Friday, December 11, 2009

பட்டம்

சின்னஞ் சிறு வயதுகளில் எதுவித பொறுப்புக்களோ யோசனைகளோ இன்றி எங்கள் ஊரின் றோடுகளிலும் ஒழுங்கைகளிலும் சந்துகள் பொந்துகளுக்குள்ளாலும் ஏன் வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலும் ஓடித்திரிந்ததும் அப்போது பண்ணிய சிறு ரகளைகள், சேஷ்டைகள்,குறும்புகள் அடிபாடுகள், ஊரிலே இருந்த பெரிய பெடியளிடம், சனத்திடம் வாங்கிய அடிகள், பேச்சுக்கள் என்பன மறக்கப்பட முடியாதவை.இவற்றை மீட்டிப்பார்ப்பதற்கே பிரத்தியேகமாக இந்தப் பகுதி.


இது வந்து பல்கலைக்கழகங்களிலோ அல்லது வேறு உயர் கல்வி நிறுவனங்களிலோ படித்து(சில வேலைகளில் படிக்காமலும் டாக்டர் பட்டமெல்லாம் வாங்குகிறார்கள்) வாங்கும் பட்டத்தைப் பற்றிய கட்டுரை அல்ல.எங்கள மாதிரி பெடியள் எல்லாம் சின்னனா இருக்கும் போது ஏற்றுகிற பட்டம்.தற்போது பட்ட காலம்(season) எங்களது பிரதேசங்களிலெல்லாம் தொடங்கி விட்டது. அதைப் பற்றி எழுத வெளிக்கிட்ட போது எனக்கு எனது பல ஞாபகங்கள் அலையோடின. அவற்றிலே சிலவற்றை தெரிந்தெடுத்து சுருக்கித் தரலாமென்று நினைதேன்.ஆனால் பலவற்றை விடமுடியவில்லை.வாசகர்களே என்னால் இதற்கு மேல் சுருக்க முடியாம்ல் போய் விட்டது.அதனால் அப்பிடியே தருகிறேன் நீண்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.


முந்தியெல்லாம் ஐப்பசி தாண்டினால் எல்லா வீடுகளிலும் பெற்றோருக்கும் சின்னப் பெடியளுக்கும் அடிபாடு தான். பட்டம் வாங்கித்தா, நூல் வாங்கித்தா என்று பெடியளின் ஆக்கினையும் நாளைக்கு வாங்கித்தாறன் நாளையிண்டைக்கு வாங்கித்தாறன் என்று பெற்றோரின் சமாளிப்பும் எல்லா வீடுகளிலும் அரங்கேறும்.அந்த காலப்பகுதியில்(season இல்)எங்களது கொப்பிகளைப் பின் பக்கம் திரும்பி பார்த்தால் ஒரு படலத்தை கீறி,அதற்கு விசை பூட்டி,வால் கட்டி,பிடித்த வடிவத்தில்(design இல்)கலர் அடித்து,பட்டத்திற்கு நூலைக் கட்டி அந்த நூலை கொண்டு வந்து ஒரு மரத்தில் கட்டியிருப்பதாக எல்லாம் படங்கள் கீறப்பட்டிருக்கும். பாடசாலை செல்லும் போதும்,பாடசாலையிலும்,பாடசாலை விட்டு வரும் போதும் அவன் அவ்வளவு பெரிய பட்டம் ஏற்றினான்,இவன் இவ்வளவு ஏற்றினான் என்று மூச்சு,பேச்செல்லாம் பட்டம் பற்றியதாகவே இருக்கும்.அந்தளவு பைத்தியமாகவே அலைவோம்.



எமது இடங்களில் படலம், வாலாக்கொடி,வட்டாக்கொடி,கொக்கு, இரண்டு தலைக் கொக்கு, பிலாந்து(பருந்து),இரண்டு தலைப் பிலாந்து,நாலு தலைப் பிலாந்து, பாம்புப்பட்டம், சீனத்தான்,வீட்டுப்பட்டம் என்று பல பட்டங்கள் ஏற்றப்பட்டாலும் படலம், வாலாக்கொடி,வட்டாக்கொடி,கொக்கு என்பவை தான் முக்கியமானவை.சிலர் பட்டங்களை கடையில் வாங்கி ஏற்றுவார்கள்,பலர் மூங்கிலை எடுத்து மெலிதாக சீவி தாங்களே கட்டி ஒட்டுவார்கள். ஒட்டும் போதும் பல வடிவமான ஒட்டுக்கள் இருக்கின்றன.படலத்துக்கு ஒட்டும் போது வெள்ளை நிற தாள்(Tissue) ஐ ஒட்டி அதன் மேல் டைமன் ஒட்டு,சூரியன் ஒட்டு, கண் ஒட்டு என்று பல வடிவங்களில்(Design) அல்லது தனியே மாட்டுத்தாளில் ஒட்டுவார்கள்.வட்டாக் கொடிக்கு சிலந்தி ஒட்டு என்றொரு ஒட்டு உண்டு.


பட்டம் ஒட்டிய பின் அது கூவிக் கொண்டு நிற்க வேண்டுமென்றால் அதற்கு விசை கட்ட வேண்டும்.விசை கட்டுவதற்கு மூங்கிலைப் பயன் படுத்த முடியாது.ஏனெனில் அதன் பாரம் குறைவு.பட்டத்துக்குரிய தலைப்பாரத்திற்கு காணாது.அது மட்டுமல்லாமல் அது கூடுதலாக வளைந்தால் முறிந்து விடும். சிலர் காசுக்கு தேக்கம் விசை வாங்குவார்கள்.பலர் எந்தெந்த வீட்டு வேலிகளை கமுகஞ் சிலாகையால் கட்டியிருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு திருவெம்பாவைக் காலங்களில் அதிகாலை திருவெம்பாவை படிக்கச்செல்லும் போது(சங்கூதிப் பண்டாரம்)அறுத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.அதை நூலிலே கட்டி நுணுக்கமாக சமச்சீர் எல்லாம் பார்த்து விசை தயாரிப்பார்கள்.அதன் பின் அது அதிர்வதற்கு றிபன்(ribbon) நாரை கடையில் வாங்கி பூட்டலாம்.அதை விட பெரிய பொதிகளை பொதி செய்ய பயன் படும் பாசல் நாரை வாட்டி அதற்கேற்றாற் போல் இரண்டு கூவக்கட்டைகளை முள் முருக்கஞ் செத்தலில் பூட்டிச் செய்கிற விசை கமறுகிற சத்தம் இருக்குதே.குவாய்ங்..குவாய்ங்.. என்று சும்மா சொல்லி வேலை இல்லை.



முச்சை கட்டும் போது நூல் முச்சை ,வால் முச்சை என்பன் சமச்சீராக் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப்பக்கம் ஆய்ச்சுக் கொண்டு போய் விடும்.மேல் முச்சையுடன் நடு முச்சையை இழக்கிக் கட்டினால் பட்டம் அம்மிக் கொண்டு நிற்கும்.ஓரளவாவது குறுக்கிக் கட்டினால் தான் நல்ல இழுவை நிற்கும்.நூலிலும் தையல் நூல்,ஈர்க்குப் புரி,நாலு புரி,எட்டுப் புரி,பதினாறு புரி,தங்கூசி,மாலை நூல் என்று பல வகை நூல்கள் ஒவ்வொரு பட்டத்தின் அளவிற்கேற்ப பயன்படும்.சின்னப் பட்டத்திற்கு பெரிய நூலைக் கட்டினால் நூலின் பாரம் காரணமாக பட்டம் வண்டி வைத்துக் கொண்டு நிற்கும்.


என் நண்பர்கள், அண்ணர்கள் தங்களது இடுப்பளவு,நெஞ்சளவு,ஆளளவு படலம் எல்லாம் கட்டி ஏற்றுவார்கள்.சில வேளைகளில் அவற்றை, அவற்றின் இழுவையைப் பார்த்தெல்லாம் பொறாமைப் பட்டிருக்கின்றேன்.(நான் ஏத்திறதெல்லாம் சின்னனில வாலாக் கொடியும் கொஞ்சம் வளர்ந்தாப் போல ஒன்று அல்லது ஒன்றரை முழ படலம் தான்.அதுவும் நானே கட்டி ஏத்திறது,பாரத்திலே அரக்கிக் கொண்டே வரும்,ஒரு நாளும் எழும்பாது ம்.....)அப்போதெல்லாம் சிறிசுகளெல்லாம் ”மரியாதையா இழுவை பார்க்க தா.இல்லா விட்டால் நீ பட்டத்தின் நூலைக் கட்டிப் போனாப் போல சுண்ணாம்பைக் கொண்டு வந்து பூசி விடுவன்” என்று வெருட்டுவதும் கூட நடக்கும்.//(சுண்ணம்பு பூசினால் நூல் அறுபடுமோ இல்லையோ என்று எனக்கு இது வரை தெரியாது)



பட்டம் ஏற்றுதலைப் பற்றிச் சொல்லும் போது செந்திலிக்கம் என்ற ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.ஒரு பட்டத்தை முதலில் ஏற்றிய பின் அதன் நூலில் காப்பொன்றைக் கட்டி அந்தக்காப்புக்கு அண்மையாக மற்றப் பட்டத்தை(பொதுவாக கொக்கு)தூங்கவிட்டவாறு இரண்டையும் இழக்கும் போது மேல் காற்றுப்பிடிக்க மற்றையதும் ஏறத் தொடங்கும். எனது அயல் ஊர்களில் பட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து கடைசியாக பெரிய ஒரு அப்பத்தட்டியிலே மின் விளக்குகளையும் கொளுவி இராக்கொடி விடுவார்கள்.இரவிலே பார்க்கும் போது அழகாக இருக்கும். அத்துடன் பட்டப் போட்டிகள் எல்லாம் நடக்கும்.பட்டப் போட்டியிலே 4 தலைக் கொக்கு, 8 தலைக் கொக்கு(ஒரு முறை பிள்ளையார் பட்டம் ஒன்றும் போட்டிக்கு வந்ததை கேள்வியுற்றதாக சின்ன ஒரு ஞாபகம்) என்று வித விதமான் பட்டங்கள் எல்லாம் போட்டியிடும். இப்படியெல்லாம் இரண்டு மாத்திற்கு மேல் பொழுது கழியும்.ஆனால் தைப்பொஙகலிற்கு முதல் நாள் வரை அடிக்கும் காற்று வருடா வருடம் தைப்பொங்கலன்று மட்டும் ஏமாற்றியே வருகிறது. பட்டம் ஏற்றுதலில்,கட்டுதலில் என்று இன்னும் பல நுட்பங்கள்,வித்தைகள் உள்ளன.ஆனால் பதிவின் நீட்சி கருதி தவிர்த்துக் கொள்கிறேன்.


இக் கட்டுரையிலே நான் பாவித்த சில சொற்கள் உங்களது ஊர்களில் வேறு பெயர் கொண்டு அழைக்கப் படலாம்.அதனால் அச்சொற்களுக்குரிய அர்த்தங்களை கீழே தருகிறேன். பிலாந்து- பருந்துப் பட்டம்
design -வடிவங்கள்
விசை -விண்
பிசுங்கான் -உடைந்த கண்ணடித்துண்டு
வாட்டுதல்-பாசல் நாரை குதிக் காலில் வைத்து பிசுங்கானால் நீவி எடுத்தல்.
கூவக்கட்டை-விண்ணின் இரு பட்டமும் நாரை இழுத்துப் பூட்டுவதற்கு பயன் படும் முருக்கஞ் செத்தலாலான தக்கை
இழுவை-பட்டத்தின் இழுவை விசை
முச்சை-நூலை பட்டத்தில் கட்ட பயன் படுவது
அப்பத்தட்டி - பெரிய பட்டம்

7 comments:

  1. //முச்சை கட்டும் போது நூல் முச்சை ,வால் முச்சை என்பன் சமச்சீராக் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப்பக்கம் ஆய்ச்சுக் கொண்டு போய் விடும்.//

    Tikiri மூளை இருந்தால் முச்சை சரியாகப் போடலாம்... ஹி ஹி...

    பிலாந்து என்பதா பிராந்து என்பதா?
    எனக்கு பிராந்துப் பட்டம் என்று அழைத்த ஞாபகம்.
    வடிவாகத் தெரியவில்லை...

    நான் பெரிதாக, தொடர்ச்சியாக பட்டமேற்றுவதில்லை என்றாலும் நிறையவே ஆர்வமுண்டு.
    பழைய ஞாபகஙடகளை வரச்செய்தது...

    நன்றாகவே பட்டம் விட்டிருக்கிறீர்கள்...
    நல்ல பதிவு,...

    ReplyDelete
  2. வடலியூரான் ...
    பட்டம் எழும்பாட்டி வடலிக்கு மேல ஏறி விட்டிருக்கலாமே........கவலைப்படாதிங்க....இப்ப பெரிய பட்டம் விட்டு இருக்கிறிங்களாமே.....அது வெளிநாட்டுக்கு கூட தெரியுதாமே....ம்.....இப்ப
    எழுப்பிடிங்கதானே நல்லா...கலக்குங்க..
    கவனம் வடலியூரான் ...யாரும் வேறை பட்டத்தை வைச்சு உங்கள சீ சீ ... உங்கட பட்டத்தை கொழுவிக்கொண்டு போயிடுவங்க.....ம்..வாழ்த்துக்கள் ...நல்ல படைப்பு

    ReplyDelete
  3. கனக கோபியாரேஉங்களின் கருத்துக்கு நன்றி. பிராந்து என்று தான் தங்கள் ஊரிலும் கூறுவதாக் இன்னுமொரு நண்பர் கூறினார்.எனக்கு எது சரி என்று தெரியாது. ஆனால் நாங்கள் இவ்வாறு தான் கூறுகிறோம்.

    ReplyDelete
  4. கருணையூரான் உங்கள் கருத்து எனக்கு விளங்குகிறது..

    ReplyDelete
  5. பட்டக் காலம் என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாது. பட்டம் அறுத்தால் ஓடுறதும் தொங்கினா கவண் எறிஞ்சு எடுக்கிறதும்... இப்பிடி எத்தினை நினைவுகள். பழைய நினைவுகளை மீட்ட உங்களுடைய பதிவுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்தும் இப்பிடியான இனிய நினைவுகளை மீட்டு எழுதுங்கள்.

    ReplyDelete
  6. பசுமை நினைவுகளை மீட்டினீர்கள் அண்ணா...
    எனக்கும் பட்டம் விட்ட அனுபவம் ரெம்ப குறைவுதான்..
    ஆனா சின்னவயசில் வீட்டுக்கு முன்னால் பெரிய்ய தோட்டம் இருந்ததால் பலரோடு சேர்ந்து விட்டிருக்கிறோம்...
    அப்ப நூல் வாங்க வீ்ட்ல சண்டைபிடிச்சு வாங்கி தராததால் பட்டம் விடும் டிப்பாட்மன்ட்டுக்குள்ள டீப்பா போகேல்ல..
    ஆனா இப்பவும் பரணுக்கு மேல செம்மண் படிந்த பழைய நூல்கட்டை இருக்கு...
    இதைப்பற்றி ஒரு பதிவிட ஆசை.. பார்ப்போம்.

    ReplyDelete
  7. வாங்கோ கூல்போய்,ஓமோம், அப்பிடித்தான் எல்லாற்றை வீட்டையும் நூல் வாங்கித் தர மாட்டுதுகள்,என்ன செய்யிறது மண்ணுக்கையெல்லாம் விழுந்து பிரண்டு அழுது, நடிச்சுத் தான் நூல் வாங்க வேண்டியிருக்கும் சில வேளையிலை... கட்டாயம் பதிவு ஒண்டு போடுங்கோ. பாக்க ஆவலாயிருக்கிறம்

    ReplyDelete