காற்றிலே கலந்து கணீரென்று வரும் மாயக்கைப் பிள்ளையாரின் மணியோசையும், கோணாந்தீவு மரியன்னை தேவாலயத்தின் மிருதுவான இறைகீதமும் பச்சைப் பசேலெனப் பரந்து விரிந்த வயல்களின் கண்ணுள்ள நெல்மணிகள் காற்றிலே சரசரக்கும் ஓசையுடனும் கடற்கரையிலே கரைவலை இழுக்கும் மீனவர்களின் "ஏலேலோ ஐலசா.."கோரசுடனும்(சேர்ந்து படித்தல்)இணைந்து அந்தவூரின் பெயர் பண்பலையூர் தான் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.
தொலைபேசிகளோ, தொலைக்காட்சிகளோ, வானொலிகளோ இவ்வூருக்குள் பாவனைக்கு வர வெட்கித்து ஓடினாலும், விக்கித்துப் போகாமல்,பிறர் சொக்கித்துப் போகும்படி இன்புற்றே வாழ்கின்றனர் இவ்வூர் மக்கள்.எப்போதாவது யாராவது ஒருவர் வீட்டில் தொலைக்காட்சி வாடகைக்குப் பிடித்துப் படம் போட்டாலொழிய அவர்களின் பொழுது போவதெல்லாம் ஊரிலே பிரசங்கங்கள்(சமய சொற்பொழிவு போன்றது) செய்யும் பேச்சாளர்களை நம்பித் தான்.

ஊர்ச்சனத்தின் பொழுதைப் போக்காட்டுவதற்கென்றே(போக்குவதற்கு) அவ்வூரிலே "பக்தி","நெற்றி", "ஊரியன்" என்று பிரசங்கத்துறையிலே பழம் தின்று கொட்டை போட்டவர்களுடன் "கசந்தம்" என்ற ஒரு புதுப் பிரசங்கியாரும் ஊரில் உள்ளனர். நால்வரும் தம் குரல்களை ஆண்குரல்,பெண்குரல் களில் மாற்றிக் கதைப்பதிலும் ஒருவரே ஒரேநேரத்தில் 2,3 குரல்களில் மாற்றி மாற்றி கதைத்து மிமிக்ரி செய்வதிலும் கெட்டிக்காரர்கள். ஊரின் நான்கு மூலைகளிலும் நால்வரும் தமக்கென்று மேடைகளைத் தனித்தனியே போட்டு நிகழ்ச்சிகளை வழங்கிவருவார்கள்.சில நிகழ்ச்சிகளுக்கு கச்சான் விற்க வந்த கச்சான்காரியே கல்குலேற்றரில்(கணிப்பான்)கணக்குப் பார்க்குமளவுக்கு கூட்டம் களைகட்டினாலும்,பல நிகழ்ச்சிகளில் பார்வையாளரேயற்றுப் பேச்சாளர் தனக்குத்தானே கைதட்டும் பரிதாபமும் அரங்கேறும்.
ஒவ்வொரு பேச்சாளர்களும் வெவ்வேறு நிகழ்ச்சிகளை வழங்கித், தாங்களே வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பாத்திரங்களாக தங்களை உருவகித்து,அதற்குத்தக்கவாறு குரல்களை மாற்றி,தங்கள் காந்தக் குரலாலும்,வசீகரமான நிகழ்ச்சி செய்யும் பாணியினாலும்(Style) ஊர் மக்களைக் கவர முயலுவார்கள்.அதற்காக அவ்ர்களே பல உத்திகளையும் கையாளுவார்கள். நகர்ப் புறங்களிள், ஐந்து ரூபா SMS (குறுந்தகவல்)களை அதிகளவுக்கு நேயர்களை அனுப்பத்தூண்டி, அதன்மூலம் அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு கிடைக்கும் இலாபத்தில் தாமும் ஒரு பங்கு போடத் துடிக்கும் வானொலிகளைப் போல் செய்ய வசதிவாய்ப்புக்களோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத அந்த ஊரில் பேச்சாளர்களே பார்வையாளரிடம் கேள்விகளைக் கேட்பார்கள்.

அனைவருக்கும் விடைதெரிந்திருக்ககூடியதான "ஆனைக்குட்டி ஐயருக்கு எத்தனை கால்?","நடிகர் ரஜனிகாந் இன் பெயர் பின்வருவனவற்றுள் எது? முதலாம் விடை விஜயகாந், இரண்டாம் விடை ரஜனிகாந், மூன்றாம் விடை லக்ஷ்மிகாந் ,நான்காம் விடை சிறிகாந் என்பது போன்ற கேள்விகளைத் தெரிந்தெடுத்துக் கேட்பார்கள். விடை தெரிந்தவர்கள் ஒரு துண்டிலே எழுதிப் பேச்சாளரிடம் கையளிக்க வேண்டு.சனமும் விழுந்தடித்துக் கொண்டு ஒரு கடதாசித் துண்டிலே அத்ற்குரிய விடையை எழுதிப் பேச்சளரிடம் கையளிக்கும்.அவரும் எல்லாத் துண்டுகளையும் எண்ணிவிட்டு,"ஆம்,எங்களுக்கு 89 துண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அனுப்பிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்." என்று வந்த மொத்தச் சனமே 39 தான் என்பதை மறந்து உளறித்தள்ளி விடுவார். சரியான விடை எழுதிய ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு அயலூருக்கு வண்டிலில் இலவசமாக சென்று வருவதற்கான அனுமதியை, ஏதோ இந்தியா போவதற்கு விமானப் பயணச்சீட்டுக் கொடுப்பது போல ஒரு கர்வத்தோடு அறிவிப்பார்.
மேலும் பக்தி, தாங்கள் அடிக்கடி தான் தான் "தமிழ் மொழியின் பக்தி" என்றும்,"LMVR இன் தரப்படுத்தலில் தான் தான் முதலில் இருப்பதாகவும்" பீற்றிக்கொள்ள, ஊரியனோ,தான் கருத்துக்கணிப்பில் தெரிவு செய்யப்படமாட்டேன் என்பகை முதலே தெரிந்து கொண்டோ என்னவோ "கருத்துக் கணிப்பெல்லாம் வெறும் குருட்டுக் கணிப்பு.உங்கள் கணிப்புத் தான் குன்(Gun) கணிப்பு" என்று சனத்தைப் பார்த்து வடிவேலு பாணியில் கூறுவார்.அத்துடன் நிகழ்ச்சிகளின் இடையிடையே இந்த, இந்தப் பொருட்களை வாங்க நாடவேண்டிய ஒரே இடம் என ஊரிலுள்ள "மின்னிக் கண்ணன் கடை", "விக்கிப்பாப்பா கடை", "ஜம்பண்ணா கடை" போன்றவற்றின் விளம்பரங்களையும் அந்தந்தப் பேச்சாளர்கள் விளம்பரப் படுத்துவார்கள்.
அதிகாலை வேளைகளில் கூடுதலாக எல்லாப் பேச்சாளர்களது நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் களைகட்டியிருக்கும்.வேலைக்குச் செல்ல ஆயத்தமாகும் ஆடவர்,பெண்டிருடன்,பள்ளி செல்லத் துள்ளி நிற்கும் சிறுவர்களுமென அனைவரும் காலைச் சாப்பாட்டுக்களுடன் வந்து மேடை முன்னமர்ந்து நிகழ்சிகளைப் பார்த்து அதிலே லயித்தவாறே சாப்பிடுக் கொண்டிருப்பர்.பேச்சாளர் "நெற்றி" காலையில் "ஒடியல்" என்ற நிகழ்ச்சியை "டோஷன்" என்ற புனை பெயரில் வழங்குவார்.அவரின் பேச்சும்,அதிலுள்ள கம்பீரமும்,அச்சரம் பிசகாத உச்சரிப்பும்,ஆங்கிலம் கலக்காத தமிழும் ஒரு "அட" போட வைக்கும்.ஆனால் அவர் தான் ஜோக் சொல்கிறேன் என்று சொல்லி, ஒரு சப்பையான,சொதப்பல் ஜோக் ஒன்றைச் சொல்லி,அதற்குத்தானே சிரிப்பது போல் மிமிக்ரியும் செய்ய சனமெல்லாம் தம் தலையை மோதிக்கொள்ள ஒரு சுவரைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும்.ஆனாலும் மற்றைய பேச்சாளார்களைப் போல், புதிய,குத்துப் பாடல்களை மட்டும் பாடினால் தான் சனம் நிகழ்ச்சியைப் பார்க்க வரும் என்ற குறுகிய நோக்கத்தை விடுத்து, பல அரிய ,இளைய சந்ததி கேட்கத்தவறிய, கேட்கவேண்டிய அரிய பாடல்களைத் தேடித் தேர்ந்தெடுத்துத் தருவதில் நெற்றிக்கு நிகர் நெற்றி தான்.அதிலும், டோஸன் தன் ஒடியல் நிகழ்ச்சியில் துணிந்து செய்யும் அந்த முயற்சியைச் சனமும் பாராட்டத் தவறுவதில்லை.
பக்தி,விடியற்காலையில் "ஊசியா" என்ற பெயரில் பெண்குரலிலும், "சனா" என்ற பெயரில் ஆண்குரலிலும் கதைக்கின்ற "சுணக்கம் தாயகம்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.பக்தியின் இருவேறுபட்ட பாத்திரக் குரல்களிலும் வந்து விழும் வார்த்தைகள் கணீரென்று காதை வந்தடையும்.கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.உலக நடப்புக்களை, சனா என்ற ஆண்குரலின் மூலம் பக்தி கூறுவார்.பின்னர் அதே பக்தியே ஊசியா சனா பெயரில் சனாவின் பேச்சின் இடையிடையே,"ஆ.. சனா..O.K,..ரிக்க்ட்..m.. Yes.."ஆங்கிலமும் கலந்து கதைப்பார்.
மற்ற மேடையிலே ஊரியன், ஊரியராகங்கள் என்ற நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருப்பார்.ஒருவரை எழுப்பி, "நான் 50000 இற்கும் குறைவான ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன்.நீங்கள் அந்த இலக்கத்தை விட சிறிய ஒரு எண்வரை சொல்லலாம்.நீங்கள் சொல்லுமளவு தொகை உங்களுக்குப் பரிசாக வழங்கப்படும்.அதை தாண்டினால் உங்களுக்கு பரிசு இல்லை" என்று நிகழ்ச்சிய வழங்கிக் கொண்டிருப்பார்.சனமும் ஆர்வதுடன் பங்குபற்றிக் கொண்டிருக்கும்.
அதன்பின் நெற்றியார்,10 மணிமுதல் ஒருமணி வரை,"பினோத பியூகம்" என்ற நிகழ்ச்சியை,"பிமல்" என்ற ஆண்குரலிலும்,"மைதேகி" என்ற பெண்குரலிலுமாய் மாறிமாறி வழங்குவார்.மாட்டுச் சாணம்,ஆட்டுப் புழுக்கை,யானை இலத்தி என்பது போல ஏதாவது 5 குப்பைகளைத் தெரிந்தெடுத்து,அதிலே எது நல்லது என்று கேட்டு சனத்தை அறுப்பார்.பக்தியாரோ,"பக்தி எக்ஸ்பிரஸ்" என்ற நிகழ்ச்சியை,"நயானா" என்ற புனை பெயரில் ஒரு பெண்குரலில் வந்து,"கீ..க்கீ ,கீ.." என்று கத்திக் கத்தியே சனத்தின் காதெல்லாம் இரத்தம் வராதகுறையாக செய்துவிடுவார்.ஆனால் ஊரியனின் "விசைச் சமர்" நிகழ்ச்சி ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும்.ஆனால் "பிக்னேஸ்" என்ற பெயரில் அவர் படுத்தும் அட்டகாசம் சனத்தைப் போதும்போதும் என்றாக்கிவிடும்.
மதியச் சாப்பாட்டின் பின்னர் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மீண்டும், ஒரளவு சனம் களைகட்டும்.ஊரியன்,"சும்மாளம்" என்றும், நெற்றி, "பெற்றது பையளவு" என்றவாறும், பக்தி, "தலை பாயுதே" என்ற பெயரிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்கள்.உலக நடப்புக்களை கொஞ்சமாவது அறிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் அந்த நேர நிகழ்ச்சிகளுக்கு சனம் கூடுதலாக கூடும்.ஆனால் அவர்களோ அத்திபூத்தாற் போல் ஒரிரு விடயங்களைக் கூறிவிட்டு,சிம்புவுடன் நயனதாரா படுத்தார்,பிரபுதேவாவுடன் எழும்பினார் என்று ஐந்து சததிற்கும் பிரயோசனமில்லாத கதைகளைக் கதைத்து, சனத்தின் எதிர்பார்ப்பையும்,பொன்னான நேரத்தையும் மண்ணாக்கிவிடுவார்கள்.

நயந்தாரா யாருடனும் படுத்தாலென்ன,விட்டாலென்ன நீங்கள் பிரயோசனமான தகவல்களைத் தரலாம் தானேயென்று சனம் ஆதங்கப் பட்டுக் கொள்ளும்.தொடர்ந்து சினிமா புராணம் படிக்காமல் வேணுமென்றால் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக இடையிடையே ஒன்றிரண்டை இணைத்துக் கொள்ளலாம் தானே என்று சனம் அறிவுரை கூறினாலும் அதைக் காதில் போடுவதாய் இவர்கள் இல்லை.தங்களுக்கு உலகநடப்புத் தெரியதென்றோ அல்லது இவர்கள் தங்களுக்கு உலக நடப்புத் தெரியாததாலோ அவ்ற்றை நிகழ்ச்சியில் இணைப்பதில்லை என்ற சனத்தின் கேள்வியும் யோசிக்கவைக்கத்தான் செய்கிறது.
மாலையில் வேலை சென்றவர்கள் வீடு மீண்டு,தேநீர் அருந்தியவாறே,இளைப்பாறிக் கொண்டே பேச்சாளர்களின் மாலைநேர நிகழ்ச்சிகளை ரசிக்கத் தொடங்குவார்கள்.பக்தி,"ஹலோ பக்தி" என்ற பெயரில் "விராஜ்" மற்றும் "பவிதா" என்ற ஆண் பெண் குரல்க்ளிலும், ஊரியன்,"என்றென்றும் பன்னகை" என்ற நிகழ்ச்சியை "தவா" மற்றும் "" என்ற ஆண் பெண் குரலிலும் மாறி மாறிச் செய்து கொண்டிருக்க நெற்றி, "பந்துரு" என்ற ஆண்குரலில் தனித்தவில் வாசித்துக் கொண்டிருப்பார்.
மற்றப் பக்கம் கசந்தம், கசந்தம் குட்டி என்ற பெயரில் இந்த மூன்று பேரையும் வைச்சு அறு அறு என்று அறுத்தெடுத்துக் கொண்டிருப்பார்.சில சனம், "கேட்க நல்லாத்தான் இருக்குது உங்கட பகிடிகளூம், உந்த வானொலிகளூக்கை நடக்கிற கூத்துகளூம்.ஆனால் நீங்களும் முந்தி அதுகளூக்குள்ளதானே இருந்தையள் " எண்டு இடக்கு முடக்கா கேள்வி கேட்கையுக்கை மட்டும் அவற்றை முஞ்சை ஏதோ ஒரு படத்திலை செந்திலைப் பாத்து , கவுண்ட மணி, "அடேய் கோமுட்டித் தலையா இது தாண்டா மான்றில்(mantle) இதிலையிருந்து தான் பளீச்செண்டு வெளிச்சம் வருது.... ,இதுக்குத் தான் ஒரு ஆல் இன் ஆல் அழகு ரஜா தேவை எண்டு சொல்லுறது" எண்டெலாம் லெக்சர் அடிச்சுக் கொண்டிருக்க, "இதிலேருந்து எப்பிடின்னே வெளிச்சம் வரும் எண்டு .." மான்றிலைப் புடுங்கி கொண்டு செந்தில் கேட்கேக்கை கவுண்டற்றை முகம் மாறுமே அப்பிடி மாறிப் போகும் கசந்தம் குட்டியின்றை மூஞ்சை. எண்டாலும் "அக்கக்காய் அக்..ஆ" எண்டு சிரிச்சு ஒரு மாதிரி சிரிச்சு மழுப்பிப் போடுவார்.
பக்தி ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கும் "அன்னையர்க்காக..","மண்ணின் மைந்தர்கள்",”பக்தி சூப்பர் ஸ்டார்” போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் தரமானதும்,அவசியமானதும் என்பது சனத்தின் கருத்து.ஆனால் ஞாயிறு பகலில்,"சொங்கி டைம்" என்ற சொங்கி நிகழ்ச்சியை,சொங்கிப் பெயரொன்றில்,நிகழ்த்துவார்.குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டவில்லை என்பது போலதான்,பெரிய Style(பாணி) ஆகத் தொடங்குறன் என்று தொடங்கி பிசுபிசுத்துப் போன பிறகும் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் என்று சனம் கைதட்டிச் சிரிக்கும்.
அத்தோடு வார நாட்களில்,"பிலாச் சோறு" என்ற நல்லதொரு நிகழ்ச்சியினிடையே "பாயா" என்ற பெயரில் வழங்கும் பக்தி, தான் ஏதோ மெத்த படித்த மேதாவி என்று நினைத்துக் கொண்டு, தான் சொல்வதெல்லாத்தையும் சனம் கேட்கும் என்றதொரு நினைப்பிலே அலட்டலோடை அவிக்க வெளிக்கிட்டால் சனமெல்லாம் விட்டுவிட்டுப் போய் வீடுகளுக்கை படுக்க வெளிக்கிடும்.
என்னதான் ஒரு சில குறைகள் இருந்தாலும் அந்தப் பேச்சளர்களின் திறமைகளையும், அவர்களின் பேச்சாற்றல்களையும் சனம் ரசிக்கின்றது,அதிலே லயித்து சிரிக்கின்றது,பொழுதை போக்காட்டுகின்றது.அந்தவகையில் அவர்களின் பணி போற்றுதற்குரியதென்பதே சனதின் கருத்து.