Sunday, August 29, 2010

கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞனடா...!!!

"இது ஒரு பொன்மாலைப் பொழுது" என்ற பாடலில் தொடங்கிய வைரமுத்துவின் திரையிசைப் பாடலெழுத்தாளர் பயணம் அண்மையில் வந்த "உசிரே போகுது..." வரைக்கும் மிகவும் வெற்றிகரமாகவும்,தமிழ் சினிமாப் பாடலாசிரியர்களிடையே வைரமுத்துவுக்கு ஒரு சிம்மாசனத்தையும் கொடுத்து,தொடர்ந்தும் முன்னோக்கி,இன்னும் மேல்நோக்கி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.இந்தியாவின்,தமிழ்நாட்டின் மதுரைமாவட்டத்திலுள்ள தேனியில் பிறந்து,வளர்ந்த வைரமுத்து வரிந்த,வரைந்த வரிகள் எல்லோர் வாய்க்குள்ளும் எப்போதும் முணுமுணுக்கப்படுவதற்கு அவற்றில் காணப்பட்ட உயிரோட்டமும்,இலகு தமிழ் நடையும்,அடுக்கடுக்கான வரிக்கோர்வைகளும் காரணங்களில் சிலவாக அமைகின்றன.


எனக்கு மட்டும் தான் வைரமுத்துவைப் பிடிக்கும் என்பது போலவும்,வேறு எவருக்கும் வைரமுத்துவைத் தெரியாது என்பது போலவும்,அல்லது நான் தான் வைரமுத்துவைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கு அறிமுகப்ப்படுத்திவைப்பது போலவும் அல்லது ஐந்து முறை தேசிய விருதுபெற்ற வைரமுத்துவுக்கு நான் அளிக்கும் இந்த அங்கீகாரத்தால் தான் அவர் வெளியே தெரியப் போகின்றார் என்பது போலவும் எண்ணி நான் பதிவிடுவதாக தப்பாக நினைக்கவேண்டாம்.அதை ஏற்கனவே பலர் தேவைக்கும் அதிகமானவளவு என்னைவிட மிகச் சிறப்பாக,நன்றாக வைரமுத்துவை வாழ்த்தி,வரவேற்று,செய்துவிட்டார்கள்.நான் என் மனதில் பட்ட,எனது குருட்டுப் பார்வைக்கு,இருட்டிலே தெரிகின்ற கறுப்புபு வைரமுத்துவைப் பற்றி சிறிது பதியலாம் என்று தான் நினைக்கின்றேன்.அவ்வளவு தான்.
காதல் ததும்பிவழிகின்ற,காதல் சொட்டும் வரிகளோடு காதலை,உறவுகளின் சேர்க்கையை,காதல் பிரிவை,காதல் சோகத்தை,இளைஞர்களுக்கு அறிவுரையை,சமூகநீதியை முன்னிறுத்தி என்று ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சினிமாப் பாடல்களிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை ஒழுக,வகைவகையாய் தந்துவிட்டார் வைரமுத்து.
ஒவ்வொரு பாடலையும் ஆறி அமர்ந்து,ஆராய்ந்து ஆறேழு பதிவே எழுதிப் போடலாம்.ஆனால் அவற்றைவிட வைரமுத்துவின் கவிதையைப் பற்றிப் பேசவே இந்தப்பதிவு.


அதுவும் வைரமுத்துவே அவற்றை வாசிக்கும் போது அதிலுள்ள கம்பீரமும்,சந்தி பிரித்து,சத்தம் ஏற்றி இறக்கி,வந்திருப்பவர்களை வயிறு நிறைய வைப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்துவே.முறுக்கிய மீசையுடன்,கறுத்தச்சிங்கம் கர்ச்சிக்கின்றபோது அந்த கர்ஜனையிலே,கம்பீரத்திலே, தமிழின் வலிமை தெரியும்,பெருமை புரியும்.தமிழ் திக்கத் திகட்டி சுவைத்து இனிக்கும்.அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம்,கருவாச்சி காவியம்,காதலித்துப் பார் என்ற பல கவிதைத் தொகுப்புக்களிடையே முழுமையாக எனக்கு வாசிக்கக் கிடைத்தது ஆனந்தவிகடனில் தொடராக வந்து கொண்டிருந்த கருவாச்சி காவியம்.


அப்பா என்ன வரிகள் அது.அந்த மாட்டுக் கொட்டிலுக்குள் கருவாச்சிக்கு பிள்ளைபிறந்த விதத்தை வைரமுத்து எழுதியிருந்த விதம்,இப்படியெல்லாம் பொம்பிளைகளை கஸ்ரப்படுத்தி பிள்ளையைப்பெற ஏன் கடவுள் வைத்தானோ என்று எண்ண வைத்தது.அப்பா,அவளின் வறுமை,சூழல்,அதோடு பிள்ளையைப் பெற தன்னந் தனியே அவள் பட்டவலிகளை தானே அனுபவித்தது போல,அவளாகவே மாறி,அவளின் வேதனைகளை வெளிக்கொண்டுவந்திருந்தார்.இதெல்லாம் கவிப்பேரரசுவின் கவித்துவம் என்ற மகா சமுத்திரத்தில் சிறு துளிகள் மட்டுமே.இவற்றையெல்லாம் விட அண்மையில் தனது பிறந்தநாளுக்கு கவனிபாரற்றுக்கிடந்த மூத்த கவிஞர்களை கணக்கெடுத்துப் பாராட்டும்,பரிசும் உவந்தளித்த அந்த நல்ல குணம் உட்படப் பல குணாதிசயங்கள் அவரிடம் எனக்குப் பிடிக்கின்ற போதும் ஒரு உறுத்தல் இருக்கின்றது.கலைஞரைக் கட்டிப் பிடித்து,அவர் காலடியில் கிடப்பது.அதுவும் அரசிய்ல கலப்பற்று,கவிதைக்காய்,தமிழுக்காய்,கலைஞரின் கைபிடிப்பாராக இருந்தால், அந்தக்கைகுலுக்கலில் களங்கம் இல்லாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ப்து என் சின்னதொரு அவா.கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞன் உண்மையில் கவனமாகாப் பாதுகாக்கப்படவேண்டிய கன்னித் தமிழின் சொத்தே.

வைரமுத்துவின் கவிதைகளில் எனக்குப் பிடித்த/உங்களில் பலருக்கும் பிடித்த,எழுதவோ படிக்காவோ தெரியாதென்பதால் எழுதாமல் விடப்பட்ட வைரமுத்துவின் அம்மா பற்றிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.பார்த்து ரசியுங்கள்.

4 comments:

 1. கள்ளிக்காட்டுக் கவிஞன் இப்போதெல்லாம் குவளையாருக்கு சொம்பு தூக்குவது கவலை. பள்ளிக்கூடக் காலங்களில் சென்னை வானொலி நிலையக் காலை மலரில் வைரமுத்து வாசித்த கவிதைகள் கேட்பது ஒரு சுகமான அனுபவம். அதில் அவர் வாசித்த ‘ஒரு நதியின் விதி’ கவிதையை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 2. ///அதுவும் வைரமுத்துவே அவற்றை வாசிக்கும் போது அதிலுள்ள கம்பீரமும்,சந்தி பிரித்து,சத்தம் ஏற்றி இறக்கி,வந்திருப்பவர்களை வயிறு நிறைய வைப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்துவே/// ம்...உண்மை வடலியூரான்

  ReplyDelete
 3. //கள்ளிக்காட்டுக் கவிஞன் இப்போதெல்லாம் குவளையாருக்கு சொம்பு தூக்குவது கவலை
  ஆமாம் கீத்,அத் தான் அனேக்மானோருக்குள்ள கவலை...

  ReplyDelete
 4. //அதுவும் வைரமுத்துவே அவற்றை வாசிக்கும் போது அதிலுள்ள கம்பீரமும்,சந்தி பிரித்து,சத்தம் ஏற்றி இறக்கி,வந்திருப்பவர்களை வயிறு நிறைய வைப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்துவே///


  ஆமாம் கருணையூரான்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete