Sunday, March 7, 2010

எங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை

இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது

16 comments:

  1. அருமையா இருக்கு!
    நான் எங்கட வீட்டுக்கு முன்னால வந்து கறண்ட கொழுவியதை ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அப்ப ... கிட்டத்தட்ட 35, 36 வருசத்துக்கு முதல் கறுத்த வர்ணம் பூசப்பட்ட பெரிய மரங்களைக் கொண்டுவந்து பல சிங்கள ஊழியர்கள் பாடிப்பாடி ஏத்தினது!
    ம்....அதுக்கப்பிறகு எங்க ... நாங்களே எல்லாத்தையும் அழிச்சு ... இப்ப திரும்ப .... அதே இடத்தில வந்து நிக்கிறம். அவளவுதான்!

    //தேத்தண்ணீ, வடை, விசுக்கோத்து,கல்பணிஸ், வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள்//

    ம்.... அது அந்தக் காலத்தில .... இப்ப யாரும் யாருக்கும் உதவுறது ரொம்பக் குறைஞ்சு போச்சு!

    யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்... ஏதோ உம்மட பதிவு ஒரு பழைய நினைவை மீட்டுப்பார்க்க வைத்தது! நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  2. நல்ல பதிவு... உங்கள் பதிவு நடை இயல்பாக உள்ளது...

    ReplyDelete
  3. நினைவுகளை மீட்டுப்பார்க்க உதவியது உங்கள் பதிவு. இன்சுலேசன் டேப்புக்குப் பதிலா போலித்தீன் பாக்கை வெட்டிச் சுத்தி வீட்டுக்கு கொனெக்சன் குடுத்துட்டுப் போக, 6.30 மணிக்கு வரப்போகும் கரண்டுக்காக பின்னேரம் முதலே லைட்டுக்கு முன்னால நானும் தம்பியும் காத்துக்கிடந்தது ஞாபகம் வருது. பதிவுக்கு நன்றி :)

    ReplyDelete
  4. :)

    நல்ல மொழிநடை...
    இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்...
    இரசித்தேன்....

    ReplyDelete
  5. நல்லா எழுதியிருக்கிறியள்! நானுமொருக்கா லயிட் போர்ற்சிலை ஏறி கரண்டு கொளுவின்னான்!அண்டு நல்ல மழை.மெயின் லயின் அலுமினியக் கம்பி!வயர் நனஞ்சு கிடந்தது!வயரக் கம்பியில கொழுவ கரண்ட் அடிச்சு! நல்ல வேள!இதை இப்ப எழுத இருந்திருக்க மாட்டன்!!!

    ReplyDelete
  6. வடலியூரான் ....நடந்து வந்த பாதை அனுபவங்களை நன்றாக இரை மீட்டு அசை போடுகிறீர்கள் ...எழுத்து உரைநடையில் கவர்ச்சி இருக்கிறது....வாழ்த்துக்கள்......

    ///இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.///உண்மைதான்

    ///நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.///நான் இப்பவும் கரண்டை கண்ணால காணல்ல இனியும் காணமாட்டன்

    ReplyDelete
  7. நல்லா தான் அனுபவிச்சதை எல்லாம் இண்டைக்கு வரைக்கும் ஞாபகம் வைச்சு எழுதியிருக்கிறியள்.உண்மையிலேயே நல்லா எழுத்து தான்.நீங்கள் உப்பிடி வேறை ஏதாவது பழிஅய அனுபவங்கள் இருந்தால் இரை மீளுங்கோவன்.உங்களிட்டை நிச்சயம் இருக்குமெண்டு எனக்கு நல்ல நம்பிக்கையிருக்குது.தொடர்ந்து எழுதுங்கோ உந்த மற்ற எல்லாரையும் மாதிரி சினிமா,விளையாட்டை மட்டும் தூக்கிப் பிடிடிச்சுக் கொண்டிருக்காமல். நாங்கள் இருக்கிறம் உங்கடையை வாசிப்பதற்கு.

    ReplyDelete
  8. ம் சூப்பருங்க.. உங்க பதிவு. கறண்டுக்கு போய் எவ்வளவ கஸ்ரப்பட்டிருக்கீன்க பாருங்க.தொடர்ந்தும் எழுதுங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி தங்கமுகுந்தன் அவர்களே.உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.ஆமாம் நீங்கள் சொன்ன அந்த கறுத்த மின் கம்பங்கள் எனக்கும் ஞாபகம் வருகின்றது. மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்.

    ReplyDelete
  10. நன்றி மாயன் உங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  11. நன்றி சுபாங்கன் உங்கள் வர்கைஇகும் பின்னூட்டத்திற்கும்.உங்களையும் பழைய நினைவுகளை மீட்டவைக்க என்னால் முடிந்திருக்கிறதெனறால் ஏதோ கொஞ்சமாவது ஒழுங்காத்தான் எழுதியிருக்கிறேன் போல.

    ReplyDelete
  12. நன்றி கங்கோன் உங்கள் வருகை,பின்னூட்டட்த்திற்கும். எனது எழுத்து இயல்பாக உள்ளது என்றூ கூறியுள்ளீர்கள்.உண்மையெனில் சந்தோசம் தான்.

    ReplyDelete
  13. நன்றி கருணையூரான் உங்கள் வருகைக்கு.உங்கள் வழக்கமான,உங்களுக்குரிய நக்கல்களூக்டன் என் லேபிள்களைச் சேர்த்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.நன்றிகள்.ஆம் உண்மையில் கறண்டைக் காணமுடியாதுதான்.

    ReplyDelete
  14. நன்றி வசிகரன். உங்கள் கருத்துரைக்கும் வருகக்க்கும். ஆம் நீங்கள் சொன்ன பெரும் பாலனவற்றுடன் நான் ஒத்துக் கொள்கின்றேன்.எனக்கு சினிமா, விளையாட்டு பிடிக்கும்.அது சார்ந்த பதிவுகளை நான் வாசிப்பதுண்டு.ஆனால் எனது பதிவை அனைவரும் வாசிக்கவேண்Dஉம் என்பது மட்டுமல்ல நோக்கம்.பின்னூட்டம் அதிகம் வருமென்றெண்ணியோ அல்லது அதிகம் பேர் வாசிப்பார்கள் என்றெண்ணியோ மட்டும் நினைத்து சினிமாவை மட்டும் பதிவேற்றுவதாய் இல்லை.பின்னூட்டமும் உங்களின் வருகையும் எனக்கு உத்வேகத்திக் கொடுத்தாலும் அவை மட்ட்மே எனது பதிவுலகப் பிரவேசத்தின் நோக்கமல்ல.அவற்றை விட எனது சுயதிருப்தியும் உள்ளது.ஆகவே நான் தொடர்ந்தும் எழுதிவேன்.உங்கள் எதிர்பர்ப்பையும் பூர்த்தி செய்வேன்.காதல்,கம்பஸ்,க்னபேர் கதைக்காத கன ஏரியாவை நான் கதைப்பேன். ஆனால் காத்திருக்கவேண்Dஉம்.நீங்கள்.வாரம் ஒரு பதிவு அல்லது இரு வாரங்களுக்கு ஒரு பதிவு என்றூ என்னால் பதிவிடக்குஇய நிலையில் எனது வேலைப் பளு உள்ளது.மீண்டும் என் ந்ன்றீகள் வசிகரன் ,என் மனத்தை திறந்ததற்கு.

    ReplyDelete
  15. நன்றி ரமேஸ் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்Kஉம்.உங்கள் மொழிநடையைப் பார்க்கும் போது இந்தியப் பாணீ தெரிகிறது.தமிழ் நாடு? ஆம் நண்பரே இதை விட எவ்வளவு கஸ்ரங்களை எங்கள் மக்கள் அனுபவித்தார்கள்,அனுபவிக்கிறார்கள்.

    ReplyDelete
  16. உங்கள் வலியை உணர வைச்சிட்டீங்க

    ReplyDelete