Friday, December 25, 2009

புலம்பெயர் தமிழர் ஒரு சிலரின் புலுடாக்கள்

சங்கம் வளர்த்த தங்கத் தமிழரின் கலாச்சாரத்துக்கு பங்கம் வந்துவிட்டதோ என்று நெஞ்சம் பதைக்கின்றனர் பந்தத்துடன் புலம்பெயர் தமிழர்.அவர்களுக்கு மட்டுமல்ல இங்கேயுமுள்ள பெரும்பாலானவர்களின் அக்கறையுள்ள கவலை தான் அது.கலாசாரத்தை,கற்பை காலங்காலமாக கட்டிக்காத்த தமிழினம் இன்று கற்பில் கறையிருந்தாலும் கண்டு கொள்ளத்தேவையில்லையென்று சொல்லுமளவுக்கு கலாச்சாரத்தில் "முன்னேற்றம்" கண்டுவிட்டது.


பெடியளெல்லாம் தண்ணியடிக்கிறாங்கள்,பெட்டையளெல்லாம் கிளப்பிகொன்டு திரியுறாளுகள் என்றெல்லாம் அங்கலாய்க்கின்றனர்.உண்மை தான் இல்லையென்று சொல்லமுடியாது.ஆனால் சிறிது காலத்திற்கு(5,10 வருடங்களில்) முதலெல்லாம் இங்கெல்லாம் எதுவுமே நடைபெறாதது போலவும் இப்போது தான் அவையெல்லாம் இங்கே முளைத்தது போலவும் கதைப்பது பொறுப்பற்ற, அல்லது சிறிது காலத்திற்கு முன்னர் நடந்தவற்றை அறியாத சிறுபிள்ளைத்தனமான அல்லது அறிந்தும் அறியாதது போல நடிக்கின்ற நல்ல பிள்ளைத்தனமான செயலாகும்.

அப்போதும் நடைபெற்றது.இப்போதும் நடைபெறுகிறது. எண்ணிக்கையடிப்படையில் அப்போது நடைபெற்றவற்றை ஒப்பிட்டால் இப்போது அதிகம் என்று சொல்வதை விட அப்போது நடைபெற்றவற்றை விட இப்போது நடைபெறுபவற்றில் அனேகமானவை வெளியே வருகின்றன என்றும் அப்போது கலாசாரப் பிறழ்வுகளில் ஈடுபட்டவர்களின் வயதுகளுடன் இப்போது ஈடுபடுபவர்களின் வயதை ஒப்பிட்டால் மிகக் குறைவு என்றும் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.இதன்போது என் நண்பனொருவன் சொன்னதையும் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும் என்று கருதுகின்றேன்.ஒழித்து செய்தால் கலாச்சாரம்,வெளியே தெரிந்தால் சீரழிவு என்பது போல் கதைக்கக்கூடாது.இரண்டும் கலாச்சாரச் சீரழிவே.



புலம்பெயர்ந்து,உறவுகளைத்தொலைத்து,குளிரிலும் பனியிலும் துவண்டெழும்பி, தனது சமூகத்திற்காக ஓடாய்த்தேய்ந்து உழைத்து அனுப்பும் போது அந்த சமூகம் சார்ந்த சில விரும்பத்தகாத செய்திகள் சில வரும்போது,கோபம் கொப்பளிக்கத்தான் செய்யும்.அடிமனது கறுவத்தான் செய்யும்.நான் இல்லையென்று சொல்லவில்லை.அந்த கோபத்தில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.உங்களுடைய உழைப்பு வீணடிக்கப்படும் போது அதிலுள்ள வேதனையை,அதனால் வருகின்ற வெறியை என்னால் உணர முடிகிறது.இங்கு நான் எல்லா புலம்பெயர் சகோதரர்களையும் சுட்டிக்காட்டவில்லை. அண்மையில்,மிக அண்மையில் சென்ற சிலரைப்பற்றி, மிகச்சிலரைப் பற்றித்தான் எனது பதிவு அமையவிருக்க்கின்றது.எனக்கு மட்டுமல்லாமல் என் போன்ற சக இளைஞர்களின் உள்ளத்து உணர்வை,அடிமனதில் உள்ளதை என் பதிவினூடு பதிவேற்றலாம் என்பது எனது சிறிய அவா.


"இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறம் இஞ்சை இருக்கு மட்டும் என்னத்தைப் புடுங்கினவங்கள்? அங்கை போனவுடன் எங்கேயிருந்து உந்தப் "பற்றெல்லாம்" வந்தது?தாங்கள் இஞ்சை இல்லாததால ஏதோ ஒரு முழம் குறைஞ்சு போட்டது போலயல்லோ கதைக்கிறாங்கள்." இவையெல்லாம் இங்குள்ளவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது அடிக்கடி தங்களுக்குள் கதைத்துக் கொள்பவைதான்.ஏன் அவர்கள் இப்படிக் கதைக்க வேண்டியேற்படுகிறது?அதற்கு காரணம் யார்?அல்லது அவர்கள் தான் அறியாமையில் கதைக்கின்றார்களா?


நான் ஏலவே சொன்னது போல உங்களை,உங்களது உழைப்பை,உங்களது 'பங்களிப்பை' நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் இங்கிருந்த போதெல்லாம் கலாசாரச் சீரழிவைக் க்ண்டு கொதித்தெழுந்தவர்கள் போல கதைப்பது(உண்மையிலேயே கொதித்தவர்கள் மன்னிக்கவும்)கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் மற்றவர்களுக்கு தெரியாதென்பது போலாகும்.


நீங்கள் இங்கிருந்த போதும் கலாசாரம் "கொடிகட்டிப்" பறந்திருக்கலாம்.உங்களுக்கு உங்கள் சமூகப் பற்றால் உள்ளுக்குள்ளே மட்டுமே நீங்கள் கறுவிக் கொண்டிருந்திருக்கலாம். உங்கள் கறுவலை காரியத்தில் காட்டிட காலம் கை கொடுக்காமல் இருந்திருக்கலாம். உங்களை எவ்வாறு சூழ்நிலை அன்று தடுத்ததோ அதே சூழ்நிலை தான் இப்போது இங்குள்ளவர்களையும் கட்டிப்போட்டிருக்கின்றது என்பதை ஏனோ வசதியாக உணரமறுக்கின்றீர்கள்.

இங்குள்ளவர்கள் கலாசாரம் அவர்கள் கண்முன்னே அழிந்து போவதை கண்டு களிப்பதாக அல்லது கண்டும் காணாதது போல பொறுப்பற்றுத் திரிவதாக தவறான கற்பிதம் கொள்ளவேண்டாம்.எங்களுக்கும் உங்களை போல உணர்வுகள் உண்டு, பொறுப்புக்கள், 'பற்றுதல்' எல்லாம் உண்டு.ஆனால் எந்த சூழ்நிலை இவற்றினின்றும் உங்களை தடுத்ததோ அதே நிலை தான் இன்று இங்குள்ளவர்களுக்கும்.அது அவர்கள் தப்பல்ல.


அதே நேரம் கலாசாரம்,கலாசாரம் என்று இங்குள்ளவற்றை மட்டுமே தூக்கிப்பிடிம்போது உங்குள்ளவற்றை ஏன் வசதியாக மறந்து விடுகின்றீர்கள்.உங்கு ஒன்றுகூடல்களிலும்,வைபவங்களிலும் அடிக்கும் கும்மாளங்களில் மட்டும் என்ன கலாசாரம் காக்கப்படுகின்றதா?அங்கு கெட்டுச் சீரழியும் ஒரு சகோதரனோ,சகோதரியோ எங்களைச் சார்ந்தவனே.எமது சமூகத்தினனே.இவ்வாறு கூறி நான் இங்கே நடக்கும் கலாசாரச் சீரழிவை மறைமுகமாக ஆதரிப்பதாக தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம்.


அங்கே அடிக்கப்படும் கொட்டத்தால் வெள்ளைக்காரனின் கலாசாரம் சீரழிக்கப்படவில்லை.இங்கோ,உங்கோ,எங்கோ கலாசாரச் சீர்கேடுகள் அரங்கேறினாலும் சீரழியப் போவது எங்கள் கலாச்சாரமே.ஆனால் அக் கலாசாரத்தை காப்பது யார் என்பது தான் பிரச்சினை.கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு இப்போது 'பாதுகாவலர்கள்' இல்லவிட்டாலும் ஒவ்வொருவரும் தம் பொறுப்புணர்ந்து செயற்பட்டால் தான் கலாசாரத்தைக் காக்கமுடியும்.தனி மனித சுதந்திரம் பற்றியெல்லாம் அதிகம் பேசப்படும் இன்றைய காலங்களில் நீ இவ்வாறு தான் இருக்க வேண்டும்,இன்ன உடை தான் உடுத்த வேண்டும் என்றெல்லாம் கூறமுடியாது.

தனிமனிதர்களின் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற நண்பர்கள், சமூகம், சினிமா,தொலைக்காட்சி,ஒன்றுகூடல்கள்,பொது வைபவங்கள் என்பன அவர்களில் கலாசாரம் சம்பந்தமான எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தவதைத் தவிர்க்கவேண்டும்.அத்துடன் நாம் எல்லாரும் பொறுப்புணர்ந்து எம்மை,எமது குடும்பத்தை,நண்பர் வட்டத்தை, கிராமத்தை, பிரதேசத்தை,சமூகத்தை கலாசாரப் பிறழ்விலீடுபடுவதைத் தவிர்த்து,அவர்களின் எண்ணங்கள், பாதையை மாற்றி,அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்கின்ற தப்புக்கள் எவ்வாறு சமுகத்தைப் பாதிக்கின்றன என்பதை உணர்த்த வேண்டும்,இது தனியே நீங்களோ,நாங்களோ செய்யக்கூடியதொன்றல்ல. ஒவ்வொருவர் மீதும் விரலைச்சுட்டிக் காட்டி அவரவர் பொறுப்புக்களைத் தட்டிக் கழியாமல் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.என்ன சொல்லுறியள்?.(புலம் பெயர் நண்பர்களே சிலரால்,மிகச்சிலரால் சில இடங்களில் சற்று காரமாக நீங்கள் தாக்கப்பட்டிருந்தால் மன்னியுங்கள்.மீண்டும் சந்திப்போம்)

26 comments:

  1. மழை மாதிரி பொழிஞ்சு விட்டீங்க வடலியூரான் ....ம்....பாப்பம் எப்படி கருத்துக்கள் வருது எண்டு......

    ///கற்பை காலங்காலமாக கட்டிக்காத்த தமிழினம்///
    கேக்க நல்லாதான் இருக்கு ......

    நானும் ஒரு புலம் பெயர் தமிழன் தான் ...நாலு கண்ணாடி சுவருக்குள் நானும் கணனியும் தான் ....கருத்துகள் முட்டி மோதினால் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே,,
    ஆனால் அதற்காக,, சீரழியும் சமுதாயம் கைவிடப்பட வேண்டுமா?? கை கொடுப்பதற்கு முயற்சிப்பது தவறா???
    முன்பு நடந்தது என்பதற்காக இப்போதும் நடக்க அனுமதிக்க வேண்டுமா??
    sex என்பது ஒரு புனிதமான விடயம் அது வீட்டுக்குள் கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் வரை,, அதுவே வீதிக்கு வந்தால்,, உலகம் தாங்குமா??
    அவ்வாறுதான் எம் சமுதாய கலாச்சாரங்களும்,, அவை பேணப்பட வேண்டும்,, போற்றப்பட வேண்டும்,,
    அதற்காக பழமை வாதிகளாக இருக்க சொல்லவில்லை,,
    புதுமையை புகுத்துங்கள் சமுதாயத்திற்கு புத்துணர்வை ஊட்டுங்கள்,,
    ஆனால் பண்பாடு சீர்குலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,,

    ReplyDelete
  3. /////"இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறம் இஞ்சை இருக்கு மட்டும் என்னத்தைப் புடுங்கினவங்கள்? அங்கை போனவுடன் எங்கேயிருந்து உந்தப் "பற்றெல்லாம்" வந்தது?தாங்கள் இஞ்சை இல்லாததால ஏதோ ஒரு முழம் குறைஞ்சு போட்டது போலயல்லோ கதைக்கிறாங்கள்." இவையெல்லாம் இங்குள்ளவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது அடிக்கடி தங்களுக்குள் கதைத்துக் கொள்பவைதான்.ஏன் அவர்கள் இப்படிக் கதைக்க வேண்டியேற்படுகிறது?அதற்கு காரணம் யார்?அல்லது அவர்கள் தான் அறியாமையில் கதைக்கின்றார்களா?////

    இவ்வாறு கதைப்பவர்கள் மட்டும் ஒழுங்கானவர்களா நண்பரே???
    நம் சமுதாயத்திட்காக ஏதாவது செய்தவர்களா?? அல்லது ஏதாவது செய்ய முயற்சி எடுப்பவர்களா??
    இந்த கேள்விக்கு விடை கூற அதில் யாருக்காவது முடியுமா??

    நீங்கள் சொன்னது போல்,, சமூக பற்று அனைவருக்கும் உண்டு,,
    ஆனால் வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் வாய்க்கவேண்டும்,, அவர்களுக்கு கிடைக்கவில்லை அதனால் அவர்கள் வெளிக்காட்டவில்லை என்பது சரிதான்,, ஆனால் வெளிக்காட்டுபவர்களை கிண்டலடிப்பதும் அதனை எதிர்ப்பதும் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்???

    ReplyDelete
  4. வடலியூரான்...
    பிரச்சினை என்னவென்றால் உண்மைகளை ஒப்புக்கொள்ள யாரும் தயாராயில்லை என்பதே வலிக்கிற நிஜம். கலாசாரம் என்கிற பெயரில் சிலர் திரைமறைவில் செய்கிற அட்டகாசங்கள் தட்டிக்கேட்கப்படாமலே போய்விடுகிறன. அவற்றை வெளிக்கொணர்தல் கலாசாரத்தின் மீது கறை ஏற்படுத்தும் என்று வாதிடுவது என்னால் ஒப்புக்கொள்ளமுடியாமல் இருக்கிறது. கலாசாரம் என்பது ஒரு மாறிலி அல்ல. அது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது என்பதையும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பாங்கு வளரவேண்டும் என்பதுமே என்னுடைய வாதம்.

    பொடியன்கள் குடிப்பது தவறு என்கிற சண்டைக்கு நான் வரமாட்டேன். என்னைப் பொறுத்தவரை குடி நிதானமிழக்க வைப்பது. ஆகவே அது தவறு என்று அதனின்றும் விலகியிருக்கிறேன். நான் நிதானமிழக்கமாட்டேன் என்கிற நம்பிக்கையுள்ளவன் குடிப்பதில் தப்பேதுமில்லை என்பது என் கருத்து. ஆனால் அப்படிக் குடிப்பவன், இன்னொரு சக பிரஜைக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நிச்சயம் தட்டிக்கேட்கப்படவேண்டும். அதே வேளை செல்லம்மா சொல்லியிருக்கிற sex என்பது புனிதமான விடயம் என்கிற கட்டமைப்பை மறுத்தாலும், அது வீதிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற அவரது கருத்தை நான் வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.

    அடுத்தது, 'இந்தக் கருத்தை இன்னார்தான் சொல்லவேண்டும்' என்கிற அமைப்புகள் பிழை. அதைத் தவிர்க்கவேண்டும். புலம் பெயர்ந்தவனும், புலத்தில் இருப்பவனும் யார் வேண்டுமானாலும் ஒரு விஷயம் பற்றிய தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதில் மறுப்பேதும் இருக்கக்கூடாது. ‘நீ யோக்கியனா?' என்கிற கேள்வி, ஆரோக்கியமான விவாதத்துக்கான கேள்வி இல்லை. அதைத் தவிர்த்து, விவாதங்கள் மூலம் தீர்வுகளை நோக்கி நடைபோடலாம்.

    ReplyDelete
  5. திருத்த வெளிக்கிடுபவர்களைக் கிண்டலடிப்பது தவறு. ஆனால், விமர்சித்தேயாகவேண்டும். உதாரணமாக ஒரு சம்பவம்.

    புகழ்பெற்ற எம்.பி. ஒருவர் தன்னுடைய பல்கலைக்கழகக் காலத்தில் கள்ளச்சாராய ஒழிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். அந்நேரம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நீதித்துறையைச் சேர்ந்த பலரையும் கூட்டி, இந்த விஷயத்தில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் நாங்கள் நடந்துகொண்டால்தான் நல்லது. ஆகவே இந்த நீதித்துறை எங்களுக்கு உதவ வேண்டும். கொஞ்சம் சட்டத்துக்குப் புறம்பாக எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நீதித்துறை சார்ந்தவர்களும் சம்மதித்தார்கள். எம்.பி. தலைமையிலான மாணவர் குழுவும் கள்ளச்சாராய ஒழிப்பில் மும்முரமாக இறங்கினார்கள். காய்ச்சுபவர்களுக்கு அடியும் கொடுத்தார்கள். அப்படி அடிக்கப்போன இடத்தில் ஒரு வசமான குழுவிடம் மாட்டி நல்லாய் அடியும் வாங்கினார்கள். அப்படி எம்.பி.க்கும் மாணவர்களுக்கும் அடித்த குழு அவர்களுக்குச் சொன்ன சேதி என்ன தெரியுமா?

    ‘முதலில உங்கட கம்பசைச் சுத்தி இருக்கிற பியர்க் கடையளை மூடீற்று எங்களை அடிக்க வாங்கோ. மற்றபடி இனி இந்தப் பக்கம் வந்தால் ஒருத்தரும் உயிரோடு போகேலாது'.

    கள்ளச்சாராய ஒழிப்பு அன்றோடு கைவிடப்பட்டது. ஏனென்றால், பியர் இல்லாமல் எம்.பி. இல்லை. இதுதான் இன்றைக்குக் கலாசாரம் பேணுவோம் என்று குரல் கொடுப்பவர்கள் முக்கால்வாசிப்பேரின் முகம்.

    ReplyDelete
  6. மற்றது புலத்தில் நடந்த ஒரு அபத்தமான கலாசாரச் சீர்திருத்தம் பற்றியும் விவாதங்கள் தேவை

    முழுக் கால்சட்டை- கலாசாரம்
    அரைக் கால்சட்டை- கலாசாரம்
    முக்கால் கால்சட்டை- கலாசாரச் சீர்கேடு

    எங்கே, யார், எப்போது போட்ட சட்டம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால் அபத்தம்

    ReplyDelete
  7. //// 'இந்தக் கருத்தை இன்னார்தான் சொல்லவேண்டும்' என்கிற அமைப்புகள் பிழை. அதைத் தவிர்க்கவேண்டும். புலம் பெயர்ந்தவனும், புலத்தில் இருப்பவனும் யார் வேண்டுமானாலும் ஒரு விஷயம் பற்றிய தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதில் மறுப்பேதும் இருக்கக்கூடாது. ‘நீ யோக்கியனா?' என்கிற கேள்வி, ஆரோக்கியமான விவாதத்துக்கான கேள்வி இல்லை. அதைத் தவிர்த்து, விவாதங்கள் மூலம் தீர்வுகளை நோக்கி நடைபோடலாம்.///

    நீங்கள் சொல்வது மிகச்சரியான விடயம் நண்பரே,,
    ஆனால் நம்மவர்கள் எல்லாம் தமக்குத்தான் தெரியும் அவர்களிற்கு எடுத்து சொல்ல என்ன தகுதி எங்களுக்கு இருக்கிறது என்ற தோரணையில் தான் பார்க்கிறார்களே தவிர யாரும் தவறுகளை ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை,,
    இவர்களுக்கு பிரச்சனைகள் பெரிதாக தெரியவில்லை,, பிரச்னையை பற்றி கதைப்பவர்களைத்தான் ஒரு பிரச்சனையாக பார்க்கிறார்கள்,,
    அந்த நிலையை மாற்ற சொல்லித்தான் நான் கேட்கிறேன்,,
    தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்,, திருத்த முயற்சி செய்யுங்கள்,,
    இரண்டுமில்லாமல்,, சுட்டிக்காட்டுபவர்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை,,

    ReplyDelete
  8. ///முழுக் கால்சட்டை- கலாசாரம்
    அரைக் கால்சட்டை- கலாசாரம்
    முக்கால் கால்சட்டை- கலாசாரச் சீர்கேடு///

    தலை இருக்கும் பொது வால் ஆடிய சந்தர்ப்பங்கள் எம் மண்ணில் நிறையவே உண்டு,,
    இதுவும் அதில் ஒன்று,,

    ReplyDelete
  9. ///கலாசாரம் என்கிற பெயரில் சிலர் திரைமறைவில் செய்கிற அட்டகாசங்கள் தட்டிக்கேட்கப்படாமலே போய்விடுகிறன. அவற்றை வெளிக்கொணர்தல் கலாசாரத்தின் மீது கறை ஏற்படுத்தும் என்று வாதிடுவது என்னால் ஒப்புக்கொள்ளமுடியாமல் இருக்கிறது.///
    கலாசாரம் என்பது ஒரு மாறிலி அல்ல. அது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது என்பதையும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பாங்கு வளரவேண்டும் என்பதுமே என்னுடைய வாதம்.

    கலாச்சார மீறல்கள் வெளிக்கொண்டுவரப்பட்டால்தான் கறைகள் களையப்படும்,, உண்மை நிலை வெளிப்படும்,, அதனால் கலாச்சாரம் சீரழியும் என்ற வாதத்தை நானும் மறுதலிக்கிறேன்,,
    ஆனால்,,
    எம் சமுதாய கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும்,, போற்றப்பட வேண்டும்,,
    அதற்காக பழமை வாதிகளாக இருக்க சொல்லவில்லை,,
    புதுமையை புகுத்துங்கள் சமுதாயத்திற்கு புத்துணர்வை ஊட்டுங்கள்,,
    ஆனால் பண்பாடு சீர்குலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,,

    ReplyDelete
  10. நந்தரூபன்December 28, 2009 at 3:30 AM

    பொடியள் எல்லரும் ஒரே கருத்தைத்தான் கொண்டு இருக்கிறீர்கள்!!!
    என்னெ ஒரு வேறுபாடு , ஒவொருவருடைய மட்டமும்(எனக்கு சரியான பதம் வரலை) வேறுபடுகிறது!!!

    சிலர் கொஞ்சம் முன்னுக்கு, சிலர் கொஞ்சம் பின்னுக்கு!!!!

    ஆனால் எவரும் சமுதாயத்தை திருத்தும் பணியை ஆரம்பிக்க தயாரில்லை!!!
    அதர்க்கு அவர்கள் தங்கள் கைகளும் கறை படிந்தவைதானோ என்று பயப்படுகிறார்கள்!!!!


    வேணு உன் நண்பர்கள் மத்தியில் எத்தனை பொன்ஸ் இருக்காங்கள்????????????????????????

    ReplyDelete
  11. ////வேணு உன் நண்பர்கள் மத்தியில் எத்தனை பொன்ஸ் இருக்காங்கள்????????????????????????///

    உங்கள் கேள்வி புரியவில்லை நண்பரே,,,

    ReplyDelete
  12. கருணையூரான் ஒரு நக்கலோடை பிள்ளையார் சுழியைப் போட்டிட்டு போட்டியள்.இஞ்சை பின்னூட்டமிட்டுத் தள்ளியிருக்கிறார்கள் கிருத்திகனும் செல்லம்மாவும்.அவ்ர்களுக்க்ப் பதிலளிக்க முதல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே.

    ReplyDelete
  13. நண்பரே செல்லம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.நான் நிச்சயமாக உங்கள் வருகையை எதிர்பார்க்கவேயில்லை.முதலில் எனது பதிவை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள் என்று கூறுங்கள் நண்பரே.அறிய ஆவலாக உள்ளது.சரி நாம் விடய்த்திற்கு வருவோம். உமது முதலாவது பின்னூட்டத்துடன் நானும் பூரண்மாக ஒத்துப் போகின்றேன்.நம் சமுகம் எமது கண் முன்னாலேயே எமது காலத்திலேயே சீரழிய நாம் நிச்சயமாக அனுமதிக்ககூடாது.சீரழிந்துகொண்டிருக்கும் நமது சமூகம் உம்மைப் போன்ற உள்மனதில் உறுதியுள்ள சமூகப்ப்ற்றுள்ள இளைஞர்களையே வேண்டிநிற்கின்றது.எமது கலாசாரங்கள்,விழுமியங்கள் நிச்சயமாகப் பாதுகாக்கப் படவேண்டியவை.அதில் நான் மிக உறுதியாக உள்ளேன்.

    ReplyDelete
  14. நண்பரே எனது //"உவங்கள் என்னதைப் புடுங்கினவங்கள்...".என்பது உங்களையோ அல்லது வேறு புலம்பெயர் நண்பர்களையோ பாதித்திருந்தால் என்னை மீண்டும் மன்னித்துவிடுங்கள்.சற்று காரமான வசனம் தான்.இங்கிருப்பவர்கள் சமூகம் சார்ந்து ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் அது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு அவர்க்ள் அச்சுறுத்தலுக்குள்ளாக வாய்ப்பு உள்ளது என்பதை எனது ஒன்பதாவது பந்தியில் நான் கூறியுள்ளேன்.மீண்டும் வாசித்துப் பாரும்.ஆனால் இதையே சாக்காக வைத்து பெரும்பாலான எம்மவர்கள் காலத்தையோட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.எனது நோக்கம் ஒருபோதும் கிண்டலடிப்பதோ எதிர்ப்பதோ இல்லை.ஆனால் எனக்கு கோழியடித்து தின்றுவிட்டு பட்டு வேட்டியும் கட்டி பதக்கஞ் சங்கிலியும் போட்டு கொண்டு கோவில்லை போய் நின்று கொண்டு அரோகரா என்று ம்ற்றவனுக்குக் கேட்க கத்துறது மாதிரியான ஆக்களை துளியும் பிடிக்காது.இங்கே இருக்கும் போது செய்வதை செய்துவிட்டு பிறகு அப்பிடிச் செய்யாதே என்று புத்திமதி சொல்வது எனக்கு பிடிக்கவில்லை.ஆனால் அது நிச்ச்யமாக் நீங்கள் இல்லை நண்பர்களே.என்ன செய்வது ஒரு சிலரால் எல்லாரையும் சுட்டவேண்டிவந்தமைக்கு மன்னியுங்கள்.ஆனால் அவர்கள் உண்மையாகவே திருந்தியிருப்பர்களேயானால் நான் நிச்சயமாக வரவேற்பேன். தவ்றுவிடுவது மனித இயல்பு தானே.

    ReplyDelete
  15. //கலாசாரம் என்பது ஒரு மாறிலி அல்ல. அது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது என்பதையும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பாங்கு வளரவேண்டும் என்பதுமே என்னுடைய வாதம்.

    உங்களுடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன் நண்பரே கிருத்திகன் .ஆனால் நண்பரே நாங்கள் "பன்னாடைகளாகவே" இருக்கிறோம்.எவ்வளவு நல்ல விட்யங்கள் வேறு கலாசாரங்களில் உள்ளன ஆனால் நாம் அவற்றையெல்லாம் விட்டு விட்டு ஏலவே உள்ள எமது கலாசாரத்தின் அடிக்கட்டுமானத்தையே ஆட்டங்காண வைக்கின்ற விடயங்களைச் சேர்த்துக் கொண்டு நாங்கள் கலாசாரத்தில் அபிவிருத்தியடைகின்றோம் என்று சொன்னால் அது ஏற்கப்படக் கூடியதல்ல.மற்றையது உமது கால்சடை,அரைசட்டை அவ்வளவாக விளங்கவில்லை.விரிவாக ஒரு பதிவிடவும்.

    ReplyDelete
  16. ஆனால் கீத் என்க்கு எனது சமூகம் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதுமைவாதத்தையும் கலாசாரம் போன்ற வற்றில் முற்றுமுழுதாக பழைமைவாதமல்லாமல் சில விட்யங்களில் தளர்வுகளையும்,நெகிழ்ச்சிகளையும் காட்டி சில விடய்ங்களை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதியே நான் விரும்பிகிறேன்.

    ReplyDelete
  17. இறுதியாக யார் கருத்து சொல்லவேண்டும் யார் திருத்த வேண்டும் என்றெல்லாம் ஒன்றும் தேவையில்லை.யார் குற்றினாலும் அரிசியானால் சரி அவ்வளவு தான்.எமது சமூகம் காதில் போட்டு ஆரோக்கியமான ச்மூகமாய் மாறினால் நல்லது தானே.

    ReplyDelete
  18. //தங்கள் கைகளும் கறை படிந்தவைதானோ என்று பயப்படுகிறார்கள்!!!!
    நண்பர் நந்த்ரூபனே அதுவும் மெய் தான். மறுதலிக்க முடியாது

    ReplyDelete
  19. நண்பர்களே உங்கள் ஆரோக்கியமான் பின்னூட்டங்கள்,விமர்சன்ங்களுக்கு மீண்டும் ந்ன்றிகள். நிச்ச்யமாக உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.எதிர்மறையாக இருந்தாலும் பரவாயில்லை.ஆரோக்கியமான விமர்சனங்களை நான் எதிர்பார்க்கின்றேன்

    ReplyDelete
  20. ////நான் நிச்சயமாக உங்கள் வருகையை எதிர்பார்க்கவேயில்லை.முதலில் எனது பதிவை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள் என்று கூறுங்கள் நண்பரே.அறிய ஆவலாக உள்ளது.////

    நாம் தொலைதூரத்தில் இருந்தாலும்,,
    எண்ணங்கள் நம்மை ஒன்று சேர்க்கும் நண்பரே,,,

    ReplyDelete
  21. //இங்கிருப்பவர்கள் சமூகம் சார்ந்து ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் அது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு அவர்க்ள் அச்சுறுத்தலுக்குள்ளாக வாய்ப்பு உள்ளது///
    ///ஆனால் இதையே சாக்காக வைத்து பெரும்பாலான எம்மவர்கள் காலத்தையோட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை////

    எனக்கும் சில அனுபவங்கள் உள்ளது நண்பரே,,
    எனக்கும் அங்குள்ள நிலைமை பற்றி தெரியும்,,,
    இரண்டாவதாக நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை நானும் ஆமோதிக்கிறேன்,,,
    இதற்காக அவர்களையும் முழுதாக குற்றம் சொல்ல முடியாது,, எவருமே நேரடியாக பாதிக்கப்படும் வரை அவர்களுக்கு உண்மைநிலை புரியாது,,
    அனைத்திற்கும் காலம் பதில் சொல்லட்டும்,,

    ReplyDelete
  22. ///நண்பரே நாங்கள் "பன்னாடைகளாகவே" இருக்கிறோம்.எவ்வளவு நல்ல விட்யங்கள் வேறு கலாசாரங்களில் உள்ளன ஆனால் நாம் அவற்றையெல்லாம் விட்டு விட்டு ஏலவே உள்ள எமது கலாசாரத்தின் அடிக்கட்டுமானத்தையே ஆட்டங்காண வைக்கின்ற விடயங்களைச் சேர்த்துக் கொண்டு நாங்கள் கலாசாரத்தில் அபிவிருத்தியடைகின்றோம் என்று சொன்னால் அது ஏற்கப்படக் கூடியதல்ல.///

    அற்புதம் நண்பரே,,
    இதையே தான் என் வாதமாக நானும் முன்வைக்கிறேன்,,,

    ReplyDelete
  23. நண்பர்களே ! அனைத்தையும் வாசித்தேன் ...
    இவர்களின் கருத்துக்களில் இருந்த "கலாச்சாரம்" என்ற சொல்லின் உண்மையான வரைவிலக்கணம் என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன் ..விடை கிடைத்தால் மீண்டும் வருவேன் ....உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க...........

    ReplyDelete
  24. பதிவையும் வாசித்தேன். கருத்துக்களையும் வாசித்தேன். வெளியே தெரியாதவரை யாவரும் உத்தமனே என்ற வாசகமும் ஊருக்குத் தான் உபதேசம் எனக்கில்லை என்ற வாசகமும்தான் நினைவுக்கு வருகிறது. (ஒருத்தருக்கும் இந்தத் தொப்பி அளவில்லாவிடில் நானே போட்டுக் கொள்கிறேன்...)

    ReplyDelete
  25. கருணையூரான் உங்கள் கேள்வியின் ஆழமும் அர்த்தமும் எனக்கு புரிகிறது.எனக்கும் தெரியவில்லை.கலாசாரத்தின் அர்த்தத்தை

    ReplyDelete
  26. பால்குடி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஏன் நீங்களே வலிந்து போய் தொப்பியை எடுத்துப் போடவேண்டும் உங்களூக்கு அளவில்லாத போது.

    ReplyDelete