சுமாத்திராத் தீவுகளில் கருக்கொண்ட சுனாமி சத்தம் சந்தடியின்றி வந்து, எம் கரையை முட்டி மோதி,பொங்கி எழுந்து,சுற்றிச் சுழன்றடித்து ஆயிரமாயிரம் உறவுகளையும், கோடானுகோடி சொத்துக்களையும் சின்னாபின்னமாக்கி ஆண்டுகள் ஐந்து கரைந்தோடிவிட்டன. சிரித்து மகிழ்ந்து,சிறு கதை பேசி,மலை போல் தடைகள் வரினும் மசிந்துவிடோமெனும் வைராக்கியத்துடன் தாமுண்டு,தம்பாடுண்டு என திளைத்திருந்த தம் பிள்ளைகளை கடலன்னை அள்ளி ஆண்டுகள் ஐந்து உருண்டோடிவிட்டது.
தன் குழந்தைக்கு சோறூட்டிகொண்டிருந்த தாய்க்கும்,உண்ட சேய்க்கும் வாய்க்கரிசி போட்ட கடலன்னை, கணவன், மனைவி, குழந்தை குட்டி சுற்றம் முற்றம் என குடும்பங் குடும்பமாக எல்லாரையும் ஒரு சில நொடிகளில் ஒரே குழியில் படுத்தியது. எனக்கும் இந்த சுனாமியால் நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒரு அனுபவம் உள்ளது.அதனை உங்களுடன் பகிர்வதற்கே இந்த பதிவு.ஒரு மாதத்திற்கு முன்னரே சுனாமி வந்த 26 ம் திகதியன்று போட்டிருந்திருக்க வேண்டியதொரு பதிவு.ஆனால் முடியவில்லை.அதனால் இப்போது தான் பதிவிடுகின்றேன்.அதுவும் நீண்டு விட்ட படியால் அதை இரண்டாய் உடைத்துத் தருவதாய் உத்தேசம்,சிரமம் பாராது வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
எங்களுக்கெல்லாம் சோறு போடுகின்ற லக்ஷ்மிகள்,நாங்கள் அள்ளுகின்ற அட்சயபாத்திரங்களான எமது தோட்டங்கள் தான் எங்களது ஊரின் வடக்குப் பக்க எல்லை.பரந்து விரிந்து பச்சைப் பசேலென நீண்டு கிடக்கும் எம் அன்னபூரணிகளைத் தாண்டி ஒரு கரையோரக் கிராமம்.கடாரம் என்ற சோழனவன் கப்பலில் சென்ற இந்துமகா சமுத்திரம் அந்தக் கிராமத்தை முத்தமிட்டுச் செல்லும்.எங்கள் அயல்கிராமமான அவர்களுடன் எங்களுக்கு அன்னியோன்னியமான உறவே எப்போதும் இருந்து வந்தது.
எங்கன்ரை ஊர் பெண்டுகள் மீன் வாங்க கடற்கரைக்கு போனால்,தாங்கள் வியாபாரிகளுக்கு மீனை வித்துக் கொண்டு நிண்டாலும் இவையளைக் கண்டவுடனை "இஞ்சை வாங்கோ பறுவதமக்கா ஏன் அங்கேயே நிக்கிறியள்.இதைக் கொண்டு போய் கொஞ்சம் வடிவாப் பெடியளுக்கு காய்ச்சிக் குடுங்கோவன்.பாவம் வளர்ற பெடியள்.சும்மா வெள்ளிக் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் பாத்து பூசனிக்காயையும்,கத்தரிக் காயையும் காய்ச்சிக் குடுத்துக் கொண்டிருக்காமல்." எண்டு சொல்லி கொஞ்சம் உண்டன அள்ளிக் குடுப்பினம்.
இவையளும் பிறகு தங்கடை வெங்காயங்க்ள் கிண்டிக் கொண்டு வரேக்கை 4,5 ,பிடி வெங்காயத்தையும் பூசனிக்காயள்,கத்தரிக்காயளையும் கொண்டு போய்க் குடுத்து "எணேய் சின்னவன் பெஞ்சாதி சும்மா நெடுக உந்த மீனுகளைத் திண்டால் இப்ப உந்தக் கண்டறியாத வருத்தங்களெல்லாம் வருகுதாமல்லே.உந்த மீனுகளைத் நெடுகத் தின்னிறதை விட்டிட்டு கொஞ்சம் மரக்க்றியளையும் தின்னுங்கோவனடியப்பா." எண்டு சொல்லிக் கொண்டு போய்க் குடுப்பினம்.அதோடை எங்கடையாக்களின் மாட்டுப் பாலை பெருமளவு இறக்குமதி செய்து எங்கடையாக்களுக்கு கொஞ்சம் "பொக்கற் மணியைத்"தாறதும் அவையள் தான்.இப்பிடியாகத் தான் ஒட்டியுறவாடி இருந்தன ஊர்களிரண்டும்.
அப்போது எனது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்து பல்கலைக் கழகம் கிடைத்திருந்த படியால் எனது விடியற்காலை நித்திரைகளை நான் எதுவித நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் கொண்டுவந்து இடையிலை குழப்பாமல் 7.30, 8.00 எல்லாம் தாண்டி நீட்டிக் கொண்டிருந்த காலமது.ஒருமாதிரி எழும்பி பல்லை விளக்கிக் கொண்டு நிற்க,"அம்மம்மா ஏற்கனவே ஐயந்தெணிக்கு(எமது தோட்டங்களில் ஒன்றின் பெயர்) போட்டா.நானும் அப்பாவும் இப்ப போறம்.புட்டு அவிச்சு வைச்சுக் கிடக்குது.கறியும் கிடக்குது.போட்டுச் சாப்பிடு நாங்கள் போறம்" எண்டு அம்மா சொல்லிப் போட்டு அப்பாவோடை தோட்டத்துக்குப் போட்டா.தம்பி,தங்கச்சியும் எங்கேயோ ரியூசனக்கு எண்டு நினைக்கிறன்.நான் பல்லை விளக்கிப் போட்டு,அப்ப சன் ரீவியில போய்க் கொண்டிருக்கிற வெண்ணிற ஆடை மூர்த்தியின் "மீண்டும் மீண்டும் சிரிப்பு" நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு 9.20 தாண்டியிருக்கு.கடலிலை ஏதோ சத்தம் கேட்டுது.நான் அது வழமையா நேவியின்றை டோறாக்கள் கரைக்கு கிட்ட ரோந்து வரேக்கை அலை கூட அடிக்கிறதாலை கேட்கிற சத்தம் தான் எண்டு நினைச்சுப் போட்டு என்ரை பாட்டில புட்டையும் சாப்பிட்டுக் கொண்டு,ரீவியையும் பார்த்துக் கொண்டிருந்தன்.ஒரு 5,10 நிமிஷம் போயிருக்கும்."என்ரை ஐயோ.... அம்மா..." எண்டு கத்திக் கொண்டு எங்கடை ஊரின்ரை மெயின் றோட்டாலை சனம் கத்திக் கொண்டோடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டிச்சுது.கோப்பையை அதிலை வைச்சுப் போட்டு ஓடி வந்து கேற்றடியிலை நிண்டு பார்த்தன்.சனம், "கடல் ஊருக்கை வந்திட்டுது" எண்டு சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடப் பக்கம் ஓடிக் கொண்டிருந்துதுகள்.
கொஞ்ச நேரம் அதில நிண்டு பார்த்துக் கொண்டு நிக்கேக்கை தான் அம்மா, அப்பா, அம்மம்மா மூண்டு பேரும் தோட்டத்துக்கை எண்டது ஞாபகம் வந்தது.தோட்டம் கடலிலையிருந்து ஒரு 75 m இல்லை எண்ட படியாலை பயம் என்னைத் தொற்றிக்கொண்டது.டக்கென்று சேட்டொன்றைக் கொளுவிக் கொண்டு சைக்கிளையுமெடுத்துக் கொண்டு வீச்சா உழக்கிக் கொண்டு வெளிக்கிட்டன். கடற்கரையிலையிருந்து வாற றோட்டாலை நியாயமான சனம் வந்து கொண்டிருந்துதுகள்.நான் சனம் வந்து கொண்டிருந்ததுக்கு எதிர்த் திசையில கடற்கரையை நோக்கியதான றோட்டலை போறதுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தன்.
சனமெல்லாம் அழுது குழறிக் கொண்டு "பனையளவுக்கு கடல் எழும்பி வந்து எல்லாத்தையும் கொண்டு போட்டுது" எண்டு சொல்லிப் புலம்பிப் புலம்பி வந்து கொண்டிருந்துதுகள். ஒரு 45, 50 வயசு அம்மா மேலே ஒரு துணியுமில்லாமல் ஓடி வந்து கொண்டிருந்தா.(சுனாமி கன பேரது துணிகளைக் களைந்து சென்றதை நான் பின்னர் பத்திரிகைகளில் படித்திருந்தேன்)சனம் என்னை உள்ளே போக விடாமல் தடுத்தது."தம்பி.. ராசா.. உள்ளை போகாதையணை" எண்டு சொல்லிக் கெஞ்சி மறித்தனர்.ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.நான் அச் சனத்துக்குள்ளாலை வளைச்சுக் கிளைச்சு,வெட்டியாடி ஒரு மாதிரித் தோட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தன். போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது.நானும் போய் எட்டிப் பார்த்தேன்... பதிவின் நீட்சி கருதி இத்தோடு இந்தப் பகுதியை நிறுத்தி தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அடுத்த் பதிவிலே பதிவிடுகின்றேன்.நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
///அப்போது எனது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்து பல்கலைக் கழகம் கிடைத்திருந்த படியால்/// நீங்க பல்கலைக்கழக மாணவனா ? நல்லது
ReplyDeleteஆமாம் பல சோகங்களை விட்டுச் சென்ற சுனாமி பற்றி நீங்கள் நேரில் கண்டதை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்
தொடர்ந்து உங்கள் வாழ்க்கையின் பல அனுபவங்களை பகிர்விங்க என்ற எதிர்பார்ப்பொடு நாங்கள்
நன்றி கருணையூரான் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
ReplyDelete/////அப்போது எனது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்து பல்கலைக் கழகம் கிடைத்திருந்த படியால்/// நீங்க பல்கலைக்கழக மாணவனா ? நல்லது
உங்களது நக்கல்களுக்குக் குறைவில்லை போங்கள்.
//தொடர்ந்து உங்கள் வாழ்க்கையின் பல அனுபவங்களை பகிர்விங்க என்ற எதிர்பார்ப்பொடு நாங்கள்
முயற்சி செய்கின்றேன்