Friday, February 4, 2011

ஓடுங்கோடா செம்மரியளே...!!!

எஙகளுக்குப் புகழ்ச்சி பிடிக்காது எண்டாலும்,எங்கடை சேர்மார், டிரெகடர்மார்(Director) "செம்மரியளே","மாடுகளே","எருமையளே","நாயளே","பேயளே","பிசாசுகளே" எண்டு எங்களை விளித்துப் புகழாமல் இருக்கமாட்டினம்.மைகிறேசன் விசா(Migration Visa) எடுத்து நிரந்தரமாப் நாட்டை விட்டுப் போறதைப் போலவோ அல்லது ஸ்ருடென்ற்(Student), வேர்க்(Work) விசா எடுத்து ரெம்பரரியாப்(Temporary)போறதைப் போலவோ எங்களை டியூசனுகளாலை கூடுதலா டெம்பரரியாகவும் சிலவேளைகளில் பேர்மனன்ட் ஆகவும் திரத்துவினம்.




இவ்வாறான பல துரத்தப்பட்ட துன்பியல் சந்தர்ப்பங்கள் எங்கடை வாழ்க்கையிலை இருந்தாலும் சயன்ஸ் சென்டர்(Science Center) இல் ஓ/எல் (O/L) வரை படிக்கும் போது திரத்தப்பட்டதில் இரண்டு துரத்தல்கள்,மெகா துரத்தல்கள் தான்.அவற்றில் ஒன்றைத் தான் இன்று பதிவதாய் உத்தேசம்.இது நடந்தது நாங்கள் ஒ/ல் படிச்சுக்கொண்டிருக்கேக்கை.தமிழர் பிரதேசங்களில் ரியூசனுகள் எல்லாம் கூடுதலாக கொட்டிலுகளில் தான் நடாத்தப்படும்.கொட்டில் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்காக,கொட்டிலெனப்படுவது யாதெனில், தகரத்தாலோ,கிடுகாலோ வேயப்பட்ட கூடாரம் என்றாவது இப்போதைக்குப் புரிந்தால் சரி.எங்களது பிரதேசங்களின் போர்ச்சூழல்கள்,அதனால் வந்த பொருளாதார வரட்சி என்பன கொட்டிலுகளுக்குள் தான் எம் கல்வியை முடக்கிவிட்டிருந்தது.



ஒரு ரியூசன் எண்டால் இஞ்சை கொழும்பிலை எப்பிடி ரொயிலற்(Toilet) வாசலிலை கிச்சன்(Kitchen) இருக்கிற கொடுமையெல்லாம் இருக்குதோ அதைபோல அங்கை ஒரு கொட்டிலுக்குப் பக்கத்திலை இன்னுமொரு கொட்டில் இருக்கும்.இரண்டு கொட்டிலுக்குமிடையிலை இடைவெளி இரண்டு அடிகூட வராது. ஒரு கொட்டிலிலை வாத்தியார் "இளையான் குடிமாறநாயனாரைப் பற்றி இலக்கியப் பாட்டுப் படிச்சு, பொருள் சொல்லிக் கொண்டிருக்க, இஞ்சாலை மற்றக் கொட்டிலுக்கை இன்னொரு வாத்தியார் மனித இனப் பெருக்கம் பற்றிப் படிச்சுக் கொண்டிருப்பார்.இரண்டு வாத்திமாரும் நல்லா போட்டிபோட்டுக் கொண்டு வாய் கிழியக் கத்திப் படிப்பிச்சுக் கொண்டிருப்பினம்.





கொட்டிலின்ரை கரையிலை இருக்கிற பெடியனுக்கு, ஒரு காதுக்கை இளையான்குடிமாற நாயனாரும் மற்றக் காதுக்குள்ளை இனப்பெருக்கமும் கேக்கும்.கொஞ்ச நேரத்தாலை அவனுக்கு எதைக் கேக்கிறது எண்டு தெரியாமல் இளையான் குடிமாற நாயனாரின்டை பாட்டைக் கேட்டு நான் என்ன பாட்டே எழுதப் போறன்.அதை விட இனப் பெருக்கத்தைக் கேட்டாலும் ஏதோ வாழ்க்கைக்கு கொஞ்சம் பிரியோசனமா இருக்கும் எண்டிட்டு அங்கால்ப் பக்கக் காதை வடிவாத் திறந்து, அங்காலை நடக்கிறதை வடிவா கேட்கத் தொடங்கிடுவான்.அதோடை அங்கால் வகுப்பு பெட்டையளை சைற் அடிச்சுக் கொண்டிருக்கலாம்.சின்னக் கல்லுகள் எடுத்து அவகளின்ரை காலுக்குக் கீழை எறிஞ்சு விளையாடிக் கொண்டிருக்கலாம்.சிலவேளைகளில் சிரிப்பாளுகள்.சிலவேளைகளில் முறைப்பாளுகள்.சிலவேளைகளிலே பேசாத பேச்செல்லாம் பேசுவாகள்.என்ன தான் இருந்தாலும் அந்தப் பேச்சு வாங்கிறதிலையும் ஒரு "இது" இருக்குத் தான்.கரையிலை இருக்கிற அவன் மட்டுமில்லை, வகுப்பிலை இருக்கிற எல்லாரும் உதை தான் செய்து கொண்டிருப்பாங்கள்.



உதை மாதிரித் தான் ஏ.எல்(A/L) படிக்கேக்கையும் மற்ஸ்(Maths)காரருக்கு நல்லையா சேர் இஞ்சாலை படிப்பிச்சுக் கொண்டிருக்கேக்கை அங்காலை பக்கத்திலை பயோ(Bio)காறருக்கு தம்பர் சோலொஜி(Zoology) இல்லாட்டில் குணசீலன் பொட்னியோ(Botany) படிப்புச்சுக் கொண்டிருந்தால் மற்ஸ் வகுப்பு அந்த மாதிரித்தான் போகும்.தம்பரட்டை பெட்டையள் குட்டு வாங்கிறதையும்,தம்பர் பெட்டையளின்ரை கொப்பியைத் தூக்கியெறிஞ்சு "ஓடடி என்ரை முகத்திலை முழியாதையடி" எண்டு திரத்திறதையும்,குணசீலன் "நாயே,பேயே, என்னத்துக்கு இஞ்சை வாறனியள்.அம்மா அப்பவின்ரை காசையும் கரியாக்கி,அதுகளையும் பேக்காட்டி,உங்களையும் நீங்களே பேக்காட்டிக் கொண்டு, பேருக்கு பையோ படிக்க எண்டே வாறனியள்?" எண்டு இதை விட இன்னும் காரசாரமாவெல்லாம் பேச்சு விழும்.மற்ஸ் பெடியளுக்கு இஞ்சை நல்லையர் எழுதிற கணக்கு உள்ளை போகாது.(பின்ன என்னெண்டு போகும்).நல்லையா சேரும் பேசுவார்."டேய் உங்கை என்ன பராக்குப் பாக்குறியள்.உங்களையும் உப்பிடி விட்டால் தான் திருந்துவியள்.பேசாமல் கணக்கைச் செய்யுங்கோ பாப்பம்" எண்டு எங்கடை பராக்கை திருப்பிறதுக்காண்டி சிலவேளைகளிலை சில "உண்மைச் சம்பவங்களை" ச்சொல்ல வெளிக்கிடுவார்.ஆனால் பெடியள் கவனிக்கோணுமல்லோ!!!




இனிக் கொட்டிலுகளைப்பாத்தாலும் ஒரு 4,5 பேர் ஒன்றாக இருக்கக்கூடின மாதிரி நீட்டு வாங்கில்கள் மாதிரித்தான் மேசைகள் இருக்கும்.மேசையிலே இடமேதும் மிஞ்சாமல் மேசைமுழுவதும் பேனைகளால்,வட்டாரி,பிரிவாரி கூர்களினால் கிறுக்கப் பட்டிருக்கும்.பெடியள் எல்லாம் கணக்கைத் தான் படிச்சு மேசையிலை எழுதினவங்களாக்கும் எண்டு நினைச்சுப்போடாதையுங்கோ.ஒரு பெடியனையும் இன்னுமொரு பெட்டையையும் கூட்டித் தான் அதிலை எழுதியிருப்பாங்கள்.ஒரு நண்பனின் காதலை அவன் காதலிப்பவளிடம் அல்லது அவளின் தோழிகளுக்கு மறைமுகமாகத் தெரிவிப்பதற்கு அவனது நண்பர்களோ அல்லது சிலவேளைகளில் ஒருவனே தான் இன்னாரைத்தான் காதலிக்கிறேன் என்று தன் நண்பர்களுக்கும் தான் நேசிப்பவளுக்கும் தெரிவிப்பதற்கும் இது ஒரு ஊடகமாகப் பயன்படும்.




அந்தக்காலத்திலையே பேஸ்புக்கும் எஸ்.எம்.எஸ் ஐயும் கண்டுபிடிச்சிருந்தாங்கள் எண்டால் அந்த மேசையள் எல்லாம் உந்தக் குத்துக்கள்,கிறுக்கல்களையட்டையிருந்து தப்பியிருந்திருக்கும்.இணைந்த இதயங்களைத் துளைத்துச் செல்லும் அம்புகளும்,அந்த இதய்ங்களுக்குள் காதலர்களின் முதல் எழுத்துக்களும்,கண்களினூடு இரத்தம் சிந்துவதாக வரையப்பட்ட கிறுக்கல்கலும் கால்ம் கடந்தும் காதல் பேசிக் கொண்டிருக்கும்.காதலர்கள் பிரிந்திருந்தாலும் காலம் காலமாக காதல் செய்துகொண்டிருக்கும்.புதியதலைமுறைக் காதலர்களுக்கு,அந்தக் காதல்களின் ஆழத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும்.




கொட்டிலுக்குக் கீழை செம்மண் புழுதி போட்டு ந்நிரவப்பட்டிருக்கும்.யாராவது செருப்பைக் கழட்டிப் போட்டு, ஏ. கே(A.K)த தனமா(ஆர்வக் கோளாறைத் தான் ஏ. கே எண்டு ஸோட் அன்ட் ஸ்வீற்றாச் சொல்லுறது பாருங்கோ)வகுப்பைக் கவனிச்சுக் கொண்டிருந்தால் பின்னுக்கு இருக்கிறவங்கள் செருப்பை எடுத்து மண்ணுக்கை தாட்டுப் போடுவாங்கள்.வகுப்பு முடிஞ்ச பிறகு அவன் நிண்டு கண்ணிவெடி எடுக்கிற மாதிரித் தான் எல்லா இடமும் கிளறி எடுப்பான்ன். சிலவேளையிலை அதை பெட்டியளின்ரை வாங்கிலுக்குக் கீழையும் தட்டி விடுவாங்கள்.அவனும் பெட்டையள் போகும் மட்டும் பாத்துக் கொண்டிருந்து எடுத்துக் கொண்டு போறதைப் பாக்க பாவமாயும் இருக்கும் பம்பலுமாய் இருக்கும்.அதோடை மண்ணுக்கை இருந்து கால் எல்லாம் உழக்குப் பட்டு,ரியூசன் முடிஞ்சு வீட்டை போகேக்கை சீமெந்து குழைக்கிற வேலை செய்து போட்டுப்போற மாதிரித் தான் கால் எல்லாம் சிவப்படிச்சிருக்கும்.






இப்படியான ஒரு கொட்டிலுக்கை அண்டைக்கு நடக்கவேண்டிய எங்கடை பாடத்து சேர் வரேல்லை.வகுப்பிலை பாடம் நடக்காத சந்தர்ப்பங்களிலை பெடியள் எல்லாம் எழும்பி கொட்டிலுக்குப் பின்னாலை போய் நிண்டு கொண்டுதான் கதைச்சுக் கொண்டு நிப்பம்.பெட்டைய்ள் தங்கடை இடங்களிலை இருந்துகொண்டு தங்களுக்கை கதைச்சுக் கொண்டிருப்பாகள்.நாங்கள் பெடியள் ஒரு 50 - 60 பேர் எண்டபடியாலை ஒரு கொஞ்சம், கொஞ்சமாப் பிரிஞ்சு கூட்டம் கூட்டமா நிண்டு கொண்டு ஒவ்வொருத்தரும் கதைச்சுக் கொண்டு நிண்டனாங்கள்.



இப்பிடி நிக்கேக்கை ஒருத்தன்,நிலத்திலையிருந்த மண்ணை கையிலை அள்ளி,கொட்டிலுக்குப் பின்பக்கம் கிடுகாலை கட்டியிருந்த மறைப்பை விலத்திப் போட்டு,பெட்டையளுக்கை எறிஞ்சு போட்டான்.உண்மையிலேயே தனியே ஆண்கள் பாடசாலைகளிலே படிச்சதாலோ என்னவோ தெரியாது, எங்களுக்கெல்லாம் அந்த வயதுகளில் எங்கள் மனங் கவர்ந்தவர்களைத் தவிர மற்றப் பெண்களெல்லாம் ஒரு விரோதிகள் போலவே தெரிந்தார்கள்.கத்திறது,கூவடிக்கிறது,பேசக்கூடாததெல்லாம் பேசிறது.பட்டம் பழிக்கிறது,இப்படி மண் எறியிறது,பேனையாலை எறியிறது,றொக்கற் அடிக்கிறது,பக்கத்திலை வட இந்துப் மகளிர் கல்லூரியிலை நெற்போல்(Net Ball) விளையாடிக்கொண்டு நிக்கிற பெட்டையளுக்கு சின்னக் கல்லுகளாலை எறியிறது எண்டு எங்கள் வக்கிரங்கள் வன்முறைகளாக வெளிவந்து கொண்டிருந்தது.(இப்பவெல்லாம் அப்பிடியில்லை.நல்ல பெடியள் தான். அட நம்புங்கோப்பா...!!!)



அவன் எறிஞ்சவுடன்,அவகளுக்கும் எங்களை மாதிரி பெடியங்களைக் கண்டால் பேயைக் காணிறது மாதிரிக் கிடக்குறதாக்கும், போய் எங்கடை டிரக்டர் அமாவாசையட்டைச் சொல்லிப்போட்டாகள்.சிங்கம் சத்தம் போடாமல் வந்திருக்குது.இந்த விசயம் ஒண்டும் தெரியாமல்,நாங்கள் கொஞ்சப்பேர் செற்றாகிக் கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்.அதுவும் அந்த எறி விழுந்த இடத்துக்குப் பக்கத்திலை அப்பிடியொரு எறியே விழுந்ததே தெரியாமல்.அமாவாசை வந்தவுடனை ,எறிஞ்சவங்கள் உட்பட, அமாவாசையைக் கண்ட பெடியள் எல்லாம் ஓடித் தப்பீற்றாங்கள்.நாங்கள் தான் அம்பிட்டம்.அமாவாசை பேச்செண்டால் பேச்சு.சொல்லி வேலை இல்லை.



ஓடுங்கோ செம்மரியளே இலை தொடங்கிப் பேச்செண்டால் அப்பா.தாங்கேலாது.ஆனால் அதிலை ஒரு துளியும் தூசணம் இல்லை.சத்திய்மாய் சொல்லுறன் மருந்துக்கும் இல்லை.ஆனால் தூசணத்தை விட கர்ண கொடூரமான வார்த்தைகள்.அதைக் கேட்டு அதன் அர்த்தம் புரிகின்ற போதுதான் இந்தத் தூசணத்தைப்பேசிறதை விட இது எவ்வளவு பெபோமன்ஸ்(Performance),பவர்(Power) கூடினது எண்டது தெரியவரும்.எல்லாரையும் கொட்டிலாலை திரத்திக் கொண்டு போய் ரோட்டிலை விட்டாச்சுது.எறிஞ்சது ஆரெண்டு சொல்லுங்கோ.இல்லாட்டில் எல்லாரும் ஒத்தபடி போய் கொம்மா கொப்பாவோடை வாங்கோ.இல்லையெண்டால் வரவேண்டாம் எண்டாச்சுது.



எங்கடை பெடியளட்டை அண்டைக்கும்,இண்டைக்கும்,எண்டைக்கும் இருக்கிற ஒரு நல்ல விசயம் என்னெண்டால் என்னதான் குறளி வேலை பாத்தாலும்,அதைச் செய்ஞ்ச குறளி யார் எண்டு தெரிஞ்சாலும் ஒருத்தரையும் எவர் வந்து கேட்டாலும் காட்டிக் குடுக்கமாட்டம்.அப்பிடியான எங்களட்டை அமாவாசை கேட்டால் மட்டும் சொல்லி போடுவமே. என்ன? அமாவாசை உறுக்கிப் பாத்தார்.ஒருத்தனும் மருந்துக்கும் வாய் திறக்கேல்லை. ஒருத்தனும் மசியிறான் இல்லையெண்டவுடனை ஓடுங்கோடா செம்மரியளே எண்டார்..


எங்களுக்கென்ன நாங்கள் பாட்ச்(Batch) முழுவதும் ஒன்றாய், ஒற்றுமையாய் ரோட்டிலை சந்தோசமா நிண்டம்.அடுத்தடுத்த நாளும் வீட்டையிருந்து ரியூசனுக்கு போற மாதிரி வெளிக்கிட்டுப் போய் ரோட் டியூட்டி(Road Duty) பாத்திட்டுப் போறது.அந்தப் பாதையாலை போய் வாற யாராவது பெடியளின்டை தாய் தேப்பன்,இன சனம்,ஆரும் தெரிஞ்சாக்கள் கண்டால், அவனுக்கு வீட்டை தோலுரிப்ப்த் தான்.இல்லையெண்டால் ஒரு பிரச்சினையுமில்லை.


ரோட்டிலையும் எவ்வள்வு நேரம் தான் சும்மா நிக்கிறது.அதுவும்
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியது. கவரேஜ் கூடின இடமது.எங்களை விட 2 வயசு கூடின அக்கா அவா.அவவுக்குப் பட்டம் "சிங்குச்சா".அப்பிடிக் கூப்பிட்டால் அவவுக்குப் பிடிக்காது எண்டு எங்களுக்குத் தெரியும்.உப்பிடியெண்டு விசயம் தெரிஞ்சால் கட்டாயம் அப்பிடித் தானே கூப்பிடவேணும்.அது தானே முறை,நாங்கள் தான் இப்பிடிக் கோணங்கித் தனமான பழ்க்கவழக்கங்களைப் பழகி வைச்சிருக்கிறம் அல்லோ?கத்தினம்,போனவள் திரும்பி வந்தாள்.தொடங்கினாள்.பிளடி பூல்(Bloody fool),இடியட்(Idiot),நொன் சென்ஸ் (Non Sense)எண்டு,இண்டைக்கு கொழும்பிலை நாங்கள் இன்று கேட்கிற பேச்செல்லாத்தையும் நாங்கள் அண்டைகே வாங்கிப்போட்டம்.


அதெல்லாம் முடிய எங்கடை பாட்சி(Batch) இல் தங்கச்சி மாரை வைச்சிருந்த,ஒரு சில அக்காமரும்(எப்பிடியோ அது அவையின்ரை கடமை தானே அது) எங்கள் மேல ந்ல்லபிப்பிராயம் வைத்திருந்த ஒரு சில நண்பிகளும் அமாவாசைக்கு ஐஸ் வைச்சு எங்களை உள்ளுக்கு எடுத்திச்சினம்.ஒரு 4,5 நாள் ரோட்டு வாசத்தை விட ரியூசன் வாசத்துக்கு உட்புகுந்தோம்.அப்பிடியே எங்கள் கலைக்கப்பட்ட படலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நேரம் வந்தால் கலைக்கப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பற்றிப் பதிவிடுகின்றேன்


அம்பிட்டம் - அகப்பட்டோம்
குறளி - நசுக்கிடாமல்/சத்தம் போடாமல் படு பொல்லாத ஆப்படிக்கிற வேலைகளைப் பார்க்கிற ஆக்களைச் சொல்லுறது. இது போன்றவற்றைத் தான் இந்தியாவில் மொள்ளமாரி,முடிச்சவுக்கி என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தவும்

அண்டைக்கு - அன்று

மசியிறது - மசிந்து கொடுக்கவில்லை என்றால் அவர்களின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கவில்லை என்று பொருள்படும்

பராக்கு - தன்னையே மறந்து வாய் பார்த்துக்கொண்டு நிற்றல்
தோலுரிப்பு - தோலுரிப்பு என்றால் ஊருக்கு நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய முகத்திரையக் கிழித்தல் என்று சொல்லலாம்.ஆனால் இங்கு சொல்லவந்த அர்த்தம் அதுவல்ல.இன்று உனக்கு வீட்டே தோலுரிப்பு என்றால்,இன்று உனக்கு வீட்டை நல்ல அடி/சாத்து விழப் போகுது என்று அர்த்தம்.

17 comments:

  1. யாழ்ப்பாணத்தில படிச்ச பெரும்பாலானவர்களின் அனுபவம் இது. நீங்கள் குறிப்பிட்ட சேர்மாரின் பெயர்களுக்காக தேவையானவற்றை பிரதியிட்டா ஒவ்வொருவரின் தனிக்கதைகள் வரும்.
    அதுசரி உந்தளவு விளையாட்டு விட்டும் எப்பிடி உருப்பட்டு வந்தீங்க???

    ReplyDelete
  2. பழைய science center ஞாபகங்களை இன்றும் மறக்காமல் சூப்பர் ரா சொல்லி இருக்கிறாய்... nice creation da...

    ReplyDelete
  3. பழைய science center ஞாபகங்களை இன்றும் மறக்காமல் சூப்பர் ரா சொல்லி இருக்கிறாய்... nice creation da...
    by Prasanna.G

    ReplyDelete
  4. உங்கட நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு.... :-)

    ReplyDelete
  5. Vada Hindu இல் netball விளையாடுற girls க்கு கல் எறியிற யார் என்று இப்போ தானே விளங்குது ...Anyhow..
    எளிமையான உரைநடை ..அருமையான நினைவுகள் ....பசுமையான ஒரு காலம் .மீண்டும் ஒரு தடவை அந்தக் காலத்துக்கு போய் வந்தாச்சு ....
    பிரமாதம் ...

    ReplyDelete
  6. மதிசுதா அவர்களே வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றி

    ReplyDelete
  7. ம்ம்ம். .. கார்த்தி, எங்கள் பெரும்பாலானோரின் கதை உப்புடித் தான்..உதென்ன உப்புடிச் சொல்லிப் போட்டியள்..உதைவிட இன்னும் எத்தினை திருகுதாளங்கள் செய்தவங்கள் எல்லாம் இன்னும் எங்கேயோ போயிருக்கிறாங்கள்.நீங்கள்,நானேதோ பெரிசாக் கிழிச்சமாதிரிக் கேக்கிறியள்

    ReplyDelete
  8. பிரசன்னா,வருகைக்கு நன்றி... இன்னும் சயன்ஸ் சென்டர்க் கதை எழுதக் கிடக்குது... எல்லாத்தையும் நாங்கள் ஆவணப் படுத்தி வைச்சிருந்தால் தான் எதிர்காலத்திலை ஒருக்கால் மீண்டும் மீட்டிப் பார்க்க நல்ல சந்தோசமாயிருக்கும்

    ReplyDelete
  9. நிமல், வருகைக்கு நன்றி... இதைச் சொல்லிறதிலை என்ன கிடக்குது...இதுக்கு நேர்மை அப்பிடி இப்பிடியொண்டும் பெரிசாச் சொல்லத் தேவையில்லை. நான் என்னை இனிதாக்கிய காலப் பகுதியொன்றை, என் வாழ்க்கையில் மிக அதிகமாக சந்தோசமா இருந்த காலப் பகுதியொன்றை.. அப்பிடியே மீட்டேன்.அவ்வளவு தான்.

    ReplyDelete
  10. தர்சன் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றி...

    ReplyDelete
  11. வாருங்கள் பெயரிலி,உங்கள் கருத்திடுகைக்கும் நன்றி...
    ஆனாலும் அந்தக் குறளி யாரென்று நான் சொல்ல்வே இல்லையே... சொல்லவும் மாட்டன். அது தான் எங்கடை பாட்ச் பிற்(Batch Fit).. மற்றுமொன்று..,நாங்கள் மட்டும் தான் எறிந்தோம் என்றில்லை. ஒவ்வொரு பட்ச்(Batch) உம் அவனவன் ஓ/ எல் வரேக்கை எறின்சிருப்பாங்கள்.அப்ப அவங்களையும் கேட்கவேணும்.. :P

    ReplyDelete
  12. சயன்ஸ் செண்டர் பற்றிய பதிவு அருமை வடலியூரான். எங்களையும் அமாவாசை கனதரம் கலைசிருக்கிறார். அதிலை குழப்படியை திட்டமிட்டு செய்தது எப்பவும் நான், ரமணன் சிவதேவன் போன்ற கடைசி வாங்கில் கோஷ்டி தான். நாங்களும் வகுப்புக்கா இருந்த பெட்டயளுக்கு மண் எறிஞ்சிருக்கிரம் ஆனா இன்னும் கொஞ்சம் முன்னேற்றமா. வட இந்து மதிலுக்குப் பக்கம் இருந்த ஒரு பாம்புப் புத்திலயிருந்து மண் கட்டியல எடுத்து கொட்டிளுக்கயிருக்கிற பனஞ் சிலாகயளுக்கு எறியுறது, அது மேலை உடைஞ்சு கீழை இருக்கிற ஆக்களிண்ட தலையல் கொப்பி புத்தகம் எண்டு எல்லா இடமும் விழும். முன் வாங்கிலில இருக்கிற பெட்டயளுக்கே அபிசேகம் செய்த ஆக்கள் நாங்கள். ஒருக்கா சிவத்தாருக்கு நானும் ரமணனும் கொட்டில் தகரத்துக்க மொட்டீன் கொயிலில நாலு சீன வெடிய ஒண்டாக் கட்டி வச்சு அது ஹாட்லி வரை வந்து குணசீலன் ஈறா எழுப்பிக் கிழி கிழி எண்டு கிழிச்சவங்கள். என்டையும் ரமணண்டையும் பிரிபட் பட்ச்சுக்கு ஆப்பு வச்சதே இந்த தாக்குதல் சம்பவம் தான். என்ன தான் எண்டாலும் சிவத்தாரை நல்ல வெருட்டிப் போட்டம் எண்டுறது ஒரு திருப்தி தான்.

    ReplyDelete
  13. nanri ...arumaiyana post ...nanum science center student

    ReplyDelete
  14. ம்ம் தும்பளையாரே உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றி.. நீங்களும் உங்கடை ஞாபகங்களை மீட்டது மிச்சும் சந்தோசம்.எண்டாலும் அதிலை இருந்த சோகத்தையும் என்னாலை புரிந்து கொள்ளமுடிகின்றது.என்ன இருந்தாலும் அந்தக் காலம் மாதிரி வராது தான் கண்டியளோ

    ReplyDelete
  15. நன்றி பெயரிலி உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும். நீங்கள் எந்த Batch , என்ன பெயர்,இடம் என்று சொன்னால் கண்டு பிடிக்க கொஞ்சம் சுகமாக இருக்கமல்லோ??

    ReplyDelete
  16. உங்க சொந்த இடம் எது ? ஏன் நீங்கள் மற்றவர்களின் பதிவுகளை பார்ப்பதில்லை

    ReplyDelete