான் என்பதோடு பெயரைச் சொல்லாமல் விடுமாறு மனது தடுக்கின்றது.) பிரார்த்தித்திருக்கிறார்கள். கடைசியில் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தான் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.ஆனால் அப்போது நிலைமை எல்லை மீறி விட்டிருந்தது.அவனைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு முகாமையாளனை தங்களை வருங் காலத்தில் தாங்குவான் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த அவனது ஏழ்மையான குடும்பமும், கல்லூரியும் தமிழ் சமூகமும் இழந்தது. என்னால் அவனது இறுதிக் கிரியைகளில் கூட பங்கு பற்றமுடியாமல் போயிருந்ததது. மன்னித்து விடடா நண்பா பாலமுரளி. என்னால் ஏதோ முடிந்தது இப்போதும் உன்னை அடிக்கடி நினைத்துக் கொள்ள முடிகின்றது. வேறென்ன நான் செய்ய?
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ஞாபகம் இருக்கிறது பாலமுரளியை.... பெரிதாக அரட்டைகளில்கூட கலந்துகொள்ளமாட்டான். (உங்களுக்கு அரட்டைதானே முழுநேர வேலை எண்டெல்லாம் நக்கல் அடிக்கக்கூடாது). தவராசா சேருக்குப் பிடித்தமான மாணவர்களில் ஒருவன் பாலமுரளி.
ReplyDelete///பாடசாலை இடைவேளைகளிலும் இவன் பொதுவாக எதுவும் சாப்பிடுவதில்லை. பார்த்தால் பாவமாகத் தான் இருக்கும்.ஆனாலும் இவனைப் பார்த்து பரிதாபப் படுவதை தவிர என்னாலும் அந்தக் காலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது.///
இந்தப் பகுதிமட்டும் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது நண்பா. இந்த விஷயத்தில் பாலமுரளி மாதிரிப் பலபேர். சிலரை எனக்காக கன்ரீனில் சாப்பாடு வாங்க அனுப்பி சாட்டோடு சாட்டாக வாங்கியதில் பகிர்ந்துமிருக்கிறேன். அதை அவர்களும் மற்றவர்களும் எப்படி எடுத்துக்கொண்டார்களோ தெரியாது, எனக்கு மனம் நிறைவாக இருந்திருக்கிறது.
///அந்த மதத்தின் பெயரை எழுத என் பேனா துடிக்கின்றது. ஆனால் அது ஒரு N.R.C க்குள்(ரோமன் கத்தோலிக்கம் அல்லாத எல்லாம் இதனுள் அடங்கும்///
யோசிக்காமல் பெயரை எழுதுங்கள் நண்பரே. நண்பன் ஜெயனின் சமீபத்திய மூஞ்சிப்புத்தக status ஒன்று கவர்ந்தது. ‘மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பளிச்சென்று பேசிவிடனும், பின் விளைவுகள் பற்றியெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்'. பின்விளைவுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று என் பிற்சேர்க்கையையும் சேர்த்துவிடுங்கள். இதுதான் தேவை, ஆரோக்கியமான சமூகம் அமைய.
பாலமுரளியை என்னாலும் மறக்க முடியவில்லை. வடலியூரானை விட நெருங்கிப் பழகியவன் நான். தனியார் கலாசாலையிலும் ஒன்றாகப் படித்தவன். குடும்ப சூழ்நிலை காரணமாகவே அவன் மதம் மாறியிருந்தான். காலையுணவு அவன் உண்பதில்லை. இவற்றைக் கூட அவன் தானாக எனக்குச் சொல்லவில்லை. ஒரு முறை விளையாடிக் கொண்டிருந்த போது அவனுடைய பற்களிலிருந்து இரத்தம் வழிந்தது. நாங்கள் பதறிப்போனோம். முரளி சாதாரணமாகச் சொன்னான் உடல் பலவீனம் காரணமாக தனக்கு இப்படி அடிக்கடி நடப்பது என்று. அதன்பிறகே அவனைத் துருவித் துருவி விசாரித்ததில் கிடைத்தவை அத் தகவல்கள்.
ReplyDeleteகல்லூரியில் மாணவத் தலைவனாக இருந்த போது இரண்டு மணியின் பின்னர் நான் நிற்க வேண்டிய எத்தனையோ தடவைகள் அவனை நிற்குபடி கேட்டிருக்கிறேன். ஒரு நாளும் மறுக்கவேயில்லை. அவனுடைய எப்போதும் சிரித்த முகம்தான் நினைவுக்கு வருகிறது. மத மூட நம்பிக்கையால் இழந்த நண்பன் அவன்.
கீத், கல்லூரியில் எங்களோடு படித்த சிலரின் வாழ்க்கை வறுமையால் வாடியிருக்கிறது. உம்மைப் போல சிலர் கூடப் படித்த மாணவர்களுக்கு உதவி செய்தும் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணுதல் என்பதை நான் எங்களூரிலும் கல்லூரியிலும் கண்டதைப் போல இதுவரை காணவில்லை.
பலமுரளீதரனின் இறப்பு உண்மையில் கொடியது. அவன் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என அவனது குடும்பம் மட்டுமல்ல ஊரே எதிர்பார்த்திருந்தது. அவனுடைய ஊர் எங்களது அயலூர்.
ReplyDeleteநண்பர்களே உங்களுக்கு உடனே மறுமொழிஅனுப்ப முடியாமல் விட்டமைக்கு மன்னிக்கவும்.எனது வேலைத்தளத்தின் நிலை அது. கீத் பால்குடி சொன்னது போல அவன் காலையிலும் உண்பதில்லை.எனக்கு தெரியும் ஆனால் நான் தான் அதை வேண்டுமென்று எழுதாமல் விட்டேன். மற்றையது உங்களை மாதிரி நல்ல பெடியள் ஒரு சில பேர் அப்பிடி பல பேருக்கு உதவியிருக்கிறாங்கள். உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
ReplyDeleteபால்குடி எனது மனதில் இருந்த பாலமுரளியை ச்ற்று இறக்கிவைத்திருக்கிறேன். பாலமுரளி பற்றிய நினைவுகளுக்கு நன்றிகள்
ReplyDeleteபனையூரான் பாலமுரளியின் குடும்பம் பற்றி எதாவது தெரிந்தால் சற்று அறிவியடாப்பா.
ReplyDelete