Thursday, November 26, 2009

ஏன் இந்த விபரீத முடிவு?

இன்று பல பேர் தங்களுக்கென்று பிரத்தியேக வலைப்பதிவுகளை வைத்துள்ளார்கள். சில பேர் தங்களது சொந்தப் பெயரிலும் பல பேர் புனை பெயரிலும் பல பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு பதிவர் சக பதிவரின் பதிவை வாசித்து ஆரோக்கியமான விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் இடுவதன் மூலம் தங்களுக்குள் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.எமது முந்தைய தலைமுறை இலக்கிய வட்டம் என்ற பெயரில் பிரதேசத்திலுள்ள இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் இலக்கியத்தால் ஒன்றிணைந்திருந்ததைப் போல இப்போது இன்றைய தலைமுறை இணையத்தில் கடல் கடந்தும் நல்லதொரு ஆரோக்கியமான பதிவர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.அதற்குள் நாமும் ஐக்கியமாகித்தான் பார்ப்போமே என்பதுவும், என் மனதில் உள்ள சில கருத்துக்களை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்றொரு நப்பாசையும் தான் என்னை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியது.
அத்துடன் என்னை இந்த முடிவை எடுக்கத் தூண்டியவர்களியும் நான் குறிப்பிட்டேயாக வேண்டும். நான் வாடகைக்கு குடியிருக்கும் அறையில் இணைய இணைப்பு இல்லாததால் இணையத்தை பாவிப்பதற்காக நான் எனது கனிஷ்ட மாணவனும் எனது முன்னை நாள் அறை நண்பனுமாகிய(room mate) நந்த ரூபனின் அறைக்கு சென்று தான் இணையத்தை பாவிப்பதுண்டு.(அட என்ர seniority ஐ ப் பாவித்து தான்).அவர்கள் லோஷன் அண்ணாவின் வலைப் பதிவை தவறாமல் வாசிப்பதுண்டு. அதனால் நானும் சிலவேளைகளில் அவரது வலைப்பக்கம் திறக்கப் பட்டிருந்தால் சிறிது மேய்வதுண்டு.அண்ணன் ஆதிரை இப்போதெல்லாம் வலையில் அவ்வளவாக பொங்கா விட்டாலும் அவரது உணர்ச்சிமயமான, அனுபவித்து எழுதும் பதிவுகளை நான் வாசிக்க தவறுவதில்லை.மற்றையது எனது பள்ளி நண்பன் கிருத்திகனின் பதிவு.அப்போதும் சரி இப்போதும் சரி தனக்குப் பட்டதை அடித்து இடித்து கூறுவதில் இவனுக்கு நிகர் இவனே.அவனது பல பதிவுகள் பல எனது பள்ளிக்கால ஞாபகங்களை மீள நினைவில்(rewind பண்ண) கொண்டு வர உதவியது.அவனது தமிழ், ஆங்கில புலமை, தான் நினைப்பதை அட்சரம் பிசகாமல் எமக்குள் பாய்ச்ச உதவுகிறது. அடுத்தது நண்பன் பால்குடி என்னுடன் தரம் 6 இலிருந்து பல்கலைக்கழகம் வரை ஒன்றாக படித்தவனும் என்னுடன் பல்கலையில் நான்கு வருடம் அறையை பகிர்ந்தவனுமாவான்.அவனது பதிவில் தென்பட்ட ஊர்ப்பற்று என்னை ப்திவுலகம் நோக்கி இழுத்து வந்தது.எனது பள்ளி, தனியார் கல்வி நிலைய நண்பர்களான் பனையூரான், மருதமூரானின் பதிவுகளும் என்னைக்கொள்ளை கொள்பவை தான்.அது மட்டுமல்லாமல் உளறும் அண்ணன் வந்தியத்தேவன், வானம் பாடும் அண்ணன் கரவைக்குரல், ஏதோ சொல்லத்தான் நினைக்கும் தம்பி சஞ்சீவன் மற்றும் பல்கலை நட்புக்களான் நிமல், சுபானுவின் பதிவுகளையும் நான் மேய்வதுண்டு.

அது சரி இது என்ன வடலியூரான் வித்தியாசமாக இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். நான் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,யாழ்ப்பாணத்தின் குறியீடு பனை.அதே பனையை எனது கல்லூரித்தாயும் தனது இலச்சினையில் சுமக்கின்றாள்.அதனால் பனை சார்ந்து ஒரு பெயரை சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் பனையை பெயராக சூட்டுமளவுக்கு நான் பதிவுலகில் பெரியவனல்லன்.புதியவன்.சிறியவன்.ஆகவே பனையின் விடலையான் வடலியைத் தேர்ந்தெடுத்து வடலியூரானாக என்னை வரித்துக் கொண்டேன்.
தற்போது என் முன்னால் பெரிய ஒரு சவால் ஒன்று உள்ளது. இந்த பதிவுலகத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரு வடலி தான்.ஏற்கனவே சக பதிவர்கள் பலர் பனையாகி நுங்கு எல்லாம் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.(சிலர் கள்ளும் தான்).அவர்களோடு நின்று தாக்குப் பிடிப்பேனா தெரியாது.மேற்சொன்ன சவாலை கடப்பேனா இல்லை கவிழ்ந்து கிடப்பேனா என்று தெரியாது.எதுக்கும் ஒரு சின்ன try குடுத்துப் பார்ப்பம் என்ன?என்ன சொல்லுறியள்?

14 comments:

  1. கஜந்தன்November 28, 2009 at 4:07 AM

    வருக வளர்க....

    ReplyDelete
  2. உங்கள் பதிவுலக பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாருங்கோ.... வாருங்கோ... உங்களை பதிவுலகத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறம். தொடக்கமே அதிரடியா இருக்கு. கடிகளுக்கும் பஞ்சமில்லை... இனி எப்பிடி தாக்கப் போறியளோ தெரியாது...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
  5. வாருங்கள் சகோதரா?

    எனது பாடசாலையில் இருந்து இன்னொரு பதிவர் மிகவும் சந்தோசம்.

    வடலி தான் வளர்ந்து கற்பகதருவான பனையாக மாறுகின்றது. ஏற்கனவே நண்பர் பனையூரான் இருப்பதால் அவருக்கு துணையாக வடலியூரான்.

    உங்கள் அனுபவங்களையும் ஏனைய விடயங்களையும் பகிருங்கள் பருகத் தயாராக இருக்கின்றோம்.

    ReplyDelete
  6. நன்றிகள் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். கஜந்தன், சஞ்சீவன்,பால்குடி, அண்ணன் ஆதிரை மற்றும் அண்ணன் வந்தியத் தேவன் உங்களது பின்னூட்டங்கள் என்னை முன்னோக்கி நகர்த்தும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. என்ன இந்தக்காலத்தில இயக்குனர் எல்லாம் நடிகர் ஆகிறது சகஜம் தானே. அது போல ஒரு வாசகனாயிருந்த நானும் ஒரு பதிவராக வர முயற்சி பண்ணுகிறேன்.ஆனால் இது எந்தளவு சாத்தியமானதோ தெரியவில்லை. நடிகராக அவதாரம் எடுத்த இயக்குனர்கள் எல்லாம் ஒன்று இரண்டு படத்துக்குப் பிறகு காணாமல் போவதைப் போல் நானும் போகிறேனோ தெரியாது. எதற்கும் முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே.

    ReplyDelete
  8. வந்தியதேவன் அண்ணா பனையூரான் ஒரு பேய்க்காய் அவன் மாதிரி எல்லாம் நான் எங்கே?

    ReplyDelete
  9. வாங்கோ வடலி.சந்தோசம் , கலக்கோணும் ஆ ..

    ReplyDelete
  10. அடடா…….. இன்னுமொரு நண்பனும் வலைப்பக்கம் வந்திருப்பது பெருமகிழ்ச்சியே. வாங்க வடலியூரான். வந்து கலக்குங்க. தொடர்ச்சிகளும், நீட்சிகளும் கலக்கலாகவும், காத்திரமாகவும் இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றிகள் பனையூரான்.கலக்கவேணும் எண்டு சொல்லுறாய். நான் கலக்க வேணும் என்று எல்லாம் வரவில்லை. சும்மா ஏதோ என் மனதில் உள்ள சிலவற்றை பகிருவோம் என்று தான் வந்துள்ளேன். சரி பார்ப்பம்.நன்றிகள் வாழ்த்துக்கு.

    ReplyDelete
  12. மருதமூரான் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டுமென்று தான் நானும் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  13. வடலியூரான் ...வாழ்த்துக்கள்......தொடரட்டும் உங்கள் பயணம்.....அதிரட்டும் எங்கள் இணையம்.....

    ReplyDelete
  14. வட்லியை உங்கள் top banner இல் போடலாம் தானே.. அதைப்பார்க்கேக்க தான் ஒரு feeling வரும்

    ReplyDelete