Wednesday, January 13, 2010

ஆலங்காய்ப் புட்டும் அகலத் திறந்த வீதிகளும்

என்னடா இது மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறது மாதிரி ஆலங்காய்ப் புட்டைக் கொண்டு வந்து பாதையோடை முடியுறான் எண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு விளங்குது.இரண்டுக்கும் மொட்டந்த்லை,முழங்கால்ப் பொருத்தம் தான்.ஆனால் என்ன ஒரு றைமிங்காய் இருக்கெட்டுமெண்டு தான் வைச்சுக்கிடக்குது.ஏன் அதைப் பற்றி அலட்டிக் கொண்டு நிக்கிறியள்.அது கிடக்கட்டும்.அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவம்.



புதுவருச லீவுக்கு ஒரு மாதிரி வீட்டை போய் வந்தாச்சுது.இந்தமுறை லீவில் என்ரை ஸ்பெசலென்னண்டால் ஆலங்காய்ப் புட்டுத்தான்.கனகாலஞ் சாப்பிட்டு,வெளிக்கிட முந்தி யாரோ ஒருத்தன் ஞாபகப் படுத்திப் போட்டான்,பேந்தென்ன போன கையோடை "நாண்டு கொண்டு" நிண்டு சாப்பிட்டாச்சுது.சமாதான காலத்தில பாதை திறந்ததிலிருந்து, பல்வேறு காலகட்டங்களில பஸ்ஸால,கப்பலால,பிளேனால, பிறகும் பஸ்ஸால,ஹயசால எண்டு பலவேறு காலகட்டங்களில்,பலவேறு கஷ்ரங்களைப் பட்டு யாழ்ப்பாணம் போய் வந்த ஆக்களில் நானும் ஒருவன்.என்னத்தை தான் மலையிலை ஏறி,அந்தர் அடிச்சுக்,கடலிலை குதிச்சுக்,கப்பலிலையுங் கவிட்டுத் தான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருந்தாலும் ஊருக்குப் போப் போறம் எண்ட உடனை எங்களுக்கெல்லாம் உது பின்னங் காற்சட்டையிலை பட்ட புழுதி மாதிரிக் கண்டியளோ.சும்மா தட்டிப் போட்டுப் போய்க் கொண்டேயிருப்பமில்ல. அப்பிடித்தான் இந்தமுறையும் ஒரு மாதிரிப் போய் வந்தாச்சுது.



சற்குணமண்ணையின்றை ஹையசில தான் நான் கருணையூரானோடை போயிருந்தன்.வெள்ளவத்தையில உள்ள றோட்டுக்களும் தெரியாது,எக்காய் தெக்காயை விட்டால் சிங்களமும் தெரியாது.ஆனால் ஓட்டத்துக்கு வந்த சற்குணமண்ணை ஒரு துணிஞ்ச கட்டை தான்.இடையில லைற் போட இல்லையெண்டு ஏதோ சொல்லி ஆளின்ரை லைசென்சையும் பறிச்சுப் போட்டாங்கள்.ஒரு மாதிரி ஆளும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்த்துப் போட்டார். வவுனியாவைத் தாண்டி போற வழியில எங்களுக்காக சிலுவை சுமந்தவர்களின் சிலுவைப் பயணங்கள் தொடர்கின்றதைப் பார்க்கேக்கை எங்களுக்காக இவ்வளவு கஷ்ரப்பட்ட அந்த சனத்துக்கு கொழும்பிலையிருந்து கொண்டு சும்மா கூடிக் கூடி பெரிய ’பற்றாளர்கள்’ போல் கதைப்பதை விட்டி ஏதாவது செய்திருக்கிறோமா எண்டொரு கேள்வி உள்ளுக்கை ஒரு குற்ற உணர்ச்சியோடை குத்திச்சுது.U.N இன் நீலநிறக் கூடாரத்துக்குள்ளான அவர்களின் அவலம் இன்ன்மும் நீள்கிறது.

ஏ9 றோட்டின் இரண்டு பக்கமும் அவர்களால் தங்களுக்கு அன்றாடம் கஞ்சி வார்க்கும் என்றும்,மற்றவர்களிடம் பிச்சையெடுப்பதிலும் பார்க்க சுயமாக உழைத்து வயிற்றைக் கழுவுவம் என்ற நம்பிக்கையிலும் சண்லைற் சவுக்காரம்,சேர்ப் எக்சல்(Surf Excel)பக்கற்,கூல் இல்லாத சோடா, பல்லி முட்டாஷ் என்று கொஞ்ச சாமான்களை வைச்சு அமைக்க்ப்பட்ட சின்னஞ் சிறு கொட்டில்களில் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கும் அந்த சிலுவையாண்டவர்களின் நிலையை நேரில் பார்த்தால்த் தான் விளங்கும்,அந்த கொடுமையை.ஆனால் சூப்பர் மார்க்கற்றில் சாமான் வாங்கி ,கூல் சோடா குடிச்சு,ஹையசில போற எங்களுக்கு அதிலையெல்லாம் நிண்டு சாமான் வாங்கினால் ஒரு முழம் குறைஞ்சிடுவம் என்று ஒரு கவலை பாருங்கோ. என்ன தான் இருந்தாலும் அண்ணை சத்தியமா உந்த முறிகண்டியில போய் பல்லை விளக்காட்டாலும் பரவாயில்லை,ஒருக்கா வாயைக் கொப்பளிச்சுப்போட்டு சாப்பிடுற அந்த முறிகண்டி ரோல்ஸ் மாதிரி ரோல்ஸ் நான் வேறை ஒரு இடமும் சாப்பிட்டதில்லை.அதே மாதிரித்தான் எத்தினையை இழந்தாலும்,இண்டைக்கும் அந்த வன்னி மக்கள் இழக்காத அந்த வெள்ளை உள்ளத்தையும்,வெள்ளந்தித்தனத்தையும் வேறையொரு இடத்திலையும் காணயேலாது பாருங்கோ.இண்டைக்கும் அதால போகேக்கை முந்தியெல்லாம் த.போ.க. பஸ்களில் முறிகண்டியில ஏறி கச்சான் விக்கிற அந்த பல்லு கொஞ்சம் காவியடித்த ஒரு சின்ன அண்ணை உடப்ட கனபேர் எம் கண்முன்னே இருந்து போகமறுக்கிறார்கள்.



வசந்தம் வீசிக் கொண்டிருக்கும் மண்ணின்,வரவிருக்கும் தலை நகரத்தில்,ஒண்டுக்குப் போவதற்கு 'ஒபென்' இலை போகவேண்டிய நிலைமை கண்டியளோ.(பொம்பிளையள் பாடு என்னெண்டு வடிவா தெரியாது)15,20 பஸ்சில போன சனம் ஒன்றாக இறங்(க்)கியதால் வந்த வினை தான் உது.வெட்ட வெளியில போறது ஒண்டும் பெரிய விசயமில்லை.அங்கனைக்கை வந்து நிண்டு கொண்டு அங்கால தள்ளிப் போ இஞ்சால தள்ளிப் போ எண்டு நாய் கலைக்கிறது மாதிரி கலைச்சால்?சனம் என்ன,மனிசரோ இல்லாட்டில் நாயள்,பேயளோ? அது சரி எங்கடை சனம் இல்லையெண்டால் தலைக்குமேலையும் பெய்ஞ்சு போட்டும் போகும்.அதுக்காக வேண்டி இப்பிடிக் கலைச்சால்?முறிகண்டிப் பிள்ளையாரோடை போட்டிக்கு Business ஐத் தொடங்கிப் போட்டு உழைப்பை மட்டும் பார்த்தால்க் காணுமே.கொஞ்சம் இதுகளையும் கவனிக்கத் தானே வேணும்?இதுகளோட வழிநெடுக கண்ட கனமான காட்சிகளடோயே வீடு போய்ச்சேர வேண்டிப் போச்சுது. அங்கை கொஞ்சம் பரவாயில்லாமல் தான் போச்சுது.


எங்கட வாழ்க்கையில எங்களுக்கெல்லாம் வெடிவால் முளைச்சு நாங்களெல்லாம் கூவ வெளிக்கிட்ட, என்ர வாழ்வில் 'வசந்தம்' வீசின காலத்து ரியூசன் நட்புக்கள் இருவர் வெளியிலிருந்து வந்ததாலும் ஒன்றாக கசூரினாவுக்கு ட்ரிப் அடிச்சது,எங்கன்ரை Team பெடியளெல்லாம் கனகாலத்துக்குப் பிறகு ஒன்றாகக் கிரிக்கட் விளையாடினது,ஒன்றும் பேசாமல் பறையாமல் மாமா ஜேர்மனியிலையிருந்து வீட்டு வாசலை வந்து நிண்டது,நாங்களெல்லாம் சின்னனா இருக்கேக்க உந்த புக்கை,மோதகத்துக்கு கூடுதலா அடிபடுற திருவெம்பாவைக் கடைசிநாளான் திருவாதிரையன்று ஊரில நின்றது,என்னோட ஓராமாண்டிலையிருந்து ஒண்டாப் படிச்சு இப்ப யாழ்ப்பாணக் கம்பசில படிக்கிற நண்பியொருத்தியைச் சந்திச்சது,எங்கட தோட்டங்களை வெங்காயம் பயிரிட்டாப்போல 3,4 வருசத்துக்குப் பிறகு பார்த்தது,பனங்கிழங்கு கிண்டிச் சாப்பிட்டது,பனம் பூரான் தோண்டிச் சாப்பிட்டது,எங்களுக்காக சிலுவைசுமக்கச் சென்று ஊர் மீண்டிருந்த எம் ஊர் உறவுகளைச் சந்திச்சது,அவர்க்ளை மட்டுமில்லாமல் தம் மேட்டுக்குடித்தனத்தைக் கைவிட்டு இம்முறையும் எம்மூரவர்களால் உள் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு உறவுகளையும் சந்திச்சது, பட்ட சீசனென்டதாலை ஏத்தின பட்டங்கள்,படலங்களை "ஆ"வெண்டு பார்த்தது, இந்தமுறையும் ஜூனியர் பெட்டையளைச் சந்திக்கிற சந்தர்ப்பங் கிடைச்சது,எங்கடை கம்பசின்ரையும்,ஊரின்றையும் சிங்கத்தோடை ஒண்டா ஊரில 4 வருசத்துக்குப் பிறகு நிண்டது,புது வருசம் பிறக்கேக்கை வீட்டை நிண்டது,எங்களுக்கு போக அனுமதி மறுக்கப்பட்ட வீதிகள் கொஞ்சம் திறக்கப் பட்டது என்று கன விசயங்கள் இருந்தால காலில சக்கரம் கட்டிக் கொண்டுதிரிந்த மாதிரியாப் போச்சுது இந்த மூன்று நாலு நாளும்.


நாங்கள் எங்கடை சின்ன வயசுகளில் ஒடித்திருந்திருக்க வேண்டிய,எங்கடை பத்து வயசுகளுக்கு முந்தி மூடப்பட்ட பல வீதிகள் பதினாலு,பதினைஞ்சு வருசங்களுக்குப் பிறகு திறக்கப் பட்டிருக்குது.கடற்கரை வீதி,கல்லூரி வீதி,அம்மன் கோவில் வீதி,பிரதேச பிரிகேடியர் தங்கியிருந்த வீதி என்று கொஞ்சம் வீதிகள் திறக்கப்பட்டிருந்தது,இன்னும் மிச்சம் கிடக்குது. ஆனால் தாங்கள் பிறந்து, வளர்ந்து,படுத்து எழும்பிய பரம்பரை பரம்பரையாக ஆண்ட நிலங்களிலிருந்து எத்தனை உறவுகள் கூண்டோடு கலைக்கப் பட்டிருக்கிறார்கள்.அவ்ர்களின் நிலைமையையெல்லாம் இவர்கள் எப்பததான் நினைச்சு,எப்பத் தான் அதுகளெல்லாம் சொந்த வீட் போய் கூழோ கஞ்சியோ காய்ச்சிக் குடிக்கிறது எண்டு தெரியேல்லை.

'அன்னத்துக்கு' வீட்டைக் குடுக்கப் போறம் எண்டு அறிவிப்பு வந்த கையோடை ஏ9 ஐ 24 மணித்தியாலமும் திறக்கிறம் எண்டு அறிவிப்பு வருகுது.ஆனால் மாறி நாங்கள் வீட்டிலை 'வெத்திலையை' வளர்க்கிறம் எண்டு சொல்லியிருந்தால் உதுகும் வந்திருக்காது.என்னத்தை தான் செய்தாலும் செய்யாட்டாலும் பாதை திறப்புக்களோ,சண்டை இல்லாதபடியால சமாதானமாத்தான் சனம் இருக்குதுகள் எண்ட சுயகற்பிதங்களோ ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஒரு போதும் உருவாக்கப் போவதில்லை என்ற எனக்குத் தெரிந்த,ஆனால் தெரியாத இந்தத்தலைப்புக்கு சம்பந்தமில்லாத அரசியலை தொடாமல் இத்தோடு முடிக்கின்றேன்.
நண்பர்களே நான் ஒரு நிலைக்கு(stable) வந்த பின் தொடர்ந்து,சீராக அரசியல், அனுபவம், நகைச்சுவை,விளையாட்டு,சமூகம் என கலந்து ஒரு பஞ்சாமிர்தமாகக் கொடுப்பேன் என்று நம்பி,அதுவரை சற்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

4 comments:

  1. வடலியூரான் ஊருக்கு போனதை அப்படியே ஒருக்கா ஞாபகப்படுத்திடிங்க...

    ///உழைத்து வயிற்றைக் கழுவுவம் என்ற நம்பிக்கையிலும் சண்லைற் சவுக்காரம்,சேர்ப் எக்சல்(ஸுர்f ஏxcஎல்)பக்கற்,கூல் இல்லாத சோடா, பல்லி முட்டாஷ் என்று கொஞ்ச சாமான்களை வைச்சு அமைக்க்ப்பட்ட சின்னஞ் சிறு கொட்டில்களில் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கும் அந்த சிலுவையாண்டவர்களின் நிலையை நேரில் பார்த்தால்த் தான் விளங்கும்,அந்த கொடுமையை.ஆனால் சூப்பர் மார்க்கற்றில் சாமான் வாங்கி ,கூல் சோடா குடிச்சு,ஹையசில போற எங்களுக்கு அதிலையெல்லாம் நிண்டு சாமான் வாங்கினால் ஒரு முழம் குறைஞ்சிடுவம் என்று ஒரு கவலை பாருங்கோ///

    உண்மைதான் வடலியூரான் அந்த கடைகளில் இராணுவ வீரர்கள் தான் அதிகம் வாங்குகின்றார்கள் அந்த வகையில் அவர்களை போற்றத்தான் வேணும்.

    நான் கேள்விப்பட்ட ஒரு விசயம் A/C பஸ்ஸில வந்த சிலர் இடையில சாப்பிட ஒரு A/C கடை இருக்கா எண்டு கேட்டாங்களாம் பின்னை பாருங்கோவன்....

    முறிகண்டி கோவிலில் நான் கண்ட ஒன்று...
    ஒரு குடும்பம் தாய் தகப்பன் இரண்டு மகள் காரில் கொழும்பு போகின்றார்கள் போல
    முறிகண்டி கோவிலில் காரை நிறுத்தி விட்டு செருப்பை கழட்டிய அவர்கள் நடந்தாங்களே ஒரு நடை...
    ஏதோ தங்கட கால் பஞ்சு போலவும்...
    மண்ணில பட்டால் இரத்தம் வந்திடும் போலவும் நடந்தாங்களப்பா... ...
    நீங்கள் எல்லாம் எதுக்கு நிக்கிறீங்க எங்கயாவது மாபிள் பதிச்ச கோவில் இருக்கும் போய் கும்பிடுங்க அல்லது கூத்தாடுங்க...

    வடலியூரான் நீண்ட கருத்துக்கு மன்னிக்கவும்...தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. கருணையூரான் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
    //நான் கேள்விப்பட்ட ஒரு விசயம் ஆ/C பஸ்ஸில வந்த சிலர் இடையில சாப்பிட ஒரு ஆ/C கடை இருக்கா எண்டு கேட்டாங்களாம் பின்னை பாருங்கோவன்....

    உந்த விசயம் நான் கேள்விப் படவில்லை. ஆனால் எங்கடை சனத்தை ஒரு நாளும் திருத்தேலாது எண்டு மட்டும் விளங்குது...

    //முறிகண்டி கோவிலில் காரை நிறுத்தி விட்டு செருப்பை கழட்டிய அவர்கள் நடந்தாங்களே ஒரு நடை...
    ஏதோ தங்கட கால் பஞ்சு போலவும்...
    மண்ணில பட்டால் இரத்தம் வந்திடும் போலவும் நடந்தாங்களப்பா... ...
    நீங்கள் எல்லாம் எதுக்கு நிக்கிறீங்க எங்கயாவது மாபிள் பதிச்ச கோவில் இருக்கும் போய் கும்பிடுங்க அல்லது கூத்தாடுங்க...

    தாங்கள் கொழும்பிலை இருக்கிறம் எண்டாப் போலை ஏதோ கொம்பு முளைச்சுக்கிடக்குது எண்ட நினைப்பு அவையளுக்கு...

    எல்லாத்துக்கும் காலம் தான் பதில் சொல்ல வேணும் கருணையூரான்

    ReplyDelete
  3. நந்தரூபன்January 20, 2010 at 6:20 AM

    //என்னோட ஓராமாண்டிலையிருந்து ஒண்டாப் படிச்சு இப்ப யாழ்ப்பாணக் கம்பசில படிக்கிற நண்பியொருத்தியைச் சந்திச்சது////

    வடலியூரான் நீங்கள் gap இலை கடாசு விடுறாள் எண்டு எனக்கு தெரியும்!!!!!!
    ஓராமாண்டிலை படிச்சது எண்டதுக்காகா ..............

    எதுக்கும் பார்த்து, இப்பவும் நண்பிதானோ அல்லது??????



    உங்கள் உரை நடை நன்றாக இருக்கிறது!!
    ஆனால் இதை இரண்டு பதிவா போட்டு இருக்கலாம்!!!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நண்பரே நந்தரூபன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். //வடலியூரான் நீங்கள் கப் இலை கடாசு விடுறாள் எண்டு எனக்கு தெரியும்!!!!!! ஓராமாண்டிலை படிச்சது எண்டதுக்காகா .............. எதுக்கும் பார்த்து, இப்பவும் நண்பிதானோ அல்லது??????

    இப்பிடித் தான் தெரியாதே சும்மா கொஞ்சம் கடாசத் தானே வேணும்.அது இருக்கட்டும்.இப்பத் தானே கனகாலத்துக்குப் பிறகு பாத்தனான்.அப்ப இப்போதைக்கு நண்பி தானே..

    மற்றையது பதிவு உண்மையில் நீண்டு போய்த் தான் விட்டது.இனி மேல் குறைத்துக் கொள்கின்றேன்.உங்கள் ஆக்க பூர்வமன கருத்துரைகளுக்கு மீண்டும் நன்றிகள்

    ReplyDelete