Friday, February 12, 2010

தலைநகரின் கண்டறியாத கலியாண வீடுகள்

காதலர் தின சிறப்புப் பதிவாக காதலுக்கு அடுத்த நிலையான திருமணம் அல்லது கலியாணம் என்பது, இன்றைய அவசரமான,காசு கொட்டிக்கிடக்கும் உலகில் எவ்வாறு செய்யப்படுகின்றது அல்லது அது செய்யப்படுவதன் உண்மையான நோக்கத்தை அடைகின்றதா என்பது பற்றி அலசுவதே இந்தப் பதிவு.

எமது கலாசாரத்துக்குள்ளாக அமையின் பொதுவாகவே வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் கிடைக்கப் போகும் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணங்களை,இன்றைய காலகட்டங்களில், தற்போதைய முறைகளில் செய்வதால்,திருமணச் சடங்குகளில் கிடைக்கவேண்டிய அந்த சின்னச்சின்ன சந்தோசங்கள் எங்களுக்குக் கிடக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பொதுவான கருத்து.ஊர்களில் சுற்றம்,முற்றம் மற்றும் ஊரவர் என எல்லா உறவுகளின் பங்குபற்றுதலுடன் குறைந்த செலவில் செய்யப்படும் திருமணங்களில் கிடைக்கும் சின்னசின்ன சந்தோசங்கள் தலைநகரில் காசைக் கொட்டிக் கொடுத்தும் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.



ஊர்களிலெல்லாம் கலியாண வீடென்றால் பொன்னுருக்கலுக்கு(மணமகளின் தாலி செய்வதற்குரிய தங்கத்தை மணமகன் வீட்டில் உருக்கும் சம்பிரதாய சடங்கு)ஒன்று, இரண்டு நாட்களுக்கு முதல் தொடங்கி,கலியாணவீடு முடிந்து இரண்டு,மூன்று நாள் வரைக்கும் அந்த வீடும், ஊரும் திருவிழாக் கோலத்துடன் தான் காட்சியளிக்கும்.திருமணத்திற்கு இரண்டு,மூன்று வாரங்களுக்கு முதலேயே வீட்டை துப்பரவாக்கி,வர்ணம்(paint) தீட்டி மிகவும் அழகாக வைத்திருப்பார்கள்.


ஊர்ப் பெண்களெல்லாம் 2, 3 நாளுக்கு முதலிருந்தே பின்னேரப் பொழுதுகளில் அந்த திருமண வீடுகளுக்குச் சென்று தட்டை வடை, பயற்றம் பணியாரம், சீனி அரிதாரம், சிப்பி, சோகி, சில்லறைப் பலகாரம் உட்பட பலவேறு பலகாரங்களையும், இனிப்புக்கள், சிற்றுண்டிகளையும் செய்யத்தொடங்கிவிடுவார்கள்.பெடியளும் அப்பப்ப போய் உதவிகள் செய்தாலும் திருமணத்திற்கு முதல்நாள் செய்யும் சோடனை(டெcஒரடிஒன்) வேலைகளுக்குத் தான் பிரதானமாக செல்வாங்கள்.

ஊரில் உள்ள 30,40 பெடியளும் சிறுசிறு குழுவாகப் பிரிந்து ஒவ்வொரு சோடனை வேலைகளிலும் ஈடுபட்டுக் கொள்ளுவார்கள்.ஒரு படை மஞ்சள்,வெள்ளை நிறத் தாள்களை(டிச்சுஎ)எட்டாக,பதினாறாக மடித்து அதனை,நூலொன்றைப் பாவித்து வெட்டிக் கொண்டிருக்கும்.மறுபடையோ நூலொன்றினில் கோதுமை மாவினுள் நீரைவிட்டுக் காய்ச்சிய பசையொன்றினைப் பூசிக்கொண்டிருக்கும்.பிறிதொரு படை எட்டாக, பதினாறாக மடிக்கப்பட்டு, வெட்டப்பட்ட ரிஷுவை ஒவ்வொன்றாக கலைத்துக் கொடுத்துக் கொண்டிருக்க,இன்னும் சில அவற்றை பசை பூசப்பட்ட நூலினில் ஒட்டிக் கொண்டிருக்கும்.வேறு சிலர் வீட்டுக்குள் மணமக்களின் பெயர்களையும், நல்வரவு, திருமண வாழ்த்து, இரண்டு இணைக்கப்பட இதயங்களினைத் துளைத்துச் செல்லும் அம்பினை ஒத்த காதலின் சின்னத்தையும் ரெஜிபோமில் வேலைப்பாடுகளுடன் வெட்டி ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.



மற்றும் சிலர் திருமண வீட்டு வாசலில் கட்டுவதற்கு, வீட்டுக்கு பின்னாலிருக்கும் வளவினில் வளர்ந்து நிற்கும் வாழைகளிரண்டை வெட்டிக் கொண்டுவந்து, வீட்டு வாசலிலுள்ள தூணோடு சேர்த்துக் கட்டிக்கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் குழை போட்டுப் பழுத்த வாழையையே கட்டினாலும் சிலவேளைகளில் அது கிடைக்காதவிடத்து சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த,நன்கு மஞ்சள் நிறத்தில் பழுத்த வாழைக்குலையைத் தூக்கி,கட்டப்பட்ட அந்த வாழைதான் இந்தக்குலையைப் போட்டது போல இருக்குமாறு மிகச்சாமர்த்தியமாகக் கட்டி வாழைக்குலையை வாழை தாங்குவதற்காக, வாழையில் ஒரு பூவரசங் கட்டையை இணக்கிச்(செய்து)சொருகி அதில் வாழைக்குலையைத் தாங்கவிடுவார்கள்.மேலும் அழகை மெருகூட்டுவதற்காக தாங்கள் இளநீரைக்குடித்த பின்னர் வெறும் இளநீர்க் கோம்பைகளை வாழைக்குலையின் அடியிலே சொருகி விடுவார்கள்.

ஒட்டப்பட்ட ரிஷு காய்ந்த பின்னர் அதை ஏதாவது மரங்கள்,மின்கம்பங்களிடையே கட்டப்பட்ட கயிற்றுக்குக் குறுக்காக இரண்டு கயிறுகளையும் இணைக்கும் விதமாக கட்டுவார்கள்.திருமணத்திற்கென்று செய்த பலகாரங்களும் தேத்தண்ணியும் வேலைநடந்து கொண்டிருக்கும்போது பெடியளுக்குப் படைக்கப்படும்.பெடியளெல்லாருக்கும் இரவுச் சாப்பாடும் அங்கே தான்.சிலர் அதிகாலையில் வந்து பெண்களுக்கு சமையலின் போது சோற்று அண்டா,கறிக் கடாரம் என்பவற்றை இறக்கி ஏற்றுவதற்கு உதவி செய்வார்கள்.மற்ற எல்லாப் பெடியளும் திருமணநேரத்திற்கு முன்னரே வேட்டி கட்டி,பவுடர் போட்டு,தலையை மேவி இழுத்து என்று அப்பிடி இப்பிடியாக ஒருமாதிரி வெளிக்கிட்ட்டுப் போய் உதவி ஒத்தாசையாக இருப்பாங்கள்.

எப்ப தாலியைக் கட்டுவாங்கள்,எப்ப தாங்கள் ஒரு வெட்டு வெட்டலாம்(சாப்பிடுதல்) என்று வாறதுகள் தாலியைக் கட்டியவுடனேயே பந்தியில் சென்று குந்தியவுடன் ஒருவன் வாழையிலை வைக்க, மற்றவன் சோற்றைப் போட, கொஞ்சப்பேர் ஒவ்வொரு கறியாக வைக்க, பிறிதொருவன் அப்பளம், மிளகாய் வைக்க மேலுமொருவன் வடை பரிமாற, இன்னுமொருவன் தண்ணீரை டம்ளரில்(தண்ணீர் குவளை)ஊற்ற என்று எவரதும் நேரடி வழிகாட்டுதலின்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை மிகச் சுறுசுறுப்பாகச் செய்வாங்கள்."ஆ.. இஞ்சை ஐயாவுக்கு சோறு முடிஞ்சுது.. சோத்தை வை.. சோறு வைச்சாக்களைப் பாத்து கறியளை வை.." என்று காலில் சக்கரம் பூட்டியது மாதிரி ஓடித் திரிவாங்கள்.இரண்டு, மூன்று முறை சோத்தை போட்டுக் குழைச்சடிச்சு, அதற்குப் பிறகு பாயசத்தையும் விட்டு வைக்காமல் அதையும் விட்டு வழிச்சுத்துடைச்சு விட்டுச் சென்றவர்களின் வாழையிலைகளையெல்லாம் அள்ளி பந்தி நடந்த மண்டபத்தைக் கூட்டுவதோடு ஆம்பிளைப் பந்தி(ஆண்களின் சாப்பாட்டு வரிசை) முடிய அடுத்ததாக பொம்பிளைப் பந்தி ஆரம்பமாகும்.

தங்களுக்கு வேண்டப்பட்ட பெண்தோழிகளுக்கும்,"இது தேவையோ?", "அது தேவையோ?" என்று வழிந்து,வழிந்து கேட்டு,அவர்கள் ஒன்றும் கேட்காத போதும் தாங்களே 2,3 வடைகளைத்தூக்கி வாழையிலையில் சத்தம்போடாமல் வைத்துவிட்டு,அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடுகிறார்களா அல்லது அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடாமல் வாழையிலையோடு கொண்டு போய் எறிகின்றார்களா என்று எறியும்வரை பார்த்துக் கொண்டிருக்கும் தாராள மனப்பாங்குள்ளவர்களும் இருப்பார்கள்.இதன் பின்னர் படமெடுப்புக்கள்,பின்னேர திருமணப்பதிவு(Registration) என மிகுதி நிகழ்ச்சிகளும் களை கட்டும்.


இவ்வாறெல்லாம் எத்தனை சின்னச் சின்ன சந்தோசங்கள் எத்தனை இலட்சத்தைக் கொழும்பிலே கொட்டி,ஹோலிலே கலியாணத்தை முடித்தாலும் துளி மருந்துக்கும் கிடப்பதில்லை.இரவிலே ஒரு மண்டபத்திலே திருமணம் நடைபெறும்.அவனவன் தாலிகட்டி முடிந்த பின்னர் சரியாக சாப்பாட்டுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முதல் காரிலோ ஏதாவது வாகனத்திலோ வருவான்.Busy(வேளைப் பளு)ஆன ஆள் மாதிரி ஒரு இடத்திலும் இருக்காமல் அங்கையும் இங்கையும் ஓடித்திரிந்து 2,3 பேருடன் கதைப்பான்.தானே போட்டுச்(self Service) சாப்பிடுவான்.தம்பதியினருக்கு பரிசுப்பொருள்(Gift) கொடுப்பான்.சேர்ந்து நின்று படம் எடுப்பான்.மாப்பிளையிடம் சொல்லுவான்,"மச்சான் அவசரமாக ஒரு வேலை இருக்கு..நான் வாறன்.." என்று சொல்லிவிட்டு ஒரு 30,40 நிமிடத்தில் பறந்துவிடுவான்.இத்தனைக்கும் ஒரு தலைக்கு சாப்பாடுக்கு,இத்தனை ஆயிரம் என்று சொல்லி ஒரு 400,500 பேருக்கு என்று காசைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.சாப்பாட்டுக்கு, மண்டபத்துக்கு, மணமகள்,மணமகன் அலங்காரம், மற்றும் இன்ன பிற செலவுகள் என்று காசை வாரிக் கொடுத்தும் அதற்குரிய பலாபலன் கிடைக்காமலையே திருமணங்கள் முடிவது உண்மையில் வேதனைக்குரியதே.

8 comments:

  1. வடலியூரான் ....உண்மைகளை உங்கள் உரைநடையில் உலுப்பிவிட்டிருக்கிறீங்க ...எது எவ்வாறோ உங்கள் கலியாணம் வடலியூரில் நடக்கும் என்பது புரிகிறது...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களை நீங்களே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் - உங்களை நீங்களே குறைவாகப் பேசாதீர்கள்! உங்களை நீங்களே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் அப்படி ஒப்பிட்டுப்பார்த்தால் என்ன ஆகும்? உங்களை, நீங்களே அவம...

    ReplyDelete
  3. நன்றி அண்ணாமலையான் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  4. ஏதோ சும்மா எழுதியிருக்கு கருணையூரான். எனது கலியாணத்தைப் பற்றி ஏன் இப்ப கதைப்பான்?நான் இப்பத் தானே 18 வயசுப் பெடியன்.

    ReplyDelete
  5. ரோய் உங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி.குறைவாகப் பேசவில்லை ரோய்.குறையிருந்தால் நாங்கள் தானே எங்களது குறைகளைத் திருத்திக் கொள்ளவேண்டும்.வேறு ஒருவன் வந்து எங்களைத் திருத்தப்போவதில்லிஅயே

    ReplyDelete
  6. பின்ன என்ன. சரியாய் சொல்லிபோட்டிங்கள் வடலியூரான். ஊரில பாயில நிலத்தில இருந்துகொண்டு கலியாணம் பார்க்கிறது. அடுத்தநாள் பொம்பிளை மாப்பிளை பாக்கப்போறது. இவை அங்கபோறது பிறகு அவை இங்க வாறது இடையில பெரிசுகள் போடுற சின்ன சின்ன சண்டைகள். கோவிச்சுக்கொண்டு போறவையை கார் கொண்டே கெஞ்சி ஏத்திக்கொண்டு வாறதெண்டு எத்தினை ஆரவாரம். எல்லாம் கண்பட்டுபோச்சு. வேற என்னத்த சொல்ல?

    அன்புடன் மங்கை

    ReplyDelete
  7. சரியாச் சொல்லிப் போட்டியள் மங்கை. உண்மையா ஆற்றையோ கண் பட்டிட்டுது போல தான் கிடக்குது. பின்னை சண்டையோ,கிண்டையோ,எப்பிடிச் சந்தோசமா இருந்த சனம் இப்பிடி எல்லாத்தையும் துலைச்சுப் போட்டு இருக்குங்களே..???

    ReplyDelete