Saturday, January 8, 2011

23ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டமும் குமிழ்த் தலைமைகளும்

(கற்பனைக்காகவே எழுதப்பட்ட இந்தக்கதையிலே வரும் பெயர்களையோ, இடங்களையோ,சம்பவங்களையோ வேறுயாருடனுமோ அல்லது இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ பொருத்தி நீங்களே செய்தி கொள்ளும் சுய கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல.இந்தக் கதையை கதையாகவே எடுத்துக் கொள்ள்வீர்கள் என்று பதிவரால் திடமாக நம்பப்படுகிறது)


வில்லங்கை என்ற பெயருடன் விசாலமான அந்த நகரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அமைந்திருக்கின்றது இந்தக் கதையில் வருகின்ற கம்பனியும்.இதற்கருகில் விந்தியா,போக்கிஸ்தான்,வீனா,பஸ்யா,சுமெரிக்கா என மல்ற்றிநாஸனல் கம்பனிகளும்(Multi National - பல்தேசியக் கம்பனிகள்) உள்ளன.ஓரளவு சிறிய இந்தக் கம்பனியில்(மற்றக் கம்பனிகளுடன் ஒப்பிடும் போது) அண்ணளவாக 10,000 பேர் வரை வேலை செய்கின்றார்கள். அந்த நிறுவனம் திமிங்கிலம்,குமிழ்,வசலீன்,முறங்கி என நான்கு திணைக்களங்களாக(Departments) பிரிக்கப்பட்டுள்ளது.திமிங்கிலத் திணைக்களத்தில் ஒரு அண்ணளவாக 7000 பேரும்,ஏனைய திணைக்களங்களில் சராசரியாக ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர்.




கம்பனிக்காணியின் வடக்கு,கிழக்கு பகுதியில் குமிழ்,வசலீன் திணைக்களங்களும் மிகுதியில் பெரும்பாலான இடங்களில் தனித் திமிங்கிலத் திணைக்களப் பகுதியும் திமிங்கிலத்தோடு சேர்ந்ததாகவே முறங்கித் திணைக்களத்தின் அலுவலக சொத்துக்களும் காணப்படுகின்றன.அந்தந்த திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் நிறுத்துவதற்காக அந்தந்தத் திணைக்களங்களுக்கு அருகிலேயே அவரவர் திணைக்களங்களுக்குப் பிரத்தியேகமாக வாகனத் தரிப்பிடங்களும் அதற்கு மேலதிகமாக எரிபொருள் நிரப்புநிலையங்களும் காணப்படுகின்றன.சில வீடுகளுக்கு "கோகுலம்","தாருஸ்லாம்,"தாஜ்மகால் என்று பெயர் இருப்பது போல,இந்த வாகனத் தரிப்பிடங்களுக்கும்,"கிரிகோணமலை", "குழம்பு","சுலுவில்" என்று பெயர் கூட இட்டிருந்தார்கள்.



கிரிகோணமலை வாகனத் தரிப்பிடம்/எரிபொருள் நிரப்புநிலையம், குமிழ் திணைக்களத்திற்கருகிலும்,"சுலுவில்",வசலீன் திணைக்களத்திற்கருகிலும்,"குழம்பு" திமிங்கிலத் திணைக்களத்திற்கருகிலும் முறையே அமைந்திருந்தன.இதிலே கிரிகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையம் சுற்றியும் மேலேயும் மூடப்பட்டு ஒரே ஒரு வாசலைக் கொண்டு இயற்கையாகவே ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.அதனுள்ளேயிருந்து கொண்டு யார் யார் எங்கெங்கு வருகிறார்கள் போகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாமலே கண்காணித்துக் கொண்டிருக்கமுடியும்.இயற்கையாகவே அமைந்த வாகனத் தரிப்பிடமாக்கப்பட்ட குகை அது.



அதற்குள்ளே இருந்து மறைந்திருந்து கொண்டு யார் யார் துறை சார் ஆலோசகர்கள்(Consultants),வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்(Clients)சக போட்டிக் கம்பனிகளுக்கு வந்து போகிறார்கள் என்பதையும் அந்தக் கம்பனிகளுக்கும் அந்த ஆலோசகர்கள்,வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலே நோட்டம் விடக்கூடிய இடம் என்பதால் தான் விந்தியா,வீனா,சுமேரிக்கா,பசியா போன்ற பல்தேசியக் கம்பனிகளும் தங்கள் வாகனங்களையும் கிரிகோணமலையில் தரிக்க அனுமதிக்குமாறோ அல்லது எரிபொருள் நிரப்புகிற சாக்கிலாவது சிறு சிறு நோட்டங்களைவிடலாம் என்ற அங்கலாய்ப்பிலே எரிபொருள் நிரப்பவாவது அனுமதிக்குமாறு வில்லங்கைக் கம்பனியை வற்புறுத்துவதுண்டு அல்லது கெஞ்சுவதுண்டு.




வில்லங்கையின் மிகப்பெரியதும்,வசதிகள் மிக்கதும், திமிங்கிலத் திணைக்களத்தில் பணிபுரிவோர் வாகனங்களை நிறுத்தப் பயன்படுவதுமான "குழம்பு" வாகனத் தரிப்பிடம், செயற்கையாக அமைக்கப்பட்டதாலும், யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக ஏனைய பல்தேசியக்கம்ப்னைகளுக்குத் தெரியவந்துவிடும் என்பதனாலும் தான் அதன் முக்கியத்துவம் குறைவு.ஒரு படத்தில் வடிவேலு," யூ புறம் இந்தியா,இந்தியன்(You from India,Indian),"யூ புறம் டமில்நாடு,டமிலன்" (You from Tamil Nadu, Tamilan)," ஐ புறம் இங்க்லான்ட், இங்க்லிஸ்மான்(I from England,Englishman )என்று சொல்லியது போல இந்தக் கம்பனியிலும் திமிங்கிலத் திணைக்களத்தில் பணி புரிபவர்களை திமிங்கிலவர் என்றும் மற்றையவர்களையும் முறையே குமிழர்,வசலீனர்,முறங்கியர் என்றும் இந்தப் புள்ளியிலிருந்து மேற் கொண்டு செல்லும் போது அழைக்கலாம்.



இது ஒரு பொதுக் கம்பனி.தனிப்பட்ட ஒருவருக்கும் உரித்துடையாகமல்,இங்கே வேலை செய்யும் அனைவருக்கும் சம உரிமை உடையது இந்தக் கம்பனி.ஆனால் இங்கு தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள்,தொழிலாளர் நல அமைப்புக்கள்,கம்பனி ரீதியிலும்,திணைக்கள ரீதியிலும் தலைவர்கள் பலர் தாராளமாக உள்ளார்கள்.மொத்த ஊழியகளின் 50 % இற்கும் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்றவர் கம்பனியின் செயற்பாட்டுத் தொழிற்சங்கத் தலைவராகலாம்.அவருக்கு தொழிலாளர்களின் இடமாற்றத்தை தான் விரும்பியபடி வழங்க,திணைக்களத் தலைவரால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்தாக்க என்று பல அதிகாரங்களோடு,கம்பனியை வெளியில் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்பும் உண்டு.



அத்துடன் கம்பனியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை என்ற தொழிலாளர் நல சபைக்கும் கம்பனி முழுவதும் இருந்து,ஊழியகளிடையே கூடுதல் விருப்பைப் பெற்ற 225 பேர் தெரிவு செய்யப் படுவார்கள். பழமைமிக்க இந்தக்கம்பனியின் தொழிற்சங்கத் தலைவார்களாக முன்னைய காலங்களில் வெள்ளைக்காரத் துரைமார்களும்,பிரபுக்களும் இருந்துள்ளார்களாம்.பின்னர் தொழிற்சங்கத் தலைமை கம்பனிக்குள்ளே பணிபுரியும் சுதேசிகளுக்குள்ளேயிருந்தே தெரிவு செய்யப் படவேண்டும் என்ற தொழிலாளார்களின் ஒன்றிணைந்த,தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் வெள்ளைக் காரத் துரைமார் தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பை இந்த நாட்டைச் சேர்ந்த துரைமார்களுக்கே 1948 ம் ஆண்டளவில் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.




சேனனாயகம் என்பவர் தான் முதலாவது சுதேசியத் தொழிற்சங்கத் தலைவாரானார்.பின்னர் சிறிதுசிறிதாக திமிங்கிலவர்களுக்கும்,குமிழர்களுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் வரத் தொடங்கின.துரைமாரின் காலத்தில் விந்தியக் கம்பனியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த ஊழியர்களை தங்கள் கம்பனி ஊழியர்களாக ஏற்கமுடியாதென்றும்,அவர்கள் தொழிற்சங்கத் தலைவரையோ,நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையைத் தெரிவு செய்யும் தேர்தல்களிலோ வாக்களிக்கமுடியாதென்றும்,அவர்களுக்கு கம்பனியின் அடையாள அட்டையை வழங்கமுடியாதென்றும்,அவர்கள் இந்தக் கம்பனியைச் சாராதவர்கள் அதாவத "கம்பனியற்றவர்கள்" என்றும் அவர்கள் தங்கள் முந்தைய விந்தியாக் கம்பனிக்கே செல்லவேண்டும் சேனானாயகம் சொன்னபோது தான் முதலாவது முறுகல் வந்தது.





தங்கள் திணைக்கள இலச்சினையைத் தான் நீங்களும் பாவிக்கவேண்டும் என்று குமிழரை வற்புறுத்தியதால் 1956 இலும் தொடர்ந்து 1958,1978,1981,1983 இல் திமிங்கிலத்தவர்களது ஒற்றை றூட்டான,குறுகிய நோக்கான சிந்தனைகளால் சிறு சிறு சலசல்ப்புக்கள் இரு திணிக்களத்தாரிடையேயும் ஏற்பட்டு,இரு சாராருக்கும் சிறு சிறு காயங்கள்,சேதாரங்களுடன் முடிந்தன. கம்பனியிலே திறமையாகப் பணிபுரியும் ஊழியர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களை பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அதிகளவு குமிழர் திறமையடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதை அப்போதிருந்த தொழிற்சங்கத் தலைமை அறிந்து திறமையடிப்படையிலிருந்த முறையை வஞ்சனையோடு கோட்டாவுக்கு 1972 ம் ஆண்டு மாற்றியதால் குமிழர் சீறி எழுந்தனர்.




இந்தப் பாகுபாடுகள்,புறக்கணிப்புக்கள்,பக்கச்சார்புகளெல்லாத்துக்கும் எதிராக குமிழர்களின் தொழிற்சங்கத்தலைவராக இருந்த எஸ்.ஜே.வீ. நல்லநாயகம், கம்பனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்களைத் திரட்டிப் போராடினாலும் ஓரவஞ்சனைகள் தொடரத்தான் செய்தது.புறக்கணிப்பின் வலியுணர்ந்த குமிழர் தங்களது திணைக்களத்தை தனியான கம்பனியாக உருவகித்து,அதை உருவாக்க திடசங்கற்பம் பூண்டனர்.கறுவியவர்கள் முறுகவும் தயங்கவில்லை.83 ம் ஆண்டு வீதியால் சென்று கொண்டிருந்த 13 திமிங்கிலவர்களை முகமூடி அணிந்து மறித்த குமிழர் அணி புளியங் கம்பு,பூவரசங்க் கம்பு,துவரங்க் கம்பால் சரமாரியாக போட்டுத் தாக்கிவிட்டது.




அடி வாங்கிய அவர்களும் இது போன்றதொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவர்கள் போல,சொல்லி வைத்தாற் போல,வழியில் கண்ட குமிழர்களையெல்லாம் வாட்டியெடுத்தார்கள்.சில கார்களின் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டன.அதன் பின் திணைக்கள ரீதியிலான திமிங்கில - குமிழ் பாகுபாடு மேலும் உக்கிரமானது.திமிங்கிலத் திணைக்களத்திலே பணிபுரிந்த குமிழ் தொழிற்சங்கவாதிகளுக்கு நெருக்கமானவர்கள் குமிழ்த் திணைக்களத்துக்கு இடமாற்றித் தூக்கி எறியப்பட்டனர்.இடைவெளிகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே போயின.அதற்கேற்றவாறு சந்தர்ப்பங்களும் வாய்த்தன.குமிழர்களும் தங்களது திணைக்களம் தனிக் கம்பனியாவதே இதற்கு ஒரே தீர்வாகும் என மேலும் உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டனர்.




இந்த நேரத்தில் அண்மையிலிருந்த விந்தியாக் கம்பனி,குமிழ்த் திணைக்களத்திற்கு பக்கபலமாக நிற்பது போல் அவர்களுக்குக் காட்டி கொண்டு,வில்லங்கையில் தனது பிடியை இறுக்கி தனது ஆளுகைக்குள் வில்லங்கையைக் கொண்டு வர முயன்றது.அதனால் திமிங்கிலவருடனும்,குமிழருடனும் பேசி 23 ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த வில்லங்கையை நிர்ப்பந்தித்தது.தாங்கள் எதிர்பார்த்தது தமக்கு கிடைக்கவில்லையே என்று குமிழர்கள் வெதும்ப,எங்கள் கம்பனியின் இந்த வசதிகளையெல்லாம் இவர்கள் அனுபவிப்பதுவோ என்று திமிங்கிலவர் புழுங்க,விந்தியாவோ வேறு கம்பனிகள், வில்லங்கையில் தங்கள் கையை இறுக்கமுதல் தான் முந்தவேண்டும் என்றெண்னி,கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை தன் கைகைளில் விழுத்த காய்களை நகர்த்தியது.




திணைக்களங்கள் தங்கள் வேலைகளுக்கு தாங்களே ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை(மனிதவள முகாமையாளார் பதவி - Human Resource Manager),தங்கள் திணைக்களம் அமைந்துள்ள காணியின் பராமரிப்புரிமையைக்(அதுதான் அந்தத் திணைக்களத்தின் பகுதிகளை கூட்டி,துப்பரவாக்கும் பணிகளை மேற்கொள்ளுவதோடு திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் முழு ஆளுகையைக் கொண்டிருந்தல்) மற்றும் பொலிஸ் அதிகாரம்(அது தாங்க பாது காப்பு உத்தியோகத்தர்களை நியமித்தல்,கையாளல்),தங்கள் ஊழியர்களுக்கு எந்தவகைப் பயிற்சியை(கல்வி அதிகாரம்)வழங்குவது,நிதி முகாமைத்துவத்தில்சில உரிமைகள் என மிகச் சில ஏற்பாடுகளை செய்து 23 வது கம்பனித் திருத்தச் சட்டமாக அறிமுகப்படுத்தியது.




ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திணைக்களங்கள்,கம்பனிக்கு எதிராக(இறைமை..?) செயற்படுவதாக கம்பனி உணருமாக இருந்தால் கம்பனியின் தொழிற்சங்கத்தலைவரின் உத்தரவுக்கமைய அவரால் நியமிக்கப்பட்ட அவரின் கைப்பொம்மையான திணைக்களத்தலைவர்(Department Head) திணைக்களத்தை அதன் தன்னிச்சையான செயற்பாடுகளிலிலிருந்து நிறுத்தி கம்பனியின் நேரடிக்கண்பாணிப்பில் கொண்டுவர முடியும் என்ற ஏற்பாட்டை விந்திய சொருகியது.குமிழ்த்திணைக்களம் தனிக்கம்பனியானால்,தன்னிடம் இருக்கும் 28 திணைக்களங்களுக்கும் தனித்தனி கம்ப்னியாகப் பிரிந்து செல்லத் துணிச்சலை அது ஏற்படுத்திவிடும் என்று பயந்து குமிழரின் கோரிக்கையைக் குப்பையில் போட்டது விந்தியா.இது ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்குவது போலாகும் என குமிழ்த் தொழிற்சங்கத் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள்.




எல்லாருடைய நோக்கமும் ஒன்றாக இருந்த போதும் ஆளுக்கொரு திசையில் யார் தலைமைவகிப்பது என்று தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு திமிங்கிலத் திணைக்களத்தவர்க்களை சரமாரியாக எதிர்க்கத் தொடங்கினார்கள்.இப்படித் குமிழ்த்தொழிற்சங்கவாதிகளை ஒன்றாக சேரவிடாமல் பிரித்தாளுவது கூட விந்தியாவின் நிர்வாகமேயென சாதாரண குமிழ்த்தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.இதனால் திமிங்கில,குமிழர் தரப்புக்களிடையே கைகலப்புக்கள்,கார் உடைப்புக்கள்,சாதரண அலுவலக நேரங்களிலையே நடைபெறத் தொடங்கின.



அதிலும் வேலுத்தம்பி என்ற குமிழ்த் தொழிற்சங்கத் தலைவ மீதுதான் கொஞ்சம் பயம் .தான் நினைத்ததை,எடுத்த காரியத்தைக்,எவருக்கும் விலை போகாமல் வீரியமாகவே செய்து கொண்டிருந்தார் அவர்.அவருக்கும் ஒரளவு குமிழர்கள் ஆதரவளித்ததனால் குமிழர்களின் தொழிற்சங்கத் தலைவராகி,தன் செயற்பாடுகளை மேலும் மெருகூட்டி தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.இதைப் பார்த்த விந்தியா அவர்கள் தனிக்கம்பனியானால் தனது 28 திணைக்களங்களும் தனித்தனியாகுவதை அது தூண்டுமெனபதாலும் கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை சுமேரிக்கா சுவீகரித்துக் கொள்ளலாமென்பதாலும் வேலுத் தம்பியையும் அவரது கைகலப்புக்களையும் முடிவுக்குக் கொண்டு வர,வில்லங்கை கம்பனிக்கு, அவர் மீது பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரையும் அவருடன் தீவிரமாகச் செயற்பட்ட பலரையும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க ஆலோசனை வழங்கியது.



அவரது பணிநீக்கலுடன் அவர்களது தனிக் கம்பனிக்கான போராட்டமும் பெரும்பாலும் நீர்த்துப் போய்விடுமென இரு கம்பனிகளும் மிகவும் நம்பின.இவையெல்லாம் அந்தக் கம்பனி கடந்து வந்த பாதை.அதன் வரலாறு நெடுகலும் சண்டைகள்,சச்சரவுகள்,பலவற்றை கடந்து வந்ததாலும்,அவற்றை கடந்தாலும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முருங்கை மரமேறியதாலும் அதைப் போல சிறியதாகவிருந்த ஏனைய கம்பனிகள் எங்கேயோ செல்ல இந்தக் கம்பனியோ இன்னும் கீழேயே சென்றது.வேலுத் தம்பியின் வெளியேற்றத்தின் பின் குமிழர்களின் தொழிற்சங்கங்களை சிரா.சம்பந்தன், நெக்லஸ் பவானந்தா,நித்யானந்த சங்கரி, மந்திரகாந்தன், பித்தார்த்தன்,ஸ்னோ கணேசன்,பஜந்திரகுமார்,லாவோஜி லிங்கம், சோறுமுகம் கண்டமான்,சந்தனதேவீ,பீதாம்பரம்,கு.ரங்கா எனப் பலர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.




இருந்தபோதும் அவர்களுக்கிடையே எந்த அளவிலே தமது திணைக்களத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலே கொள்கைரீதியில் குழப்பங்களும்,உடன்பாடின்மையும் காணப்படுகின்றது. பட்டுவேட்டித் தலைமைகள் பலவிருந்தும் பாடாய் தங்கள் பிரச்சினைகளை ஒன்றாக ஒற்றுமையாக, எடுத்துச் சொல்லமுடியவில்லையே என்பதே அனேகமான குமிழ் ஊழியர்களின் ஏக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.இணைந்திருந்து இயலுமானவரை நடைமுறைச்சாத்தியாமனவற்றைப் பெறுவோமென ஒருவரும், இல்லையில்லை இந்தளவும் எங்களுக்கு வேண்டுமென இன்னுமொருவரும்,ஒரு ஆரம்பபபுள்ளியாக 23 ம் திருத்தச் சட்டத்திலிருந்து தொடங்கி தொடர்ந்து செல்வொமென மற்றொருவரும்,அப்பிடித் தொடங்கினால் உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது போல ஆகிவிடுமென இன்னுமொருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றனர்.



இவர்கள் எல்லாரும் தங்களின் தலைவர்கள் என்றால் ,தங்களுக்காக,தங்களை பிரதிநிதித்துவப் படுத்துவர்களாக இருந்தால்,ஏன் எங்களுக்காக ஒன்றாக,ஒற்றுமையாக, பேசி இது தான் எங்களுக்கு வேண்டும் என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என எடுத்துக் கூறி இழுபட்டுப் போய்கொண்டிருக்கின்ற எங்கள் பிரச்சினைகளுக்குப் தீர்வைப் பெற்றுத்தரமுடியாது என்பதே குமிழகளின் கேள்வியாகும்.எங்களது பிரச்சினைகள் தீர்ந்து போனால் உங்கள் காலத்தை,தலைமைப் பதவியை, கொண்டுநடத்தமுடியாது என்பதாலோ பிரச்சினைகளை நீட்டுகிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.திமிங்கிலவருடன் சமாதானமாகப் போகமுதல் இவர்களுக்குள்ளே ஒற்றுமை அவசியம் என்பது அங்குள்ள குமிழ் ஊழியர்களின் ஒருமித்த கருத்தாகும்

1 comment:

  1. கதைகள்,பெயர்களைப் பார்த்தால் எங்கேயோ உதைப்பது போலிருக்குதே நண்பா

    ReplyDelete