Sunday, December 12, 2010

திருவெம்பா

திருவெம்பாவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறம்,இதென்ன திருவெம்பா?,இப்பிடியொரு சொல்லை நாங்கள் கேள்விப்படவேயில்லையே எண்டு உங்களிலை கொஞ்சப் பேர் நினைக்க வெளிக்கிட்டுடிவியள் எண்டு எனக்குத் தெரியும்.இரண்டும் ஒண்டு தான்.அந்த "வை" யை உச்சரிக்கிறதிலை எங்களுக்கு ஒரு பஞ்சி.பின்னை அது தான் திருவெம்பா எண்டு சொல்லித் தான் சொல்லுவம்.


மார்கழி மாசத்திலை தான் திருவெம்பா வரும்.அதுவும் அந்தக் குளிருக்கை விடிய வெள்ளனவெல்லாம் கோயிலுகளிலை பூசைகள் நடக்கும்.இந்தமுறையும் திருவெம்பா தொடங்கப் போகுதாம் எண்டு போன வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலிலை அறிவிச்சது என்ரை காதிலை கேட்டிச்சுது.அது தான் எனக்கும் முந்தின எங்கடை காலத்து திருவெம்பாப் புதினங்களை ஒரு பதிவா எழுதிப் போடுவம் எண்டொரு யோசனை வர,சட்டுப் புட்டெண்டு இந்தப் பதிவை எழுதிப் போடுறன்.



திருவெம்பா எண்டு சொல்லிச் சொன்னால் ரண்டு விசயம் ஞாபகத்துக்கு வரும்.ஒண்டு எல்லாக் கோயிலிலையும் அவல்,கடலை எண்டு கன சாமானுகள் சாப்பிடக் குடுப்பினம்.மற்றது சங்கூதிப் பண்டாரம்.முதல்லை அவல்,கடலை அலுவலைப் பாத்திட்டு,பிறகு சங்கூதிப் பண்டாரத்தைப் பாப்பம்.ஏனெண்டால் சாப்பாட்டை காத்திருக்க வைக்கக் கூடாதெண்டு சொல்லுவினம்.



முந்தியெல்லாம் சின்னனிலை, ஒராம்,இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கை,திருவெம்பாக் காலத்திலை விடியக் காலமை 5 மணிக்கே அம்மாவோ,அம்மம்மாவோ அடிச்சு எழுப்பிப் போடுங்கள்."அங்கை கோயில்லை பூசையாகுது.இஞ்சை நீ படுத்துக் கிடக்கிறாய் எண்டு விடியவெள்ளனவே பேச்சு விழத் தொடங்கீடும். நாங்களும் எழும்பி,நித்திரை தூங்கித் தூங்கிப்,பல்லை மினுக்கி,முகத்தைக் கழுவிப் போட்டு,குளிக்கப் பஞ்சியாயுமிருக்கும் அதே நேரம் பயங்கர குளிராயுமிருக்கும்,குளிக்கவே மனம் வராது எண்டாலும் சும்மா ஒரு போமாலிற்றிக்காக(formality)கேக்கிறது.."... என்ன குளிக்கிறதோ.." எண்டு..."...ஆய்.. சின்னப் பிள்ளையள் தானே.. அது காரியமில்லை.." முகத்தைக் கழுவிப் போட்டுப் போ எண்டு அம்மம்மா சொல்லுவா.சிலவேளை அம்மா சுடு தண்ணி வைச்சுத் தருவா.அதுக்கை கொஞ்சம் பச்சைத் தண்ணியை விட்டு,ஒரு வாளிக்கை கலந்து போட்டு,ஒரு வாளித் தண்ணியிலையே குளிச்சுப் போட்டுக் கோயிலுக்குப் போறது.எப்பிடிப் பாத்தாலும் சிலவேளையிலை அரைக் குளிப்பு இன்னும் சில நாள் அதுவும் இல்லை.அவ்வளவு தான்.



பண்டாரி அம்மன் கோவிலை 5 மணிக்குப் பூசை தொடங்கும்.அங்கை தான் முதல்ப் போவம்.ஒரு லக்ஸ்பிறே அல்லது அங்கர் பாக்(Bag) ஐயும்(அந்தக் காலங்களிலை உந்தச் சொப்பின் பைகளின்டை பாவனை மிச்சும் குறைவு)மடிச்சுக் காச்சட்டைப் பொக்கற்றுக்கை வைச்சுக் கொண்டு தான் இந்த வானரப் படையள் கோயிலுக்குப் படையெடுக்குங்கள். போனவுடனை பாக்கிற முதல் வேலை இண்டைக்குச் சுவாமிக்கு என்ன படைச்சுக் கிடக்கிறது எண்டு பாக்கிறது தான்."...ஆ .ஆ.கடலை கிடக்குது..அவலுக்கு கக்கண்டு போட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது...வெள்ளையாக் கிடக்குது...இஞ்சாலை கிடக்கிறது சக்கரைப் பொங்கல்...மோதகமும் கிடக்குது.கனக்கக் கிடக்குது... ஆளுக்கு ரண்டுப் படி குடுப்பினமோ...?அதுக்கிடையிலை கணக்குப் போட்டுப் பாக்கிறது..கோயிலிலை ஒரு 50,60 சனம் நிக்குது..எல்லாருக்கும் ரண்டுப் படி குடுத்து,பேந்து உபயகாரரும் தங்கடை வீட்டையும் கொஞ்சம் மோதகம் கொண்டு போகோணும்.. அப்பிடிப் பாத்தால் உவ்வளவும் காணாது.ஒரு வேளை ஐயர் உபயகாரருக்கெண்டு புறிம்பா உள்ளுக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறாரோ தெரியாது...சரி அதை விடுவம்...பெரியாக்களுக்குக் குடுக்காட்டிலும் சின்னப் பெடியளுக்கெண்டாலும் குடுப்பினம்...ம்.. பாப்பம்.பிறகு இஞ்சாலை வைரவருக்கு,சின்ன வடை மாலை தானே போட்டுக் கிடக்குது.உந்த வடை மாலையிலை 20 வடையும் வராது போல கிடக்குது.அப்ப உதைச் சனத்துக்குக் குடுக்க மாட்டினம் போல கிடக்குது.அங்காலை 2 தாம்பாளத்துக்கை கதலி வாழைப் பழமும் அடுக்கி வைச்சுக் கிடக்குது.அப்ப அதுவும் குடுப்பினம்.இந்த மனக் கணிப்பெல்லாம் கோயிலுக்குப் போன கையோடையே நாங்கள் செய்து போடுவம்.




அங்காலை ஒரு பக்கத்தாலை பூசையள் நடந்து,திருவெம்பாப் பாட்டுப் படிக்க வெளிக்கிட்டிடுவினம்.சிலவேளை ஐயரே படிப்பார்.இல்லாட்டில் ஆம்பிளையள், பெடியள்,பொம்பிளையள் எண்டு நல்லா "..ஆ. ஆ..." எண்டு இழுத்துப் பாடக் கூடினாக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டா,ஒரு ஓடரிலை படிப்பினம்."...ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்." எண்டு தொடங்க,எங்களுக்கு,"எப்ப உந்தப் பாட்டெல்லாம் முடிச்சு அவல் கடலை தரப் போறியள் எண்டு யோசனை ஓடிக் கொண்டிருக்கும்.



இடையிலை ஒரு பாட்டிலை ஒரு வரி வரும்..".. போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்.." எண்டு.நாங்கள் சின்னப் பெடியள் உதைக் கேட்டிட்டு, எங்களுக்கை சிரிச்சுக் கொள்ளுவம்.(பிழையா யோசிச்சுப் போடாதையுங்கோ.எங்களுக்கு உதை மாதிரி ஒரு கூடாத சொல்லொண்டிருக்குதெண்டு அந்தக் காலத்திலேயே தெரியும்.அவ்வளவு தான்.அட.. சொன்னால் நம்புங்கோப்பா.அடம் பிடிக்கிறியளப்பா..ம்ம்)அதெல்லாம் முடிஞ்சு,"போற்றி அருளகநின் ஆதியாம் பாதமலர்,போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்..........போற்றியாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்.."எண்டு 20 ஆம் பாட்டும் முடிய பெடியளின்ரை முகத்தில சந்தோசத்தைப் பாக்கோணும்.அப்பா சொல்லி வேலை இல்லை.





பேந்தென்ன,திருநீறு,சந்தனம் எல்லாம் வாங்கிப் பூசி அடுத்த அற்றாக்குக்கு(Attack) றெடியாயிடுவாங்கள்.அடிபட்டுப் பிடிபட்டு,அந்த லக்ஸ்பிறே பாக்கை நிறைக்கிறதிலை தான் குறியாய் இருப்பம். எங்கடை ஊரிலை உள்ள கோயிலுகள் தங்களுக்கை ஒரு அகிறீமன்ற்(Agreement) வைச்சிருந்ததுகள் போல கிடக்குது.ஒண்டின்ரை பூசை முடியத் தான் மற்றதினரை பூசை தொடங்கும்.எண்டாத் தான் பக்த கோடிகள்(வேறை யார் அவல்,கடலைக்குப் ஓடிற நாங்கள் தான்)கோயிலுக்கு நிறைய வருவினம் எண்டாக்கும்.பண்டாரி அம்மன் கோயில் முடிய வைரகோயில்லை 6 மணிக்கும்.அது முடிய மாலந்தெணிப் பிள்ளையாரிலை 6.30 க்கும்,கடைசியா ஆலடிப் பிள்ளையாரிலை 7 மணிக்கும் பூசை நடக்கும்.



போகாத கோவிலெல்லாம் திருவெம்பாக்குத் தான் போவம்.ஒவ்வொரு கோயில்லையும் திருநீறு,சந்தன்ம் குடுக்க,திரும்பவும் ஏற்கனவே பூசிக்கிடக்கிற திறுநீறு சந்தனத்துக்கு மேலையே பூசுறது.காதிலை பூ வைக்க்கிறது பெரிய பாடாப் போடும்.முதல்க் கோவிலிலேயே பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப்பூவையோ காதிலை லௌட்ஸ்பீக்கரைஇ(Loud Speaker)கட்டிற மாதிரி வைச்சாப் பிறகு மற்றக் கோவிலிலை வாங்கிற பூவை எங்கை தலைக்கு மேலையே வைக்கிறது.அதிலையும் சில பேர் இரண்டு காதிலையும் ஒரு லௌட்ஸ்பீக்கரை முன்னுக்கும் மற்றதை பின்னுக்கும் பாக்கக் கட்டிற மாதிரி, முன்னுக்கும் பின்னுக்கும் பாக்கிற மாதிரி பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப் பூவையோ வைச்சுக் கொண்டு போவாங்கள்.ஒவ்வொரு கோயிலையும் போய் அங்கை தாற போவையும் காதிலை அடைவாங்கள்..ம்ம்ம்.



இப்பிடி எல்லாக் கோயில்லையும் வாங்கினதுகளை வீட்டை கொண்டு வந்து,சில வேளையில காலமைச் சாப்பாடே உதாத் தான் இருக்கும்.சிலவேளையில உதோடை சேர்த்து ஒரு றாத்தல் பாணோடை காலமை அலுவல் முடிஞ்சு போடும்.சாப்பிட்டு முடிய அந்த லக்ஸ்பிறே பாக்கெல்லாம் கழுவிக் கொடியில காயப் போட்டிடுவம்.பிறகு நாளைக்கும் எடுக்கலாம்(றீ ஊஸ் - Re Use)எண்டொரு முற்போக்கு சிந்தனை தான்.சில பேர் இதையே பள்ளிக் கூடத்துக்கு கட்டிக் கொண்டு வந்து இன்டேவலுக்கும்(Interval) சாப்பிடுவாங்கள்.இப்பிடியே திருவெம்பா போகும்.எங்களுக்கும் திருவெம்பாப் பூசை இருக்குது.முட்டிக்கொத்தாத்தைப் பிள்ளையாரிலை(முட்டிக் கொற்றவத்தைப் பிள்ளையார்)6 ம் பூசையும் மாயக்கைப் பிள்ளையாரிலை 7 ம் பூசையும் எங்கடை தான்.அந்த 2 நாளும் உபயகாரர் எண்டு எங்களுக்கு கொஞ்சம் கூட அவல்,கடலை,மோதகம்,வடை,பஞ்சாமிர்தம் எல்லாம் பூசைக்கு வந்த சனம் ஓரளவு போய் முடிய ஐயர் எடுத்துக் கொண்டு வந்து தருவார்.அந்த 2 நாளும் அலுக்க அலுக்கச் சாப்பிட உந்த அவல் கடலைப் பைத்தியம் எல்லாம் அதோடை தன்ரை பாட்டிலை நிண்டிடும்.உதைத் தான் சொல்லிறது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செண்டு.உதெல்லாம் சின்ன வயசுச் சமாச்சாரங்கள்.




இனி சங்கூதிப் பண்டாரத்துக்கு வருவம்.சங்கூதிப் பண்டாரம் எண்டால் என்னெண்டு தெரியாதாக்களுக்காண்டி,திருவெம்பாக் காலங்களிலை ஊரிலை இருக்கிற பெடியள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து விடிய வெள்ளன எழும்பி,சேமக்கலம்,சங்கு எல்லாம் ஊதிக்கொண்டு,திருவெம்பாப் பாட்டுப் படிச்சுக் ஒண்டு போறதை தான் சங்கூதிப் பண்டாரம் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறது.நீங்களெல்லாம் வெடிவால் முளைச்ச வயசுகளிலை, உங்கடை ஊர் சங்கூதிப் பண்டாரங்களிலை ஊதப் போயிருப்பியள்.அது நல்ல பம்பலாத் தான் போகும்.எங்கடை ஊரிலையும் சங்கூதிப் பண்டாரத்துக்கு ஊத போற பெடியள்,ஊரிலை இருக்கிற மற்ற எல்லாக் கோயிலுகள்ளையும் இருந்து சேமக்கலங்கள்,சங்குகள்,ஒரு பெற்றோல் மாக்ஸ்,திருவெம்பாப் பாட்டுப் புத்த்கம் எல்லாம் எடுத்து வைச்சுக் கொண்டு எங்கடை ஊர் வாசிகசாலைக் கட்டிடத்துக்குள்ளை தான் படுப்பாங்கள்.



விடிய 2,3 மணிக்கு எழும்பி,அந்தப் பனிக்குளிருக்கை ஒராள் பெற்றோல்மாக்ஸ் பிடிக்க,இன்னொராள் பாட்டுப் படிக்க,ஒவ்வொரு பாட்டும் முடியிற இடைவெளிக்குள்ளை சேமக்கலம் அடிச்சு,சங்கூத கொஞ்சம்,பக்கப் பாடு,பம்பலுக்கெண்டு ஒரு மிச்சம் எண்டு ஒர் 15 - 20 ஒண்டாப் போகும்.ஊரிலை இருக்கிற எல்லா ரோட்டாலையும் 2,3 தரம் போய் ஊதிப் போட்டு,வந்து 4 ,5 மணிக்குப் படுத்திடுவாங்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பெடியளுக்கு ஒரு பெரிய கேத்திலுக்கை தேத்தண்ணியும்,கடிக்கிறதுக்கு,கல்பணிஸோ,மலிபன் பிஸ்கட்டோ இல்லையெண்டால் தட்டை வடையோ(அது தான் எங்கடை பருத்துறை வடை)குடுப்பினம்.



பம்பலாத் தான் இருக்கும்.வெடிவால் முளைச்ச வயசு தானே?வாசியாலைக்கை படுத்திருகேக்கை ஒருத்தன்ர சாரத்தை கலட்டிறது(ஆனால் எல்லாரும் உள்ளை காற்சட்டையும் போட்டு கொண்டு தான் வருவாங்கள்),காலைப் போடுறது,கையைப் போடுறது,நித்திரையைக் குழப்பிறது எண்டு கொசப்பு வேலையளுக்கும் குறைவில்லை.அதோடை சங்கூதிக் கொண்டு போகேக்கை றோட்டுக் கரையோடை காய்ச்சு நிக்கிற கொய்யா,மாதாளை,மாங்காய்,முத்தின வாழைக்குலையெல்லாம் இதோடை காணாமல்ப் போடும்.வாழைக்குலை முத்தாட்டிலும் பரவாயில்லை,திருவெம்பா தொடங்கிறதுக்கு முதல் வெட்டிப் போடோணும் எண்டு வெட்டிப் போடிறளவுக்குக் கூடச் சனம் இருக்குது.


அதோடை பட்ட சீசனும் தொடங்கீடும் எண்டதாலை(பட்டம் பற்றிய முந்தியதொரு என் பதிவு) வேலியளிலை கட்டி கிடக்கிற கமுகஞ்சிலாகையளும் திருவெம்ப்பாவோடை காணாமல் போடும்.அதோடை கடைசி,கடைசிக்கும் முதல் நாளுகளிலை ஒரு பறையை வாடகைக்கு எடுத்து சங்க்கூதிப் பண்டாரத்தோடை சேத்து அடிச்சுக் கொண்டு போற வழக்கமும் எங்கடை ஊரிலை இருந்துது.அந்தக் காலம் 50,100 ரூபா குடுத்தே ஒரு பறையை வாடகைக்கு எடுக்கலாம்.இப்ப 400,500 குடுக்கோணுமாம்.


பறையை ஒரு பெரிய கரியல் உள்ள சைக்கிளொண்டில்(உங்கடை அம்மப்பாமார்,அப்பப்பாமார் வைச்சிருந்திருப்பினம்.பெரிய வெங்காய மூட்டையள்,அரிசி மூட்டையள்,தவிட்டு,புண்ணாக்கு மூட்டையள் ஏத்திக் கொண்டு போகலாம்.இல்லாட்டில் குடும்பம் 4,5 பெடியள் எண்டு கொஞ்சம் பெரிசெண்டாலும் ஒரு பெரிய கரியல் பூட்டினால் தான் எல்லாத்தையும் ஒண்டா இழுத்துக் கொண்டு வல்லிறக்கோயில் மாதிரிப் பெரிய கோயிலுகளுக்குப் போகலாம்.)கட்டி,சும்மா பம்பலா அடிச்சுக் கொண்டு போறது.



ஆரும் பெரிசுகள்,பெடியளை வாசியாலையிலை வைச்சு அப்பிடி இப்பிடியெண்டு பேசியிருந்தால் அவற்றை வீட்டு வாசல்லை கொண்டு போய் விடிய வெள்ள்ன அவரை எழும்புமட்டும் அடிச்சு அவரை எழுப்பிறதுக்குத் தான் பறையடிக்கிறது.அப்பத்தான் அதுகளும் ,"உதகளுக்கேன் புத்தியைச் சொல்லுவான்,உதுகளைத் திருத்தேலாது" எண்டு யோசிக்குங்கள்.


நான் போனமுறை கனகாலத்துக்குப் பிறகு திருவெம்பாக்காலத்திலை ஊரிலை போய் நிண்டனான்.என்ரை ஒண்டை விட்ட அண்ணன் ஒருத்தன்.என்னை விட 3 வயசு கூட.அவன் இப்ப இருக்கிற சங்கூதப் போற பொடியளட்டைச் சொன்னான்"உந்தப் பறை கொண்டோய் அடிக்கிற குரங்குச் சேட்டையொண்டும் செய்யாதையுங்கோ.பாட்டை மட்டும் படிச்சுக் கொண்டு போங்கோ.ஊரிலை சனம் நிம்மதியாப் படுக்கிறேல்லையே?" அதுகளும் விட்டிச்சுதுகளே.உவரென்ன எங்களெக்குச் சொல்லிறது.இந்தமுறை உவற்றை வீட்டு வாசல்லை தான் கொண்டோய் வைச்சு அடிக்கிறது.


அவனுக்கும் தெரியும் தானே.அவனும் உவங்களின்டை வயசெல்லாம் கடந்து வந்தவன் தானே. அவனும் உப்புடி ஆற்றையோ வீட்டு வாசல்லை அடிச்சு ஆரையும் எழுப்பியிருந்திருப்பான் தானே.?பூவரசங் கம்பெல்லாம் முறிச்சு கேற்(Gate) வாசல்லை வைச்சிட்டுத் தான் படுத்தவன்.அவன்ரை வீட்டு வாசல்லை றோட்டுக்கு லைற்ற் போட்டு வைச்சிருக்கிறான்.ஆனால் அதுக்கு சுவிச் கறண்ட் எல்லாம் இவன்ரை வீட்டையிருந்து தான்.விடியக் காலமை வெள்ளன 3 மணிக்குப் போய் நிண்டு கொண்டு அவன்றை வீட்டு வாசல்லை நிண்டு அடிச்சிருந்திருக்கினம்.அவன் எழும்பி வந்து உள்மதிலடியில நிண்டு கொண்டு ஆராக்கள் எண்டெல்லாம் வடிவாப் பாத்துப் போட்டு,லைற்றை நிப்பாட்டிப் போட்டு,பூவரசங்க் கம்போடை மதிலாலை ஏறி றோட்டுக்குக் குதிச்சு,வெளு வெளு எண்டு வெளுத்தெடுத்துவிட்டான்.அவங்கள் சைக்கிள்,பறை எல்லாத்தையும் போட்டிட்டு,அங்காலை இருந்த வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலையும் மதிலாலையும் ஏறி விழுந்து ஓடித் தப்பிட்டாங்கள். ம்ம்ம்.. அப்பிடி இப்பிடியெண்டு திருவெம்பாக் கால ஞாபகங்கள் பம்பலா,பசுமையா,இப்பவும் கிடக்குது.ம்ம்ம்ம்ம்


புறிம்பு - புறம்பாக/வேறாக
தாம்பாளம் - நைவேத்தியம் சுவாமிக்குப் படைக்கப் பயன் படும் தட்டு
வாசியாலை - வாசிகசாலை
வல்லிறக்கொயில்- வல்லிபுரக்கோவில்
மாதாளை - மாதுளை
முத்தின - முற்றின
கமுகஞ்சிலாகையள் - கமுகம் சலாகை
காரியமில்லை - பெருந்தவறல்ல
சட்டுப் புட்டென - உடனேயே
சேமக்கலம் - ஒரு வகை கோயில் மணி என்று சொல்லலாம்

Friday, November 26, 2010

வெங்காயம்

இதென்னடா ஆருக்கோ பேச்சு விழுது எண்டு நினைச்சு பின்னங்கால் பிடரியிலை பட ஓட வெளிக்கிடாதையுங்கோ.நான் வெங்காயம் எண்டு சொன்னது எங்களின்டை செல்வ(ல)த்தை தான்.எங்கன்ரை ஊரிலை அதை "காய்" எண்டும் சொல்லுவம்.எங்கள் எல்லாருக்கும் செல்வதை அள்ளிச் சொரிகின்ற லக்ஸ்மி அது.வெங்காயத் தோட்டத்திலையிருந்து உழைத்து எங்களவர்கள் எங்கேயோ உயரத்துக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள்.எங்களுக்குக் காசு மழைபொழிகின்ற காமதேனு அது.



நாங்கள் அதைக் காலால் உழக்க மாட்டோம்.மாலையாகி,வீட்டை விளக்குக் கொழுத்திய பின்னரோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ யாருக்கும் அதைக் கொடுக்கமாட்டோம்.ஏனென்றால் அவ்வாறு கொடுத்தால் அந்த லக்ஸ்மி எங்களை விட்டுப்போகிறாள் என்ற நம்பிக்கையுடையவர்கள் நாங்கள்.(நீங்கள் சிலவேளைகளில் காசினை வெள்ளிக்கிழ்மைகளிலோ அல்லது விளக்குக் கொழுத்தியபின்னரோ கொடுக்காமால் இருக்கலாம்)நாங்கள் அந்தப் பணத்துக்கு ஈடாக வெங்காயத்தையும் நினைத்துக் கொள்வதால் அதனை மேற்க்கூறிய தருணங்களில் வெளிச்செல்ல அனுமதிக்க மாட்டோம்.



எங்கள் வெங்காயத் தோட்டங்களில் நாங்கள் செருப்புடன் இறங்கவே மாட்டோம்.வேறொருவன் இறங்கினாலும் அவன் காலை உடைக்கவும் தயங்க மாட்டோம்.ஏனென்றால் எங்கள் காசுக்கடவுளை காலால் உழக்குகின்ற செயலாகவே நாங்கள் அதைக் கருதுவோம்.வெங்காயச் சருகு காற்றிலே சரசரத்து ஏற்படுத்துகின்ற சரசரப்போசையும் அதன் வாசமுமே எங்களுக்கு நித்திரையை வரவைக்கும்.கறி,புளிகளில் காரசாரமாய் வெங்காயம் வெளிப்பட்டால் தான் எங்களுக்குப் சாப்பாடு இறங்கும்.இல்லையென்றால் பத்தியப் படாது.நாங்கள் வெங்காயத்தோடை எப்பிடி ஒட்டியிருக்கிறம்.எங்கடை வாழ்க்கையிலை அது எப்பிடிப் பின்னிப் பிணைஞ்சிருக்குது எண்டு சொல்லவெளிக்கிட்டுத் தட்டுத் தடுமாறி வந்த ஒரு சில உதாரணங்கள் தான் உவை.




இப்பிடி எங்கன்ரை மூச்சோடையும்,பேச்சோடையும் கலந்த வெங்காயச் செய்கை பற்றியதொரு பதிவு தான் இது. யாழ்ப்பாணத்தில் வெங்காயச் செய்கைக்கு புன்னாலை கட்டுவன்,இடைக்காடு,ந்வக்கிரி,வலிகாமத்தின் இன்னும் பல பகுதிகள்,தென்மராட்சி மற்றும் வட்மராட்சியில் மந்திகை,வதிரி,புலோலி,பொலிகண்டி போன்றவை பிரசித்தி பெற்ற இடங்களில் சிலவாகும்.எங்கடை ஊரிலும் வெங்காயம் பெரும்பாலானவர்களால் செய்கை பண்ணப் படும் ஒரு பயிராகும்.வேறு சிலர் போயிலை(புகையிலை), மற்றும் கத்தரி,மிளகாய்,பூசணி,பயிற்றை,பாகல் போன்ற சில்லறைப் பயிர்களும் பயிரிடுவினம்.வெங்காயத்தை விட பொயிலை வருமானம் கூடின பயிரென்றாலும் அதற்கு அதிகளவு கஸ்ரப்படவேண்டியிருக்கும்.




நான் ஏற்கனவே சொன்னது மாதிரி வெங்காயத்தை நாங்கள் கூடுதலாகக் "காய்" எண்டு தான் சொல்லுவம்.பயிரிடுகின்ற தோட்டத்தை "தறை" அல்லது "தெணி"எண்டு சொல்லுவோம்.அவற்றுக்கும் "ஐயன் தெணி","மாலந்தெணி","வெளித்தெணி","மடத்தெணி","வல்லூட்டி","ஆவலம் பிட்டி","காறவாய்ப்பள்ளம்" எனப் பெயர்கள் எல்லாம் உண்டு.அவற்றின் பரப்பளவு பொதுவாக "பட்டி"யில் தான் அளக்கப்ப்டும்.10 பட்டி ஒரு "பரப்பு" க்குச் சமனாகும்.



எங்கடை ஊரிலை முழுநேர விவசாயிகள் அல்லது முற்றுமுழுதாக விவசாயத்தை நம்பிக் கொண்டிருக்கிறாக்கள் எண்டால் மிச்சும் குறைவு.பெரும்பாலான ஆக்கள் பாட் ரைமா(பர்ட் டிமெ) மற்ற வேலைகளைச் செய்துகொண்டு வெங்காயத்தை முழுநேர வேலைகளை செய்யிறவை.ரீச்சர்(Teacher),போஸ்ற் பீயோன்(Post Peon),கடை முதலாளி, பிரதேச சபை உட்பட ஏனைய அரசாங்க உத்தியாகத்தர்மார்,அதிபர் எண்டு தொடங்குகிற லிஸ்ற் டொக்டர்,இஞ்சினியர்,லோயர்(Lawyer),பாங்க் மனேச்சர்((Bank Manager) வரையாய் அந்த பாட் ரைம்(Part Time) வேலையின் வீச்சு வேறு படும்.



பாட் ரைம் வேலை எண்டு நான் சொன்னது வேலை செய்யிற நேரத்திலையில்லை.வாற வருமானத்தின் படி.அவையளுக்கு உந்தக் கண்டறியாத வேலைகளிலை கிடைக்கிற ச்ம்பளம் வந்து மட்டு மட்டா குடும்பச் செலவுக்கத் தான் காணும்.தங்கடை தொழிலின்ரை வரும்படியை வைச்சுக் கொண்டு அவையளே சொல்லுவினம் தோட்டம் தான் எங்கடை மெயின் வேலை.எங்கடை தொழிலுகள் எல்லாம் சப்(Sub)தான் எண்டு.




என்றை அப்பாவும் ஒரு ரீச்ச்ர்(Teacher) தான்.அவரும் உப்புடி ரீச்சிங்கை(Teaching) பாட் ரைமாச் செய்யிற ஆள் தான்.எனக்கும் அது ஏனெண்டு தெரியேல்லை, எனக்கு அப்பா ஒரு வாத்தியார் எண்டு சொல்லுறதை விட நானொரு தோட்டக்காரன்ரை பெடியனெண்டு சொன்னால் ஒரு கூடுதல் சந்தோசம் மாதிரி.உள்ளூர ஒரு பரம திருப்தி.அது மட்டுமில்லை கம்பசிலையும் என்னட்டை ஜூனியர்ஸ் கண்டுபிடிக்க இல்லையெண்டாலும், அவங்கடை அப்பாவும் ஒரு தோட்டக் காரன் எண்டால் ஒரு ராகிங்கும் செய்யாமலே(ஏதோ பெரிய ராக்கர் தான் போ) விட்டு விடுகின்ற ஒரு வீக்னசும்(weekness) இருந்ததுகொண்டிருந்தது.




என்னதான் அவையள் உத்தியோகம் பாத்தாலும்,படிச்சாலும் அவையள் எல்லாரும் நல்ல "கை பக்குவப்பட்ட" தோட்டக்காராக்கள் தான்.நான் கண்ணாலை கண்ட எத்தினை எங்கடை ஊர்,பிரதேச அண்ணாமார்,தேப்பனோடை சேர்ந்து மம்பெட்டி பிடிச்சு,எருப்பரவிக் கொத்தித் தோட்டஞ்செய்து இண்டைக்கு இஞ்சினியர்,டொக்ரர்மாராய் ஆகியிருக்கினம்.ஒரளவு வயதிலேயே படிப்பு சறுக்கினாலுமெண்டிட்டு கைகாவலா எல்லரும் தோட்ட வேலையளைப் பழகிவைச்சிருக்கிறது தான்.




இரண்டு வேலை தெரிஞ்சிருக்கிறதும் நல்லது தானே.ஆனால் நான் அந்தளவுக்கு ஒண்டும் செய்யவில்லை.ஆனாலும் எல்லா வேலையும் கொஞ்சம் கொஞ்சம் செய்யப் பழகியிருந்தன்.ஆனாலும் பெரிதளவில் உடம்பை முறிச்சுச் செய்யாததாலை(வேறையென்ன பஞ்சி தான்.அதாலை "பம்ஸ்" அடிச்சது தான் அந்தக்காலத்திலை)அந்தளவுக்குக் கைப் பக்குவம் இல்லாட்டிலும் ஏதோ அம்மமாவின்றை ஆக்கினையிலை "ஆம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனீ, மம்பெட்டி பிடிச்சுப் பழகாமல்...இஞ்சை பார் பெண்ணாப் பிறந்த நானே இந்தவயதிலையும் என்ன பக்குவமா மம்பெட்டி பிடிக்கிறன் ..." எண்டு எதோ பிடிக்கோணும் எண்டதுக்காகவேண்டி மம்பெட்டி பிடிச்சிருக்கிறன்.அதெல்லாம் தெரிஞ்சபடியாலை இண்டைக்கு இந்தப் பதிவை எழுதிறன்.





ஆனால் எங்கடை பொடியள் எவ்வளவு கஸ்ரமான சூழ்நிலைகளிலையும் குண்டுக்குப் பயந்து பங்கருக்கை ஒளிச்சிருந்து குப்பிவிளக்கிலை படிச்சு முன்னுக்கு வந்த ஆக்கள் கனபேர்.அவையள் எல்லாம் எங்களுக்கு,எங்கடை பொடியளுக்கு முன்மாதிரியா இருக்கினம்.இப்பிடிப் பலர் பலவாறு கஸ்ரப்பட்டாலும் எனது பல்கலையில் நான் சந்தித்த எனது தம்பியொருவரைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன்.இந்தப்பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையெனினும் அதை இங்கே சொல்லிவிடலாம் எண்டு நினைக்கின்றேன்.




பெயர் வேண்டாம்.அவன் பேசாலையிலிருந்து பல்கலை வந்து சேர்ந்தவன்.தகப்பன் போரினால் ஏலாவாளியாக்கப்பட்டபின்னர் தன் குடும்பத்துக்காக தானே வள்ளமேறி,இரவிலே மீன்பிடிக்கச் சென்று,பகலிலே வந்து படித்து பொறியியல்ப் பீடம் ஏகியவன்.பொறியியல் அனுமதி கிடைத்தும் குடும்பநிலை கருதி பல்கலையைத் துறந்து,தூக்கியெறிய வெளிக்கிட்ட வேளையில்,தாயினதும்,வேறு சிலரினதும் நிர்ப்பந்தமான,மண்டாட்டமான வேண்டுதலுக்காக பல்கலை வந்தவன்.இப்படியாக பல கஸ்ரங்களிலும் கல்வியைக் கைவிடாதது ஈழ்த்த்மிழினம்.




இதை இப்போதைய போனும் கையுமாகத் திரிந்து காசையும் வீணாக்கி,காலத்தையும் மண்ணாக்கி,மூஞ்சிப்புத்தகத்தாலை வயித்திலை பிள்ளையை வருவித்துக்கொண்டும் அனைவரையும் பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது எங்கள் எல்லோரதும் அவா.அது ஒரு புறம் இருக்க நாங்கள் விசயத்திற்கு வருவோம்.




உப்புடியெண்டால் சொல்ல வந்ததை மறந்து போடுவன் அப்பரெல்லாம் தோட்ட சீசனிலை,எட்டுமணி மட்டும் தோட்டத்துக்கை நிண்டு வேலைசெய்து போட்டுத் தான் பள்ளிக்கூடம் போவார்.எங்கன்றை ஊரிலை தொழில்ரீதியாப் பாத்தால் போஸ்ர் பீயோன்மார் தான் கூட.ஒரு ஏழெட்டுப் பேர் இருப்பினம்.ஏன் ஊரிலை போஸ்ற் பீயோன்மார் கூட எண்டு இன்னும் கொஞ்சம் கீழை வாசிச்சுப் போட்டுக் கண்டுபிடியுங்கோ பாப்பம்.




அவையள் என்ன செய்வினம் எண்டால்,விடியக் காலமை மிசினை(நாங்கள் வோட்டர் பம்மை மிசின் எண்டு தான் சொல்லுவம்)கொண்டு போய் தோட்டத்துக்கை பூட்டிப் போட்டு,சேட்டைக் கழ்ட்டி கிணத்துக்குப் பக்கத்திலையிருக்கிற பூவரசமரத்தில கொழுவிப் போட்டு,ஜீன்சை முழங்காலுக்கு மேலை மடிச்சுவிட்டிட்டுத் தண்ணி மாறுவினம்.ஒரூ 8, 8.30 அப்பிடி அவையின்ரை மனுசிமார் தோட்டத்துக்கை சாப்பாடு கொண்டுவர,தோட்டத்துக்கையே சாப்பிட்டு,வாயைக் கொப்பளிச்சுப்போட்டு,மனுசிமாரைத் தண்ணி மாறவிட்டிட்டு,சேட்டையெடுத்துக் கொழுவிக்கொண்டு கந்தோருக்குப் போய் சைனை(Signature) வைச்சிட்டு அண்டைக்குக் குடுக்கவேண்டிய கடிதங்களையெடுத்துக் கொண்டு,தபால் குடுக்கப் போறன் எண்டு சொல்லிக் கொண்டு வெளிக்கிட்டுடுவினம்.



சைக்கிளைத் திரும்பக் கொண்டுவந்து தோட்டத்தடியில் நிப்பாட்டிப் போட்டு,மனுசிமாரை மத்தியானச் சமையலுக்கு அனுப்பிபோட்டு,திரும்பவும் மாற வெளிக்கிட்டுடிவினம்.அப்பக் கடிதம் எண்ணெண்டு குடுக்குறது எண்டு தானே கேக்கிறியள்?அது ஊருக்கை தானே.மாலைக்கை ஆலமரத்துக்கு கீழை இருக்கிற வாசிகச்சாலையிலை வெட்டிக் கதைகதைக்கிறதுக்கு கூடுற பெடியளட்டையோ அல்லது ஆம்பிளையளிட்டையோ குடுத்துவிட்டால் சரிதானே.எல்லா வீட்டையும் கடிதம் போடும்.சிம்பிள் வேலை.சிம்பிளா போஸ்ற் மான் வேலை செய்துகொண்டு தோட்டத்தையும் செய்துகொள்ளலாம்.இப்ப விளங்குதே ஏன் எங்கடை ஊரிலை போஸ்ற்மான்மார் கூட எண்டு.




இனி வெங்காயச் செய்கையின் ஒவ்வொரு படியையும் படிப்படியாகத் தருகின்றேன். நீங்களும் ஒரு தோட்டக்காரனெண்டால் ஏதாவது பிழையெண்டால் சொல்லுங்கோ இல்லையெண்டால் பேஸ்புக்கிலை தோட்டஞ் செய்த எக்ஸ்பீரியன்சை வைச்சுக்கொண்டு இதையும் செய்துபாருங்கோவன்.




வெங்காயம் செய்யும் போகத்தினடிப்படையில் நாங்கள் "கோடைக்காய்","மாரிக்காய்" எண்டு சொல்லுவம்.மாரிக்காய் மார்கழி,தையில் விதைச்சு, மாசி,பங்குனியில் முடியும்.கோடைக்காய் வைகாசி ஆனியில் தொடங்கி ஆடி ஆவணியில் முடியும்.எங்களது இடங்களில் பெரும்பாலும் மாரிக்காய் மட்டுமே நடப்படும்.



கொத்திக் குப்பை தாட்டல்

பெரும்பாலும் ஐப்பசியிலை மாரிகாலம் தொடங்கினாப்போல,ஒரு ஒண்டிரண்டு மழை பெய்ஞ்சு,மண்ணை நனைச்சாப்போல தோட்டத்தைப் பண்படுத்தத் தொடங்கிடுவம்.பழைய கொட்டிலுகளைப் புடுங்கிப் புதுசா மேய(வேய) வெளிக்கிடேக்கை வாற ,அந்தக் கொட்டிலின்றை பழைய கிடுகுகள்,பனையோலைகள்,இலைகுழைகள்,மாட்டெரு,ஆட்டுப்புழுக்கை போன்றவற்றைக் கொத்திதாட்டுத் தான் பண்படுத்தல் தொடங்கும்.


உழுதல்

கொத்திப் பிரட்டி,ஒரு மாதத்திற்கு மேல் அப்பிடியே நிலத்தை விட்டு விட மேலும் மேலும் மழை பெய்ய மண் அடைஞ்சு மண் இறுகி விடும்.பிறகு லான்ட்மாஸ்ரரால்(லன்ட் மச்டெர்) நிலத்தை உழுவார்கள்.அல்லது இதற்குப் பதிலாக இப்போதும் கொத்தலாம்.உண்மையில் கொத்தும் போது தான் ஆழமாக மண் தோண்டப்பட்டு புரட்டப்படுவதால் இதுவே சிறந்தமுறையாகக் கருதப்படுகின்றபோதும் செலவு குறைவு மற்றும் இலகு போன்ற காரணங்களினால் தான் உழப்படுகின்றது.


வாய்க்கல் வரம்பு போடுதல்

பிறகு பெரிய பெரிய மண்கட்டிகள் சின்னஞ்சிறு கட்டிகளாக உடைக்கப்பட்டு கயிற்றுப்பந்தைப் பயன்படுத்தி நேராக வாய்க்கால் வரம்பு போடபப்டும்.


வெங்காயம் நோண்டுதல்/காய் நுள்ளுதல்


வெங்காயத் தாறிலிருந்து வெங்காயத்தை நுள்ளி எடுத்தலைத் தான் வெங்காயம் நோண்டுதல் என்று சொல்லப்படுகின்றது.வெங்காயத்தை நுள்ளியெடுப்பது மட்டுமில்லாமல் வெங்காயத்தின் வெளிச்சரையெல்லாத்தையும் உருத்தி,செத்தல் வெங்காயங்களை ஒதுக்கித் தான் வெங்காயம நோண்டுவோம்.நோண்டியபிறகு பார்த்தால் குங்குமக் கலரோடு வெங்காயாம் சும்மா ஜொலித்துக் கொண்டிருக்கும்.


தெளித்தல்/புழுதித் தண்ணி

வெங்காய நடுகைக்கு முதல்நாள் மிசின் பூட்டி,புதிதாகப் போடப்பட்ட வாய்க்காலில் புழுதித் தண்ணி தாராளமாக பாயவிடப்படும்.ஒரு பழைய சாப்பாட்டு கோப்பை போன்ற ஏதாவது தட்டையான பாத்திரத்தால் எல்லா இடமும் நல்லா தண்ணியை அள்ளித் தெளித்து மண்ணை நன்றாக குளிர்விப்போம்.மண் நன்றாக நனைந்தால் தான் நடுகைக்கு இலகுவாக இருக்கும்.


சாறுதல்

அடுத்தநாள்,அதாவது வெங்காய நடுகையன்று காலையில் நிலம் சாறப்படும்.சாறுதல் என்பது கொத்துதல் மாதிரித்தான்.ஆனால் கொத்துதல் இல்லை.மண்வெட்டியை சிறிதளவே தூக்கி,அதிகளவு ஆழமாகத் தோண்டாமல்,சிறு சிறு கட்டிகளாக அல்லது தூளாக மண் வருமாறு கொத்துதல் ஆகும்.சின்னக் கொத்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


பாத்தி கட்டுதல்

ஒராள் முன்னுக்கு சாறிக் கொண்டுபோக,மற்றவர் அந்த மண்ணை நன்றாக உருத்தி,மண்ணைப் பதமாக்கி,மடை விட்டு, நடுகைக்கு ஏற்றாற் போல பாத்தி கட்டிக் கொண்டுபோவார்.

நடுகை

நடுகை இன்றைக்கு நடுகை என்றால் விடியக் காலமை வெள்ளன மாயக்கைப் பிள்ளையாரட்டை போய் கற்பூரங் கொழுத்தி,சிதறு தேங்காய் அடிச்சுப் போட்டு அவற்றை கோயில் வாசலிலை கிடக்கிற கொஞ்சம் பூவையும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டிலை ராசியான கைக்காரர் யாராவது நாள்க்காயை நடுவினம்.(நிச்சய்மா அந்த ராசியான கைக்காரன் நான் இல்லை.என்ரை மூண்டு வயசிலை என்ரை ராசி எப்பிடி இருக்குது எண்டு பாக்கிறதுக்காக வேண்டி,என்ரை கையைப் பிடிச்சு நாள்க்காயை நட்டிச்சினமாம்.அந்த வருசம் மழை வந்து கொட்டோ கொட்டெண்டு கொட்டி,எல்லாத்தையும் அழிச்சுப்போட்டிச்சுதாம்.ம்ம்ம் என்னதொரு ராசி...!!!)அதிலையிருந்த நான் ஒரு நாளும் நாள்க்காயை நடுறதில்லை.நாள்க்காயை நட்ட பின்னர் நடுகைப் பெண்டுகள் வந்து வெங்காயத்தை கட்டின பாத்திகளிலை மள மளவெண்டு நட்டுக் கொண்டு போவினம்.


மிதந்த காய் ஊண்டுதல்

நடுகை பெண்டுகள் அவசரத்திலை காய் ஊண்டிக்கொண்டு போகேக்கை சில காய்கள் வடிவாக மண்ணுக்குள் ஊண்டுப்பட்டிருக்காது.அப்பிடி ஊண்டுப் பட்டிருக்காவிட்டால் வெங்காயம் சிலவேளைகளில் தண்ணி மாறும் போது அடித்துக் கொண்டு செல்லப் படலாம் எனபதோடு அவை உருண்டு,திரண்டு,விளையமாட்டாது.நன்றாக விளைந்தால் தானே நல்ல நிறை நிக்கும்.நாங்களும் நல்ல லாபம் எடுக்கலாம்.அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை வெங்காயம் முளைவிடத் தொடங்கிய பிறகுதான் அவதானிக்கலாம்.வெங்காயம் நட்டு ஒரு 5,6 நாளைக்குப் பிறகு அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை ஒரு குத்தூசியால் நிலத்தில் குத்தி அந்த துளைக்குள் இந்தக் காய்களை ஊண்டிவிடுதலைத் தான் மிதந்த காய் ஊன்டுதல் எண்டு சொல்லிறது.


தண்ணி மாறுதல்

கூடுதலாக கிணத்திலையிருந்த மிசினாலை இறைச்சுத் தான் தண்ணி மாறுவம்.முதல்த்தண்ணி வெங்காயம் நட்டு ஒரு பத்துநாளுக்குப் பிறகுதான் இறைப்பம்.அதுக்குப் பிறகு ஒவ்வொரு 4,5 நாளுக்கொருக்கால் தண்ணி மாறுவம்.இந்தத் தண்ணி மாறுறதெண்டுறது பயங்கர கரைச்சலான விசயம்.பாத்தால் சிம்பிளான வேலை மாதிரித்தான் தெரியும்.அனுபவம் இல்லையோ நிச்சயமா ஏலாது.உடைக்காமல் மாறவேணும்.இடைக்குள்ளை எங்கையாவது உடைச்சுதெண்டால் அள்ளிப் போடுறதுக்கும் மண் எடுக்கேலாது.ஏனெண்டால் வெங்காயம் எல்லா இடமும் நடப் பட்டிருக்கும்.தண்ணி மாறேக்குள்ளையும் அடித்தறையிலையிருந்து தலைப்பு தறை வரை போகேக்கை இடப்பக்கமா மாறிகொண்டு போனால், தலைப்பிலிலையிருந்து திரும்பி வரேக்கை வலப்பக்கமா வெட்டிக் கட்டிக் கொண்டுவரலாம்.


புல்லுப்ப்டுங்குதல்/உரம் போடுதல்/மருந்தடித்தல்

இது உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச வேலைகள் எண்ட படியால் இதுக்கு விளக்கம் தேவையில்லயெண்டு நினைக்கிறன்.


பூ முறித்தல்


வெங்காயம் ஒரு 65 - 70 நாள்ப்பயிர்.அது ஒரு 45 - 50 நாளுக்குப் பிறகு மொட்டுவிட்டுப் பூக்கத் தொடங்கும்.அந்தப் பூவை நாங்கள் முறித்துத் தந்தால் நீங்கள் அதை சுண்டி சாப்பிடிருப்பியள்.அதை முறிக்காமல் விட்டால் வெங்காயம் விளையாது எண்டபடியால் தான் அதை முறிக்கிறது.ஏனெண்டால் வெங்காயத்தின்றை சத்தெல்லாம் பூவுக்குப் போகும் எண்டு பெரியாக்கள் விளக்கம் குடுப்பினம்.


நனைத்தல்

ஆகலும் கடைசியான இறைப்பை நனைத்தல் என்று சொல்லுறது.இதற்கும் ஒரு கோப்பையால் அள்ளித் தெளித்து வரம்பு,வாய்க்கால் எல்லாம் நன்றாக ஈரமாக்குவோம்.அப்படியென்றால் தான் கிண்டுவதற்கு நன்றாக இருக்கும்.


கிண்டி விரித்தல்

நனைத்ததற்கு அடுத்தநாள், வெங்காயத்தைக் கிண்டி அடுக்கி விரித்து,பச்சையாக இருக்கும் வெங்காயத்தாறு காயும்வரை ஒரு கிழமை வரை வெங்காயம் தோட்டத்திலேயே விடப்படும். முடிச்சல் வெங்காயம் காய்ஞ்சபிறகு,கையால் பிடிக்கக்கூடியளவு தாற்றுடன் வெங்காயத்தை எடுத்து,கடல் தண்ணியில் ஊறப்போட்ட, பனஞ்சார்வோலை ஈர்க்காலே அளாவி,தாற்றை ஒரு மடிப்பு மடிச்சுக் கட்டி அந்த ஈர்க்கை ஒரு இழுப்பு இழுத்து வெங்காயப் பிடி கட்டுவோம்.


பிணைச்சல்

இப்படியாக முடியப்பட்ட வெங்காயப் பிடிகள் நான்கை ஒன்றாக இணைத்து ஒரு பிணைச்சல் கட்டப்படும்.ஏற்றி,இறக்குவதெல்லாம் இந்தப் பிணைச்சல்களினால் இலகுவாக்கப்பட்டுவிடும். இந்தப் பிணைச்சல்கள் எல்லாத்தையும் ஒரு லான்ட் மாஸ்ரரில்(Land MAster) ஏற்றிக்கொண்டு,வந்து வீட்டை சேர்ப்பிக்கவேண்டியது தான் அடுத்த வேலை.இந்த ஒரு நாளுக்காகத்தான் நாங்கள் சின்ன வயதுகளில் ஏங்கித் தவித்து, காத்திருந்திருப்போம்.எல்லாம் ஒரு லான்ட் மாஸ்ரர் சவாரிக்காகத் தான்.லோட் நிரம்பிற அளவுக்கு,வெங்காயம் ஏத்தி முடிய எங்களையும் அந்த வெங்காயங்களுக்கு மேலை ஏத்திவிடச்சொல்லி நாங்கள் பிடிக்கிற அடம் தாங்காமல் அம்மப்பா தூக்கி ஏத்திவிட்டுவிடுவார்.ஏத்திவிட்டால், லான்ட் மாஸ்ரர் ஓடேக்கை பயமாத்தான் இருக்கும் எண்டாலும்,வெங்காயப் பிடியின்ரை மூட்டுக்கை கையைக் கொளுவி, ஒரு உடும்புப் பிடியைப் பிடிச்சுக்கொண்டு,ஏதோ பட்டத்து இளவரசன் பல்லக்கிலை போற மாதிரி ஒரு பீலிங்கோடை தான் நாங்கள் ஊர் ரோட்டுகளாலை லான்ட்மாஸ்ரரிலை அண்டைக்குப் போவம்.அந்த இளவரசனுக்குக் கூட அப்பிடியொரு இறுமாப்பு இருந்திருக்காது.ஆனால் எங்களுக்கு ஒரு திமிர் இருந்து கொண்டேயிருந்திருக்கும்.எங்கடை வயதையொத்த குஞ்சு,குருமனெல்லாம் எங்களைப் பாத்து வாயைப் பிளந்து பொறாமைப் பட்டு நிண்டு கொண்டிருக்குங்கள்.எங்களுக்கும்,எங்களுக்கெல்லாம் தங்கடை தோட்ட வெங்காய முடிச்சலுக்கு திமிராய் போன எங்களது வட்டப் பொடியளுக்கு நாங்களும் கொஞ்சமும் குறைஞ்சாக்கள் இல்லையெண்டு காட்டோணும், எண்டு காட்டவேணுமெண்டதுக்காகவேண்டி,அப்பிடியொரு திமிர் வந்து தொற்றிப் போடும்.அந்த நாளெல்லாம் இனி வராது.ம்ம்ம்..


தூக்குதல்

பிறகென்ன,வீட்டை கொண்டு வந்த வெங்காயத்தை எங்கை நிலத்திலேயே வைச்சிருக்கிறது.அப்பிடிக் கிடந்துதெண்டால்,காய் அண்டுப்பட்டு(நசிபட்டு)பழுதாப் போடும்.அதாலை வெங்காயத்துக்கெண்டு பிரத்தியேகமாப் பாவிக்கிற கொட்டிலுகளுக்கையோ அல்லது எங்களது வீட்டு அறைகளுக்குள்ளேயோ ஒவ்வொரு பிணைச்சலா நைலோன் கயித்திலை கட்டித் தூக்குறதைத் தான் தூக்குதல் எண்டு சொல்லுவம்.


வித்தல் (விற்றல்)

இப்படியொண்டைச் சொன்னால் நீங்கள் எனக்கு இப்ப அடிக்கத் தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும்.என்ன நல்ல விலையாப் பாத்து விக்க வேண்டியது தான்.உதுகும் தெரியாதே..?உது கஸ்ரம் இல்லைத் தானே..கூடுதலாக வைகாசி பறுவம் தாண்ட தான் வெங்காயம் சும்மா நெருப்பு விலை விக்கும்.



(இப்ப என்ன போகுது... நாலை முக்கால், ஐஞ்சு போகுதாம்... எண்டால் இப்ப வெங்காயம் ஒரு அந்தர் 4750,5000 ரூபா வரை விக்குதாம் எண்டு அர்த்தம். என்ன நீங்களும் நட்டியள் எண்டால் நல்லா உழைக்கலாம்.மனுசிமாரட்டை ஒரு flat தா எண்டு சீதனம் தா எண்டு வாங்கிறதை விட,ஒரு 250,300 பட்டி தறை சீதனமா வாங்கினால் ஒரு பத்து வருசதுக்கிடையிலை நீங்களே 3 flat வாங்கிற அளவுக்கு உழைச்சுப்போடலாம்.


சில வட்டார சொற்கள்


பத்தியப்படாது - சாப்பாடு திருப்தியாக இல்லாவிட்டல் இப்படி சொன்னாலும் இதன் அதிக பயன் பாடு மருத்துவதுடனேயே வருகின்றது.ஒருவர் நோய்வாய்ப் பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு உண்ணக் கொடுக்கும் விசேட கவனிப்புள்ள உணவுகளை "பத்தியச் சாப்படு" என்று ஈழத்திலே அழைப்பார்கள்

போயிலை
- புகையிலை,வெற்றிலைத் தாம்பூலத்துடன் சேர்த்து சாப்பிடப்படுவது பாணி போட்டு பதமாக்கப்பட்ட புகையிலை.
சில்லறைப் பயிர்கள் - சிறு வருமானம்/கைச்செலவுக்கு வருமானம் தரும் பயிர்கள்
மிச்சும் குறைவு - மிகக் குறைவு
வரும்படி - வருமானம்
கை பக்குவப்பட்ட - செய்கின்ற தொழிலில் கை தேர்ந்த
கீழை - கீழே
கந்தோர் -அரசாங்க வேலை திணைக்களம் உருத்தி -நீக்கி
சரை - கோது என்றும் சொல்லலாம்.இங்கு வெங்காயத்தை சுற்றியிருக்கின்ற காய்ந்த தோல் என்றும் சொல்லலாம்
வெங்காயம் நோண்டுதல் - வெங்காயம் நுள்ளுதல்
புழுதி - காய்ந்த மண் என்றும் சொல்லலாம்.காற்றுக்குத் தூசியை அள்ளித் தெளித்தவாறு பறக்கும்
மடை - தண்ணிபாய விடப்படும் பாதை விடியக் காலமை -அதி காலை
வெள்ளன -முதலே/வேளையில்
நாள்க்காய் -நல்ல நாளில், சுபநேரத்தில் நாள்க்காய் நடப்பட்டுத் தான் வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்படும்.
அடித் தறை - தோட்டத்தின் ஆரம்ப எல்லை தலைப்புத் தறை - தோட்டத்தின் முடிவு எல்லை கிழமை - கிழமை என்றால் திங்கள்,செவ்வாய் என நாட்களைக் குறித்தாலும் வாரம் என்றொரு சிறப்புப் பதமும் ஈழத்தில் உண்டு.
பனஞ் சார்வோலை ஈர்க்கு - பனையின் குருத்திலிருந்து ஓலையை நீக்கி எடுக்கப்ட்ட ஈர்க்கு
அளாவி - சுற்றி என்றும் சொல்லலாம் அல்லது வளைத்து என்றும் கொள்ளலாம்
அண்டுப்பட்டு - இது அமத்துப் பட்டு என்ற பொருளில் தான் இங்கே வரும்
பறுவம் - பௌர்ணமி
மம்பெட்டி - மண்வெட்டிதான் இவ்வாறு அழைக்கப்படும்.அது "ப" அல்லது பிக்காஸ்,என்றும் "வ்" போன்ற வடிவுடைய மண்வெட்டி தோட்ட மண்வெட்டி என்றும் தண்ணி மாறப் பயன்படுகின்ற மண்வெட்டி கட்டை மண்வெட்டி என்றும் வகைப்படுத்தப்பட்டு அழைக்கப்படும்

(இன்று எனது வலைப்பூவுக்கு முதலாவது பிறந்தநாள்)

Sunday, October 3, 2010

க...க...க...கல்லூரி சாலை கல்லூரிசாலை

(அண்மையில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக் கழக, இளநிலை தமிழ் விஞ்ஞான பட்டதாரிகளின் ஒன்று கூடலான "சங்கமம்" நிகழ்விலே அன்புத்தம்பி "கடுங்குத்து" கங்காதீபனால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதை இது.சாதாரணமாக எல்லாரும் கடந்துவருகின்ற பல்கலை,விடுதி(Hostel) வாழ்க்கையின் சுமை, சுகம் என பல விடயங்களை சுவை பட சுமந்து வருகின்றது கவிதை.வாசித்துத் தான் பாருங்கோவன்)



அகவை அது கண்டிருந்தோம்

அனுபவங்கள் ஏதுமில்லை

கனவு பல கண்டு வந்தோம்

கண்டதொன்று ஏதுமில்லை!!!







அண்டமெல்லாம் அங்கிருக்கு

கம்பஸ் ஒன்று கிடைத்துவிட்டால்

உன்னை விட வேறு இல்லை

எத்தனையோ பேர் சொல்லித் தந்தர்!!!




தெருவோரத் தென்னையேறி

தேங்காயின் ருசிபார்த்து

கொழுகொழு மாந்தோப்பில்

மாங்காயின் ருசிதேடி!!!



பள்ளியை கட்டடிச்சு

பகல்பூரா கிறவுண்டில் நிண்டு

ரியூசனில் கண்ணடிச்சு

ரோட்டோரம் சைட்டடிச்சு

வீட்டிலே பொய்யடிச்சு

பொறியியல் தழுவி வந்தோர் சிலர்






என்னத்தைத் தான் பயின்று வந்தீர்

வாழ்விற்கு வரையறைகள்

வரம்பு வரம்பாய் வகுத்திருக்க

புத்தகத்தில் முகம் புதைத்து

முழு இரவும் முகம் கழுவி

அயலட்டம் தெரியாமல்

அக்கம் பக்கம் பாராமல்

அம்மாவின் அரவணைப்பில்

அப்பிடியும் வந்திருந்தார் சில பேர்

"டேய்" அம்மவின் அதட்டலது

அங்கிருந்த கையெடுத்து

அணைத்துக்கொன்டோன் புத்தகத்தை


- அப்பிடித்தான் எங்கிருந்தோ வந்திருந்தவர்கள்

இணைந்துகொண்டோம் பல்கலையில்





கம்பஸின் பெயர் சொல்லி

காலமெல்லாம் சைட்டடித்தோம்

பஸ்ஸில் ஏறி பாவையர் கேட்குமுனே

பல்கலையின் பெயர் சொன்னோம்

அவனைய்ம் இவளையும்

இடைக்கிடையே கிசுகிசுத்தோம்

இதனாலே இணைத்துவிட்டு

இணைவதற்கு சோடியின்றி

நீலப்படம் பார்த்து

நிம்மதிகள் அடைந்து கொண்டோம்!!!



ஆங்கிலங்கள் விளங்காமல்

எத்தனையை மாறிப் படித்தோம்

எவனுமே சொல்லாமல்

எக்சாமில்(Exam) தெரிந்து கொண்டோம்



தம்மடிச்சோம் தண்ணியடிச்சோம்

வெறியின்றி வெறி பிடித்தோம்

அறிவொன்று கூடியதாய்

ஆட்டங்கள் போட்டு நின்றோம்

பைற்ஸ்(Bytes) தின்றவனும்

ஊத்தி அங்கே கொடுத்தவனும்

நடித்ததை நாமறிவோம்!!!



வெள்ளவத்தை பஸ் ஏறி

உள்ளொன்றும்இல்லாமல்

ஜீன்ஸ் மட்டும் மாட்டி

வந்துமாட்டிக் கொண்டோன்

எத்தனியோ எத்தனை பேர்?

எத்தனியோ நோண்டிகள் எம்மிடத்தில்??

வகை வகையாய் சொல்லிவிட

வாக்கியங்கள் போதவில்லை

இரவிரவாய் இராவின் இன்பமான நினைவுகளை

எப்பிடித்தான் எடுதுரைப்போம்!!!




தூசணங்கள், அம்மணங்கள்

தும்மலுக்கும் சொல்லிக் கொள்வோம்

"பு..." என்று சொல்லியே

புன்னகைக்கப் பழகிக் கொண்டோம்.

கோவத்தில் கண் சிவப்போர்

கல்குலேற்றர் எறிந்துடைப்போர்

தெரிஞ்வன் வருவான் என

கன்ரீனில் காத்திருப்போர்

காசு தருவானா என ஏங்கி நிற்போர்

காதருகில் செல்போனாய் கண்ணயர்ந்தோர்

வாளி வைத்தே வாழ்ந்து கொண்டோர்

வாயாலே வதைதெடுப்போர்

குளிக்காமல் கொலை செய்தோர்

நித்திரையில் பள்ளிகொண்டோர்

இத்தனைக்குள்ளும்

எப்பிடித் தான் நாம் இருந்தோம்???





எல்லாரும் எங்கிருந்தோம்

எத்தனை உணர்வுகளை

எமக்குள்ளே பகிந்து கொண்டோம்???

பெண்பிள்ளை போல்ஆண்பிள்ளை சிலரிங்கே

இன்னுமா மாறவில்லை

மைக் பிடித்துப் பேசுகிறார்

அச்சம் அங்கமெல்லாம்

நாணம் நாவெல்லாம்

நயனும் நடிப்பும்

சிரித்துக் கொண்டே

நாமிருக்க கலைந்துவிட்ட காலம

தைஎப்படித்தான் நாம் மறப்போம்???




லெக்சர் பல இருந்தோம்

லெட்டர்கள் எழுதி வந்தோம்

செமி(Semi) தான் வருகையிலே

குப்பி என்ற பெயரிலே -

எம்மைக் கொன்றவர்கள் எத்தனை பேர்

சத்தமின்றி சகித்துக் கொண்டோம்!!!



லெப்பையள் போல நாமங்கே

லெக்சர்களைக் கேட்டுக் கொண்டோம்!!!

கடைசி வாங்கிலே கண்ணயர்ந்து நாம்

தூங்கிகனவு பல கண்டெழுந்தோம்

கம்பனிகள் பல திறந்த காலங்கள் இனி வருமா???



கள்ள சைன்(Signature) அடிச்சோம்

கட் டடிச்சோம் கல்லுச் சுவருக்கும் கிஸ் அடிச்சோம்

பிள்ளைக் குட்டிக் காரர் போல

பெரும் பிஸியாய் நாம் திரிந்தோம்

லெக்சருக்கு வருவான்

லேசாக காய்ச்சல் என்பான்

பக்கத்திலை இருந்தவனுக்கும்

பல்லுக் கொதியென்பான்

குட்டித்தூக்கம் என்பான்

குறட்டிவிட்டுத் தானெழுவான்

அட்டையொன்று(File) தான் வைத்திருப்பான்

மட்டைக்குள்ளே ஏதுமில்லை

கையெழுத்து வைக்க காகிதம் வருகையிலே

கையிலுள்ள பேனையொன்றை

களவாகச் சுட்டிருப்பான் கிடைக்குமோ காலமொன்று

மீண்டுமொருமுறை செய்வதற்கு???




நொந்தவனை நோகடித்து

நோகாமல் நொங்கெடுத்து

நோண்டிகள் பலசெய்து

நேற்றிருந்த இன்பங்கள்

இனியெங்கே நாம் காண்போம்???



வந்தவரும் போனவரும்

வாழ்வியல் இன்பங்களை

அனுபவித்த இயல்பொன்றை

இங்கிதமாய் சொல்வதற்கு

இனிவருமா காலங்கள்???

வகையிட்டுIDifferentiation) தொகையிட்டு(Integration) வயதாகிப் போச்சுதையா!!!

தொகையிட்டுத் தொகையிட்டு

தொப்பையும் வந்திரிச்சு

சுட்டிகள் படிச்சு குட்டிச் சுவரானோம்???






பல்கலை வாழ்வின் பலசுவைகள்

பழகிய நினைவுகளின் பெரும் சுமைகள்

இன்றைய நினைவுகள் இனி நாளை எமக்கில்லை

எம் வழியே பிஸியாகி எமக்கென்று நிலையெடுப்போம்

எம்மையே நாம் மறப்போம்

எப்படித்தான் இருந்தாலும்

சங்கமத்தில் சங்கமித்தநினைவுகளை

சுமந்து கொள்வோம் நண்பர்களே...!!!




தம்பி கடுங்குத்துக் கங்காதீபனுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றிகள்.கடுங்குத்து கங்காதீபனின் பெயரைப் பார்த்து இவருக்கு ஏன் இந்தக் காரணப் பட்டப் பெயர் வந்தது என்று தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.எங்கடை மொறட்டுவைக் கம்பஸிலை சோதினை வருதெண்டால் எல்லாரும் தலை கீழா நிண்டு குத்திக்கொண்டு (அதி தீவிரமா,படுபயங்கரமா படிக்கிறதைத் தான் "கோட் வேட்டிலை" குத்திறது எண்டு சொல்லிறது ) இருக்கேக்கை இவர், 1 மணிக்கு சோதினையெண்டால் 12 மணிக்கு கம்பஸுக்கு வந்து பெடியளெல்லாம் கடைசிக்கட்டமா ரிவிசன்(Revision) செய்ஞ்சு கொண்டிருக்கேக்கை நோட்சை(Notes) வாங்கிப் பாத்திட்டு என்ன பாடம் இண்டைக்கு சோதினை நடக்கப் போகுது எண்டு கண்டு பிடிச்சிட்டு அதுக்குப் பிறகு தான் அங்கை இருக்கிற பெடியளட்டை நோட்சை வாங்கி அதிலை வச்சு கடுங்குத்து குத்த தொடங்குவார்.பேந்தென்ன சோதினைக்கு போகு மட்டும் ஒரு மணித்தியாலம் கடுங் குத்து தான்.அப்ப கடுங்குத்துக் காரர் தானே...???மீண்டுமொர்ரு நன்றி!!!

Sunday, August 29, 2010

கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞனடா...!!!

"இது ஒரு பொன்மாலைப் பொழுது" என்ற பாடலில் தொடங்கிய வைரமுத்துவின் திரையிசைப் பாடலெழுத்தாளர் பயணம் அண்மையில் வந்த "உசிரே போகுது..." வரைக்கும் மிகவும் வெற்றிகரமாகவும்,தமிழ் சினிமாப் பாடலாசிரியர்களிடையே வைரமுத்துவுக்கு ஒரு சிம்மாசனத்தையும் கொடுத்து,தொடர்ந்தும் முன்னோக்கி,இன்னும் மேல்நோக்கி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.



இந்தியாவின்,தமிழ்நாட்டின் மதுரைமாவட்டத்திலுள்ள தேனியில் பிறந்து,வளர்ந்த வைரமுத்து வரிந்த,வரைந்த வரிகள் எல்லோர் வாய்க்குள்ளும் எப்போதும் முணுமுணுக்கப்படுவதற்கு அவற்றில் காணப்பட்ட உயிரோட்டமும்,இலகு தமிழ் நடையும்,அடுக்கடுக்கான வரிக்கோர்வைகளும் காரணங்களில் சிலவாக அமைகின்றன.


எனக்கு மட்டும் தான் வைரமுத்துவைப் பிடிக்கும் என்பது போலவும்,வேறு எவருக்கும் வைரமுத்துவைத் தெரியாது என்பது போலவும்,அல்லது நான் தான் வைரமுத்துவைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கு அறிமுகப்ப்படுத்திவைப்பது போலவும் அல்லது ஐந்து முறை தேசிய விருதுபெற்ற வைரமுத்துவுக்கு நான் அளிக்கும் இந்த அங்கீகாரத்தால் தான் அவர் வெளியே தெரியப் போகின்றார் என்பது போலவும் எண்ணி நான் பதிவிடுவதாக தப்பாக நினைக்கவேண்டாம்.அதை ஏற்கனவே பலர் தேவைக்கும் அதிகமானவளவு என்னைவிட மிகச் சிறப்பாக,நன்றாக வைரமுத்துவை வாழ்த்தி,வரவேற்று,செய்துவிட்டார்கள்.நான் என் மனதில் பட்ட,எனது குருட்டுப் பார்வைக்கு,இருட்டிலே தெரிகின்ற கறுப்புபு வைரமுத்துவைப் பற்றி சிறிது பதியலாம் என்று தான் நினைக்கின்றேன்.அவ்வளவு தான்.




காதல் ததும்பிவழிகின்ற,காதல் சொட்டும் வரிகளோடு காதலை,உறவுகளின் சேர்க்கையை,காதல் பிரிவை,காதல் சோகத்தை,இளைஞர்களுக்கு அறிவுரையை,சமூகநீதியை முன்னிறுத்தி என்று ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சினிமாப் பாடல்களிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை ஒழுக,வகைவகையாய் தந்துவிட்டார் வைரமுத்து.
ஒவ்வொரு பாடலையும் ஆறி அமர்ந்து,ஆராய்ந்து ஆறேழு பதிவே எழுதிப் போடலாம்.ஆனால் அவற்றைவிட வைரமுத்துவின் கவிதையைப் பற்றிப் பேசவே இந்தப்பதிவு.


அதுவும் வைரமுத்துவே அவற்றை வாசிக்கும் போது அதிலுள்ள கம்பீரமும்,சந்தி பிரித்து,சத்தம் ஏற்றி இறக்கி,வந்திருப்பவர்களை வயிறு நிறைய வைப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்துவே.முறுக்கிய மீசையுடன்,கறுத்தச்சிங்கம் கர்ச்சிக்கின்றபோது அந்த கர்ஜனையிலே,கம்பீரத்திலே, தமிழின் வலிமை தெரியும்,பெருமை புரியும்.தமிழ் திக்கத் திகட்டி சுவைத்து இனிக்கும்.அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம்,கருவாச்சி காவியம்,காதலித்துப் பார் என்ற பல கவிதைத் தொகுப்புக்களிடையே முழுமையாக எனக்கு வாசிக்கக் கிடைத்தது ஆனந்தவிகடனில் தொடராக வந்து கொண்டிருந்த கருவாச்சி காவியம்.


அப்பா என்ன வரிகள் அது.அந்த மாட்டுக் கொட்டிலுக்குள் கருவாச்சிக்கு பிள்ளைபிறந்த விதத்தை வைரமுத்து எழுதியிருந்த விதம்,இப்படியெல்லாம் பொம்பிளைகளை கஸ்ரப்படுத்தி பிள்ளையைப்பெற ஏன் கடவுள் வைத்தானோ என்று எண்ண வைத்தது.அப்பா,அவளின் வறுமை,சூழல்,அதோடு பிள்ளையைப் பெற தன்னந் தனியே அவள் பட்டவலிகளை தானே அனுபவித்தது போல,அவளாகவே மாறி,அவளின் வேதனைகளை வெளிக்கொண்டுவந்திருந்தார்.இதெல்லாம் கவிப்பேரரசுவின் கவித்துவம் என்ற மகா சமுத்திரத்தில் சிறு துளிகள் மட்டுமே.



இவற்றையெல்லாம் விட அண்மையில் தனது பிறந்தநாளுக்கு கவனிபாரற்றுக்கிடந்த மூத்த கவிஞர்களை கணக்கெடுத்துப் பாராட்டும்,பரிசும் உவந்தளித்த அந்த நல்ல குணம் உட்படப் பல குணாதிசயங்கள் அவரிடம் எனக்குப் பிடிக்கின்ற போதும் ஒரு உறுத்தல் இருக்கின்றது.கலைஞரைக் கட்டிப் பிடித்து,அவர் காலடியில் கிடப்பது.அதுவும் அரசிய்ல கலப்பற்று,கவிதைக்காய்,தமிழுக்காய்,கலைஞரின் கைபிடிப்பாராக இருந்தால், அந்தக்கைகுலுக்கலில் களங்கம் இல்லாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ப்து என் சின்னதொரு அவா.



கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞன் உண்மையில் கவனமாகாப் பாதுகாக்கப்படவேண்டிய கன்னித் தமிழின் சொத்தே.

வைரமுத்துவின் கவிதைகளில் எனக்குப் பிடித்த/உங்களில் பலருக்கும் பிடித்த,எழுதவோ படிக்காவோ தெரியாதென்பதால் எழுதாமல் விடப்பட்ட வைரமுத்துவின் அம்மா பற்றிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.பார்த்து ரசியுங்கள்.

Saturday, August 7, 2010

மோட்டுச் சிங்களவன் - 25 வது பதிவு

எமது சமூகத்தில் பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.அவ்வாறு புரையோடிப் போயிருக்கின்ற பழக்கவழக்கங்களில் சிலவற்றை , ஏன் நாம் பின்பற்ற வேண்டும்? என்ன நோக்கத்திற்காக பின்பற்ற வேண்டும்?அதில் ஏதாவது தவறுகள் உள்ளதா?அல்லது காலத்திற்கேற்றாற் போல அதில் நாம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமா?இவ்வாறெல்லாம் நாம் ஆராய வேண்டுமா? அல்லது ஆராய்ந்தும் அதே பழக்கவழக்கத்தையே கண்மூடித்தனமாக செய்துகொண்டேயிருக்கின்றோமா?அல்லது ஒருவன் அப்பிடி யோசித்தால் கூட அவனை அப்பிடி யோசிக்க விட்டிருக்கிறோமா?ஏன் யோசிக்க விட மறுக்கிறோம்?ஏன் கண்ணாடிக்கூண்டுக்குள்ளேயே தொடர்ந்தும் இருந்தும் யோசித்துக் கொண்டிருக்காமல்,வெளியே வந்து யோசித்தால் என்ன? என்பது போன்ற ஒரு சில கேள்விகளை நாங்கள் எப்போதாவது எம்மை நோக்கி கேட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடையாகும்.அப் பழக்கவழக்கங்களில் சிலவற்றில் எனக்கு தவறாக பட்டவற்றை,உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.


அது சிலரது பார்வைகளில் சரியாக இருக்கலாம்.இது தனியே எனது பார்வை மட்டுமே.சமூகத்தை நோக்கி விரலை நீட்டுவதற்கு நான் யோக்கிதையானவனா, அந்த யோக்கிதை எனக்கு இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.சரி எனக்கு அந்த யோக்கிதை இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஆனால் நானும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தவன்.சரியோ தவறோ நானும் அதற்கு பொறுப்பாளி அல்லது நானும் அதற்கு உடந்தையாக இருந்திருப்பேன் அல்லது நானே அந்த தவற்றை செய்திருக்கலாம்.ஆகவே நான் சார்ந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற ஒரு சின்ன உரிமையிலேயே நான் எனது சமுகத்தின் மீதான எனது விமர்சனங்களை முன்வைக்கின்றேன்.இதற்கு எதிர் விமர்சனங்கள் இருப்பின் நான் அவற்றை திறந்த மனதோடு தாராளமாக வரவேற்கிறேன்.



தலைப்பை பார்த்தவுடன் என்னை ஒரு துணிந்த கட்டை என்றெல்லாம் தப்பாக எண்ணவேண்டாம். நானும் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி ஒப்பிக்காத,ஒப்பிக்கத் தெரியாத,ஒப்பிக்க முடியாத ஒரு சாதாரண,சராசரியான எழுததாளன் அல்லது பதிவர் தான்.ஆனால் எனக்கு உதை விட்டால் வேறு ஒரு பொருத்தமான தலைப்பு கிடைக்கவில்லை.அதனால் மேற்சொன்னவாறே தலைப்பிட்டுள்ளேன். மேற்படி சொல்லை நான் எனது ஊர்களிலும்,பிரதேசங்களிலும் பல பேர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்."அவங்கள் உப்பிடித்தான் பின்னே ஏன் மோட்டுச்சிங்களவர் எண்டு சொல்லுறது" எண்டு எல்லாம் கதைக்கக் கண்டிருக்கிறேன்.நீங்களும் உதைப்போல் கேள்விப் பட்டிருப்பிர்கள் அல்லது கண்டிருப்பீர்கள் அல்லது நீங்களே பேசியும் இருப்பீர்கள்.அதை விடுவோம்.அதற்கும் த்லைப்புக்கும் பெரிதாக ஒரு சம்பந்தமும் இல்லை.அவர்கள் மோடர்களாய் இருந்தார்களோ,இருக்கிறார்களோ அல்லது இருப்பார்களோ என்பதை ஆராய்வது எனது கட்டுரையின் நோக்கம் அல்ல.அவர்கள் எப்பிடியும் இருந்துவிட்டிட்டு போகட்டும்.பிரச்சினையில்லை. நாங்கள் அவர்களை மோடர்கள் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது பற்றி அலசுவதே எனது நோக்கம்.



இவ்வாறு கூறிக்கூறியே அவர்களை குறைத்து மதிப்பிட்டதும்(Under Estimation) எம்மை நாமே இறுமார்ந்து கூட்டி மதிப்பிட்டதுமே(Over Estimation) இன்று எமது சமூகம் நடுத் தெருவில் நிற்பதற்குரிய காரணங்களில் ஒன்று என்பது எனது கணிப்பு.அந்தக்காலத்திலிருந்தே(50,60 களில் இருந்து)இதைச் சொல்லிக் கொண்டு நாங்கள் இன்றும் அங்கேயே நிற்கிறோம் அல்லது அதை விடவும் கீழே போய் விட்டோம்.இன்று அவர்கள் எங்கேயோ சென்று விட்டார்கள். கல்வியில், தொழில்நுட்பத்தில்,கலாசாரத்தில்,சமூக அபிவிருத்தியில், பொருளாதாரத்தில்,சமூக அந்தஸ்த்தில்,வாழ்க்கைத் தரத்தில் எல்லாவற்றிலும் அவர்கள் எங்கேயோ சென்று விட்டர்கள்.



நான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவன் என்ற வகையில் கூறுகிறேன். இந்தத் துறையில் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள விகிதாசாரமானது அவர்களது சனத்தொகைக்கும் எங்களது சனத்தொகைக்கும் உள்ள விகிதாசாரத்திலும் மிக அதிகமானது.தொழில்நுட்பம் மட்டமல்ல இன்னும் எல்லா துறைகளிலும் நாம் இன்னும் அதிகமாகவே அவர்களை விடப் பின் தங்கியிருக்கிறோம்.கல்வியில்(அன்று கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை எதிர்த்துப் போரிட்ட எமது சமூகம் இன்று அந்தப் புண்ணியத்தாலே தான் கொஞ்சம் எம் சமூக மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பிக் கொண்டிருக்கிறது),விளையாட்டில்,பொருளாதாரத்தில்(வெளிநாட்டு வருமானம் இல்லாத நிலையில் எம்மவர்களின் நிலையைப் பார்த்தால் விளங்கும் வண்டவாளம்),சமூக அபிவிருத்தியில்(ஒரு ஆணும் பெண்ணும் கதைத்தால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கீத் முந்தியொரு பதிவிலே சொன்னது போல புணர்ந்து கொண்டிருக்கின்ற நாயைக் கல்லால் எறிந்து துரத்துவதைப் போல "கூ..." அடித்து குழப்புவது தான்),சினிமா பொழுது போக்குகளில்(தமிழக சினிமாவைத் தவிர்த்து ஈழத்து சினிமாவை கற்பனை பண்ணிப் பாருங்கள்),சமூக அந்தஸ்த்தில்(எங்களில் படித்தவனெல்லாம் படித்தவன் மாதிரியா நடந்து கொள்கின்றான்? படித்தவனெல்லாம் அபிவிருத்தியடையாதவன் மாதிரி நடந்து கொள்ளும் போது சமூகம் எப்படி அபிவிருத்தியடையும்?),வாழ்க்கைத் தரத்தில்(எங்களட்டை காசு எவ்வளவு தான் இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் தரம் இப்போதும் ஆதிகாலத்திலேயே இருக்கின்றது)என பல துறைகளிலும் நாம் பின் தங்கியிருக்கிறோம்.நாங்கள் 50,60 களில் சொன்னதையே இப்போதும் சொல்லிச் சொல்லி இன்னமும் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் அவர்கள் எட்டிப் பிடிக்கமுடியாத அளவு தூரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்(இந்த எட்டி பிடிக்கமுடியாதவளவு தூரத்தை அடைவதற்காக ஏற்படுத்தப் பட்ட நாடகம் தான் இந்த பிரச்சினையெல்லாம்)



ஆகவே இந்த சிந்தனையை நாம் மாற்ற வேண்டும்.அவர்கள் மோடர்களாக இருந்தாலென்ன, இல்லாவிட்டால் தானென்ன. நாங்கள் எங்களைப் பார்ப்போம்.அவர்கள் எப்பிடியிருந்தாலும் பரவாயில்லை.நாங்கள் எங்களை உயர்த்தியும் அவர்களை தாழ்த்தியும் மதிப்பிடும் போது இலக்கு நோக்கியதான் எமது உத்வேகம் குறையும்.நாம் இதை மாற்றி எங்களை தாழ்த்தியும் அவர்களை உயர்த்தியும் மதிப்பிடும் போது இருவருக்குமிடையேயான திறனடிப்படையிலான வித்தியாசம்(Skill Gap) அதிகரிக்கும்.அது எங்களுக்கு இலக்கு மீதான மலைப்பை தரும்.நாங்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டுமென்று புலப்படும்.அது எங்களை கடின உழைப்பை செய்ய தூண்டும்.அது எங்களுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தும்.அதனால் நாங்கள் இலக்கை நோக்கி வீறு நடை போட முடியும்.



இதே சிந்தனை எமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.எமது போட்டியாளரை(அவரைப் பார்த்து பொறாமைப்படத் தேவையில்லை) நாம் உயர்த்தி மதிப்பிட்டும் எம்மை தாழ்த்தியும் மதிப்பிட்டால் எமது உத்வேகம் அதிகரிக்கும்.நாம் கடும் முயற்சி செய்வோம்.உழைப்பின் ஈற்றில் நாம் வெல்ல முடியும். ஆகவே மேற்படி எமது மனோபாவத்தை சற்றே மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.என்ன சொல்லுறியள்.



(என்னடா இது நாங்களெல்லாம் 50,100,200 எண்டு செஞ்சரி, டபிள் செஞ்சரியெல்லாம் அடிச்சுக் கொண்டு போகேக்கை,இவனொருத்தன் 25 வது பதிவை முக்கி,முக்கி எழுதிப்போட்டு, ஏதோ பெரிசாக் கிழிச்ச மாதிரிக் கதைக்கிறான் எண்டு நினைக்கதையுங்கோ.உண்மையாகவே நானொண்டையும் கிழிக்கயில்லைத்தான்.எண்டாலும் ஏதோ சும்மா எழுதுவம் எண்டு தொடங்கி இண்டைக்கு இருபதைஞ்சு பதிவு வரை எழுதி முடிச்சதே பெருங்காரியம் தான்.நீங்களெல்லாம் ஒரு மாதத்திற்குள்ளேயே மிகச் சுலபமாக கடந்துவந்திருக்கும் இந்த இலக்கை அடைய எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வரைக்கும் தேவைப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த இருபத்தைந்து பதிவுகளுக்கிடையில் யாழ்தேவி என்னை நட்சத்திரமாக்கியமையும்,ஈழத்து முற்றம் என்னை அவர்களது பதிவுக்கு பதிவெழுதிப் பங்களிக்குமாறும் என்னை அழைத்தமையும் எனது பெரிய சாதனைகளாக கருதுவேன்.இது வரைக்கும் என்ரை அலுப்புகளையும் தாங்கிகொண்ட நட்புக்களுக்கு பெரிசா ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்ளுறதோடை தொடர்ந்தும் அலுப்பைத் தாங்கிறதுக்காக இப்பவே பிறக்ரீசுகளைத்(ப்ரcடிcச்) தொடங்குங்கோ.பிறகு ஜெயசூரியா,கங்குலி போறதும் வாறதுமா வாறமாதிரி என்றை பதிவைப் பாத்து 'டக்' அவுட்டாகிப் போயிடக் கூடாது கண்டியளோ.அது தான் முன்னெச்சரிக்கையாச் சொல்லி வைச்சனான்.

Saturday, July 31, 2010

வீட்டுச் சாப்பாட்டின் அருமை

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.



கோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.




மாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள்ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.


நாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்டுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.



வடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் "நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிடிக்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ)



அறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு போடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.



சிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில் மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.



சாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும் சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும் சமையற்காரனதும் சுத்தத்தை. கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.




பின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கிட்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.


சொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே "அவக்" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது. சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.



சரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள் எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.



அங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்?.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை....!!!...வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.

Saturday, July 24, 2010

ரமிலில் பேஷ்வோம்(தமிழில் பேசுவோம்)

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத்தமிழெங்கள் உயிரான உயிரிலும் மேல் என பல அடுக்கடுக்கான வசனங்களை அழகாக பலர் பேசித்திரிந்தாலும் அந்த அமுத மொழியை,அழகு தமிழை,சங்கத்தமிழை பேச இன்று பலர் பின்னடிக்கின்றார்கள்.தமிழைப் பேசுவதால் தமது தராதரம் ஏதோ தறிகெட்டுப் போவதாக தாமே தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டு மற்றவர்களையும் தப்பாக வழி நடாத்துகின்றார்கள்.
ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் தான் என்ன?



ஆங்கிலத்தில் கதைப்பவர்கள் ஏதோ அதி மேதாவிகளாக சாதாரண மக்களால் தாம் நினைக்கப் படுவதாக தாமே நினைத்துக் கொள்வதுவும்,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் ஏதோ தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்கள் போல காட்டிக் கொள்ள வெளிக்கிடுவதுவும், சாதாரண மக்கள் இவர்களை ஏதோ முற்றும் அறிந்த முனிவர்கள் போல எண்ணுவதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.ஆங்கிலம் என்பது தமிழைப் போன்றதொரு சாதாரண மொழி அவ்வளவு தான்.அதைப் பார்த்து வாயைப் பிளக்க வேண்டிய தேவையில்லை.



ஆனால் அது ஒரு இணைப்பு மொழியாக(Linking Language) இருக்கின்றபடியால் மற்றைய மொழிகளை விட சற்று பிரபலமாகியிருக்கின்றது.அவ்வளவு தான்.அதற்காக ஆங்கிலம் தெரிந்தவன் பெரிய கொம்பு என்று ஒன்றும் இல்லை.அதனால் நாம் ஆங்கிலம் பேசுபவர்களைப் பார்த்து மலைப்படையவோ அவர்களை எங்களை விட பெரியவர்களாகவோ உயர்த்தி பார்க்க தேவையில்லை.இதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.




அத்துடன் இன்றைய தமிழ் சினிமாக் கலைஞர்கள் அதிலும் மிக முக்கியமாக நடிகைகள் தமிங்கிலிஷ்(தமிழ் + ஆங்கிலம் கலந்த கலைவை)இல் கதைத்து தமிழைக் கொல்லுகிறார்கள்.வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள் தமிழின் மீதான தங்களது காதலால் என்று சொல்லிக் கொண்டு(உண்மை என்றே வைத்துக் கொள்வோம்) தமிழ் ரசிகர்களைக் கவர்தலாகிய இரண்டாவது மாங்காயை அடிக்க தமிழைப் பயன் படுத்துகிறார்கள்.


அது தப்பில்லை. வேற்று மொழியிலிருந்து தமிழ் கதைக்க வருபவர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அது தமிழ் மேலும் உலகெலாம் பரவ,தமிழ் இவ்வுலகில் நின்று நீடிக்க உதவும். அதே நேரம் தமிழை இலகுவில கற்று விட முடியாது.உச்சரிப்புக்கள், இலக்கணங்கள் என்று எங்கடையளே பிழை விடும் போது அந்நியர்களை பிழை என்று கூறுவதோ, அல்லது அவர்களை தமிழ் பேச அனுமதிக்காமையோ ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையாக அமையாது.அவர்களின் தவற்றை சுட்டிக்காட்டி தமிழை போதித்து நாமும் தமிழ் வளர்க்க வேண்டும்.



அவர்க்ள் தான் பரவாயில்லை வேற்று மொழிக்காரர்கள்.தமிழ் நடிகைகளுக்கு, தமிழர்களுக்கு என்ன நடந்தது. இதை தான் "எல்லா மாடும் எதுக்கோ ஓடுதென்று சுப்பற்றை கேப்பை மாடும் கிளப்பி கொண்டு வெளிக்கிட்டுதாம்" எண்டு சொல்லுறது.(எதுக்கெண்டு வாய்க்கை வருது ...ஆனால் வேண்டாம்.விடுவம்)


இதன் போது தெனாலியில் கமல் பேசும் ஒரு காட்சி எனது ஞாபகத்துக்கு வருகின்றது.ஜெயராமை பேட்டி எடுக்க வந்த பேட்டி எடுக்கும் பெண்மணி கமல் இடம் பேட்டி எடுக்கும் போது அவர் "கொஞ்சம் பகிடியாக் கதைப்பம் என்ன " எண்டிட்டு இலங்கைத் தமிழில் கேட்பார்."ஏன் வரேக்கையெல்லாம் வடிவா வாங்கோ போங்கோ என்று தானே கதைச்சுக் கொண்டு வந்தனியள். மைக்கைப் பிடித்தவுடனே ஏன் ஒரு ஆங்கிலம் கலந்த "வான்கோ","போன்கோ","எப்டி","ஈ சய்" எண்டு தமிழைக் கொல்லுறியள்" என்று கேட்கும் போது அந்த பெண் பதில் சொல்லமுடியாமல் பல்லிளிக்க "பதில் சொல்ல ஏலாது என்ன ?தமிழை ஒரு "இதுவாத்" தான் பாவிக்கிறியள்" என்று சொல்லுவார்.அது முற்றிலும் உண்மை.தமிழை ஒரு "இதுவாத்" தான் எல்லாரும் பாவிக்கிறோம்.




அவர்கள் பேட்டிகளின் போது தமிங்லிஷ் இல் கதைப்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.சினிமா சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை செலுத்துவதால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ(தாங்கள் மேதாவிகள் இல்லை எனபதை தெரியாமலோ)இவர்கள் கதைக்கும் மொழி,பாணி,(Style),உச்சரிப்பு என்பன எமது சமூகத்தினுள்ளும் புகுந்து ஒரு பாரிய சமூக நோயாக உருவாகி வருவதை நாம் கண் கூடாகக் காண முடியும்.சமூகத்தின் ஓர் அங்கமாகிய நாம் சினிமாக் கலைஞர்களை எமது வழிகாட்டிகளாக(Role Model) எண்ணுவதை தவிர்ப்பதுவும் இந்த தமிழ்க் கொலைகளை ச்ற்று குறைக்க உதவும்.


அத்துடன் எனக்கு பாரதியின் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்பதை "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று உல்டா பண்ணி கூட்டங்களில் முழங்கி புது விளக்கம் கொடுப்பவர்களை கண்டாலும் கடுப்பு தான் வரும்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக மயமாக்கல் கொள்கையால் உலகம் ஓருலகக் கோட்பாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இதனால் ஆங்கிலம் தவிர்ந்த தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன.பாரதி இதை தீர்க்க தரிசனத்துடனோ இல்லை தீர்க்க தரிசனமில்லாமலோ இல்லை என்ன நோக்கத்திற்காக கூறினாரோ தெரியாது. ஆனால் இன்றைய தேதியில் "மெல்லத் தமிழினிச் சாகும் "என்பது சரியாக பொருந்தி வருகின்றது என்பதே எனது தாழ்மையான் கருத்து.


ஆகவே எங்கள் எல்லாரிடமும் உலகின் மூவாயிரம் ஆண்டுகளிற்கு மேற்பட்ட மிகவும் தொன்மையான்,இனிமையான பைந்தமிழைக் காப்பாற்றியாகவேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.எங்களது முன்னைய தலைமுறை எங்களிடம் தந்த அந்த கொஞ்சு தமிழை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.(ஏற்கனவே அரிய பல சொற்களை நாம் இழந்து வருகிறோம்)அப்படியான பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து நிற்கும் போது,அவனை அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க தூண்டும் வகையில் மேற்சொன்னவாறு அவர்களைஅந்த சிந்தனையிலிருந்து மாற்ற முயலும் கயவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது.


ஆங்கில மொழியில்(English Medium) கல்வி கற்பதற்கு இன்றைய பெற்றோர்கள் தூண்டுகிறார்கள்/உந்துகிறார்கள் அதிலுள்ள சாதக,பாதக தன்மைகளை அலசி இன்னொரு பதிவை நான் ஏற்கனவே இட்டுள்ளதால் அதை இங்கே சென்று படியுங்கள்.
இப்பெடியெல்லாம் நான் கூறுவதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் என்று யாரும் தப்பாக எடை போட வேண்டாம்.ஆங்கிலம் தேவையான் ஒன்று.


உலக மொழியான் ஆங்கிலத்தைக் கற்பதால் தமிழில் இல்லாத பல நூல்களைக் கற்க முடியும்.அத்துடன் பல நன்மைகள் உள்ளன.தமிழன் தனக்குள் கதைப்பதற்கு எதற்கு ஆங்கிலம்.தமிழைக் கதைக்கும் போது " ஐ மீன்"," யூ மீன்","ஐ ஸே",தமிங்லிஷ் எல்லாம் எதற்கு?.அத்துடன் மழலைகளின் முதல் மொழி "அம்மா","அப்பா".அதைக் கூடவா "Mummy,Daddy "என்று மாற்ற வேண்டும்.



தமிழன் இல்லாத நாடு இல்லை என்று என்னதான் பீற்றினாலும் அங்கெல்லாம் தமிழ் என்ன பாடுபடுகிறதென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தமிழின் தாய்வீடான தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை சொல்லி மாளாது.தமிழை ஒரு பாடமாகக் கூடத் தயங்கும் மாணவர்கள்,(ஏனெனில் சமஷ்கிருதம் போன்ற பாடங்கள் எடுத்தால் இலகுவாக புள்ளிகள் பெறலாமாம்)நீதிமன்றம்,காவல்துறை,பாடசாலை என்று எதிலுமேயில்லாத தமிழ்,ஆனால் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி என்ற பெயரில் கோபாலபுரத்துக் கட்டிலில் மட்டும்.



மேற்படி துறைகளில் தமிழைக் கொண்டுவர முடியாத,தமிழைக் காப்பதாகக் கூறிக் கொண்டு செய்தியாளர் மாநாடுகளில் கவிபடிப்பதுவும்,செம்மொழி மாநாடு நடத்துவதாகவும் கூறித் திரியும் ஒரு ஜென்மம் தமழரின் தலைவராக.தமிழ்த் தலைவரின் "பேரன்ஸ்" கோடிகளை உருட்டி விளையாடுவதோ "சண்", ரெட் ஜயன்ஸ் மூவிஸ்",நைற் கிளவுட்ஸ் என்று ஆங்கிலப் பெயர்களில்.தன் குடும்பத்தில் தமிழைக் காக்கத் தெரியாதவர் உலகத் தமிழைக் காக்கப் போகிறார்?



இவ்வாறாக தமிழைப் பாடை கட்ட முயன்றாலும் ஏதோ இன்னும் தன்மானத் தமிழர்கள் அங்கும் இருப்பதால் தமிழ் அங்கே மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.ஈழத்தில் தமிழுக்கு அந்தளவுக்கு கவலைக்கிடம் இல்லாவிட்டாலும் "இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான புத்தம் புதிய திரைப்படங்களைப்" பார்க்கும் நாமும், ஈழத் தமிழ் வரலாற்றில் முதன் முறையாக, அந்தத் தொலைக் காட்சிகள் விடும் தமிழ்ப் பிழைகளை அல்லது திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்புக்களை அல்லது விளம்பரத்திற்காக தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை முன்னுக்கு கொண்டு வர முயலும் அவர்களின் முயற்சிகளை முறியடித்து, நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து தமிழைக் காப்போம்.

Friday, July 2, 2010

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் கனா கண்ட காலங்கள், முந்தியொருக்கால் உப்புடித் தான், சொல்ல மறந்த கதை, துள்ளித்திரிந்ததொரு காலம், ஞாபகம் வருதே

பறந்து திரிந்த பள்ளிப் பருவங்களில், பட்டாம் பூச்சியாய் மனம் பறந்துதிரிந்த "அந்த " இடத்தில்,பசுமையோடு பதிந்து போன பலவற்றுள் சிலவற்றை மீட்டுப் பார்க்கின்றேன்.இன்றும் அசைபோடுகின்ற போது,நகமும் சதையும் போல ஒட்டியிருந்த உறவுகள், தோளுக்குத் தோள் கொடுத்த நட்புக்கள், வசியம் செய்த கண்கள், எல்லாம் பசையாய் ஒட்டிக் கொள்கின்றன நெஞ்சதனை விட்டுப் போக மனமில்லாமல்.



நாங்கள் ஒ எல்(O/L)வரை படிச்ச சயன்ஸ் சென்ரர்(Science Center) இலை ஒரு கிணறொன்று இருந்தது.நாங்கள் ரியூசனுக்குப் போய் பாடம் தொடங்க முதலும்,ஒரு பாடம் முடிஞ்சு அடுத்த பாடம் தொடங்க முதலும், எண்டு வகுப்பிலை இருக்கிற நேரத்தை விட மிச்ச நேரத்திலை எல்லாம் இருக்கிறது அந்தக் கிணத்துக் கட்டிலை தான். பின்னேரத்திலை 2, 3 மணி போலை மட்டும் இருக்கேக்கை பின்னுக்கு கொஞ்சம் சுடும். மற்றும் படி ஒரு சோலி சொரட்டும் செய்யாதது அந்தக் கிணறு.ஆனால் நாங்கள் அந்தக் கிணத்துக்குச் செய்த அநியாயங்கள் எக்கச்சக்கம்.துப்ப வேணும் எண்டொரு பீலிங்(Feeling) வந்தாலோ அல்லது ஒருத்தன் துப்ப நான் ஏன் சும்மா பாத்துக் கொண்டிருக்கோணும் எண்டு துப்பும் போதோ,அல்லது துப்பவேணும் எண்டு இல்லாட்டிலும் ஏன் துப்பினாலென்ன எண்டு நினைக்கும் போதெல்லாம் துப்பிறது அந்தக் கிணத்திலை தான்.




முடிஞ்சு போன பேனைகள், பேனை மூடிகள், பேனைக் குச்சுக்கள், பழைய கொம்பாஸ் பெட்டிகள் எல்லாத்தையும் தூக்கி அதுக்கை தான் எறியிறது.இல்லையெண்டால் சிலவேளை இந்தா பார் அந்த மீனுக்கு கல்லாலை எறியிறன் எண்டு சொல்லிக்கொண்டு, அம்பிடிற சின்னக் கல்லுகளாலை மீனுக்குப் படாது எண்டு தெரிஞ்சும் கிணத்துக்கை கல்லெறியோணும் எண்டதுக்காகவேண்டி அதுக்கை எறியிறது.இப்பிடி எங்கடை ரியூசன் நிர்வாகி(Director)அமாவாசையிலை(ஏன் அப்பிடி வந்ததெண்டு யோசிக்குக் கண்டு பிடியுங்கோ பாப்பம்) இருந்த கடுப்பெல்லாத்தையும் அவரிலை காட்டேலாது எண்ட படியால் அவற்றை ரியூசன் கிணத்திலை காட்டிறது தான் எங்கடை வேலை.



அந்தக் கிணத்துக்குப் பக்கத்திலை பாத்றூம்(Bath room) மாதிரி ஒரு பக்கம் திறந்த ஒரு மறைப்புக் கட்டிடம்.அதுக்கை தான் ரியூசனுக்குப் படிப்பிக்க வாற சேர் மார் ஒண்டுக்குப் போறவை.(எல்லாரும் இல்லை)அப்பிடி ஒண்டுக்குப் போக வரேக்கை அந்தக் கிணத்தடி, அதுகளுக்குப் பக்கத்திலை அங்காலை இஞ்சாலை நாங்கள் நிண்டால் "டேய் எல்லாரும் சூரிய நம்ஸ்காரம் செய்" எண்டுவினம்.சூரிய நமஸ்காரம் எண்டால், அவையள் அந்த பாத்ரூமுக்குப் போற நேரம் நாங்கள் மற்றப் பக்கமாத் திரும்பி கிழக்கப் பக்கமா சூரியனைப் பாத்து நமஸ்காரம் செய்ய வெளிக்கிட்டிடுவம்.பின்னேரத்திலை கூட சூரியன் மேற்கை நிக்கையுக்கையும் நாங்கள் கிழக்கை பாத்துத் தான் சூரிய நமஸ்காரம் செய்வம் எண்டது வேறை கதை.




சிலவேளையிலை பக்தி முத்திப் போய் சில பேர் "அரோகரா .. " "அரோகரா.. " எல்லாம் சொல்லி கும்பிட வெளிக்கிட்டிடுவாங்கள்.உண்மையிலை அவை அப்பிடியெல்லாம் செய்யச் சொல்லிச் சொல்லுறதில்லை.அவையள் உள்ள போகேக்கை சில பேர் திரும்பிப் பாத்து உவை உதுக்கை என்ன செய்யினம் எண்டு ஆராய்ச்சியெல்லாம் பண்ண வெளிக்கிட்டிடுவம் எண்டு எங்கடை கற்பூர புத்தி பற்றி முதலே தெரிஞ்ச படியாலை தான் அப்பிடி எங்களை சூரியநமஸ்காரம் செய்யச் சொல்லுறவை.ஆனால் நாங்கள் "அரோகரா .. " எல்லாம் சொல்லி பூசையே நடத்திப் போடுவம்.கையெல்லாம் தலைக்கு மேலை தூக்கி, வெளியிலையிருந்து பாக்திறவன், பகதிப் பரவசமான, தங்கப் பழமான பெடியன் எண்டு நினைக்கிற மாதிரி நடிப்பு அதி அற்புதமாயிருக்கும்.



சேர் மார் 'அலுவல்' முடிச்சு வந்து , "ஆ .. சரி சரி...சூரிய நம்ஸ்காரம் செய்தது காணும்.. உங்கடை வேலையப் பாருங்கோ ..." எண்டு சொல்லிற வரைக்கும் சூரிய நம்ஸ்காரம் நடந்து கொண்டேயிருக்கும். என்ன என்ரை பதிவைப் பாத்து நீங்களும் சூரிய நம்ஸ்காரம் செய்து போடாதையுங்கோ..
(இந்தப் பதிவு எங்கள் பிரதேசங்களில்,படிக்கும் மாணவர்களாயினும் சரி ஆசிரியர்களாயினும் சரி யாராகினும்,எவ்வளவு பௌதீக, நிதி மற்றும் இதர வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கற்று வரவேண்டியிருக்கின்றாது என்பதற்கு ஒரு சிறு ஆதாரமாகக் காட்டவேயன்றி,அந்த ஆசிரியர்களை கேலி படுத்தவோ, அல்லது வேறு எந்த தீய நோக்கங்களுக்காகவும் எழுதப் படவில்லை)

Thursday, July 1, 2010

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

ஈழத்த்மிழரின் வாழ்விய்லை சிறிதளவாவது தொட்டுச் சென்ற மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் வரிகளைத் தலைப்பாக்கி,தெனாலிபடத்தில் வந்த கமலின் கதையை கருவாக்கி,ஈழத்தமிழர் தம் வாழ்வை கதையாக்கி,அதை உருவேற்றி, பதிவாக்கி,வலையேற்றுகின்றேன், எங்களுக்கே உரமாகிய எம்மினத்தவர்க்காக.



"கண்டிக் கதிர்காம்க கந்தனே" எண்டு வேலை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு "எல்லாம் சிவமயமெண்டு சொல்லுவினம் ஆனால் எனக்கு எல்லாம் பய மயந்தான்.நிண்டால் பயம், இருந்தால் பயம்,நாடு பயம், காடு பயம்,காலா உனைக் காலால் உதைப்பனோவென்று பயமெனக்கு. ஓஒ.. பூரான் பயமெனக்கு,பூனை பயமெனக்கு,பூனை தின்கிற எலியும்,எலி தின்கிற பாம்பும் பயமெனக்கு.திறந்த கதவு பயமெனக்கு,பூட்டின கதவெண்டால் எங்கை திறபட மாட்டுதோ எண்டு மெத்தப் பயமெனக்கு.. உந்த இங்கிலிஸும் பயமெனக்கு. இப்பிடிப் பேசிக்கொண்டிருக்கேக்க்கை தொண்டைத்தண்ணி வத்தி செத்துப் போடுவனோ எண்டும் பயமெனக்கு" என்று கமல் பேசும் தொடர்ச்சியான பயவரிசையைத் தொடர்ந்து இதற்கென்ன காரணமென்னவென்று மனநல டாக்டரான ஜெயராம் கேட்ட போது அதுவரை தன் நடிப்பாலும், செய்கையாலும்,கதையாலும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்து விட்டு சராசரி ஈழத்தமிழன் போல் மாறி அவனுக்கேயுரிய அப்பாவித் தனத்துடன் கமல் பதில் சொல்லும் காட்சி கண்ணை கலங்கச் செய்யும்.




"நான் சின்னப் பொடியனா இருக்கேக்கை என்றை அப்பாவைச் சுட்டுப் போட்டு வடிவான என்றை அம்மாவின்ரை வடிவையும் கெடுத்துப் போட்டு அந்த ஆமிக்காரர் போட்டாங்கள்.அம்மா அப்பிடியே அழுது கொண்டே இருந்தா. அம்மாவின்ரை கண்களில் தாரை தாரையாகத் தண்ணீ.எனக்கும் சின்னப் பெடியன் எண்டதாலை ஒண்டும் செய்யேலாமல்ப் போட்டுது.நான் கல்லுகளைத் தூக்கி எறிஞ்சன்.என்னையும் பிடிச்சுத் தூக்க்கி எறிஞ்சு போட்டுப் போட்டாங்கள்." எண்டு கமல் சொன்ன அந்த வசனம் உண்மையிலேயே நடந்த ,நடந்திருக்கக்கூடிய சம்பவம்.



அந்தக் கமலைப் போல் போரால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு,உறவுகளைத் தொலைத்து,உறுப்புக்களை இழந்து, விழுப்புண் அடைந்து எத்தனை சோகங்களுடனும், மனச் சுமைகளுடனும் "ஏதோ இருக்கிறம்" என்று வாழ்கின்ற,மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பற்றியதே இந்தப் பதிவு.போரினால் நேரடியாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், அங்கவீனங்கள்,இடப் பெயர்வுகள்,பட்டினிச் சாவுகள்,பொருளாதார, மருத்துவத் தடைகள் போன்ற அவலங்கள் காலப் போக்கில் மறக்கபடலாம்(மறக்கப் படும் என்பதல்ல எனது கருத்து,மறந்து போகப் படலாம்.அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலி.மறக்கப் படலாம் என்று நாம் வெறுமனே கூறிவிட முடியாது)ஆனால் இவற்றின் விளைவுகளால் ஏற்படுகின்ற மனத் தாங்கல்கள்,மன அழுத்தங்கள் ,வடுக்கள் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தே வரும்.அவர்களைச் சார்ந்த அடுத்த தலைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்தப் போரின் வடுக்களைச் சுமந்து கொண்டு,நடைப் பிணங்களாக,நாங்களும் ஏதோ பிறந்து விட்டோம் என்பதற்காகவும்,எஞ்சிய ஏனைய உறவுகளையும் தனியே விட்டு விட்டு சாகவும் முடியாது என்ற் என்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற் நிர்ப்பந்ததிற்காக வாழ்கின்ற,வெறும் உடம்புகள் மட்டுமே ஊர்வலம் போகின்றவர்களுக்க்காகவே இந்தப் பதிவு.




கடந்த மாதம் தனது கடைசி மகளுக்குப் பிறந்திருந்த பேரனைப் பார்த்துப்,ப்ராமரிப்பதற்காக, ஒரு சராசரி புலம்பெயர் உறவொன்றின், தாய்மார் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் பிள்ளைப்பேறுகளை அந்தந்த நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு வருகின்றார்களோ அதே போல என் பெரியம்மாவும் சுவிஸ் சென்று விட்டு திரும்பியிருந்தா.திரும்பி வரும் போது அக்காவின் மகன், அதாவது எனது மருமகனின் உடல் நிலை சரியில்லாததால் இலங்கை திரும்புவதில், சம்மதமில்லாமலே திரும்பியிருந்தார்.பெரியம்மா வந்ததும்,ஊரிலிருந்த வந்த இன்னுமொரு அக்கா, அத்தான், மற்றும் அக்காவின் இரு பிள்ளைகள், மற்றும் நானும் போய் வரவேற்றோம்.சுகமும் விசாரித்தோம்.கொழும்பிலிருந்து வீடு செல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனமும் வந்த பின்னர் விமானப் பயண அசதியால் தூங்கிக் கொண்டிருந்த பெரியம்மாவை எழுப்பினால் ஆள் அசைவில்லை.ஆனாலும் நாங்கள் ஆடிப் போகவில்லை.



ஏதாவது மரணத்தைப் பார்த்தால், மரண வீட்டிற்குச் சென்றால், அல்லது கவலையில் யோசித்தால் உடம்பெல்லாம் விறைத்து,தொடர்ச்சியாக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பெரியம்மா மயக்கமாகவிருப்பா என்பது எங்களுக்குத் தெரியும்.இந்த மயக்கத்திற்கும் காரணம் அதுவென்பதும் அது எதனாலென்பதைக் கூறுவதுடன் பதிவிற்குள் நுழைகின்றேன்.



எங்களை அம்மா, அப்பா தூக்கித்திரிந்த மிகச் சின்ன வயதுகளில்,தாடி வைத்து தொப்பி போட்ட இந்திய இராணுவம் எங்கள் வீதிகளில் நடமாடிச் சென்றதெல்லாம் என் மனதில் நிழலாடுகின்றது. அவர்கள் இங்கிருந்த காலங்களிலெல்லாம் செய்த கொடுமைகளைப் பட்டு அனுபவித்தவர்களில் மிச்ச மீதியாய்த் தப்பிப் போனவர்களில் மிச்சம் சொச்சம் பேர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன்




இந்திய இராணுவம் வருகின்றதென்றால் இளைஞர்கள்,யுவதிகள்,புதுமணத் தம்பதிகள் உட்பட எல்லாரும் உயிரைக் காப்பாற்ற பயிர் வைத்த தோட்டங்களுக்குள்ளும், பதுங்கி ஒதுங்க பங்கருக்குள்ளும்,கோவில்கள்,தேவாலயங்களிலும் தஞ்சம் தேடிக் கொள்ளுவார்கள்.பெரியம்மாவும் பெரியப்பாவும் மூன்று பிள்ளைகளையும் (அண்ணன், 2 அக்கா) அம்மம்மா, அம்மப்பாவின் பொறுப்பில் விட்டு விட்டு பக்கத்திலிருந்த கத்தரித் தோட்டத்துக்குள் பதுங்கிக் கொண்டனர்.அங்கே அவரின் கெட்ட காலம், எறும்பு கடிக்கிறதென்று சொறிந்து கொள்வதற்காக எழும்பிய அவருயிரை தறையின் மறுபக்கத்தில் கறுவிக் கொண்டிருந்த இந்திய இராணுவ வீரனொருவனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு வந்த ரவை பறித்துச் சென்றது.



எந்தவொரு குழுவுடனுமோ சம்பந்தப் படாமல், எறும்புக் கடியை சொறிவதற்காக எழும்பிய பெரியப்பா,தன் கண் முன்னாலேயே தனது மிகச் சிறிய வயதிலேயே ,திருமணமான சிறு காலத்திலேயே,எந்தவொரு வரும்படியும் இல்லாத நிலையிலே மூன்று சின்னஞ் சிறு பிள்ளைகளையும் அதுவும் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளையும் தன் தலையிலே பொறுக்கவிட்டுச் சென்றதை ,அவர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை நேரில் கண்ட பெரியம்மாவுக்கு மரண வீடுகளைப் பார்க்கும் போதோ ஏதாவத் கவலை வரும் போதோ ஆழமாக யோசித்தாலோ மயக்கம் ஏற்பட்டு விடும்.இது அவவிற்கு ஏற்பட்ட பாதிப்பு




இதைப் போல் அண்மையில் நான் பத்திரிகையில் வாசித்துக் ஒரு செய்தி.17 வயதுச் சிறுவனொருவன் தனது இரு கைகளையும் செல் வீச்சினால் இழந்திருந்தான்.அதே செல் வீச்சில் இவனின் இரு தங்கைகளையும் இழந்தினால், அதைப் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தந்தைக்கும் பைத்தியம் பிடித்து விட்டது.எஞ்சியது இவனும் தாயும்.இவன் தனது அன்றாடம் ஒன்றுக்கு, இரண்டுக்குப் போவதற்குக் கூட இன்னொருவரின் துணையை நாட வேண்டிய மகா கொடுமை.வருமானமேயில்லாத இக் குடும்பத்தில் இருந்து கொண்டு தன்னால் போதியளவு பணம் திரட்ட முடியாதென்பதால் தனது ஒரு கையையாவது பொருத்த உதவுமாறு வினயமாக கேட்டிருந்தான்.



எனது பெரிய்ம்மாவிற்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டும் சொல்வதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்தவில்லை.அவரைப் போல்,அல்லது அவரை விட இன்னும் இன்னும் எத்தனை பேர் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டார்கள்,காரணமின்றிக் கொலை செய்யப்பட்டார்கள்,வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கடித்துக் குதறப் பட்டார்கள், இன்னும் எத்தனை எத்தனை?எனக்கு தெரிந்தது ஆயிரத்தில் ஒன்று,தெரிந்ததில் நான் சொல்வது ஓராயிரத்தில் ஒன்று,வெளியே வராமல்,வர விடப் படாமல்,வரமுடியாமல் சுட்டு விழுத்தப் பட்ட சடலங்களோடு செத்துப் போன உண்மைகள் எத்தனை?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா?இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்?இந்த அப்பாவிகளுக்கு யார் நீதி வழங்குவார்கள்?



உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,அதன் மிகப் பெரும் மக்கள் தலைவரான பிரதமரைப் படுகொலை செய்தது சரியா பிழையா என்று சிந்திக்க முடியாமல் சரியென்று சொல்ல முடியாவிட்டாலும் பிழையென்று மறுதலிக்க முடியாமல் இந்தியப் படைகள் ஆடிய கோரத் தாட்டவங்கள் குறுக்கே வந்து குழப்பி விடுகின்றன.பாரத தேசத்தின் பார்ப்பனியர்களின் பாராளும் பிரயாசைக்கு ஈழத் தமிழினத்தைப் பகடைக் காயாக்க முற்பட்டுப் படுதோல்வியடைந்ததால், படையெடுத்துப் பணிய வைக்க முயன்றனர் படைக்கஞ்சா ஈழத்தமிழனை.



எதிர்த்தது பாரிய படையென்றும் பார்க்ககாது மோதித் தான் பார்த்த ஈழத் தமிழன் இழந்தது என்னவோ ஏராளம் தான். உயிரிழந்து,உறவிழந்து,உடுக்க உடையின்றி,படுக்கப் பாயின்றி,உலகின் மூலை முடுக்கு நாடுகளின் வாயில்கள் தட்டி தஞ்சம் கோரினார்கள்.பல நாடுகள் தஞ்சம் கொடுத்தாலும்,நீங்களேல்லாம் இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பியள் என்று வாசற் கதவை அடித்துச் சாத்திய நாடுகளும் இருக்கவே செய்கின்றன.



பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியின் பணிப்பாளாரான ஜெகத் கஸ்பார் அடிகளாருக்கு ஈழத்து இள நங்கையொருத்தியின் கடிதம் அவர் கண்களைத் திறந்து,கசிந்துருக வைத்து, அவரின் ஈழத்தமிழர் மீதான் பார்வையையே புரட்டிப் போட்டது.பத்து வயதில் அந்தச் சிறுமியிருந்த போது வீட்டுக்கு வந்த இந்தியப் படைகள் தன் தந்தைக்கு முன்னால் தாயைத் துகிலுரிய முற்பட்டதையும்,துள்ளிய தந்தையைப் போட்டுத் தள்ளிவிட்டு தன் தாயைத் தனக்கு முன்னாலேயே ருசித்து விட்டுச், அவரின் அலுவலையும் முடித்து விட்டுச் சென்ற இந்தியப் படைகளின் ஈனச் செயல் பற்றிக் கூறியிருந்தாள்.அதை நேரில் பார்த்த அந்தச் சிறுமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.இப்போது நீங்கள் ஜெகத் கஸ்பார் தனது ஈழத் தமிழர் மீதான பார்வையை மாற்றியது சரியா பிழையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
(இதே மாதிரியான ஒரு கதை தான் கமலுக்கு தெனாலியில் வருகின்றது)



இதை மாதிரி எத்தனை கதைகள்?அமைதிப் படை என்ற பெயரில் வந்து ஆடிய ஆட்டங்க்ள் எத்தனை?மூத்திரம் பெய்யச் சென்றவனையும், காலையில் பாண் வாங்க பேக்கரிக்குச் சென்றவனையும், கத்தரித் தோட்டத்துக்குள் ஒளிக்கச் சென்றவனையும் சுட்டுத் தள்ளிய கொடுமைகளை,கற்பளிப்புக் கொடுமைகளை அனுபவித்தவர்களது, கண்டவர்களாது மனநிலை எப்படியிருக்கும்1991 இல நடந்த துன்பிய சம்பவத்திற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையே பழிவாங்கிய இந்தியப் அரசு நடாத்திய /நடாத்துவித்த இறுதியுத்தததால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த ரெட்பார்ணா என்ற அமைப்பு கூறியுளது.அது மட்டுமல்லாது இந்தப் போரிலே குண்டடிபட்டு, விழுப்புண்ணடைந்து, தமது கருமங்களை ஆற்றவே மற்றவர்களைத் தங்கி நிற்கும் சகோதர சகோதரிகள் வீட்டு மூலைகளுக்குள்ளே ஒதுக்கப்பட்டு விட்டோம்,மற்றவர்களில் தங்கியிருக்கிறோம் என்று எவ்வளவு வேதனைப் படுவார்கள்.அது மட்டுமல்லாது எத்தனை கற்பழிப்புக்கள்,வன்புண்ர்ச்சிகள் எங்கள் சகோதரிகளுக்கு நடந்தேறியுள்ளன.



எத்தனை எத்தனை உயிரிழப்புக்களை நேரிலே கண்ட சிறுவர்கள், சடலங்களைத் தாண்டி வந்த அவர்கள் கால்கள், குண்டுகளுக்கு, பயந்தோடிய அவர்களது மனநிலை எப்படியிருக்கும்.இரததமும், சதைப் பிண்டங்களும் சடலங்களும் அவர்கள் கண்ணை விட்டு என்றும் செல்ல மாட்டா. எதைப் பார்த்தாலும் ஒரு பயம்,ஒரு பதட்டம், நடுக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.சிலவேளைகளில் எதற்கும் இரங்காத கல் நெஞ்சு படைத்தவர்களாக அவர்கள் மனங்களை இந்தப் போர் மாற்றக்கூடும். அவர்கள் எல்லோருடைய கல்வி, குடும்ப வாழ்க்கை, தொழில் என்பன எவ்வாறு அமையப் போகின்றது.வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்.



இந்தச் சிறுவர்கள்,இந்த மக்கள் வளார்ந்து வரும் போதுஅவர்கள் குடும்பத்தில்,சமூகத்தில், எவ்வளவு பிரச்சினைகளைப் எதிர் நோக்கப் போகின்றார்கள்?இவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளின் உடல் நலன்கள் என்றெல்லாம் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.ஆன போதும் அதனை எதிர் கொள்வதற்கு உளவளாத்துணைச்செயற்பாடுகளோ,சமுதாய மட்டத்திலவர்களை மீட்டெடுப்ப்பதற்காக மீட்பு நடவடிக்கைகளோ கல்விமான்களாலோ,அமைப்புக்களாலோ,அரசியல் கட்சிகளாலோ ஆரம்பிக்கப் படாதிருப்பது எமது சமுதாயத்தின் துரதிஸ்டமே.சுனாமி நேரத்தில் கூட எமது மக்களில் ஒரு பகுதியினர் உள்வளத்துணை ஆலோசனைகளிப் பெற்றிருந்தனர்.ஆனால் இப்போது இவ்வளவு இழப்புக்களுக்குப் பிறகும் எதுவுமில்லை.




தெனாலியில் வந்த தெனாலிராமனை விட முழு அளவிலும் பகுதி அளவிலும் அதிகளவில் மன நிலை பாதிக்கப் பட்டு இன்றும் எத்தனை பேர் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.(ஐ.நா செயலாளரோ அமெரிக்க ஜனாதிபதியோ கேட்டும் இலங்கை அரசாங்கம் எந்தவொரு யுத்தக் குற்றங்களையும் புரியவில்லையாம்.அதனால் எனக்கும் அதைப் பற்றி ஏதும் தெரியாது.